கடந்த சில வாரங்களில் புத்தக வெளியீட்டு விழா, பதிவர் சங்கமம், மக்கள் கலை இலக்கிய விழா என பல நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். (எழுதுவதற்குதான் நேரமில்லை)
000
அகநாழிகை புத்தக வெளியீட்டு விழா, சென்னை
அகநாழிகையின் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. ஒவ்வொருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியையும், அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன். நிகழ்ச்சி நடத்த இடமளித்த வேடியப்பன், எனது அழைப்பினை ஏற்று வந்த சிறப்பு விருந்தினர்கள் ஞாநி, பாஸ்கர்சக்தி, அஜயன்பாலா மற்றும் கௌரவ தோற்றமாக பங்கேற்று சிறப்பித்த சாருநிவேதிதா அனைவருக்கும் என் நன்றி.
000
பதிவர் சங்கமம், ஈரோடு
ஒரு கூட்டம் கட்டுக்கோப்பான ஒழுங்குடன் (அதிகாரத்தின் அன்பான உரையாடலுடன்) எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்திய கூட்டம். சற்றே காலதாமதமாக ஆரம்பித்தாலும் நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்பில்லாமல், நடத்தி குறித்த நேரத்தில் முடித்தது சிறப்பு. அதுவும், இடையீடுகளை சமாளித்த விதமும், குறைகளுக்கு பொறுப்பேற்றதாக சொல்லி எல்லோரையும் திருப்திபடுத்திய விதமும் அருமை. இதைச் சாத்தியப்படுத்திய ஆருரன், ஈரோடு கதிர் http://maaruthal.blogspot.com உள்ளிட்ட ஒவ்வொரு நண்பர்களுக்கும் வாழ்த்துகள். ஈரோட்டு கூட்டத்தின் மற்றுமொரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் விருந்தோம்பல். அன்பான உபசரிப்பு. பொதுவாக, அரிமா, ரோட்டரி சங்கங்கள் நடத்தும் நிகழ்வுகளில் இவ்விருந்தோம்பல் அழகாக நடத்தப்படும். அதையே நினைவு படுத்தியது ஈரோடு சங்கமமும்.
கூட்டத்தில் என்னையும் பேசச் சொன்னார்கள். ‘வலைப்பதிவுகளும், அச்சு ஊடகங்களும்‘ என்ற தலைப்பில் எனது கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். நான் பேசும்போது கேபிள் சங்கரால் எடுக்கப்பட்ட புகைப்படம் சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானதான படமாக இருந்ததால் அதையே வலைத்தளத்தின் முகப்பிலும் வைத்துக் கொண்டேன். திடீரென இவ்வளவு சிகப்பாக ஆகிவிட்டதன் ரகசியம் என்ன என்று என் அன்புத்தோழி கேட்டு கிண்டலடித்தது வேறு விஷயம். எப்படியிருந்தாலும், என்னை அழகாக புகைப்படம் எடுத்த கேபிள் சங்கருக்கு நன்றி. அவர் இப்போதெல்லாம் ‘என்டர் கவிதைகள்‘ எழுதி ‘கேப்‘பில் சங்கர் ஆகி வருகிறார். எனக்கு மிகப்பெரிய போட்டியாக உருவாக வாய்ப்புகள் இருப்பதால் இது மட்டும் எனக்கு பிடிக்கவில்லை.
000
உயிர்மை புத்தக வெளியீட்டு விழா, சென்னை
இந்த ஆண்டு உயிர்மை பதிப்பக புத்தக வெளியீட்டு விழாக்களின் போது ஏதாவது ஒரு பணி காரணமாக கலந்து கொள்ள முடியாமல் இருந்தது. உயிர்மையின் 12 புத்தக வெளியீட்டு விழாவையும் தவற விடக்கூடாது என்று அன்று சென்றிருந்தேன். விழா சந்தோஷமும், சர்ச்சையுமாக சிறப்பாக நடைபெற்றது அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
000
மணல் வீடு – மக்கள் கலை இலக்கிய விழா, சேலம்
ஈரோடு சென்று வந்ததும் அடுத்தவாரமே, ‘மணல் வீடு‘ சிற்றிதழ் நடத்திய ‘மக்கள் கலை இலக்கிய விழா‘ வின் தெருக்கூத்து கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் நான், யாத்ரா, ச.முத்துவேல், மயில்ராவணன் அனைவரும் சென்றிருந்தோம். தெருக்கூத்து, கட்டைக்கூத்து, தோல்பாவைக்கூத்து என கூத்துக் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடந்தது. 50 ஆண்டுகாலமாக தொடர்ந்து தெருக்கூத்தில் நடிப்பதையும், விவசாயக்கூலியாகவுமே வாழ்வைக் கழித்துவிட்ட பலரையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட எலிமேடு மகாலிங்கம் என்பவரின் மனைவி எடிட்டர் லெனினிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொள்ளும்போது கண்கலங்கியது நம்மையும் வருத்தியது.
கூத்துக் கலைஞர்களில் பெண் கலைஞர்களின் பங்களிப்பும் பதிவு செய்யப்பட வேண்டியது. இவர்களில் பெரும்பாலும் கழனி வேலைக்கு செல்பவர்களாகவும், திருவிழா சமயங்களில் கூத்துகளில் நடிக்க செல்பவர்களாகவும் இருக்கிறார்கள். எடை அதிகமான கூத்து பொம்மைகளை கையிலேந்தி அவர்கள் ஆடுவது அவர்களின் உடற்திறனையும் வெளிப்படுத்தியது. விடியவிடிய முழுவதும் பலவகையான தெருக்கூத்து, பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கூத்துகளில் ராஜா வேடம் போடும் 80 வயதான ஒரு கலைஞர் தனது இரு கைகளையும் கம்பீரமாக குவித்து அவையோருக்கு வணக்கம் சொன்னது எவ்வளவு தாக்கத்தை அப்பாத்திரம் உள்வாங்கியிருக்கிறது என்பதை உணர்த்தியது. எட்டாத கட்டையில் மெட்டுக்கட்டி பாடி, ஆடாத அடவுகள் போட்டு ஆடி, பேசாத சொற்சித்திரங்கள் வனைந்து இறுதி சுவாசம் வரை வாழ்ந்து அறியப்படாமலும், உரிய அங்கீகாரம் இன்றியும் இவர்கள் போனது வருத்தத்திற்குரியது. நிகழ்ச்சியை நடத்திய மணல் வீடு ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் முயற்சி பாராட்டுக்குரியது.
000
‘குரலற்றவனின் குரல்‘ புத்தக வெளியீட்டு விழா
இருவாட்சி பதிப்பகம் வெளியீடாக யாழினி முனுசாமி தொகுத்து வெளிவந்துள்ள ‘குரலற்றவனின் குரல்‘ என்ற தலித் பண்பாட்டு அரசியல் சிறுகதை தொகுப்பினை பேராசிரியர் அ.மார்க்ஸ் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். தேவநேயப் பாவாணர் நூலக சிற்றரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது. (படத்தில், இடமிருந்து வலமாக : பதிப்பாளர் பா.உதயக்கண்ணன், பேராசிரியர் அ.மார்க்ஸ், எழுத்தாளர் நந்தா, நான், கவின்கவி, நூல் தொகுப்பாளர் யாழினி முனுசாமி)
000
புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது.
சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் நடைபெற்ற 13வது புத்தக கண்காட்சிக்கு முதல் முறையாக நானும் என் அப்பாவும் சென்றது இப்போதும் நினைவிருக்கிறது.
அதற்கு முன்பு அவ்வளவு அதிகமான புத்தகங்களை ஒரே இடத்தில் நூலகத்தில் மட்டுமே பார்த்ததுண்டு. அதிலும் கந்தலான, பழைய நுனி மடிக்கப்பட்டு, முக்கிய வரிகள் அடிக்கோடிடப்பட்டு, நைந்து போயிருந்த பழைய புத்தகங்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு சட்டென மனம் விரிந்து படர்ந்தது அந்தக் கணத்திலிருந்துதான் என்பதாக உணர்கிறேன். 1990ல் முதல் முறையாக 13வது புத்தக கண்காட்சிக்கு சென்ற போதை இன்றும் கைவிட முடியாமல், ஆண்டு தவறாமல் தொடர்கிறது.
இந்த ஆண்டு எனக்கு சிறப்பு புத்தக கண்காட்சியும் கூட. 20 ஆண்டுக்குப் பிறகு 33வது புத்தக கண்காட்சியில், இலவச அனுமதிச்சீட்டு மற்றும் வாகன அனுமதிச் சீட்டு பெற்று பதிப்பாளராக நுழைந்திருக்கிறேன். எல்லாம் கடந்து போய்க் கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் கனவாக நினைத்திருந்த வேளையில் சாத்தியப்படுத்த பெரும் ஊக்கமளித்த தோழிக்கு நன்றி என்ற ஒற்றைச் சொல்லையிட்டு என் பிரியத்தை தெரிவித்துவிட முடியாது.
அதேபோல, புத்தகங்கள் வெளியிட முடிவு செய்து கேட்டதும், ஆர்வத்தோடு அளித்த பா.ராஜாராம், என்.விநாயகமுருகன், நர்சிம், லாவண்யா சுந்தரராஜன், டிகேபி காந்தி இவர்களுடைய அன்பும் ஒத்துழைப்பும் முக்கியமானது. ஒரு இசை ஒலிப்பானின் ஒலியைக் கூட்டுவது அல்லது குறைப்பது போல எல்லாவற்றையும் சட்டென தள்ளிவிட்டு முன்னால் வந்து நின்று கொண்டிருக்கிற வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது.
க்ரியா பதிப்பகத்தை தேடி நான், நரசிம்மன் மற்றும் கல்யாணராமன் ஆகிய மூவரும் அண்ணா சாலையிலிருந்து பைலட் திரையரங்கம் கடந்து ஒரு மாடியிருந்த க்ரியா பதிப்பகம் வரை நடுப்பகலில் நடந்தது நன்றாக நினைவிலிருக்கிறது. வாசிப்பின் ஆரம்பச்சுவையைத் தந்த அன்னம், க்ரியா, கணையாழி இவற்றை மறக்க முடியாது. தொடர்ச்சியாக சிற்றிதழ்கள் அதனை வலுவாக்கியது. இப்போது வாசிப்பும், எழுத்தும், பிரசுரமும் மிக எளிமையானதாக ஆகிக் கொண்டு வருகிற சூழ்நிலையில், வரும் ஆண்டுகளில் புத்தகக் கண்காட்சியிலும் எனது பங்களிப்பு இருக்குமென நம்புகிறேன்.
புத்தக கண்காட்சியில் இதுவரை வாங்கியுள்ள புத்தகங்கள் :
- அம்பை சிறுகதைகள் - அம்பை
- இந்திய ஞானம் : தேடல்கள் புரிதல்கள் – ஜெயமோகன்
- இன்றைய காந்தி – ஜெயமோகன்
- எழுதும் கலை – ஜெயமோகன்
- முறிமருந்து – எஸ்.செந்தில்குமார்
- அன்பின் வலியது உயிர் நிழல் – பாதசாரி
- பேய்க்கரும்பு – பாதசாரி
- உப்பிட்டவரை – ஆ.சிவசுப்ரமணியன்
- கோபுரத் தற்கொலைகள் – ஆ.சிவசுப்ரமணியன்
- ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும் – ஆ.சிவசுப்ரமணியன்
- கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் – ஆ.சிவசுப்ரமணியன்
- போரும் வாழ்வும் : ஈழம் காலச்சுவடு பதிவுகள் - கண்ணன்
- சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும் – கண்ணன்
- கிளிஞ்சல்கள் பறக்கின்றன – ஜே.மாதவராஜ்
- கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு
- குடிபோதை விளைவுகள் தெளிவுகள் – அ.கா.பெருமாள்
- அங்கே இப்ப என்ன நேரம் – அ.முத்துலிங்கம்
- காவலன் காவான் எனின் – நாஞ்சில் நாடன்
- நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று – நாஞ்சில் நாடன்
- நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
- சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன்
- வியப்பளிக்கும் ஆளுமைகள் – வெங்கட்சாமிநாதன்
- வெண்ணிலை – சு.வேணுகோபால்
- பூமிக்குள் ஓடுகிறது நதி – சு.வேணுகோபால்
- களவு போகும் புரவிகள் – சு.வேணுகோபால்
- திசையெல்லாம் நெருஞ்சி – சு.வேணுகோபால்
- தேவதேவன் கவிதைகள் – தேவதேவன்
இன்னும் வாங்க வேண்டியிருக்கிறது....
000
பாத்துக்லாம்ணே
பதிவர் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஈரோடு செல்வது குறித்து குழப்பமான நிலையிருந்தது. ரயிலா, பேருந்தா என்ற குழப்பம். கடைசியாக சுகமான பயணமாக சீருந்தில் சென்று வந்தோம். அப்போதுதான் அவரை முதலில் சந்தித்தேன். கோபமோ, மகிழ்ச்சியோ, ஏமாற்றமோ முகத்தின் ஒவ்வொரு தசையிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய படியிருந்தார். பேச்சில் ஒரு துள்ளல் எப்போதும் இருக்கும். சிலருக்குதான் அது வாய்க்கும். பெரும்பாலும் எப்போதும் சிரித்த முகத்துடன் பார்ப்பது அரிதான விஷயம். எனக்கெல்லாம் துயரம், வருத்தம் இதை முகம் உடனே காட்டிக் கொடுத்துவிடும். ஆனால், நான் சந்தித்தவரோ கொலைதான... பண்ணிடலாம்னே..., கவிதைதான எழுதிடலாம்ணே.., அப்படியொரு உற்சாகம் எதைப் பேசினாலும். பொதுவாகவே இப்படித்தான் பேசுகிறார் போல. இரண்டு நாலும் பண்ணிடலாம்ணே, சரியாயிடும்ணே, வழிக்கு வந்துடும்ணே இப்படி அநியாயத்துக்கு OPTIMIST ஆக இருக்கிறார் மனுஷன். பழகுவதில் அவ்வளவு இனியவர். இதற்குமேல் சொன்னால் வெற்றுப் புகழ்ச்சி ஆகிவிடும். அதுவும் சிரிக்காமல் காமெடி பண்ணுவதில் கில்லாடி. கொஞ்சல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீரியசாக போட்டுத் தள்ளுவார். மனுஷன் இப்படி கடிக்கிறாரே தவிர, சைவப்பிரியர்.
நேற்று (5.1.10) இரவு தண்டோராவிற்கு ஏதோ ஒரு வேலை ஆகணும். பெரும் பிரச்சனை. கடும் கோபத்தில் இருக்கிறார். அவர் கோபம் எந்த அளவிற்கு தெளிவாக இருக்கும் என்பது நண்பர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். P.M. என்று ஆரம்பிப்பார். கடைசியில் ‘வெண்கலத்துலயிருந்து வெடிச்சு..‘ அப்படிப் போகும். கடுமையாக போனில் கத்தி முடித்து டென்ஷனின் உச்ச கட்டத்தில் இருக்கிறார். என்ன செய்யலாம், எப்படி சமாளிக்கலாம் என்று நான், கேபிள், மயில்ராவணன், சூர்யா எல்லாம் ஆளாளுக்கு குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக யோசித்துக் கொண்டிருக்கிறோம். அப்போது சிரித்துக் கொண்டே இவர் சொல்கிறார் ‘பாத்துக்லாம்ணே‘.
எனக்கு நிலைமையை மீறி சிரிப்பு வந்து விட்டது. அந்த நண்பர் யாரென்று சொல்லி விடுகிறேன். என்னைவிட கொஞ்சம் சிகப்பாக இருக்கும் ‘அப்துல்லா‘ தான் அவர்.
எல்லா வருடங்களையும் போலவே இந்த வருடமும் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம், கொஞ்சம் துக்கம், பிரச்சனைகள், பிரிவு, துயரம் என எப்போதும் போல கிடைத்திட எல்லாம் வல்ல மன பகவான் அருள் பாலிப்பானாக.
- பொன்.வாசுதேவன்
மணல் வீடு நிகழ்ச்சிக்கு சேலம் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட படங்கள்
இரவு நடைபெற்ற கூத்து பொம்மலாட்டம்
எடிட்டர் லெனின் விருது வழங்குகிறார்
பார்வையாளரான குழந்தைகள்
முதல் முறை புத்தக வெளியீட்டாளராக கலந்து கொள்வதற்கு வாழ்த்துக்கள். மிகுந்த மகிழ்ச்சி.
ReplyDeleteஅது சரி தோழி தோழிங்கரீங்கலே யார் அவங்க? சொல்லவே இல்ல? :))
தங்களை இது வரை ஒரு முறை தான் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் சந்திக்க எண்ணும் இனிய மனிதராக உணர்கிறேன்.
அப்துல்லா மிக இனிமையான மனிதர். நண்பர். ஒரு வரியில் சொல்லுனும்னா.. "இவர் ரொம்ப நல்லவர்".. ஆனா கமெண்டுகள் தான் (பின்னூட்டத்திலும், நேரிலும்) வெடியாக வரும்.
புகை படங்கள் அருமை. குறிப்பாய் சேலம் விழாவில் சிறு குழந்தைகளை படம் பிடித்திருந்தது மிக நெகிழ்ச்சி
ReplyDelete//என்னைவிட கொஞ்சம் சிகப்பாக இருக்கும் //
ReplyDeleteகடவுளே என் கண்ணை காப்பாத்து
அருமையான தொகுப்பு
படங்கள் அருமை
மணல்வீடு நிகழ்வை தவறவிட்டதில் வருத்தம்தான்
நல்ல பதிவு
ReplyDeleteரொம்ப நேரம் உங்க கூட பேசிய உணர்வு வாசு. நல்லா எழுதியிருக்கீங்க. சுவாரஸ்யம் என்பதை விட நெகிழ்வாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இந்த மனநிலை தொடரட்டும் வாசு.
ReplyDeleteஅப்துலைப் புகழ்ந்து, பாராட்டி போர் அடித்து விட்டது. ஆனால், அவர் கொஞ்சமாவது மாறினால் திட்டலாம். ம்ஹும் :(
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
அனுஜன்யா
கச்சிதமான, மகிழ்வான பகிர்வுகள். நன்றி.
ReplyDeleteமுழுமையான பகிர்வு. நன்றி:)
ReplyDeleteஅப்துல்லாவை பற்றி சொன்னது உண்மைதான். சாருவின் புத்தகவெளியீட்டில் பார்த்தேன். அப்ப யோகி(Tsotsi) வந்திருந்தார்.(அப்பதான் எல்லாருக்கும் தெரியும்) லக்கி ஏதோ அப்துல்லாவை சொல்ல.. அதற்கு அவர் சிரித்துக்கொண்டே ‘நான் வேண்ணா சாக்ஷாங்கடமா விழுந்து நமஸ்காரம் பண்னிட்டுமா’என்றார் பாருங்க.
ReplyDeleteஅப்புறம் சித்தப்பு புக் ஃப்ங்ஷ்ன்ல சில மணித்துளிகள் அங்கேயும் அதே துள்ளல் தான் சிரிப்புதான்.
அவர் ரெஞ்சுக்கு இன்னொருத்தர் இருக்காருங்க... அவரு யாருன்னா ... புதுசா கவிதை எழுதற யூத்துதான் :)
புத்தகப் பட்டியல் ரொம்ப பெரிசாக இருக்குங்க வாசு :) படித்திவிட்டுச் சொல்லுங்கள் அவை பற்றி ... ஆவலுடன் ...
ReplyDeleteஅருமையான பகிர்வு.
ReplyDeleteஉங்க சிகப்புக்கு என்ன தலைவா குறைச்சல்!
ReplyDeleteஅப்துல்லா அண்ணனின் பலமே அவரது அணுகுமுறை தான்!
ReplyDeleteஅருமையான நெகிழ்வான பதிவு. நீங்கள் ஏர்வாடியில் எடுத்த குழந்தைகளின் புகைப்படங்கள் என்றும் என் மனதில் இருப்பவை.
ReplyDeletei like vey much. cute boys & girls.
ReplyDeleteதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html
இந்த பகிர்வை எப்படி மிஸ் பண்ணேன்?
ReplyDeleteஅப்துல்லாவின் பகிர்வு மிக அற்புதம் வாசு.
குழந்தைகளின் புகைப்படங்களும்..
// பண்ணிடலாம்ணே, சரியாயிடும்ணே, வழிக்கு வந்துடும்ணே இப்படி அநியாயத்துக்கு OPTIMIST ஆக இருக்கிறார் மனுஷன். பழகுவதில் அவ்வளவு இனியவர். //
ReplyDeleteநானும் இதை வழிமொழிகிறேன். வயசு வித்தியாசம் இல்லாமல் எல்லாரையும் ‘அண்ணே அண்ணே’ன்னு சொல்றதுக்கு பெரிய மனசு வேண்டும்.
சமீபத்தில் மறைந்த எலிமேடு மகாலிங்கத்தின் மனைவியை மேடையில் பாத்ததுமே அழுதுவிட்டேன்.அங்கிட்டு ஹரியும் அழதுதிட்டிருக்கிறார் மைக் முன்னாடி.
தாங்கள் அவருக்கு பணவுதவி செய்தும் அதைப் பதிவில் போடாதது தங்கள் பெருந்தன்மையைக் காட்டுகின்றது.
நிழற்படங்கள் ஆகச்சிறந்ததாக உள்ளன.முக்கியமாக கையில் தடியுடன் சிறார்கள்,கண்ணாடிச் சிறுமி.
ராசகணபதி பிரியாணிய விட்டுப்போட்டீங்களே..வரலாறு முக்கியம் அரசரே..நன்றி பகிர்ந்தமைக்கு...
மிகவும் அழகாக, சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ள பதிவு.
ReplyDeleteதங்களின் முயற்சி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்.