Tuesday, December 6, 2011

ரஜினி பற்றி இந்தியா டுடே இதழில்

ரஜினி சிறப்பிதழாக வெளிவந்துள்ள ’இந்தியா டுடே’யின் இந்த வார (06.12.2011இதழில் 
ரஜினி பற்றிய எனது பகிர்தல்.




Thursday, October 27, 2011

கல்கி தீபாவளி மலரில் வெளியான எனது கவிதை


ஒளிவருடிப் பிரதியை மின்னஞ்சலில் அனுப்பிய திரு.வாசு பாலாஜி அவர்களுக்கு நன்றி.

Monday, October 24, 2011

வழி தவறிய பட்டாம்பூச்சி


உங்களில் எத்துணை பேருக்கு
இவ்வனுபவம் வாய்த்திருக்கும்
என்று தெரியாது

மின்சாரம் தடைப்பட்ட பகலொன்றில்
என்னறைக்குள் தற்செயலாய் நுழைந்தது
ஒரு பட்டாம்பூச்சி

வழிதவறிய பட்டாம்பூச்சியை
மறுபடி கடைத்தேற செய்வது
எப்படியென்ற யோசனையோடு
கைப்பற்றி வெளி விட முயற்சித்தேன்

நான் துரத்த
அது கைப்படாமல் விலக என
நீடித்தது சில நேரம்

வெள்ளையாய் நீண்ட ஒளிரா குழல் விளக்கு
எப்படித் தெரிந்ததோ அதற்கு
அதன் மேல் அடைக்கலமாக
பிரயத்தனப்பட்டது

பின் 
குளிரூட்டும் மின்கருவியின் 
முன்சென்று அதன் சிறுகாற்றில் ஏமாந்தது

எப்படிப் புரிய வைப்பேன்
நானதை தோட்டத்தில்
மறுபடி திரிய வைக்க 
முயற்சிப்பதை

எங்கெங்கோ அலைபட்டு
என் கையில் சிக்கியது 
கடைசியாக

வெளி வெயிலில் 
பறக்க விட்டேன்

விரலழுத்தத்தில் சிறு கசங்கலோடு
தட்டுத்தடுமாறி
பறந்து சென்றது வெளியே..

ஆள்காட்டி விரலிலும்
கட்டை விரலிலும் 
தன்னிருப்பை
விட்டுச் சென்றிருக்கிறது நிறமாக.


Saturday, October 22, 2011

அடைக்கலம்




ஒருவரையொருவர் அடைகாத்தபடி
அரவணைத்தலில்
இருப்பதையே நாம் விரும்புகிறோம்

அன்பின் அதீதத்தில்
திளைக்கிறோம்
அணைப்பு அவசியமாகி விடுவதால்
வேறெதிலும் இல்லாத
பாதுகாப்புணர்வை நாம் பெறுகிறோம்

அணைத்தலில் விலகுகிறது
பயம்

உலர்ந்த மார்புக் காம்புகளில்
உதடுகளின் ஈரம் நெகிழ்த்துவதைப்போல
ஒரு அணைப்பு
போதுமானாதாயிருக்கிறது
எல்லாவற்றுக்கும்

அதிருப்தி
கோபம்
நியாயம்
ஒழுங்கு
எல்லாவற்றையும்
சரி செய்து விடுகிறது ஒரு அணைப்பு

அணைத்திருப்பதிலிருந்து
விலகியிருப்பதாய் தோன்றும்
கணங்களில்
பேசும் எல்லாமே
கசப்பானதாயிருக்கிறது

*

பொன்.வாசுதேவன்

Friday, October 21, 2011

அற்ற பொழுதுகள்



நீள்வெக்கையின் பேரோலத்தில்
தவித்துப் பொழிந்த
மழை பட்டுத் தெறிக்கிறது
காத்திருத்தலின் இதமான உஷ்ணம்

நழுவிக் கொண்டிருக்கும்
பொழுதுகளையெல்லாம்
சேகரிக்கிறது நீயற்ற அறையின் வெறுமை

இரவை நீளமாக்கி
பகலை கனவுகளாக்கி
சகதியில் காலழுந்த விரையும் ஈரக்குதிரையாய்
வெட்கத்தில் வழவழத்துச் சறுக்கி
விளையாடிக் கொண்டிருக்கிறது
கனிந்த நினைவுகள்

இரை செரிக்கும் பாம்பின் வன்மத்தோடு
சாதுர்யமாய் பிணைக்கிற
உன் நினைவுகளை
உடல் நெளியக் கிடத்துகிறேன்
மின்மினிகளாய் கண்ணில் நீயலைய.




பொன்.வாசுதேவன்

Friday, October 7, 2011

போராட்ட காலத்தில் காதல் - அ.மார்க்ஸ்

கார்சியா மார்க்வெசின் ‘காலரா காலத்தில் காதல்’ எங்களைப் போன்ற இளைஞர்களை அந்தக் காலத்தில் கவர்ந்த நாவல்களில் ஒன்று. அதன் மேலோட்டமான எளிமையிலும், உக்கிரமான காதலிலும் மயங்கி ஏமார்ந்து விடாதீர்கள் என மார்க்வெசே எச்சரித்திருந்தும்கூட அந்த மேலோட்டமான எளிமை என்கிற பொறியில் வேண்டுமென்றே வலிந்து    சிக்கி அதை ஒரு காதல் காவியமாக நாங்கள் ரசித்திருக்கிறோம். காதலுக்குள் எல்லோரும் பைத்தியந்தான். முட்டாள்கள்தான். இந்த முட்டாள்தனத்தையும் பைத்தியக்காரத்தனத்தையும் பகுத்தறிவின் தர்க்கத்தில் இயங்கும் சமூகம், குடும்பம், சாதி முதலான நிறுவனங்கள் ஏற்பதில்லை. வரலாறு முழுவதும் இந்த முரணே காதல் காவியங்களின் அடிப்படையாய் இருந்து வந்துள்ளது.


இன்று இப்படியான ஒரு முரணுக்குப் பலியாகியுள்ளார் 12 ஆண்டு காலமாகச் சோறும் தண்ணீரும் இல்லாமல் இந்திய அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இரும்புப் பெண்மணி இரோம் சானு ஷர்மிலா. இந்திய அரசியலை மேலோட்டமாகக் கவனித்துக் கொண்டு வருபவர்களுக்குக் கூட ஷர்மிலாவைத் தெரிந்திருக்கும். கடந்த 31 ஆண்டுகளாக இந்திய அரசு மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பல ஆண்டுகளாகக் காஷ்மீரிலும், தற்போது மாவோயிஸ்ட்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பகுதிகளிலும் அமுல்படுத்தி வரும் ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்’ தை(அஃப்ப்சா- AFPSA) மணிப்பூரிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காக அவர் இந்தப் போரட்டத்தை நடத்தி வருகிறார்.  எந்த ஒரு பயங்கரவாதச் செயல் அல்லது அதிரடி நடவடிக்கையாலும் ஈர்க்க இயலாத அளவிற்கு உலகின் கவனத்தை இந்தப் பிரச்சினையின் மீதும், மணிப்பூர் மக்களின் போரட்டங்களின்மீதும் தனது அமைதி வழிப் போராட்டத்தின் மூலம் ஈர்த்தவர் அவர்.

இரக்கம் மிகுந்த இந்திய அரசு ஷர்மிலாவைச் சாகவிடவில்லை. 12 ஆண்டுகளாக அவரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அவரை யாரும் எளிதில் சந்திக்க முடியாது. உள்துறை அமைச்சரின் அனுமதி பெற்றுத்தான் சந்திக்க முடியும். மணிப்பூரிலுள்ள ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு மூக்கில் ஒரு ப்ளாஸ்டிக் குழாயைச் செருகி வயிற்றுக்குள் கட்டாயமாகத் திரவ உணவைச் செலுத்தி அவரை ‘உயிருடன்’ வைத்துள்ளது. நாசித் துளையிலிருந்து நிரந்தரமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக் குழாய், சீவப்படாத சுருண்ட கேசம், ஊடுருவும் கண்கள்  இவற்றுடன் இன்று அவர் ஒரு icon (திரு உரு) ஆகியுள்ளார்.


கதை எழுதுதல், யோகாசனம் பயிலுதல், நீதிமன்றத்திற்கும் மருத்துவமனைக்குமாக அலைக்கழிக்கப்படுதல், மெல்லிய குரலில் தன் உறுதியை வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் வெளிப்படுத்துதல் என்று வாழ்ந்துகொண்டுள்ள ஷர்மிலாவின் உடல் உள் உறுப்புகளெல்லாம் உளுத்துப் போய்க்கொண்டுள்ளன. இப்போது அவருக்கு 38 வயது. உண்ணா விரதத்தைத் தொடங்கியபோது 26. அவரது ஆரோக்கியத்தின் அடையாளங்கள், பெண்ணுடலின் அடையாளமான மாத நிகழ்வு உட்பட, இன்று எதுவும் காணக்கூடியதாக இல்லை.

இந்திய மனித உரிமைப் போராளிகளால் கடுமையாக எதிர்க்கப்படும் இந்த ‘அஃப்ப்சா’ சட்டம் இராணுவத்திற்கு அபரிமிதமான அதிகாரங்களை வழங்குகிறது. யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். எந்த வீட்டுக்குள் வேண்டுமானாலும் நுழையலாம். சுட்டுக் கொல்லலாம். பெண்களாயின் அவர்களை ஒரு இராணுவம் என்னென்னவெல்லாம் செய்யுமோ, அவ்வளவ்வையும் செய்து பின் கொல்லலாம். இதற்கெல்லாம் எந்தக் காரணத்தையும் அவர்கள் சொல்ல வேண்டியதில்லை. வெறும் சந்தேகமொன்றே போதும். செய்தது தவறு என எத்தனை மனித உரிமை அமைப்புகளும், விசாரணை ஆணையங்களும் சொன்ன போதும் காரணமான இராணுவத்தினரை யாரும் தண்டிக்க முடியாது.1980 தொடங்கி 2004வரைக்குமே 24,000 பேர்களை இராணுவம் இவ்வாறு கொன்றுள்ளது.

2004ல் தங்கம் மனோரமா என்கிற பெண் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இராணுவ நிலையமான காங்லா கோட்டை முன்பு மணிப்பூரி அன்னையர், ‘இந்திய இராணுவமே எங்களை வன்புணர்சி செய்’ என்று எழுதப்பட்ட துணியுடன் நடத்திய நிர்வாணப் போராட்டம் எல்லோரையும் தலை குனியச் செய்தது- இந்திய அரசைத் தவிர.


2005ல் இச்சட்டப் பிரிவுகளைக் கடுமையாகக் கண்டித்து  அளிக்கப்பட்ட நீதியரசர் ஜீவன் ரெட்டி ஆணைய  அறிக்கை, இச்சட்டத்திற்கு எதிராகச் சென்ற அண்டு காஷ்மீர் இளைஞர்கள் நடத்திய கல்லெறிப் போராட்டம் எதற்கும் மசியாமல் இன்னும் கோலோச்சுகிறது அஃப்ப்சா சட்டம்.

அப்படித்தான் 2000ல் ஒரு நாள். மணிப்பூர் தலைநகரான இம்பாலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள மலோம் என்கிற இடத்தில் இந்திய இராணுவம் பத்து அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுச் சாய்த்தது. அடுத்த நாளிதழ்களில் சிதைந்த சடலங்களின் புகைப்படங்களைப் பார்த்த ஷர்மிலா ஒரு முடிவுக்கு வந்தார். இறை பக்தி மட்டுமின்றி காந்தியடிகளின் மீதும் பக்தி கொண்ட அவர், அம்மா இரோம் ஷகியிடம் சென்று ஆசி பெற்று வந்து உண்ணா நிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அண்ணா ஹஸாரே போல ஏகப்பட்ட ஊடக, கார்பரேட், மற்றும் மத்திய வர்க்க ஆதரவோடு தொடங்கப்பட்ட போராட்டமல்ல அது. ஒரு ஏழை நான்காம் நிலை ஊழியர் ஒருவரின் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு இளம் பெண் தன் மனச்சாட்சியின் உந்துதலால் தன்னந்தனியாக எடுத்த முடிவு அது. தனது உடலைத் தவிர வேறு சொத்துக்களோ, ஆயுதங்களோ, விளம்பரங்களோ இல்லாத அந்தப் பெண் தன் உடலையே ஆயுதமாக்கிக் களம் இறங்கினாள். சாகும்வரை உண்ணாவிரதமென அவள் சொல்லவில்லை. அஃப்ப்சா சட்டம் நீக்கப்படும் வரை என்றுதான் சொன்னாள். இந்திய அரசைப் புரிந்து கொண்டவர்களுக்கு ஒருவேளை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தோன்றலாம்.

மணிப்புரி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் உலகளவில் தெரிவதற்கு ஷர்மிலாவின் இந்தப் போராட்டம் பெரிய அளவில் காரணமாகியது. போராட்டக்காரர்கள், இயக்கத்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர் எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஷர்மிலா ஒரு icon ஆனார். முப்பதுக்கும் மேலான சிவில் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பான ‘அபுன்பா லுப்’ உள்ளிட்ட அமைப்புகள் ஷர்மிலாவை முன்வைத்து தமது போராட்டத்தின்பால் உலகின் கவனத்தை ஈர்த்தன.

ஷர்மிலாவின் 12 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்திற்குக் கிடைக்காத ஊடக ஆதரவு, அண்ணா ஹஸாரேயின் 12 நாள் உண்ணாவிரதத்திற்குக் கிடைத்தது குறித்த சர்ச்சை ஒன்று உருவான தருணத்தில்தான் ‘தி டெலிகிராஃப்’ நாளிதழின் கொல்கத்தாப் பதிப்பில் அந்தச் செய்தி வந்தது (செப் 2011). “இரோம் காதலைப் பற்றிப் பேசுகிறார்- உண்ணாவிரதப் போராளி காதலிக்கிறார், ஆதரவாளர்கள் எதிர்ப்பு”  என்கிற தலைப்பில் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது அச் செய்தி. சுருக்கம் இதுதான்:

உலகின் நீண்ட நாள் உண்ணாவிரதப் போராளி தான் காதலிப்பதாகவும், தன் காதலன் பொறுமையின்றிக் காத்திருப்பதாகவும், தன்னை அவர் சந்திக்க வந்தபோது தன் ஆதரவாளர்கள் தடுத்துவிட்டதாகவும் கூறுகிறார். “அவர்களின் எதிர்ப்பிற்குச் சில சமூகக் காரணங்களும் உள்ளன. என் காதலர் டெஸ்மான்ட் கூடினோ லண்டனில் குடியுரிமையுள்ள ஒரு  கோவா மாநிலத்தவர். அதனால்தான் அவர்கள் என் காதலை ஏற்கவில்லை. நான் எல்லோரையும் போல ஒரு சாதாரணப் பெண். ஒரு சூப்பர் ஹீரோவாக என்னை அவர்கள் பார்க்கக் கூடாது.”
48 வயது டெஸ்மான்ட் ஒரு எழுத்தாளர், மனித உரிமைப் போராளி. ஓராண்டு காலக் கடிதப் பரிமாற்றத்திற்குப் பின் சென்ற மார்ச்சில்தான் இருவரும் சந்தித்துள்ளனர். கடிதங்களைப் படுக்கைக்குப் பக்கத்தில் ஒரு பெட்டியில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளார் ஷர்மிலா. காதலர் பரிசளித்துள்ள ‘ஆப்பிள் மேக்’ கையும் பெருமையோடு காட்டுகிறார்.

“சென்ற மார்ச்சில் அவர் இங்கு வந்திருந்தபோது என் ஆதரவாளர்கள்  என்னைச் சந்திக்க விடவில்லை. அவரது ஒழுங்கற்ற தோற்றம், மனித உரிமைகள் பற்றிய பேச்சுக்கள் எதுவும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவரை அவமானப்படுத்தினார்கள், மிரட்டினார்கள். பெண்கள் தங்குமிடத்திலேயே அவர் காத்திருந்தார். இரண்டு நாட்கள் அவரும் உண்ணாவிரதமிருந்து போராடிய பின்பே என்னைச் சந்திக்க அவரை அனுமதித்தனர். அவர்களுக்கு இரும்பு இதயம்.”

மார்ச் 9 அன்று நீதிமன்றத்தில் தன்னைச் சந்திக்க வந்த டெஸ்மான்டிற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென நீதியரசரை வேண்டிக்கொண்டார் ஷர்மிலா. “இல்லாவிட்டால் அவரை அடித்தே கொன்றிருப்பார்கள். அவர்களுக்கு எங்கள் உறவைப் புரிந்து கொள்ள முடியாது. அற்ப புத்தி உடையவர்களாக உள்ளனர்.”

டெஸ்மான்ட் எல்லோரையும் போல ஒரு காதல் பைத்தியம். “காந்தியிடம் அவர் மனைவி நடந்துகொண்டதுபோல நான் ஷர்மிலாவிடம் நடந்து கொள்வேன். அவளது காரியங்களுக்குத் துணையாய் இருப்பேன். நான் ஒரு மகாத்மாவைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். அந்த வாழ்வு அவ்வளவு எளிதாக இராது என நான் அறிவேன்” – இது டெஸ்மான்ட்.

டெலிகிராஃப் பத்திரிக்கையாளர் புறப்படும்போது, “எப்போது திருமணம்?” எனக் கேட்டார். “எனது கோரிக்கை நிறைவேறிய பின்புதான் திருமணம் செய்துகொள்வேன்” எனப் பதிலளித்தார் இரோம் ஷர்மிலா. அதாவது இந்திய அரசு அஃப்ப்சா சட்டத்தைத் திரும்பப் பெற்ற பின்பு.

இந்த நேர்காணல் மணிப்பூரில் ஒரு மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. ஷர்மிலாவின் ஆதரவாளர்களும், இயக்கத்தவர்களும் கொதித்தெழுந்தனர். செல்வாக்கு மிக்க அபுன்பா லுப் அமைப்பு, நேர்காணலை வெளியிட்ட டெலிகிராஃப் நாளிதழை மணிப்பூரில் தடை செய்தது. இந்தச் செய்திக்குப் பின் மிகப் பெரிய சதி இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ‘கோர்’ என்னும் தொண்டு நிறுவனம், புகழ்பெற்ற இயக்கவாதி பப்லு லோய்டோன்பாம் ஆகியோரின் கடுமையான விமர்சனங்களை இணையத் தளங்களில் காணலாம். “போராளியின் தனிப்பட்ட வாழ்வை ஏன் இவர்கள் பேசுகிறார்கள்? அண்ணா ஹஸாரே அல்லது காந்தியின் தனிப்பட்ட வாழ்வு அக் காலங்களில் பேசப்பட்டதா? அஃப்ப்சா சட்டத்திற்கெதிரான போராட்டத்தை இவர்கள் பலவீனப் படுத்துகின்றனர்” – என்கிற ரீதியில் இவ் விமர்சனங்கள் அமைகின்றன. இது இந்திய அரசின் ‘காதல் சதி’, டெஸ்மான்ட் ஒரு உளவாளி என்கிற அளவில் கருத்துக்கள் கசியவிடப் படுகின்றன.

இன்னொரு பக்கம் ஷ்ர்மிலாவைத் திருஉருவாக்கித் தம் போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தேடியவர்கள், “எங்கள் போராட்டம் 90 களில் தொடங்கியது. ஷர்மிலா 2000த்தில்தான் வந்து சேர்ந்து கொண்டார். அவர்தான் எங்கள் ஆதரவாளரே ஒழிய, எங்களை அவர் ஆதரவாளராகச் சுருக்கிப் பார்க்கக் கூடாது” என்றும் பேசத் தொடங்கியுள்ளனர்.

எனினும் இவர்களால் ஷர்மிலாவின் காதல் ‘கதையைப்’ பொய் என நிராகரித்துவிட முடியவில்லை. டெலிகிராஃப் இதழில் வந்த அத்தனை செய்தியும் அவர் வாயால் சொல்லப்பட்டு என்.டி.டி.வி யில் ஒளிபரப்பாகியுள்ளது. தவிரவும் யாரும் அவரைச் சந்தித்து இது குறித்துக் கேட்டுவிட முடியும்.

டெலிகிராஃப் நாளிதழும் அப்படியொன்றும் போராட்டத்திற்கு எதிரானதல்ல. ஷர்மிலாவின் உண்ணாவிரதத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்ததுதான். இந்தச் செய்தி ஒரு மிகப்பெரிய ‘ஸ்கூப்” ஆக இருக்கும் என்கிற நோக்கிலேயே முதல் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளது என்றே தோன்றுகிறது. அதற்காக இதழையே தடை செய்வது என்பதெல்லாம் என்ன நியாயம் என்கிற கண்டனம் பல தரப்புகளிலும் வந்துள்ளது. அரசியல் நோக்கம், இறுதிக் குறிக்கோள், அரசியல் கறார்த்தன்மை (political correctness) என்பதெல்லாம் எந்த மக்களுக்காகப் போராடுகிறார்களோ அந்த மக்களின் அடிப்படை உரிமைகளையே, காதல் உரிமை, கருத்துரிமை உட்பட நசுக்குவதை நியாயப் படுத்துவது குறித்த ஒரு விவாதம் இன்றைய தேவையாக உள்ளதைப் பலரும் உணர்கின்றனர்.

ஷர்மிலா கற்பனை செய்து பார்க்க இயலாத மிகப் பெரிய தியாகத்தைச் செய்தவர்.  இப் போராட்டம் உலகறியச் செய்யப் பட்டதில் அவரது பங்கு மிக முக்கியம். இன்றும் கூட அவர் தன் கொள்கையையே முதன்மைப் படுத்தி நிற்கிறார். ஒருவேளை அவர் தன் காதலருடன் இணைந்து வேறு வடிவங்களில் இப் போராட்டத்தைத் தொடர விரும்பினால், மிக்க கண்ணியத்துடன் அதை ஏற்று அவருக்குத் துணை நிற்பதே நாம் அவருக்குச் செய்யும் நியயமான மரியாதையாக இருக்க முடியும்.

                      [இந்நிகழ்வையும் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில்     நிகழவிருந்த இலை உதிர்கால இலக்கிய விழாவிற்கு ஏற்பட்ட நியாயமான எதிர்ப்பையும் இணைத்து எழுதப்பட்ட விரிவான கட்டுரையை (‘போராட்ட காலத்தில் காதலும் கவிதையும்) அக்டோபர் 2011 தீராநதி இதழில் காணலாம்’.]

Friday, September 9, 2011

‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை' -என் பார்வையில்' - கார்த்திகா வாசுதேவன்




‘‘சன்டேன்னா ரெண்டு“ இந்த விளம்பரத்துக்கு சற்றும் சளைக்காத ஆர்வம் தரவல்ல "ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை " எனும் தலைப்பை தனது கவிதைத் தொகுப்பிற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார் நண்பர் கவிஞர் பொன்.வாசுதேவன். கவிதைகளின்பால் ஈர்ப்போ, கவிதைப் புத்தகம் வாசிக்கும் முனைப்போ இல்லாதிருப்போரையும் கூட அப்படி என்னதான் இருக்கிறது புத்தகத்துக்குள் என ரகசியமாய் எட்டிப் பார்க்கச் செய்யும் தலைப்பு.

தன்னைத்தானே பின் தொடரும் நிழலசைவாய் பின்புற அட்டை வாசகங்களுக்கொப்ப ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி..

"வாதையே உணராமல்தன்னுடலில் விசையூட்டிமெத்தென்றுமதில் சுவருக்கும் தரைக்குமிடையேபறந்தது போல் வந்தமரும் வித்தை கற்றுக்கொண்ட பூனைகளாய்"

சப்தங்கள் அடங்கியதும் சலனங்கள் மட்டுப்பட்டு உறங்கும் நதியைப் போல, அசைந்தும் அசையா அசைவில் தன்னகத்தே கேள்விகளைக் கேட்டும் கேளாமல் பதில் தெரிந்த மெத்தனத்தில் அலட்சியமாய் மிதந்து நழுவும் கவிதைகள்.

தொகுப்பின் ஈற்றுக் கவிதையாய் அவரே பகர்ந்தபடி,

குரல்களற்ற மனவெளியில்மீண்டும் மீண்டும் வாசித்துஉறுதிப்படுத்திக் கொள்ளத்தக்க விசேஷங்கள் அற்ற விசேசமான கவிதைகள்.

வாழ்வின் பிரத்யேக தருணங்கள் அத்தனையையும் கனவுகள், ப்ரியங்கள், ஆசைகள், நிராசைகள், வாதைகள் எனும் வகைப்பாட்டில் அடக்க முயன்று தனித்தொரு வெளியில் மிதந்து கொண்டே நகரும் கவிதைகள். மொத்தம் 87 கவிதைகளில், முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்தவற்றை மட்டும் இந்தக் கட்டுரையின் ஊடே தந்து செல்கிறேன்.


இருப்பு :

"உண்மை தான்வேறு வழியில்லை
என்று தான்விட்டு விடவும்வெட்டித் தள்ளவும்
வேண்டியிருக்கிறதுநகங்களை"


தமதிருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியாமல் வெட்டுப் பட்டும், கடித்து துப்பப்பட்டும் அப்புறப்படுத்தப்படும் நகங்களுக்கும், தானே உதிரும் கூந்தல் இழைகளுக்கும் கூட இருப்பென்ற ஒரு ஸ்தானம் சில காலம் உண்டுதான். நானுமிருக்கிறேன் என்பதைக் காட்டுவதான ஞாபகப்படுத்தலுக்கு ஒப்பாக கூராகவும், வளைந்தும் வளர்ந்து காட்டி வெட்டுப்படும் நகங்கள், உதிர்ந்து காட்டும் மயிர்கற்றைகள் போல மனிதர்களிலும் பலர் இருப்பைக் காட்டிக் கொள்ள ஏதாவதொன்றை செய்துதான் தீர வேண்டியிருக்கிறது.


பிரயாணம் எனும் தலைப்பில்,

"கவிழ்த்துக் கொட்டிய தவளை
மூட்டையெனரயிலை விட்டு
அவசரமாய்வெளியேறியும்
உள்நுழைந்த படியும்இருக்கின்றனர்
மனிதர்கள்"

மக்கள் நெரிசல் நேரக்காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரயில்களில் பயணிக்கும் பெரும்பேறு பெற்ற ஆத்மாக்களின் அள்ளித் தெளித்த அவசர அவஸ்தை நகர்வுகளை வீடியோவில் ஃபாஸ்ட் பார்வர்ட் செய்தால், அவிழ்த்து விட்ட தவளை மூட்டைகள் தான், இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே தொடராதா? என்றெல்லாம் பாட்டுக் கேட்டுக் கொண்டு பயணிக்கும் ஆசைகளை பழித்துச் சுளுக்கி நசுக்கிப் பிழியும் நகரத்து இடப்பெயர்ச்சிகள் நெரிசல் நேரத்து ரயில் பயணங்கள். அந்த நிமிடங்களை கற்பனை செய்ய இந்த வரிகள் வெகு பொருத்தம்.

மனமொளிர் தருணங்கள் எனும் தலைப்பில் ஒரு கவிதை.

"தளர்ந்து இறுகும்சிறகுகள்
அசைத்துக்கால் புதைய காற்றில்நடக்கிறது
ஒரு பறவை

என்னை
நானேஅருந்தி ரசிக்கும் தருணம் அது
காற்று உதிர்த்தபறவைச் சிறகின்
கதகதப்பைக்கைப்பற்றி
கன்னம் வைத்து அகமகிழ்கிறேன்
தூரத்தில் சென்று கொண்டிருக்கிறதுபற
வைஉதிர்ந்த சிறகு குறித்த
கவலையேதுமற்று"

மொத்தமுள்ள அத்தனைக் கவிதைகளிலும் மிகப் பிடித்து போன கவிதை இது. நீளும் பாலைவனத்தில் துடுப்பாய் சிறகசைத்துத் தடுமாறிக் கால் பதித்து எதிர் காற்றில் தத்தி நடக்கும் சிறு பறவையின் காட்சி வெகு உற்சாகம் அளிக்க வல்லது, கிட்டத் தட்ட வாழ்வில் எதிர் நீச்சலிட சலிக்காத மனித எத்தனங்களும் பிரயத்தனங்களும் பறவையின் ஒற்றை அசைவில் உணர்ந்து கொள்ளப்படுதல் இதில் சாத்தியமே. வெகு அழகான அர்த்தம் தரும் கவிதை இது.

சொல்ல இருக்கிறது காதல் எனும் தலைப்பில் :

நூற்கண்டின் முனை எனப் பற்றிசூரியக்
கதிர்களைஇழுத்தோடும் ரயிலொன்றின்ஜன்னலோர
இருக்கையில்என்னோடு
பயணப் படுகிறதுஉன்
நினைவுகள்
இருட்டத் தொடங்கியதன்
அவதானிப்பில்வேகமாய் கூடடையும்பறவையின்
அவசரத்துடன்எனக்கு
நானேசொல்லிக் கொள்கிறேன்
எனக்கும் காதல்இருந்ததுஇருக்கிறதுஇருக்கும்இவ்வாறெல்லாம் "

இந்தக் கவிதையில் தொனிப்பது யதார்த்த குப்பையில் காதலித்து மறந்தவன் அல்லது மறக்கடிக்கப்பட்டவனின் மீள் நினைவுகள், வீட்டுக்குள் அல்லது கூட்டுக்குள் நுழையும் முன் அவசர அவசரமாய் தனக்கே தனக்கென மட்டுமாய் ஆழ் குளத்தில் உறங்கிக் கிடக்கும் பிரதிக்காதல் ஒவ்வொன்றையும் ஒருமுறையேனும் சன்னமான குற்ற உணர்வோடு மீளப் பார்த்து நானும்தான் காதலித்திருக்கிறேன், காதலிக்கிறேன், என்னுள்ளும் காதலுண்டே எனக் காட்டிக் கொள்ளும், சமரசம் செய்து கொள்ளும் முயற்சி.

‘இறைமையின் மொழி‘ எனும் தலைப்பில்:

“இதழ்களின் இறுக்கம் தளர்த்தியதடங்களேதுமின்றிவனப்பாய்பூத்துக் கொண்டிருக்கிறதுஒரு மலர்
உள் மூழ்கி லயித்துவான் நோக்கிப் பார்க்கையில்முகத்தில் தெறிக்கிறதோர்ஒற்றை மழைத்துளி"

என்ன ஒரு அழகான வார்த்தைப் பிரயோகம். இறைவன் என ஒருவன் இருந்தான் எனில், அவன் கருணையை இதழ்களின் இறுக்கம் தளர்த்திய தடங்களேதுமின்றி பூத்துக் கொண்டிருக்கும் இந்த மலரோடு ஒப்பிடலாம். அவன் கருணையில் வழிந்து கசியும் ஏகாந்தத்தை இந்த மலரின் வனப்போடு ஒப்பிடலாம். பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும் உலர் மண்ணில் ஒற்றை மழைத்துளி பதங்கமாவதைப் போல விளம்பரப்படுத்திக் கொள்ள அவகாசமில்லாமலோ அல்லது அவசியமில்லாமலோ கொட்டிக் கிடக்கும் பிரபஞ்சப் பேரழகுகள் எல்லாவற்றையும் ரசிக்கத் தான் தெரிந்திருக்க வேண்டும்.

‘என்னிடம் வந்த இந்த நாள்‘ எனும் தலைப்பில் ஒரு கவிதை ;

“தாழப் பறந்தும் கையில்
சிக்காதவிருப்பப் பறவையாய்கொஞ்சமும்
இரக்கமில்லாதுகடந்து செல்கிறது இந்த நாள்
பிரிவுத் துயரின் நீர்த்தாரை வழியஇன்றிருந்த
நாளேதொடர வேண்டுமென இறைஞ்சுமென்னிடம்"

அனுமதிக்கப்பட்ட அளவுகளையும் கடந்து எல்லையில்லா உவகையையும், உல்லாசத்தையும் ஒருங்கே ஊட்டிய கணங்களைக் கொண்ட ப்ரியத்துக்குகந்த ஒருநாளின் அந்தி நேரம் மிகுந்த ஏக்கம் தரவல்லது, பிரியப் போகும் நண்பனுக்காய், விடை பெற்றுக் கொள்ளப் போகும் காதலிக்காய், கூடிப் பேசி சிரித்துக் கலையும் தோழமைகளின் பிரிய விரும்பாத கையசைப்பிற்காய் அந்த நாள் முடியாமல் நீளக் கூடாதோ! பிரியப்பட்ட ஜனங்களின் ப்ரியம் சுமந்த மனதின் ஏக்கம் வரிகளில் தெறிக்கும் பரல்கள் நீக்கப்பட்ட ஊமைச் சலங்கையின் தனித்த கீதங்கள்.

‘பிரியத்தில் விளைந்த கனி‘ எனும் கவிதை :

"பிரியத்தின் பொருட்டேஉனக்குள்
என் வாழ்வுபூரணமடைந்திருக்கிறது "

தாமாக வலிந்து செய்து கொண்ட சமாதானங்களின் பின்னே உறைந்து போன மனைவி எனும் முகமூடிகளுக்குள் சுயம் மறக்கடித்துக்கொண்டு சிரித்தால், சிரித்து அழுதால், அழுது கட்டுப்பாட்டில் இயங்கக் கற்றுக் கொண்ட மனைவிக்கு அவளை உணர்ந்தாலும் ஏதும் செய்யவியலாத அல்லது செய்ய விரும்பாத கணவனின் வெற்றுச் சமாளிப்பாகத்தான் வார்த்தைகளாக இந்த வரிகளை எடுத்துக் கொள்ளலாம், ப்ரியம் எனும் புழுவில் மாட்டிக்கொண்ட மீன்கள் தான் மனைவிகளும் கணவர்களும்.

வாதையின் கணங்கள் :

"நீர்களற்ற கிணற்றின்உள்சுவற்றில்
படர்ந்து கிளைத்திருக்கும்சிறு மரத்தில்
தனித்துக் கூடு கட்டிஆனந்தமாய்
அங்கு மின்குமாய்குறு குறுவென
சுற்றித் திரிகிறதுகுருவி

திசை தொலைத்தது போல்சுற்றித்
திரிகிறது வண்ணத்துப் பூச்சிபூத்துதிராமல்
தேன் சுமக்கின்ற மலர்அடையாளம் தனித்துக்
கண்டுமென்மையாய் அமர்ந்து
முன்காம்பு நீளச் செய்துஉறுஞ்சுகிறது
மலருக்கு வலிக்காமல்

வாதையின் கணங்களில்
எழும் வார்த்தைகள்விழிகளில்
திரண்டுஉருக்கொண்டு வழிகிறதுஎழுத்துத் திரவமாய் "

இந்தக் கவிதை வெறும் வார்த்தை எல்லைகளைக் கடந்து இதமான குறும்படத்தை பார்த்துக் களித்த திருத்தி அளிக்கவல்லது. கற்பனையில் ஓட்டிப் பார்த்தால் விரியும் நிழற் படங்களில் அத்தனை மென்மை. அவஸ்தை என்ற சொல்லுக்கினையான வாதை மிக்க கணங்களை இதை விட அருமையாக சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.

அடை எனும் தலைப்பில் ஒரு கவிதை :

அருகில் திரும்பிப் படுத்தணைத்துஉன் இறால் குஞ்சு விரல்களைக்கைகளுக்குள்
அணிந்துபதுங்கிப் பதுங்கிஅழைத்துச் செல்கிறேன்
புட்டம் உயர்த்தி கால்கள்
மடிந்துகுப்புறப் படுத்துநீதூங்கும்
திசையெலாம்பரவியபடி கசிகிறதென் அன்புவெளிதனிமை உமிழ்ந்தயோசனையின் எச்சமாய்இன்னும் வெகு தூரம்செல்ல வேண்டியிருக்கிறதுஉன்னைப் பாதுகாக்க "

வாசு எதைக் குறிப்பிட்டு இந்தக் கவிதையை எழுதினாரோ இதை வாசித்ததும் நான் உணர்ந்தது இதைத்தான். யாருமற்ற வீட்டில் தனித்திருக்கும் தாயும் அவளது பால்மணம் மாறாக் குழந்தையும். அடைகாக்கும் பொறுப்பு தந்தைக்கும் உண்டெனினும் அடைகாக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுக்க மனமுவந்து ஏற்றுக் கொண்டவளாகிறாள் அம்மா. பிறந்த குழந்தைக்கு அருகில் படுத்துக்கொண்டு மெல்ல அதன் கை தடவி கால் தடவி மாம் பிஞ்சு விரல் நீவி பூனைக் கதகதப்பாய் வலிக்குமோ வலிக்காதோ என்றேந்திக் கொண்டிருக்கையில் உள்ளூர எப்போதுமிருக்கும் இந்த அடை காக்கும் தவிப்பு. பிறந்து மண்ணில் விழுந்த கணம் தொட்டே பெற்றவள் முன்வந்து வாங்கிய தீட்சை போல் அன்பு வெளியெங்கும் கசியும் யோசனைகளில் நீள்வதென்னவோ யுகம் தோறும் பெற்றுக் கொண்டதை பாதுகாக்கும் பயணங்கள்தாம்..


‘தொடங்கி இருக்கிறோம்‘ எனும் கவிதை:

"எனக்குள் பூத்த ஆண்டாளைபறித்தெடுத்து சூடிக் கொண்டிருக்கிறேன்எதற்கெனத் தெரியாமல் "

எதற்கென்றே தெரியாமல் சில வரிகள் பிடித்துப்போகலாம் அப்படி ஒரு வரி இது..போலவே மறக்கயியலாத ஒரு வாழ்வனுபவத்தை இந்தத் தொகுப்பெங்கும் வரைந்திருக்கும் பொன்.வாசுதேவனுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை (கவிதைகள்) - பொன்.வாசுதேவன்

112 பக்கங்கள்

விலை : ரூ.70/-

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.

இணையத்தில் வாங்கிட ;
http://www.udumalai.com/?prd=&page=products&id=8808

நான் இறந்திருக்கிறேன்



வானமும் மேகமும் ஒன்றையொன்று 
அணைத்தபடியிருந்த
மழைக்கால காலை அன்றுதான் 
நான் இறந்திருந்தேன்

உறக்கத்திலாழ்ந்திருப்பது போலிருப்பதாக
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்

இரவுக்குளம் போல 
சலனமற்றிருக்கிறதாம் என் முகம்

யாரையெல்லாம் அழ வைத்தேனோ
அவர்களெல்லாம் அழுது கொண்டிருந்தார்கள்

அழுதழுது ஈரம் வறண்ட சில கண்கள்
வருவோர் போவோரைப் பார்த்தபடியிருக்கின்றன

பதட்டமேதுமின்றி 
பேசிய பேசாத கணங்கள் குறித்து
நினைவுகளைக் கீறியபடி
நின்றிருந்தனர் நண்பர்கள்

விழி தேயப் பார்த்தும்
மொழி சிணுங்கக் கொஞ்சியும்
உடல் மலர பிணைந்தும் 
மையல் கொண்ட காதலிகள்
வந்திருந்தும் வராமலிருந்தும்
வருந்திக் கொண்டிருக்கிறார்கள்

எதிர்பார்த்தது என்றும்
எதிர்பாராதது என்றும்
திணறித்திணறி கள்ளமாய்க் கசிகிறது பேச்சு

அறைக்குள்ளிருந்து என் நினைவுகள் குறித்து
பற்றிய கொடி பறிக்கப்படுகிற வலியோடு
புழுங்கிக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள்

நான் ரசிக்காமலே
அதிர்ந்து கொண்டிருக்கிறது பறை

ஓய்ந்து கிடக்கிறேன் நான்.


பொன்.வாசுதேவன்

Friday, August 26, 2011

சிறகுந்திப் பெயர்ந்து சேர்ந்த காதை


உந்துதலுக்குட்பட்ட விசை வாகனமாய் மனது மட்டும் விரைந்து கொண்டிருந்தது. இயல்பாய், இடையீடாய் என பலப்பல தாமதங்கள், என்ற போதிலும் எப்படியாகிலும் சென்றடைய வேண்டும் என்ற பேராவலுடன் ‘ழ‘வைச் சென்றடைந்த போது எட்டு மணியாகி விட்டது. நட்பூக்களை அணுகி அண்மையை உணர்த்தி, அன்பைக் கசிந்து, வதந்திகளுக்கும், யூகங்களுக்கும் பதில் சொல்லிப் பின் முதல் வாசகர்களில் ஒருவரான கார்த்திகைப்பாண்டியனிடம் ‘வலசை‘யடைந்தேன். மேலோட்டமான பக்கப் புரட்டுதலும், நடைமுறைச் செலவு, பிரதிகள் என்றும் சிறிது நேரம் நீண்டது. விடை பெற்றுப் புறப்பட்டு இரவு மணி 11.45க்கு வழக்கம்போல மனைவின் அகச்சுணங்கலை சமாளித்தபடியே வீட்டினுள் நுழைந்து, குளித்து இளைப்பாறி, 12.15க்கு வலசையில் புகுந்தேன்.
வேறு
எழுதுபவன் கனவுகளும் ஏக்கங்களும் உடையவன். இவ்விரண்டும் அவனை எப்பொழுதும் துரத்திக் கொண்டேயிருக்கிறது. எழுதுவதற்கான திரியை நிமிண்டிக் கொண்டிருப்பது இதுதான். ஒரு சாகசச் செயலுக்கு ஒப்பான இதை செய்ய முற்படுகிற வேளையில் தீர்மானங்களும், கிலேசங்களும் ஒரு ஓரமாக உட்கார்ந்து அவனை தார்க்குச்சியால் குத்திக் கொண்டேயிருக்கின்றன. இதில் சிறிது பிசகினாலும் தோற்றப்பிழையை அவன் வாசகனுக்கு தந்துவிட நேரும் அபாயம் இருக்கிறது. பழக்க அடிமைகளாகிப் போய்விட்ட சராசரி ஜென்மங்களாய் இருந்தாலும் நமக்குள்ளெழும் அடையாளச் சிக்கல், இதை இப்படித்தான் நான் தரவேண்டும் அல்லது இதை நான் இப்படித் தருவதைத்தான் என்னை உற்று நோக்குகிறவர்கள் விரும்புகிறார்கள் என்பதான கற்பிதங்களை புகுத்திக் கொள்கிறோம்.

இதுவுமது
நீள் புனைவுகள் தவிர்த்து வேறெதையும் பின்னட்டையிலிருந்து வாசித்தேப் பழகிவிட்ட எனக்கு உப்புறையும் சப்தம் தெளிவானதொரு அறிமுகமாக இருந்தது. வாசிக்கத் துவங்கி தொடர்ந்த வேளையில், வெற்றிடத்தை நிரப்பி அரூபமாய்த் தன்னிருப்பை உணர்த்திக்  கொண்டிருக்கும் காற்றாக, அழுத்தம், மந்தம், அடர்த்தி, அபத்தம், எள்ளல் என கலவையான உள்ளுணர்வுகள் எழுந்தபடியிருந்தது.
வேறு
அயத் அல்-கெர்மேசி-யின் வலைத்தளத்தில் ‘சாத்தானுடனான உரையாடல்‘ குறித்து ஏற்கனவே வாசித்திருந்ததால், அணுக்க மொழி மீள்வாசிப்பில் எளிதில் ஜீரணித்துக் கொள்ள முடிந்தது. ஜோஸ் சரகோமாவின் ‘பார்வையின்மை எளிதான மொழிபெயர்ப்பில் ஈர்ப்பு கூடச் செய்தது. Tuesdays with Morrie இதன் சில அத்தியாயங்களினை மட்டும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு வாங்கி இன்னமும் படிக்காத புத்தகங்களில் இதுவும் ஒன்று. இதன் பெயர்ப்பு ஆக்கத்தை இப்பொழுது வாசிக்கவில்லை. அசலை வாசிக்க விருப்பம். முருகபூபதி, தருமியின் மொழியாக்கங்கள் இன்னபிற முதல் வாசிப்பில் மட்டுமே இருப்பதால் மீள்வாசிப்புக்கு உட்படுத்திய பின்புதான் அதன் வாசிப்பு குறித்து முழுமையுற இயலும்.
வேறு
அபராஜிதனின் செவ்வியை குறளிக் குரல் உள்ளீடாக வாசிக்கையில் நேசனின் இயலெதிர்ச் செயலான எளிய மொழிப் பிரயோகமும், அபராஜிதனின் தொன்ம அனுபவங்களின் சாரமாக வெளிப்பட்டுள்ள கருத்துகளும் மிகப் பிடித்தமானதாகவும், வாசிக்கையில் நெருக்கமானதாகவும் இருக்கிறது. முதல் வலசையில் நிகழ்ந்த ஆகச்சிறந்த ஓட்டுக் கருவாக்கம் இதுவென்று தோன்றுகிறது.
இதுவுமது
விதூஷ் நேர்காணல். அறியாததொரு புதுமுகத்தை காணத் தருகிறது. சாகசமோ, சாதனையோ என எந்த பாவனையுமற்று இயல்பாகவே அவரது எழுத்துக்களை அடையாளம் கண்டு கொண்டவன் நான். திறமையும், திமிரும் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமானவை என்பதை அறிவேன். அவ்வகையான உருவகம் ஏதுமற்று வாசிக்க ரசிக்க முடிகிற ஒருவர் விதூஷ். செவ்வியின் வாயிலாக அவரைப் பற்றிய புதிய செய்திகளை அறிந்து கொண்டேன். பிரதி பெயர்ப்பாளன் எப்படி மூலப்பிரதியை சிதைக்காமல் சிரத்தையோடு செய்ய வேண்டும் என்பது ஒரு கலை. கிட்டத்தட்ட செயற்கைக் கருவாக்கம் போல. உயிரும் கொடுக்க வேண்டும். அது வேறொருவருக்கானதாகவும் இருக்கும். விதூஷ் செவ்வியில் நெருடிய விஷயம் பல ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் பிரயோகித்திருப்பதுதான். எளிதில் புழக்கத்தில் உள்ள தமிழ் வார்த்தைகள் பல இருக்கிற நிலையில் எழுத்துப் பெயர்ப்பு தேவையில்லாததாகப் படுகிறது. இதை தவிர்த்திருக்கலாம்.
எப்போதும் போல, மொழிபெயர்ப்புக் கவிதைகள் வறட்சியான உணர்வையே தருகின்றது. வாசித்தும் நிசப்தத்தையும், மௌனத்தையும் உள்ளுக்குள் ஏற்படச் செய்து உணர்வுகளை பூக்கச் செய்கின்ற மொழிபெயர்ப்புக் கவிதைகள் அருகி விட்டது. வாசிக்கின்ற வேளையில் கவிதையின் உள்ளாழ்ந்து எந்த யத்தனிப்புமற்று இருப்பின் தருணங்களை உணரச் செய்கின்ற மொழி பெயர்ப்புக் கவிதைகள் எங்கேயோ ஒளிந்து நீர்ப்பொதிந்த மேகங்களாய் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இது அசல் கவிஞனின் பிழையா அல்லது மொழி பெயர்ப்பாளரின் பொருட்டா என்றறிய இன்னும் சில கால அனுபவ வெளிகளுக்குள் முழுமையான பிரயாணம் எனக்குத் தேவை.
நிறை
வலசையில் என்னளவில் நான் திருப்தியுறாத விஷயங்களும் சில உண்டு. அதில் முக்கியமாக குறிப்பிட விரும்புவது, ஒவ்வொரு படைப்பின் தலைப்புக்கு கீழும் மூல ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு அதன் பிறகே பிரதியை மொழி பெயர்த்தவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். இதுதான் சரியான, நேர்மையான முறை. புத்தகத்தைத் திறந்ததும் நிரல் குறிப்பை அணுகின்ற வாசகனுக்கு இயல் ஆக்கம் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விட்டது. அதே போல படைப்புக்கான தலைப்புகளிலும் இது நிகழ்ந்து விட்டது. புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் மூல ஆசிரியர் பற்றிய குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை படைப்பின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் கொடுத்திருந்தால் படைப்பை அணுக எளிதாக இருந்திருக்கும்.
உதாரணத்திற்கு
சாத்தானுடனான உரையாடல் அயத் அல்-கெர்மேசி (தமிழில் ஸ்ரீ)
இப்படி இருந்திருக்க வேண்டும். குறிப்புகளில் ஆசிரியரின் பெயரை அவர்கள் மொழியிலேயே கொடுத்திருந்தால் மேலதிக வாசிப்புக்கு உதவக்கூடும்.
வரும் இதழ்களில் இதையெல்லாம் எதிர்பார்க்கிறேன்.

வலசை என்ற இதழின் வருகை எனக்கு உவகையான விஷயம்தான். இலக்கை இயம்புகின்ற இவ்விதமான செயல்பாடுகள்தான் அடுத்தடுத்து உந்திச் செல்வதற்கான காரணிகள். ‘திசை எட்டும்‘ என்றொரு மொழிபெயர்ப்புக்கான இலக்கிய இதழ் பல வருடங்களாக வருகிறது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு இதழிலும் ஏதாவது ஒரு நாட்டின் இலக்கிய வகைகளை மட்டும் பதிவு செய்கிறார்கள். அதுபோலவே வலசையும் மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வருவது சாலச்சிறந்தது. முதல் வாசகர்கள் நேசமித்ரன் & கார்த்திகைப் பாண்டியன் இருவருக்கும் என் வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்..
25 ஆகஸ்ட், 2011

Sunday, June 12, 2011

நானறிந்த நீ



பிரியத்தைச் சொல்லிய நீ
கட்டிக் கொண்ட நீ
தோளில் சாய்ந்த நீ

சட்டைப் பொத்தான்களைத் திருகியபடி
சாய்ந்து மார்பில் கடிக்கின்ற நீ
மார்புகளை உறிஞ்சுகையில் முனகுகின்ற நீ
முயங்கும் பொழுது தலைமுடியைப்
பற்றிக் கொள்கிற நீ
கண் மூடி ஆராதித்து ரசிக்கின்ற நீ

மடியில் படுக்க வைத்துக் கொள்கிற நீ
தயிர் சாதம் ஊட்டி விடுகின்ற நீ
கோபித்துக் கொள்கிற நீ
சண்டையிடுகிற நீ

தொடையில் திருகும் நீ
வாதம் செய்கிற நீ
அழுகிற நீ
மன்னிப்பு கேட்கிற நீ
சமாதானமடைகின்ற நீ

வலி உணர்கின்ற நீ
குழந்தையாகின்ற நீ
புத்திசாலியாய் இருக்கின்ற நீ

எழுதுகின்ற நீ
விமர்சனம் செய்கிற நீ
குழந்தையை ரசிக்கிற நீ
பாடம் சொல்லிக் கொடுக்கிற நீ

சமையல் செய்கிற நீ
துணி துவைக்கின்ற நீ
தூங்குகின்ற நீ

எனக்குத் தெரிந்த நீ
எனக்குத் தெரியாத நீ

*

பொன்.வாசுதேவன்

Sunday, May 29, 2011

இலக்கிய அக்கப்போர் – 3


என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தோன்றியது. வித்தியாசமாக புனைப்பெயர்களை வைத்துக் கொள்கிறவர்கள் எப்படி அப்பெயரை தேர்வு செய்கிறார்கள்? தங்களது குணநலன்களைக் கொண்டா அல்லது தங்கள் புனைப்பெயரை வைத்து வாசிக்கிறவர்கள் எழுதியவரைப் பற்றிய ஒரு உருவத்தை கற்பிதம் செய்து கொள்வார்கள் என்பதற்காகவா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

*

ஆண் – பெண் உறவுகள் குறித்த கலாச்சாரப் புனைவுகளையும், கவித்துவப் பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ,முருகனின் கதைகள். மனித உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள், வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது அவரது ‘மரம்’ நாவல். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்ல என்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிருபணம் செய்கின்றன.

*

மனித மனம் ஒரு விசித்திர விலங்கு. நாம் தெளிவான சிந்தனையோடு இருக்கிறோம் என்பதே ஒரு வித நோய்க்கூறு மனநிலைதான்.

*

கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் தமிழின் மிக முக்கியமான, அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்று. கணேசன் – கிட்டா என்ற இரு மனிதர்களின் சிறு வயது முதல் நடுத்தர வயது வரையிலான காலகட்டத்தில் நடக்கின்ற நிகழ்வுகளை விவரித்துச் செல்வதுதான் நாவலின் கதைக்களம். முரண்பட்ட இயல்புள்ள இருவரது வாழ்வின் போக்கு வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. தஞ்சாவூர் அக்ரஹாரத்து வாழ்க்கை, தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடக்கின்ற சமூக பொருளாதார மாறுதல்கள் ஆகியவற்றைப்பற்றியும் கதையினூடாக பதிவு செய்கிறார் கரிச்சான் குஞ்சு.

மனித வாழ்வின் ஆதாரமான அம்சங்களான பணம், அந்தஸ்து, உடல் சார்ந்த இச்சைகள், தன்முனைப்பு, அச்சம் ஆகியவை மனிதர்களை எந்த அளவிற்கு அலைக்கழித்து அகச்சிக்கலுக்கு உள்ளாக்குகிறது என்பதையும், காமம், பணம், அந்தஸ்து இவற்றிற்கிடையேயான நெருக்கத்தையும் பற்றிய பல்வேறு பார்வைகளை இக்கதை முன்வைக்கிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத  இந்தப்பசிகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார்.

நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப்புணர்ச்சியைக் கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை இலாவகமாகக் கையாள்கிறது. முட்டிமோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்களின் வாழ்வு, வயிற்றுப்பசி, அதிகாரப்பசி, காமப்பசி என பலவிதமான பசியின் உந்துதல்களால் செலுத்தப்பட்டு, பல்வேறு இன்பங்களையும் துய்த்தபின் கடைசியில் எதில் நிறைவடைகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது இந்நாவல்.

*

எக்காலம் – எக்காலம் என எக்காளமிட்டுப் பாடியிருக்கின்ற பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப்புலம்பல்களை ஒரு முறையாவது ஆழ்ந்து படித்தால் வாழ்வில் முழுமையடைந்து கரையேறும் வாய்ப்பு சித்திக்கும்.

புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?

*

Thursday, May 26, 2011

இலக்கிய அக்கப்போர் – 2


தேசாபிமானம் - பாஷாபிமானம்

வயது, விதம், நியதி, தருணம், சுகம், ஞாபகம், கேலி, அற்புதம், அவசரம், அவதூறு, சதுரம், சித்திரம், பாத்திரம், பயம், பைத்தியம் இந்த வார்த்தைகள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்ன தெரியுமா?

கடைசியில் பார்ப்போம்..

மொழியின் வரலாறு என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமா? தேசம் -மொழி இவற்றின் மீதான பற்றுதல் எந்த அளவிற்கு இருக்க வேண்டும்? ஏன் இருக்க வேண்டும்? இந்தக் கேள்வி அடிக்கடி எனக்குள் எழும். ஒரு மொழியின் வரலாறு என்றால் என்ன? இதன் பொருள் யாது? என்று பல கேள்விகள்…

ஞானக்கூத்தன் ஒரு கவிதையில் எழுதுவார்.

எனக்கும்
தமிழ்தான் மூச்சு ஆனால் அதை 
பிறர்மேல் விடமாட்டேன்

நம் தினசரி வாழ்வில் புழங்குகின்ற ஒவ்வொரு வார்த்தை தோன்றியதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. மொழியிலிருந்து தோன்றுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஏதோ ஒரு அடிப்படை விதிப்படியே உபயோகத்தில் இருந்து வருகிறது. சில வார்த்தைகள் வழக்கொழிந்து போனாலும் புதிய வார்த்தைகள் அவற்றிற்கான வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூகத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அச்சமூகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பையாக இருக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களை நாம் வாசிக்கின்ற போது அப்போதிருந்த வார்த்தைப் பிரயோகங்கள் குறித்து அறிய முடிகிறது.

தமிழ் மொழிக்கான இலக்கண நூல்களில் தொல்காப்பியம் முக்கிய இடம் வகிக்கிறது. ‘எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி’ என ஐவகையாகப் பகுத்து தமிழ் மொழி இலக்கணம் எழுதப்பட்டுள்ளது.

வெறுப்பை ‘சீ’ யென்றும், உவகையை ‘வா’ என்றும், வியப்பை ‘ஐ’ என்றும், அவலத்தை ‘ஓ’ என்றும், அச்சத்தினை ‘ஐயோ’ என்றும் மொழியற்ற ஆதி நாட்களில் சைகை மற்றும் சுவையை வைத்தே மொழிக்கான ஒலிக்குறிப்புகள் முதன்முதலில் தோன்றியிருக்கிறது. இதன் நீட்சியாகத்தான் ஒலிக்குறிப்புகள் தோன்றி அதனை அவதானித்து மொழிக்குறிகள் உருப்பெற்றிருக்கின்றன. தமிழ் மொழியில் ட், ண், ர், ல், ழ், ற், ன் என்ற எட்டு மெய்யெழுத்துக்களை கொண்டு எந்த வார்த்தையும் துவங்குவதில்லை. இதற்கு காரணம் இவ்வனைத்து எழுத்துகளும் நாவின் மேலண்ணத்தை தொட்டு உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். இவ்வார்த்தைகளை சிரமப் பிரயோகம் செய்தே உச்சரிக்க வேண்டியிருந்ததால் அவை ஆரம்பத்திலிருந்தே முதல் வார்த்தையாக பயன்படுத்தப்படவில்லை.

நம் மொழி சார்ந்த வரலாற்றைப் படிப்பதும், அறிந்து கொள்வதும் அவசியமானதா இல்லையா என்பதை விட அதில் ஒரு புதிரை விடுவிக்கின்ற வசீகரம் ஏற்படுவதென்கிறது என்பது என்னளவில் உண்மை.

மேலே ஆரம்பத்தில் கேட்டதற்கான பதில்… இவ்வார்த்தைகளுக்கிடையே உள்ள ஒற்றுமை அனைத்தும் வடமொழி சொற்கள் என்பதுதான்.

*
நிஷாந்த் - இரவின் முடிவு

சுஜாதாவின் பரிந்துரையின் பேரில் - 1975ம் ஆண்டு கணையாழியின் கடைசிப் பக்கங்களில் - (இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்) ஷியாம் பெனகலின் இயக்கத்தில் வெளிவந்த ‘நிஷாந்த்’ (இரவின் முடிவு) படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் கொஞ்ச நாட்களாகவே அரித்துக் கொண்டிருந்தது. எதற்கும் தேடிப்பார்க்கலாமென்று இணைய பகவானை சுரண்டினால், என்ன ஆச்சர்யம்… முழுப்படமும் நீ-குழாயில் கிடைத்தே விட்டது.

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் நடந்த முதலாளித்துவ வன்முறைகளை பின்னணியாக கொண்டிருக்கிறது இப்படம். ஊரின் பண்ணையார் குடும்பத்தினர் செய்கின்ற அக்கிரமங்கள், ஏழைகள் மீதான கொடுஞ்செயல்கள் என கதைக்களம் ஹைதராபாத்தில் நடக்கிறது. ஊருக்கு புதிதாக வருகின்ற ஆசிரியரின் மனைவியை முதலாளி குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவன் கடத்திச் சென்று சிறைப்படுத்தி விடுகிறான். எதிர்த்துப்பேச திராணியற்ற கிராமத்து மக்கள். ஆசிரியரோ காவல்துறை, கலக்டர், வக்கீல், அரசியல்வாதி என ஒவ்வோரிடமாய் முறையிட்டு பண பலத்தின் முன் தோற்றுப் போகிறார். இறுதியாக கோவில் அர்ச்சகர் ஒருவரின் உதவியோடு கிராமத்து மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி, கோவில் திருவிழா நடக்கின்ற வேளையில் பண்ணையாரின் குடும்பத்தை ஊர் மக்கள் சேர்ந்து அடித்துக் கொன்று விடுகிறார்கள். இதில் ஆசிரியரின் மனைவியும் கொல்லப்படுகிறாள். அன்றைய காலகட்டத்தில் அதிகாரத்தின் வன்முறையை எதிர்ப்பதன் அவசியத்தை நேரடியாக பேசிய முக்கியமான படம் நிஷாந்த்.

க்ரீஷ் கர்னார்ட், ஷப்னா ஆஸ்மி, அம்ரிஷ் பூரி, நஸ்ருதின் ஷா, ஸ்மிதா (அறிமுகம்) ஆகியோர் நடித்திருக்கின்றனர். சிக்கனமான வசனம், நேரடியான கதைசொல்லல் என ஷ்யாம் பெனகலின் இயக்க உத்தி அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கோவிந்த் நிஹ்லானி தன் அழகான ஒளிப்பதிவில் எந்த செயற்கை பூச்சுகளுமின்றி, அசல் கிராமத்தை நம் கண்முன்னே கொண்டுவரச் செய்திருக்கிறார்.

இந்த இணைப்பில் நிஷாந்த் படத்தை நீங்களும் கண்டு மகிழுங்கள்.


*

படிமம் படுகிற பாடு 

சமீபத்தைய கவிதைகளில் படிமம் என்பது படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறதை நாம் அறிவோம். கற்பனையே செய்ய முடியாத படிமங்கள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் படிமம் என்பதுதான் என்ன?

கவிதையை அழகியலோடு உணர படிமம் வகை செய்கிறது. கவிதையின் கருப்பொருளை எளிதான மனதுக்கு அணுக்கமானதாக உணரச் செய்கிற ஒரு கருவிதான் படிமம். தெரிந்ததைச் சொல்லி தெரியாததை விளக்குவது என்ற பொருளில் இதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

கவிதையில் வருகின்ற ஒரு காட்சியை, உணர்வு தளத்தில் புரிந்து கொள்வதற்கு கற்பனைத் தளத்தில் உருவகித்து காண்பதற்கு படிமம் உதவுகிறது. கவிதையின் செறிவு என்பது வெறுமனே வடிவப்பண்பு அல்ல. சுருக்கமான அல்லது செறிவான ஒரு நிகழ்வு. உடனடியாக சரியான, பொருத்தமான படிமத்துடன் அது எளிதாக விளங்கிக் கொள்ளப்படுகிறது. கவிதைக்கு படிமம் என்பது ஒரு வருணிப்பு உத்தியே தவிர வெறும் படிமங்களை அடுக்கிக் கொண்டால் அது கவிதையாகாது

‘மின்னல்’ பற்றி படிமங்களால் கூறப்பட்ட பிரமிளின் கவிதை ஒன்று.

ககனப் பறவை
நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை

கடலுள் வழியும்
அமிர்தத் தாரை

கடவுள் ஊன்றும்
செங்கோல்.

படிமக் கவிதைக்கு ஒரு எளிய உதாரணமாக மோகனரங்கனின் கவிதை.

ஊருணிக்குள்
நனைந்தது நிலவு
நக்கிக் குடிக்கிறது நாய்.

*
பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname