Wednesday, July 17, 2013

“கைம்மண்” - சுதாகர் கத்தக் - வலிகளாலான வாழ்க்கைச் சித்தரிப்பு

சில படைப்புகளை வாசிக்கையில் நம் உணர்வுகளோடு ஒன்றி அதிலிருந்து வெளிவரச் சில காலம் ஆகிவிடும். வாசித்து முடித்த பிறகும் அக்கதைகள் நம் எண்ண ஓட்டத்தில் இருந்தபடியே இருக்கும். இப்படியான கதைகளை வாசித்து முடிக்கையில் ஏற்படுகிற திருப்தி அலாதியானது. அதற்கு ஈடாக வேறெதையும் ஒப்புக் கொள்ள முடியாது என்பதே உண்மை. கடந்த வாரத்தில் நான் படித்து முடித்த புத்தகத்தில் ஒன்றான ‘சுதாகர் கத்தக்’ எழுதிய ‘கைம்மண்’ சிறுகதைத் தொகுப்பு இப்படியானதொரு அனுபவத்தைக் கொடுத்தது. 

இன்றைய காலகட்டத்தில் தலித் என்பதை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும், நிறுவிக் கொள்ளவுமான கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிற பலருக்கு மத்தியில், ஒடுக்கப் பட்டவர்களான தலித்துகளின் வாழ்வியல் சார்ந்த உண்மையான வலிகளையும் வேதனைகளையும் படைப்பிலக்கியத்தில் பகிர்ந்தவர்கள் மிகச்சிலரே. அதிலும் எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமின்றி தான் எழுதியது குறித்த செருக்கின்றி, இந்த வாழ்க்கை இப்படியானது, இதைக் கண்ட நான் கதைசொல்லியாக அதை அப்படியே பதிந்திருக்கிறேன் என்பதில் சுதாகர் கத்தக் மிகவும் நேர்மையாகச் செயல்பட்டிருக்கிறார். 1980களில் இருந்து சிறுகதைகள் எழுதி வருகிற இவர் மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார். 

ரொம்ப நாட்களுக்குப் பிறகு தலித்துகளின் வாழ்க்கை சார்ந்த நுட்பமான விவரணையை இவரது கதைகளில்தான் வாசிக்கிறேன். தலித்துகள் பற்றிய பெரும்பாலான கதைகள் அவர்களது பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் பேச முற்பட்டதாகவே வாசிக்கக் கிடைக்கிறது. அன்றாட வாழ்வில் தலித்துகள் அனுபவிக்கிற சிறுசிறு விஷயங்களும், அதை அவர்கள் இயல்பாக எடுத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்திச் செல்வதையும் உணர்த்துகிறவை சுதாகர் கத்தக்கின் கதைகள். தலித்துகள் குறித்து எழுதவும், பேசவும் படவேண்டிய, பொதுப்பிரச்சனையற்ற அவர்களது சொந்த வாழ்வில் அன்றாடம் சந்திக்க நேர்கிற ஏராளமான விஷயங்கள் இன்னமும் பேசப்படாமலே இருக்கிறது என்பதை இத்தொகுப்பில் உள்ள பனிரெண்டு கதைகளும் கதைகள் உணர்த்துகின்றன. 

சர்க்கஸ் பணியாளன், கழைக்கூத்தாடி, உடலை விற்கிற பெண், மாடுகளை மேய்க்கிறவன், பறையடிக்கிறவன், காட்டை வணங்குகிறவள், பூட்டுக்காரன், பூம்பூம் மாட்டுக்காரன், பச்சை குத்துகிறவள், பானை செய்கிறவன் என இக்கதைகளில் வருகிற மனிதர்கள் எல்லாருமே அவர்களின் கதையைப் படிக்கிற போதே நமக்குள் புகுந்து மனதைப் பிசைகிறார்கள். அவர்களால் மட்டுமே பேச முடிந்த அவர்களின் பிரத்யேக மொழிக்குள் நம்மையும் புகுத்திக் கிட்டத்தட்ட கூடுவிட்டு கூடு பாய்ந்த நிலையை வாசிக்கையில் நமக்கு ஏற்படுத்தி விடுகிறார்கள். 

வாசித்ததில் நிறைவைத் தந்த தொகுப்பு. வாசிக்க வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றும் கூட..


கைம்மண் (சிறுகதைகள்) 
- சுதாகர் கத்தக்
வெளியீடு : பதிவுகள், கோயம்புத்தூர்.
விலை : ரூ.150/-

 

Comments system

Disqus Shortname