நன்றி : உயிரோசை 12.07.2010
ஒரு சுய மரணம் (சிறுகதை) - பொன்.வாசுதேவன்
.............................................................................................................
தெய்வநாயகம் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
எப்பொழுதும் போல சாப்பிட்டு முடித்து ஒரு மணிநேரம் கழித்து மூணு மணி வாக்கில் புகை பிடிப்பதற்காக இரண்டாவது மாடியில் உள்ள அறையைக் கடந்து செல்கின்ற போதுதான் அலுவலக உதவியாளனான ராமசாமி அதைப் பார்த்தான். பார்த்தவன் அலறலோடு நீள வராந்தாவில் ஓடிவந்ததோடு மயங்கி விழுந்து விட்டான்.
கொஞ்ச நேரத்தில் அலுவலகமே கூடிவிட்டது. நகரின் மையத்திலுள்ள ஒரு முட்டுச்சந்தில் இயங்குகின்ற அரசு அலுவலகம் அது. கழிவு நீரகற்றும் பணியை மேற்கொள்கிற வாகனங்களுக்கான எரிபொருள் தேவைகளுக்கான பட்டியல் அனுப்புதல் மற்றும் அதற்கான தொகையை அளிக்கின்ற உத்தரவுகளை வழங்குவது மட்டுமே அந்த அலுவலகத்தின் தலையாய பணியாக இருந்தது. கிட்டத்தட்ட அரைத்த மாவையே அரைக்கின்ற வேலை. இரண்டு பெண் பணியாளர்கள் உட்பட அந்த அலுவலகத்தின் நிர்வாகத்தினை ஒன்பது பேர் கவனித்துக் கொண்டார்கள்.
தெய்வநாயகம் அந்த அலுவலகத்தின் கணக்கு மேலாளராக இருந்தார். கணக்கு உதவியாளராக ஏழு வருடங்களும்,அதன் பிறகு மேலாளராகப் பதவி உயர்வு பெற்று நான்கு வருடங்களும் ஆகிறது. மிகவும் பணி சிரத்தை உடையவர். காலை பதினொரு மணிக்கு ஒரு காப்பி குடிப்பார். அதோடு சாயங்காலம் நான்கு மணிக்கு ஒன்று.இதைத்தவிர வேறு கெட்ட பழக்கம் எதுவும் அவருக்குக் கிடையாது.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஒருவழியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சொல்லி அனுப்பினார்கள்.மயக்கமாகிக் கிடந்த ராமசாமியை வேறு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டியிருந்தது.அலுவலகமே பரபரப்பாக இருந்தது. தெய்வநாயகம் ஏன் தூக்குப்போட்டுக் கொண்டார் என்ற கேள்வி எல்லோர் முகத்திலும் தொற்றிப் பரவியபடியிருந்தது.
தெய்வநாயகம் தூக்கிட்டுக் கொண்ட அந்த அறை முன்பு ஆட்சிப் பணியாளர் அறையாக இருந்தது.ஆட்சிப் பணியாளருக்கு நகர் மையத்தில் குளிர்சாதன வசதியுடன் வேறொரு அலுவலகத்தில் அறை ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த அறை கடந்த ஒரு வருடமாய் பயன்பாட்டில் இல்லாமல் காலியாக இருந்தது.
காவல் நிலையத்திலிருந்து வந்து விட்டனர். அலுவலகத்தில் இருந்தவர்கள் சற்று பயம் தணிந்தவாறு தூக்கில் தொங்கிய தெய்வநாயகத்தின் உடலைப் பார்த்தனர். அவித்த சிறிய முட்டை போல தெய்வநாயகத்தின் கண்கள் வெளியே துருத்தியபடியிருந்தன. ஒரு கண் மூடியும், ஒரு கண் சற்றே திறந்தபடியும் இருந்தது. கடித்துக் கொண்ட நாக்கிலிருந்து எச்சிலும் சேர்ந்து பசை வழிவது போல கோடாகி நீண்டு அவரது சட்டையின் நான்காவது பட்டனில் ஒட்டிக் கொண்டிருந்தது. அவரது கால் சட்டையிலும் அந்த எச்சில் நீண்டு ஏற்கனவே வழிந்து காய்ந்திருந்தது.
காவல் அதிகாரி தெய்வநாயகத்தின் அருகே மேசையில் இருந்த ஒரு வாட்ச் மற்றும் அதன் கீழ் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதத்தைப் பத்திரமாக கைக்குட்டையால் எடுத்தார். வாட்சை அருகிலிருந்தவரிடம் கொடுத்துவிட்டு, கடிதத்தைத் திறந்தார். "இந்த முடிவிற்கு யாரும் காரணம் இல்லை. – தெய்வநாயகம்" என்று கையொப்பமிடப்பட்டிருந்தது. படித்துவிட்டு, கை ரேகைகளைப் பதிவு செய்யும் நிபுணர்களையும், அதன் பிறகு மருத்துவ மனை ஊழியர்களையும் ஆவன செய்யுமாறு பணித்தார்.
அலுவலக ஊழியர்கள் அனைவரையும் அழைத்து எத்தனை பேர் பணிபுரிகிறார்கள், தெய்வநாயகத்தோடு நெருக்கமானவர்கள் யார், யாருக்காவது அவருடன் தகராறு உண்டா, வீட்டு முகவரி போன்றவற்றை விசாரித்தார். மருத்துவ விடுப்பில் இருக்கின்ற ஒரு பெண் ஊழியர் மற்றும் தற்காலிக விடுப்பு எடுத்திருக்கும் குமரேசன் தவிர எல்லோரும் வந்திருந்தனர். சம்பவத்தை முதலில் பார்த்த ராமசாமி மயக்கமடைந்ததினால் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விவரத்தையும் காவல் அதிகாரியிடம் .ஊழியர்கள் தெரிவித்தனர். தெய்வநாயகத்தின் வீட்டிற்கு ஏற்கனவே ஆள் அனுப்பப்பட்டிருந்தது. அவள் மனைவி அழுதுகொண்டே ஓடி வந்தாள். மருத்துவமனை படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த தெய்வ நாயகத்தைக் கட்டிக்கொண்டு அழ முற்பட்ட அவளைக் காவல் உதவியாளர்கள் தடுத்து விட்டனர்.
காவல் அதிகாரி விசாரணையின்போது தெய்வநாயகம் குறித்து ஊழியர்கள் தெரிவித்த விவரமானது பின்வருமாறு பதிவு செய்யப்பட்டு, ஊழியர்களின் ஒப்புதல் கையொப்பம் பெறப்பட்டது.
"தெய்வநாயகம் மிகவும் அமைதியானவர். அதிர்ந்து ஒரு வார்த்தைகூட பேச மாட்டார். அவரிடம் கொடுக்கும் பணிகளை விரைந்து முடித்து விடுவதோடு, காலதாமதமாக ஆகின்ற மற்றவர்களின் பணிகளையும் முடித்துத் தருவார். காலையும், மாலையும் ஒவ்வொரு காபி சாப்பிடுவது மட்டுமே அவரது பழக்கம். வேறு பழக்கம் கிடையாது. எல்லோருடனும் அளவோடு பேசுவார். அதிகம் சிரிப்பவரில்லை. சதா பணியிலேயே முழ்கிக் கிடப்பவர். உயர் அதிகாரி பணி ஓய்வு ஒன்றில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்ற ஒரு முறை மட்டும் அவருடைய மனைவியை அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளார். அவருக்குக் குழந்தைகள் கிடையாது. அதிகம் விடுப்பு எடுக்க மாட்டார்.உடல்நிலை சரியில்லையென்றால் மட்டும் சிறு அனுமதி எடுத்துக் கொள்வார். அவருடைய வீடு அலுவலகத்திலிருந்து அரை மணி நேர நடை தூரத்தில் உள்ளது. அலுவலகத்திற்கு நடந்துதான் வருவார்.அவருக்கு வெளியே சாப்பிடும் பழக்கம் கிடையாது. வீட்டிலிருந்து கொண்டு வந்துதான் சாப்பிடுவார்.அலுவலகத்தில் யாருட.னும் எந்தத் தகராறும் அவருக்கு கிடையாது. யாரிடமும் கோபமாகக்கூட பேச மாட்டார்.’
அழுது கொண்டிருந்த தெய்வநாயகத்தின் மனைவியைக் கூப்பிட்டுக் காவல் அதிகாரி விசாரித்தார். விசாரணையில் அவளும் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தது போலவே தெய்வநாயகம் மிகவும் அமைதியானவர் என்றும், தன் மீது மிகுந்த அன்பும் பிரியமுடையவராகவும் நடந்து கொண்டார் என்று தெரிவித்தாள். இதுவரை தன்னைக் கடிந்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்றும் தெரிவித்தாள்.
இப்படியாகக் காவல் அதிகாரி தனது விசாரணையை முடித்துவிட்டு, மருத்துவமனைக்குச் சென்றிருக்கும் அலுவலக உதவியாளர் ராமசாமி மற்றும் தற்காலிக விடுப்பில் இருக்கின்ற குமரேசன் இருவரையும் விசாரணைக்குக் காவல் நிலையத்தில் பிரசன்னமாக வேண்டும் என்று கட்டளையிட்டு புறப்பட்டார்,
அதற்குள்ளாகத் தெருவில் கூட்டம் கூடியிருந்தது.அலுவலக ஊழியர்கள் போலவே எல்லோருக்கும் கேள்விகள்..
0
தெய்வநாயகத்திற்கு உடம்பு என்னவோ பண்ணியது. பகல்12 மணிக்கெல்லாம் வயிற்றைப் பிசைவது போல் இருந்தது. பசியினால் கூட இருக்கும் என்று நினைத்தபடி, உணவு நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்தார். நேற்று காய்கறிக்கடையில் பிரண்டையைப் பார்த்தார். உடலுக்கு நல்லதாச்சே என்று பிரண்டையும், இஞ்சியும் வாங்கிக் கொண்டு போய் யமுனாவிடம் கொடுத்து துவையல் செய்யச் சொன்னார். பிரண்டைத் துவையல் மட்டுமல்ல,எந்த சமையலையும் ஒரு தனிச்சுவையோடு செய்வதில் யமுனா தேர்ந்தவள்.
அளவான புளியுடன் இஞ்சி, பருப்பு சேர்த்து மசிய அரைத்திருந்த பிரண்டைத் துவையல் மிகவும் சுவையாக இருந்தது. வெறும் சாதத்தில் நல்லெண்ணையை விட்டு துவையல் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்ட துவையல் ருசி, அடுத்த வேளைக்கும் அதையே சாப்பிடலாம் என்று சொல்ல வைத்தது.
அவர்களுக்குத் திருமணமாகி எட்டு வருடமாகிறது. இன்று வரை சமையல் உட்பட எல்லாவற்றையும் சுவை கூட்டிச் செய்யப் பழகியிருந்தாள். அவரைப் போலவே அவளுக்கும் அப்பா, அம்மா இருவருமே இறந்து விட்டனர். தெய்வநாயகத்திற்கு சுவை உணர்வெல்லாம் கிடையாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பசிக்கு உண்பது மட்டும்தான். அவர் ரசித்துச் செய்கிற ஒரே விஷயம் காபி குடிப்பதுதான். ஆனால் திருமணத்திற்குப் பிறகு உணவுச் சுவைக்கும் அடிமையாகி விட்டார்.
யமுனா ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வாள். அவள் நேர்த்திக்கு எடுத்துக் கொள்கிற சிரத்தையின் அழகு எல்லாவற்றிலும் இருக்கும். அவளை அவருக்கு கிடைத்த புதையலாகவே கருதினார்.இருவருமே அதிக அன்பும் பிரியமுமாக இருப்பார்கள். உடல் சேர்க்கையின் ஆரம்பத்திலேயே தெய்வநாயகத்திற்கு உடல் தளர்ந்து விடும். சோர்வடையும் அவரை அணைத்தபடியே தேற்றி தனக்கேற்றபடி தயார் செய்வதிலும் அவள் தேர்ச்சியாக இருந்தாள். குழந்தை இல்லாதது பற்றியும் அவர்கள் இருவருமே அதிக வருத்தம் இல்லாதவர்களாக இருந்தார்கள். உடல் இன்பம் ஒன்றுதான் அவர்களை எல்லாவற்றிலிருந்தும் ஆற்றுப்படுத்துவதாக இருந்தது.
சாப்பிட்ட பிறகு வயிற்றுக் கடுப்பு இன்னும் அதிகமாக இருந்தது. கழிவறைக்குப் போக வேண்டிய அவஸ்தையில்லை. இது வேறு விதமாகக் குடலைப் பிசைவது போல இருந்தது. பிரண்டைத் துவையல் நன்றாக இருக்கிறதே என்று சாப்பிட்டதுதான் பிரச்சினையோ.. தெரியவில்லையே என்று நினைத்தபடி சரி, காபி குடித்தால் சரியாகி விடும் என்று நினைத்தார்.
காபி குடித்த உடனே குமட்டிக் கொண்டு வந்தது. உடல் நலக்குறைவு என்றால் கூட யாரிடமும் சட்டெனப் பகிர்ந்துக் கொள்ள மாட்டார். நிதானமான நடையுடன் ஓய்வறைக்குச் சென்றார். குழாயைத் திறந்து பீங்கான் குழியில் சப்தமில்லாமல் வாந்தியெடுத்தார். மதியம் சாப்பிட்ட உணவும், காப்பியும் சேர்ந்து செம்மண் குழைவு போல கோழையாக வந்தது.
வாந்தியெடுத்ததும் தலைசுற்றுவது போல இருந்தது. ஓய்வறை நாற்காலியில் அமர்ந்தார்.அலுவலகத்தில் ஏற்கனவே இரண்டு பேர் விடுப்பில் இருந்தார்கள். போதாதற்கு அவசர வேலை என்று குமரேசன் அனுமதியில் சென்று விட்டிருந்தான். ...ஒய்வெடுத்தால் மட்டுமே சரியாகும் போல இருந்தது.பிரண்டைத் துவையல் சாப்பிட்டதில் ஏதோ ஒவ்வாமை ஏற்பட்டிருக்கும் என்று தோன்றியது. வெந்தயப் பொடியை மோரில் போட்டுக் குடித்து விட்டு இரவு எதுவும் சாப்பிடாமல் வயிற்றைக் காயப் போட்டால் சரியாகிவிடும் என்று நினைத்தார். தொலைபேசியில் யமுனாவிடம் சொன்னால் கலவரமாகி விடுவாள்.அவர் உடம்புக்கு ஏதாவது ஒன்று என்றால் ரொம்ப பயந்து போய் விடுவாள். உடனே மருத்துவரிடம் காட்டிவிட வேண்டும் என்பாள். ஆனால் தெய்வநாயகத்திற்கு மருத்துவமனை என்றாலே பிடிக்காது.
சிறு அனுமதிக்கான குறிப்பினை எழுதி தலைமைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
இரண்டு மணி வெயில் கொளுத்தியது. நடக்க முடியவில்லை. எப்போதும் நடந்தே சென்று பழகி விட்டதால் ஆட்டோவில் செல்லக் கூச்சமாக இருந்தது. முடிந்தவரை நடப்போம் என்று நினைத்தபடி நடந்தார்.
அனேகமாக யமுனா தூங்கிக் கொண்டிருப்பாள். அவரிடமும் ஒரு சாவி இருந்தது. வீட்டையடைந்ததும் வியர்வையில் உடல் முழுக்க நனைந்திருந்தது. தொலைக்காட்சி ஒலி கேட்கவில்லை. தன்னிடமிருந்த சாவியைப் பயன்படுத்தி வாசல் கதவைத் திறந்தார். படுக்கையறைக்குள் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. யமுனா தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாள்.
கைக்கடிகாரத்தைச் கழற்றி மேசையில் வைத்துவிட்டு சோபாவில் மெதுவாக அமர்ந்தார். இப்போது ஓரளவு ஆசுவாசமாக இருந்தது. அலுவலகத்திலேயே இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் சரியாகியிருக்கும். செய்ய வேண்டிய முக்கியமான பணி ஒன்று வேறு கிடப்பில் இருக்கிறது. அவர் எப்போதும் பணிகளைக் குறையோடு வைத்ததில்லை.
சோபாவின் அருகில் துணிப்பை ஒன்று இருந்தது. இதுபோன்ற பையை அவர் எங்கோ அடிக்கடி பார்த்திருந்தது நினைவுக்கு வந்தது.
கொஞ்சம் படபடப்பு கூடியது. மெதுவாக எழுந்து சென்று லேசாகத் திறந்திருந்த படுக்கையறை ஜன்னல் வழியாகப் பார்த்தார். மேலேறி வேகமாய் முயங்கிக் கொண்டிருக்கும் ஆடைகளற்ற யமுனாவின் வெளிர்ந்த பின்புறம் தெரிந்தது. சப்தமின்றித் திரும்ப வந்து துணிப்பையை மீண்டும் பார்த்தார். வாசல் கதவைத் திறந்து வெளியே வந்து கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே நடக்கத் துவங்கினார்.
அவ்வகையான துணிப்பையை உபயோகப்படுத்துகிற நபரை அவருக்கு நினைவு வந்தது. அவரது அலுவலகத்தில் பணிபுரியும் குமரேசன்தான் அது. குமரேசனைப் பற்றி யோசித்தார். பழகுவதற்கு மிகவும் இனிமையானவன். முகம் சுளிக்காமல் எல்லா பணிகளையும் செய்வான். வேலையில் சேர்ந்து மூன்று வருடங்கள் இருக்கும். இன்னும் திருமணமாகவில்லை.
எந்த உணர்ச்சியுமற்று இருந்தது தெய்வநாயகத்தின் மனம். மீண்டும் அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினார். குறையாக வைத்து விட்ட பணியை இருக்கிற நேரத்தில் முடித்து விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. அலுவலகத்தை அடைந்ததும், தான் சென்ற பணி முடிந்து விட்டதால் திரும்ப வந்து விட்டதாகக்கூறி மறுபடியும் பணியில் ஆழ்ந்தார்.
எப்போதும் போல மாலை வீடு திரும்பியதும், சுவையான காபியை யமுனா பரிமாறினாள். அவள் முகம் மலர்ச்சியாக இருந்தது. தலையில் வைத்திருந்த மல்லிகைப்பூ அவருக்குக் கிளர்ச்சியூட்டியது. இரவு உணவின்போது பிரண்டைத் துவையல் கேட்டுக் கேட்டு சாப்பிட்டதால், தான் சாப்பிடாமல் எடுத்து வைத்திருந்ததாகக் கூறி அவருக்குப் போட்டாள். மறுப்பேதும் இல்லாமல் நல்லெண்ணெய்யுடன் பிணைந்து பிரண்டைத் துவையலை தெய்வநாயகம் சாப்பிட்டார். துவையலின் சுவை இன்னும் கூடியிருந்தது.
இரவு முழுவதும் அவரை அணைத்தபடியே அவரது கால்மேல் தனது கால்களைப் போட்டு அயர்ந்து உறங்கினாள் யமுனா. தெய்வநாயகம் படுக்கையறை ஜன்னலைப் பார்த்தபடியே உறங்கிப்போனார்.
காலை உணவருந்தி, அவள் தந்த மதிய உணவை எடுத்துக் கொண்டு எப்போதும் போல அலுவலகம் கிளம்பினார். அலுவலகத்தில் புதிய பணிகள் அவருக்காகக் காத்திருந்தன. ஒன்று விடாமல் வழக்கத்தை விட விரைவாக முடித்தார். மதிய உணவையும் சீக்கிரம் எடுத்துக் கொண்டார். மதிய உணவிற்குப் பிறகு முதல் மாடிக்குச் சென்றார். காலையிலேயே வீட்டிலிருந்து எடுத்து வந்த நைலான் கயிற்றைச் சுருக்கிட்டு சரியாக உள்ளதா என்று சரி பார்த்தார். அறையிலிருந்த மேசையை சப்தமின்றி லேசாகத் தள்ளி வைத்தார். சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தார்.
‘இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல’
0
மிகவும் உயிரோட்டமான கதை.. முதல் வரியிலேயே படிப்பவனுக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அவசரமாய் கதையை மேய்ந்துவிட்டு பின் நிதானமாக மீண்டும் ஒருமுறை படிக்கும் பாணியைக் கொண்ட இக்கதை.. நிச்சயம் சிறந்த கதைகளில் ஒன்று... மிகுந்த பாராட்டுக்கள்..
ReplyDeleteஹையோ..கதை ரணம்...நம்பிக்கை துரோகம்..
ReplyDeleteகனமான கதை வாசு..
ம(கா)ரணம்
ReplyDeleteமனதை பாதிக்கிறது கதை; ஆனால் இவருக்கு ஏன் தண்டனை? வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது போலும்..
ReplyDeleteவாசித்தேன்.சொல்ல ஒன்றுமில்லையென்று பேசாமல் போகிறேன் !
ReplyDeleteகதை ரொம்ப நல்லா இருக்கு
ReplyDeleteவாழ்த்துகள்
தலைவர் கரு என்னவோ சின்னது தான் அதை இவ்வளவு சுவாரசியமா எழுதியதில் தான் இருக்கு உங்கள் திறமை.. Awesome Walk ..
ReplyDeleteகதை கொண்டு சென்ற விதம் அருமையாக இருந்தது!
ReplyDeleteகதை அருமையான நடை....
ReplyDeleteகதை கொண்டு சென்ற விதம் அருமையாக இருந்தது!
ReplyDeleteawesome!!!
ReplyDeleteஎனக்குப் பிடிச்சுதுங்க.. Such a good narration!
ReplyDeleteவிவரிப்பு நல்லா இருக்குங்க வாசு. செந்தில் சொன்னதே தான் எனக்கும் தோணுச்சு. நானும் ஒரே மூச்சில் படிச்சிட்டேன்.
ReplyDeleteநல்லாருக்கு வாசு சார் :).
ReplyDeleteகொன்னுட்டீங்க...ஏன் இப்படி? . உயிரோசையில் சுயமரணம் கதை படித்தேன். மனதை பாதிக்கும் கதை.
ReplyDeleteதெய்வநாயகம் முடிவும் கதையும் மனதை என்னவோ செய்கிறது
//அவருக்குக் குழந்தைகள் கிடையாது// //உடல் சேர்க்கையின் ஆரம்பத்திலேயே தெய்வநாயகத்திற்கு உடல் தளர்ந்து விடும். சோர்வடையும் அவரை அணைத்தபடியே தேற்றி தனக்கேற்றபடி தயார் செய்வதிலும் அவள் தேர்ச்சியாக இருந்தாள்// //அவசர வேலை என்று குமரேசன் அனுமதியில் சென்று விட்டிருந்தான்// //மேலேறி வேகமாய் முயங்கிக் கொண்டிருக்கும் ஆடைகளற்ற யமுனாவின் வெளிர்ந்த பின்புறம்// //அலுவலகத்தில் புதிய பணிகள் அவருக்காகக் காத்திருந்தன. ஒன்று விடாமல் வழக்கத்தை விட விரைவாக முடித்தார்// //‘இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல’//
ReplyDeleteஅவ்வம் முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் சரியான மனக்காரணிகள், இயல்புகள். கதைசொல்லலைத் திட்டமிட்டுள்ள நேர்த்தி! மிகச் சிறப்பான எழுத்து. வாழ்க!
super..
ReplyDeleteஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை...மிக மிக அருமை...
ReplyDelete//
ReplyDeleterajasundararajan said...
//அவருக்குக் குழந்தைகள் கிடையாது// //உடல் சேர்க்கையின் ஆரம்பத்திலேயே தெய்வநாயகத்திற்கு உடல் தளர்ந்து விடும். சோர்வடையும் அவரை அணைத்தபடியே தேற்றி தனக்கேற்றபடி தயார் செய்வதிலும் அவள் தேர்ச்சியாக இருந்தாள்// //அவசர வேலை என்று குமரேசன் அனுமதியில் சென்று விட்டிருந்தான்// //மேலேறி வேகமாய் முயங்கிக் கொண்டிருக்கும் ஆடைகளற்ற யமுனாவின் வெளிர்ந்த பின்புறம்// //அலுவலகத்தில் புதிய பணிகள் அவருக்காகக் காத்திருந்தன. ஒன்று விடாமல் வழக்கத்தை விட விரைவாக முடித்தார்// //‘இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல’//
அவ்வம் முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் சரியான மனக்காரணிகள், இயல்புகள். கதைசொல்லலைத் திட்டமிட்டுள்ள நேர்த்தி! மிகச் சிறப்பான எழுத்து. வாழ்க!
//
ithai ippadiththaan sollanumnu thonum......aanaal,yenakku solla varaathu.
iyavin pinoottam paarththathum....naan ninaichchathunnu thonuchchu.....!!
moththaththil VAAZHHA....!!
Its a touching story...Really good one
ReplyDelete