Tuesday, May 18, 2010

மானிடவியலும், மொழியியலும்

உயிரோசை இணைய இதழில் வெளியானது.

மானிடவியலும், மொழியியலும்

பரந்த நோக்கில் மொழி என்பதை பொதுப்புத்தியுடன் தொடர்பு ஊடகமாக கருதினாலும் பல்வேறு தளங்களில் மொழியின் தாக்கம் நிகழ்த்துகிற சமூக, மானிடவியல் மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மொழியின் பிரயோகம் மற்றும் பேச்சு மொழியின் வழக்கு ஆகியவற்றின் போக்கை ஆராய்ந்து மொழியியல் கருத்தாக்கங்கள் உருவாக்குதல் மற்றும் அதையொட்டிய விளக்கங்களையும், கணிப்புகளையும் தருவிக்கிற மொழியியல் ஆய்வு ஒரு வகை ஆகும். இது தவிர ஒரு மொழி பேசுகிற இனம் சார்ந்த வரலாற்றையும், அவர்களின் சமூக, கலாச்சார வளர்ச்சியையும் ஒப்பு நோக்கி மொழியை அணுகி ஆய்வுக்குட்படுத்தல் மற்றொரு வகை.
     ஒரு இனத்தின் தொடர்பாடலின் போக்கு மற்றும் மொழியில் அவ்வின மக்களின் கலாச்சாரம் நிகழ்த்துகிற மாற்றங்கள் அதன் வளர்ச்சியை அறிய உதவுகிறது. மொழிக்கும், பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வுக்குட்படுத்தும் போது குறிப்பிட்ட மொழியைப் பேசுகிற, கையாளுகிற மக்களின் பண்பாடு மற்றும் அவ்வின மக்களின் அறிதிறன் (Cognition) பற்றிய கூறுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மானிடவியல்சார் மொழியியல் (Anthropological Linguistics) கூற்றுகளே மொழியின் பயணத்தை துல்லியமாக கணிப்பவைகளாக இருக்கின்றன.


     மொழி ஒலி வழியே சிதைந்து உருமாறி வருவதை கண்டுணர மானிடவியல்சார் மொழியாய்வுகள் பயன்படுகிறது. வார்த்தைகள் மருவி வேறு பொருள் கொள்வது ஒலி சார்ந்த தொடர் பயன்பாடுகளின்  நீட்சியாக நிகழ்வது. வார்த்தைகள் மருவி வேறாக பொருள் கொண்டதற்கு நாமறிந்த பல உதாரணங்கள் உள்ளன.
     அதேபோல உருபியல் (Morphology) சார்ந்து மொழியின் நீட்சியாக மலர்ந்து கொண்டே செல்வதும் முக்கியமான ஒன்று. உருவியலின்படி வேர்ச்சொல் ஒன்றைப் பற்றியபடி கொடியாக தொடர் வார்த்தைகள் புதிது புதிதாக தோன்றுவது. இது ஒரு மொழியைப் பயன்படுத்தும் இனத்தின் கலாச்சார மற்றும் பண்பாட்டு வளர்ச்சியோடு இயைந்து ஏற்படக்கூடியது. இதற்கு உதாரணமாக, தொழில், தொழிலாளி, தொழிற்கூடம், தொழில் மையம், போர், போராளி, போராட்டம் என்பது போன்ற வார்த்தைகளைச் சுட்டலாம். இப்படியாக ஒரு வேர்ச்சொல்லிலிருந்து அது சார்ந்த பணிகளுக்கான சொற்கள் உருவாகிக்கொண்டே போவதை மொழியை உருபியல் ரீதியாக ஆய்வதின் வழியாக கணிக்கலாம்.
     மொழியின் உருபியல் வளர்ச்சிக்கு அடிப்படையான புத்தகமாக கி.மு.300ல் ஆக்கம் பெற்ற தொல்காப்பியம் இலக்கண நூலை கூறலாம். இன்று வரை அடிப்படை தமிழ் இலக்கண விதிகளுக்கு தொல்காப்பியமே எடுத்துக் கொள்ளப்படுவதே இதன் சிறப்பாகும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாக பிரிக்கப்பட்டு 1602 பாக்களில், ஒவ்வொரு எழுத்துக்கும் அதன் தொடர்புடைய  எழுத்துடன் புணர்கையில் கைக்கொள்ள வேண்டிய சொல்லாக்கத்திற்கான விதிமுறைகள் தெளிவாக வகுக்கப் பட்டுள்ளது.
     சொற்களுக்கான பொருள்களை தருகின்ற சொற்பொருளியலுக்கும், சொற்றொடரியலுக்கும் வேறுபாடு இருக்கின்றது. சொற்களுக்கான பொருளை அளிப்பது சொற்பொருளியல். ஆனால் சொற்றொடரியல் என்பது எழுத்து அல்லது பேச்சு போன்ற ஏதாவதொரு வடிவில் ஊடகமாக பிரயோகிக்கப்படுவது. சொற்றொடர்கள், வசனங்கள் இவற்றின் உபயோகத்திற்கும் நேரடியான பேச்சுக்கு உபயோகப்படுத்தப்படும் மொழியின் உரையாடல் தன்மையும் வெவ்வேறானவை. உரையாடலின் போக்கை தீர்மானிப்பதில் பண்பாட்டு கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. மொழித்திரிபுகள் நிகழ்வது உரையாடலின் தொடர்ச்சியான மொழிப் பிரயோகத்தின் வழியாகதான்.
          ஒரு சொல்லுக்கான பொருளை கோட்பாட்டு அடிப்படையிலும், செயலறிவு முறையிலும் ஆய்வுக்குட்படுத்துவது சொற்பொருளியல். சொற்கூட்டு பகுப்பாய்வின் வழியே இரு சொற்கள் இணையும் போது புதிதாக கிடைக்கிற சொல் குறித்த விவரம் கிடைக்கிறது. சில சொற்கள் சூழல் சார்ந்த பொருள் தருபவையாகவும் இருக்கின்றன. ஒரே சொல் பல பொருள் தருதல், பொதுவான பொருள் தரும் சொற்கள், ஒலி வேற்றுமை காரணமாக வேறு பொருள் தரக்கூடிய சொற்கள், ஒரே சொல் எதிரெதிர் பொருள்களை தருதல் இவை இலக்கணங்களுக்குள் வகைமைப்படுத்த இயலாதவையாக உள்ளன. இப்படியான சொற்களை ஆய்வுக்குட்படுத்தலில்தான் மானிடவியல்சார் மொழியியல் பகுத்தாய்வு முக்கிய இடம் பெறுகிறது.     
     மொழியின் சமூகச் செயல்பாடுகளின் வழியாகத்தான் அதன் சிதைவுகளும், மாற்றங்களும் நிகழ்கிறது. தனிப் பேச்சு, உரையாடல், படைப்பாக்கங்கள் இவற்றில் மொழியின் பிரயோகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படியான மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதுதான் மொழிசார்ந்த மிகச்சரியான கணிப்புகளை அளிக்கும்.
          ஒரு குறிப்பிட்ட காலத்தின் மொழி குறித்த ஆய்வினை மேற்கொள்வது வரலாற்று விளக்கமுறை மொழியாய்வு எனப்படும். மொழிக்குழுவின் கோட்பாடு மற்றும் பயன்பாடு குறித்த சரியான பார்வைக்கு சூழ்நிலைசார்ந்த மொழி பயன்பாடு பற்றிய பார்வை உதவும்.

மொழியை கோட்பாட்டு ரீதியாக அணுகும் வழியாக  மட்டுமே மொழியின் வளர்ச்சியையும், பரிமாணத்தையும் முழுமையாக உணர்ந்தறிய இயலாது. முழுமையான மொழியியல் ஆய்வு என்பது இலக்கண கோட்பாட்டு ரீதியாக மட்டுமின்றி மானிடவியல் பண்பாடு மற்றும் கலாச்சார மாற்றங்களை பொருட்டில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல ஒப்பீட்டு மொழியாய்வுகளும் மொழித்திரிபு சார்ந்த சொற்களை அணுக உதவும்.
000



“மானிடவியலும், மொழியியலும்“ என்ற இக்கட்டுரை உயிரோசை இணைய இதழில் வெளியானது. இதற்கு முன்பாக உயிரோசையில் வெளியான “பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி“ என்ற எனது கட்டுரையின் தொடர்ச்சியாக இதை வாசிக்கலாம். இதன் மீதான தங்கள் கருத்துகள் பகிர்வதன் வாயிலாக இப்பொருளில் தொடர்ந்து எழுத உந்துதலாக இருக்கும்வாய்ப்பளித்த உயிரோசை இணைய இதழிற்கு நன்றி.

- பொன்.வாசுதேவன்

9 comments:

  1. வாழ்த்துக‌ள் வாசு

    ReplyDelete
  2. வாழ்த்துகள் வாசு. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. "உரையாடலின் போக்கை தீர்மானிப்பதில் பண்பாட்டு கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது."

    கலாச்சாரத்தின் பொருள் என்ன?
    பண்பாடும், கலாச்சாரமும் எப்படி வேறுபடுகின்றன?

    ReplyDelete
  4. அருமையான பதிவு வாழ்த்துகள் நண்பா


    "
    நாளும் நலமே விளையட்டும் said... "உரையாடலின் போக்கை தீர்மானிப்பதில் பண்பாட்டு கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது."

    கலாச்சாரத்தின் பொருள் என்ன?
    பண்பாடும், கலாச்சாரமும் எப்படி வேறுபடுகின்றன? "


    நண்பரே இதற்கான விளக்கம் எனக்குத் தெரிந்தவரையில் இதோ

    கலாசாரம் - தமிழ் லெக்சிக்கன் அகராதியில் "culture" என்பதற்கு கலாசாரம் என்ற விளக்கம் தரப்பட்டுள்ளது. கலாசாரம் என்பது ஒழுக்கவியல் சார்ந்த ஒரு நிகழ்தகவு. அது ஒரு குறிப்பிட்ட மக்களின் பழக்க வழக்கங்களை வெளிக்கொண்டு தீர்மானிக்கப் படுகின்றது.

    பண்பாடு - இது "civilization" எனப்படுகின்றது. அடிப்படையில் பண்பாடும் கலாசாரமும் வேறானவை. ஆனால் ஒன்றுடனொன்று நெருக்கமானவை. கலாசாரத்தின் விரிவே பண்பாடு ஆகும். இதனுள் ஒரு இனத்தின் பழக்க வழக்கம், மத நம்பிக்கைகள் , விழுமியங்கள் , சடங்குகள் ,சம்பிரதாயங்கள் என மனிதனுடன் என்னவெல்லாம் ஓட்டியுள்ளனவோ அவை அனைத்தும் பண்பாட்டில் அடக்கம்.

    (உதாரணமாக :- வளிமண்டலத்தின் குறுகிய கால அவதானிப்பு " வானிலை" நீண்டகால அவதானிப்பு "காலநிலை" என்பது போன்றதே இதுவும் )

    தவறு இருப்பின் மன்னிக்கவும்

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள பகிர்வு...

    ReplyDelete
  6. பண்பாடு என்பது கலாச்சாரம் தான்! என்பது என் கருத்து.
    http://ta.wikipedia.org/wiki/பண்பாடு என்ற தளம் பாருங்கள்.

    culture --meaning is equivalent to the tamil word பண்பாடு

    i just wanted to point out the mistake. thanks for replying to my comment.

    ReplyDelete
  7. மொழிக்கும் உளவியலுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றனவா?

    ReplyDelete
  8. மொழிக்கும் உளவியலுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றனவா?

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname