Tuesday, March 12, 2013

கண்ணாடி




சொற்கள் அழிந்து அம்மணமாய்க் கிடந்த
இளமிரவுப் பொழுதில்
சலனமேதுமற்று வந்து நின்றிருக்கிறது மொழி

உச்சமுற்றுப் புரண்டிருந்த சொற்களை
கருச்சுழலும் சிசுவாய்க் குழைந்து
யாசித்துத் துடிக்கிறது மொழி

எதிர்பாரா தருணத்தில்
மலர்ந்து கசிந்த யோனியின் வலியென
மறுதலித்து உதறிச் செல்கின்றன சொற்கள்

சமனில்லா மனதின் முன்
விழித்திருக்கின்றன
சொற்களும் மொழியும்

ரசிக்க ஆளற்றுப் பூத்திருக்கும்
வயலட் நிற எருக்கம் மலர்களின் மேல்
ஆறுதலாய்ப் பொழிகிறது முதிராத பனி.


பொன்.வாசுதேவன்

உற்று நோக்கியபடியிருக்கிறது காலம்



முடிவடையாத காலத்தின் துணுக்குகளில்
நுண்ணணுவாய்ப் பிணைந்திருக்கும்
சதை இரத்தம் காற்றுக் கலவை நம் உயிர்

கிடந்தழுத்தும் பிரியச் சேறில்
இணைந்து பிணைந்து
ஐயக் கேவலுற்று சண்டையிட்டழுது
கண்ணீரிட்டுக் கதறி மீண்டு
மீண்டும்
இணைந்திணைந்து தொடர்ந்து
பெருவரியோடிய நதிக் கோடுகளாய்
முற்றுப்பெறாதொரு வாழ்வெளியில்
ஜென்மங்கடத்தி
பார்க்காத கணத்தில் உருகி
பார்த்த கணத்தில் கண்ணீர்ப் பெருக்குற்று
தழுவிக் கடத்தி விலகிச் சென்று
தனித்திருக்கும் தொலைவுகளுக்கப்பால்
அடர் நினைவுகளுடன் பிடிப்பும் பற்றுமாய்
சேர்ந்து உயிர்த்திருக்கும் நம்மை
உற்று நோக்கியபடியிருக்கிறது காலம்
மௌனமாய்.


பொன்.வாசுதேவன்

தக்கை - அகநாழிகை - 361 இணைந்து நடத்தும் கவிதை உரையாடல் நிகழ்வு




Comments system

Disqus Shortname