காலையிலேயே வெயில் தீவிரமாய் பெய்து கொண்டிருந்தது. உடம்பின் உயரத்தில் முக்கால் பங்கு நீளமாயிருந்த தன் தலைமுடியை யமுனா காற்றாட வைத்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் தலைக்கு குளித்து வந்திருந்த அவள் உடல் ஆள்நடமாட்டமற்ற கடற்கரை மணலைப்போல வெண்மையாக நுட்பமான மினுமினுப்போடு இருந்தது.
சந்தோஷமான மனநிலையில் ஏதோவொரு பாடலை முணுமுணுத்தபடியிருந்தது அவள் உதடுகள். அவனுக்கு பிடித்தமான ஆகாச நீல வண்ணச்சேலையை அணிந்திருந்தாள். அவன் எடுத்துக் கொடுத்ததுதான். அவளுக்கு நீல நிறம் பிடிக்காது என்றாலும் அவனுடைய விருப்பத்திற்கு மாறாக செய்வதை அவள் விரும்புவதில்லை.
மாடியிலிருந்த அந்த அறையிலிருந்து சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஆயாசமாக இருந்தது. எதையும் நினைவில் இல்லாமல் வெற்றாய் சாலையில் எதிரெதிர் புறங்களில் ஊர்ந்தபடியிருந்த மனிதர்களையும், வாகனங்களையும், மாடுகளையும் விழிகளால் துழாவியபடியிருந்தான்.
சாலையிலிருந்து கவனம் விலகி அறையின் உச்சியில் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியையே சிறிது நேரம் பார்த்தவுடன் சற்றே ஆசுவாசமாய் இருந்தது.
“சேலை நல்லாயிருக்காடா“ என்றபடி அவன் முன் வந்து நின்றாள் யமுனா.
வெளிர் நீல நிறத்தினிடையே அவளது இடுப்பு தனித்து தெரிந்தது.
“ம்ம்“
அவளது வடிவமும், சேலையுடுத்தியிருந்த விதமும் அவனுக்குள் கிளர்ச்சி ஏற்படுத்தியது. அவனது அடுத்த செய்கைக்காக காத்திருப்பதான தோரணையில் யமுனா நின்றிருந்தது அவள் விழைவை குறிப்புணர்த்தியது.
கட்டிலில் அமர்ந்திருந்தபடியே அவளை இரு கைகளைக் கோர்த்து அணைத்தான். அவள் வயிற்றுக்கு நேராக அவன் முகம் பொதிந்தது. விழிகளில் இருள் நிறைக்க, ஏதோ ஒரு நதியின் ஆழத்திற்குள் ஆழ்ந்து செல்வதைப் போலிருந்தது. யமுனா அவன் தலையின் பின்புறமாக தனது கைகளைக் கோர்த்துக் கொண்டாள்.
இரத்தமும் சதையுமான இந்த உடலில்தான் வாழ்வின் பிரியங்கள் புதைந்து கிடக்கிறதா? வெற்று உரசல்களில் பூர்த்தியாகி விடுவதா அன்பு. வயிற்றில் பதிந்த உதடுகள் இறுகிக்கிடக்க அவனுக்குள் யோசனை ஊதிப் பெருத்தபடியிருந்தது, உடல் கிளர்ச்சி எப்போதும் அவனை அலைக்கழித்ததில்லை.
கேள்விகள். ஓயாது துரத்தும் கேள்விகள் அதற்கான நிமிடங்களையே தருவதில்லை.
நேற்று காலை கிளம்பும்போதே எப்போதுமில்லாமல் அதிகமாய் வேலைகள் இருந்தது. பல நேரங்களில் எந்த வேலையுமில்லாமல் சும்மாவே இருப்பான். அந்த நேரங்களில் படிப்பது மட்டுமே பிரதானமான வேலையாக இருக்கும். மனதொப்பி செய்கிற வேலை அது ஒன்றுதானே. அவனைப் பொறுத்தவரை எத்தனையோ விஷயங்களுக்காக சகித்துக் கொள்ள முடியாத அவன் வாழ்க்கையின் துயரங்களிலிருந்து ஒரு தற்காலிக விடுபடல் படிக்கிறதுதான். அவன் அகலமற்ற நீண்ட வீட்டின் சிறு அறைக்குள்ளாக இருந்து கொண்டு படிக்கிற போது கூடு விட்டு கூடு பாய்வது போல வேறோர் உலகிற்கு பயணிக்கிறதே ஆறுதலாயிருந்தது.
யமுனாவைப் படுக்கையில் கிடத்தினான். அவள் சேலை கசங்கிவிட்டால் மறுபடி கட்ட வேண்டியிருக்கும் என்பதாகச் சொல்லி அவன் கன்னத்தில் சிறு முத்தமொன்றைப் பதித்து மறுபடியும் சேலையைச் சரி செய்யத் தொடங்கினாள். அறைப் பையனிடம் காலை உணவு எடுத்துவரச் சொல்லி கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாகியிருந்தது. இன்னும் வரவில்லை.
அது ஒரு பெரிய நகரம்தான். நெருக்கடியான வீடுகளும், வீட்டின் முன் குப்பைத் தொட்டியொன்றும், சிறு மரமொன்றும் என அந்தச்சாலை திட்டமிடலோடு வடிவமைக்கப்பட்டிருந்தது. நேற்றைய இரவு முழுவதுமான சந்தோஷத்திற்குப் பிறகு விடிந்திருக்கும் இன்றைய பொழுது நன்றாகத்தான் விடிந்திருக்கிறது. இரவுகள்தான் அவனுக்குள்ளாக பல சிந்தனைகளை எழுப்பிச் செல்பவை. ஒவ்வொரு பகலின் இயலாமைகளும், குற்றவுணர்ச்சியும் இரவுகளில் உறங்கவிடாமல் நசுக்கும். சந்தோஷம், துக்கம் இதெல்லாம் ஒரு மனநிலைகள்தானே என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வான்.
அறைக்கதவு தட்டப்பட்டது. யமுனா கதவைத் திறந்தாள். அறைப் பையன் டிபன் எடுத்து வந்து உள்ளே வைத்துவிட்டு, பதிலை எதிர்பாராமல், வேறு எதாவது வேண்டுமா என கேட்டுவிட்டுச் சென்றான்.
அலைபேசி மணியடித்தது.
“சாப்பிட்டீங்களா. எப்போ கிளம்புவீங்க. ராத்திரி வந்துருவீங்களா“
எப்போதும் போலவே சுசிலா பேசினாள். இதுதான் அவள் வாழ்க்கையில் அவனிடம் அதிகம் முறை பேசிய வார்த்தைகளாக இருக்கும். பள்ளியில் படிக்கும் போதெல்லாம் அவன் கிட்டேயே வரமாட்டாள். ஒரு முறை காதருகில் சென்று ‘கூ‘வென கத்தியதற்கு அரண்டு போய் கண்களில் நீர் திரள அவள் ஓடியது இப்போது நினைவுக்கு வருகிறது. அவளைப் பற்றி அதிகம் யோசித்ததில்லை. ஆனால் சுசிலா பேசுவது குறைவு என்றாலும் ஞாபகம் அவனைப் பற்றியதாகவே இருக்கும்.
உடம்பே எடையற்று இலேசாகிப் போனது போல் இருந்தது. தொடர்ந்து படுத்துக் கொண்டே இருந்தது காரணமாய் இருக்கக்கூடும்.
“வாடா டிபன் சாப்பிடலாம். அப்புறம் கிளம்ப நேரமாகிடும்“ என்றாள் யமுனா.
“எனக்கு இரண்டு இட்லி போதும்“ என்று சொல்லியபடியே டிபனை பிரித்து இருவருக்குமாக எடுத்து வைத்தாள்.
எனக்கு அதிகப் பசியாக இருந்தது. எப்போதாவதுதான் இப்படியிருக்கும், வீட்டிலிருக்கும்போது சாப்பிடவே தோன்றுவதில்லை. இரண்டு இட்லியை சாப்பிட்டு முடித்தவள் என்னிடமிருந்த இட்லியையும் சாப்பிடத் தொடங்கினாள். சாப்பிட்டு கை கழுவிவிட்டு வந்தமர்ந்தார்கள்.
அவன் கைகளைப் பிடித்து தன் இருபுற கன்னங்களிலும் அழுந்தத் தேய்த்துக் கொண்டாள். இருவரது முகத்திலும் மகிழ்ச்சியோ துயரமோ அற்ற முகச்சாயல் இருந்தது.
இதயத் துடிப்பு கூட நின்று விட்டதோ என எண்ணும் அளவுக்கு அவனுக்குள் ஒரு பெரிய அமைதி ஏற்பட்டிருந்தது. எதனால் இத்தகையதொரு அமைதி ஏற்பட்டது என்று தெரியவில்லை.
“சரி கிளம்புவோம்டா“
“ம்.. போகலாம்“
பையை எடுத்துக் கொண்டு அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தார்கள். இந்த இரண்டாவது நாளிலேயே மிகவும் பழகிப்போன இடத்திலிருந்து வேற்றிடத்திற்கு செல்வதைப் போல உணர்ந்தான். யமுனா அவன் கைகளைத் தன் கையுடன் கோர்த்துக் கொண்டாள். மெல்ல விடுவித்துக் கொண்டு அறைச்சாவியை வரவேற்பறையில் கொடுத்து விட்டு வந்தான்.
வெளியே உக்கிரமாயிருந்த வெயில் அவர்களைத் தாக்க தயாராயிருந்தது. யமுனா எதோ பேசிக் கொண்டே வந்தாள். அவனது கவனம் ஆட்டோவை அழைப்பதில் இருந்தது. ஆட்டோவில் ஏறியதும், நெருக்கமாய் அமர்ந்து அவன் கைகளைப் பிடித்தபடி அலுவலகப் பிரச்சனைகள், திரைப்படம் பற்றிய கருத்துக்கள் என்றெல்லாம் மறுபடியும் பேசத் தொடங்கினாள்.
வீட்டுக்குப் போனதும் சொல்ல வேண்டியிருக்கிற சமாதானங்கள் குறித்து இப்போதே அவன் மனதிற்குள்ளாக கோர்வையாக்கி வைத்துக் கொண்டான். அவனது பொய்கள் எளிதாக வெளிப்பட்டுவிடும். பொய் சொல்வதற்கேயுரிய சாமர்த்தியமும், மனதின் உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டாமல் இருப்பதும் அவனுக்கு வாய்க்கவில்லை.
பேருந்து நிலையம் வந்து விட்டது. ஆட்டோவிற்கு பணம் கொடுத்தான். ஆட்டோவிலிருந்து இருவரும் இறங்கினார்கள். அவனுக்கு வெறுமையாக இருந்தது. யமுனாவின் முகமும் அதையே காட்டியது.
“அப்புறம்“ சுவாரசியமற்ற குரலில் கேட்டான்.
“ஏண்டா... அவ்வளவுதானா? பேச ஒண்ணுமில்லையா? உனக்கு ஞாபகமெல்லாம் எங்கேயோ இருக்கு. நான் பேசிட்டே வந்தேன் நீ எதுவுமே பேசலை. இன்னைக்கு ஒரு நாள்தானே? இதுக்கப்பறம் எப்பவோ....“
யமுனா பேசியதைக் கேட்டதும் புத்திசாலித்தனம்தான் ஒவ்வொருத்தருக்கும் எதிரி என்று தோன்றியது.
“நான் நினைக்கறதை எப்படி நீ சரியா சொல்லிட்டே“ என்றான்.
“ரொம்ப கஷ்டமா இருக்கு“ அவன் கைகளைப் பற்றினாள்.
“எனக்கும்தான்“ அவனுடைய அப்போதைய கஷ்டம் வேறு. சொன்னால் புரிந்து கொள்ளமாட்டாள். கூடவே போய்ச் சேரும் வரை அதையே நினைத்து வருத்தப்படுவாள்.
பேருந்து வந்ததை இருவரும் கவனித்தார்கள்.
“இல்ல அடுத்த பஸ் வரட்டும்“ என்றாள்.
“சரி“ சுயஇரக்கத்தோடு குரல் முழுமையாக வெளிவரவில்லை. சுற்றிலும் ஜனத்திரள் முடிவற்ற ஓட்டத்திலும், நடையிலும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கும் இரைச்சல். நிமிடங்கள் கடப்பதற்கு மணி நேரம் ஆவது போலிருந்தது. பேச்சின்றி சிறிது நேரம் கழிந்தது. யமுனா மறுபடியும் அவன் கையைப் பிடித்தாள். அவன் விடுவித்துக் கொள்ளவில்லை. அவன் கேள்விகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தான்.
குற்றவுணர்ச்சி அவனை அழுத்தியது. எல்லோரைப் போலவும் இயல்பாக இருப்பதற்கான தகுதி தனக்கில்லை என்று நினைத்துக் கொண்டான். வெயில் தோய்ந்த காற்றை சுவாசிக்கையில் மூக்கின் வழியே உள்செல்கிற போது சூட்டை உணர முடிந்தது.
அடுத்த பேருந்து வந்து கொண்டிருந்தது. அவன் முகத்தின் இறுக்கத்தையே யமுனா பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சரிடா, பஸ் வந்துடுது. நான் கிளம்பறேன். போன்ல பேசுவோம். சரியா“ என்றாள் யமுனா.
அவன் சரி என்றான். வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை. பேருந்தில் ஏற்றிவிட்டு “தண்ணீர் வாங்கித் தரவா“ என்று கேட்டான். “வேண்டாம்“ என்று சொன்னாள்.
“சரி போயிட்டு போன் பண்ணு“
“சரி“
பேருந்து புறப்பட்டது. கையசைத்து விட்டு சாலையைத் தாண்டி எதிர்ப்புறம் வந்து அவனது பேருந்திருக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
000
- பொன்.வாசுதேவன்
வாசு எளிமையா, இயல்பா எழுதியிருக்க..கொஞ்சம் அனுபவமும் இருக்கோ?
ReplyDeleteஅவர்கள் சாப்பிட்ட இட்லி குஷ்பூ இட்லியா?:)))
ReplyDelete//வெற்று உரசல்களில் பூர்த்தியாகி விடுவதா அன்பு//
ReplyDelete//புத்திசாலித்தனம்தான் ஒவ்வொருத்தருக்கும் எதிரி//
intha 2 varikal mikavum pidiththana.....
kathai purinthathu.solliyavitham arumai.vaarththaikalin vazhi manam payaniththathu!
vaazhththukkal vaasu sir!
அவனை ஒழுங்க இருக்க சொல்லுங்க பாவம் சுசீலா.
ReplyDeleteஜோக் அபார்ட். கதை ரொம்ப நல்லா இருக்கு வாசு. ஏன் எங்கேயும் அனுப்பாமா நீங்களே போஸ்ட் பண்ணிட்டீங்க
நன்றாக இருக்கிறது வாசு சார்.
ReplyDelete//எனக்கு அதிகப் பசியாக இருந்தது. எப்போதாவதுதான் இப்படியிருக்கும், வீட்டிலிருக்கும்போது சாப்பிடவே தோன்றுவதில்லை. இரண்டு இட்லியை சாப்பிட்டு முடித்தவள் என்னிடமிருந்த இட்லியையும் சாப்பிடத் தொடங்கினாள். சாப்பிட்டு கை கழுவிவிட்டு வந்தமர்ந்தார்கள்.//
இந்த இடம் கொஞ்சம் குழப்புகிறதோ?
-ப்ரியமுடன்
சேரல்
ம்ம்ம். அருமை வாசு.
ReplyDeleteமிக அருமை என்பதைத் தவிர்த்து ஏதோ சொல்லத் தோன்றுகிற போதே... பிற்பாதியில் வரும் வெறுமையின் இறுக்கம் எனக்குள்ளும்..
ReplyDeleteஎனக்கு கொஞ்சம் குழப்புற மாதிரி இருக்குங்க..
ReplyDeleteபாலகுமாரனின் சுயசரிதம் ஒத்த ஓர் நாவலில் தன் இரண்டாம் மனைவியை அழைத்து வாழத் துவங்கும் நாட்களில் இது போன்ற ஒரு அத்தியாயம் வரும் வாசு சார்
ReplyDeleteஉங்களின் இந்தக் கதை எளிமையான சொற்களில் மிகுந்த அழுத்தத்துடன்
இடையில வர்ர ஒரு பத்தியத்தவிர (சேரல் குறிப்பிட்டது) மற்றபடி கதையோட்டம் தெளிவா இருக்கு...
ReplyDeleteதேவையான இடங்களில் வர்ணனைகள் சிறப்பா பொருந்தியிருக்கு சார்....
அருமை வாசு!
ReplyDeleteசேரல்,
எனக்கென்னவோ அந்த பகுதி மிக நுண்ணியமானது என தோன்றுகிறது. :-)
நாடகத்தனம் இல்லாமல் நடக்கும் நிறைய பேர் தங்களோடு பொருத்திப் பார்க்கும் ஒரு கதை. நல்லா எழுதி இருக்கீங்க.
ReplyDeleteகருத்துரை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு அன்பும், நன்றியும்...
ReplyDeleteநண்பர்கள் சேரல் மற்றும் சி.பாலாஜி....
சிறு விளக்கம்.
//“எனக்கு இரண்டு இட்லி போதும்“ என்று சொல்லியபடியே டிபனை பிரித்து இருவருக்குமாக எடுத்து வைத்தாள்.
எனக்கு அதிகப் பசியாக இருந்தது. எப்போதாவதுதான் இப்படியிருக்கும், வீட்டிலிருக்கும்போது சாப்பிடவே தோன்றுவதில்லை. இரண்டு இட்லியை சாப்பிட்டு முடித்தவள் என்னிடமிருந்த இட்லியையும் சாப்பிடத் தொடங்கினாள். சாப்பிட்டு கை கழுவிவிட்டு வந்தமர்ந்தார்கள்.//
இந்த வரிகளை மீண்டும் வாசியுங்கள். எனக்கு இரண்டு இட்லி போதும் என்கிறாள் முதலில். அவனுக்கு அதிக பசி. அவள் இரண்டையும் சாப்பிட்டுவிட்டு அவனிடமிருந்த இட்லியை உண்ணத் தொடங்குகிறாள். இதுதான் சொல்ல வந்தது. சரியாகவே சொல்லியிருக்கிறேன்.
நன்றி.
- பொன்.வாசுதேவன்
நல்ல வர்ணனையுடன் கூடிய கதை.
ReplyDeleteபொன்.வாசுதேவனின் சில கதைகளில் ஆரம்ப கால பாலகுமாரனின் சாயல் தென்படுகிறது,இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன்.நான் சொல்வது அவர் கரையோர முதலைகள் ,இரும்பு குதிரைகள் .போன்ற நாவல்கள் எழுதிய காலம் .வாசுவும் அவ்வாறு எழுத வேண்டும்
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க வாசு.
ReplyDelete'அப்புறம்' என்று அவன் கேட்கிற இடம் பிடித்திருக்கிறது. அது நிறைய சொல்லாமல் சொல்வதைப் போல தோணுது. பேசணும் ன்னு தோணினாலும், பேச முடியாது குழம்பியிருக்கும் அவன் மன நிலையை வெளிப்படுத்துவதாய், சூழ்ந்திருந்த வெறுமையை போக்க முயலும் அவனது ஒரு சிறு எத்தனிப்பாய், மனதின் குழப்பங்களை அவள் அறியாமல் மறைக்கவும் மறைக்க முடியாமலும் துடிக்கும் அவனது தவிப்பாய்,... இப்படி நிறைய அந்த ஒரு வார்த்தையில் இருப்பது போல இருக்கிறது.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
# தலைக்கு குளித்து வந்திருந்த அவள் உடல் ஆள்நடமாட்டமற்ற கடற்கரை மணலைப்போல வெண்மையாக நுட்பமான மினுமினுப்போடு இருந்தது.#
ReplyDelete#இரத்தமும் சதையுமான இந்த உடலில்தான் வாழ்வின் பிரியங்கள் புதைந்து கிடக்கிறதா? வெற்று உரசல்களில் பூர்த்தியாகி விடுவதா அன்பு.#
குழந்தையைக் கொஞ்சுவதுபோல கொஞ்சத் தோன்றும் மொழி
mm, speaks a lot
ReplyDelete