Tuesday, October 30, 2012

சொல்வதற்கென்று இருக்கிறது


எல்லோரிடமும் சொல்கிறேன்
உன்னிடம் சொல்கிறேன்
ரகசியமாய் சொல்கிறேன்
எனக்குள்ளே சொல்கிறேன்
பொதுவாக சொல்கிறேன்
தனியாக சொல்கிறேன்

எல்லாமே வெவ்வேறு
ஆனாலும்
எல்லோருக்கும் 
உன்னிடமும்
ரகசியமாகவும்
எனக்குள்ளேயும்
பொதுவாகவும்
தனியாகவும்
சொல்வதற்கென்று
நிறைய இருக்கிறது 
என்னிடம்

உனக்கும் அவனுக்கும்/அவளுக்கும்
உங்களுக்கும் அவர்களுக்கும் அப்படியே
சொல்வதற்கென்று இருக்கிறதென்பதை
நானும் அறிவேன்.



பொன்.வாசுதேவன்

நாங்க சந்தோசமாக இருக்கிறோம் - நிச்சித்தம்



தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தில் பிறந்த மு.சுயம்புலிங்கம் பிழைப்பு தேடி பட்டணத்துக்கு வந்தவர். எளிமையான பேச்சு வழக்கிலான நேரடி சொற்பிரயோகங்களால் ஆனது இவருடைய கவிதை வெளிப்பாடு. ‘கல்குதிரை‘ இதழில் இவரது ஆரம்ப கால கவிதைகள் மிகவும் கவனம் பெற்றவை. நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள் (உயிர்மை பதிப்பகம்), தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள் என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளும், ஒரு பனங்காட்டுக் கிராமம் (உயிர்மை பதிப்பகம்), ஊர்க்கூட்டம் என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளது. வாழ்க்கையின் அவலங்களையும், அபத்தங்களையும் எள்ளலோடு கூடிய எளிய மொழியில் வெளிப்படுத்தி எழுதுவதே இவரது சிறப்பு.


மு.சுயம்புலிங்கம் அவர்களின் சில கவிதைகள்

தீட்டுக் கறை படிந்த, பூ அழிந்த சேலைகள்

நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை.

டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம், வாங்கிக்கொண்டு
ஓடிவிடுவார்கள்.

தீட்டுக்கறை படிந்த,
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச் சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது.

இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது.

கால் நீட்டி தலை சாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது.

திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது.

எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது.

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.



முந்தித்தவம்

நீ ஒரு ஆம்பள
உனக்கு ஒரு பொண்டாட்டி......

புள்ளைகளுக்கு
கலைக்டர் வேல வேண்டாம்.......
ஒரு எடுபிடி வேல
வாங்கிக் கொடுக்க முடியாது
உன்னால.......

வீடு வித்து
வாயில போட்டாச்சி.......
தாலிநூல் வித்துத் தின்னாச்சி......
கம்மல் இருக்கா.....
மூக்குத்தி இருக்கா.....

வீட்டு வாடகைக்கு
பொம்பள ஜவாப் சொல்லணும்

விடிஞ்சாப் போற
அடஞ்சா வாற

மண்ணெண்ண அடுப்பில் சமச்சி
வீடு பூராவும் கரி

ஒரு பாவாடைக்கு
மாத்துப் பாவாட கெடையாது
முகத்துக்குப் பூச
செத்தியங்காணு
மஞ்சத்துண்டு இல்ல
நல்லாப் பொழைக்கறவா
சிரிக்கறா

ஒனக்கு
ஆக்கி அவிச்சி
ருசியா கொட்டணும்

கால் பெருவிரலை நீட்டி
ஒத்தச் செருப்பை
மெள்ள இழுத்தேன்
பாழாய்ப் போன ரப்பர்
வார் அறுந்திருக்கிறது

அவள் பின்கழுத்தில்
என் கண்கள்
செல்லமாய் விழுந்தன

அந்த மஞ்சக்கயிற்றில்
ஒரு ஊக்கு இருக்கு
கேக்கலாம்
கேளாமலேகூட
தென்னி எடுக்கலாம்

அவள் அழுவதைப் பார்க்க
இஷ்டம் இல்லை
செருப்பை விட்டுவிட்டு
நடக்கிறேன்.




மணல்

எதை
உற்பத்தி செய்தோம்
நாம்.
ஆறுகளில்
மணல் இருக்கிறது..
விவசாயிகளிடம்
நிலம் இருக்கிறது.
மணலையும்
நிலத்தையும்
விற்காமல்
எதை விற்பது..! 



நிம்மதியைக் குலைக்கும் அமைதி

- பாவண்ணன்

சென்னைமும்பைகொல்கத்தா போன்ற பெருநகரங்களின் மக்கள் தொகையில் முப்பது விழுக்காட்டுக்கும்   மேல் பாதையோரங்களில்  வசிப்பவர்கள்.  யாருக்கும் முறையான  தங்குமிடம்  இல்லைபலருக்கு  உடல்  மறைக்கும்  துணிகள் இல்லை.  பசி  வேளைக்கு  போதுமான  உணவில்லை.  கிடைக்கும்  போது  சாப்பிட்டு,  கிடைக்கிற  கிழிசலை அணிந்து, கிடைக்கிற இடத்தில் தூங்கி நாட்களை  ஓட்டுகிறார்கள்.  கிடைக்கிற வேலைகளைச் செய்கிறார்கள். கிடைக்கிற பணத்தை விருப்பம்  போல செலவு செய்கிறார்கள். யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத ஒரு வாழ்க்கை முறை. யாரிடமிருந்தும் எதையும் எதிர் பார்ப்பதற்கும் வழியில்லாத வாழ்க்கை முறை என்றும் சொல்ல வேண்டும். இந்தியாவில் எந்த அரசாங்கம் வந்தாலும் இவர்களுடைய வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் உருவாவதில்லை. இவர்களுடைய மறுவாழ்வுக்காகத் தீட்டப்படுகிற திட்டங்கள் சரியான முறையில் இவர்களை சென்று சேர்வதில்லை. ஆனால் திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகிற நிதி மட்டும் பலவகைகளில் செலவழிந்து போகிறது. ஏழைகள் ஏழைகளாகவே காலம் காலமாக  இருக்கிறார்கள். ஏழைகளின் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிப்பவர்கள் சம்பாதித்துக் கொண்டே  இருக்கிறார்கள். பாதையோரத்தில் பிறந்து பாதையோரத்திலேயே வளர்ந்து, வாழ்ந்து செத்துப் போகிறவர்களை பற்றி யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை.

ஒருநாள் வெளியூரிலிருந்து வரவிருந்த என் நண்பரை அழைத்து செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். இரவு இரண்டரைக்கும் மேல் இருக்கும். யாருமில்லாத இடம் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். சிறிதுநேரம் கழிந்த பிறகுதான் சற்றே தொலைவில் ஒரு மரத்தடியில் ஒரு குடும்பம் அமர்ந்திருப்பது புலப்பட்டது.  ஒரு அம்மா உட்காரக்கூட முடியாமல்  தூக்கத்தில் வளைந்து வளைந்து விழுகிற பிள்ளைகளை நிமிர்த்தி உட்கார வைத்து  சோறு  ஊட்டிக்   கொண்டிருந்தாள். எல்லாரையும் சாப்பிட வைத்து விட்டு ஒரு தட்டில் சோறு போட்டு அவளும் சாப்பிட்டாள். இரண்டரை மணிக்குச் சாப்பிட்ட அந்தச் சாப்பாடு கடந்து போன இரவுச் சாப்பாடாகவோ அல்லது மதியச் சாப்பாடாகவோ அல்லது அன்றைய நாளின் ஒரே சாப்பாடாகவோ இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். ஏன் இந்த நேரத்தில் சாப்பிடுகிறாய் என்று கேட்பதற்கும் ஆள் இல்லை. ஏன் இந்த நேரம் வரைக்கும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தாய் என்று கேட்பதற்கும் ஆள் இல்லை. கிடைக்கும் நேரத்தில் சாப்பிட்டு கிடைக்கிற இடத்தில் தூங்கி விட்டுச் செல்கிற வாழ்க்கையை அவர்களும் விரும்பியோ விருப்பமில்லாமலோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தம் வாழ்க்கையைக் குறித்த புகார்களைப் பட்டியலிடச் சொன்னால் ஒவ்வொருவரும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்ஆனால் சொல்லப்பட்ட புகார்களுக்கெல்லாம் எந்த நல் விளைவும் நிகழாததைப் பார்த்துப் பார்த்துசோர்வில்  துவண்டு,  புகார்களோடேயே வாழ்ந்து பழகத் தொடங்கி விடுகிறார்கள். தம்மை உற்றுக்கவனிக்கும்  முகங்களைக் கண்டு அவர்கள் புன்னகைக்கக் கூடும். அப்புன்னகையின் பின்னால  நூறு மடங்கு கசப்புகள் குவிந்திருக்கலாம். சந்தோஷம் என்று சொல்கிற ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஆயிரம் மடங்கு துக்கம் மண்டியிருக்கக்கூடும். எதிர்மறையான உணர்வுகளை நேர்மறையான சொற்கள் மூலம் வெளிப் படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.

சுயம்புலிங்கத்தின் கவிதையில் ஒலிக்கும் குரல் ஒற்றைப் படையான குரல் அல்ல. அது ஒரு பிரதிநிதித்துவக் குரல். ஒரு பெருங்கூட்டத்தை பின்னணியில் கொண்ட குரல். உணவு, உடை, உறையுள் இல்லாதவர்கள் அவர்கள்ஆதரிப்பதற்கும் யாருமே இல்லாதவர்கள். அறிவுரை சொல்லவோ, துணையாக இருந்து வழி நடத்தவோ கூட துணையில்லாதவர்கள். கிடைத்த போது உண்டு,  கிடைக்காத போது பட்டினி கிடப்பவர்கள்.  குழந்தைகளுக்கு அணிந்து கொள்ள சரியான உடைக்குஏற்பாடு செய்ய முடியாதவர்கள். எங்கெங்கோ கிடைக்கிற  அளவுப் பொருத்தம் இல்லாத தொளதொள சட்டைகளை மட்டுமே அணிந்து கொள்ள  தூண்டுகிறவர்கள். மலிவு விலையில் கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக பழைய துணிக் கடையில் தீட்டுக்கறை படிந்த நிறம் மங்கிய சேலைகளை வாங்கி அணிந்து கொள்கிறவர்கள். பசியைத் தண்ணீரருந்தித்  தணித்துக் கொள்ளும் பயிற்சியில் கைதேர்ந்தவர்கள். இழப்புகளை ஆதாயங்களாகவும் அவமானங்களை விருதுகளாகவும் தோல்விகளை வெற்றிகளாகவும் மாற்றி, அவற்றையே ஆபரணங்களாக அணிந்து கொள்கிறவர்கள். அப்படிப்பட்டவர்கள்தான் தன்னை நோக்கி நலம் விசாரிக்கும் முகத்தைப் பார்த்து நலம்தான் என்று சொல்கிறார்கள்அப்போதுகூட தன்  குறைகளைப் பட்டியலிட்டுச் சொல்ல மனம்  நாணுகிறவர்கள். உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைய வேண்டும் என்று வள்ளுவர் சொல்வதுண்டு. மனித குலத்தில் ஒரு பிரிவு உடுக்கையிழந்து நிற்கும்போது, இன்னொரு பிரிவு ஓடிவந்து உடுக்கையாக  நின்று மானம் காப்பதுதானே நாகரிகமாக இருக்க முடியும். தானாகவே  நாகரிக முறையில் நடந்து கொள்ளத் தெரியாதவர்கள் பிறர் உணர்த்தும் போது  மட்டும் நாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இல்லாததாலேயே, மனக்கூச்சத்துடன் நலம்தான் என்று புன்னகைக்கிறார்கள். நலம்தான் என்ற சொல்லோடு ஒட்டிக்கொண்டு வெளிப்படுகிற சிரிப்பின் வழியாக, உள்ளார்ந்த துக்கங்கள் வெடித்துச் சிதறுவதை நாம் தான்  உணர வேண்டும்.

'குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா' என்றொரு இசைப்பாடல் வரியை நாம் கேட்டிருப்போம். நான் நினைத்ததையெல்லாம் நடத்திக் கொடுத்து விட்டாய். என் கண்களால் நல்லவை அனைத்தையும் பார்த்து விட்டேன். வாழ்வில் எந்தக் குறையும் இல்லை என்று நன்றியுணர்வு புலப்பட உருகும் குரலில் தொழும் உருவத்தை சின்னஞ்சிறிய அவ்வரிகளைக் காதுகொடுத்துக் கேட்டதுமே உணர்ந்துகொள்ளலாம். சுயம்புலிங்கத்தின் கவிதையில் ஒலிக்கும் குரல் இதற்கு நேர்மாறானது. எங்களுக்கு ஒரு குறையும் இல்லை, நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என்று கவிதை முன்வைக்கும் குரலில் கசப்பான பெருமூச்சின் வெப்பம் சுட்டெரிக்கிறது. படிக்கிற கணத்தில் அவ்வெப்பத்தின் அனலை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. உணவு உடை உறையுள் என்று சொல்லப்படும் அடிப்படைத் தேவைகளுக்கே தாளம்போடுவதை நீதான் கண்ணால் பார்க்கிறாயே, நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்று கேட்காமல் கேட்கிற அமைதி கவிதையில் புலப்படுவதை நாம் உணரவேண்டும். நிம்மதியைக் குலைக்கிற அமைதி இது. வறுமைகூட ஒருவகையில் இளைய முள்மரம்போல. இளம் கன்றாக இருக்கும்போதே வெட்டி அகற்றுவதுதான் நல்லது. ஆழமாக வேரூன்ற வேரூன்ற, அதை அகற்றும் வழிமுறைகளும் சிக்கலானதாக மாறிவிடக்கூடும்.



மௌனி இன்ன பிற - நிச்சித்தம்




மௌனியைப் புரிந்து கொள்ள நாம் மௌனியாக வேண்டும். அப்படியெனில் மட்டுமே அவரது எழுத்துக்களை சலிப்பற்று நாம் உள்வாங்கிக் கொள்ள முடியும். நான் கடந்த மாதம் மௌனி சிறுகதைகளை (எத்தனையாவது முறையாகவோ) மறுபடி படித்தேன். காலச்சுவடு வெளியிட்ட Classic வரிசை புத்தகம் அல்ல. 1969ல் வெளியான பதிப்பு. ஒரு கதையை வாசிக்கும்போதே அதன் இண்டுஇடுக்குகளில் சிக்கிச் சுழன்றாடுகிற மனதைத் தரவல்லமை படைத்தவை மௌனியின் கதைகள். நுணுக்கம
், வெளிப்பாடு, விவரணை இல்லையென்றால் எத்துணை முக்கியமான கதையும் வாசிக்க ஒப்பாது. ஆகவே கதைகளில்.. கதைகளில் ஏன்.. படைப்பில் கலைநுட்பம் Craft அவசியம்தான். அழியாச்சுடர், மனக்கோலம், உறவு பந்தம் பாசம், அத்துவான வெளி போன்ற கதைகள் மிகவும் பிடித்தமானவை.. மீண்டும் மீண்டும் வாசிக்கவும், இப்படியான கதைகளில் ஆழ்ந்திருப்பதிலுமே நேரங்கழித்து, சொட்டுச் சொட்டாய் வாழ்வை ரசித்துக் கொண்டிருக்க தோன்றுகிறது.



•••


எனக்கு வந்த மின்னஞ்சல் செய்தி

*பிரதிகள்/காலம் மீதான வாசிப்பு*

முழு நாள் உரையாடல் அரங்கு!

25 நவம்பர் 2012 (ஞாயிறு) - லண்டன்

தோழமை மிகு நண்பர்களே!

இரண்டு விரிந்த தலைப்புகளில் இந்த உரையாடல் அரங்கினை நடாத்த ஆலோசிக்கிறோம்.

1. இலங்கை இனப்பிரச்சினை பின்புலத் தளத்தில் ஆயுதப் போராட்ட காலகட்டத்தினையொட்டி வெளிவந்துள்ள சிறுகதை, நாவல் தொகுதிகள், அனுபவக் குறிப்புகள்,வரலாற்றுப்பதிவுகளை,முன்னிறுத்தி, இதுவரை அச்சில் பதிவான பிரதிகள் மீதான பன்முக வாசிப்பினைக் கோரும் உரையாடலாகவும்...

புனைவுகள்

1. லங்கா ராணி - அருளர்
2. புதியதோர் உலகம் - கோவிந்தன்
3. ம், கொரில்லா - ஷோபாசக்தி
4. யுத்தத்தின் இரண்டாம் பாகம் - சக்கரவர்த்தி
5. கசகறணம் - விமல் குழந்தை வேல்
6. ஆறாவடு - சயந்தன்
7. யுத்தத்தின் முதலாம் அதிகாரம்- தேவகாந்தன்
8. ஓட்டமாவடி அரபாத்தின் சிறுகதைகள்
9. யோ.கர்ணனின் இரு தொகுதிகள்

வரலாற்றுப் பதிவு / ஆய்வுகள்

1. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - புஸ்பராசா
2. வானத்தைப் பிளந்த கதை - செழியன்
3. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் - கணேச ஐயர்
4. அகாலம் - புஷ்பராணி
5. முறிந்தபனை
6. சுதந்திர வேட்கை- அடேல் பாலசிங்கம்
7. போருலா - மலரவன்
8. வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை-ஜீவமுரளி

ஆங்கிலப் பதிவுகள்
1. Funny Boy - Shyam Selvadurai
2. When Memory Dies - A. Sivanandan
3. Love Marriage - Vasuki Ganeshananthan
4. Whirl Wind - A. Santhan

*(மேற்காணும் பட்டியல் முழுமையானது அல்ல)மேற்கூறப்பட்ட பட்டியலில் விடுபட்ட அச்சில் இதுவரை வெளிவந்தபிரதிகளை முன்வைத்தும் முதலாவது தலைப்பிற்கான கட்டுரையை முன்வைக்க முடியும். பிரதிகள் மீதானஒப்பிட்டு பார்வையாகவோ, தனித்தனி ஆய்வாகவோ கட்டுரைகள் இருக்கலாம்.

௦௦௦

2.போருக்குப்பிந்திய இலங்கையில் ஏட்டுள்ள அரசியல்,சமூக மாற்றங்களும் விளைவுகளும் தொடர்பான பல்வேறுபட்ட பார்வைகளைப் பேசுவதற்கான காலம் மீதான உரையாடலாகவும்....

மேலே கூறப்பட்ட இரு தலைப்பு பேசு பொருளில் இந்த அரங்கு இருப்பது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.

* எழுத்தாளர்கள்,ஆய்வாளர்கள்,கருத்தாளர்களிடமிருந்து இவ்விரு தலைப்பிற்குற்பட்ட கட்டுரைகளை எழுத்து மூலம் கோருவதுடன்,புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றவர்கள் அமர்வுக்கு நேரடியாக சமூகம் தந்து தங்களது கருத்தினை முன் வைத்து பேச அழைக்கிறோம்.

கலை இலக்கிய முயற்சிகளில் தேசிய இன அடையாளங்கள்- எனும் தலைப்பில்ஆய்வாளர், அ,ராமசாமி ( பேராசிரியர்,வார்சா பல்கலைக்கழகம்) சிறப்புரை ஆற்ற உள்ளார்.

கலந்துகொள்ள விரும்புவோர்கள், கட்டுரைகளை முன்வைக்க விரும்புபவர்கள் , கருத்துக்கள்,ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புவோர்கள் எதிர்வரும் நவம்பர் 10ம் திகதிக்குமுன் தெரியப்படுத்துமாறு கேட்கிறோம்.

ஏற்பாடு - தமிழ் மொழிச் சமூகங்களின் செயட்பாட்டகம்

தொடர்புகளுக்கு-
மின்னஞ்சல் - eathuvarai@gmail.com
தொலைபேசி - ( 0044 7817262980)

•••

• தொலைவான ஓரிரவு •

என் அம்மா...
உன் ஒரு முலையிலிருந்து மறுமுலைக்கு
என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது
பிரிவென்று கருதாதே.
என் தமக்கையே நெடுவழியில் நான்
உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல்
பற்றிக்கொள்ளும் பொழுது இது.
தீண்டலற்ற இடைநொடி

தனிமையோ என்று திகைக்காதே
என் தங்கையே உன்னைத் தியானிக்கும்
என் மனம் இமைக்கும் தருணமிது.
அச்சமய இருட்டில் நீ மிரளாதிரு.
உறங்கு என் மகளே
தோள் மாற்றிச் சுமக்கவே உன்னை
என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன்.
ஐயோ இது விலகலோ என்று
திடுக்கிட்டு விழித்துவிடாதே.
சகலமுமான என் பிரியமே
இன்று நாளெல்லாம் உன் நினைவால்
எத்தனை முறை மனம் ததும்பி
கண்ணீர் வரப் பார்த்தது..

• யூமா வாசுகி




•••

Comments system

Disqus Shortname