Tuesday, February 7, 2012

கடைசிக் கோமாளி


இருள் மசி மிரட்டும் ஒளிக்கற்றை தெறிக்க
மின்காற்றாடியின் பேய்க்காற்றினூடாக
இருளுக்கேங்கும் கண்கள் விரித்து
பெருஞ்சேனத் தொனி காட்டி
விரிந்த இரு கையுடன் நீந்தி மிதக்கின்ற
பாவனையோடு வருகிறான் செங்குமிழ் மூக்கன்

வண்ணத் தொப்பி
வெண்பனி பூசிய முகம்
தொளதொளத்த ஜிகினா வெள்ளுடை
பிளந்த யோனியாய் செவ்வாய் நீள் வரைவு

கை முனையில் சர்ப்பக்குஞ்சுகளாய் தொங்கும் நாடா

அர்த்தமற்ற அசைவுகளால் நெளிகிறது உடல்
சன்னதங் கொண்டு...

காது நிறைக்கும் கைதட்டல்கள்
மகிழ்வோலங்கள்...

அகண்ட திரைச் சீலையின் பின்னுள்
உச்ச நிகழ்ச்சிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான்
மூர்க்கங்கொண்ட சிங்கத்தின் வாயில்
தலை நுழைத்து சாகசம் புரிபவன்.



பொன்.வாசுதேவன்




பசியாறல்


மெல்லிய காற்றாடை மரங்களைப் போர்த்தியபடி
அமைதியுற்றிருக்கிறது காடு

சதை நீங்கி முறிந்த எலும்புக் குவியம் சூழ
கருஞ்சிகப்பு ரத்தம் தோய்ந்த
நீள் நாக்கைச் சுழற்றிச் சுவைத்தபடி
நடுச்சுனையின் ஓரம் ஓய்ந்திருக்கிறது பசியாறிய புலி

தலையுயர்த்தி செவ்வாய் பிளந்து
இரையாடி கூர் தீட்டிய பற்களுக்கிடையே
அமர்ந்து பறந்தமர்ந்து
வேடிக்கை பார்க்கிறது காட்டு ஈ.


பொன்.வாசுதேவன்






Monday, February 6, 2012

பின்னற் சுழல்



மஞ்சள் நிற குறுவாழைப்பழங்களாய் பழுத்திருந்த பஞ்சு மர இலைகள்
சற்றே வேகமாய் வீசிய காற்றை இறுகப் பற்றியபடி
அலைபாய்ந்து கொண்டிருந்ததைக் கண்டேன்
சிலந்தியைப் போல் பின்னிச் சுழல்கிறது நினைவு

நீருக்குள் முழ்கிக் கொண்டிருப்பவனின் பற்றுதல் தேடும் அபயக்கரம்
விரி தோகையுடன் மருண்டு விழிக்கும் தோகைக் கண்
சற்றைக்கு முன் இறந்த பூனையின் காற்றிலசையும் ரோமக்கற்றை
படகை உந்திச் செல்ல நீராழத்தில் விசையூட்டும் துடுப்பு
இரையடைய வழியற்று குறுகுறுக்கும் மழை நேரப்பறவை
பாசி வாசம் வீசும் ஊர் எல்லை ஆத்திக் குட்டை
ஏழு புரவியேறிப் பறக்கிற நிலைக்காட்சி
அடர் காட்டில் பிரசவித்துக் கொண்டிருக்கிற யானை
நிரம்பிக் கொண்டிருக்கிற பாத்திரம்
சூன்யத்தில் உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கும் சுவாச ஒலி
அடக்கிய சிறுநீர் பிரியும் சுகம்
கம்பி வளையத்துள் கழுத்திறுக கழியில் சொருகப்பட்டு தலைகீழாய் 
தொங்கிக் கொண்டிருக்கும் ரோஜா நிற உதடு கொண்ட பன்றிக்குட்டி
திரி நுனியில் படர்ந்தொளிரும் சுடர்
பிச்சாண்டியின் தாழ் திறக்கயியலா கடுந்துயர்
உதட்டருகில் குழந்தையின் பிஞ்சுப் பாதம்
அதிராமல் நிலைத்திருக்கும் அந்தரங்கம்
மலர்ந்த உன் ஒற்றைப் பெரு விழி
கைகளில் நெளியும் ரேகையோட்டம்
தூங்காத காற்று
சூன்யம்
சுவை
கடவுள்
துயரம்
காதல்
பிரிவு

பார்த்துக் கொண்டிருக்கிறேன்
உச்சிக் கூரான ஓங்கி உயர்ந்த அடி பருத்த அப் பஞ்சு மரமும்
தன்னைச் சுற்றிலும் மிதந்து கொண்டிருக்கும்
இலைகளை சலனமற்று பார்த்துக் கொண்டேயிருக்கிறது.




பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname