Showing posts with label யெஸ்.பாலபாரதி. Show all posts
Showing posts with label யெஸ்.பாலபாரதி. Show all posts

Sunday, November 4, 2018

கடலுக்குள் ஒரு சாகசப் பயணம்


சிறார் நாவல் உலகில் ஓரு புதிய வரவுஆமை காட்டிய அற்புத உலகம்’. ஜூஜோ என்ற ஆமையுடன் சிறுவர்கள் மேற்கொள்ளும் ஒரு சாகசப்பயணத்தை விவரிப்பதுதான் இந்த நாவல். சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் எப்போதும் வசீகரிப்பது கடல். கடலும் அதன் அற்புதங்களும் கேட்கச் சலிக்காதவை. அத்தகைய விரிவானதொரு பின்புலத்தில் கடலுக்குள்ளே சென்று நாமே பார்க்கிற நேரடி அனுபவத்தைத் தருகிறது இந்நாவல்


யெஸ்.பாலபாரதி

கடல்வாழ் உயிரினங்கள், அவற்றின் வாழ்க்கைமுறை, கடலை மாசுபடுத்தி அதன் தூய்மையைக் கெடுக்கும் பொருட்கள், சுற்றுச்சூழல் எனப் பல தகவல்கள் இந்தக் கதையின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. கதையைச் சொல்லிக்கொண்டு போவதோடு ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிறப்புத் தகவல்களும் பெட்டிச் செய்தியாக இடம்பெற்றிருக்கிறது. எந்த இடத்திலும் தொய்வில்லாமல் ஜாலியான நடையில் சிறார் மனம் கவரும்படி எழுதியிருக்கிறார் நூலாசிரியர் யெஸ்.பாலபாரதி

கி.சொக்கலிங்கத்தின் பொருத்தமான ஓவியங்கள் நாவலுக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது.

•• தினமலர் நாளிதழில் வெளியான புத்தக விமர்சனம் ••

ஆமை காட்டிய அற்புத உலகம்
(சிறார் நாவல்)
- யெஸ்.பாலபாரதி
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை ரூ 60

Sunday, January 15, 2012

வாசிப்பவரை விசுவாசிக்கும் எழுத்து : யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘



யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘ என்ற இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள் உள்ளனஇக்கதைகள் பத்திரிகைகளிலும்இணைய இதழ்களிலும் வெளியானவை.


திருநங்கைகள் தொடர்பான ஆர்வம் காரணமாக நான் பல ஆண்டுகளாக கூவாகம் சென்று அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து வந்திருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக வாசிப்பில் எனக்குக் கிடைத்ததுதான் எஸ்.பாலபாரதி எழுதியஅவன்அது = அவள்என்ற புத்தகம். மூன்றாம் பாலினமாக அங்கீகாரம் பெற்றிருக்கும் திருநங்கைகளின் வாழ்வின் வலிகளைப் பேசிய  இப்புத்தகத்தின் வழியாகத்தான் எனக்கு அவர் அறிமுகம். அதன் பிறகு இணையத்தில் எழுத வந்த பிறகு நேரிலும் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்ற கேள்வி காலம் காலமாக இருந்து கொண்டே இருக்கிறது. இதுதான் இலக்கியம் என்று ஒரு பிரிவினரும், இதெல்லாம் இலக்கியமில்லை என்று மற்றொரு பிரிவினரும் தத்தம் தரப்பை உரக்கச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அவரவர் திராணிக்கு ஏற்றபடி, அனுபவ மதிப்பீட்டு அளவில் படித்ததும் பிடித்தது எல்லாம் இலக்கியம்தான்.

பொதுவாக சிறுகதைத் தொகுப்புகளை கடைசிக் கதையிலிருந்து வாசிப்பது என்னுடைய வழக்கம். பாலபாரதியின் கதைகளையும் அப்படித்தான் வாசித்தேன். இத்தொகுப்பின் மீதான என் அகமதிப்பீடை இது உயர்த்திக் கொள்ளச் செய்தது. காரணம் முதல் கதையிலிருந்து வாசித்திருந்தால், இத்தொகுப்பைப் பற்றிய என்னுடைய பார்வை வேறு மாதிரியாக இருந்திருக்கக் கூடும். பாலபாரதியிடம் இந்த கருத்தைச் சொன்னதும், எழுதிய காலவரிசைப்படி இக்கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது என தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை நினைவுபடுத்தினார். ஒரு படைப்பாளியின் எழுத்தின் வீச்சை அறிவதற்கான ஒரு உத்தியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தொகுப்பின் பனிரெண்டு கதைகளும் எழுதியே ஆக வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல், வாழ்க்கையில் அடித்தட்டு மக்களின் வலியுணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டவை என்பது இக்கதைகளில் நான் உணர்ந்த பொதுத்தன்மை.

காற்றில் உந்தப்பட்ட காகிதம் அது செல்கிற திசையெல்லாம் சென்று அலைக்கழிக்கப்படுவது போல வாழ்க்கை முழுவதும் நிலையற்று உழல்கிற அடித்தட்டு மக்களின் வாழ்தலுக்கான அவஸ்தை, எதிர்கொள்கிற இழப்பு, ஏற்படுகிற வலி இதுதான் இந்தக்கதைகளின் அடிநாதம். பாலபாரதியின் சுய வாழ்வனுபவம் அவருக்கு இக்கதைகளின் வழியாகச் சொல்ல உதவுகிறது

ஒரு நுனியில் ராமேஸ்வரம் மற்றொரு நுனியில் பம்பாய் என கைகளில் சுற்றிக் கொண்டு இதனூடாக அவிழ்க்க முடியாத அச்சிக்கலின் முடிச்சுகள் வழியே தன் பார்வையை கதைகளாக ஆக்கியிருக்கிறார்.

பாலபாரதியின் கதைகளில் காணக்கிடைக்கிற விவரணைகள் மிக நுட்பமானவை. இவருக்கு சொல்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. ஒரு இடத்தை விவரிக்கும் போதே உடன் பயணிக்கிற உணர்வு நமக்கும் ஏற்பட்டு விடுகிறது. ‘நகரம்என்ற கதையில், பொங்கல் வீடு எனப்படும் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து நடக்கத் தொடங்குகிற கதை நாயகனை விவரித்துக் கொண்டே வரும்போது அப்பகுதியின் அவலமான சூழல், வேலை செய்கிறவர்களின் நிலை என எல்லாவற்றைப் பற்றியும் ஒரு சித்திரமும், அனுதாபமும் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது.

அதேபோலசாமியாட்டம்கதையில்டண்டக்கும் டண்டக்கும்.. டின்.. டின்..‘ என பறையொலி ஒரு இதமான இசையோட்டமாக ஆரம்பிக்கின்ற சாமியாடியின் ஊர்வலத்தை சொல்லிக்கொண்டே வந்து, நிறைவடையும் நேரத்தில் அதேடண்டக்கும் டண்டக்கும்.. டின்.. டின்..‘ என்ற வார்த்தைகளை உச்சத் தொனியில் நம்மை உணரச் செய்து விடுகிறார்.

மனித சமூகத்தில் எவ்வளவுதான் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் நம்மை மீறிய ஒன்றிடம் ஒப்புக் கொடுப்பது என்பது ஒரு விதமான தப்புவித்தல். இது மனித குண இயல்புகளில் ஒன்று. ‘கடவுள் என்பது ஒரு நம்பிக்கைஅவ்வளவுதான். ‘வேண்டுதல்என்ற கதையில் தொலைந்து போன மகன் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் முறையிடச் செல்கிற இடத்தில் அங்கு நடக்கிற ஒரு சம்பவம் நடைமுறை வாழ்வின் யதார்த்தத்தை உறைக்க வைக்கிறது.

அடிமைகளாக சிக்கி நகர வாழ்வில் செக்கு மாடுகளாக சுற்றிக் கொண்டிருக்கும் வளரிளம் பருவத்தினரைப் பற்றிய கதையானதுரைப்பாண்டிஎன்ற கதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை. மேலும் இத்தொகுப்பில் உள்ள விடிவெள்ளி, தண்ணீர் தேசம், கடந்து போதல், பொம்மை ஆகிய கதைகளும் என்னைக் கவர்ந்தவை.

சிறுகதையின் முக்கிய நோக்கம் ‘Creating a Single Effect’ என்கிறார் எட்கர் ஆலன் போ. எந்தப் படைப்பும் வாசித்த உடன் ஒரு உணர்வை திறம்பட ஏற்படுத்த வேண்டும். அவ்வகையில்சாமியாட்டம்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஒரு ஆரம்பம், கதைக்களம், முடிவு என அமைந்திருக்கின்றன. வரிசைக்கிரமமாக அமைந்திருக்கிற பாலபாரதியின் இந்த எழுத்துப்பாணி படித்து முடித்ததும் திருப்தியான ஒரு உணர்வைத் தருகின்றன. யெஸ்.பாலபாரதியின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்பின் வாயிலாக கதைசொல்லியாக அவர் ஆரோக்கியமான முன்னகர்தலை மேற்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.  தொடர்ந்து பல சிறப்பான ஆக்கங்களை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.






சாமியாட்டம்‘ (சிறுகதைகள்
யெஸ்.பாலபாரதி
வெளியீடு
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
விலை : ரூ.70/- (128 பக்கங்கள் )







சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடங்கள்
நிவேதிதா புத்தகப் பூங்கா அரங்கு எண். 326
பிரேமா பிரசுரம் - அரங்கு எண்.344
புக் ஷாப்பர்ஸ் - அரங்கு எண்.370
புதுப் புனல் - அரங்கு எண்.442
டிஸ்கவரி புக் பேலஸ் - அரங்கு எண்.334

Comments system

Disqus Shortname