Sunday, July 20, 2014

இற்றைத் திங்கள் - நிகழ்வு 2 - இணைய நேரலை கோப்பு

இற்றைத் திங்கள் 
நடப்பு விவகாரங்கள் குறித்த மாத நிகழ்வு 

நிகழ்வு - 2
இந்த மாத நிகழ்வில்...

பிரசன்ன விதானகேவின் திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்பாக
கெளதம சித்தார்த்தன்

பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன?
எச். பீர் முஹம்மது

பட்ஜெட்: அபத்த நாடகத்தின் உச்சகட்டம்
செ.ச.செந்தில்நாதன்


http://www.ustream.tv/recorded/50263272


Saturday, July 19, 2014

இற்றைத் திங்கள்
நடப்பு விவகாரங்கள் குறித்த மாத நிகழ்வு

நிகழ்வு - 2

19.07.2014, சனிக்கிழமை மாலை 5.30 

இடம் : 
அகநாழிகை புத்தக உலகம், 

390 அண்ணா சாலை, KTS வளாகம், (RG Stone மருத்துவமனை அருகில்), சைதாப்பேட்டை, சென்னை - 600 015

இந்த மாத நிகழ்வில்...

பிரசன்ன விதானகேவின் திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்பாக
கெளதம சித்தார்த்தன்

பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன?
எச். பீர் முஹம்மது

பட்ஜெட்: அபத்த நாடகத்தின் உச்சகட்டம்
செ.ச.செந்தில்நாதன்


http://www.ustream.tv/channel/%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B4-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4


http://ustre.am/AyV0

Wednesday, July 2, 2014

பெருவியப்பொன்றின் உன்னத நிகழ்வு


1999-ல் “சிற்பி இலக்கிய விருது” பெற்ற போது கவிஞர் தேவதேவன் அளித்த ஏற்புரை 
---------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு விருதின் தகுதியினை நாம் எவ்விதம் மதிப்பீடு செய்கிறோம்? அதன் அளவுகோல் என்ன?.... இதுபோன்ற சந்தர்ப்பங்களைக் குறித்து நான் சிந்தித்தையும் பேசியதையுமே இங்கு மீண்டும் நினைவு கூர்கிறேன்... அந்த விருதானது ஒரே சமயத்தில் அதை வழங்குவோர்க்கும், அதைப் பெறுவோர்க்கும், அவர்கள் வாழும் மொத்த சமுதாயத்திற்குமே பெருமை தரக் கூடியதாக இருக்க வேண்டும், யார் யாருக்கு நன்றி சொல்வது என்ற கேள்வியே அழிந்து போய் விடுகிற ஒரு கொண்டாட்டம் அது.


கவிஞர்கள் தாம் வாழும் காலத்தில் கண்டுகொள்ளப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். அது அறிவார்ந்த தளத்தில் அந்தச் சமூகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தமையை நமக்குக் காட்டுகிறது. ஒரு கவிஞன் தான் வாழுங்காலத்தில் கொடுந் தண்டனைக்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறான். அரசு அதிகாரத்தின் வன்முறையை அப்போது நாம் அடையாளம் கண்டிருக்கிறோம்.ஒரு கவிஞன் தன் வாழுங்காலத்தில் அடையாளம் காணப்பெறுவதும், கொண்டாடப்பெறுவதும், அந்தச் சமூகத்தின் ஒரு பகுதியெனும் ஆரோக்கியமாய் இருக்கிறது என்று நாம் ஆசுவாசிக்க முடிகிறதற்கான அடையாளம்தான்; முழு வெற்றி அல்ல. முழு வெற்ற அவன் வாழும் சமூகத்தின் வளர்ச்சியில்தான் இருக்கிறது.



கவிஞனை மொத்த சமூகமும் முழுமையாய்ப் புரிந்துகொண்டது என்பது மனித வரலாற்றில் இல்லாத ஒன்று.கவிஞனும் தான் கண்டவற்றை வெற்றிகரமாய்க் கூறி முடித்துவிட்டான் என்ற நிலைமையும் இதுவரை இல்லாத ஒன்று.இந்த்த் தோல்விக்குக் காரணம் அவனது ஊடகமான மொழி. அவன் தன் வாழ்க்கையையே ஒரு ஊடகமாகக் கொண்டால்தான் என்ன? தோல்வியையே தழுவுகிறான்.கருணையைத் தன் இதயத்தால் துய்த்து அறிந்தவனும் சொல்லால் சாதிக்க முடிந்தது என்ன, கருணை என்ற சொல் போதாமல் போய் அதற்கு மேலும் இரண்டு முன் ஒட்டுப் (Prefix) பண்புச் சொற்களை (Adjectives) அழுத்தி அவன் தன் மனவெழுச்சியை மட்டும்தான் பதிவு செய்ய முடிந்தது தவிர மற்ற எல்லாமும் எளிதில் சாதிக்கப்படக்கூடிய அற்பங்கள்தாம் என்ற முடிவுக்கு வந்தவைகள்தாம்.



கவிஞனின் இத்தகைய மனவெழுச்சியால் கோர்க்கப்படாத படைப்புகளைத் துச்சமென மதித்துத் தூர ஏறிந்துவிடுவது மிகச் சிறந்த ஒரு மதிப்பீட்டுச் செயல் என்று கூற முடியும். இலக்கியத் திறனாய்வு என்பது இதைக் கண்டடைவதற்கான ஒரு உளவு வேலையாகவும் சிக்கலான வேளைகளில் ஆகி விடுகின்றது. கவிஞனோ மிக எளியவனாகவும் மிகு உறுதி மிக்கவனாகவும் காட்சியளிக்கிறான்.ஏதோ ஒரு மையத்தினின்று பெறப்படும் அறமதீப்பீடுகளை வலியுறுத்தும் ஒரு அறவீனமுள்ள மூர்க்கனாக அடையாளம் காட்டப்படுகிறான். அவனோ "ஆம். அதை மையம் என்று கொள்வோமானால் பெருவியப்பு ஒன்றின் உன்னத நிகழ்வேதான்" என்னும் உணர்வுதான் அது என்று அவன் தனக்குத்தானே கூறிக் கொள்கிறான். அவனிடமிருந்து வரும் அறமதிப்பீடுகளின் கருப்பையே அது.



தண்டனைகளைப் போலவே பாராட்டுகளாலும் சிதைந்து விடாதவனாக இருக்கவே அவன் விதிக்கப்பட்டிருக்கிறான். காரணம் அவனது பொறுப்பு தானும் சமூகமும் வேறுவேறு அல்லாத ஒன்றேயான ஒர் பொருள் மீது ஊன்றப்பட்டிருக்கிறது என்பதுதான. இன்று நாம் மிக நெருக்கடியான ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் உலகின் மிகச் சிறந்த கவிதைகள் எல்லாமே மரணப்படுக்கையிலிருக்கும் ஒரு மனிதனின் அன்புக்கான கதறலே என்றும் அவன் அறுதியற்ற சொற்றொடர்களை உருவாக்கிய வண்ணமாய் இருக்கிறான். அவன் கவிதைகளில் சமூகத்தின் சுரணையின்மைக்கு எதிரான சூடும், அடுக்குமுறை, அதிகாரம் வன்முறை ஆகியவைகளுக்கு எதிரான அச்சமின்மையும், கொண்டாடங்களின் சந்தோஷத்தில் தோய்ந்துவிடாத விழிப்பும் காணக் கிடைக்கிறது. எல்லாமாகவும் இருக்கிற ஒரு தனிமை அவனுடையது. அந்தத் தனிமைத் துக்கத்தின் இன்னொரு பக்கமே 'சொல்லொணாத அமைதி' என்பதையும் அறிந்திருக்கிறான்.



இவைகளெல்லாமே ஒரிடத்தில் படித்துவிட்டு இன்னோரிடத்தில் வந்து ஓதுகிற தத்துவங்கள் அல்ல. அப்படியானால்? நாம் சுட்டிக்காட்ட விரும்புவதும், இயற்ற விரும்புவதும் ஒர் பிரக்ஞை நிலையைத்தான் என்பதே. அந்தப் பிரக்ஞை நிலையைத்தான் ஒவ்வொரு கவிதையும் ஆதர்சிக்க வேண்டும்.



நம் தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மையுடையது என்பதிலும் ஒரு வளமான பாரம்பரியத்தின் வாரிசுகள் நாம் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தப் பெருமைகளால் நாம் சாதித்தது ஒன்றுமில்லை. அவலமான ஒரு தற்பெருமைக்குச் சமமானதுதான், ஒருவன் தன் நாட்டின் பெருமையைச் சார்ந்திருப்பதும். கவிதை ஒரு மனிதனின் உள்ளார்ந்த சுதந்திரத்தையே அவாவுகிறது. ஒரு நாட்டின் நலமும், அதன் சுற்றுச்சுழுலும், பண்பாடும் அந்நாட்டு மக்களின் நெஞ்சிலே சுடர்கிற கவிதையைப் பொருத்துத்தான் அமையும் என்பதையே இந்த விழாவின் சந்தர்ப்பத்தில் பெரிதான ஒரு செய்தியாக சொல்ல விழைகிறேன்.... கவிஞன் என்றாலே பெருங்கனவுகளைக் காண்பவன் என்பது ஒரு பழைய மதிப்பீடு. மனித நல்வாழ்வுக்கான இஷ்ட லோகக் (Utopian) கனவுகளைக் காண்பவன் அவன் கனவு பங்கம் ஏற்பட்டு துஷ்டலோகக் (Dystopian) கனவுகளில் துடித்து தன் ஆழ்மன அலறலை சிறுசிறு துடிப்புகளாக எழுதிக் கொண்டிருந்தவனும் அவனே.



கலைகள் மீதும் கவிதை மீதும் ஆர்வம் முகிழ்த்திருந்த எனது தொடக்க காலத்தில் - 30 , 35 ஆண்டுகளுக்கு முன்பு - செய்தித் தாளின் மூலம் வடக்கே ஒரு கவிஞர் - அவர் பெயர் , ஆண்டு ஆகியவை நினைவில்லாததற்கு வருந்துகிறேன் - தீடீரென்று வாய் பேச இயலாது போய்விட்ட செய்தி என் மனதில் அழியாது பதிந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. பின்னாளின் வாசிப்பில் ஃபிரெஞ்சுக் கவிஞர் போதெலோருக்கும் அந்த விபத்து நடந்துள்ளது என்பதை அறிந்தேன்.



சமூகத்தின் ஆரோக்கியத்திற்கான ஒரு விசேஷ நரம்பு மண்டலத்தை அவாவுகிற வேகத்தில் இஷ்டலோகத்திற்கும் (Utopian) துஷ்ட லோகத்திற்குமாய் (Dystopian) அதிர்கிற ஒரு நரம்பு நெறித்து அறுபட்டுவிட்ட நிலைதான் கவிஞனின் செயவிழந்த அந்த நா என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.



அரசியல்வாதிகளால் சிதைக்கப்பட்டிருக்கும் இந்த உலகை உடல்நோய் மருத்தவர்களைக் கொண்டும், உளவியல் அறிஞர்களைக் கொண்டும், சீர்திருத்திவிடப் பார்க்கிறோம். கவிதை மட்டுமே நமக்கு நம்பிக்கை தரும் என்பதற்கு கவிஞனே ஒரு சாட்சிப் பொருள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.தன்னைக் கவிஞன் என உணர்ந்து கொண்டுவிட்ட ஒரு உள்ளம்தான் இந்த பிரபஞ்சத்தின் மிக உறுதியான ஒரு பொருள். மற்றும் மனித விடுதலை அரசியல்வாதிகளின் கையில் இல்லை என்பதையும் மனிதனை உய்விக்க எழுந்த எல்லாச் சமயங்களும் ஏன் தோற்றுவிட்டன என்பதையும் இன்னும் அறியாதவனை நாம் எந்த சொல்லால் அழைப்பது?... கவிஞனிடம் திட்டவட்டமான சமயம் ஒன்று உள்ளது.அதை ஒருக்காலும் சாகடிக்க முடியாத சொற்களில் அவன் எழுதிக் கொண்டேயிருக்கிறான்.



கவிதை இல்லாத இடத்தில்தான் கவிதை ஒரு அலங்காரப் பொருளாகவும் , கவிதை ஒரு தொழிற்சாலையாகவும், கவிஞர்கள் சாதாரண மனிதர்களாகவும் கருதப்படுவதும் தர்க்கத்திற்கு உட்பட்டதும் இயல்பானதுமான ஒன்று.நான் பேச விரும்புவது கவிதையை உணர்ந்து கொண்ட ஒரு சமூகம் அல்லது தான் கவிஞ ன் என்பதை உணர்ந்துகொண்ட ஒரு உள்ளம் பற்றி மட்டுமே.


(1999-ல் நெய்வேலி ‘வேர்கள்’ இதழில் வெளிவந்தது.

Tuesday, June 3, 2014

காந்தியின் பாலுணர்வுப் பரிசோதனைகள்

பாலுணர்வைக் குறித்து காந்தி தனது வாழ்நாளில் பல பரிசோதனைகளை மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட பரிசோதனைகள் குறித்து விரிவான ஓர் ஆய்வுக் கட்டுரையை பேராசிரியர் பிக்கு பாரிக் எழுதினார். 1989 ல் வெளியான இந்த கட்டுரை மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இந்தக் கட்டுரை பிக்கு பாரிக் எழுதிய காலனித்துவம், மரபு, சீர்திருத்தம் (Colonialism, Tradition and Reform : An analysis of Gandhi's Political discourse - Sage Publications India 1989) என்ற புத்தகத்தின் ஒரு பகுதி. 

பாலுணர்வுக்கும், அரசியலுக்கும் அதிகாரம் தொடர்பாக அமைந்துள்ள நெருங்கிய உறவுகள் இன்று அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. பேசுபவர்களில் அமைப்பியல்வாதிகள், மார்க்சியர்கள், பெண்ணிலைவாதிகள் ஆகியோர்அடங்குவர். அதே நேரத்தில் பாலுணர்வு - சூழல் - அதிகாரம் பற்றிய விவாதம் நமது அண்மைக்கால வரலாற்றிலும் நடந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டவும், இன்றைய சூழலுக்கேற்ப பாலுணர்வு பற்றிய விவாதத்தை ஆரம்பிக்கவும், காந்தியின் பாலுணர்வுப் பரிசோதனைகள் குறித்த விவாத நீட்சிகளும் கருத்துப்பரிமாற்றங்களாக நிகழ்த்தப்பட வேண்டிய தேவையிருக்கிறது என்பதை இந்த ஆய்வுக் கட்டுரை வலியுறுத்துகிறது.

அந்த ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி...
-------------------------------------------------------------------

.. 1946-ஆம் ஆண்டு டிசம்பர் இருபதாம் நாளிலிருந்து காந்தியும் அவருடைய பேத்திமுறையான மனு காந்தியும் ஒரே படுக்கையில் நிர்வாணமாக உறங்கத் தொடங்கினார்கள்.  தம்முடைய பரிசோதனை பற்றி காந்தி மனுவின் தந்தையிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் மனுவையே இதைப்பற்றி அவரது தந்தைக்கு எழுதுமாறு பணித்தார் காந்தி. மேலும் மனு, ஒரு நாளேட்டில் தம்முடைய எண்ணங்களை எழுதி வரவேண்டும் என்றும் கூறிவிட்டார் காந்தி. அதை மனு தினமும் காந்தியிடம் காட்டி அவரது கையொப்பத்தையும் பெற்றாக வேண்டும். 



இந்தப் பரிசோதனை தொடங்கிய மூன்று வாரங்களில் - அதாவது 1947-ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி - கிருஷ்ண தாஜ் ஜாஜீ என்ற நண்பருக்கு எழுதிய கடிதத்தில் - இதைப்பற்றிக் குறிப்பிடுகிறார் காந்தி. இதே சமயத்தில் காந்தியுடன் வசித்து வந்த சகாக்களுக்கு இந்தப் பரிசோதனை நடந்துவருவது தெரிந்திராமல் இருக்கமுடியாது. காந்தியேகூட அவர்களிடம் இதைப்பற்றிப் பேசியிருக்கக்கூடும். மேலும் காந்தியின் குடிலுக்குள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையே இருந்தது. எனவே ஆசிரம வாசிகளுக்கு - குறிப்பாக காந்தியின் பெண்சகாக்களுக்கு - பரிசோதனைபற்றித் தெரிந்திருக்க வேண்டும். 

ஆனால் காந்தியின் பல்வேறு எதிரிகளும் - அவரைக் கண்காணித்து வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளும் - இந்தப் பரிசோதனையை மிகவும் அப்பாவித்தனமாக நடத்தப்படும் ஒன்று என்றே நினைத்தார்கள். காந்தி தமது பரிசோதனை பற்றி பகிரங்க அறிவிப்பு ஏதும் செய்தாரில்லை. அதே சமயத்தில் பரிசோதனை நடத்துவதற்குத் தமக்கிருந்த காரணங்கள் பற்றித தம் ஆதரவாளர்களிடம் கலந்தாலோசிக்கவுமில்லை. ஒருக்கால் அவ்வாறு பகிரங்கமாக அறிவித்திருந்தால் அவரது பரிசோதனையின் நோக்கமே பாழ்பட்டுப்போயிருக்கலாம், பரிசோதனையையே நடத்த முடியாமல் போயிருக்கும் என்று அவர் பயந்திருக்கலாம். 

எப்படியிருப்பினும் விஷயம் வெகுவேகமாகப் பரவிவிட்டது. காந்தியால் கிசுகிசு, வதந்தி, அவதூறு என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த விவகாரம் ஒரு பொதுப்பிரச்னையாகவே உருவாகிவிட்டது. 

பாலுணர்வுவேட்கையானது விஸ்வாமித்திரர், வியாசர் போன்ற மாமுனிவர்களையே ஆட்டிப்படைத்துவிட்ட ஒன்று என்பதை உணர்ந்திருந்த காந்தியின் சகாக்கள், அவருடைய பரிசோதனையின் விளைவுகளைப் பற்றிப் பயப்பட ஆரம்பித்தார்கள். காந்தியின் குஜராத்தி சகாக்கள் சிலர் அவருடன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்கள். காந்தி நடத்திய ஹரிஜன் ஏட்டின் இரண்டு ஆசிரியர்கள் பதவி விலகினார்கள். சிலரோ காந்திக்கு எதிரான "ஒத்துழையாமை இயக்கத்தைத்" தொடங்கினார்கள். சர்தார் வல்லபாய் பட்டேல், காந்தியுடன் பேசுவதையே முறித்துக்கொள்ளும் அளவுக்குக் கோபமடைந்திருந்தார். காந்தியின் பரிசோதனைகளைக் கண்டித்து அவருக்கு ஆச்சாய வினோபா பாவே ஒரு கடிதமெழுதினார். காந்தியின் மகன் தேவதாஸும் உணர்ச்சிமயமான ஒரு கண்டனக்கடிதத்தை எழுதினார். காந்தியின் அன்புக்குப் பாத்திரமான சுருக்கெழுத்தாளர் பரசுராம் பணிவிலகினார். ஏற்கனவே காந்தி நடத்தியிருந்த பரிசோதனைகளைக் கண்டித்திருந்த கிஷோர்லால் மஷ்ருவாலா போன்றவர்கள் பெருங்கோபம் கொண்டார்கள். ஜவஹர்லால் நேரு மனக்கலக்கமடைந்திருந்தார். 



காந்தி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:

1. காந்தியின் பரிசோதனைகள் பிறருக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டன.
2. இவை சமுதாய நெறிகளின் அடிப்படையையே பலவீனப்படுத்துவதாக, அதர்மத்தை ஊக்குவிப்பதாக இருக்கின்றன.
3. பரிசோதனைகளைக் காந்தி ரகசியமாக நடத்தியது தவறு. 
4. பரிசோதனைகளுக்கு முன்பாக இவை பற்றிய விவரங்களை காந்தி பொதுவிவாதத்துக்கு வைத்திருக்க வேண்டும். பின்னரே இவற்றை நடத்தியிருக்க வேண்டும்.
5. காந்தியின் பரிசோதனைகள் ஹிந்து தர்மத்துக்கு எதிராக உள்ளன.
6. காந்தியின் பரிசோதனைகளால் சமுதாயத்துக்கோ நாட்டுக்கோ எந்தவிதப் பயனுமில்லாததால் இவற்றை நடத்தும் அவசியமில்லை. 

7. காந்தியின் பரிசோதனைகளால் அப்பாவிப்பெண்கள் உடல் மற்றும் உணர்ச்சிரீதியாக சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மேலும் காந்தியின் பரிசோதனைகள் பெண்களை ஆண்களுக்குக் கீழானவர்களாகவே வைத்திருக்கின்றன. 

இந்தக் கடைசிக் குற்றச்சாட்டை காந்தியின் செயலாளர்களில் ஒருவரான பேராசிரியர் நிர்மல் குமார் போஸ் முன்வைத்துப் பதவி விலகினார். மேலும் காந்தி, தம்முடைய பரிசோதனைகள் ஏற்படுத்திய பாதிப்புக்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்று பேராசிரியர் போஸ் குறிப்பிடுகிறார். மேலும் காந்தியிடம் நெருங்கிப்பழகிய பிற பெண்களுக்கு இதனால் மனுவிடம் ஏற்பட்ட பொறாமையையும் அவர்கள் எந்த அளவுக்கு காந்தியைத் தமது சொத்தாகப் பாவித்தார்கள் என்பதையும் காந்தி கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்று பேராசிரியர் போஸ் கூறுகிறார். 

மேலும் மனோவியல்-அலசலை ஆய்வுமுறையாகச் செய்துகாட்டிய ஸிக்மண்ட் ஃபிராய்டின் கண்டுபிடிப்புக்களையும் தமது கடிதத்தில் குறிப்பிடுகிறார் பேராசியர் போஸ்: 

"நனவிலிமனத்திலிருந்து தோன்றும் வேட்கைகள் மனிதர்களை ஆட்டுவிக்கின்றன. இவை அவர்களுடைய பிரக்ஞாபூர்வ விருப்பங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கின்றன. தீவிரமான சுய சோதனைகள்கூட இந்த வேட்கைகளைக் கண்டறிய முடிவதில்லை." 

ஆக, இந்தப்பரிசோதனைகளைச் செய்த்ததால் தம்முடைய நெருங்கிய சகாக்களை இழந்துவிட்டோம் என்பதை காந்தி புரிந்துகொண்டார். ஆனால் அவர் வருந்தியதாகவே தெரியவில்லை. 

"இந்த உலகமே என்னை உதறித்தள்ளினாலும் சரி, எனக்கு உண்மை என்று தெரிவதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை நான் தவறு செய்து கொண்டிருக்கலாம். ஆனால் என்னுடைய தவறுகளை நானே உணர்ந்துகொள்வதுதான் சரியாக இருக்கும். என் ஆதரவாளர்கள் என்னைப்பற்றி மோசமாக நினைத்து நான் மஹாத்மாதானா என்று சந்தேகிக்கலாம்.. அப்படி எனது முகத்திரை கிழிக்கப்பட்டால் அதனால் என்னைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறுயாரும் இருக்கமுடியாது. இதை ஒப்புக்கொள்ளத் தயங்க மாட்டேன்" என்று பதிலளித்தார் காந்தி. 

தம்முடைய பரிசோதனைகள் பற்றி காந்தி அளித்த விளக்கங்கள் எளிதில் புரியக்கூடியவையாக இல்லை. மேலும் அவை பல்வேறுசூழல்களில், வெவ்வேறு அர்த்த தளங்களில், அமைந்திருந்தன. சில சமயம் பரிசோதனைகளை அவர் திட்டமிட்டுத்தான் செய்தாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

பாலுணர்வுவேட்கை மீதான தம்முடைய கட்டுப்பாட்டைப் பரிசோதித்துப் பார்த்துக்கொள்வதாக காந்தி ஒருமுறை குறிப்பிட்டார். வேறொரு இடத்தில் "இது ஒரு பரிசோதனையே இல்லை; புனிதக் கடமை" என்கிறார். இன்னொருமுறை இவைபற்றிப் பேசும்போது "எனது யோகத்தில் இது ஒரு பகுதி, புலன்களை இறுதியாக வென்றுவிடும் முயற்சி" என்கிறார். இதையெல்லாம் விட்டுவிட்டுப் பார்க்கும்போது, காந்தியின் விளக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன. 

முதலாவதாக - 

இந்தப் பரிசோதனைகள் காந்திக்கு மோட்சம் அல்லது வீடுபேற்றை அடைவதற்கான வழிமுறையில் ஒருபகுதியாகும். தம் வாழ்க்கை நெடுகிலும் அவர் புலன்களையும் வேட்கைகளையும் கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார் என்பது தெரிந்ததே. பொருட்களை உடைமையாக்கிக் கொள்ளும் வேட்கையை அவர் எப்போதோ கடந்துவிட்டிருந்தார். கோபத்தைக் கிட்டத்தட்ட அவர் வென்றிருந்தார். மிக எளிதில் கோபங்கொள்ளக்கூடிய அவருக்கு இது மிகக்கடினமாக இருந்திருக்க வேண்டும். தம்முடைய எதிரிகளான ஹிந்துமதப் பழைமைவாதிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அளவுக்கு அவர் கோபத்தை வென்றிருந்தார். சாவு பற்றிய பயத்தையும் அவர் கடந்துவந்துவிட்டார் என்றே கூற வேண்டும். வன்முறையையும் கலவரங்களும் நடக்கும் இடங்களுக்கெல்லாம் பாதுகாப்பின்றி சர்வசாதாரணமாக சென்றுவர அவரால் முடிந்திருநதது. சில இடங்களில் சூழல் தமக்கு அவ்வளவு ஆதரவாக இல்லை என்றாலும் கூட அங்கெல்லாம் சென்றுவந்தவர் காந்தி என்பது கவனிக்கத்தக்கது. 

தம் நாக்கையும் காந்தி கட்டுப்படுத்தி வைத்திருந்தார். சுவையான உணவை விரும்பிச் சாப்பிடக்கூடியவரான மோகன்தாஸுக்கு இது மிகவும் கடினமாக இருந்திருக்கும்! காந்தியின் உணவு - ஆட்டுப்பால் மற்றும் பச்சைக் காய்கறிகள், அவ்வளவே. நாக்கைக் கட்டுப்படுத்தியதன் இன்னொரு விளைவு, உண்மை மட்டுமே பேசுவது. தவிர, வாரத்தில் ஒருநாள் மௌன விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் காந்தி. அதிமுக்கியப் பேச்சுவார்த்தைகளுக்கிடையிலும் மௌன விரதம் தொடர்ந்தது. தவிர, பல்வேறு சிக்கலான, சிரமமான பணிகளையும் பழகியிருந்தார் காந்தி. கழிப்பறைகளைச் சுத்தம் செய்கிற பணியில் அவர் மகிழ்ச்சியுடன் பங்குபெற்றது யாவரும் அறிந்த ஒன்றே. 

பாலுணர்வு வேட்கைதான் அவரால் வெற்றிகொள்ளப்பட முடியாததாக இருந்தது. ஆனால் அவர் கடும் முயற்சிகளைக் கைக்கொண்டு அவற்றில் தாம் வெற்றிபெற்றுவிட்டதாகக் கருதினார். அப்போதுதான் 1936, 1938-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றையடுத்து உண்மையான வெற்றிக்கு வெகுதூரம் போக வேண்டும் என்று அவர் கண்டுகொண்டார். தமது முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, பாலுணர்வின் அனைத்து எச்சங்களையும் தமக்குள்ளிருந்து அகற்றிவிட முயன்றார் அவர். 

காந்தி தம் ஆசிரமத்தில் நிர்வாணமாக உலாவினார். தமக்கோ உடனிருக்கும் பெண்களுக்கோ இது பற்றிய பிரக்ஞை ஏதுமில்லாமல் இருக்கிறதா என்பதை அவர் உறுதிசெய்துகொண்டார். அதே சமயத்தில் "இறைவனை நோக்கிய தனியொரு பாதையின் சென்று கொண்டிருக்கிறேன். இதைத் தீவிரப்படுத்த என்னுடைய ஆழ்மன நினைவுகளையும் கனவுகளையும் ஆராய்ந்தாக வேண்டும். இதற்குச் சுய ஆய்வோ, சுயவிமரிசனமோ போதாது. கடும் செயல்பாட்டுப் பயிற்சியே உகந்தது. சிறுகுழந்தைகளால் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. எனவே ஆழ்மன-ஆசைகளை வெளிக்கொணர வேண்டுமென்றால் அவை நிறைவேற்றப்படுவதற்கான சூழலை உருவாக்குவதே சரி" என்று கூறுகிறார் காந்தி. 

எனவேதான் தாமும் தம்முடைய பெண்சகாக்களும் நிர்வாணமாகச் சேர்ந்து படுத்துறங்குவதை ஒரு கடுமையான பசோதனையாக காந்தி மேற்கொள்ள முன்வந்தார். இதன்மூலம் முழுமுற்றான தூய சூழலைத் தாம் அடைந்துவிட்டோமா என்று தெரிந்துகொள்ள விரும்பினார். இந்தச்சூழலில் பிறர்க்கெதிரே தாமும் தமக்கெதிரில் பிறரும் பாலுணர்வுவேட்கை கொள்ளாமல் இருக்கிறோமா என்பதையும் தெரிந்துகொள்ள விரும்பினார். இந்த அளவில் காந்தியின் பரிசோதனை அவரது நனவிலிமனத்தைக் "கழுவி" உள்ளுமையைத் "தூய்மையாக்கி"க் கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. 

பரிசோதனைகளின் முடிவுகள் காந்திக்கு திருப்திகரமாக அமைந்ததாகத் தெரிகிறது. மனுவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறுகிறார்: 

"இதுவரை பதினோரு விரதங்களை நான் வெற்றிகரமாகக் கடைப்பிடித்து வந்துள்ளேன். ஆனால் இப்போது நான் மேற்கொண்டிருக்கும் பரிசோதனைதான் அறுபது ஆண்டுகளாக நான் செய்துவந்தனவற்றின் உச்சக்கட்டம் ஆகும். இந்த யோக முயற்சியில்தான் உண்மையின் கதிர்களை என்னால் காணமுடிகிறது." 

தொடர்ந்து எழுதுகிறார்: "இறைவனுக்கும் உண்மைக்கும் வெகுஅருகில் வந்துவிட்டதை உணர்கிறேன். உண்மையிலேயே வீடுபேற்றை அடைந்துவிட்டோமா என்பது எனக்குத் தெரிய நியாயமில்லை. அப்படி நனவிலிமனத்தை முற்றாகப் புரிந்துகொள்ள என்னால் இயலாது. எனினும் உடல் என்ற பொருள் இருக்கும் வரை வீடுபேற்றைத் தக்கவைத்துக் கொள்வது என்பது முடியாது. எனவே நான் எப்படி இறக்கிறேன், என் சாவு எப்படிப்பட்டதாக இருக்கப்போகிறது என்பதை வைத்துதான் என் பரிசோதனை வெற்றியடைந்துவிட்டதா என்பது தெரியும். அல்லது ராம நாமத்தை உச்சத்துக்கொண்டு நான் இறக்கிறேன் என்றால் என் பரிசோதனை வெற்றியடைந்து விட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்." 

1948-ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று காந்தி சுட்டுவீழ்த்தப்பட்டதைப் பார்த்த பலர் இதை ஊர்ஜிதப்படுத்தினார்கள். ஆனால் இறக்கும் தறுவாயில் அவருடன் இருந்த அனைவருமே இதை ஊர்ஜிதப்படுத்தவில்லை. இன்னும் பிரச்னைக்குரியனவாகவே உள்ளன இந்த விஷயங்கள்.

தாம் இந்தப் பரிசோதனையைத் தொடங்கியது ஏன் என்று 1946-ஆம் ஆண்டிலேயே காந்தி விளக்க முற்பட்டார். நாட்டின் அரசியல் விடுதலையானது கைக்கெட்டிய தூரத்திலேயே இருந்தது. ஆயினும் ஹிந்து-முஸ்லீம்கள் பரஸ்பரக் கலவரங்களில் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். மக்களிடையே பயங்கரமான வெறுப்புணர்வு பெருகிக்கொண்டிருந்தது. எப்படியாவது இந்தக் கலவரங்களைக் கட்டுப்படுத்திவிட வேண்டும், இந்திய நாட்டின் பிரிவினையைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று காந்தி துடித்துக்கொண்டிருந்தார். 

இருபத்தைந்து ஆண்டுகளாக காந்தி மக்களுக்கு அகிம்சாவழியைப் போதித்துவந்திருந்தார். ஆனால் மக்களோ இந்த வழியை நிராகரித்தது மட்டுமல்லாமல் இதன் மீதான நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கியிருந்தார்கள். இப்படி காந்தியின் பணி அனைத்துமே வீணாய்ப்போய்க்கொண்டிருந்தது. இதனால் மனச்சோர்வும் ஆற்றாமையும் அடைந்திருந்தார் காந்தி. அவரால் தூங்க முடியவில்லை. உயிர்வாழ்வதையே வெறுத்தாற் போலக் காணப்பட்டார்.  

"நான் என்ன செய்யட்டும், நான் என்ன செய்ய வேண்டும், எங்கும் இருள் சூழ்ந்து காணப்படுகிறதே!" என்று அடிக்கடி எழுதினார். அனைத்துலகுக்கும் பொருந்தவல்ல தம்முடைய செய்தியாக அகிம்சையை அவர் கருதினார். ஆனால் தம் சொந்த மண்ணிலேயே, தம்முடைய தலைமையின்கீழாகவே, அகிம்சை என்பது அர்த்தமற்ற ஒன்றாகிவிட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். 

அதே சமயத்தில் தோல்வியைக் கண்டு அஞ்சும் மனப்போக்கு அவரிடம் எப்போதுமே இருந்ததில்லை. தேர்ந்த போராளியான அவர், தமது செய்தியான அகிம்சை என்பதில் பிரச்னை எதுவுமில்லை என்றும் பிரச்னை தம்மிடம்தான் என்றும் முடிவுசெய்தார்! தூய அன்பின் முன்னால் வன்முறை நிற்க முடியாமல் அழிந்துவிடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். நல்லது தீயதை இறுதியில் வென்றே தீரும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். எனவே தாம் உண்மையாகவே தூய்மையுடன் இருந்தால், இம்மியளவு வன்முறையும் தம்மிடம் குடிகொண்டிரா விட்டால், சமுதாயத்தில் நிலவிய வன்முறையைத் தணிப்பதற்கான சக்தியைத் தம்மால் திரட்ட முடியும் என்று அவர் நம்பினார்....

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
• 1991ல் நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பில் ‘புறப்பாடு’ இதழில் வெளிவந்தது இந்தக் கட்டுரை

(நன்றி : திணை இசை சமிக்ஞை)

Wednesday, March 12, 2014

மனோலயம் - படித்ததும் பார்த்ததும்...

கடந்த இரண்டு நாட்களின் அன்றாட பயண நேர வாசிப்பில் 108 பக்கங்களில் ஒன்பது கதைகளை உள்ளடக்கிய அமரத்துவம்என்கிற (2002 வெளியானது) மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பைப் படித்து  முடித்தேன். 

அமரத்துவம்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) 

போர்ஹேயின் The Immortal, Pierre Mernard, The Intruder, Dream Tiger ஆகிய நான்கு கதைகளும், காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் The Sea of lost time, Death Constant beyond love, Other side of death என்ற மூன்று கதைகளையும், இடாலோ கால்வினோவின் Going to headquarters,  Hunger at bevera என்ற இரண்டு கதைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. .

போர்ஹேயின் அமரத்வம்கதையையும், மார்க்வெஸின் மரணத்தின் வேறு கோணம்கதையையும் இரண்டு முறை வாசித்தேன். கதை புரியாமலில்லை வாசிப்பின் சுவையுணர்வுகளுக்காக அப்படிச் செய்தேன். நிறைய எழுத்துப்பிழைகள் வாசிப்பினூடே இடறினாலும், நெருடலற்ற சரளமான மொழிபெயர்ப்பு படிப்பதைத் தடை செய்யவில்லை. பெரும்பாலும் ஞாபகங்களின் நினைவு கூறல்கள்தான் புனைவின் மீதான ஈர்ப்புகளை வாசிப்பவருக்குச் சாத்தியமாக்குகிறது. 

தேர்ந்தெடுத்த இக்கதைகள் அனைத்தும் சொற்களை ஒன்றின் அருகில் ஒன்றாக அடுக்கிக் கொண்டே சென்று சர்க்கஸ் கலைஞனின் ஊஞ்சலாட்டத் தாவலையொத்த நிலையில் உள்ளுணர்வின் கம்புகளைச் சட்டெனப் பற்றிக் கொள்கிறது. மனதுக்குப் பாந்தமான அவ்விதமான உணர்வைத் தருகிற வாசிப்பின்பமே திரும்பத்திரும்ப அதில் ஈடுபடச் செய்கிறது. 

ஒரு படைப்பை சரியென்று ஏற்கவும், மறுத்துப் புறந்தள்ளுவதற்குமான புள்ளி இங்குதான் இருக்கிறது. படிக்காமலே பொதுக்கருத்துகளையொட்டி சார்ந்தும், வெட்டியும் பேசுவது வேறு. அதைப்பற்றிய, அவ்விதமான விமர்சனங்களைக் குறித்து பொருட்படுத்த வேண்டியதில்லை. தகுதியுள்ளவை எஞ்சும்என்பார்கள். அப்படியான நல்ல புத்தகத்தை அடையாளம் கண்டுகொள்வதில் ஆகச்சிறந்த வாசகனுக்கு எப்போதும், எவ்விதத் தடையும் இருப்பதில்லை. படைப்புகளுக்கான பரிந்துரைகளும் அவசியமற்றதுதான். ஆழ்ந்து வாசிக்கத் தேடுகிறவர்களுக்கு எல்லாம் கிடைக்கும்.

அமரத்துவம்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) 
- தமிழில் : க.செண்பகநாதன்
(முதல் பதிப்பு : 2002) விலை : ரூ.50/-


விழுந்து கொண்டிருக்கும் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) 

ரே பிராட்பரி, ராபர்ட் சில்வர்பெர்க், டினோ புசாட்டி, உர்சுலா லெக்யுன், ஐசக் பாஷவ்ஸ் சிங்கர், டோனி கேட் பம்பரா, அனில் வ்யாஸ், மரியா ஸ்ரஜ், யசுநரி கவாபட்டா, அன்னி ஃப்ருல்க்ஸ், ஜான் எட்கர் வைட்மான், அன்டன் செகாவ், ஸோரன்டினோ, சஹி, மண்ட்டோ, என்.எஸ்.மாதவன், ஸக்கரியா ஆகியோரின் கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது.

இக்கதைகளில் பாதி தோலுரித்த காட்டு மாடு (அன்னி ஃப்ருல்க்ஸ்), பாரம் (ஜான் எட்கர் வைட்மான்) என்ற இரு கதைகளும் நவீன புனைவுகள் எப்படி மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணங்கள் என்று இப்புத்தகத்திற்கான தனது நீண்ட முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். வாசிப்பினூடாக கதைகளில் பயணிக்கிற போது இவ்வுண்மையை உணர முடிந்தது.

 வாசிக்கக் கிடைக்கிற பெரும்பாலான மொழியாக்கங்களில் காணக் கிடைக்காத இயல்பான நம்பகம், சரளம், தெளிவு ஆகியவற்றைக் காண முடிவதே எம்.எஸ். அவர்களின் மொழிபெயர்ப்பின் சிறப்பு. 

விழுந்து கொண்டிருக்கும் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
- தமிழில் : எம்.எஸ். (காலச்சுவடு) (ரூ.160) 





Friday, March 7, 2014

அகநாழிகை - இதழ் 7 - மார்ச் 2014 ... தற்போது விற்பனையில்..

அகநாழிகை - இதழ் 7 - மார்ச் 2014 ... தற்போது விற்பனையில்..

160 பக்கங்களில் வெளிவந்திருக்கும் ‘அகநாழிகை’ (இதழ் 7 - மார்ச் 2014) இதழுக்கான வரவேற்பும், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் வாதைகளின் இறுகிய இழைகளை நெகிழ்த்தித் தளர்த்துகிறது. நன்றி.

இதழில்....

விரிவான இரு நேர்காணல்கள் : ஸ்டாலின் ராஜாங்கம் • ஜோ டி குரூஸ்

கட்டுரைகள் :

கேளாரும் வேட்ப மொழி - ராஜ சுந்தரராஜன் 

காதலியரின் அரசி - குட்டி ரேவதி

தெருவில் நகர்கிறது சைக்கிள் - எச்.பீர்முகமது

வறட்சியில் செழிப்பு - ஜீவ கரிகாலன்

இந்தக் கட்டுரைக்குப் பத்துத் தலைப்புகள் சூட்ட ஆசை - இசை

பெரியாரின் பெண்ணியம் - பாட பேதமும், இயந்திரத்தனமும் - தி.பரமேசுவரி

காற்றுப் பள்ளத்தாக்கின் இளவரசி - சித்தார்த் வெங்கடேசன்

புவி வெப்பமயமாதல் என்பது பித்தலாட்டமா? - ராஜ் சிவா

புணர்ந்தன பிரிந்தன பிரிந்தன புணர்ந்தன - பொன்.வாசுதேவன்

மொழிபெயர்ப்பு : மாதவிக்குட்டியின் டைரிக் குறிப்புகள் - கமலாதாஸ்
- தமிழில் : யாழினி

புத்தக விமர்சனம் : கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ அகண்ட வனத்திற்குள் காலத்தை அறுக்கும் ஆலகாலம் - தாரா கணேசன்



• புத்தக வடிவில் 160 பக்கங்கள்

• விலை ரூ.120 (அஞ்சல் செலவு ரூ.30)


உன்மத்தப் பித்தன் (கவிதைகள்) - பொன்.வாசுதேவன்

உன்மத்தப் பித்தன் (கவிதைகள்) - பொன்.வாசுதேவன்

அகநாழிகை பதிப்பக வெளியீடு


பெருக்கல் குறி (நாவல்) - பொன்.வாசுதேவன்

விரைவில்...

பெருக்கல் குறி (நாவல்) - பொன்.வாசுதேவன்

அகநாழிகை பதிப்பக வெளியீடு.




Monday, January 6, 2014

பிரமிள் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேரலை

Comments system

Disqus Shortname