Friday, May 15, 2009

வாலிப வயோதிக அன்பர்களே…

  • வாழ்வின் முக்கியப் பருவங்களில் ஒன்று வளரிளம் பருவம். பதின் வயது மனங்களில் பதியும் நிகழ்வுகள் உளவியல் ரீதியாக வாழ்நாள் முழுவதும் நமது செய்கைகளில் பிரதிபலிக்கின்றன. அதிலும் குறிப்பாக பத்து வயது முதல் பத்தொன்பது வயதுக்குள்ளாக பாலுணர்வு சார்ந்து அறிந்து கொள்ளுதலும், பாலுணர்வு சார்ந்த புரிதல்களும், அனுபவங்களும் ஏற்படுத்தும் உளச்சிக்கல்கள் சார்ந்தே நாம் இயக்கப்படுகிறோம்.
  • வலைப்பதிவர்களில் பெரும்பாலும் ‘மொக்கை‘ எனும் அர்த்தமற்றப் பதிவுகள் இடுகிறார்கள் என்பதான வெற்றுக் கூக்குரலுக்கு மாற்றாக வலைப்பக்க எழுத்தாளர்கள் பல புதிய முயற்சிகளை, அங்கீகாரங்களை, சமுகம் சார்ந்த முன்னகர்வுகளை எடுத்துச் செல்ல முனைந்துள்ளனர் என்பது உண்மையாகிக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அந்த வகையில் வளரிளம் பருவத்தினருக்கும், குழந்தைகளுக்கும் ‘சரியான – தவறான தொடுதல்கள்‘ குறித்த புரிதலை ஏற்படுத்த பெற்றோர்களுக்கு அறிவுறுத்துவதற்கான முயற்சியாகவே டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி பங்கேற்ற நிகழ்வு நடத்தப்பட்டது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் வலைப்பதிவர்கள் மட்டுமின்றி அவர்களது நண்பர்களும் இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்தல் வேண்டும்.
  • டாக்டர் ருத்ரன் – ஷாலினி நிகழ்வு நடந்த அன்று காலையில் இலக்கிய இதழான யுகமாயினி நடத்திய ‘அடிமையின் மீட்சி‘ புத்தக அறிமுக விழாவில் நானும் தூறல்கவிதை ச.முத்துவேலும் கலந்து கொண்டோம். ‘புதுக்கவிதையும் இசையும்‘ என்ற தலைப்பில் ரவிசுப்ரமணியன் அவர்களும், ‘ஜீவனென் கவிதை‘ என்ற தலைப்பில் கவிஞர் வெங்கட் தாயுமானவனும் கட்டுரை வாசித்தனர். ம.ந.ராமசாமி மொழிபெயர்ப்பில் Booker T.Washington எழுதிய ‘அடிமையின் மீட்சி‘ புத்தக ஆய்வுரையை ‘இன்று‘ சுவாமிநாதன் வாசித்தார். அமெரிக்காவை கட்டமைத்ததில் கறுப்பர்களின் பங்கு குறித்தும், அவர்கள் சந்திக்க நேர்ந்த அவமானங்கள் குறித்துமான ஒரு வரலாற்றுப் பதிவாக இந்நாவல் கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பிறகு அருகாமையில் இருந்த பூங்காவில் அமர்ந்து, உயிர்மையில் வெளியான மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.
  • வயதாகிக் கொண்டே வருவது பலருக்கும் ஒரு மனச்சிக்கலாக இருந்து வருகிறது. வாலிபமும் வயோதிகமும் வேறு வேறல்ல. வயது என்பது ஒரு மனோபாவம்தான். இருபதில் நாற்பதாகவும், நாற்பதில் இருபதாகவும் இருக்க முடியும். எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். வயது குறித்து பேசும் பலரும் தங்களுக்கும் வயதாகும் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். மனதை சந்தோஷமாக வைத்திருந்தால் வயது என்பது ஒரு பொருட்டாக இருக்காது.
  • பதிவர் கார்த்திகைப்பாண்டியன் ஏற்பாடின் பேரில் திருச்சியில் பதிவர்கள் சந்திப்பதென முடிவாகியது. முதல் நாள் இரவே திருச்சி சென்று விட்டேன். பெருந்துறையிலிருந்து கார்த்திகைப்பாண்டியனும் இரவே வந்து விட்டார். மறுநாள் காலை மெல்பர்ன் கமல் (அவரது மனைவியுடன்), சிங்கப்பூரிலிருந்து ஆ.ஞானசேகரன், இளையகவி கணேஷ், திருப்பூரிலிருந்து சொல்லரசன், காரைக்குடியிலிருந்து டாக்டர் தேவன்மாயம் என வந்திருந்தனர். பதிவுலகம், இலக்கியம், படித்தது, பிடித்தது, கணிணி தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள் எனப் பலவும் பேசி மதிய உணவுக்கும் பின் மறுபடியும் பேசி மாலை ஐந்து மணியளவில் விடைபெற்றோம். சந்தோஷமான சந்திப்பாக இருந்தது.
  • (முதல் படம் தேவன் மாயம், 2-வது ஆ.ஞானசேகரன், 3-வது படத்தில் (இடமிருந்து வலமாக) நான், மெல்பர்ன் கமல், தேவன்மாயம், சொல்லரசன், கார்த்திகைப்பாண்டியன், அமர்ந்திருப்பது இளையகவி கணேஷ்)

DSC01057

  • தமிழில் பேசுவதை பலரும் அவமானமாகவும், கண்ணியக்குறைவாகவும் நினைத்துக் கொள்கின்றனர். நமது மொழி நாம் பேசுகிறோம் என்ற மனோபாவம் அனைவருக்கும் வரவேண்டும். கூத்தாண்டவர் திருவிழாவிற்கு வந்திருந்த ‘இப்படிக்கு ரோஸ்‘ ஒரு வார்த்தை கூட தமிழில் பேசவில்லை. தமிழில் பேசினாலும் அவர் ஆங்கிலத்தையே பயன்படுத்தினார். அது உயர்ந்த நிலையில் தங்களை காட்டிக் கொள்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

நாம் அடிக்கடி பயன்படுத்தும் தமிழ் அல்லாத வார்த்தைகள்

உருது வார்த்தைகள்

போர்ச்சுக்கீஸ் வார்த்தைகள்

தெலுங்கு வார்த்தைகள்

இலாகாஅலமாரிவேடிக்கை
அந்தஸ்துகிராம்புஎச்சரிக்கை
ஜாமீன்சாவிவாடகை
ஆசாமிஜன்னல்பித்தலாட்டம்
கைதிபாதிரியார்பண்டிகை
கிச்சடிபரங்கிக்காய்கோரிக்கை

ஞானக்கூத்தன் எழுதிய ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.

எனக்கும் தமிழ்தான் மூச்சு

ஆனால் பிறர் மேல்

அதை விடமாட்டேன்.

Friday, May 8, 2009

கூத்தாண்டவர் திருவிழா : அரவாணிகள் வாழ்வும்.. தாழ்வும்..


“கூத்தாண்டவர் திருவிழாவில் ‘இப்படிக்கு ரோஸ்‘க்கு தாலி கட்டினேன்“ என்றுதான் இந்த பதிவிற்கு முதலில் இந்த தலைப்பிட நினைத்தேன். (அப்போதுதானே அதிகம்பேர் வாசிப்பார்கள்). பிறகு ‘இதெல்லாம் உனக்குத் தேவையா ?‘ என்ற எண்ணம் மனதில் தோன்ற அசல் (அந்த ‘அசல்‘ இல்ல) தலைப்பையே வைத்துவிட்டேன்.

2007-ல் கூவாகம் சென்று வந்தது குறித்த நினைவுகளை
‘போடா ஒம்போது‘ என்ற தலைப்பில் உயிரோசை மின்னிதழில் வெளியான கட்டுரையில் பகிர்ந்து கொண்டேன். எனது வலைப்பக்கத்திலும் பதிவிட்டிருந்தேன்.
கடந்தமுறை சென்றபோது கூவாகத்தில் நடந்த திருவிழாவை பார்க்க இயலாமல் திரும்பி வந்தேன். இந்த ஆண்டு கூவாகம் சென்று வரலாம் என்று 5.5.09 அன்று சென்றேன். விழுப்புரம் நகரினுள் நுழைந்ததுமே தேர்தல், அரசியல் பரபரப்பைவிட அரவாணிகளின் பளபளப்பு அதிகமாக இருந்ததை உணர முடிந்தது.

விழுப்புரத்தையடுத்த மடப்பட்டு சந்திப்புச் சாலையிலிருந்து வலதுபுறமாக திரும்பினால் 8 கி.மீ. தொலைவில் கூவாகம் கிராமத்தை அடையலாம். அந்த சாலை போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என விழுப்புரத்திலேயே கேட்டறிந்து கொண்டதால், மடப்பட்டு சாலைக்கு முன்பாகவே உள்ள அரசூர் சந்திப்பு சாலையில் காரை வலதுபுறமாக திருப்பி திருவெண்ணைநல்லூர், பெரிய செவல் வழியாக சென்றால் கூவாகம் ஊராட்சி நம்மை வரவேற்கிறது. கூவாகம் ஊராட்சி தலைவர் பெயரும் கூத்தையன் என்பதுதான்.

வழியெங்கும் அரசு சிறப்புப்பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார், வேன், இருசக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள் என மக்கள் கூட்டம் தங்களால் முடிந்த அளவிற்கு வாகன நெரிசலை ஏற்ப்படுத்தியிருந்தார்கள். கடும் நெரிசல் காரணமாக கோவிலுக்கு செல்ல ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே அறுவடை முடிந்திருந்த ஒரு கழனிவெளியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்றோம்.
அதற்குள்ளாகவே ‘கை‘ சும்மா இல்லாம புகைப்படமெடுக்க ஆரம்பித்தது.

கோவிலுக்கு செல்லும் வழியில் முதலில் இங்கு ‘முட்டை பிரியாணி ரெடி‘ என்ற தகவலுடன் குடை மிளகாய் மாலையெல்லாம் தயார் செய்து வரவேற்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தது. அப்போதே தெரிந்துகொண்டேன். இந்த முறை நமது பதிவும் குடை மிளகாய் போலத்தான் இருக்கும் என்று. அடுத்ததாக ஹெச்ஐவி/எய்ட்ஸ், மனித உரிமைகள் & கடத்தல் தடுப்பு (என்ன கொடும சார் இது) கண்காட்சி மற்றும் தகவல் மையம் வரவேற்றது. காட்சி ஊடகங்களின் சார்பில் ஆங்காங்கே புகைப்படங்களும், காணொளிப் பதிவுகளும் எடுத்துக் கொண்டிருந்தனர்.

திரும்பிய பக்கமெல்லாம் அரவாணிகள் கூட்டம் கூட்டமாக சிரித்துப் பேசியபடியும், தாலி வாங்கிக் கொண்டும் இருந்தனர்.
தாலியை வாங்கியதும் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்கின்றனர். அரவாணிகள் மட்டுமின்றி தனி வேண்டுதல் இருக்கும் பக்தர்களும் தங்கள் பிள்ளைகளை மாலை அணிவித்து, தாலி கட்டி நேர்த்திக் கடன் செய்கின்றனர். அரவாணிகள் கோவிலுக்கு சேவலை காணிக்கையிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. கோவிலுக்குள் இருந்து வெளியே வரும் அரவாணிகள் அருகில் இருக்கும் தேரின் முகப்பில் கற்பூரமேற்றி வட்டமாகக் கூடி பாட்டுப்பாடி கும்மியடித்துக் கொண்டிருந்தனர்.

பிறகு முழுக்க முழுக்க கொண்டாட்டம்தான். பெரும்பாலான அரவாணிகள பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கெனவே வட்டமிடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களோடு ஆங்காங்கே வயல் வெளிகளிலும், புதர் அருகிலும் தொலைவான இடங்களைத் தேடி ஒதுங்குகின்றனர். அரசு சார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் ஆணுறை, ஜெல் என வழங்கி அரவாணிகள் மற்றும் மக்கள் மீதான அக்கறையைக் காட்டிக் கொள்கின்றனர். பாதுகாப்பான உடலுறவு குறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு விளம்பரங்கள் வேறு.


இப்படி பாலியல் சங்கதிகளில் ஈடுபடுவது தவிர ஒரு சிலர் அங்கு வந்திருப்பவர்களுடன் மது அருந்துவது, அவர்களை இழுத்து விளையாடுவது என கழனி வெளிகளில் வெளிப்படையாக தக்க காவல் பாதுகாப்புடன் நடைபெறுகிறது. அரவாணிகளுடன் இணைந்து போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுப்பதும் நடக்கிறது. அதற்கு அரவாணிகள் தனிக்கட்டணம் வசூலிக்கின்றனர்.


இது போன்ற செயல்கள் எல்லாமே உரிய அங்கீகாரமின்றி, வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் எளிய அரவாணிகளிடம் மட்டுமே காணப்படுகிறது. மற்றபடி வாய்ப்பும், வசதியும் கொண்ட அரவாணிகள் கூடவே நாய்க்குட்டியாய் ஒரு ஆளையும், தங்களின் மெய்க்காப்பாளர் போல அழைத்து வருகின்றனர்.அணிந்திருக்கும் விலையுயர்ந்த நகைகளும், ஆடம்பர உடையும் அவர்களின் தரத்தை தெரியப்படுத்துகின்றது. பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகிகளும் பலர் காணக் கிடைத்தனர். அவர்களெல்லாமே ஆடம்பர வாகனங்களில் வருகை தந்து அரவானை கும்பிட்டு தாலியணிந்து (கும்மியிடுவதில்லை) புகைப்படங்களுக்கு பாவனை செய்து விட்டு விழுப்புரம் சென்று தங்கி விடுகின்றனர்.

விழாவைப் பார்வையிட்டும், வேடிக்கைப் பார்த்தும், படமெடுத்துக் கொண்டும் இருந்த சூழல் திடீரென பரபரப்பாகியது. காரணம் கேமரா குழுவினர் புடை சூழ ‘இப்படிக்கு ரோஸ்‘ பளபளப்பாக வந்து கொண்டிருந்தார்.
கூடவே வெளிநாட்டு புகைப்பட, காணொளி பதிவாளர்கள் குழு. நான் சென்று ‘ரோஸ்‘ உடன் பேசினேன். தமிழில் வாயைத் திறக்கவே இல்லை. தமிழில் பேசினாலும், ஆங்கிலத்தில் பேசினாலும், முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார் ரோஸ். பிறகு அவருடன் வந்திருந்த படக்குழுவினரைப் பற்றி கேட்டேன். அவர்கள் National Geographic Channel-ல் இருந்து அவரது வருகையைப் பற்றி பதிவு செய்ய வந்திருக்கிறார்கள் என்றார்.
பிறகு ரோஸ் தாலியணிந்து வெளியே வந்தவுடன் புகைப்படமெடுத்துக் கொண்டு, அவருடன் சில நிமிடங்கள் பேசி விட்டு கிளம்பினேன்.
கூவாகம் கிராமத்திற்குள் (சிலர் குவாகம் என்கிறார்கள்) சென்றேன். ஆங்காங்கே வெட்ட வெளிகளில் சமையல் ஏற்பாடுகள் செய்து கொண்டு குழுவினராக அரவாணிகள் அமர்ந்திருந்தனர். அரவாணிகள் அமைப்புகள் சார்பாக பல வாகனங்கள் வந்திருந்தன.
<

அரவாணிகளை முதல் முதலாக இறை பணியில் ஈடுபடுத்தி அவர்களை கன்னியாஸ்திரிகளாக ஆக்கியிருக்கும் அமைப்பில் இருந்தும் அரவாணிகள் வந்திருந்தனர். சீருடை அணிந்திருந்த அவர்கள் கோவிலுக்குளோ, கும்மியடிக்கவோ இல்லை. அங்குமிங்கும் நடமாடி அவர்களின் இருப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்தினார்கள். கிறித்தவ மத நிறுவனம் சார்பாக துண்டுப் பிரசுரங்களை அளித்தார்கள். அவர்களை அழைத்து வந்தவர்களின் கவனம் முழுவதும் வெளிநாட்டு வருகையாளர்களின் மீதே இருந்தது. நானும் அவர்களுடன் பேசினேன். அரவாணிகள் என்னுடன் பேசுவதைவிட பின்லாந்திலிருந்து வந்திருந்த பெண் ஒருவரிடம் ‘சாட்சி‘ சொல்வதில் குறியாக இருந்தார்கள். அவர்கள் தமிழில் பேச, பெண் ஒருவர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார்.



இருட்டத் தொடங்கியதால் அங்கிருந்து கிளம்பினேன். வயல்வெளி இருளில் நிழல்கள் ஆங்காங்கே சிரிப்பும், கும்மாளமுமாக அஸ்தமித்துக் கொண்டிருந்தனர். வழியெங்கும் ஆங்காங்கே மது அருந்தியவர்களின் சண்டை. அவர்களின் மையப்பொருள் அரவாணிகள்தான். சிறு கிராமங்களை கடக்கும்போது 15 முதல் 25 உள்ளான வயதினர் பலரும் கூவாகம் நோக்கி சென்று கொண்டிருந்ததை காண முடிந்தது. கூவாகத்திலிருந்து கிளம்பி விழுப்புரத்தை வந்தடைந்தேன்.

எனது முந்தைய பதிவில் ‘ஆண்டவர் லாட்ஜ்‘ என ஒரு விடுதியைக் குறிப்பிட்டிருந்தேன். அதன் பெயர் ‘ஆற்காடு லாட்ஜ்‘ என்று இப்போதுதான் தெரிந்தது. கீழே மதுக்கூடம் மேலே லாட்ஜ். பத்துக்கும் மேற்பட்ட மதுக்கூடங்கள் (குளிர்சாதன வசதியுடன்) அந்தத் தெருவில் இருந்தது. தெருவும், மதுக்கூடங்களும் அரவாணிகளால் நிறைந்திருந்தது. எல்லா அரவாணிகளுமே மது குடிப்பவர்களாக போதையேறி, சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர்.




ஏற்கனவே சென்னையில் அறிமுகமாயிருந்த பிரபாவதி என்ற அரவாணி தங்கியிருக்கும் அறை பற்றி விடுதியில் விசாரித்ததில் அவரும் மதுக்கூடத்திற்கு சென்றிருப்பதாக தகவல் வந்தது. விடுதியை விட்டு வெளியே வரும்போது பிரபாவதி என்ற அந்த அரவாணி மது அருந்திவிட்டு வந்து கொண்டிருந்தார். நேரில் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டு விடுதியில் அவரது தோழியருடன் தங்கியிருந்த ஏ.சி. அறைக்கு அழைத்துச் சென்றார். அன்றைய தினம் நடைபெற்ற அழகிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றிருந்த தனம் என்ற அரவாணியும் அங்கிருந்தார். (சேலத்தைச் சேர்ந்த இவர் பெண் காவலர் ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாகி பரபரப்பூட்டியவர்). அழகிப் போட்டியில் இவருக்கு பரிசளிக்கப்பட்டது குறித்து அரவாணிகள் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளதை அறிய முடிந்தது. அரவாணி பிரபாவதியிடம் (இவர் சென்னையில் உள்ள ஒரு முக்கியப் பிரமுகர் வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கிறார்) பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

விடுதியை விட்டு வெளியே வருகையில் அரவாணிகளை அழைத்தபடியும், அணைத்தபடியும் பொது இடங்களில் நின்றிருந்த ஆண்கள் பலரை காண முடிந்தது. சாதாரண மக்கள் நடமாட இயலாத அச்சச்சூழல் அங்கிருந்ததை காண முடிந்தது. பொதுவாகவே அரவாணிகள் என்றால் மக்கள் விலக்குவதன் காரணம், அவர்களது நிலை என்பது மட்டுமே அல்ல, அவர்களின் செய்கையும், சேட்டையும்தான் என்பதை இந்த பயணத்தின் போது உணர்ந்தேன்.

அரவாணிகள் குறித்த எனது கடந்த பதிவின்போது வந்த எதிர்வினைகளில் பதிவர்கள் டக்ளஸ், கார்த்திகைப்பாண்டியன் எனப்பலரும் அரவாணிகள் செய்கின்ற அராஜகம் (குறிப்பாக வட மாநிலங்களில் இரயில் பிரயாணத்தின்போது) குறித்து வருத்தமாக தெரிவித்திருந்தனர்.

நான் கவனித்த மற்றொரு முக்கியமான விஷயம்.. விழுப்புரத்திலும், கூவாகத்திலும் நான் கண்ட அரவாணிகளில் பலர் ‘கோத்திகள்‘ மற்ற நாட்களில் ஆண் தோற்றத்தில் சமுகத்தில் புழங்கும் இவர்கள் இங்கு மட்டுமே பெண் உடையணிந்து வலம் வருகின்றனர். இவர்களில் மிகக்குறைந்த சதவீதத்தினர் தவிர அனைவருமே ஒரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர். இவர்கள் இங்கு கூடுவதே இதற்குத்தானா.. என்ற எண்ணமும் தோன்றுகிறது. ரமேஷ் ரசிகாவாகவும், நரசிம்மன் நசீனாவாகவும் பல பெண் பெயர்களால் தங்களை அடையாளப்படுத்தி அறிமுகம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் போது ரமேஷ், நரசிம்மன் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு இனத்திலிருந்து பல போராட்டங்களுக்குப்பின் மேன்மையான இடத்தைப் பிடிக்கும் பெரும்பான்மையினர் ஏன் தன்னைப் போன்றவர்களைப் பற்றிய அக்கறையோ, அவர்கள் வளர்ச்சி குறித்தோ சிந்திப்பதில்லை என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அரவாணிகள் விஷயத்திலும் இதுதான் நடந்து வருகிறது. பிரபலமான, வசதி வாய்ப்புடைய அரவாணிகள் பலரும் அவர்களுக்குள் பேதத்துடன், இவர் இப்படி என்று பிரித்துதான் நடந்து கொள்கின்றனர்.

மூன்றாம் பாலினம் எனவும், திருநங்கைகள் எனவும் சரியான அங்கீகாரமும் அடையாளமும் பெறத்தொடங்கியிருக்கும் அரவாணிகள் அவர்களுக்குள்ளிருக்கும் பல மனத்தடைகளையும், குழப்பங்களையும், உடல் ரீதியான உறவுகள் குறித்தும் விழிப்புணர்வு கொண்ட தெளிவான சிந்தனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பத்திரிகைகளிலும், காண் ஊடகங்களிலும் பிரபலமாக உள்ள அரவாணிகள் அவர்களைப் போன்றவர்களுக்காக பேசுவதை மட்டும் விடுத்து, களப்பணியாற்றி தங்களைப் போன்றவர்களை வழி நடத்தினால் மட்டுமே அரவாணிகளின் நிலை உயரும். மக்கள் மட்டுமே அரவாணிகளை அங்கீகாரம் செய்வது அவர்களுக்கான தீர்வில்லை. அவர்களும் அந்த மாற்றத்தை விரும்ப வேண்டும்.

அரவாணிகள் குறித்த மாற்றுப் பார்வை பற்றிய இந்தப் பதிவு குறித்த உங்கள் அனைவரின் கருத்துக்களையும் எதிர்நோக்குகிறேன். அரவாணிகள் பற்றிய சரியான புரிதலுக்கும், தெளிவிற்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன்...

••• பொன்.வாசுதேவன் •••


குறிப்பு : என்னுடன் பெரும்பாலான பயணங்களில் பங்கேற்றும், புகைப்படங்கள் எடுத்தும், தீவிர புத்தக வாசிப்பு பழக்கமிருந்தும் எழுதும் பழக்கமில்லாத என் முதல் வாசகனும், கருத்துக்களை விருப்பு வெறுப்பற்று பகிரும் விமர்சகனும், நண்பனுமான ‘மனோ‘விற்கு என்றும் என் அன்பு.

Saturday, May 2, 2009

= லக்கி லக்கி நீ லக்கி = இன்ன பிற...


= அகநாழிகை என்றால் என்ன ? =

என்னைச் சந்திக்கின்ற, தொலைபேசியில் தொடர்பு கொள்கின்ற நண்பர்கள் அனைவரும் தவறாமல் கேட்கிற ஒரு கேள்வி “அகநாழிகை என்றால் என்ன அர்த்தம் ?“

‘அகத்துள் ஏற்படும் நினைவுக் கணங்கள்‘ இதுவே அகநாழிகை என்பதன் பொதுவான பொருள். இதோ இந்த பதிவை எனது விரல்களின் வழியே கணிணியின் தட்டச்சிடப்படுவதற்கு முன்பாக என் மனதில் தோன்றி அது பதிவு வடிவமாகி வெளிவரும் கணங்களை அகநாழிகை எனப் புரிந்து கொள்ளலாம்.

அகநாழிகை என்பதன் உண்மையான பொருள், கருவிலிருக்கும் குழந்தை உலகிற்கு பிரசவமாவதற்கு முன்பாக, கடைசி சில தினங்களில் அதற்கு சிந்தனையும், உணர்வும் தோன்றியிருக்கும். சிந்திக்கத் துவங்கிய குழந்தை உலகைக் காண்பதற்கு முன்பான கடைசிக் கணங்களே ‘அகநாழிகை‘

பல வருடங்களுக்கு முன் இலக்கியச் சிற்றிதழ் ஆரம்பிக்க விரும்பி அதற்காக தேர்ந்தெடுத்த பெயர்தான் ‘அகநாழிகை‘. பிறகு அம்முயற்சி தோல்வியடைந்ததால், அகநாழிகை என்ற பெயரில் அமைப்பாக செயல்பட்டு குறும்படங்கள் திரையிடும் நிகழ்வுகளும், புத்தக வெளியீடும், இலக்கியக் கூட்டங்களும் நடத்திக் கொண்டிருந்தேன். பிறகு வலைப்பக்கத்தில் எழுத ஆரம்பிக்கும் போது எனக்கே அப்பெயரை வைத்துக் கொண்டேன். சதா துரத்தும் எழுத்துக்களை எழுதியும், பதிவிட்டும் வாழ்க்கையைத் தொடரும் நானே ஒரு சிறுபத்திரிகை போலத்தானே.

(-)(-)(-)(-)(-)



= ‘ஊமைகள் பார்க்கிறார்கள்‘ ‘செவிடர்கள் பேசுகிறார்கள்‘ =

முன்பெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ஒரு அறிமுக அட்டையாக குறும்படம் ஒன்றை எடுத்துவிட்டு, அதன் குறுந்தகடுகளுடன் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். இப்போது வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதற்கு அறிமுக அட்டையாக இலக்கியமும், வலைப்பக்கங்களும் பயன்படுகின்றன. பதிவர்களின் படைப்புகள் தொடர்ந்து வெகுஜனப் பத்திரிகைகளில் வருவதே இதன் சாட்சி. வெகுஜனப் பத்திரிகைகளில் வெளியாவதற்கு படைப்புத்திறன் தவிர வேறு பல வித்தைகளும் தெரிந்திருக்க வேண்டும். கிறித்தவ அமைப்புகள் நடத்தும் எழுச்சிக் கூட்டங்களில் ‘ஊமைகள் பேசுகிறார்கள்‘என்பது போல ‘பதிவர்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்‘ ‘பதிவர்கள் பிரபலமாகிறார்கள்‘ ‘பதிவர்கள் நடிக்கிறார்கள்‘ ‘பதிவர்கள் பாடுகிறார்கள்‘ என பதிவர்களுக்கு இது எழுச்சிக்காலம். உன்னைப்போல் ஒருவன் படத்தின் வாயிலாக எழுத்தாளர் இரா.முருகன் திரைக்கதை ஆசிரியராகவும், கவிஞர் மனுஷ்யபுத்திரன் பாடலாசிரியராகவும் ஆகிறார்கள் என்பது கூடுதல் சந்தோஷச் செய்தி.

(-)(-)(-)(-)(-)


= லக்கி லக்கி நீ லக்கி =

தோழர் ‘லக்கிலுக்‘ பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவரது எழுத்து நடை வாசக ஈர்ப்புத்தன்மை கொண்டது. எழுத்தாக இருந்தாலும், காட்சி ஊடகங்களாக இருந்தாலும் சுவாரசியம் குன்றாமல்‘ தெளிவாக, புரியும் விததத்தில் ஒரு விஷயத்தைச் சொல்வதுதான் ஒரு படைப்பாளியின் கடமை. இதில்தான் ஒரு படைப்பின் வெற்றியென்பது நிச்சயிக்கப்படுகிறது. இந்த திறன் லக்கிலுக்கிற்கு இயற்கையாகவே கைகூடியிருக்கிறது. வெறும் லக்கியாகவே மட்டும் இல்லாமல், சரியான புரிதலை வாசிப்பவரிடம் ஏற்படுத்தி, எதிர் கருத்துக்களையும், ஆதரவுகளையும் திரட்டிக் கொள்வதில் லக்கிலுக்கிற்கு நிகர் அவரே. என்ன ஒரு விஷயம்... எந்த அளவிற்கு அவரது எழுத்துக்கள் அவரை நண்பனாக இருந்து உத்வேகப்படுத்துகிறதோ அதே அளவிற்கு அவரது எதிரியாகவும் அவரது எழுத்தே அமைந்து விடுகிறது. ‘ஒருவன் எதை ஆயுதமாக எடுக்கவேண்டும் என்பதை அவனது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்‘ என்பதை லக்கிலுக் எழுத்துக்களின் வாயிலாக உணர்கிறேன். நல்ல விவரிப்புத் திறன், வாசிப்பின் ஆர்வம் தூண்டும் தன்மை அனைத்தும் ஓருங்கே இணையப்பெற்ற லக்கிலுக் இன்னமும் பல உச்சங்களை அடைவது உறுதி. ஆனந்த விகடனில் லக்கிலுக்கின் ஒரு பக்கக் கதையை வாசித்தேன். அதை ஒரு கதையாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெறும் துணுக்குச் செய்தி அது. எனக்குப் பிடிக்கவில்லை.

(-)(-)(-)(-)(-)

= மொக்கையான தமிழ் =

நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் தனது ‘மிக்ஸ்டு ஊறுகாய்‘ பதிவில் பின்வருமாறு எழுதியிருந்தார்.

//ரொம்ப நாளாக எனக்கு இன்னொரு விஷயத்தில் சந்தேகம்.! அதேதான்.. விஷயத்தில்தான் சந்தேகமே.. அனுஜன்யா முதலானோர் விஷயத்தை விதயம்என்கிறார்கள். அதிஷா போன்றோர் அதைவிடயம்என்கிறார்கள். ஏராளமான ஆங்கிலச்சொற்களும், பிறமொழிச்சொற்களும் வழக்கத்தில் உள்ள நிலையில், அவற்றை எந்த தயக்கமும் இல்லாமல் நாம் (மேற்குறித்த அதே பதிவர்கள் உட்பட) பயன் படுத்திவரும் சூழலில், இந்த விஷயம்மட்டும் என்ன பாவம் செய்தது? தமிழ் வளர்த்தல் என்றால் செய்திஎன்ற சொல்லை பயன்படுத்தலாம். மாறாக ஒலிதான் பிரச்சினையென்றால் வின் மிக நெருங்கிய தமிழ் ஒலி வடிவான வை பயன்படுத்தலாம். அதை விடுத்து ஏன் இப்படி? புரியவில்லை.. விளக்குங்கள்.

அப்புறமென்ன.. விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் டூஎன்பீர்களா?//

(நன்றி : ஆதிமூலகிருஷ்ணன்)

ஆதிமூலகிருஷ்ணன் பதிவு குறித்த எனது சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

விஷயம் விடயம் விதயம் இவற்றிற்கெல்லாம் இடத்திற்கேற்ப பல பொருள் உண்டு.

‘விஷயம்‘ ‘விடயம்‘‘விசயம்‘ என்பதற்கு ஒரே பொருள்தான் ‘காணப்பட்டவைகள்‘ ‘உரியது‘ ‘அடைக்கலம்‘ ‘ஆராய்வு‘ என்றெல்லாம் பொருள்உள்ளது.

‘விசயம்‘ ‘விஜயம்‘ என்றால் ‘வெற்றி‘ என்னும் பொருளும் உள்ளது.

‘விஷம்‘ ‘விடம்‘ இரண்டிற்குமே ‘நஞ்சு‘ என்ற ஒரே பொருள்தான்.

‘விதம்‘ என்றால் ‘மாதிரி‘ ‘சூத்திரம்‘ ‘இனம்‘ என்று பொருள்.

அதேவிதமாக, சொன்னவிதம், விதம்விதமாக இப்படிப்பட்ட வார்த்தைகளை சொற்சேர்க்கை செய்து புரிந்து கொள்ளலாம்.

விதத்திலிருந்துதான் விதை, வித்து, விதர்ப்பம், விதவை, வித்தகம் என்ற வார்த்தைகள் எழுகின்றன.

அதேபோல, ஷங்கரை ‘டங்கர்‘ என எழுதலாமா என்று ஆதிமூலகிருஷ்ணன் நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

‘சங்கர்‘ என்றால் ‘போர் புரிபவர்‘ என்று பொருள்.

‘டங்கர்‘ என்றால் ‘போர் புரிபவர்கள் அணியும் தோற்கச்சை‘ என்ற பொருள் தமிழகராதியில் உள்ளது.

பெரும்பான்மை பதிவர்களுக்கு சந்தோஷமளிக்கும் கூடுதல் செய்தி.

‘மொக்கை‘ என்றால் ‘கூர் மழுங்கிய‘ என்பது பொதுவான பொருள். இவ்வார்த்தைக்கு மூல வார்த்தையான ‘மொக்கு‘ என்பதற்கு ‘கூரான‘ ‘குமிழ் போன்ற‘ என பொருள் படுகிறது.

‘மொக்கை‘ என்றால் ‘கூர் மழுங்கிய‘ என்ற பொருள் தவிர ‘பருமை‘ ‘வெட்கம்‘ என இரண்டு பொருளும் உண்டு.

இனி பதிவுகளின் வாசிப்பு வரவேற்புக்கு ஏற்ப ‘மொக்கை‘யான பதிவை பெரியதான, முக்கியமான என பொருள் கொண்ட ‘பருமை‘ எனவும், அதேசமயம் வரவேற்பில்லாத மொக்கையான பதிவிற்கு ‘வெட்கம்‘ எனவும் பொருளிட்டு மகிழ்ந்து கொள்ளலாம்.

என்னைப் பொறுத்தவரையில், எழுத வேண்டும் என்று வந்த பிறகு எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாகவாவது மொழியை சிதைக்காமல் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் பிறகு சரியாகி விடும். தமிழ் மொழி மீது பண்டிதராக வேண்டாம். ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டால் போதும். ஆங்கிலம் கற்கவும், பேசவும் ஆயிரம் முயற்சிகளைச் செய்யும் நாம் நம் தாய்மொழி அல்லது நாம் எழுதுகின்ற மொழி மீது ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம் என்பது புரியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் ஆங்கில அகராதி என்ற ஒரு புத்தகம் இருக்கும். நம்மில் எத்தனை பேர் தமிழகராதி வாங்கி வைத்திருக்கிறோம். கிரியா, பவானந்தர், கழக தமிழ் அகராதி என எத்தனையோ தமிழகராதிகள் உள்ளன. எல்லோரும் கூட வேண்டாம். எழுதுவதன் மீதும், வாசிப்பதும் மீதும் ஆர்வம் கொண்ட நாமாவது அதைச் செய்யலாமே... மனப்பாடம் செய்ய வேண்டாம், தமிழகராதியில் தினமும் ஒரு பக்கம் வீதம் படித்தால் போதும். அது மட்டுமே மொழியறிவை விரிவு செய்யும். குறைந்தபட்சம் நம் மொழி மீது நாம் காட்டும் நேர்மையான அக்கறை அதுவாகவே இருக்க முடியும்.

(-)(-)(-)(-)(-)


= விட்டுப்போன வார்த்தைகளும், எஞ்சிய நினைவுகளும்...

ஓல்டு மங்க் ரிசர்வ் ரம்மும் =

இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று வெகுநாட்களாகிறது. பொதுவாக இலக்கியக் கூட்டங்களில் நிகழும் குழு அரசியலும், உரையாடல்களில் நிலவும் வறட்சியான தன்மையுமே காரணம். இதையும் மீறி புதுப்புது அறிமுகங்களுக்காகவும், நட்பு பாராட்டலுக்குமாகவென, மது அருந்தக் கிடைக்கும் சுதந்திரத்திற்காகவும் சில கூட்டங்களுக்கு செல்ல நேரிடுகிறது. தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் சார்பில் மறைந்த கவிஞர்கள் சி.மணி, அப்பாஸ் நினைவாக ‘விட்டுப்போன வார்த்தைகளும், எஞ்சிய நினைவுகளும்‘ என்ற தலைப்பிலான அமர்விற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். லீனா மணிமேகலை இதற்கான அழைப்பை மின்மடலில் அனுப்பியிருந்தார். கவிஞரும், பதிவருமான ‘தூறல் கவிதை‘ ச.முத்துவேல் அவர்களும் ‘இந்த நிகழ்விற்கு போகலாமா ?‘ எனக்கேட்டிருந்தார். நாங்கள் இருவரும் கவிஞர் யாத்ரா அவர்களை இந்நிகழ்வில் சந்திப்பதென முடிவு செய்து அவரையும் அழைத்தோம். நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சென்று விட்டோம். வழக்கம் போலவே அங்கங்கே இருந்த கவிஞர்களை புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தேன். கோணங்கி, கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, மனுஷ்யபுத்திரன், அய்யப்ப மாதவன், பா.வெங்கடேசன், ரவி சுப்ரமணியன், கரிகாலன், அசதா, யவனிகா ஸ்ரீராம், ரிஷி, குமார் அம்பாயிரம், சுகிர்தராணி, இன்பா சுப்ரமணியன், நரன், ரிஷி, செல்மா பிரியதர்ஷன், லீனா மணிமேகலை, அ.வெண்ணிலா, அமிர்தம் சூர்யா, சொர்ணம், இளங்கோ கிருஷ்ணன், இசை, லஷ்மி சரவணக்குமார், ‘அடவி‘ முரளி, யாத்ரா, ச.முத்துவேல் இன்னும் பலர் என தமிழின் சமகாலக் கவிஞர்களையும் ஒருமித்து காண முடிந்தது. மனுஷ்யபுத்திரனிடம் பேச வேண்டுமென்று நினைத்தோம். அவரைச் சுற்றிலும் பலர் நின்றிருந்ததால் பேச முடியவில்லை. ‘மண் குதிரை‘ ‘அடவி‘ இரு சிற்றிதழ்களுக்கும் சந்தா செலுத்தினேன்.

3 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்வு 5.30க்கு ஆரம்பித்தது. கவிஞர் சுகிர்தராணி அனைவரையும் வரவேற்றும், சமகால கவிதைச் சூழல் குறித்தும் உரை நிகழ்த்தினார். ஆஸ்திரேலிய பழங்குடியின இசை வடிவமான (டிஜிருடு) மூங்கில் போன்ற நீண்ட கருவியைக் கொண்டு குமார் அம்பாயிரம் நிகழ்த்து கலை வழங்கி கவிஞர்களை இசையால் அஞ்சலித்தார். இசையஞ்சலி வித்தியாசமானதாகவும், மனதில் சேமித்து ரசிக்கக்கூடியதாகவும் இருந்தது. கவிஞர் அப்பாஸ் நினைவாக நிகழ்த்தப்பட்ட முதல் அமர்வில் யவனிகா ஸ்ரீராம் நெறியாளுகை வழங்கினார். மனுஷ்யபுத்திரன் கவிஞர்களின் படங்களுக்கு மலரஞ்சலி செய்தார். கோணங்கி கட்டுரை வாசிக்கத் தொடங்கினார். மிக நீண்ட நினைவுக் கட்டுரை. அவ்வப்போது அய்யப்ப மாதவன் பக்கமாக திரும்பி ‘இதோ முடித்து விடுகிறேன்‘ என்பதாக அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். கோணங்கிக்குப் பிறகு பேச வந்த ரிஷி நேர்மையாக தனக்கு அப்பாஸ் குறித்து அவ்வளவாக தெரியாது என்று கூறியபடியே தன் கட்டுரையை வாசித்தார். அரங்க மேடையில் மிகவும் சந்தோஷமாக இருந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன் மட்டுமே. அவர் முகத்தைத் தவிர மற்றெல்லாரும் இறுக்கமான தோற்றத்திலேயே இருந்தார்கள். ரவி சுப்ரமணியன் அமர்வு ஆரம்பித்த சிறிது நேரத்தில் வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்கிறேன். முன்பு அவரது அறையில் சென்று தங்கியதைப் பற்றிய சிறு நினைவூட்டலுக்குப் பிறகு, இருவரும் மின்மடல் முகவரி பரிமாறிக்கொண்டு பேசியபடியிருந்தோம். பிறகு அ.வெண்ணிலா, மு.முருகேஷ் இருவரையும் நலம் விசாரித்தேன். பிறகு கரிகாலன், அசதா என சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன். குமார் அம்பாயிரம், அடவி முரளி எனச்சிலர் வெளியே வந்தார்கள். எனக்கும் அதற்குமேல் உள்ளே அமர முடியவில்லை. வெளியே லீனா மணிமேகலையும், செல்மா பிரியதர்ஷனும் ஒரு கவிதைப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து ஆழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ச.முத்துவேல், யாத்ரா, நான் மூவரும் வெளியே வந்தோம். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மது அருந்தலாமா என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டோம். சரியென்று முடிவாகி அங்கிருந்து வெளியேறி ஆட்டோ மூலமாக மதுக்கூடத்திற்கு சென்றோம். எனக்குப் பிடித்தமான ‘கொண்டாட்டம்‘ ரம் கிடைக்காததால் ஓல்டு மங்க் ரிசர்வ் ரம் வாங்கிச் சென்றமர்ந்தோம். யாத்ரா அவரது கவிதைகளைப் போலவே மிகவும் மென்மையாகப் பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார். இலக்கியம், வலைப் பக்கங்கள், சினிமா, படித்தவை என பேச்சு ஒரு புள்ளியில்லாமல் எங்கள் பேச்சு அந்த கூடத்தில் அலைந்து கொண்டிருந்தது. பிறகு, யாத்ரா திடீரென எனக்கு பாட வரும் என்றார். மென்மையான குரலில் மிகவும் அழகாகப் பல பாடல்களை தேடித்தேடி பாடினார். எதிர்பாராத ஆச்சரியமாக ச.முத்துவேல் தனக்கும் பாடத்தெரியும் என்று கூறி பாடியும் காட்டினார். மதுக்கூடத்தின் பக்கத்து மேசை நண்பர்களும் இவர்களின் பாடலில் ஆர்வமாகி, அவர்களுக்கு பிடித்த பாடல் முதல் வரிகளை நினைவிலிருந்து எடுத்தளித்தபடி யிருந்தார்கள். சலிக்காமல் பாடிக் கொண்டும், இடையிடையே மது அருந்திக் கொண்டும் ஒன்றரை மணி நேரம் சந்தோஷமாகப் போனது. அங்கிருந்து கிளம்பி மறுபடியும் நிகழ்வு அரங்கிற்கு செல்வதென முடிவானது. இலயோலா கல்லூரி அருகிலிருந்த கூட்ட அரங்கை சென்றடைந்த போது கூட்டம் முடிந்து அனைவரும் வெளியே பேசிக்கொண்டிருந்தார்கள். அரங்கிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சுகிர்தராணியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு நாங்களும் விட்டுப்போன வார்த்தைகளுடனும்,எஞ்சிய நினைவுகளுடனும் கிளம்பினோம்,

(-)(-)(-)(-)(-)

பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname