“அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும்“ - மனுஷ்ய புத்திரன்
நேர்காணல் : பொன்.வாசுதேவன்
மனுஷ்ய புத்திரனை அவரது நேர்காணல்களின் இரண்டாவது பகுதிக்காக மார்ச் 2 ஆம்தேதி அவரது அலுவலகத்தில் மீண்டும் சந்தித்தேன். "விட்ட இடத்திலிருந்து தொடந்து பேசலாமா?" என்று கேட்டேன். "எந்த இடத்திலிருந்தும் தொடங்கலாம்" என்றார்.
பொன் வாசுதேவன் :
சாருவை உயிர்மை அளவுக்கு மீறி கவனப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறேன், என் நண்பர்களுக்காகத்தான் நான் இந்தப் பத்திரிகையை நடத்துகிறேன் என்று.தமிழ்ச் சூழலை உய்விப்பதோ அல்லது எல்லாவற்றையும் நாங்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்று நாடகமாடுவதிலோ எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லை. சாருவின் அபிப்ராயங்கள், அணுகுமுறைகள் தொடர்பான எனது மாறுபட்ட அபிப்ராயங்களை நான் திரும்பத் திரும்ப எழுதியிருகிறேன். கோணல் பக்கங்கள் இரண்டாம் தொகுதிக்கு நான்‘இந்தியா டுடே’யில் எழுதிய மதிப்புரையைப் போல சாருவைத் தவிர வேறு யாருக்கும் எழுதினால் அவர்கள் ஜென்மத்திற்கும் என் முகத்தில் முழிக்க மாட்டார்கள். ஆனால் அவர் தொடர்ந்து என்னிடம் நட்பு பாராட்டினார். இதெலாம் உயிர்மைக்கு முந்தைய கதை. ஆனால் அவரைச் செயல்படவிடாமல் தடுப்பதன் மூலமாக அவரை இல்லாமல் ஆக்க யாரும் நினைத்தால் நான் சாருவின் பக்கம் நிற்பேன். பரஸ்பரம் கொண்டாடவும் கடுமையாக மறுத்துக் கொள்ளவும் ஒருவன் வேண்டாமா? தமிழ்ச்சூழலில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு எழுத்தாளர் என்றால் அது சாருதான். அதுகூட ஒருவிதமான மொண்ணையான பிரச்சாரத்தால் உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியச் சூழலின் விழிப்பு நிலையினை உருவாக்கியதில் அவருடைய பங்கு முக்கியமானது. பொலிடிக்கல் கரெக்ட்னெஸ்சிற்கு எதிராக, டிப்ளமசிக்கு எதிராகப் பேச ஒரு ஆளாவது வேண்டாமா? இன்றைக்கு என்னை மகாகவி என்று எழுதுவார். நாளை என்னைத் தலைகுப்புறக் கவிழ்க்கவும் செய்வார். இது ஒரு முரண்பாடு அல்ல. நாம் வெவ்வேறு ஆளுமைகளாக சிதறுண்டு போயிருக்கிறோம். இதில் பிம்பங்களை உருவாக்குவது அபத்தம். பிம்பங்களைக் கலைத்து அடுக்குவதும் அதனோடு விளையாடுவதும்தான் இன்றைய பின் நவீனத்துவ உலகில் சாத்தியம். சாரு அதைத்தான் செய்கிறார். இதற்காகத்தான் அவரை நான் நேசிக்கிறேன். அறிவுசார்ந்த துணிச்சல் இல்லாதவர்களால் இதைத் தாங்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.
அவர் அடைந்த இடம் என்பது அவரின் எழுத்துக்கள்வழியே அடைந்தது. உயிர்மை அதற்குச் சிறிதளவு பயன்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே.
உயிர்மையின்மீது பொதுவாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது அரசியல் அதிகார மையத்தை நோக்கித் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கிறது. அது சார்ந்த செயல்பாடுகளை முன்னிறுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. இது ஒரு இலக்கியச் சூழலில் செயல்படும் பத்திரிகைக்குப் பொருத்தமானது என்று நினைக்கிறீர்களா?
மனுஷ்ய புத்திரன் : வாசுதேவன், இதை நான் உங்கள் கேள்வியாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. ஒரு நபர் தொடர்ந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மாதாமாதம் தன் பத்திரிகையில் அழுவதைத் தாங்கமுடியாமல்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று சந்தேகமாக இருக்கிறது. உயிர்மை அதிகாரத்தின் அடிவருடி.அவர் அதிகாரத்திற்கு எதிரான போராளி. இதை நிறுவுவதற்காக அவரும் அவரது ஊழியர்களும் உயிர்மையையும் அதன் எழுத்தாளர்களையும் வசைபாடி வசைபாடி வைக்கும் ஒப்பாரியைப் பார்த்தால் எனக்கே கண்ணீர் வருகிறது. இந்தத் துன்பத்திலிருந்து இந்த நபரை விடுவிப்பதற்கு நான் செய்யக்கூடியது எதுவும் இருந்தால் நிச்சயம் செய்வேன்.
ஒருவர் தனக்கு நூலக ஆணை மறுக்கப்பட்டது என்று அதிகாரத்திற்கு எதிரான புரட்சியாளராக மாறுவது சாத்தியம் என்றால் வேறு சில அற்பக் காரணங்களுக்காக ஒருவர் அதிகாரத்தின் அடிவருடியாகவும் மாறுவது சாத்தியம்தான் இல்லையா?. நமது அட்டைக்கத்தி கோமாளி புரட்சியாளர் சிந்திக்கவேண்டும்.
தனக்கு நூலக ஆணை மறுக்கப்பட்டதைப் பற்றிப் பேசும் கோமாளிப் புரட்சியாளர் யார் மூலமாக அந்த நூலக ஆணை தனக்குக் கிடைத்தது என்பதையும் வெளிப்படையாகச் சொல்லவேண்டும். நூற்றுக்கணக்கான சிறுபத்திரிகைகள் வெளிவரும் சூழலில் தனது பத்திரிகைக்கு மட்டும் அந்த ஆணை கிடைத்தது உரிய வழிமூலமாகத்தான் என்று அவர் சொல்லத் துணிவாரென்றால் அவரது நிழல்கூட அவரைக் காறித் துப்பும்.அன்று கனிமொழி உதவினார். அதனால் அவரது முதல் நாடாளுமன்ற உரை அவசர அவசரமாக மொழி பெயர்க்கப்பட்டு அந்தப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. இப்போது கனிமொழி உதவ வில்லை. அதனால் அவர் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்.
ரவிக்குமாருக்கும் நடந்தது அதுதான். அவர் அந்தப் பத்திரிகையின் உடன் இருந்தது அதன் சாதிய அடையாளங்களை மறைக்கப் பயன்பட்டது. அவரது முதல் சட்டமன்ற உரை ஆரவாரத்துடன் வெளியிடப்பட்டது. இப்போது அவர் உடன் இல்லை என்றதும் கோமாளிப் புரட்சியாளர் ரவிக்குமார் மேல் விழுந்து பிராண்டுகிறார்.
'தமிழச்சி தங்கபாண்டியன் இன்னொரு பிராண்டல் இலக்கு. நமது புரட்சியாளர் நடத்துகிற மாநாட்டில் தமிழச்சி நாடகம் நடித்து சுந்தர ராமசாமியின் பிரதிகளை நிகழ்கலையாக நடத்தினால் அவரிடம் போய் எங்கள் இணைய இதழுக்கு ஆசிரியராக இருங்கள் என்று கெஞ்சலாம்.அவர் தங்கள் எல்லைக்குள் இல்லை என்று தெரிந்ததும் அவரை நோக்கி அதிகார மையம் அதிகார மையம் என்று கூப்பாடு போட்டுப் பிலாக்கணம் வைக்கலாம்.
எழுத்தாளர் இமையம் வரை இந்த வரலாறு தொடர்கிறது. தங்கள் வட்டத்திற்குள் யார் இருக்கிறார்கள், இல்லை என்ற அடிப்படையில்தான் கோமாளிப் புரட்சியாளரின் அட்டைக் கத்தி புரட்சிகள் தொடங்குகின்றன.கனிமொழி, ரவிக்குமார் போன்ற வெகுசன அரசியல் அடையாளம் கொண்டவர்களின் பெயர்களைத் தம்மோடு இணைத்துக்கொண்டு ஆதாயமடையலாம் என்று கனவுகண்டது யார் என்பதைத் தமிழ் வாசகர்கள் நன்கறிவார்கள். அந்தக் கனவு நிறைவேறாது என்று தெரிந்ததும் இப்போது அதிகார எதிர்ப்பு அரசியல்.
அதிகாரம், அதைப் பயன்படுத்தி விருதுகள் பெறுவது பற்றியெல்லாம் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். சல்மா எந்த அரசியல் தகுதியின் அடைப்படையில் இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பினை அடைந்தார் என்பதைக் கோமாளிப் புரட்சியாளர் எழுதலாமே.அசோகமித்திரனும் ஞானக்கூத்தனும் இந்திரா பார்த்தசாரதியும் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் அ.மார்க்ஸும் போன்ற சர்வதேச இலக்கியத்தோடு தொடர்புகொண்ட பல எழுத்தாளர்கள் வாழக்கூடிய ஒரு சூழலில் இவர்களை எல்லாம்தாண்டி குறைந்தப்பட்ச தொடர்பியல் மொழிகூட இல்லாத சல்மா ஜெர்மன் புத்தகக் கண்காட்சிக்கு அழைக்கப்பட்டாரே அது எப்படி என்றோ,இன்றளவு அவர் மேற்கொண்டுவரும் உலகப் பயணங்கள் எந்த அடிப்படையில் நிகழ்கின்றன என்றோ நமது அதிகார எதிர்ப்பாளர் துணிச்சலாக எழுதலாமே. எழுத முடியாது. கோமாளிப் புரட்சியாளரின் இரட்டை நாக்கு வேறு வேறு திசைகளில் நகரக்கூடியது.
உண்மையில் எனக்கு அதிகார மையத்தைச் சேர்ந்த என் நண்பர்களை இப்படியெல்லாம் பயன்படுத்தவேண்டிய அவசியமோ, எனது நோக்கம் நிறைவேறாதபோது அவர்களை வசைபாடவேண்டிய மனப் பிராந்தியோ எதுவும் இல்லை.
சிறுபத்திரிகையோடு தொடர்புடையவர்கள் அதிகார மையதிற்கு நெருக்கமாகச் செல்லும்போது எவ்வளவு ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.உயிர்மையை அழிப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஒரு உலக இலக்கிய இதழை நடத்தும் ஆசாமியின் நண்பர்கள் இருவர் ஒருமுறை நூலகத் தேர்வுக் குழுவில் இடம்பெற்றார்கள். உயிர்மை அந்த ஆண்டு விண்ணப்பித்திருந்த அத்தனை நூல்களுக்கும் எதிராக அவர்கள் தங்களது குறிப்புகளை எழுதிவைத்தார்கள். உயிர்மையின் முதுகெலும்பை அதன் மூலம் முறிக்கலாம் என்று நினைத்தார்கள்.வேறு ஒரு நண்பர்மூலம் இதை அறிந்தேன். அடுத்த நாள் அந்தக் குறிப்புகள் அனைத்தும் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தேன். அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்றால் என்னவென்பதை அவர்களுக்கு வேறு வழியில் காட்டினேன்.
இன்று உயிர்மையோடு சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் சிலர் அரசியல் தொடர்புடையவர்கள் எனில் அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். மற்ற எழுத்தாளர்கள் தங்கள் நூல் வெளியீட்டுக் கூட்டங்களுக்குத் தமக்கு உவப்பான எழுத்தாளர்களை அழைப்பது போல சில சமயம் அரசியல் தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள். இதில் உயிர்மைக்கு எந்த ஆதாயமும் கிடையாது. குறுக்கு வழியில் உயிர்மை எந்த ஆதாயத்தையும் நாடிப்போனது கிடையாது.
இலக்கிய மாநாடுகளை நடத்தி தமிழ்நாட்டில் முதன்முதலாகப் பெரும்கூட்டத்தைக் கூட்டியவர்கள் நாங்கள்தான் என்று பெருமையடித்து வந்த நமது கோமாளிப் புரட்சியாளர் இன்று அந்தச் செல்வாக்கு வேறு நபர்களிடம் போய்விட்டதைப் பார்த்து மண்ணில் விழுந்து புரண்டு அழுகிறார். இலக்கியக் கூட்டங்களில் பெரும்கூட்டம் கூடுவதைப் பற்றிப் புலம்பி இந்த வெள்ளத்தில் சிறிய விஷயங்கள் அடித்துச் செல்லப்படுவதைப் பற்றிக் கண்ணீர் விடுகிறார். இதே குற்றச்சாட்டு இதற்கு முன்பு தன்மீதும் தன் பத்திரிகைமீதும் வைக்கப்பட்டபோது அதை எப்படிக் கேலியும் கிண்டலும் செய்தார் என்பது அவருக்கு மறந்துபோய்விட்டது. அப்துல் கலாமை தான் நடத்திய கூட்டத்திற்கு நமது கோமாளிப் புரட்சியாளர் வரவழைத்தது அப்துல் கலாம் அதிகார மையத்தைச் சேர்ந்தவர் என்பதால் அல்ல, அவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதால் என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்துல் கலாம் தனது பத்திரிகை பற்றிச் சொன்ன பொன்மொழி ஒன்றைத் தனது விளம்பர வாசகமாகப் பயன்படுத்தியது அந்த வாசகத்தைச் சொன்னவரின் பெயரை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்காக அல்ல; அந்தக் கருத்தின் ஆழத்திற்காகத்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தீப்பொறி ஆறுமுகம் அ.தி.மு.க வில் சேர்ந்தபோது கலைஞர் தன் மகனுக்கு வேலை வாங்கிக் கொடுக்க மறுத்துவிட்டார் என்று அதற்குக் காரணம் கூறினார். நமது அட்டைக் கத்தி புரட்சியாளரின் அதிகார எதிர்ப்பும் கிட்டத்தட்ட இதற்குச் சமமானதுதான்.
நான் கனிமொழி போன்றவர்களிடம் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்வது இதுதான். இவர் இன்று போடுகிற அதிகார எதிர்ப்பு நாடகங்களை உண்மை என்று நம்பி இவருக்கு எதிராக எதுவும் செய்துவிடாதீர்கள். உங்கள் உடன் இருக்கும் யாராவது சிறுபத்திரிகை ஆசாமிகள் அப்படிச் செய்யுமாறு உங்களைத் தூண்டுவார்கள். அதற்குப் பலியாகிவிடாதீர்கள். பிறகு அதற்கும் சேர்த்துப் புரட்சியாளர் அடையாளத்தை claim பண்ண ஆரம்பித்துவிடுவார். தமிழ் வாசகர்கள் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ என்ற கூச்சலைக் கேட்டு போரடித்துப் போயிருக்கிறார்கள். மேற்கொண்டு அவர்களால் தாங்க முடியாது.
உயிர்மை தனது வியாபார நோக்கங்களுக்காக சர்ச்சைகளைச் தொடர்ந்து உருவாக்குகிறது, ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப் படுகின்றனவே?
தெருவில் ரெண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டால் அதைக் கூடி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்காகத்தான் அந்தச் சண்டை நடக்கிறது என்று நம்ப ஆரம்பிப்பது போன்றதுதான் இது. சண்டை போடுகிறவனுக்கு ஒரூ நோக்கம் இருக்கிறது. வேடிக்கை பார்ப்பவனுக்கு எந்த நோக்கமும் இல்லை. தன் நேரத்தையும் மனதையும் அழித்துக் கொள்வதைத் தவிர. இரண்டு எழுத்தாளர்கள் சண்டை போட்டுக் கொண்டால் அவர்கள் புத்த்கம் விற்குமா? கேளிக்கை நாடி இந்தச் சண்டைகளை விரும்பிச் சுவைப்பவர்களும் புத்தகம் படிப்பவர்களும் வேறு வேறு வர்க்கம்.
ஒரு எழுத்தாளன் அல்லது ஒரு பதிப்பகம் ஒரு சூழலில் பெறும் முக்கியத்துவத்தின் காரணங்கள் ஆழமானவை. அவை உழைப்பிலிருந்தும் அறிவார்ந்த ஒழுங்கிலிருந்தும் பிறப்பவை. இது இல்லாதவர்கள இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் சர்ச்சைகளினால் வியாபாரம் நடக்கிறது என்று எழுதுகிறார்கள்.. வித்தை காட்டி காசு வாங்கும் மோடி மஸ்தானையும் தமிழ் எழுத்தாளனையும் ஒன்றாகக் கருதும் ஆட்கள் இருக்கும் வரை இத்தகைய குற்றச்சாட்டுகள் எழத்தான் செய்யும்.
ஒழுக்கம் சார்ந்த கருத்துக்களை நிர்மூலமாக்குவதன் வழியே தங்கள் படைப்பினை முன்வைக்கும் படைப்பாளிகளின் பார்வை சரியான ஒன்றா?
அப்படிப்பட்ட படைப்பாளிகள் யாரும் தமிழில் இருக்கிறார்களா என்ன?எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சுகிர்தராணியையும் லீனா மணிமேகலையையும் உதாரணமாய் வைத்து இந்தக் கேள்வியை கேட்டு என்னை காமெடி பண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இலக்கியம் எப்போதுமே பிறழ்வுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசுகிறது. சீதையின் மேல் ராவணன் கொள்ளும் காதல், லஷ்மணனின் மேல் சூர்ப்பனகை கொள்ளும் காதல், வாலி தன் தம்பி சுக்ரீவனின் மனைவி தாராவின் மேல் கொள்ளும் இச்சை இதெல்லாம்தான் ராமாயணம்.
மகாபாரதத்தில் ஐவருக்கு மனைவியாக வாழும் பாஞ்சாலி, அவளைச் சபையில் துகிலுரியும் துரியோதனன், கர்ணனின் பிறப்பின் மர்மம் இதெல்லாம்தான் மகாபாரதம்.
நமது மாபெரும் காப்பியம் சிலப்பதிகாரம் கடைசியில் ஒரு ஆண்,இரண்டு பெண் என்ற பாலியல் கதைதானே. நம்முடைய மரபில் எதைப் பார்த்தும் யாருக்கும் எந்த அதிர்ச்சியும் கிடையாது. அதிர்ச்சி என்பது போலியான சமூகப் பாசாங்கு.
சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஒரு கவிதையில் நாலு இடத்தில் யோனி என்ற வார்த்தையையோ, குறி என்ற வார்த்தையையோ பயன்படுத்தினால் உடல் மொழியையும் பாலியலையும் எழுதிவிட்டோம் என்று உரிமை கோருகிறார்கள். இதைவிட சுலபமானது, ஒரு பெண் குறியின் அல்லது ஆண்குறியின் புகைப்படத்தைப் பிரசுரிப்பது.
தமிழில் மொனியும் கு.ப.ராஜகோபாலனும் லா.ச.ராமாமிருதமும் ஜானகிராமனும்தான் உண்மையில் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள். அவர்கள் அதைப் பற்றிய ஆழமான படிமங்களையும் மனச் சித்திரங்களையும் உருவாக்குகிறார்கள்.
மாறாக, வேசிகளைப் பற்றி எழுதிய ஜி. நாகராஜனின் எழுத்துக்கள் எதுவும் பாலியல் சார்ந்தது அல்ல. இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் சும்மா புணர்ச்சி புணர்ச்சி என்று எழுதுபவர்கள் அந்தச் சொல்லைக் கல்லில் அழுத்தி தேய்கிறார்களே ஒழிய, அந்தச் சொல்லின் பரவசத்தை அவர்களால் நெருங்கக் கூட முடியவில்லை. உண்மையில் பெரும்பாலான நவீன எழுத்தாளர்கள் பாலியல் குறித்த வக்கிரத்தையோ ஏக்கத்தையோதான் எழுதுகிறார்களே தவிர அதன் பரவசத்தை, அதன் மனோ விசித்திரங்களை அவர்களுக்கு எழுதத் தெரியாது என்பதுதான் என் அபிப்ராயம்.
விந்தும் மாதவிடாய் குருதியும் பற்றிய வெற்றுச் சித்திரங்களை தமிழில் பாலியல் இலக்கியங்கள் என்றோ ஒழுக்க மதிப்பீடுகளைக் குலைக்கும் எழுத்துக்கள் என்றோ நாம் அறிவித்துக்கொண்டால் நாம் பைத்தியம் இல்லையா? பெரும் மேதமைகொண்ட ஒரு எழுத்தாளனே மதிப்பீடுகளைக் குலைக்கும் எழுத்துக்களை எழுத முடியும்.இலக்கியத்திற்குள் ஷாப்பிங் செய்பவர்கள் எல்லாம் தமிழில் கலக எழுத்தாளர்களாக மாறிவிட்டார்கள். இதுதான் இந்த மொழிக்கு நேர்ந்த பெரும் அவமானம்.
நவீன தமிழ்க் கவிதையின் பொதுவான பண்புகளை நீங்கள் உடைத்திருக்கிறீர்கள். நீங்கள் உருவாக்கும் பிரத்யேகமான நடை நீங்கள் திட்டமிட்டு உருவாக்கிய ஒன்றா?
அதைத் திட்டம் என்று சொல்வதைவிட ஒருவிதமான கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு எழுத்தாளனும் இத்தகைய கண்டுபிடிப்பு முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டிருக்கிறான். அது ஒரு தங்கவேட்டை.சிலருக்கு அது வசமாகிறது. நான் என மன அமைப்பிற்குத் தகுந்த ஒரு மொழிக் கட்டுமானத்தைச் சிறிது சிறிதாக உருவாக்கி வந்திருக்கிறேன்.அதுகூட வெளிப்பாட்டின் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியில் உருவானதுதான். ஒரு குழந்தை எப்படி இந்த உலகை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைச் சிறிது சிறிதாக அறிந்துகொள்கிறதோ அதுபோலவே வெளிப்பாட்டின் பிரச்சினைகளை அறிந்துகொள்கிறேன். நடை என்பது என் கவிதைகளின் அதன் இயல்புகளின் சாராம்சமான தோற்றம். நவீன தமிழ்க் கவிதையின் பாசாங்கான பூடகத்தையும் இறுக்கத்தையும் என் கவிதைகள் தளர்த்த முயற்சித்திருக்கின்றன. உரையாடலின் சாத்தியங்களை அதிகமான கவிதைகளுக்குள் கொண்டுவருவதற்கு நான் மிகவும் பிரயாசைப்படுகிறேன். மேலும் பிரத்யேகமான அனுபவங்களைக் கவிதைக்குள் உருவாக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அன்றாடம் நாம் எதிர்கொண்டு கடந்து செல்லும் அல்லது கடந்து செல்ல முடியாமல் தத்தளிக்கும் பொதுவான அனுபவங்களை நான் கவிதைக்குள் கொண்டுவருகிறேன். அதற்கு லகுவான ஒரு ரகசிய ஓசையை மறைத்து வைத்துக்கொண்டிருக்கக் கூடிய ஒரு மொழி நடை தேவையாக இருக்கிறது.
பல கவிதைகள் ஒரெ மொழிநடையைக் கொண்டிருப்பதுபோல தோன்றுகிறதே?
இதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். கவிதைக்குக் கவிதை நடையை மாற்ற வேண்டும் என்கிறீர்களா? ஏற்கனவே சொன்னேன், நடைதான் என் இயல்பு என்று. நான் நான்கைந்து அடிப்படை கட்டுமானங்களைக் கவிதையில் பயன்படுத்துகிறேன். அதைத்தான் மாறி மாறிப் பிரயோக்கிறேன். சாத்தியமாகக் கூடியதும் அதுதான். கவித்துவத்தின் மன எழுச்சிக்கு ஏற்ப சில கவிதைகள் உயர்கின்றன. சில தாழ்கின்றன.எனினும் காலப்போகில் என் கவிதைகள் சிறுகச் சிறுக மாறுதலடைந்து வந்திருக்கின்றன. இந்த உடல் மாறுவதுபோல.
ஒரு கவிதையை எங்கிருந்து தொடங்குகிறீர்கள்?
எங்கிருந்து வேண்டுமானாலும். எனக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு வாக்கியம் மட்டுமே. அது எங்கிருந்தாவது காற்றில் பறந்து வரும். ‘எல்லாவற்றிற்கும் பின்னே ஒரு கதை இருக்கும்’ என்ற வாக்கியம் சாதாரணமானது. ஆனால் அந்த வாக்கியம் திடீரெனெ நம் மனதின் எல்லாத் தளங்களிலும் அதிரத் தொடங்கும். உண்மையில் அது ஒரு நிலநடுக்கம் போன்றது. இவ்வாறு சாதாரண வாக்கியங்களை, சாதாரண உண்மைகளை அசாதாரணமான எல்லைக்கு நகர்த்துவதே என் வழிமுறையாக இருக்கிறது.
எழுதும்போது உங்களை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?
கட்ந்த ஓராண்டாகத் தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வருகிறேன்.கவிதைக்குள் தொடர்ச்சியாக இயங்குவது கடும் உடல்நலக் குறைவை ஏற்படுத்துகிறது. எழுதுவது ஒரு வாதை. சவுக்கின் ஓசை காதில் கேட்டுக்கொண்டே இருக்கும். தீவிரமான மன நிலைகளைத் தொடர்ந்து வாழ்வது நமது ஆயுளைக் கணிசமாகக் குறைக்கக்கூடியது என்று தோன்றுகிறது.
உங்கள் வாழ்வின் ஆகச் சிறந்த வெற்றியாக நீங்கள் எதைக் கருதுவீர்கள்?
வெற்றி தோல்விகளின் அபத்தங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன்.இவ்வளவு நாள் இந்தப் பூமியில் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறேனே இதுதான் நான் அடைந்த ஆகச் சிறந்த வெற்றி. என் தகுதிக்கும் உழைப்புக்கும் மீறியே எனக்கு எல்லாம் நிறைய கிடைத்திருக்கின்றன.இதற்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
00
இலக்கிய உலகம் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. நன்றி.
ReplyDeleteவாசு முன்பு உங்கள் வலைப்பூவை திறந்தால் லோடாக நிறைய நேரம் பிடிக்கும். வலைப்பூ இப்போதுதான் பார்க்க பளிச்சென்று இருக்கிறது.
ReplyDeleteநல்லதொரு நேர்காணல் வாசு.
ReplyDeleteமனுஷ்யபுத்திரன்
ReplyDeleteVs
கண்ணன்.
நடுவில்
நாம் எத்ற்கு?
அவர் உருவாக்கிக் கொண்ட
கவிதை நடைக் குறித்து
சொன்ன விஷயம்
மிக அற்புதம்.