வசீகர
மர்மமும், ஈர்ப்புத்தன்மையும் கொண்டவை துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் எழுத்துகள். தான் வாழ்ந்த சூழலை, தன் நாட்டின் துயரத்தை தன் எழுத்துகளின் வாயிலாக உருவகமாக வெளிப்படுத்துவதே அவர் பாணி. ஓரான் பாமுக் எழுதிய ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’.
![]() |
Orhan Bamuk |
![]() |
G.Kuppusamy |
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் அதைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள்தான் கதைக்களம். பதினேழாம் நூற்றாண்டில் பின்னணியில், துருக்கிக் கப்பற்படை, வெனிஸ் நகரிலிருந்து வரும் ஒரு கப்பலை வழிமறித்து அதில் உள்ளவர்களைப் பிடித்து அடிமையாக்குவதில் தொடங்குகிறது இந்நாவல். மனித மனதின் உணர்வுகளில் எழும் கொந்தளிப்புகள், குழப்பங்கள், தெளிவுகளே உரையாடல்களாக நிகழ்கின்றன. அடிமையாக்கப்பட்ட மனதின் முன் எழுகிற கேள்விகள், கேட்கப்பட முடியாமல் மௌனத்தில் ஆழ்த்தி உணர்வுக் குலைவை ஏற்படுத்துகிறது. இவ்வுணர்வுக் குலைவு வாசிக்கிறவர்களின் மனதிலும் ஆழப்பரவுகிறது.
இஸ்தான்புல் நகரின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு ஆகியவை கதையின் விவரணையூடாகவே சொல்லப்படுகிறது. பண்பாட்டுச் சித்தரிப்பையும், மன இயல்புகளின் விசித்திரங்களையும் எதிரெதிர் மனங்களை உணர்வுத் ததும்பல்களோடு எதிர்கொள்வதையும் இந்நாவல் பேசுகிறது. மொழிபெயர்ப்பு நாவல் வாசிக்கிறோம் என்ற தன்மையற்ற இயல்பான விவரணையைத் தந்திருக்கும் இந்நாவலின் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி பாராட்டுக்குரியவர்.
•• தினமலர் நாளிதழில் வெளியான புத்தக விமர்சனம் ••
வெண்ணிறக் கோட்டை
ஆசிரியர்: ஓரான் பாமுக்
தமிழில்: ஜி.குப்புசாமி
பக்கங்கள்: 176 விலை: ரூ.165
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...