Showing posts with label pon.vasudevan. Show all posts
Showing posts with label pon.vasudevan. Show all posts

Tuesday, January 10, 2012

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - ஒரு பார்வை - ராமலஷ்மி


பொன். வாசுதேவனின் “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை” - ஒரு பார்வை - ராமலஷ்மி

கவிதைகளைப் பிரசுரித்த இதழ்களின் பட்டியலே அவற்றின் சிறப்புக்கு அணிந்துரையாக மிளிர, கவிஞரின் நெடிய இலக்கிய பயணத்தை எண்பத்து ஏழு கவிதைகளுக்குள் அடக்கிக் கொண்டதாக “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை”. பாசாங்குகளற்ற நேர்மையான மென்மையான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது. வாழ்வின் மீதான அவதானிப்புகளை அழகுற வெளிப்படுத்தும் கவிதைகளுக்கு மத்தியில் அன்பைத் தேடுவனவாகவும் பிரியங்களைப் போற்றுவனவாகவும் இருக்கின்றன பல.

எத்தனையோ விதமான தேடல்கள் நிரம்பிய உலகில் தேடிக் கிடைத்த எவற்றாலும் மகிழ்ச்சியுறாத மனிதமனம் அன்பு ஒன்றினால் மட்டுமே மனநிறைவு காண்கிறது. ஊற்றெடுக்கும் சுனைநீர் எதன் பொருட்டும் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதில்லை. மனதிலிருந்து பீறிடும் பிரியங்கள் அதற்கான காரண காரியங்களை ஆராய்வதில்லை. எதற்கும் கட்டுப்படாது சுரக்கின்ற அதன்வேகம் பதிலுக்குப் பெறபடும் அன்புக்கு மட்டுமே அடங்குகிறது.

தொடங்கியிருக்கிறோம்’ கவிதையில்..,
“...எனக்குள் பூத்த ஆண்டாளைப்
பறித்தெடுத்து சூடிக்கொள்கிறேன்
எதற்கெனத் தெரியாமல்.”

‘கொடுக்கல் வாங்கல்’ எனும் ஒரு கோட்டில் பயணிக்கும் உலகில் இந்தக் கோட்பாட்டை உடைத்து, விதிவிலக்காக நிபந்தனைகளற்று இருந்தால் மட்டுமே அன்பு அன்பாக இருக்கமுடியும்:
“நொடிகளைத் துரத்தும் நிமிடங்களாய்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
அன்பு காலம் காலமாய்
...

அன்பின் பிரதேசத்தால் வாய்த்திருக்கிறது
வாழ்வின் ஆசிர்வாதம்

உனக்கும் எனக்கும்
அவருக்கும் இவருக்கும்
யாவருக்கும்”

காற்றைப் போல் கலைந்து விடக்கூடிய, ஒளியைப் போல் மறைந்து விடக்கூடிய சாத்தியங்களைத் தன்னோடு கொண்ட அன்பினைச் சார்ந்து வாழ்வதன் சிரமங்களைப் புரிந்திருந்தாலும் அதனை யாசிப்பதை நிறுத்த முடிவதில்லை எவருக்கும். இங்கே கவிஞருக்கும். வாழ்க்கையின் அடிநாதம் அன்பு என்கிற புரிதலுடன் அதனை யாசித்துப் பெறுவதில் எந்தத் தயக்கமும் காட்டாமல் துணையிடமும் ‘பிரிந்து போன தோழி’யிடமும் தாய்மையைக் கண்டு போற்றி நிறைவு கொள்கிறார். ‘சொல்ல இருக்கிறது காதல்’, ‘பால்ய விளையாட்டு’ எனப் பிரியம் பேசும் பல கவிதைகளுக்குள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பை இழைத்துக் கொண்டு வார்த்தைகளான வரிகள் சில:

பிரியத்தில் விளைந்த கனி’:
“.. பிரியத்தின் பொருட்டே
உனக்குள் என் வாழ்வு
பூரணமடைந்திருக்கிறது”

பிரியங்கள் உதிர்த்த கனி’:
“வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த பிரியங்களைத் 
திசைக்கொன்றாய் வீசிச் சுழற்றி
கடத்திக் கொண்டிருக்கிறது காற்று’

புசிக்கத்தூண்டும் பிரியங்கள்’:
”நிகழ்வின் சாத்தியங்களாக
அன்பும் பிரியமும் மட்டுமே
என்று விதிக்கப்பட்டிருக்கிறது
பிரியங்களுக்கு”

உண்மையான அன்பின் மொழி மெளனமே. அன்பின் பரிமாற்றம் நிகழ்ந்த பின், அதன் திண்மை இளகி இனிமை கூடுவது இயல்பாக நிகழ்வது. பரிமாற்றம் தவறும் போது இனிமையின் இடத்தில் வலியும் வேதனையும் வந்தமர்கிறது என்றால் பரிமாற்றங்களுக்கும் பிறகும் கூட பலவீனப்படுகிற அன்புகளால் இணையை அலட்சியப்படுத்துவதும், அன்பை சாதகமாக எடுத்துக் கொள்வதும் நிகழவே செய்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மெளனமாக அனுபவிக்கும் வலியைப் பற்றிய கவலையிருப்பதில்லை. பாலினப் பாகுபாடின்றி, அன்பிற்காகவே அனைத்து உதாசீனங்களையும் பொறுத்துக் கொண்டு செல்லும் இணைகள் கொண்ட உலகம் இது. இப்படியான அன்பின் எல்லாப் பரிமாணங்களையும் காட்டுவதான தொகுப்பின் முதல் கவிதை ‘மொழி’வது: 
“உன்னுடன் சேர்ந்து வரும் 
மெளனம் போதுமெனக்கு
...
உனது மெளனம் என்னை
மறுத்துப் பேசாது
...
தொடர் பின்றி நான் பேசினாலும்
உனது மெளனம் என்னிடம் 
கைகட்டி தலை குனிந்து நிற்கும்
...
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மெளனத்தைக் கடைபிடிக்கும்வரை.”

பிரியங்களின் வன்முறை’யில்..
“வன் எழுத்துக்களில் புலனாகும்
குரூரம் யெப்போதும் யாரையும்
அண்டச் செய்வதில்லை என்கிறாள்

பிரியங்களின் கொடுமனம் நிகழ்த்தும்
வன்முறை பற்றி
ஒருபோதும் நான் அவளிடம் 
கேட்டதேயில்லை”.

கடைசி நிறுத்தம் வரை சென்று கொண்டிருக்கும் இவரது ‘பிராயணம்’ போலவே கடக்கின்றது தொகுப்பு பாடுபொருளாய்ப் பல வாழ்வியல் காட்சிகளை உள்ளடக்கி. ‘தன்னையே கீறக்கூடுமென அறிந்திருந்தும்’ வளர்க்கும் நகங்களைப் பற்றிப் பேசுகிறது ‘இருப்பு’.  உய்தலுக்கானப் போராட்டத்தை எப்படி விலங்குகளுடன் நடத்த வேண்டி வருகிறது மனிதனுக்கு என்பதைக் காட்டுகிறது ‘இருத்தல்’. தந்திரங்களையும் வஞ்சகங்களையும் சூழ்ச்சித் திறம் என்று கொண்டாடும் உலகெங்கும் இவர் காட்டும் ‘மிதந்து கொண்டேயிருக்கும் வலை’கள் ஏராளம்.

ஒரு கவிதையை வாசிக்கும் பொழுதில்’, ‘ஓவிய நீட்சி’ ஆகியன பிடித்த கவிதைகள் எனில், பிடித்த வரிகளைக் கொண்டதாக ‘என்னிடம் வந்த இந்த நாள்’:
“தாழப்பறந்தும் கையில் சிக்காத
விருப்பப் பறவையாய்
கொஞ்சமும் இரக்கமில்லாது
கடந்த செல்கிறது இந்த நாள்”.

கவிஞர் ஒரு வழக்கறிஞர். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதில் அவருக்குச் சம்மதமில்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படும் பலபேரின் பின்னணியை, சிறுவயதுப் போராட்டத்தை, எது அவர்களை அச்செயலுக்கு உந்தியது எனும் காரண காரியங்களை நீதிமன்றங்கள் அலசுகின்றனவா? அவற்றைக் கருத்தில் கொண்டு பரிவு காட்டப்படுகின்றதா? விடை தேடுவதே அவசியமற்றதாக ஒதுக்கப்படும் கேள்விகள் இவை.
“அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்...”

‘அகநாழிகை’ என்ற பெயரில் சிற்றிதழும் பதிப்பகமும் நடத்தி வரும் பொன். வாசுதேவனின் இந்த முதல் கவிதைத் தொகுப்பில் ‘கடவுளைச் சுமந்தவன்’ சொல்லுகிறான்:
“பத்திரமாக கோவிலில்
இறக்கி விட்டேன் கடவுளை

நிம்மதியாகவும்
மனநிறைவாகவும் இருந்தது
கடவுளுக்கும்”

இருபது ஆண்டுகளாகச் சுமந்து வந்த கவிதைகளைத் தொகுப்பாக இறக்கி வைத்த கவிஞருக்கும் இது பொருந்தும். மன நிறைவு வாசிப்பவருக்கும்!
***


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை
விலை ரூ:70. பக்கங்கள்: 112. வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: 
ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்.

ஜனவரி 5 முதல் 17 வரைக்குமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், கடை எண்: F 27. 
*** *** ***

Sunday, June 12, 2011

நானறிந்த நீ



பிரியத்தைச் சொல்லிய நீ
கட்டிக் கொண்ட நீ
தோளில் சாய்ந்த நீ

சட்டைப் பொத்தான்களைத் திருகியபடி
சாய்ந்து மார்பில் கடிக்கின்ற நீ
மார்புகளை உறிஞ்சுகையில் முனகுகின்ற நீ
முயங்கும் பொழுது தலைமுடியைப்
பற்றிக் கொள்கிற நீ
கண் மூடி ஆராதித்து ரசிக்கின்ற நீ

மடியில் படுக்க வைத்துக் கொள்கிற நீ
தயிர் சாதம் ஊட்டி விடுகின்ற நீ
கோபித்துக் கொள்கிற நீ
சண்டையிடுகிற நீ

தொடையில் திருகும் நீ
வாதம் செய்கிற நீ
அழுகிற நீ
மன்னிப்பு கேட்கிற நீ
சமாதானமடைகின்ற நீ

வலி உணர்கின்ற நீ
குழந்தையாகின்ற நீ
புத்திசாலியாய் இருக்கின்ற நீ

எழுதுகின்ற நீ
விமர்சனம் செய்கிற நீ
குழந்தையை ரசிக்கிற நீ
பாடம் சொல்லிக் கொடுக்கிற நீ

சமையல் செய்கிற நீ
துணி துவைக்கின்ற நீ
தூங்குகின்ற நீ

எனக்குத் தெரிந்த நீ
எனக்குத் தெரியாத நீ

*

பொன்.வாசுதேவன்

Thursday, May 26, 2011

இலக்கிய அக்கப்போர் - 1


தமிழில் அதிகம் பேசப்படாத பல சிறந்த எழுத்தாளர்கள் உண்டு. அவர்களில் மிக முக்கியமானவர் மா.அரங்கநாதன். ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் எழுதியவர். இவர் 'சிவனொளி பாதம்' என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதியுள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் 1980களில் 'முன்றில்' என்ற சிற்றிதழையும், முன்றில் இலக்கிய அமைப்பையும் நடத்தியவர். 

'எண்பதுகளில் கலை இலக்கியம்' என்ற தலைப்பில் இவர் நடத்திய கருத்தரங்கின் போதுதான் விக்ரமாதித்யன், சாருநிவேதிதா உட்பட பலரையும் நான் முதல் முறையாக நேரில் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். மாம்பலம் இரயில் நிலையம் அருகில் இருந்த சாந்தி வணிக வளாகம் என்ற இடத்தில் முன்றில் புத்தக நிலையம் இருந்தது. அப்போது சிறுபத்திரிகைகளில் எழுதுகின்ற பலரும் சந்திக்கின்ற மையம் அதுதான். கல்லூரி நாட்களின் மாலைப் பொழுதுகள் அங்கேதான் கழிந்தது.

கவிதை குறித்து மா.அரங்கநாதன் எழுதிய 'பொருளின் பொருள் கவிதை' என்ற புத்தகம் மிக முக்கியமானது. வீடுபேறு, ஞானக்கூத்து, காடன் மலை என்ற சிறுகதைத் தொகுப்புகளும், பறளியாற்று மாந்தர் என்ற நாவலையும் இவர் எழுதியுள்ளார். மா.அரங்கநாதன் கதைகள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட இவரது 63 கதைகளை வாசித்து முடித்தேன். தமிழர் வாழ்வியல் சார்ந்த சாமியாடல், குறிசொல்லுதல், மாந்திரீகம் போன்ற மத நம்பிக்கைகள் குறித்து பரவலாக இவரது கதைகளில் வாசிக்க முடிகிறது. இயற்கை சார்ந்த கடவுள் வழிபாட்டிலிருந்து வழிமாறிய தமிழ் இனம் பற்றிய இவரது பார்வை பிரத்யேகமானதும் முக்கியமானதும் எனப்படுகிறது. தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட வட மயமாக்கமான இந்துத்துத்வத்துக்கும், தமிழர் கடவுள் வழிபாட்டுக்கும் இடைப்பட்ட வேற்றுமையை பல கதைகளில் எழுதியிருக்கிறார். உலகமயமாக்கலின் முன் தயாரிப்பு காலத்தை பதிவு செய்கின்ற ஆவணமாகவும் இவரது கதைகள் இருக்கின்றன. நேரடியாக அரசியல் பேசாமல் தன் கதைகளினூடாக இவர் முன்வைக்கின்ற அரசியல் பார்வை மிக நுட்பமானது.

சில மாதங்களுக்கு முன்பு (கவிஞர் வெயில் திருமணத்திற்கு சென்று திரும்பும்போது) மா.அரங்கநாதன் பாண்டிச்சேரியில் வசிப்பதை அறிந்து, அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். எழுதுகிறவன் எவ்வளவு கூர்மையான சிந்தனையாளனாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர். சில மணி நேரங்கள் அவருடன் பேசியதை அகநாழிகையில் நேர்காணலாக வெளியிட விரும்பி ஒலிப்பதிவாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

*



இணையத்தில் இலக்கியம் பகிர்கிறவர்கள் பெரும்பாலும் ஜெயமோகன், சாருநிவேதிதா மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களைச் சுற்றியே ஜல்லியடிக்கிறார்கள். இவர்களைத்தவிர பிற எழுத்தாளர்களை இவர்கள் வாசிப்பதில்லையா அல்லது இவர்களே போதும் என முடிவு செய்து விட்டார்களா என்று தெரியவில்லை. இவர்களையும் முழுமையாக எத்தனை பேர் வாசித்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இவர்களைத் தவிர இருக்கின்ற எழுத்தாளர்கள் குறித்தும் இணைய வாசகர்கள் கருணை கூர்ந்து பரிசீலிக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

*


கடந்த ஆண்டு திருமாவளவனை அவரது இல்லத்தில் சந்தித்த போது அவரது சில புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். நன்றியைப் பகிர்ந்து கொண்டு மரபுப்படி சால்வை அணிவித்து ஒரு நிழற்படமும், அவர் என் தோளில் கைபோட்டு நெருங்கியபடி ஒரு நிழற்படமும் எடுத்துக் கொண்டேன். திருமாவளவன் கொடுத்த புத்தகத்தில் ஒன்றான அவரது கவிதைகளை சமீபத்தில் (இந்த வார்த்தை பலருக்கும் அலர்ஜி என்பது தெரியும்) படித்து ..............புறும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.

அரசியல் ஈடுபாடுள்ள கவிஞர்களின் வழமைப்படியே பல்வண்ண அச்சில் பெரியார், பிரபாகரன், பாரதிதாசன், யாசர் அராபத், திலிபன், அம்பேத்கர், ரெட்டை மலை சீனுவாசன், பெருஞ்சித்திரனார் மற்றும் திருமாவளவன் படங்களுடன் கவிதை வரிகளும் இருந்தன.

*


விமர்சனம் என்பது மிக நுட்பமான விஷயம். ஒரு படைப்பின் கூறுகளை ஆராய்ந்து விருப்பு வெறுப்பற்று கருத்துகளை முன்வைப்பதும், அது சார்ந்த ஆரோக்கியமான விவாதங்களை எழுப்புவதுமே விமர்சனத்தின் அடிப்படையான நோக்கமாக இருக்க வேண்டும். தமிழில் விமர்சனம் இரண்டு வகையாக முன் வைக்கப்படுகிறது. ஒன்று எழுதுவபரைக் கருத்தில் கொண்டு படைப்பை விமர்சிப்பது. மற்றொன்று சுயவிருப்பின் பொருட்டு படைப்பை நிராகரிப்பது அல்லது ஏற்பது. தற்போது எழுதப்பட்டு வருகின்ற புத்தக விமர்சனங்களை ஒப்பு நோக்கினால் இன்றைய படைப்பு விமர்சனம் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பது தெரிந்து விடும்.

ஒரு படைப்பை படிக்கின்ற வாசகன் அதன் மீதான சுய வாசிப்பு அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். அது விமர்சனம் அல்ல, அனுபவ வெளிப்பாடு என்ற அளவிலேயே அதை ஏற்றுக் கொள்ளலாம். ஒரு அனுபவத்தை சக மனிதனுடன் பகிர்ந்து கொள்கிற முனைப்புதான் வாசக வெளிப்பாடு. ஒரு படைப்பை உள்வாங்கிக் கொள்வதற்கான ஆயத்தத்தை ஏற்படுத்துவதே விமர்சனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

*


கணையாழியில் (1986 என்று நினைக்கிறேன்) வெளியான ‘அப்பாவின் குகையில் இருக்கிறேன்’ என்பதுதான் நான் முதல் முதலில் வாசித்த கோணங்கியின் கதை. தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் திட்டத்தில் தேர்வு பெற்ற குறுநாவல் அது. மிக எளிய வாசிப்பில் கதையின் முடிச்சு பிடிபட்டு விடுகின்ற கதை அது. அப்போதைய கோணங்கி வேறு.

வாசிப்பின் ஆரம்ப நாட்களில் கோணங்கியின் எழுத்துகள் மிக வசீகரமானவையாக இருந்தன. மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள் என ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு கிளியிடம் இருக்கின்ற மாயாவியின் உயிரைப் பறிக்கச் செல்வதான சுவாரசியத்தை கொடுக்கின்ற வல்லமை படைத்தவை அவரது கதைகள். அவரது கதைகளில் இழையோடும் தொன்மம் சார்ந்த படிமங்கள் ஈர்ப்பானவை. ஒவ்வொரு வரியும் ஒரு சிறுகதைக்கு ஒப்பானதாக இருக்கும். வனாந்தரத்தில் தனியே செல்கிறவனை திடுக்கிடச் செய்கின்ற மயிலின் அகவலைப் போல ஒரு பதட்டத்தை வாசிப்பினூடாக அளிக்கின்ற படைப்புகள் கோணங்கியுடையவை. கோணங்கியின் ‘பாழி’ வாழ்வின் தடங்களை சலனப்படுத்தி உயிர்ப்பூட்டுகின்ற மிக முக்கியமான ஒரு படைப்பு. 

எந்த காரணமுமின்றி கோணங்கியை வாசிக்காமலே புறக்கணிக்கிறவர்களாயிருக்கிறார்கள் பலர் அல்லது கோணங்கியை முழுமையாக வாசித்தவர்கள் போல தங்களை காட்டிக் கொள்கிறார்கள். இதுவே கோணங்கியின் தனித்துவம்.

*

பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname