Showing posts with label உரையாடல் சிறுகதைப்போட்டி. Show all posts
Showing posts with label உரையாடல் சிறுகதைப்போட்டி. Show all posts

Wednesday, June 3, 2009

தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் (உரையாடல் சிறுகதை போட்டிக்கு)

தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர்
- "அகநாழிகை" பொன்.வாசுதேவன்

அன்றைய தினமும் சுவாரசியமில்லாமலே விடிந்தது. உணர்வெழுச்சிகளைக் குறித்து கவலைப்படும் பழக்கத்தை கொஞ்ச நாட்களாகவே கைவிட்டிருந்தான். ஆனாலும் அருகில் மெலிதாக வாய் பிளந்தபடி உறங்கிக் கிடந்த குழந்தையைக் கண்டதும் முத்தமிடத் தோன்றியது. அவள் உள்ளங்கையைத் வாஞ்சையாகத் தடவினான். அவனது விரலைப் பற்றி அனிச்சையாக இறுக்கிக் கொண்டது அவளது கை. வாழ்வில் இன்னமும் மிச்சமிருக்கின்ற ஒரே சந்தோஷம் இவள் மட்டும்தான் என்று தோன்றியது.

சமையலறையின் தாளிப்பு வாசனை யமுனாவின் அவசரக் கிளம்பலை உணர்த்தியது. இரவு சாப்பிடவில்லை என்றாலும் பசிக்கவேயில்லை. கொஞ்ச நாட்களாகவே உணவின் மீது வெறுப்பான மனோபாவம் வந்துவிட்டிருந்தது. அதுவும் தினமும் தானே உணவை எடுத்து தட்டில் போட்டுக் கொண்டு, சாப்பிட்டு தட்டைக் கழுவி வைத்து... சித்திரவதையானது அது.

நகுலனோடு பேசிக்கொண்டிருந்தது போலவே தூங்கியதால் இரவில் சரியான தூக்கமில்லை. எழுந்திருக்க மனமின்றிக் கிடந்தான். ஜன்னலின் கம்பிகளுக்கிடையில் வானம் துண்டு துண்டாக தெரிந்தது. எழுந்து ஜன்னல் கம்பிகளுக்கு அருகாமையில் சென்று வானத்தை முழுவதுமாக பார்த்தான். இப்போது மனம் நிறைவாக இருந்தது.

அவன் ரசனையே பல இடங்களில் எதிரியாகி விடுகிறது. ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்திற்கு வருகை புரிந்த வெளிநாட்டுப் பெண்ணொருத்தியின் ஆடையில் அச்சிடப் போடப்பட்டிருந்த 'கலம்காரி' வகை சித்திரத்தை ரசித்துக் கொண்டிருந்ததற்காக, உச்சி வெயிலில் துணி பண்டல் இறக்குவதைச் சரிபார்க்கக் கூறி தண்டிக்கப்பட்டு பழி தீர்க்கப்பட்டான்.

புடவை சரசரக்கும் ஓசை கேட்டுத் திரும்பினான். யமுனா கிளம்பிக் கொண்டிருந்தாள்.

"குழந்தைக்குச் சாதமெல்லாம் எடுத்து வெச்சுட்டியா"

"ம்ம்" என்று சொல்லியபடியே வெளியே சென்று புறப்படத் தயாரானாள். இப்போதெல்லாம் தேவையற்று எதுவும் அவள் பேசுவதில்லை. மௌனியாகவே இருக்கிறாள். அவனும் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொள்ளவில்லை.

அவள் சென்ற பிறகு அவனுடைய வேலை ஆரம்பமாகி விடும். முதலில் குழந்தையை குளிக்க செய்து உணவு கொடுக்க வேண்டும். பிறகு துணிகளைத் துவைக்கும் இயந்திரத்தில் துணிகளைப் போட்டு எடுத்து உலர்த்த வேண்டும். இதெல்லாம் முடிந்த பிறகு குழந்தையுடன் விளையாடத் தொடங்குவான்.

அவளிடமிருந்த குழந்தையைப் பார்த்து சிரித்த ஒரு தினத்திலிருந்துதான் ஆரம்பித்தது எல்லாம். அப்போதெல்லாம் அவன் ஒரு தோல்பொருட்கள் செய்யும் நிறுவனத்தில் கணக்கெழுதும் பணியினை செய்து கொண்டிருந்தான். தினமும் அவன் வரும் பேருந்தில்தான் குழந்தையுடன் வருவாள்.

நிராசைத்துளிகளால் நிரம்பிய அவனது வாழ்க்கையில் புத்தகம் வாசிப்பது, பாட்டு கேட்பது போன்ற சின்னச் சின்ன சந்தோஷங்களை காலம் விட்டு வைத்திருந்தது. அதிலும், புத்தகத்தை வாங்கி வாசிப்பதற்கான சூழலே அவனுக்கேற்படவில்லை. நூலகம்தான் அவனுக்குப் பிடித்த இடமாக இருந்தது. படிக்கையில் போரடித்தால் கம்பி வலைகளிடப்பட்ட ஜன்னல் வழியே வெளியே இரண்டாம் மாடியை எட்டிப் பார்க்கும் வேப்பமரத்தின் குருவிகளையே பார்த்துக் கொண்டிருப்பான். ஏதோ ஒரு கணத்தில் அனிச்சையாய் அவன் புத்தகம் படிப்பது நினைவிற்கு வந்து மறுபடியும் விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்குவான்.

பார்ப்பதெற்கென எப்போதும் இருக்கும் வானமும், எப்போதாவது காணக்கிடைக்கும் குருவிகளும் அவனது வாழ்க்கையை பரவசங்களால் நிறைத்துக் கொண்டிருந்தது.

குழந்தைச் சினேகத்தின் தொடர்ச்சியாக ஒரு நாள் யமுனா அவனோடு பேசத் தொடங்கினாள். அதன் பிறகு பேசிக் கொண்டேயிருந்தாள். அவளது பேச்சின் மையமாக அவனது நடத்தையும், மென்மையான ரசனையும் மட்டுமே இருக்கும். ஓரிரு முறை அவளைக் குறித்து கேட்டதற்கு மௌனத்தையும், முக இறுக்கத்தையும் சில நேரங்களில் விழியோரக் கண்ணீரையுமே பதிலாகக் கொடுத்தாள்.

குழந்தை எப்போதும் சிரித்துக் கொண்டும், சில நேரங்களில் அழுது கொண்டும் இருந்தது. குழந்தை அழுத நேரங்கள் குறைவு. தனக்குத்தானே புரியாத வார்த்தைக் குழறல்களுடன் குழந்தை சந்தோஷமாய் இருந்தது. பேச ஆரம்பித்த சில நாட்களிலேயே குழந்தை இவனோடு அணுக்கமாகி விட்டது. யமுனாவிடமிருக்கும் போதும் இவனிடம் தாவியது.

தன்னுடன் வந்திருந்துவிடச் சொல்லி யமுனா ஒரு நாள் கூறினாள். அவனுக்கும் அறை வாழ்க்கை வெறுத்திருந்தது. யாருமேயற்று தனித்திருந்த வாழ்க்கை பழகியிருந்தாலும், அறைத்தனிமை அவனை தினம் தினம் கொன்றது. இரவு தூங்க மட்டுமே அறைக்குச் செல்வதை வழக்கமாய் வைத்திருந்தான். அப்போதும் உத்திரத்து பல்லி, காற்று விரிசலின் துவாரம் வழியே வரிசையாகச் செல்லும் எறும்பு, அவனைப் போலவே படபடத்துச் சுற்றும் மின்விசிறி இவற்றைப் பார்த்துக் கொண்டேயிருந்து அப்படியே தூங்கிப்போவான். உறவுகளே இல்லாத அவனது வாழ்க்கையில் பிரிவுகளுக்கும் இடம் இல்லை என்பதே அவனுக்கு மன நிறைவாக இருந்தது.

யமுனாவின் வருகையால் அவனது வாழ்க்கை முறையில் எதுவும் மாற்றமிருக்கப் போவதில்லை என்பது உறுதியாயிருந்தது. ஆனாலும் அதுவரை நேரடியாக அனுபவித்தறியாமல் சுயமைதுனம் வாயிலாகவே தீர்த்துக் கொள்ளப்பட்ட அவனது அந்தரங்க உணர்வுகளுக்கு சாந்தி கிடைக்கும் என்பதில் சமாதானமடைந்தான்.

திருமணமெல்லாம் எதுவுமில்லை. அவளாகவே ஒரு புது வீட்டை வாடகைக்கு அமர்த்தி, அந்த வீட்டில் இருவரும் வாசம் செய்யத் தொடங்கினார்கள். தினமும் இரவுகளில் காமம் அலைகளாகி நுரைத்துக் கரை சேர முயன்று கொண்டேயிருந்தது. யமுனாவின் அதீத விருப்பத்தின் காரணமாக, அவனது குறைகளான ரசனை, சோம்பேறித்தனம் இவற்றைக்குறித்து அவள் கவலை கொள்ளச் செய்யவில்லை.

அவனைப் பொறுத்தவரையில் காமம் என்ற விஷயம் பூர்த்தியானது தவிர வேறேதும் புதிய மாற்றமாக எதுவுமில்லை. எப்போதும் போல வேலைக்குச் சென்றான், நூலகம் சென்றான், வேப்பமரக் குருவிகளில் லயித்தான், விரும்பியதை ரசித்தான், குழந்தையைக் கொஞ்சினான்.
பிறகொரு நாள் குழந்தையோடு பணிக்குச் செல்வதின் சிரமங்கள் குறித்து அவனிடம் கூறினாள் யமுனா. சொற்ப ஊதியத்திற்காக அவன் படும் சிரமங்கள் குறித்து அவளது அடுத்த கவலையாக இருப்பதாகவும் தெரிவித்தாள். சிறிது நேர பேச்சிற்கு பிறகு அவளது வருமானமே அதிகம் என்பதால் அவனை வேலையை விட்டுவிடச் சொன்னாள்.

வேலையிலிருந்து விலக வேண்டியது குறித்து கொஞ்சம் யோசனையாக இருந்தது. ரொம்பவும் யோசித்தான். ஒப்புக்கொள்ள வேண்டுமென கட்டாயமில்லை என்பதை சற்றே முகவாட்டத்துடன் கூறினாள் யமுனா. அவள் அமர்ந்திருந்த விதமும், அதில் தொற்றிக் கொண்டிருந்த உடலழைப்பும் பதிலேதும் பேச முடியாமல் போனது. அன்றிரவு குடத்தில் விழுந்துவிட்ட தேரையைப் போல தத்தித்தத்தி, வியந்து வியந்து இருவரிடமும் கரையேறியது காமம்.

மறுநாள் காலையில் வேலைக்குப் போகப்போவதில்லை என்பதைத் தெரிவித்தான். அவளுக்கும் சந்தோஷம்தான். வீட்டின் வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். குழந்தையோடு இருப்பதையே முக்கிய வேலையாக மகிழ்வோடு கொண்டாடி செய்தான்.

வளர்ப்பு பிராணியின் குணாம்சம் போல அவனால் எல்லாவற்றுக்கும் பழகிவிட முடிந்தது. ரசனை, நூலகம், புத்தகம், காமம், குழந்தை என அவனது தேவையனைத்தும் பூர்த்தியானது அவனுக்கும் உண்மையில் நிறைவாகவும் இருந்தது.

பணித்திறன் காரணமாக பதவி மாற்றமும், ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டதைச் சொல்லி மகிழ்ந்து அவனது தியாகங்களின் பொருட்டே எல்லாம் என்றாள். கூடவே பணி நேரத்தின் சிறு மாற்றங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்தாள்.

பணிச்சுமை காரணமாக அதிக பரபரப்பும் அமைதியற்றுமே அவளது காலையும் இரவும் இருந்தது. அதன் காரணமாக அவனது வீட்டுப் பணிகளில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போலவே குழந்தையை குளிக்கச் செய்து, உணவளித்து, துணிகளை துவைக்கப் போட்டு, உலர வைத்து மடித்து, குழந்தையுடன் விளையாடி பொழுது போனது.

வீட்டின் வாசலில் குழந்தையுடன் அமர்ந்து வருவோர் போவோரின் முகங்களை வேடிக்கைப் பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றானது. ஏற்கனவே படித்த புத்தகங்களை மறுபடியும் நினைவுக்கு கொண்டுவர பலமுறை முயன்று தோற்றுக் கொண்டிருந்தான். கைக்குக் கிடைத்த பழைய பேப்பர் ஒன்றில் இருந்த வரிகள் திரும்பத்திரும்ப வாசித்தான்.

".... அழுதழுது பேய் போற்
கருத்தில் எழுகின்ற வெல்லாம்
என்னதறியாமை யறிவென்னுமிரு பகுதியால்
ஈட்டு தமிழென் தமிழினுக்
கின்னல் பகராது உலகம்
ஆராமை மேலிட்டிருத்தலால்"

அத்துடன் கிழிந்து போயிருந்த அந்த காகிதத்தின் வார்த்தைகளை வாசித்ததும் அவனின் மனதின் அடியாழ உணர்வுகள் விரைத்துக் கிளர்ச்சியடைந்தன. யார் எழுதியது என்று தெரியாமல், மறுபடி மறுபடி வாசித்துக் கொண்டிருந்தான்.

பணிச்சுமை காரணமாக யமுனா வீடு திரும்புவதில் தாமதமானது. இரவு உணவை தானே செய்து விடுவதாகக் கூறியதில் மனம் நெகிழ்ந்தாள். ஆனால் யமுனாதான் பல நாட்களில் தாமதமானதால் சாப்பிட்டு வந்து விடுவதாக கூற ஆரம்பித்தாள்.

பணியில் அதிக உழைப்பைச் செலவிட வேண்டியிருந்தது அவளுக்கு. அவர்களுக்கிடையேயான காமம் போர்வையைப் போர்த்திக் கொண்டு வெகுநாட்களானது. அவனுக்கு பழக்கப்பட்டுவிட்டதால் கைவிட முடியாமல் தன் உடல் விழைவை அவனிடம் ஒருநாள் தெரிவித்தான். அன்று பணிகள் அதிகம் என்றும், இன்னொரு சந்தர்ப்பத்தில் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறி சாந்தமாக மறுத்துவிட்டாள்.

அன்றிரவு நெடுநேரமாகியும் அவள் வரவில்லை. அலுவலகத்திற்கு தொலைபேசலாமென முயற்சித்தான். மணி தொடர்ந்து ஒலித்து அடங்கியது. வழக்கமாக வரும் தாமத நேரத்தை விட நேரம் அதிகமாயிருந்தது. அவனுக்கு உள்ளுக்குள் பயம் அல்லது வெறுமை போன்ற ஒர் உணர்வு பரவியது. வீட்டின் வெளியே அமர்ந்திருந்த அவன் மடியிலேயே குழந்தை தூங்கி விட்டிருந்தது.

"....அழுதழுது பேய் போற்..." என யாரோ காதருகில் வாசிப்பது போல உணர்ந்தான். விளக்கொளியில் நீளத் தெரிந்த சாலையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வெகுநேரம் கழித்து வீட்டருகில் வந்து நின்ற காரிலிருந்து யமுனா இறங்கினாள். அவனருகில் வந்து தாமதமானதால் மேலாளருடன் வீடு திரும்ப நேரிட்டதாகவும் சொன்னாள்.

அன்றிரவும் அவள் சாப்பிட்டு வந்ததாகக் கூறினாள். அவனுக்கும் சாப்பிடும் எண்ணமில்லை. ரொம்ப நாளைக்குப் பிறகு சுற்றுகின்ற மின் விசிறியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அந்த வீட்டிலும் பல்லிகள் இருந்தன. இரையேதும் கிடைக்காமல் ஒன்றையொன்று விரட்டிக் கொண்டிருந்த பல்லிகளைப் பார்க்க பாவமாய் இருந்தது. ஏதாவது ஒரு பூச்சி கிடைத்தால் பிடித்துப் போடலாமா என்று யோசித்தான். யமுனா ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலை எப்போதும் போல சுவாரசியமில்லாமலே விடிந்தது. யமுனா கிளம்பி பையைச் சரி பார்த்துக் கொண்டிருந்தாள். வழக்கம் போலவே அவன்தான் கேட்டான்.

"கிளம்பிட்டியா யமுனா"

வாயில் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி சந்தோஷ மனோநிலையில் இருந்த அவள் வெறும் "ம்ம்" என்று மட்டும் சொல்லியபடியே வெளியே சென்றாள்.

தாமதமாகத் தூங்கியதால் குழந்தை இன்னும் எழுந்திருக்கவில்லை. துணிகளை துவைக்கும் இயந்திரத்தில் போட்டு இயக்கினான். வெளியே போய் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தான். ஆள் நடமாட்டமின்றி இருந்தது. துணிகளை உலர்த்த மாடிக்கு எடுத்துச் சென்றான். துணியை கொடியிலிடும் போது தொலைவில் வந்து கொண்டிருக்கும் இரயிலோசை கேட்டது. ஒரு இசையைப் போல தடக் தடக்கென ஒரு தாள லயத்துடன் தாலாட்டும் இசை போலிருந்ததை ரசித்தான். ஓடிய இரயிலுடன் ஓசையும் முடிந்தது.

கீழிறங்கி வந்து சுற்றிக் கொண்டிருக்கும் மின் விசிறியை நின்றபடியே பார்த்தான். பல்லிகளைக் காணவில்லை. இரை கிடைத்திருக்கக்கூடும். அல்லது பகலில் புணர்ச்சிக்கென பதுங்கியிருக்கக் கூடும். குழந்தையின் சிறுவாய் பிளந்த தூக்கம் நிம்மதியைத் தந்தது.

வெளியே செல்லலாம் என்று நினைத்து சட்டையை அணிந்து கொண்டான். திடீரென நினைவு வந்தவனாய், குழந்தையின் அருகில் பால் நிறைத்த பாட்டிலை கைக்கெட்டும் தூரத்தில் வைத்தான்.

வெளியே வந்து கதவை பூட்டாமல் வெறுமனே சாத்திவிட்டு, நடக்கத் தொடங்கினான். எங்கே செல்வதென யோசித்தபடியே ரயில் நிலையம் வரை வந்தான்.

ரயில் நிலையத்தில் கிளைகளற்ற மரங்களாய் இரும்புக் கிராதிகள் நின்றிருந்தன. கொஞ்சமும் நிழல் இல்லை. தண்டவாளம் இருந்த திசை நோக்கிப் பார்த்தான். கூரிய அம்பாக வானத்தை கிழிக்க முயல்வது போல தொலைவில் சென்று வானத்தை முட்டிக் கொண்டிருந்தது தண்டவாளம். வானத்தையே பார்த்தபடி தண்டவாளங்களுக் கிடையில் நடக்க ஆரம்பித்தான்.

தொலைவில் ரயிலின் தாள கதியுடனான தாலாட்டு சப்தம் கேட்டது. நடந்து கொண்டேயிருந்தான். வரிசையாகப் பறவைகள் எதையோ தேடிச் சென்று கொண்டிருந்தன. மெல்லிய தாலாட்டு சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி அதிகமாகி அவனருகில் வந்து அவனுக்கு மன அமைதியைத் தந்தது.

தாலாட்டு சப்தம் காதையடைக்க, அவனையும் தன்னோடு அணைத்துக் கடநது சென்று கொண்டிருந்தது ரயில். பறவைகளற்று நிசப்தமாக இருந்த வானம் அவனை பார்த்துக் கொண்டிருந்தது.
@@@

Comments system

Disqus Shortname