Showing posts with label வலசை. Show all posts
Showing posts with label வலசை. Show all posts

Friday, August 26, 2011

சிறகுந்திப் பெயர்ந்து சேர்ந்த காதை


உந்துதலுக்குட்பட்ட விசை வாகனமாய் மனது மட்டும் விரைந்து கொண்டிருந்தது. இயல்பாய், இடையீடாய் என பலப்பல தாமதங்கள், என்ற போதிலும் எப்படியாகிலும் சென்றடைய வேண்டும் என்ற பேராவலுடன் ‘ழ‘வைச் சென்றடைந்த போது எட்டு மணியாகி விட்டது. நட்பூக்களை அணுகி அண்மையை உணர்த்தி, அன்பைக் கசிந்து, வதந்திகளுக்கும், யூகங்களுக்கும் பதில் சொல்லிப் பின் முதல் வாசகர்களில் ஒருவரான கார்த்திகைப்பாண்டியனிடம் ‘வலசை‘யடைந்தேன். மேலோட்டமான பக்கப் புரட்டுதலும், நடைமுறைச் செலவு, பிரதிகள் என்றும் சிறிது நேரம் நீண்டது. விடை பெற்றுப் புறப்பட்டு இரவு மணி 11.45க்கு வழக்கம்போல மனைவின் அகச்சுணங்கலை சமாளித்தபடியே வீட்டினுள் நுழைந்து, குளித்து இளைப்பாறி, 12.15க்கு வலசையில் புகுந்தேன்.
வேறு
எழுதுபவன் கனவுகளும் ஏக்கங்களும் உடையவன். இவ்விரண்டும் அவனை எப்பொழுதும் துரத்திக் கொண்டேயிருக்கிறது. எழுதுவதற்கான திரியை நிமிண்டிக் கொண்டிருப்பது இதுதான். ஒரு சாகசச் செயலுக்கு ஒப்பான இதை செய்ய முற்படுகிற வேளையில் தீர்மானங்களும், கிலேசங்களும் ஒரு ஓரமாக உட்கார்ந்து அவனை தார்க்குச்சியால் குத்திக் கொண்டேயிருக்கின்றன. இதில் சிறிது பிசகினாலும் தோற்றப்பிழையை அவன் வாசகனுக்கு தந்துவிட நேரும் அபாயம் இருக்கிறது. பழக்க அடிமைகளாகிப் போய்விட்ட சராசரி ஜென்மங்களாய் இருந்தாலும் நமக்குள்ளெழும் அடையாளச் சிக்கல், இதை இப்படித்தான் நான் தரவேண்டும் அல்லது இதை நான் இப்படித் தருவதைத்தான் என்னை உற்று நோக்குகிறவர்கள் விரும்புகிறார்கள் என்பதான கற்பிதங்களை புகுத்திக் கொள்கிறோம்.

இதுவுமது
நீள் புனைவுகள் தவிர்த்து வேறெதையும் பின்னட்டையிலிருந்து வாசித்தேப் பழகிவிட்ட எனக்கு உப்புறையும் சப்தம் தெளிவானதொரு அறிமுகமாக இருந்தது. வாசிக்கத் துவங்கி தொடர்ந்த வேளையில், வெற்றிடத்தை நிரப்பி அரூபமாய்த் தன்னிருப்பை உணர்த்திக்  கொண்டிருக்கும் காற்றாக, அழுத்தம், மந்தம், அடர்த்தி, அபத்தம், எள்ளல் என கலவையான உள்ளுணர்வுகள் எழுந்தபடியிருந்தது.
வேறு
அயத் அல்-கெர்மேசி-யின் வலைத்தளத்தில் ‘சாத்தானுடனான உரையாடல்‘ குறித்து ஏற்கனவே வாசித்திருந்ததால், அணுக்க மொழி மீள்வாசிப்பில் எளிதில் ஜீரணித்துக் கொள்ள முடிந்தது. ஜோஸ் சரகோமாவின் ‘பார்வையின்மை எளிதான மொழிபெயர்ப்பில் ஈர்ப்பு கூடச் செய்தது. Tuesdays with Morrie இதன் சில அத்தியாயங்களினை மட்டும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு வாங்கி இன்னமும் படிக்காத புத்தகங்களில் இதுவும் ஒன்று. இதன் பெயர்ப்பு ஆக்கத்தை இப்பொழுது வாசிக்கவில்லை. அசலை வாசிக்க விருப்பம். முருகபூபதி, தருமியின் மொழியாக்கங்கள் இன்னபிற முதல் வாசிப்பில் மட்டுமே இருப்பதால் மீள்வாசிப்புக்கு உட்படுத்திய பின்புதான் அதன் வாசிப்பு குறித்து முழுமையுற இயலும்.
வேறு
அபராஜிதனின் செவ்வியை குறளிக் குரல் உள்ளீடாக வாசிக்கையில் நேசனின் இயலெதிர்ச் செயலான எளிய மொழிப் பிரயோகமும், அபராஜிதனின் தொன்ம அனுபவங்களின் சாரமாக வெளிப்பட்டுள்ள கருத்துகளும் மிகப் பிடித்தமானதாகவும், வாசிக்கையில் நெருக்கமானதாகவும் இருக்கிறது. முதல் வலசையில் நிகழ்ந்த ஆகச்சிறந்த ஓட்டுக் கருவாக்கம் இதுவென்று தோன்றுகிறது.
இதுவுமது
விதூஷ் நேர்காணல். அறியாததொரு புதுமுகத்தை காணத் தருகிறது. சாகசமோ, சாதனையோ என எந்த பாவனையுமற்று இயல்பாகவே அவரது எழுத்துக்களை அடையாளம் கண்டு கொண்டவன் நான். திறமையும், திமிரும் ஒன்றுக்கொன்று எவ்வளவு நெருக்கமானவை என்பதை அறிவேன். அவ்வகையான உருவகம் ஏதுமற்று வாசிக்க ரசிக்க முடிகிற ஒருவர் விதூஷ். செவ்வியின் வாயிலாக அவரைப் பற்றிய புதிய செய்திகளை அறிந்து கொண்டேன். பிரதி பெயர்ப்பாளன் எப்படி மூலப்பிரதியை சிதைக்காமல் சிரத்தையோடு செய்ய வேண்டும் என்பது ஒரு கலை. கிட்டத்தட்ட செயற்கைக் கருவாக்கம் போல. உயிரும் கொடுக்க வேண்டும். அது வேறொருவருக்கானதாகவும் இருக்கும். விதூஷ் செவ்வியில் நெருடிய விஷயம் பல ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் பிரயோகித்திருப்பதுதான். எளிதில் புழக்கத்தில் உள்ள தமிழ் வார்த்தைகள் பல இருக்கிற நிலையில் எழுத்துப் பெயர்ப்பு தேவையில்லாததாகப் படுகிறது. இதை தவிர்த்திருக்கலாம்.
எப்போதும் போல, மொழிபெயர்ப்புக் கவிதைகள் வறட்சியான உணர்வையே தருகின்றது. வாசித்தும் நிசப்தத்தையும், மௌனத்தையும் உள்ளுக்குள் ஏற்படச் செய்து உணர்வுகளை பூக்கச் செய்கின்ற மொழிபெயர்ப்புக் கவிதைகள் அருகி விட்டது. வாசிக்கின்ற வேளையில் கவிதையின் உள்ளாழ்ந்து எந்த யத்தனிப்புமற்று இருப்பின் தருணங்களை உணரச் செய்கின்ற மொழி பெயர்ப்புக் கவிதைகள் எங்கேயோ ஒளிந்து நீர்ப்பொதிந்த மேகங்களாய் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இது அசல் கவிஞனின் பிழையா அல்லது மொழி பெயர்ப்பாளரின் பொருட்டா என்றறிய இன்னும் சில கால அனுபவ வெளிகளுக்குள் முழுமையான பிரயாணம் எனக்குத் தேவை.
நிறை
வலசையில் என்னளவில் நான் திருப்தியுறாத விஷயங்களும் சில உண்டு. அதில் முக்கியமாக குறிப்பிட விரும்புவது, ஒவ்வொரு படைப்பின் தலைப்புக்கு கீழும் மூல ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு அதன் பிறகே பிரதியை மொழி பெயர்த்தவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். இதுதான் சரியான, நேர்மையான முறை. புத்தகத்தைத் திறந்ததும் நிரல் குறிப்பை அணுகின்ற வாசகனுக்கு இயல் ஆக்கம் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விட்டது. அதே போல படைப்புக்கான தலைப்புகளிலும் இது நிகழ்ந்து விட்டது. புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் மூல ஆசிரியர் பற்றிய குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை படைப்பின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் கொடுத்திருந்தால் படைப்பை அணுக எளிதாக இருந்திருக்கும்.
உதாரணத்திற்கு
சாத்தானுடனான உரையாடல் அயத் அல்-கெர்மேசி (தமிழில் ஸ்ரீ)
இப்படி இருந்திருக்க வேண்டும். குறிப்புகளில் ஆசிரியரின் பெயரை அவர்கள் மொழியிலேயே கொடுத்திருந்தால் மேலதிக வாசிப்புக்கு உதவக்கூடும்.
வரும் இதழ்களில் இதையெல்லாம் எதிர்பார்க்கிறேன்.

வலசை என்ற இதழின் வருகை எனக்கு உவகையான விஷயம்தான். இலக்கை இயம்புகின்ற இவ்விதமான செயல்பாடுகள்தான் அடுத்தடுத்து உந்திச் செல்வதற்கான காரணிகள். ‘திசை எட்டும்‘ என்றொரு மொழிபெயர்ப்புக்கான இலக்கிய இதழ் பல வருடங்களாக வருகிறது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு இதழிலும் ஏதாவது ஒரு நாட்டின் இலக்கிய வகைகளை மட்டும் பதிவு செய்கிறார்கள். அதுபோலவே வலசையும் மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வருவது சாலச்சிறந்தது. முதல் வாசகர்கள் நேசமித்ரன் & கார்த்திகைப் பாண்டியன் இருவருக்கும் என் வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்..
25 ஆகஸ்ட், 2011

Comments system

Disqus Shortname