Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Sunday, September 16, 2012

அணு மின் உலையை நாம் .ஏன் எதிர்க்க வேண்டும்?



அணு உலையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்..? இது கூடங்குளம் பிரச்சனைக்காக மட்டுமே எழுதப்பட்டதல்ல. அணு உலையை எதிர்ப்பதற்கான காரணங்கள், அதற்கான அவசியம் என்ன என்பதற்கான சிறு அறிமுக விளக்கம் மட்டுமே.

அணு உலைகளின் உள்வடிவமைப்பு மற்றும் இயக்கம்

யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்ற அணுசக்தி வேதியற்பொருட்களிலிருந்து மின் உற்பத்தி செய்ய, அவற்றை அணு உலைகளில் அடைத்துவைத்து பயன்படுத்துவார்கள். அணு உலைகளில் பல வகைகள் உண்டு. சமீபத்திய, பெரும்பாலான  நாடுகளில் மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது கொதிக்கும் தண்ணீர் அணுஉலை அல்லது Boiling water reactor, BWR என்னும் ஒருவகை அணுஉலையே! ஜப்பானில் ஃபுகுஷிமாவிலும் இதுதான் பயன்படுத்தப்படுகிறது! இது 1950களில் அமெரிக்காவின் GE ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

கொதிக்கும் தண்ணீர் அணு உலை (Boiling water reactor, BWR) அணுஉலையில், யுரேனியம் வேதிப்பொருள் குழாய்போன்ற கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு குளிர்ந்த நீருக்குள் மூழ்க வைக்கப்பட்டிருக்கும். யுரேனியத்திலிருந்து வெளியாகும் அணுசக்தியானது வெப்பத்தை உருவாக்கி, அதனைச்சுற்றியுள்ள குளிர்ந்தநீரை ஆவியாக்கும். அந்த ஆவியானது மின் உற்பத்தி செய்யும் டர்பைன் கருவியை இயக்கும்/சுழலச்செய்து மின் உற்பத்தியை தொடங்கும்/தூண்டும். டர்பைனை சுழலச்செய்தபின், அந்த நீராவியானது ஒரு கண்டென்சரின் உதவியுடன் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராகிவிடும். இந்த நீரானது மீண்டும் யுரேனியம் இருக்கும் அணு உலைக்குள் செலுத்தப்படும். இப்படியொரு சுழற்சியினால், யுரேனியத்திலிருந்து தொடர்ந்து 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்!

சரி.. இதனாலென்ன? நல்லதுதானே மின் உற்பத்தி வளர்ச்சிப் பணிதானே?

ஆமாம். நீங்கள் நினைப்பது சரிதான். மின் உற்பத்தி என்பது தேசத்தின் வளர்ச்சிப்பணிதான். ஆனால், உலகின் பல நாடுகளில் அணு உலை மின் உற்பத்தி சோதனை முயற்சியாகவே உள்ளது. இதில் பரிசோதனைப் பொருட்களாவது மனித உயிர்கள்தான். அணு உலை மின் உற்பத்தி என்பது முழுமையான தோல்வியடைந்த, பரிட்சார்த்த நிலையில் உள்ள சோதனை முயற்சி மட்டுமே. இதன் பாதிப்புகள் தற்காலிக உயிரிழப்புகளோடு நின்று விடாமல், மனித இனத்தையே அழிப்பதற்கான மூல காரணிகளைக் கொண்டது. 

உதாரணத்திற்குஜப்பானின் ஃபுகுஷிமாவில் இருக்கும் அணு உலைகள்ல என்ன பிரச்சினை என்று கொஞ்சம் தெளிவா பார்ப்போம் வாங்க…..

வெப்பம் தாங்காமல் வெடித்துச்சிதறிய இரண்டு அணு உலைகளின் மேற்கூரைகள்

அடிப்படையில, ஃபுகுஷிமாவின் அணு உலைகள் வயதானவை. அதனால் அவை வேலை செய்யாமல் நிறுத்தி விட்டார்கள். வேலை செய்யாமல் நிறுத்தப்பட்டாலும், அணு உலைகளுக்குள்ளே வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இதனால் வெப்பமும், நீராவியும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்! யுரேனியத்தை பாதுகாக்கும் தண்ணீரின் அளவும் குறைந்துகொண்டே இருக்கும்! ஆகவே, அணு உலைகளை நிறுத்தியபின்னும் பல மாதங்கள் அவற்றை தொடர்ந்து  தண்ணீர் சுழற்சிமூலம் குளிர்வித்துக்கொண்டே இருக்க வேண்டியது மிக மிக அவசியம்!

இல்லையென்றால், தண்ணீரின்  அளவு குறைய குறைய, யுரேனியம் வெளியே வந்து, சிறுக சிறுக உருக ஆரம்பித்துவிடும்! அப்படி உருகினால் கதிரியக்கம், வெப்பம், நீராவியினால் உருவாகும் அழுத்தம் இப்படி எல்லாம் சேர்ந்து, அணு உலைகள் வெடித்துச் சிதறி, ஒரு பெரும் பிரளயத்தை ஏற்படுத்துவதோடு, கதிரியக்கத்தையும் சுற்றுச்சூழலுக்குள் பரப்பிவிடும்! கிட்டத்தட்ட ஒரு அணுகுண்டு வெடித்ததைப்போல!!

கடந்த 12.3.2011 அன்று ஜப்பானில் அணு உலைகள் வெடித்ததாக உலக தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது, ஃபுகுஷிமாவில் இருக்கும் அணுமின் உற்பத்தி நிலையத்திலுள்ள அணு உலைகளை பாதுக்காக்கும் மேற்கூரைதான்! அது ஏன் வெடித்தது என்றால், அணு உலையை நீர் சுழற்சி மூலம் குளிர்விக்க பயன்படுத்தப்படும்  எந்திரம் வேலை செய்ய மின்சாரம் கொடுக்கும் ஜெனரேட்டர் செயலிழந்து போனதால்தான்! அதற்குக் காரணம், சுனாமி ஏற்பட்டவுடன் அணு மின் உற்பத்தி நிலையத்து தடுப்புச்சுவரை உடைத்து உள்ளே புகுந்த கடல் நீரானது, அணு உலையை குளிர்விக்கும் நீரை சுழற்சி செய்ய உதவும் ஜெனரேட்டரை மூழ்கடித்து செயலிழக்கச் செய்துவிட்டது. அது செயலிழந்தபின் மின்கல உதவியுடன் மீண்டும் அந்த எந்திரம் செயல்படுத்தப்பட்டாலும், சிறிது நேரத்துக்குப்பின் மின்கல மின்சாரம் தீர்ந்துபோகவே, மீண்டும் குளிர்விக்கும் எந்திரம் நின்று போனது.

இதற்கு மாற்று ஏற்பாடாக, அணு உலைகளை குளிர்விக்க கடல் நீரை உட்செலுத்தினார்கள். கடல் நீர் உட்செலுத்தப்பட்டதால், அணு உலையின் உள்ளே இருக்கும் நீர் கொதித்து நீராவி அதிகமானது. அது மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படாததால், அணு உலையினுள்ளே காற்றழுத்தம் அதிகமானது. இதனால் அணு உலை வெடித்துச் சிதறும் அபாயம் இருந்ததால், அந்த நீராவியை வெளியில் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிறு அளவிலான கதிரியக்க வேதியற் பொருட்களான சீசியம் 137 மற்றும் அயோடின் 121 ஆகியவை கலந்த நீராவியை வெளியில் திறந்துவிட்ட பின்னும் அணு உலையினுள் காற்றழுத்தம் குறைந்தபாடில்லை.

விளைவு, காற்றழுத்தம் தாங்காமல் அணு உலையின் மேற்கூரை வெடித்துச் சிதறியது. இந்த நீராவியை திறந்துவிடும் முன்னர்தான், மக்களின் பாதுகாப்பு கருதி அணுமின் உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள 12 மைல் சுற்றளவில் இருந்த மக்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு வெளியேறினார்கள்! இதனையடுத்து, ஒரு நாள் கழித்துஅணு உலை 1-ல் ஏற்பட்ட அதே பிரச்சினை தாய்இச்சி 3 அல்லது அணு உலை 3-லும் ஏற்படவே, அதனுடைய மேற்கூரையும் வெடித்துச் சிதறியது. 

எங்கே செல்லும் இந்த பாதை?

முக்கியமாக, இந்த அணு உலையின் கூரைகள் வெடித்ததற்கு, லேசாக உருகத் தொடங்கி விட்ட யுரேனியம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. யுரேனியம் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கு ம்வரைதான் அது பாதுகாப்பாக இருக்கும், அதிலிருந்து மின்சாரம் மட்டும் நமக்கு கிடைக்கும். ஆனால் தண்ணீரின் அளவு குறைந்து, மூழ்கியிருக்க வேண்டிய யுரேனியம் வெளியில் நீட்டிக் கொள்ளத் தொடங்கிவிட்டால், அழிவுகாலம் தொடங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.

ஏனெனில், தண்ணீருக்கு வெளியே வந்துவிட்டால் யுரேனியம் வேகமாக உருகத் தொடங்கிவிடும். அப்படி அது உருகினால்,  அதிலிருந்து வரும் வேதியல் மாற்றத்தினால் அணுவை விட சிறிய நுண்ணனு துகள்களும், அளவுக்கதிகமான வெப்பமும், அணுசக்தியும், கதிரியக்க வேதியற் பொருட்களும் வெளியேறும். ஒரு கட்டத்தில் அணுகுண்டு போல வெடித்துச்சிதறி,  சுற்றியுள்ள பல கிலோ மீட்டர் பரப்பளவிலுள்ள மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களையும் ஏற்படுத்தி, தாவர-விலங்குகளையும் அழித்துவிடும்! அதுமட்டுமில்லாம, பாதிக்கப்பட்ட நிலப் பரப்பில் பல வருஷங்களுக்கு உயிர்கள் வளராது, மக்கள் புற்றுநோய்களால் பல சந்ததிகளுக்கு தொடர்ந்து  பாதிக்கப்படுவார்கள்.

இப்போது சொல்லுங்கள்.. அணு மின் உலையை நாம் எதிர்க்கலாமா வேண்டாமா?


Friday, October 7, 2011

போராட்ட காலத்தில் காதல் - அ.மார்க்ஸ்

கார்சியா மார்க்வெசின் ‘காலரா காலத்தில் காதல்’ எங்களைப் போன்ற இளைஞர்களை அந்தக் காலத்தில் கவர்ந்த நாவல்களில் ஒன்று. அதன் மேலோட்டமான எளிமையிலும், உக்கிரமான காதலிலும் மயங்கி ஏமார்ந்து விடாதீர்கள் என மார்க்வெசே எச்சரித்திருந்தும்கூட அந்த மேலோட்டமான எளிமை என்கிற பொறியில் வேண்டுமென்றே வலிந்து    சிக்கி அதை ஒரு காதல் காவியமாக நாங்கள் ரசித்திருக்கிறோம். காதலுக்குள் எல்லோரும் பைத்தியந்தான். முட்டாள்கள்தான். இந்த முட்டாள்தனத்தையும் பைத்தியக்காரத்தனத்தையும் பகுத்தறிவின் தர்க்கத்தில் இயங்கும் சமூகம், குடும்பம், சாதி முதலான நிறுவனங்கள் ஏற்பதில்லை. வரலாறு முழுவதும் இந்த முரணே காதல் காவியங்களின் அடிப்படையாய் இருந்து வந்துள்ளது.


இன்று இப்படியான ஒரு முரணுக்குப் பலியாகியுள்ளார் 12 ஆண்டு காலமாகச் சோறும் தண்ணீரும் இல்லாமல் இந்திய அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இரும்புப் பெண்மணி இரோம் சானு ஷர்மிலா. இந்திய அரசியலை மேலோட்டமாகக் கவனித்துக் கொண்டு வருபவர்களுக்குக் கூட ஷர்மிலாவைத் தெரிந்திருக்கும். கடந்த 31 ஆண்டுகளாக இந்திய அரசு மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பல ஆண்டுகளாகக் காஷ்மீரிலும், தற்போது மாவோயிஸ்ட்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பகுதிகளிலும் அமுல்படுத்தி வரும் ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்’ தை(அஃப்ப்சா- AFPSA) மணிப்பூரிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காக அவர் இந்தப் போரட்டத்தை நடத்தி வருகிறார்.  எந்த ஒரு பயங்கரவாதச் செயல் அல்லது அதிரடி நடவடிக்கையாலும் ஈர்க்க இயலாத அளவிற்கு உலகின் கவனத்தை இந்தப் பிரச்சினையின் மீதும், மணிப்பூர் மக்களின் போரட்டங்களின்மீதும் தனது அமைதி வழிப் போராட்டத்தின் மூலம் ஈர்த்தவர் அவர்.

இரக்கம் மிகுந்த இந்திய அரசு ஷர்மிலாவைச் சாகவிடவில்லை. 12 ஆண்டுகளாக அவரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அவரை யாரும் எளிதில் சந்திக்க முடியாது. உள்துறை அமைச்சரின் அனுமதி பெற்றுத்தான் சந்திக்க முடியும். மணிப்பூரிலுள்ள ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு மூக்கில் ஒரு ப்ளாஸ்டிக் குழாயைச் செருகி வயிற்றுக்குள் கட்டாயமாகத் திரவ உணவைச் செலுத்தி அவரை ‘உயிருடன்’ வைத்துள்ளது. நாசித் துளையிலிருந்து நிரந்தரமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக் குழாய், சீவப்படாத சுருண்ட கேசம், ஊடுருவும் கண்கள்  இவற்றுடன் இன்று அவர் ஒரு icon (திரு உரு) ஆகியுள்ளார்.


கதை எழுதுதல், யோகாசனம் பயிலுதல், நீதிமன்றத்திற்கும் மருத்துவமனைக்குமாக அலைக்கழிக்கப்படுதல், மெல்லிய குரலில் தன் உறுதியை வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் வெளிப்படுத்துதல் என்று வாழ்ந்துகொண்டுள்ள ஷர்மிலாவின் உடல் உள் உறுப்புகளெல்லாம் உளுத்துப் போய்க்கொண்டுள்ளன. இப்போது அவருக்கு 38 வயது. உண்ணா விரதத்தைத் தொடங்கியபோது 26. அவரது ஆரோக்கியத்தின் அடையாளங்கள், பெண்ணுடலின் அடையாளமான மாத நிகழ்வு உட்பட, இன்று எதுவும் காணக்கூடியதாக இல்லை.

இந்திய மனித உரிமைப் போராளிகளால் கடுமையாக எதிர்க்கப்படும் இந்த ‘அஃப்ப்சா’ சட்டம் இராணுவத்திற்கு அபரிமிதமான அதிகாரங்களை வழங்குகிறது. யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். எந்த வீட்டுக்குள் வேண்டுமானாலும் நுழையலாம். சுட்டுக் கொல்லலாம். பெண்களாயின் அவர்களை ஒரு இராணுவம் என்னென்னவெல்லாம் செய்யுமோ, அவ்வளவ்வையும் செய்து பின் கொல்லலாம். இதற்கெல்லாம் எந்தக் காரணத்தையும் அவர்கள் சொல்ல வேண்டியதில்லை. வெறும் சந்தேகமொன்றே போதும். செய்தது தவறு என எத்தனை மனித உரிமை அமைப்புகளும், விசாரணை ஆணையங்களும் சொன்ன போதும் காரணமான இராணுவத்தினரை யாரும் தண்டிக்க முடியாது.1980 தொடங்கி 2004வரைக்குமே 24,000 பேர்களை இராணுவம் இவ்வாறு கொன்றுள்ளது.

2004ல் தங்கம் மனோரமா என்கிற பெண் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இராணுவ நிலையமான காங்லா கோட்டை முன்பு மணிப்பூரி அன்னையர், ‘இந்திய இராணுவமே எங்களை வன்புணர்சி செய்’ என்று எழுதப்பட்ட துணியுடன் நடத்திய நிர்வாணப் போராட்டம் எல்லோரையும் தலை குனியச் செய்தது- இந்திய அரசைத் தவிர.


2005ல் இச்சட்டப் பிரிவுகளைக் கடுமையாகக் கண்டித்து  அளிக்கப்பட்ட நீதியரசர் ஜீவன் ரெட்டி ஆணைய  அறிக்கை, இச்சட்டத்திற்கு எதிராகச் சென்ற அண்டு காஷ்மீர் இளைஞர்கள் நடத்திய கல்லெறிப் போராட்டம் எதற்கும் மசியாமல் இன்னும் கோலோச்சுகிறது அஃப்ப்சா சட்டம்.

அப்படித்தான் 2000ல் ஒரு நாள். மணிப்பூர் தலைநகரான இம்பாலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள மலோம் என்கிற இடத்தில் இந்திய இராணுவம் பத்து அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுச் சாய்த்தது. அடுத்த நாளிதழ்களில் சிதைந்த சடலங்களின் புகைப்படங்களைப் பார்த்த ஷர்மிலா ஒரு முடிவுக்கு வந்தார். இறை பக்தி மட்டுமின்றி காந்தியடிகளின் மீதும் பக்தி கொண்ட அவர், அம்மா இரோம் ஷகியிடம் சென்று ஆசி பெற்று வந்து உண்ணா நிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அண்ணா ஹஸாரே போல ஏகப்பட்ட ஊடக, கார்பரேட், மற்றும் மத்திய வர்க்க ஆதரவோடு தொடங்கப்பட்ட போராட்டமல்ல அது. ஒரு ஏழை நான்காம் நிலை ஊழியர் ஒருவரின் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு இளம் பெண் தன் மனச்சாட்சியின் உந்துதலால் தன்னந்தனியாக எடுத்த முடிவு அது. தனது உடலைத் தவிர வேறு சொத்துக்களோ, ஆயுதங்களோ, விளம்பரங்களோ இல்லாத அந்தப் பெண் தன் உடலையே ஆயுதமாக்கிக் களம் இறங்கினாள். சாகும்வரை உண்ணாவிரதமென அவள் சொல்லவில்லை. அஃப்ப்சா சட்டம் நீக்கப்படும் வரை என்றுதான் சொன்னாள். இந்திய அரசைப் புரிந்து கொண்டவர்களுக்கு ஒருவேளை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தோன்றலாம்.

மணிப்புரி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் உலகளவில் தெரிவதற்கு ஷர்மிலாவின் இந்தப் போராட்டம் பெரிய அளவில் காரணமாகியது. போராட்டக்காரர்கள், இயக்கத்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர் எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஷர்மிலா ஒரு icon ஆனார். முப்பதுக்கும் மேலான சிவில் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பான ‘அபுன்பா லுப்’ உள்ளிட்ட அமைப்புகள் ஷர்மிலாவை முன்வைத்து தமது போராட்டத்தின்பால் உலகின் கவனத்தை ஈர்த்தன.

ஷர்மிலாவின் 12 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்திற்குக் கிடைக்காத ஊடக ஆதரவு, அண்ணா ஹஸாரேயின் 12 நாள் உண்ணாவிரதத்திற்குக் கிடைத்தது குறித்த சர்ச்சை ஒன்று உருவான தருணத்தில்தான் ‘தி டெலிகிராஃப்’ நாளிதழின் கொல்கத்தாப் பதிப்பில் அந்தச் செய்தி வந்தது (செப் 2011). “இரோம் காதலைப் பற்றிப் பேசுகிறார்- உண்ணாவிரதப் போராளி காதலிக்கிறார், ஆதரவாளர்கள் எதிர்ப்பு”  என்கிற தலைப்பில் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது அச் செய்தி. சுருக்கம் இதுதான்:

உலகின் நீண்ட நாள் உண்ணாவிரதப் போராளி தான் காதலிப்பதாகவும், தன் காதலன் பொறுமையின்றிக் காத்திருப்பதாகவும், தன்னை அவர் சந்திக்க வந்தபோது தன் ஆதரவாளர்கள் தடுத்துவிட்டதாகவும் கூறுகிறார். “அவர்களின் எதிர்ப்பிற்குச் சில சமூகக் காரணங்களும் உள்ளன. என் காதலர் டெஸ்மான்ட் கூடினோ லண்டனில் குடியுரிமையுள்ள ஒரு  கோவா மாநிலத்தவர். அதனால்தான் அவர்கள் என் காதலை ஏற்கவில்லை. நான் எல்லோரையும் போல ஒரு சாதாரணப் பெண். ஒரு சூப்பர் ஹீரோவாக என்னை அவர்கள் பார்க்கக் கூடாது.”
48 வயது டெஸ்மான்ட் ஒரு எழுத்தாளர், மனித உரிமைப் போராளி. ஓராண்டு காலக் கடிதப் பரிமாற்றத்திற்குப் பின் சென்ற மார்ச்சில்தான் இருவரும் சந்தித்துள்ளனர். கடிதங்களைப் படுக்கைக்குப் பக்கத்தில் ஒரு பெட்டியில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளார் ஷர்மிலா. காதலர் பரிசளித்துள்ள ‘ஆப்பிள் மேக்’ கையும் பெருமையோடு காட்டுகிறார்.

“சென்ற மார்ச்சில் அவர் இங்கு வந்திருந்தபோது என் ஆதரவாளர்கள்  என்னைச் சந்திக்க விடவில்லை. அவரது ஒழுங்கற்ற தோற்றம், மனித உரிமைகள் பற்றிய பேச்சுக்கள் எதுவும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவரை அவமானப்படுத்தினார்கள், மிரட்டினார்கள். பெண்கள் தங்குமிடத்திலேயே அவர் காத்திருந்தார். இரண்டு நாட்கள் அவரும் உண்ணாவிரதமிருந்து போராடிய பின்பே என்னைச் சந்திக்க அவரை அனுமதித்தனர். அவர்களுக்கு இரும்பு இதயம்.”

மார்ச் 9 அன்று நீதிமன்றத்தில் தன்னைச் சந்திக்க வந்த டெஸ்மான்டிற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென நீதியரசரை வேண்டிக்கொண்டார் ஷர்மிலா. “இல்லாவிட்டால் அவரை அடித்தே கொன்றிருப்பார்கள். அவர்களுக்கு எங்கள் உறவைப் புரிந்து கொள்ள முடியாது. அற்ப புத்தி உடையவர்களாக உள்ளனர்.”

டெஸ்மான்ட் எல்லோரையும் போல ஒரு காதல் பைத்தியம். “காந்தியிடம் அவர் மனைவி நடந்துகொண்டதுபோல நான் ஷர்மிலாவிடம் நடந்து கொள்வேன். அவளது காரியங்களுக்குத் துணையாய் இருப்பேன். நான் ஒரு மகாத்மாவைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். அந்த வாழ்வு அவ்வளவு எளிதாக இராது என நான் அறிவேன்” – இது டெஸ்மான்ட்.

டெலிகிராஃப் பத்திரிக்கையாளர் புறப்படும்போது, “எப்போது திருமணம்?” எனக் கேட்டார். “எனது கோரிக்கை நிறைவேறிய பின்புதான் திருமணம் செய்துகொள்வேன்” எனப் பதிலளித்தார் இரோம் ஷர்மிலா. அதாவது இந்திய அரசு அஃப்ப்சா சட்டத்தைத் திரும்பப் பெற்ற பின்பு.

இந்த நேர்காணல் மணிப்பூரில் ஒரு மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. ஷர்மிலாவின் ஆதரவாளர்களும், இயக்கத்தவர்களும் கொதித்தெழுந்தனர். செல்வாக்கு மிக்க அபுன்பா லுப் அமைப்பு, நேர்காணலை வெளியிட்ட டெலிகிராஃப் நாளிதழை மணிப்பூரில் தடை செய்தது. இந்தச் செய்திக்குப் பின் மிகப் பெரிய சதி இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ‘கோர்’ என்னும் தொண்டு நிறுவனம், புகழ்பெற்ற இயக்கவாதி பப்லு லோய்டோன்பாம் ஆகியோரின் கடுமையான விமர்சனங்களை இணையத் தளங்களில் காணலாம். “போராளியின் தனிப்பட்ட வாழ்வை ஏன் இவர்கள் பேசுகிறார்கள்? அண்ணா ஹஸாரே அல்லது காந்தியின் தனிப்பட்ட வாழ்வு அக் காலங்களில் பேசப்பட்டதா? அஃப்ப்சா சட்டத்திற்கெதிரான போராட்டத்தை இவர்கள் பலவீனப் படுத்துகின்றனர்” – என்கிற ரீதியில் இவ் விமர்சனங்கள் அமைகின்றன. இது இந்திய அரசின் ‘காதல் சதி’, டெஸ்மான்ட் ஒரு உளவாளி என்கிற அளவில் கருத்துக்கள் கசியவிடப் படுகின்றன.

இன்னொரு பக்கம் ஷ்ர்மிலாவைத் திருஉருவாக்கித் தம் போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தேடியவர்கள், “எங்கள் போராட்டம் 90 களில் தொடங்கியது. ஷர்மிலா 2000த்தில்தான் வந்து சேர்ந்து கொண்டார். அவர்தான் எங்கள் ஆதரவாளரே ஒழிய, எங்களை அவர் ஆதரவாளராகச் சுருக்கிப் பார்க்கக் கூடாது” என்றும் பேசத் தொடங்கியுள்ளனர்.

எனினும் இவர்களால் ஷர்மிலாவின் காதல் ‘கதையைப்’ பொய் என நிராகரித்துவிட முடியவில்லை. டெலிகிராஃப் இதழில் வந்த அத்தனை செய்தியும் அவர் வாயால் சொல்லப்பட்டு என்.டி.டி.வி யில் ஒளிபரப்பாகியுள்ளது. தவிரவும் யாரும் அவரைச் சந்தித்து இது குறித்துக் கேட்டுவிட முடியும்.

டெலிகிராஃப் நாளிதழும் அப்படியொன்றும் போராட்டத்திற்கு எதிரானதல்ல. ஷர்மிலாவின் உண்ணாவிரதத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்ததுதான். இந்தச் செய்தி ஒரு மிகப்பெரிய ‘ஸ்கூப்” ஆக இருக்கும் என்கிற நோக்கிலேயே முதல் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளது என்றே தோன்றுகிறது. அதற்காக இதழையே தடை செய்வது என்பதெல்லாம் என்ன நியாயம் என்கிற கண்டனம் பல தரப்புகளிலும் வந்துள்ளது. அரசியல் நோக்கம், இறுதிக் குறிக்கோள், அரசியல் கறார்த்தன்மை (political correctness) என்பதெல்லாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறார்களோ அந்த மக்களின் அடிப்படை உரிமைகளையே, காதல் உரிமை, கருத்துரிமை உட்பட நசுக்குவதை நியாயப் படுத்துவது குறித்த ஒரு விவாதம் இன்றைய தேவையாக உள்ளதைப் பலரும் உணர்கின்றனர்.

ஷர்மிலா கற்பனை செய்து பார்க்க இயலாத மிகப் பெரிய தியாகத்தைச் செய்தவர்.  இப் போராட்டம் உலகறியச் செய்யப் பட்டதில் அவரது பங்கு மிக முக்கியம். இன்றும் கூட அவர் தன் கொள்கையையே முதன்மைப் படுத்தி நிற்கிறார். ஒருவேளை அவர் தன் காதலருடன் இணைந்து வேறு வடிவங்களில் இப் போராட்டத்தைத் தொடர விரும்பினால், மிக்க கண்ணியத்துடன் அதை ஏற்று அவருக்குத் துணை நிற்பதே நாம் அவருக்குச் செய்யும் நியயமான மரியாதையாக இருக்க முடியும்.

                      [இந்நிகழ்வையும் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில்     நிகழவிருந்த இலை உதிர்கால இலக்கிய விழாவிற்கு ஏற்பட்ட நியாயமான எதிர்ப்பையும் இணைத்து எழுதப்பட்ட விரிவான கட்டுரையை (‘போராட்ட காலத்தில் காதலும் கவிதையும்) அக்டோபர் 2011 தீராநதி இதழில் காணலாம்’.]

Thursday, February 10, 2011

விடுதலையும், வன்செயலும்


பிரமிள் தமிழிலக்கியத்தின் தனித்துவமான ஆளுமைகளுள் ஒருவர். கவிதை, சிறுகதை, கட்டுரைகளுடன் பல முக்கியமான படைப்புகளையும் பிரமிள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவரது பல படைப்புகள் அச்சுக்கு வராமலேயே உள்ளது. 
மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. அசல் படைப்பின் தரம் சற்றும் குறையாமல், சரியான புரிதலை தரவல்ல மொழியாக்கங்கள் மிகக்குறைவு. மொழிபெயர்க்க கடினமான சிரமமான கதைகளையும், கட்டுரைகளையும் பிரமிள் அசாத்தியமான திறமையுடன் மொழி பெயர்த்துள்ளார்.


அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தில் முன்னணி வகித்த புரட்சிகரச் சிந்தனையாளர் ‘பிரான்ஸ்பனன்‘(FRANTZ FANON) என்பவர். மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான  மாட்னிக்கில் 1925ல் பிறந்த இவர் 1952லிருந்து அல்ஜீரியாவில் வசித்து வந்தார். இவர் எழுதிய நூல்களில் 'WRETCHED OF THE EARTH' மிகவும் பிரபலமானது. இந்த புத்தகத்தில் பனன் எழுதியுள்ள கருத்துகள் இன்றளவிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். இந்நூலிலுள்ள ‘புரட்சிகர வன்முறை பற்றி‘ என்ற அத்தியாயத்தின் ஒரு பகுதியை எழுத்தாளர் பிரமிள் தமிழாக்கம் செய்துள்ளதை இரண்டு பகுதிகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

விடுதலையும் வன்செயலும் (பகுதி 1)
- பிரான்ஸ்  பனன் - தமிழில் : பிரமிள் - 

            பிரான்ஸ்  பனன் ஒரு புரட்சிகரச் சிந்தனையாளர். அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராட்டத்தில் முன்னணி வகித்த ஒரு முக்கிய தலைவர். அவரது புரட்சிகரத் தத்துவார்த்தப் படைப்புகள் அல்ஜீரியப் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்தவுடன் ஆபிரிக்க தேசிய சுதந்திர எழுச்சிகளுக்கும் உத்வேகத்தை அளித்தன.
     தேசிய சுதந்திர எழுச்சிகளின் வரலாற்று யதார்த்தத்தை பனன் மிகவும் துல்லியமாக ஆய்வு செய்கிறார். கறுப்பு ஆப்பிரிக்காவில் தாண்டவமாடிய காலனித்துவச் சுரண்டலின் மனிதாபிமானமற்ற கொடூரத்தை அவரது எழுத்துக்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, கலாச்சாரப் பரிமாணங்களில் ஊடுருவும் ஏகாதிபத்தியச் சுரண்டல் முறையானது எவ்விதம் அம்மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து விடுகிறது என்பதை அவர் மிகவும் திறமையாகச் சித்தரித்துக் காட்டுகிறார். ஏகாதிபத்தியவாதிகளின் அடக்கு முறையை உடைத்தெறிய வேண்டுமாயின் ஆயுதப் போராட்டமே அதற்கு ஒரே வழி என்பதை பனன் சதா வலியுறுத்தி வந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை வன்முறையானது அத்தியாவசியமான, வரலாற்றுக் கட்டாயமான ஒரு அரசியற் போராட்ட வடிவம் என்பதை அவர் வலியுறுத்துகிறார். அநீதிக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறை தர்மமானது, புரட்சிகரத் தன்மையுடையது என்பதை அவரது அவர் அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களின் விடிவுக்கு வழிகோலும் வன்முறைப் போராட்டங்கள் உன்னதமான தார்மீக இலட்சியத்தை உடையன என்கிறார்.
     ஒடுக்குமுறை ஆட்சியில் இருந்து ஒரு தேசிய இனம் தனது விடுதலையை, தேசிய மலர்ச்சியை பெற வேண்டுமாயின் அது வன்முறையினால் தான் முடியும். ஒடுக்குமுறை ஆட்சியில் இருந்து புரட்சிகர மக்கள் சமூகம் தனது கையில் ஆட்சியைப் பெற்றுக் கொள்வதை இது குறிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் மிகக் குறைந்த கோரிக்கையில் இருந்து அவர்களின் பிரக்ஞையிலிருந்து வாழ்வோட்டத்திலிருந்து இது வெடிக்கிறது. அடக்கப்பட்ட மக்களின் இப்புரட்சிகர எழுச்சி அடக்குமுறையாளர்களை சித்தப் பிரமைக் குள்ளாக்குகிறது.

     தேசிய விடுதலை ஒரு அற்புத நிகழ்ச்சி அல்ல. அது ஒரு சரித்திர நிகழ்ச்சி. இரண்டு சக்திகளின் மோதலில் இது விளைகிறது. அடக்குமுறையாளர்களின் வன்முறை மயமான ஆட்சியிலிருந்தே இது பிறக்கிறது. தேசமக்களை துப்பாக்கி முனையில் அடக்குவதினால் மக்கள் வன்முறையைக் கையாளுகின்றனர். இந்த அடக்குமுறையாளர்களை ரகசியமாக அழிக்க முடியாது. பார்வையாளர்களாக இருந்த மக்கள் சரித்திர வெளிச்சத்துக்கு வந்துவிட்ட போராளிகளாகிறார்கள். இது மக்களையே மாற்றி அமைக்கும் இயக்கம். ஆதிக்கத்திலிருந்து விடுபடும் ஒரு இயக்கம் புது மனிதனை உருவாக்குகிறது.
     இளமையிலிருந்தே ஒடுக்கப்பட்ட வந்த மக்கள் சமூகம் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க வன்முறை தவிர வழியில்லை என்று இளமையிலிருந்தே உணர்கிறார்கள்.
     அடக்குமுறையாளர்கள் உலகை இரண்டு படுத்துகிறார்கள். தங்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி என வாழ்க்கை நலன்களைப் பிரித்து விடுகிறார்கள். இந்த பிரிவினையைக் கவனித்தால்தான் விடுதலைக்கான தேவை எப்படி உருப்பெறுகின்றன என உணரலாம். இந்த வேறுபாட்டை போலீசும், இராணுவமும் பாதுகாக்கிறது. அவர்கள் இல்லாமல் இந்த கூறுபட்ட வாழ்க்கை முறை தாக்குப்பிடிக்காது. சுரண்டுகிறவனை சுரண்டப் படுகிறவனிடமிருந்து பொலீசும் இராணுவமே காப்பாற்றுகிறது. இதுவே அடக்குமுறைச் சமூக அமைப்பு. இது அமைதியை நிலைநாட்டும் அமைப்பாக சுரண்டப்படுகிறவனின் வீட்டினுள் வன்முறைக்கும் அமைதியின்மைக்கும வழி செய்கிறது. ஆட்சியாளர்களை ஆளப்படுவனுக்கு எதிராக துருவமாக்குகிறது. இதனால் இருவரிடையிலேயும் உடன்பாட்டுக்கு இடமே இல்லை.
     அன்றாட வாழ்வில் வன்முறையை உபயோகித்து மக்களை அடக்கி வந்த அதே வன்முறை, அடக்கப்பட்டவர்களினால் விடுதலைப் போராக உருமாற்றமடைகிறது. அடக்கு முறையாளர்களால் சுரண்டப்படும் மக்கள் எவ்விதமான உயர்ந்த மதிப்பீடுகளையும் கொண்டவர்கள் அல்ல என்றும் மிருகங்கள் என்று சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தச் சித்தரிப்பு அடக்கப்பட்ட மனிதனுக்கு சிரிப்பூட்டும் சித்தரிப்பு. தங்களை மிருகங்களாகக் கருதி பிரயோகிக்கப்படுகிற அடக்குமுறையின் வன்முறையினை அவன் ஆட்சியாளன் மீதே திருப்பிவிடக் காத்திருக்கிறான்.
     எனவே அடக்குமுறையாளர்கள் பேசும் சகோதரத்துவம் அவனது அன்றாட வாழ்வைப் பொறுத்தவரை அர்த்தமற்றது. அடக்குமுறையாளன் சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசினால் அடக்கப்பட்டவன் சக்தியை உருவுகிறான். பேச்சளவில் ஒன்றும் செய்கையில் வேறு ஒன்றுமாக அடக்குமுறையாளன் நடந்து கொள்வதே அதன் காரணம்.
     வாழ்க்கையின் அடிப்படை உரிமைகளைப் பறிகொடுத்த மக்களின் ஒரே நோக்கம் தாம் பறிகொடுத்த நிலங்களைப் பெறுவதே. அவர்கள் தங்களிடமிருந்து அதைப் பறித்தவனுடன் சகோதரத்துவ உறவு கொள்ளமாட்டார்கள். பறிக்கப்பட்ட நிலம் திரும்பப் பெறப்பட வேண்டும். இதுதான் அடக்கப்பட்டவனது ஒரே நோக்கம். இதை உணராமல் சமாதானம் பற்றிப் பேசும் அறிவு வாதம் அர்த்தமற்றது.
     சமாதானத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள் பெயர் பெற்றவர்களாகவும், நிலத்தைப் பறி கொடுத்த மக்கள் சாமான்யர்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்த முகம் தெரியாத மக்கள் இழந்த நிலம் என்ற இறைமை அவர்களை வன்முறை என்ற முகாமுக்கு இட்டுச் செல்கிறது. இதனால் சரித்திரம் அவர்களுக்கு ஒரு முகத்தைக் கொடுக்கிறது. வன்முறை என்ற மதிப்பீட்டை வலுவிழக்க வைத்து மக்களைப் பொதிமாடுகளாக்குகிற மதிப்பீடுகள் துகள்களாகின்றன. அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் நேரில் காண்பது எதை? அவர்களை எளிதாக கைது செய்யலாம். கொல்லலாம், சீர்குலைக்கலாம் என்பதைத்தான். சமாதான இந்த அனுபவங்களை மக்கள் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சமாதானவாதிகளின் போதனையாகும்.
     எல்லா மனிதர்களும் சமமானவர்கள்என்ற போதனையைத்தான் வன்முறையினைக் கைக்கொள்ளும் மக்கள் செயல்படுத்துகிறார்கள். தங்களை அடக்கியாள்கிறவர்களும் தாங்களும் சமமானவர்கள் என்றால் அடக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் இருக்க முடியாது. எனவே வெளிப்படையான ஒரு போலிக் கட்டுப்பாடு தான் வன்முறையினால் சிறகடிக்கப்படுகிறது.

     நிலமும், உணவும் தேவை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு அவை கிடைப்பதற்கான வழிமுறைகளைக் கொண்டு வருவது தான் அறிவு ஜீவிகளின் சித்தாந்தமாக வேண்டும். மக்களுக்கு இவை கிடைக்காமல் தடையிடுகிற எதுவுமே அடக்கப்பட்ட மக்களினுள் இருக்கிற அறிவுவாதிகள் உணர்ந்து கொள்கிறார்கள்.
     அடக்கப்பட்டவன் எப்போதுமே அடக்குமுறையாளனால் குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டிருப்பான். ஆனால் தான் குற்றவாளியல்ல என்பது அடக்கப்பட்டவனுக்குத் தெரியுயும். அவன் தரம் குறைந்தவனுமல்ல. அவன் மீது ஆதிக்கம் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. பொலீஸ், இராணுவம் ஆகியவற்றின் கெடுபிடிகள் அவனை அடக்குகிற அதே சமயத்தில் உள்ளூர அவனை வன்முறைக்கும் தயார்படுத்துகின்றன.
     அசையாதேஎன்ற கட்டளை தாக்குஎன்ற தூண்டுதலாகவே உருமாறுகிறது. அடக்கப்பட்டவனை விழிப்படைய வைத்து வன்முறைக்கான தயார்நிலையை உருவாக்குகிறது. இறுதிப் போராட்டத்தை ஒத்திப்போட முடியாது என்ற நிலை எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் தடையே தடையினை மீறுவதற்குத் தூண்டுகோலாகும் என்பது விதி. 

போடா ஒம்போது

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு எங்கள் தெருவில் இருக்கும் 1200 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவை காணச் சென்றிருந்தேன். பல வருடங்களாக நடத்தப்படாமல் நின்று போயிருந்த தெப்பத் திருவிழா கடந்த ஆண்டு முதல் மறுபடியும் தொடங்கியிருக்கிறது.

சிறுவயதுகளில் தெப்பம் குளத்தில் மிதந்து செல்வதைக் காண்பது வியப்பும், விந்தையுமானதொரு அனுபவத்தைத் தந்திருக்கிறது. எதையுமே தன்னிச்சையாக அனுபவித்து, ரசிப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லை. அதுபோன்ற மனோநிலையுடன் மாலை 5 மணிக்குச் சென்று குளத்தருகில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தெப்பம் கட்டும் வேலை காலை முதல் நடந்து கொண்டிருக்கிறது.
மொழிக்கவர்ச்சி காரணமாக வார்த்தைகள் எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்று அறிந்து கொள்வதில் கடந்த சில வருடங்களாக எனக்கு ஆர்வமும், வசீகரமும் இருந்தததால் அது சார்ந்து பல புத்தகங்களை வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். காலையில் ‘பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி‘யில் தெப்பம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடி, ‘புணை‘ அல்லது ‘மரக்கலம்‘ என்பதே பொருள் என அறிந்தேன். ஆனால் தெப்பம் மரங்களை மட்டும் பிணைத்துக் கட்டப்படவில்லை. காலமாற்றத்திற்கேற்ப பிளாஸ்டிக் தண்ணீர் டிரம்களை ஒன்றோடொன்று கயிற்றினால் இறுக்கி கூடவே மரக்கட்டைகளையும் சேர்த்து தெப்பம் செய்திருந்தார்கள்.

பூக்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வண்ணக்கலவையாக காட்சியளித்தது. குளத்தைச் சுற்றிலும் சிறுவர்கள் கூட்டாக விளையாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். பள்ளி விடுமுறையாதலால் அவர்களின் கொண்டாட்டம் கூடுதலாயிருந்தது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவரை ஒருவர் சேட்டை செய்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் மற்றொரு சிறுவனைப் பார்த்து திடீரென ‘போடா ஒம்போது‘ என்று கத்தினான். எதற்காக சொன்னான் என்பது தெரியவில்லை. பதிலுக்கு அவன் துரத்த இருவரும் தொலைவில் ஒருவரையொருவர் விரட்டி ஓடிக் கொண்டிருந்தார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வார்த்தையை கேட்க நேரிட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த வார்த்தைப் பிரயோகமெல்லாம் இப்போது கிடையாது திருநங்கைகள் உரிய அங்கீகாரத்துடன் உலா வரத் தொடங்கியிருக்கும் காலம் இது என எண்ணிக் கொண்டிருந்தேன்.

பள்ளிக் காலங்களில் பலமுறை கேட்ட வார்த்தைதான். திருநங்கைகள் என்றாலே மனதில் இனம்புரியாத பயம் தோன்றியிருந்த காலம் அது. அப்போதெல்லாம் ‘ஒன்பது‘ ‘பொட்டை‘ ‘ரெண்டுங்கெட்டான்‘ ‘ஏழரை... ஒன்றரை‘ என பல வார்த்தைகள் புழக்கத்திருந்தது. பள்ளியில் மிகச் சாதாரணமாக இந்த வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.

எங்கள் பகுதியில் பெரும்பாலும் ரிக் ஷா ஓட்டிகளிடமிருந்துதான் இந்த வார்த்தைகள் புழக்கத்திற்கு வந்து கொண்டிருந்தன என மாணவப் பருவத்தில் நாங்களும் யூகித்திருந்தோம். திங்கட் கிழமைகளில் நடக்கும் வாரச் சந்தையில் கடைகளில் காசு கேட்க வரும் திருநங்கைகள் அனைவரும் ரிக் ஷா ஓட்டிகளுக்கு பரிச்சயமானவர்களாக இருந்தார்கள்.

சிறுவயதில் தெருச்சண்டைகளை வேடிக்கைப் பார்ப்பதிலும் தீராக்காதல் இருந்தது. ‘அவனை என்ன செய்யறேன் பாரு‘ என்று பலமுறை சொல்லி, மேற்கொண்டு எதுவுமே செய்யாமல் இருப்பவர்களையும், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இழுக்கும் போது ‘என்னை விடுடா விடுடா‘ என்று சொல்லி கத்திக் கொண்டிருப்பவர்களையும் பார்க்க உற்சாகமாயிருக்கும். திருநங்கைகளை போல பயமூட்டிய மற்றொரு சொல் ‘மாங்காத் தல‘ “சாப்பிடலைன்னா... மாங்காய்த்தலை கிட்டே பிடிச்சு கொடுத்திடுவேன்‘னு சொன்ன பிறகு பயந்து மாயமாய் உணவு உண்ட காலங்கள் உண்டு. மாங்காய்த்தலை மனிதர்களை பார்த்திருக்கிறேன், விரை போல சுருங்கிய தலையுடன், நீண்ட கழுத்தும், ஒல்லியான.. உயர்ந்த கருத்த உருவத்துடன், கோமணம் மட்டுமே ஆடையாக சற்றே கூன் வளைந்து நடந்து செல்லும் உருவம் அது. அவர்களை கல்லால் அடித்து விரட்டும் துணிச்சலான சிறுவர்களும் உண்டு. அவர்களெல்லாம் ஓணானை நூலில் கட்டி பிடிப்பது, கழுதை வாலில் பட்டாசு கட்டுவது போன்ற வீரச்செயல்களுக்காக அவரவர் வீடுகளில் விழுப்புண் பெற்றவர்கள். இப்போதெல்லாம் மாங்காய்த்தலை என்று யாருமே இல்லை. என் போன்றவர்களின் ஞாபகங்களில் இருந்து மீட்டியெடுத்தால் மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். இன்று இதை எழுதும்போது நினைவுக்கு வருகிறதே தவிர இதுநாள் வரை நானும் மாங்காய்த்தலை என்பது யார்... ஏன் அவர்கள் இப்படியிருந்தார்கள் என்று யோசித்ததில்லை.

பயமாகவும், புதிராகவும் பின்பு ஆர்வமாகவுமே இருந்த திருநங்கைகளைப் பற்றிய தெளிவு ஓரளவு வந்தது 2006ம் ஆண்டில்தான். 2006-ல் நானும் எனது நண்பர் மனோவும் சென்னை தியாகராய நகரில் இரவு 10 மணிக்கு ‘விருதுநகர் ஓட்டலில்‘ சாப்பிட்டு வெளியே வந்தோம். மிதமான போதையில் இருந்த நாங்கள் பீடா வாங்குவதற்காக அருகே இருந்த கடையில் நின்றோம். அப்போது எங்களைத்தாண்டி சிறிது தொலைவில் சென்று நின்ற காரில் தெருவோரம் நின்றிருந்த அழகான பெண் ஒருத்தி ஏறினாள். காரில் ஏறிய பெண்ணின் நடை, உடை, பாவனை வித்தியாசமாக இருந்ததால் அது பெண்ணாக இருக்க முடியாது, திருநங்கையாகத்தான் இருக்கும் என்றேன் நான். பிறகு நாங்கள் கிளம்பி விட்டோம். ஒரு மாதம் கழித்து அதே பகுதியில் நானும் நண்பர் மனோவும் வந்திருந்த போது அங்கு நின்றிருந்த ஒரு திருநங்கையைப் பார்த்தோம். அருகில் சென்று பேசினோம். அவரை நேரில் பார்த்தால் திருநங்கை என்றே கருத இயலாது. அவர் தான் பாலியல் தொழில் புரிவதாகக் கூறினார். எங்களோடு வந்து காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் பணம் தருகிறோம் என்று கூறினோம். அவரும் சம்மதித்தார். பிறகு நாங்கள் மூவரும் மது (பியர்) அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பல கேள்விகளுக்கு விடையாக தெளிவான பேச்சு ‘ஹேமா‘ என்ற அவரிடமிருந்து கிடைத்தது. தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டது பற்றியும், ஆண் உருவத்தில் நடமாடும் ‘கோத்திகள்‘ பற்றியும் விளக்கினார். மும்பை, புனே உள்பட பல பகுதிகளில் வசித்து வந்த அந்த திருநங்கை பி.ஏ., வரை படித்திருப்பதாகக் கூறினார். தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசினார். ‘தாய்‘ என்ற அமைப்பு அவர்களைப் போன்றவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறினார். இதுபோல் பாலியல் தொழில் செய்வது ஏன் என்ற கேள்விக்கு அவர் சரியான பதிலைச் சொல்லவில்லை. பெரிய மனிதர்கள், காரில் வருபவர்கள் என அவரது பாலியல் தொழில் ஹை-டெக் முறையில் இருந்தது. அவர்களின் சில நிமிட இச்சைகளைப் பூர்த்தி செய்வதன் வாயிலாக ஓரிரு மணி நேரங்களில் ஆயிரம் ரூபாய் வரை தினசரி கிடைத்து விடுவதாகவும், மாதம் ஐந்தாயிரம் ரூபாய் விடுதிக்கு செலுத்தி விடுவதாகவும் கூறினார். கடலூரைச் சேர்ந்த அவர் தனது வீட்டிற்கும் பணம் அனுப்புவதாகக் கூறினார். வேலை கிடைக்காத நிலை உள்ளதால்தான் இதெல்லாம் என்று ஜுவனற்றக் குரலில் தெரிவித்தார். பிறகு அவரிடம் கூவாகம் பற்றி கேட்டதற்கு எங்களுக்கு சித்திரை மாதத்தில் நடக்கவிருக்கும் ‘தாலியறுப்பு‘ விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அவரது அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு விடைபெற்றோம். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ளவில்லை.

2007 சித்திரை மாதம் பௌர்ணமியன்று கூவாகம் சென்று என்னதான் நடக்கிறதென்று பார்த்து விடுவதென முடிவு செய்து மனோவும் நானும் புறப்பட்டோம். போகும்போதே கடுமையான மனத்தயக்கங்கள்... போகலாமா... கூடாதா... இதற்கு போய்த்தான் ஆக வேண்டுமா என்றெல்லாம் எங்களுக்குள் கேள்விகள். விழுப்புரம் நகரம் கோலாகலமாக இருந்தது. திருநங்கைகளின் நடமாட்டம் பரவலாக இருந்தது. விழுப்புரத்தைத் தாண்டியதும் கூவாகம் செல்லும் வழி கேட்டு வலது புறமாக திரும்பி பயணித்தோம். எதிரில் வளையல், பொட்டு விற்பவர்கள் தள்ளுவண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். கூவாகத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று அவர்களிடம் வழி கேட்ட போது, ஒரு வாரமாக திருவிழா நடந்து முதல் நாள் இரவோடு முடிந்து விட்டது என்றார்கள். எங்களுக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டது. வந்ததற்கு கோவில் அருகிலாவது சென்று பார்த்து விட்டு வரலாமென, ஊருக்குள் திரும்பும் மண் சாலையில் பயணித்தோம். தண்ணீர் பாக்கெட் உறை, பான்பராக், சாப்பிட்ட இலைகள், கற்களை முக்கோணமாக்கி அதன் மேல் பொங்கல் வைத்ததற்கான அடையாளமாக கரி என குப்பையாகக் காட்சியளித்தது. மிகவும் சிறிய ஊர். கோவிலும் சிறியதுதான். கோவில் அடைக்கப்பட்டிருந்தது. பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம். விழுப்புரத்தை வந்தடைந்ததும், ஏற்கனவே எங்களுக்குப் பரிச்சயமான திருநங்கை ஹேமாவையாவது பார்க்க முடியுமா என யோசித்து அலைபேசியில் தொடர்பு கொண்டோம். தொடர்பு கொள்ள இயலவில்லை. பிறகு, அவர் கூறியிருந்த விடுதியின் பெயரை விசாரித்து செல்ல முடிவெடுத்து ‘ஆண்டவர் லாட்ஜ்‘ எங்குள்ளது எனக்கேட்டு, பாண்டிச்சேரி செல்லும் சாலையை அடைந்து ஆண்டவர் லாட்ஜிற்கு சென்று சேர்ந்தோம்.

‘ஆண்டவர் லாட்ஜ்‘ வழியெங்கும் திருநங்கைகள் கூட்டமாக நிரம்பியிருந்தது. அந்தச் சூழலில் நாங்கள்தான் வினோதப் ஜீவன்களாக ஆகியிருந்தோம். விடுதியின் வாசலை நாங்கள் அடைந்ததும் எங்களை நான்கைந்து பேர் சூழ்ந்து கொண்டு யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டனர். நாங்கள் சென்னையிலிருந்து வந்திருக்கும் திருநங்கையின் தோழர்கள், அவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் வேறேதும் கேட்காமல் இரண்டாவது மாடியின் ஒரு அறை எண்ணைச் சொல்லி போகச் சொன்னார்கள். அந்த விடுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட திருநங்கைகளை காண நேரிட்டது.

படிகளில் ஏறும் போதே ஒவ்வொரு அறையும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. மனதில் பயம் கலந்த உணர்வுடன், சென்றோம். குறிப்பிட்ட அறையில் நாங்கள் தேடி வந்த திருநங்கை இல்லை, வெளியே சென்றிருந்தார். வேறு நான்கு திருநங்கைகள் இருந்தனர். திருநங்கை ஹேமாவை தேடி வந்ததையும், கோவில் வரை சென்று திரும்பி வந்ததையும் கூறியதும் நட்பாக பேசினார்கள்.

அங்கு இருந்தவர்களில் ஒரு திருநங்கை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சரளமாகப் பேசினார். மாலினி என்ற பெயர் கூறிய அவர் சேலத்தை சொந்த ஊராகக் கொண்டவர். ஹைதராபாத்தில் கணிணி சார்ந்த பணி புரிவதாகக் கூறிய அவர் கூவாகம் திருவிழா நடைபெறும் பத்து நாட்கள் மட்டும் பெண் உடையில் இருப்பதாகச் சொன்னார். அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு தான் ஒரு திருநங்கை என்பது தெரியாது என்றார்.

சமூகத்தின் மீதான அவர்களது பயம், ‘நிர்வாணம்‘ (அறுவை சிகிச்சை) செய்து கொள்வதில் ஆர்வமிருந்தாலும், இருத்தல் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதால் பல நேரங்களில் ‘கோத்தி‘யாகவும், கூவாகம் வந்தால் மட்டும் பெண்ணாகவும் இரட்டை வேட வாழ்க்கை வாழ்வது என பல விஷயங்களைப் பற்றி பேசினார் மாலினி. அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளுக்கு வடிகாலாகவே வருடத்திற்கொருமுறை கூவாகம் வந்து செல்வதாக கூறிய அவர், இந்த சந்தோஷத்திற்கு இணையான சுகம் வேறெதிலும் இல்லை என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு அம்மா (அவரும் திருநங்கைதான்) இருக்கிறார்கள். ‘எல்லோரையும் தாய்தான் பிரசவிக்கிறாள், நாங்கள் ‘ரீத்து‘ செய்து எங்களுக்கான தாயையே பிரசவித்துக் கொள்கிறோம்‘ என்றார்.


நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடுதியை விட்டு கீழிறங்கி இரவு 7.30 மணிக்கு வந்தோம். அருகிலிருந்த பாருக்கு செல்லலாம் என்று மாலினி கூறியதும், அவருடன் அவரது குருவும் கூட வந்தார். சுமார் 60 வயதிருக்கும் அவருக்கு... ‘பியர்‘ அருந்தியதும், ‘வாழ்க்கையில் பல சுகதுக்கங்களை அனுபவித்திருக்கிறேன். எங்களைப் போல வாழ்வு யாருக்கும் வரக்கூடாது‘ என்றெல்லாம் சுய இரக்கத்துடன் பேசினார்.

தெருவெங்கும் விழாக்கோலமாக இருந்தது. பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். மாலினியிடம் ‘இவ்வாறு உடல் தொடர்புகள் வைத்துக் கொள்வதால் உடல்நலக் கேடுகள்‘ என்றதற்கு... ‘தனியார் தொண்டு நிறுவனங்களும், அரசும் வழங்கும் ஆணுறை மற்றும் ‘ஜெல்‘ போன்றவற்றை பயன்படுத்துவதில் சமீபகாலமாக அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, வேறு வழியில்லாமல்தான் இதைச் செய்கிறார்கள்‘ என்றார். பாலியல் தொழிலே புரியாத பலரும் அங்கிருந்தார்கள்.
பெரும்பான்மை திருநங்கைகள் பெண்கள் என்றே நம்பிவிடக் கூடிய அளவிற்கு அழகுடையவர்களாக இருந்தார்கள். சில சிறுவயதுப் பையன்களையும் அங்கே காண முடிந்தது. இன்னதென்று விவரிக்க முடியாத மன உணர்வுடன், அவர்களிடமிருந்து விடைபெற்றுத் திரும்பினோம்.


திருநங்கைகளுக்காக நாம் இரக்கப்பட்டும், இயல்பூட்டத்துடன் நடந்து கொண்டாலும் இதுவரை அவர்களுக்காக, சிறு பண உதவிகள், அவர்களைப் பற்றி எழுதி நாம் பிரபலமாதல் என்பது தவிர்த்து வேறென்ன நாம் என்ன செய்திருக்கிறோம் ?

‘போடா ஒம்போது‘ என்ற சிறுவனின் வார்த்தையை கேட்ட பிறகு இந்தக் கேள்விதான் என்னைத் துரத்தியது. திருநங்கைகள் பற்றிய தெளிவானதொரு பார்வையாவது ஏற்படுத்தியிருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. நாம் படிக்கிறோம், எழுதுகிறோம், பேசுகிறோம், பரிதாபப் படுகிறோம்... இதையேதான் செய்து கொண்டிருக்கிறோம்.

திருநங்கைகள் பற்றிய திருநங்கையே எழுதிய முதல் புத்தகம் ‘உணர்வும் உருவமும்‘. திருநங்கை ரேவதி தொகுத்து எழுதியது. (அடையாளம் வெளியீடு) (2006). அதன் பிறகு வெளியானது ‘நான் (சரவணன்) வித்யா‘ திருநங்கை ‘லிவிங் ஸ்மைல் வித்யா‘ எழுதியது. (கிழக்கு பதிப்பகம்) (2007). அடுத்ததாக, ‘எஸ்.பாலபாரதி‘ எழுதிய ‘அவன் – அது = அவர்கள்‘ (தோழமை வெளியீடு) (2008)
கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று புத்தகங்கள் திருநங்கைகள் பற்றி வெளிவந்துள்ளது. (நானறிந்த வகையில்)

தாய்லாந்து சென்றிருந்த போது, அங்கு பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் திருநங்கைகளை பணிக்கு வைத்திருந்ததைக் கண்டேன். (அவர்களை அங்கு ‘Ladyboy’ என அழைக்கின்றனர்) இங்கு ஏன் அத்தகையதொரு சூழல் உருவாகவில்லை. நாம் என்னதான் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் மக்களிடையே சரியான புரிதலற்ற சூழலில் நமது செய்கைகள் கேலிக்குறியதாக ஆகிவிடக்கூடாது. திருநங்கைகளும் நம்மில் ஒருவர்தான் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மீதான நமது வக்கிரப் பார்வைகளையும், எள்ளலையும் கைவிட்டு அவர்களுடன் அணுக்கமான சூழலை உருவாக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் திருநங்கைகளுக்கு தகுந்த பணியிடங்களை அளிக்க முன்வர வேண்டும். இதற்கான ஆரம்பத்தை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரசு செயல்படுத்தி திருநங்கைகள் வாழ்வை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இப்படிப் பல ‘வேண்டும்‘ இருக்கிறது. அரசு சார்ந்த அங்கீகாரங்கள், சலுகைகள் வழங்கப்படுவதன் வாயிலாக பொதுமக்களிடம் திருநங்கைகளைப் பற்றிய சரியான புரிந்துணர்வு ஏற்படும். ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘நடராஜபுரம்‘ என்ற இடத்தில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ‘கண்ணாடி கலைக்குழு‘ என்ற பெயரில் அங்கிருக்கும் திருநங்கைகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும், திருநங்கைகள் என்பதற்காக அவர்களுக்கான கல்வி மறுக்கப்படக்கூடாதெனவும், அத்தகைய நிலை இருப்பது குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் குறிப்பிட்ட அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

ஆஷா பாரதி, பிரியா பாபு உள்ளிட்ட திருநங்கைகள் கூட்டாக இணைந்து தமிழ்நாடு அரவாணிகள் சங்கத்தின் சார்பில் தொடுத்த பொதுநல வழக்கின் பலனாக இன்று ‘மூன்றாவது பாலினம்‘ என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இதன் பிரதிபலனாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு, வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நிகழ்வில் இது முக்கிய நகர்வு.

ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தின் சோஹாபூர் தொகுதியில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட்டு ‘ஷப்னம் மௌஸி‘ என்ற திருநங்கை 2000-த்தில் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் மத்தியப் பிரதேசம் ‘கட்னி‘ நகரின் மேயராக ‘கம்லா ஜான்‘ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2002-ல் ‘கருவுறும் தகுதியற்றவர்‘ என்பதால், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதியில் ‘ஷப்னம் மௌஸி‘யை உயர்நீதி மன்றம் தகுதியிழப்பு செய்துவிட்டது. 2005-ம் ஆண்டில், திருநங்கைகளை என ‘E’ (Enuch) பதிந்து கடவுச்சீட்டு வழங்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.

எல்லாம் சரி... நாம் என்ன செய்யப்போகிறோம்.
1.திருநங்கைகள் என்பவர்களும் நம்மில் ஒருவர்தான் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தல்.


2.இயன்றவரை திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு வழங்கவும், பணியிலமர்த்தவும் முன்வருதல்.


3.திருநங்கைகளின் கலை, இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.


4.குழந்தைகளிடம் திருநங்கைகளை சராசரி மனிதர்களாக பாவிக்க பழக்குதல்.


இதுபோன்ற செயல்கள் மட்டுமே திருநங்கைகளைப் புரிந்துணர்ந்த நமது செய்கைகளை அர்த்தப்படுத்துவதாக அமையும்.

- பொன். வாசுதேவன் 

Monday, February 7, 2011

படைப்பு அடிமைகளும், அகச்சுதந்திரமும்




கலையின் இலட்சியம், வாழ்வின் இலட்சியம் ஒவ்வொரு மனிதனிலும், உலகிலும் உள்ள சுதந்திரம், பொறுப்புணர்வு ஆகியவற்றின் அளவை அதிகமாக்குதல் மட்டும்தான்.

- ஆல்பஃர் காம்யூ

வழக்கம்போலவே கடந்த ஆண்டுகளில் கண்ட நிறைகளையும், குறைகளையும் மனதில் ஏற்படுத்தியபடி புது வருடம் வந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதாரச் சுரண்டல் பற்றியெல்லாம் கவலைப்படுவதால் ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை என்பது சாசுவதமான உண்மை. அதே சமயம் இலக்கிய உலகில் படைப்புச் சூழல் உத்வேகத்துடன் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.

அகிலம் சார்ந்த எழுத்துக்களின் புதிய அறிமுகங்களும், புதிய தத்துவ நீட்சிகளும் இல்லாத வறட்சியான நிலை தெரியாத வண்ணம் பொதித்து வைத்திருப்பதும், அதையொட்டிய கருத்தியல்கள் எழுப்பப் படாமல் இருப்பதும் ஒரு குறைதான். அதிகாரங்களை எதிர்த்து கேள்வியெழுப்பு வதிலும், அதிகாரத்திற்கு ஆதரவாக குடை பிடிப்பதிலுமான நோக்க நுண்ணரசியல் ஒன்றேதான் என்று படுகிறது. இலக்கிய வாதிகள் சமூக அறம் சார்ந்து கேள்விக்குள்ளாக்குவது, ஒழுக்க நெறிகளைப் பேசுவது இவ்விரண்டுக்குமான மூலநோக்கம் எது வென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு சினிமா, பொது மக்கள், அரசியல், ஆன்மீகம் என பல்வேறு மட்டங்களில் சமாதான நிரப்பிகள் தேவைப் படுவது போல இலக்கியத்திலும் தேவைப் படுகிறது. இதன்பொருட்டே, அதிகார எதிர்ப்புக்குரல்களும், ஆதரவுக் குரல்களும் இலக்கிய வெளியிலிருந்து எழுந்து கொண்டே யிருக்கிறது. இதற்கு பலிகடாக்கள் ஆவது படைப்புலக அடிமைகள்தான்.

பெண்ணியம், தலித்தியம் என்பதிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடவில்லை. பெண்ணியம், தலித்தியம் இரண்டையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான சிரமப் பெரும் முயற்சிகளுக்கு இணையாக, அதை நசுக்குவதற்கான உளிகளும் நேரிடை யாக, மறைமுகமாக நடந்து கொண்டேதான் இருக்கின்றது. தர்க்க ரீதியாகவோ, மாற்றுக் கருத்தியல்கள் வழியாகவோ இது சாத்திய மாகும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அறிவுத்தளத்தில் இயங்கு பவர்களின் மனமாற்றம் ஒன்றே இவ் விஷயத்தில் புத்தாக்கம் ஏற்படுத்தும். ஆனால் இலக்கியச் சூழலில் சங்கிலியால் பிணைக்கப் பட்ட அரசியல் அடிமைகள் இருக்கும்வரை இது சாத்தியமில்லை.

இன ஓடுக்குமுறை பகிரங்கமாக தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு, கொடூர வாழ்க்கைச் சூழல் என்பது சாதாரணமான ஒன்றுதான் என்பதான கருத்தாக்கம் ஏற்பட்டு விட்டது. இன ஒடுக்குமுறை அதிர்ச்சிகளை ஒரு உணர்வுகள் மரத்துப்போய் ஒரு செய்தியாக மட்டுமே அணுகும் பழக்கம் சமீபாக ஏற்பட்டுள்ளது. எதையொட்டியும் கேள்வியோ மறுப்போ எழுப்பாது அடி பணிந்து செல்கிற இந்த மனோநிலை வருங்கால வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடும் ஒரு சவாலாகவே இருக்கும்.

தற்போதைய சூழலில் தன்னைத்தானே பேணிக்கொள்வதிலும், தனக்கு உகந்ததை மட்டுமே ஈணுவதிலும் மட்டுமே அக்கறை கொண்ட சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது சிக்கலான ஒன்று. அகவன்முறைகள் எழுத்திலும், பேச்சிலும் தொடர்ந்து நீடித்து வருவதும் மனக்கட்டமைப்புகள் மீதான ஒரு அவநம்பிக்கை ஏற்படுத்துவதாகே உள்ளது.

மன அழுத்தங்களற்ற சுதந்திர வெளியில் செயல்பாடுகள் அமையும் சூழல் ஏற்படும் போது மட்டுமே உன்னதமும், அற்புதமும் நிகழக்கூடும். கட்டுப்பாடுகளற்று எதையும் அறிவுசார்ந்த சிந்தனையுடன் தீர்மானிக்கும் சுதந்திரம் ஒன்று மட்டுமே எல்லாவற்றுக்கும் தீர்வாகும்.

*

- பொன்.வாசுதேவன்

Monday, October 4, 2010

புத்தக விமர்சனம் : ஆண்டியிடம் சிக்கிய தோண்டி

தமிழ் இலக்கியத்தில் புத்தக விமர்சனம்திறனாய்வு என்ற துறை பெரிதும் கவனத்தில் கொள்ளப்படாதது ஒரு குறைதான்அப்படியே இருந்தாலும் அது ஒரு கட்டாயத்திற்காகவோ,தனிப்பட்ட விருப்பின் பொருட்டு செய்யப்பட்டதாகவவோ இருந்து வந்துள்ளதுஉலக அளவில் இலக்கியத்தின் ஒரு மிக முக்கியமான துறையான விமர்சன இயல் தமிழில் கவனம் பெறாமல்அதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்படாமல் மேலோட்டமான கண்ணோட்டத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை.









சமீபத்தில் மனுஷ்ய புத்திரனோடுபேசிக்கொண்டிருக்கும்போது வண்ணதாசனின் கடிதங்கள் தொகுப்பைப் பற்றிய பேச்சு வந்ததுஅப்போது மனுஷ்ய புத்திரன் "வண்ணதாசனின் இதர படைப்புகள் அளவிற்கு அவரது கடிதங்கள் ஒப்பீடு செய்ய இயலாதவைஅவரது படைப்புகளில் வெளிப்படுகின்ற மனித உறவு சார்ந்த ஆழ்ந்த அகச்சிக்கல்கள் அவரது கடிதங்களில் வெளிப்படுவது கிடையாதுஅவை பளிங்கு போன்றவைஅப்பழுக்கற்ற நேரடியான மனோநிலையில் எழுதப்பட்டவை வண்ணதாசனின் கடிதங்கள்என்று கூறினார்மிகவும் யோசிக்க வைத்த விஷயம் இதுகாரணம்வண்ணதாசனின் படைப்புகள் அளவிற்கு அவரது கடிதங்கள் மீதான ஈர்ப்பு எனக்கும் கிடையாதுஒரு விமர்சனம் என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இதை என் அனுபவபூர்வ உண்மையாகக் கொள்கிறேன்எந்தத் தேவைகளும்நிர்ப்பந்தங்களும் இல்லாத இவ்வாறான கூற்றுகளே படைப்பின் உண்மையான விமர்சனமாக இருக்க முடியும்.

அழகியலுடன் கூடிய ரசனை சார்ந்த விமர்சனங்கள் படைப்பை பிறரும் வாசிக்க உந்துதலைத் தருகின்றனபடைப்பின் மீதான கருத்துக்களை விருப்பு வெறுப்பற்று வெளியிடும் மனோபாவம் இன்று யாரிடம் உள்ளதுபடைப்பின் தன்மையைத் திறனாய்வு செய்வதை விடுத்து படைப்பினை ஆக்கியவரையும்அவரது சார்புக் கோட்பாடு பற்றியும் அறிந்துகொண்டு ஒரு முன்முடிவோடு வைக்கப்படுபவையே இன்று விமர்சனங்களாகவும்இதைச் செம்மையாகச் செய்கிறவர்கள் விமர்சகர்களாகவும் அறியப் படுகிறார்கள்.

விமர்சனத்தில் கவனம் செலுத்திய வ.வே.சுஐயர் அழகியல் சார்ந்த ரசனையின் அடிப்படையில் தனது விமர்சனங்களை முன்வைத்தார்அவரை அடுத்து க.நா.சுப்ரமண்யம் படைப்புகள் மீதான தனது விமர்சனங்களை படைப்பாளிகளைப் பட்டியலிட்டும்அவரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அதை அடித்தும்திருத்தியும் விமர்சகராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.நா.சு.வின் விமர்சனப்போக்கு படைப்பாளியின் மீதான கருத்துக்களைப் படைப்பின் விமர்சனத்தில் காழ்ப்புணர்ச்சியாகக் கொள்வதற்கான ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது எனலாம்அவரைத் தொடர்ந்து சி.சு.செல்லப்பாநா.வானமாமலைதருமு சிவராமு,தொ.மு.சி.ரகுநாதன்கைலாசபதி மற்றும் வெங்கட்சாமிநாதன் விமர்சகர்களாக அறியப்பட்டுள்ளனர்.

எழுத்து‘ இதழில் 1960களில் தொடர்ந்து வெளியான வெங்கட்சாமிநாதனின் கட்டுரைகள் விமர்சனம் சார்ந்த தீவிர நம்பிக்கைகளை அளித்ததுஆனாலும், கா.நா.சு.வைப் போலவே குறுகிய பார்வையும், காழ்ப்புணர்ச்சியும், பண்டிதத்தன்மையுடனான அணுகுமுறையும் கொண்ட வெங்கட்சாமிநாதனின் விமர்சனங்கள் எதிர்பார்ப்புகளைப் பொய்ப்பித்தது..நா.சு.வின் வழியிலேயே வெங்கட்சாமிநாதன் செய்த ‘பாலையும் வாழையும்‘ மற்றும் ‘எதிர்ப்புக்குரல்‘ போன்றவைக்குப் பிறகு வெங்கட்சாமிநாதனுக்கு ஒரு தனி அணி உருவாகியது ஒன்றுதான் இதனால் கிடைத்த பலன்.  அதே காலகட்டத்தில் படைப்புகளைப் புதிய கோணத்தில் திறனாய்வு செய்யத் துவங்கிய தருமு சிவராமுவும் காலப்போக்கில்.நா.சு., வெங்கட்சாமிநாதனைப் போலவே மாறிப்போனது பரிதாபமானது.

தொடர்ச்சியாக மார்க்சியப் பார்வையில் படைப்புகளை அணுகிய தமிழவன்,ஞானிதனக்கென ஒரு தனித்த பார்வையில்தனது அனுபவத்துக்கு உட்பட்ட ரசனையோடு படைப்புகளை விமர்சனம் செய்த சுந்தரராமசாமிபாலா போன்றோரின் இலக்கிய மதிப்பீடுகள் கருதத் தக்கதாகவும்விமர்சனத்திற்கு உட்பட்டதாகவும் இருந்து வந்துள்ளது.

இதனால் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால்ஆரம்ப காலம் முதற்கொண்டே இலக்கிய விமர்சனம் என்பது சிக்கலான ஒன்றாகத்தான் இருந்து வந்துள்ளதுஆனால் தற்போதைய நவீன இலக்கியச் சூழலில் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல புத்தகம் திறனாய்வு அல்லது விமர்சனம் செய்ய அவர் ஆழ்ந்த வாசிப்பனுபவம் உள்ளவராகவோ,தேர்ந்த ரசனை கொண்டவராகவோ இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.ஒன்றுவிமர்சகர் படைப்பாளிக்கு நண்பராக இருக்க வேண்டும் அல்லது விமர்சிக்கப் போகிறவரின் அணியில் படைப்பாளி இணைந்திருக்க வேண்டும்.ஒரு படைப்பை விமர்சனம் செய்கிற விமர்சகர் கைக்கொள்கிற அளவுகோல்தான் என்னஅப்படியொன்று இருக்கின்றதா என்றால் கிடையாது என்பதுதான் பதில்.






 நம் விமர்சகர்கள் பலருக்கும் வேண்டியவர்களைப் பாராட்டுவதும்,வேண்டாதவர்களைப் புறந்தள்ளி எழுதுவதும்தான் விமர்சனம் என்ற எண்ணம் இருக்கிறது.  ஒரு படைப்பினைக் குறித்த அறிவார்ந்த விமர்சனத்தை விடுத்து படைப்பின் மீது சுயநலம் சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்திமாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதே தலையாய பணியாகக் கொண்டு செயல்படுகின்றனர்அசல் ஆக்கங்களின் நிலையே இப்படியென்றால் மொழியாக்கப் படைப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

விமர்சனம் என்பது படைப்பின் மீதான முழுமையான மதிப்பீடாகக் கொண்டு வளர்க்கப்பட வேண்டும்.  படைப்பு வாசிப்பவனுக்கு ஏற்படுத்தும் அனுபவத்தை வெளிக்கொணர்வதாக அதன் சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டு விமர்சனப் போக்கு உருவாக விமர்சகர்களின் அனுபவமும்தகுதியும் முக்கியமானது.அவ்வகையில் அளிக்கப்படுகின்ற விமர்சனமே உண்மையானதாக இருக்கும்.

படைப்பின் ஆக்கத்தில் உள்ள நிறை குறைகளைச் சுட்டி அதைப் பரவலாகச் சென்றடையச் செய்வதுதானே முறையான ஒரு விமர்சனத்தின் பணியாக இருக்க வேண்டும்எந்த அளவிற்கு இலக்கியம் நவீன உருக்கொண்டதோ அதே அளவிற்கு விமர்சன வளர்ச்சியில் தேங்கித்தான் இருக்கின்றது.விமர்சனத்தின் தயையில்தான் படைப்பும்அதை ஆக்கியவனும் கருதத்தக்க அங்கீகாரத்துக்கான காத்திருத்தலை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

- பொன்.வாசுதேவன்

உயிரோசை இணைய இதழில் (4.10.2010) வெளியானது.

Comments system

Disqus Shortname