Thursday, January 7, 2010

“மேன்ஷன்களும் விபச்சார விடுதிகளும்“ – மனுஷ்யபுத்திரன் நேர்காணல்

கடந்த சில ஆண்டுகளாக பேட்டி எதுவும் அளிக்காமலிருந்த மனுஷ்ய புத்திரனின் நீண்ட பேட்டி இது. அகநாழிகை முதல் இதழுக்காக கேட்டு, இரண்டாம் இதழில்தான் வெளியிட முடிந்தது. தனது உள்ளத்து உணர்ச்சிகளை ஒளிவு மறைவின்றி பதிவு செய்திருக்கும் மனுஷ்ய புத்திரனின் மனம் திறந்த பேட்டி. வெகுநாட்களாக பதில் ஏதும் அளிக்காமல் மௌனமாய் இருந்த மனுஷ்யபுத்திரனின் குறிப்பிடத் தக்க நேர்காணல் இது. இந்த நேர்காணல் அகநாழிகை டிசம்பர் 2009 இதழில் வெளியானது.

…………………………………………………………………………………………………………………….

“மேன்ஷன்களும் விபச்சார விடுதிகளும்“ – மனுஷ்யபுத்திரன்

manush1

நேர்காணல் : பொன்.வாசுதேவன்

உங்கள் புதிய கவிதைத் தொகுதி ‘அதீதத்தின் ருசி’ டிசம்பரில் வெளிவர இருப்பதாய் அறிகிறோம். இது சற்று நீண்ட இடைவெளிக்கு பின்வரும் உங்கள் தொகுப்பு. ஏன் இந்த இடைவெளி?

ஒரு எழுத்தாளன் எழுதாமல் இருப்பது என்பது ஒன்று அவனது ஆயத்தமாகும் காலமாக இருக்கவேண்டும் அல்லது சபிக்கப் பட்ட காலமாக இருக்கவேண்டும். இரண்டில் எது எனக்குப் பொருத்தமான காலம் என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பமடைகிறேன். ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ தொகுப்பில் இடம் பெற்ற ‘அன்பிற்காக’ என்ற கவிதையை நான் எழுதி முடித்த தினத்தில் எனக்குத் தெரியாது அதற்குப்பிறகு ஒரு நீண்ட காலத்திற்கு நான் ஒரு வரிகூட எழுதப் போவதில்லையென்று.

யார் படைப்பின் ஊற்றுக்கண்களில் ஒரு அரக்கை வைத்து அடைத்து விட்டு போகிறார்கள் என்று தெரியவில்லை. தூக்கமற்றுத் தவித்த பல இரவுகளில் மனம் கலைந்து எழுத முயன்று தோல்வியடைந் திருக்கிறேன். அது ஒரு ஆதார மான உடல் உறுப்பு திடீரென செயலற்று போவது போல. பிறகு பனி விலகும் காலம் வந்தது. கடந்த ஆறு மாதத்தில் நான் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையும் அவற்றின் தளமும் எனக்கே நம்ப முடியாதது. எத்தனை முறை நான் அழிந்தாலும் நான் மீண்டு வருவேன் என்ற உறுதியை தந்த நாட்கள் இவை. இப்போதும் ஒவ்வொரு கவிதையையும் எழுதிமுடிக்கும் போது இது ஒரு வேளை கடைசிக் கவிதையாக இருந்து விடக்கூடாது என்கிற சின்ன பதட்டத் தோடுதான் அதிலிருந்து விலகிச் செல்கிறேன்.

கவிதையின் படிமலர்ச்சித் தருணங்களை உடற்சிந்தனை, அனுபவத்தின் ஏக்கம் சார்ந்ததாக வடிவமைத்துக் கொண்ட தனித்துவம் உங்களுக்கே உரித்தானது. இம்மாதிரி வடிவம் வலிந்து ஏற்படுத்திக் கொண்டதா அல்லது உங்கள் சிந்தனை மொழி இயல்பாகவே அதை நிகழ்த்தி விடுகிறதா?

தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற யாரும் தனித்துவத்தை உருவாக்க இயலாது. நான் எனது மொழிப் பழக்கத்தின் வழியே ஒரு சொல்முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த சொல்முறைதான் கவித்துவத்தின் அபூர்வ கணங்களை அடை வதற்கான முதல் திறப்பாக இருக்கிறது.

பொதுவாக என் மீது மட்டுமல்ல, வேறு கவிஞர்களின் மீதும்கூட அவர்கள் ஒரே பாணியிலான கவிதையை எழுதுகிகிறார்கள் என்று ஒரு எளிய அணுகுமுறை இருக்கிறது. படத்துக்கு படம் தந்து ஒப்பனைகளை மாற்றிக் கொள்ள ஒரு கவிஞன் ஒரு நடிகன் அல்ல. அவன் தனக்கென சில பிரத்யேக அழகியல் விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ளும்போது மட்டுமே தொடர்ந்து எழுதுவது சாத்தியமா கிறது. இந்த அழகியல் விதி கவித்துவ தரிசனங்களுக்கு ஏற்ப மாறியும், நெகிழ்ந்தும் புதிய அனுபவங்களை ஏற்படுத்தலாம்.

ஆனால் கவிதைகளை வடிவ ரீதியாக மட்டும் எதிர்கொள்வது அந்தக் கவிதையை எதிர் கொள்வதிலிருந்து ஒருவர் தப்பிச் செல்வதே ஆகும்.

பொதுவாகவே உங்கள் கவிதையின் மொழி நெகிழ்ச்சியாகவே இருந்து வந்துள் ளது. நேரடிப் பேச்சு, கட்டளை, சுயம்புவான தீர்மானம் என்ற வகையிலேயே கவிதைகளை வகைமையாக்குவது ஏன்?

முதலாவதாக, உரையாடல்தான் எனது மொழி. அதுவே என் தியானம். அவற்றின் வழியாகவே என் கவித்துவ தரிசனங்களை அடைகிறேன். இரண்டாவதாக என்னுடைய இருப்பு என்று என் கவிதைகளில் பிரத்யேகமாக இல்லை. நான் அறிகிற எல்லா மனிதர்களின் தீவிரமான நிலைகளையும் என் வயமாக்கிக் கொள்வதன் வழியாகவே எனக்கு கவிதை சாத்தியமாகிறது. மூன்றாவதாக யதார்த்த வாழ்க்கையில் நிகழ்த்தமுடியாத உரையாடல் களை கவிதைக்குள் நிகழ்த்துவதன் வாயிலாக மௌனங்களின் கொடூரமான உறை பனியைக் கடந்து செல்ல முற்படுகிறேன். அதற்கு இந்த வெளிப்பாடு முறையே இணக்கமானதாக இருக்கிறது.

ஒரு படைப்பாளியைப் பற்றிய தனிபட்ட தகவல்கள் வழியே அவரது படைப்புலகம் குறித்த தீர்மானங்களுக்கு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இன்னும் நேரடியாகவே கேட்கிறேன். உங்கள் உடல் சார்ந்த பிரச்சினை யோடு உங்கள் கவிதைகள் எதிர்கொள்ளப் படுவது சம்பந்தமான ஒரு விவாதம் சமீபத்தில் இணைய தளங்களில் பார்க்க முடிகிறது.

ஒருவன் ஆணாகவோ, பெண்ணாகவோ, அரவாணியாகவோ இருக்க வேண்டியிருப்பது போல, இந்தியனாகவோ ஒரு ஐரோப் பியனாகவோ இருப்பதுபோல, இன்னும் தலித்தாகவோ, கறுப்பனாகவோ இருப்பது போல, புத்தி கூர்மையற்றவராகவோ, புத்தி சுவாதீனம் அற்றவராகவோ இருப்பதுபோல அல்லது ஒரு அரசு ஊழியராகவோ, ஒரு சிறு பத்திரிகை நடத்துபவராகவோ இருப்பது போல, ஒருவர் முழு உடல் நலமுள்ள வராகவோ, உடல் நலமற்றவராகவோ இருக்க வேண்டியிருக்கிறது. இந்த உடலும் இதன் ஆரோக்கியமும் பலவீனங்களும் நமக்கு வழங்கபட்டவை. இவ்வாறு வழங்கப்பட்ட எதையும் என்ன செய்வது என்று எனக்கு இன்று வரை புரிந்ததே இல்லை. அது போகட்டும், இந்த உடல் தரும் சௌகர் யங்களும் அசௌகர்யங்களும் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு செல்வாக்கை செலுத்துவது போலவே ஒருவர் எழுதக் கூடிய கவிதையிலும் செலுத்தலாம்.

ஆனால் அதன் வழியே ஒருவரது ஒட்டு மொத்த உலகத்தையும் வரையறுக்க முயற்சிப்பதில் ஒரு தந்திரம் இருக்கிறது. அது ஒருவரை ஒரு பிம்பத்தோடு தளைப்படுத்தும் தந்திரம். அந்த தந்திரம் ஏன் மேற்கொள்ளப் படுகிறது என்பதற்கு திட்டவட்டமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நான் என் கவித்துவத்தின் வழியாக அடைந்தவற்றை ஒரு இயலாமைக்கு எதிரான செயல்பாடு என்று சுருக்க விரும்புவது. இந்த உடல் வேறொரு உடலாக இருந்திருந்தால் அப்போது அது வேறு காரணமாக இருக்கும். வறுமை, அல்லது மோசமான பால்ய காலம் இப்படி ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்பார்கள். ஒரு கவிதை யோடு உரையாடுவதைவிட ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான் என காரணங்களை கற்பித்துக் கொள்வது சுலபமானது. அப்படிக் கற்பித்துக் கொள்கிறவன் கவிஞனைவிட மேலான இடத்தில் தன்னை நிறுவ முற் படுகிறான். ஆனால் ஒரு கவிஞன் இத்தகைய கண்டுபிடிப்புகளை எல்லாம் தலைக்குப்புற கவிழ்த்து விடுகிறான். நீங்கள் அவனை ஒரு கான்ஸ்டபிள் ஒரு ஜேப்படி திருடனை பிடிப்பதுபோல பிடித்து உங்கள் காவல் நிலையத்தில் ஒரு புகைப்படமாக ஒட்டிவைக்க முடியாது. அவன் ஒரு சூனியக்காரி. உங்களது எல்லா வழிமுறைகளையும் அவள் குழப்பி விடுவாள்.

இரண்டாவதாக நமது கலாச்சாரம் என்பது மனிதர்களின் பொது அடையாளங்கள வழியே அவர்களின் ஸ்தானங்களை உருவாக்க முயல்வது. சாதிய ரீதியாகவோ மத ரீதீயாவோ இன-மொழி ரீதியாகவோ அல்லது தொழில் ரீதியாகவோதான் ஒருவரது இடம் இங்கே தீர்மானிக்கபடுகிறது. அதன் ஒரு நீட்சிதான் ஒருவரது உடலை மைய்யமாகக் கொண்ட பார்வைகளும்.

இந்த உடலால் நான் சௌகர்யங்களையே பெரிதும் அடைந்திருக்கிறேன். அது அனா வசியமான பல சமூகக் கஷ்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருகிறது. அந்தரங்கமாக எவ்வளவோ ஆழமான உறவுகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஆனால் நான் போராடி வெற்றி பெற்ற மனிதன் என்பதாக ஒருவர் புரிந்து கொள்ளும்போது நமது மத்திய தர வர்க்க மனோபாவம் குறித்த பெரும் ஆபாச உணர்வை அடைகிறேன். நான் ஒரு துளியும் போராடிய தில்லை. ஒரு துளி தியாகம் செய்யவும் இல்லை. ஒரு நீச்சல் வீரன் அல்லது மலையேறுபவனின் பித்து நிலைகொண்ட அர்ப்பணிப்பு. நான் அதையெல்லாம் செய்ய முடியாததால் இதைச் செய்து கொண்டிருகிறேன் அவ்வளவே.

நான் உடலின் துயரங்கள் பற்றிய கவிஞனாக இருந்தால்தான் என்ன? ஆனால் அது காலம்காலமாக தொடர்ந்து அழிக்கப்படும் உடல், தண்டிக்கப்படும் உடல், மறுக்கப் படும் அங்கஹீனப் படுத்தப்படும் உடல். நான் வரலாறு முழுக்க இத்தகைய உடல்களையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருகிறேன். என் வழியே நான் எழுத விரும்புவது அதையே. ஆனால் ஒருவர் அதை என்னுடைய அந்தரங்க குறிப்பேடாக மாற்றும்போது, தன்னிரக்கமாக புரிந்துகொள்ளும்போது அந்தக் குரூரம் என்னை பதட்டமடைய வைப்பதில்லை. அவ்வளவுதான் அவர் ஒரு கவிதைக்குள் பயணிக்கக் கூடிய தூரம். கடவுள் அவ்வளவே அவருக்கு பார்க்கும் சக்தியை அளித்திருக்கிறார்

ஒரு விமர்சகனின் அல்லது வாசகனின் அறியாமைக்கு எதிராக ஒரு கவிஞன் தனது மகத்தான கருணையை வெளிப்படுத்தவே விரும்புகிறான். ஏனென்றால் அறியாமையிலிருந்து பிறக்கும் தந்திரம் என்பது மன்னிக்கப் படக்கூடியதே.

manush2

உங்கள் கவிதைகளுக்காக நீங்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் எத்தகையவை?

பொதுவாக அவை குழந்தைகளோடு விளையாடுவது போன்றதுதான். எந்த தர்க்கமும் அதில் கிடையாது. நான் ஈழத்தில் 20 ஆயிரம் பேர் காணாமல் போனதைப் பற்றி மிக உக்கிரமான கவிதை எழுதியிருப்பேன். ஒருவர் அதைப் படித்து அந்தக் கவிதையில் மிகச் சிறப்பான இரண்டு வரிகளை அடையாளம் காட்டுவார். அல்லது இதே போன்ற ஒரு கவிதையை நான் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன் என்று எனக்கு சொல்லித் தருவார். அந்தக் கவிதை விவாதிக்க விரும்பும் விஷயம் பற்றி ஏதாவது அவருக்கு அபிப்ராயம் இருக்கிறதா என்று முகத்தை, முகத்தை பார்ப்பேன். அவர் தானும் இதுபோல ஒரு கவிதை எழுதியிருப்பதாகச் சொல்லி அதை படிக்க ஆரம்பிப்பார். இதெல்லாம் பழகிப் போய்விட்டது. ஆனால் சில மூர்க்கமான வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் என் மனதை அணையாமல் தொடர்ந்து பற்றி எரியச் செய்பவர்கள்.

விமர்சனம் என்ற பெயரில் செய்யப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் தமிழ் அறிவுச் சூழலில் தொடர்ந்து நடைபெறுகிறதே?

அதெல்லாம நடைபெறவேண்டியதுதான். அது நம் பண்பாடு. கலாச்சார வாழ்கை. ஒருவரை சாதியின் பெயரால் இழிவு படுத்துவது, மதத்தின் பெயரால், பாலினத்தின் பெயரால், தொழிலின் பெயரால், உடலின் பெயரால் இழிவு படுத்துவதெலாம் நாம் காலம் காலமாக செய்துவரும் காரியங்கள். இலக்கியம் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி? இலக்கியமும், இலக்கியவாதிகளும் வாழ்க்கை யையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பவர்கள் ஆயிற்றே. மண்டியிட வேண்டும் அல்லது எட்டி உதைக்கவேண்டும். யாரையாவது சொறிந்து கொடுக்காமல் அல்லது இழிவுபடுத்தாமல் நம்மால் ஒரு புத்தக விமர்சனம்கூட எழுத முடியாது. எனவே நம் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் இலக்கிய பத்திரிகை ஆசிரியர்களும் இன்னும் ஆவேசமாக இன்னும் மனம் திறந்து தங்கள் மனித வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். நம்முடைய அற்பமான மனங்களை மூடிவைப்பது அல்லது அவற்றைத் தடை செய்வது அந்த அற்பத்தனத்தை இன்னும் தீவிரமாக மாற்றுகிறது. உண்மையில் இந்த வகையில் நமது ஊடகங்கள், சிறுபத்திரிகைகள், இணைய தளங்கள் மகத்தான பங்காற்றி வருகின்றன. நாம் கலாச்சார ரீதியாக விடுதலை அடைந்து வருகிறோம். எனவே பிறரை துன்புறுத்தும் அவமதிக்கும் வழிமுறைகளை நாம் தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கான எண்ணற்ற வாசல்கள் இன்று திறந்து விடப் பட்டிருக்கின்றன. நாம் இந்த சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்துவோம்

முரண்பட்ட படைப்பாளிகளுக்கு இடையே ‘உயிர்மை’ எப்படி ஒரு இணக்கமான சூழலையும் செயல்பாட்டையும் உருவாக்குகிறது?

யாருக்கு இடையேயும் எந்த இணக்கத்தையும் ஏற்படுத்துவது உயிர்மையின் நோக்கம் அல்ல. அது சாத்தியமும் அல்ல. ஒரு வாசகனாக, எழுத்தாளனாக எனது நண்பர் களுக்காக நான் இந்த பத்திரிகையையும் பதிப்பகத்தையும் நடத்துகிறேன். எனக்கு பிடித்த விஷயங்களை நான் பதிப்பிக்கிறேன். நான் ஒரு மேதை இல்லை என்பதாலும் நான் ஒரு நட்சத்திரம் இல்லை என்பதாலும் என்னுடைய இடம் குறித்து எனக்கு எந்த பதட்டமும் இல்லை என்பதாலும் எனக்கு யாரோடும் எந்த மனச்சிக்கலும் இல்லை. உயிர்மை ஒரு எழுத்தாளனுக்கு உரிய கௌரவத்தை முழுமையாக அளிக்க விரும்புகிறது. அது மட்டுமே அதனுடைய பலம்.

சில மாதங்களுக்கு முன்பு உயிர் எழுத்து இதழில் ‘காலச்சுவடு’ கண்ணன் உங்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் ஏன் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக நீங்கள் காலச்சுவடில் வேலை செய்து கொண்டே பதிப்பகம் ஆரம்பித்தீர்கள், சென்னை அலுவலகத்தின் ஊழியர்களால் உங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை, ராஜினாமா செய்துவிட்டு வாபஸ் வாங்க முயற்சித்தீர்கள் என்றெலாம் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்ததே...

நான் காலச்சுவடு பற்றியோ கண்ணன் பற்றியோ எப்போதுமே அவதூறாகப் பேச விரும்பியதில்லை. அதற்கு முக்கியமான காரணம் அவர் செய்கிற எதையும் நான் செய்யக்கூடாது என்கிற பிடிவாதம்தான். இந்த வித்தியாசம் இருக்கிற வரைதான் எனது செயல்பாடுகளுக்கு அர்த்தம் இருக்க முடியும். எல்லாவற்றையும்விட கண்ணனை ஏதாவது சொன்னால் சுந்தரராமசாமியின் ஆவி துன்புறுமே ! அதை நான் விரும்பவில்லை. நீங்கள் குறிப்பிடும் பேட்டியில் கண்ணன் ‘சிலர் பத்திரிகையின் பக்கங்களை மேன்ஷனாக பிரித்து வாடகைக்கு விடுவதாக’ ஒரு சிறந்த கருத்தை கூறியிருந்தார். இதைப் படித்து கோபமான ஒரு சிற்றிதழ் அன்பர் ‘விபச்சார விடுதி நடத்துவதைவிட மேன்ஷன் நடத்துவது தப்பிலையே’ என்றார். அவரை நான் வன்மையாக கண்டித்தேன்.

ஆனால் காலச்சுவடுக்கும் எனக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி கண்ணன் மிகுந்த தடுமாற்றத்துடன்தான் பதிவு செய்ய வேண்டியிருகிறது. அந்த மகத்தான வரலாற்றில் எனக்கு எந்த இடம் கொடுப்பது என்ற குழப்பம். இதே குழப்பம் கவிஞர் சல்மா விற்கும் அவரது மகத்தான வரலாற்றை எழுதும் போதெல்லாம் ஏற்படுவதை காண்கிறேன். நான் இதுபோன்ற மகத்தான வரலாறு களிலிருந்து என்னை துண்டித்துக் கொள்ளவே விரும்புகிறேன். நான் சுந்தரராமசாமியின் வாசகனாக அவரைப் போய் பார்த்தவன் என்ற அளவிலும் அவர்கள் வீட்டில் தந்த அவியலை விரும்பிச் சாப்பிட்டவன் என்ற அளவிலும் இந்த வரலாற்றை நான் சுருக்கிக் கொள்ள விரும்புகிறேன்

‘நீதான் காலச்சுவடில் இருந்தவனா?’ என்று யாராவது என்னை கேட்கும்போது எனக்கு மிகவும் பதட்டமாகி விடுகிறது. இல்லை அவர் காலச்சுவடில் பேக்கிங் Section ல் வேலை பார்த்தவர் என்று சொல்லி, கேட்டவரை கண்ணனின் அடியாட்கள் யாரவது அடிக்கப்போகிறார்கள் என்ற பதட்டம். ஒரு முறை தீராநதியில் என்னை பேட்டி எடுத்த போது பேட்டி எடுத்தவர் என்னை காலச்சுவடு ஆசிரியர் என்று குறிப்பிட்டு விட்டார். உடனே அதை மறுத்து தீராநதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதேபோல Poetry International Web-ல் அம்பை என் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அளித்திருந்தார். அப்போது இந்த ஆள் காலச்சுவடு ஆசிரியராக வேலை பார்த்தான் என்று என்னைப் பற்றிய குறிப்பில் எழுதிவிட்டார். உடனே அங்கும் மின்னஞ்சல் பறந்தது. அந்தக் குறிப்பு திருத்தப்பட்டது. ரொம்ப நாள் காலச்சுவடில் ஆசிரியர்கள் : கண்ணன், மனுஷ்யபுத்திரன் என்றுதானே imprintல் இருந்தது என்று நான் ஜெராக்ஸ் காப்பி அனுப்பி நிரூபிக்கலாம். அது என்னுடைய இழிவிற்கு நானே வழங்கிக் கொள்ளும் சர்டிபிகேட் போல ஆகிவிடும்.
உண்மையில் காலச்சுவடு சம்பந்தமான எல்லா பெருமைகளையும் சிறுமைகளையும் கண்ணனுக்கே கொடுத்துவிடுகிறேன். அந்த சவத்தை அவர் எவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு நடக்க முடியுமோ நடக்கட்டும். அது அவரது தலையெழுத்து. ‘காலச்சுவடு’ ஒவ்வொரு இதழிலும் ‘நான், நான்’ என தன்னை முன்னிறுத்தி அவர் எழுதும் பரிதாபகரமான எல்லா குறிப்புகளிலும் இந்த சவத்தின் சுமையை தாங்க முடியாத முனகல்தான் வெளிப்படுகிறது. ஒரு கதையையோ கவிதையையோ வாசித்தறிய முடியாத ஒரு படிப்பறிவற்ற ஆள் இரு இலக்கிய பத்திரிகையை நடத்த முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் அவர். இது அவரைப் போன்ற பலருக்கும் தன்னம்பிக்கையை அளித்திருக்கிறது. பௌத்த அய்யனார் என்பவர் ஒரு ஆங்கிலப் பதிப்பகமும் பாரிஸ் ரிவ்யூ மாடலில் ஒரு பத்திரிகையும் ஆரம்பிக்கப் போவதாக கேள்விப்பட்டேன். கண்ணனின் சாதனைகள் இதற்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.

manush4

அவருடனான கசப்புகளுக்கு பல காரணங்கள் உள்ளன. அவை ஒரு பொது அரங்கில் விவாதிக்க முடியாதவை. ஒருவருடைய நிழல்களை அறிவது என்பது நல்லதல்ல. நான் அவரே அச்சப்படும் அவரது நிழல்களை அறிந்து கொண்டிருந்தேன் என்பதுதான் பிரச்சினை. அதற்கு நான் சாட்சியமாகி விடுவேனோ என்று அவர் அஞ்சினார். அதற்காகவே அவர் என்னை அப்புறப்படுத்த விரும்பினார்.
ஆனால் இரண்டு விஷயங்களை குறிப்பிட வேண்டும். ‘தமிழ் இனி 2000’ மாநாட்டை கண்ணன் கையாண்ட விதம் அவர் எவ்வளவு அற்பமான நபர் என்பதை எல்லோருக்கும் புரிய வைத்தது. அந்த அவச்சொல்லிலிருந்து இன்று வரை காலச்சுவடினால் வெளியே வர முடிய வில்லை. சென்னையில் ஆரம்பத்தில் எனது வீடுதான் காலச்சுவடு அலுவலகமாக செயல்பட்டு வந்தது. ‘தமிழ் இனி 2000’ க்கு பணம் வர ஆரம்பிக்கப் போகிறது என்று தெரிந்ததும் பழைய கம்ப்யூட்டர்கள் விற்கும் ஒரு நிறுவனத்தை ‘தமிழ் இனி’ அலுவலகமாக பயன்படுத்த ஆரம்பித்தார். அது எனக்கு ஏன் என்று புரியவில்லை.

பண பரிவர்த்தனைகளுக்காக அரவிந்தன் என்பவர் திடீரென நியமிக்கப்பட்டார். இதெல்லாம் எனக்கு ஏன் என்று புரியவில்லை. ‘தமிழ் இனி 2000’ முழுக்க முழுக்க என்னுடைய யோசனை. ஆனால் அதன் ஒருங்கிணைப் பாளர்களாக கண்ணன் பெயரும் திடீரென வந்து சேர்ந்த சேரனின் பெயரும் மட்டும் இருந்தது. ஆனால் நாம் அந்த மாநாட்டிற்காக எவ்வளவு வேலை செய்தேன் என்பதை அதில் பங்கெடுத்த எழுத்தாளர்கள் அறிவார்கள். மாநாடு நடந்த ஹோட்டலில் கண்ணனின் அறையில் சிறிது நேரம் இருந்தேன். அப்போது வழக்கம்போல என்னை சந்திக்க யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட நண்பர்கள் வந்தார்கள். இங்கே கூட்டம் போடாதீர்கள் என்று என்னை கண்ணன் எச்சரித்தார். இதே போலத்தான் மாநாட்டுக்கு வந்த எண்ணற்ற எழுத்தாளர்கள் பல்வேறு விதங்களில் அவமதிக்கபட்டார்கள். எம்.ஏ.நுஃமான் ‘கண்ணனின் மனைவி என்னை உள்ளே விடமாட்டேன் என்கிறார்’ என வாசற்படியில் நின்று என்னிடம் வந்து குமுறியபோது அவரை கெஞ்சி சமாதானப் படுத்தி உள்ளே அழைத்துக் கொண்டு போனேன். அந்த் மாநாடு முடியும் முன்னரே மனம் கசந்து வெளியேறினேன்.

காலச்சுவடு சென்னை அலுவலகம் உலகத் தமிழ் இணைய இதழுக்காக ஸ்ரீராம் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தழிழுக்காக அரிய பல காரியங்களை செய்துவரும் ஸ்ரீராம் நிறுவனம் மனமுவந்து பெரும் தொகையை அதற்காக செலவிட்டது. அதற்கு முன்பு காலச்சுவடில் ஏழு வருடம் எந்த ஊதியமும் இல்லாமல் பங்களித்து வந்த நான் உலகத் தமிழ் இணைய தளத்தில் ஆசியர் பொறுப்பு அளிக்க வேண்டும் என்று கோரினேன். அது மூர்க்கமாக நிராகரிக்கபட்டது. ‘எனக்கு எதற்கு பணம்?’ என்று கேட்டார் கண்ணன். நான் எந்த மனநல மருத்துவரை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆலோசனை வழங்கினார். அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் ‘ஹமீதுக்கு சரளமாக ஆங்கிலம் பேச வராது. பல இடங்களுக்குப் போக முடியாது’ என்று காரணம் கூறினார். பிறகு ‘உலகத் தமிழ் இணைய தள ஆலோசகர்’ என்ற பெயரில் எனக்கு ஒரு சிறிய தொகை மாதாமாதம் அளிக்கபட்டது. அந்த சமயத்தில் அரவிந்தன் உலகத் தமிழுக்காக சம்பளம் பெற்றுக் கொண்டே பிற இணைய தளங்களுக்கும் ‘தன்னார்வ நிருபர்’ வேலை பார்த்து வந்தார். அரவிந்தன் போன்ற ஒரு முட்டாளுடன் வேலை செய்வது எனக்கு மிகுந்த மனச் சோர்வு தரும் அனுபவமாக இருந்தது. சுதர்சன் கடையில் கணக்கு எழுதவேண்டிய ஒருவர் இங்கே ஏன் வந்து உட்கார்ந்திருக்கிறார் என எனக்கு தோன்றாத நாள் இல்லை.

அப்புறம் கண்ணன் இன்னும் இரண்டு விசுவாசிகளை கொண்டுவந்து அலுவலகத்தில் விட்டார். ஒருவர் இன்று பௌத்த அய்யனார் என்று வழங்கப்படும் அய்யனார். இன்னொருவர் சிபிச்செல்வன். இரண்டு பேரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அது கவுண்டமணிக்கு செந்திலை பிடிப்பது போல. அவர்கள் இரண்டு பேரும் மிகவும் சீரியசாக நினைத்துக்கொண்டு செய்யும் காமெடிகள் அந்த நாளில் அரவிந்தன் என்ற நபர் உருவக்கிய மனச்சோர்விலிருந்து விடுபட பெரிதும் உதவியது. முக்கியமாக இரண்டு பேரையும் Civilize பண்ணுவதுதான் எனது முழுநேரப் பணியாக இருந்தது. சில சமயம் கவுண்டமணியின் அடி செந்தில் மேல் பலமாக விழுந்திருக்கலாம். அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன்.

manush

நான் காலச்சுவடிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப் பட்டதன் உண்மையான காரணம் சுந்தரராமசாமி ‘சொல் புதிது’ இதழ் தொடர்பாக ஒரு நாற்பது பக்க அபத்தமான டாக்குமெண்டை காலச்சுவடில் பிரசுரிக்க விரும்பினார். அப்போது எனக்கும் ஜெய மோகனுக்கும் கடும் முரண்பாடுகள் நிலவிய சூழலில்கூட நான் அதை பிரசுரிக்க மறுத்தேன். இதுபோன்ற குப்பைகள் ஒரு வாசகனுக்கு தேவையற்றவை என்று கூறினேன். எப்படித் தாங்க முடியும்? அப்புறம் காலச்சுவடு பற்றி எதிர்மறையாக ஒரு குறிப்பு ‘இந்தியா டுடே’யில் வெளிவந்ததற்காக அதை எழுதிய செய்தி யாளரை முஸ்லீம் தீவிரவாதி என்று வர்ணித்து ஒரு கட்டுரை எழுதி கண்ணன் பிரசுரிக்கச் சொன்னார். முடியாது என்று மறுத்தேன். இவை காரணமாகவே காலச்சுவடிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டேன். நான் காலச்சுவடின் முழு நேர ஊழியன் அல்ல. எனவே உயிர்மை பதிப்பகத்தை தொடங்கும் பூர்வாங்க வேலைகளை செய்துவிட்டு காலச்சுவடிலிருந்து வெளியேறினேன். அப்புறம் இந்த ராஜினாமா விவகாரம். நான் வெளியேறிய போது அப்போது காலச்சுவடிற்கு நெருக்கமாக இருந்த நண்பர் ரவிக்குமார் நான் வெளியே போகக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் கேட்டு க்கொண்டார். அதன் அடிப்படை யிலேயே அந்தக் கடித்தை அனுப்பினேன். பதிலுக்கு ‘அவரை பத்திரிகையில் சேர்க்க முடியாது. பதிப்பகத்தில் பிழை திருத்துனர் பணி ஏதாவது தரலாம்’ என்று சொல்லப்பட்டதாக அறிந்தேன். அதற்கான பதில்தான் உயிர்மையின் இந்த ஏழாண்டு செயல்பாடுகள். ‘உயிர் எழுத்து’ பேட்டியில் நான் வெளியே போனது மிகப்பெரிய விடுதலையாக இருந்தது என்று கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். அது மிகவும் சரியானது. நான் காலச்சுவடின் தொந்தரவான மனசாட்சியாக இருந்தேன். மனசாட்சியிலிருந்து விடுபடுவதுதான் எல்லா கிரிமினல்களுக்கும் மிகப் பெரிய விடுதலை.

சமீபத்தில் உயிர் எழுத்து இதழில் கரிகாலன் காலச்சுவடும், உயிர்மையும் தமிழ் சிறு பத்திரிகை இயக்கத்தை அழிப்பதாக குற்றம் சாட்டியிருப்பது பற்றி...

manush5 அந்தக் குற்றச்சாட்டை ஆமோதிக்கிறேன். கரிகாலன், சுதீர் செந்தில் போன்றவர்கள் உருவாக்கிய மாபெரும் இயக்கம் அது. அதற்காக அவர்கள் எவ்வளவு ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். தமிழ் சிறு பத்திரிகையின் தியாக வரலாற்றின் கடைசி பெஞ்சில் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு இடம் உண்டு. அழிவு வேலை செய்வதில் எப்போதுமே எனக்கு மிகுந்த உற்சாகம் உண்டு. அதனால் இந்த அழிவுப் பணிகள் மென்மேலும் தொடரும் ‘உயிர் எழுத்து’ இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதன் ஆசிரியர் ஒரு பின்நவீனத்துவ பத்திரிகையாளர். இதுவரை சிற்றிதழ் இயக்கம் சார்ந்த அடிப்படைகளை அவர் வெற்றிகரமாக அடித்து தகர்த்து வருகிறார். மிகவும் சீரியஸான முகம் கொண்ட சிற்றிதழ் இயக்கத்தை கேளிக்கையின், கோமாளித்தனத்தின் பெரு வெளியாக மாற்றுவதில் அவரது பங்கு பிரதானமானது. பிரசுர வாய்ப்பைத் தவிர வேறு எந்த நிபந்தனைகளும் இல்லாத நமது எழுத்தாளர்களும் இந்த கோலாகலத்தில் உற்சாகமாக பங்கெடுத்து வருகிறார்கள். ஆனால் தனது பத்திரிகை ஏன் தொடர்ந்து வாசகர்களால் நிராகரிக்கபடுகிறது என்பதை அவரால் கண்டுபிடிக்க முடிவில்லை. காலச்சுவடும், உயிர்மையும் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்று அவரது குழந்தை உள்ளம் யோசிக்கிறது. இரண்டையும் காலி பண்ணிவிட்டால் அப்புறம் உயிர் எழுத்துதானே. தி.மு.கவும், அ.தி.மு.கவும் இல்லாவிட்டால் ம.தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் என்று வைகோ யோசிக்கலாம். ஆனால் எல்லோருக்கும் தெரியும் விஜயகாந்த்தான் வருவார் என்று. தமிழ் சிறு பத்திரிகை சூழலில் உயிர் எழுத்து, ம.தி.மு.க என்றால் விஜயகாந்த் யார் என்று உங்களுக்கே தெரியும்.

000

(நேர்காணலின் தொடர்ச்சி அடுத்த அகநாழிகை இதழில் வெளியாகும்)

============================================================================

சமகால இலக்கியப் படைப்புகள், சிறுகதை, கட்டுரை, கவிதைகள் பற்றி அறிய வாசியுங்கள் : அகநாழிகை (தொடர்புக்கு : பொன்.வாசுதேவன் 999 4541 010.

8 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி

    ஒரு கேள்வி போல்ட் செய்யாமல் இருக்கிறது.

    ReplyDelete
  2. வெளிப்படையான பேச்சு.அருமை வாசு சார்.நன்றி.

    ReplyDelete
  3. பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
    எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
    www.radaan.tv

    http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

    ReplyDelete
  4. அஜயன்பாலாக் கூட சொன்னாரு பாக்கச் சொல்லி..அதானா இது:)

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு நண்பரே..! இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
    இத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.

    ReplyDelete
  6. நல்ல வெளிப்படையான பதிவு ....

    ReplyDelete
  7. நேர்காணல் ஜெயமோகன் எழுதியதை வைத்து அல்ல என்பதால் விமர்சனாத்மகமாக இருந்தது. ஆனால் எப்போதுமே மனுஷ்யபுத்திரனின் பதில்களில் விமர்சன வினாக்களை எதிர்க்கொள்ளும் புத்தியோ உத்தியோ விவேகமோ இருப்பதில்லை அல்லது இருந்ததில்லை . அவரின் பல்வேறு நேர்காணல்களை பல பத்திரிகைகளில் படித்துள்ளேன் . ஒரு வகையான நேரம்போக்கு வித்தக வார்த்தைகளை கொண்ட (மேம்போக்கு வாசிப்புத்தன்மையால் எழும் )ஆழமற்ற சுயநல பேச்சு . அவர் பேசியதை வைத்து கவிதையின் எந்த ஒரு தளத்தையும் ,அது எந்த காலக் கட்டத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி அறிவுபூர்வமாக அனுகியதாக தெரியவில்லை அருமையான கவிதைகளின் ஒரு பின்புலத்தில் இருக்கும் தமிழ் கவிதையின் புரட்சிகரமான மாற்றங்களையோ ,உத்வேகபூர்வமான வழுதல்களையோ ,மொழியியலின் ,இலக்கண பரிமாணங்களையோ ஒரு கவிதை ரசிகனின் புரிதல்களின் வேற்றுமைகளையோ நன்கு அறிந்து பேசக்கூடிய கவிஞர்களில் ஒருவரல்ல மனுஷ்யபுத்திரன் என்பதால் அவரிடம் அவ்வளவு ஆழ் கவிதை புரிதல்களை எதிர்ப்பார்க்கவும் கூடாது. திரு வாசுதேவன் உங்களின் கேள்விகள் நிஜமானதும் கவிதைக்குறித்தான ஆழமான அறிவின் தேடலின் வெளிப்பாடுகளுமாக இருந்தப்பொழுதிலும் பதில்கள் வெறும் மேலோட்டமாகவும் சுயபிம்பம் நிலைநாட்டுவதாகவும் மட்டும் தான் இருந்தது .. மனுஷ்யபுத்திரனின் பதில்களை படித்தபொழுது ஜெயமோகனின் மிக ஆழமான துல்லியமான கவித்துவமான (விமர்சங்களையும் பயமின்றி வைக்கக்கூடியதான ) கட்டுரையை இலக்கிய உணர்வுடன் விமர்சனமாக எடுத்துக்கொள்ளும் கவிதை மனம் அவருக்கில்லை என்பதை தெளிவுப்படுத்தியது . தமிழ் பட இயக்குனர்களை போலவே ஒரே சப்ப காதலை திரும்ப திரும்ப எடுத்து விளம்பரத்துக்காக பேசுவார்களே இது ஒரு மாறுப்பட்ட கதை என்றெல்லாம் ,அதுப்போல இருந்தது மனுஷ்யப்புத்திரனின் பதில்கள் ...........

    ReplyDelete
  8. இத்தனை நாட்களாக தவறவிட்டமைக்கு வருந்துகின்றேன், பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname