வரலாறு என்று எதைக் கூறுகிறோம்... நடந்தவை எல்லாமே வரலாறுதானா...? எது உண்மை.. எது பொய் என பகுத்தறிந்தும், மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாற்றினை அடையாளப் படுத்துவதிலும், நினைவுக்கு மீளச்செய்வதிலும் சமுக மானுட அறிவியலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
ஆதிமனிதனின் காலம், மன்னர் காலம் என தொடர்ந்து இன்று வரை பல தொன்மைகள் படிந்த மானுட சரித்திரம் பல விசித்திரங்களைக் கொண்டது. சரித்திரத்தின் பல பக்கங்களை நாம் வாசிக்காமலும், அதைப் பதிவிடாமலும் விட்டிருக்கிறோம். ஒவ்வொருவரின் எழுத்தும், ஆக்கங்களும் அவரவர் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பாக இருக்கும்.
கலைவாணர் பாடலில் வரும் சில வரிகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள்... “பட்டனைத் தட்டினதும் ரெண்டு தட்டுல இட்டிலியும் கூட தொட்டுக்க சட்டினியும் சட்டுனு வந்திடனும்“ இப்பாடலின் வரிகளில் ஒளிந்துள்ள கருத்து என்ன தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியை எதிர்நோக்கும், அதற்கென ஏங்கும் சராசரி மனித மனோபாவம் அங்கே தென்படுகிறது. ‘நிழல்கள்‘ படத்தின் சில காட்சிகளில் நமக்கு உணரக்கிடைப்பது என்ன ? கல்லூரிப் படிப்பு முடிந்து வேலையில்லா நிலையிருந்த காலத்தை நமக்கு சொல்கிறது.
திரைப்படம் ஒரு உதாரணம்தான். சரித்திரங்களை பதிவு செய்வதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட ‘அலறியபடி ஓடிவரும் நிர்வாணச் சிறுமி‘யின் புகைப்படம் நமக்குள் நிகழ்த்தும் உணர்வுப் பெருக்குகள் எத்தகையது. நாம் வாழ்ந்த காலத்தையும் நமக்கு முன் வாழ்ந்தோரின் வாழ்க்கை முறையையும் எந்த விருப்பு வெறுப்புகளுமற்று பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
‘சரித்திரம்‘ என்ற சொல் எதைக் குறிக்கிறது ? ‘சரி‘ என்பதை சம்மதக்குறிப்பாக நாம் பயன்படுத்தி வருகிறோம். ‘சரி‘ என்றால் ஒரு தன்மை அல்லது ஒழுங்கு என்றும் பொருள் இருக்கிறது. ‘சரிதம்‘ என்றால் ‘காதை‘ எனவும், ‘சரிதர்‘ என்றால் ‘சஞ்சரிப்போர்‘ எனவும் அர்த்தமுள்ளது. இதன்படி வாழ்ந்தவர்களின் கதையை, மானுடத்தை குறிப்பிடும் சொல்லாக சரித்திரம் விளங்குகிறது. ‘வர‘ என்ற சொல்லுக்கு ‘நடக்க‘ ‘சம்பவிக்க‘ ‘தோன்ற‘ என்றெல்லாம் பொருள் உள்ளது. நடந்தவற்றையும், சம்பவங்கள் குறித்தும், தோன்றல்கள் குறித்தும் பதிவதும், பார்ப்பதும் ‘வரலாறு‘ எனலாம்.
ஒரு இனத்தின் முழுமையான சரித்திரத்தை அறிந்துகொள்ள வரலாற்றுப் பதிவுகள் அவசியமாகிறது. கல்வெட்டு, ஓலைச்சுவடி, சிற்பங்கள், ஓவியங்கள் என தொன்றுதொட்டு வளர்ந்த சரித்திரப் பதிவுகளின் முன்னோடிகள் இன்று எழுத்து, ஓவியம், காட்சி ஊடகம், கணினி, வலைப்பக்கம் என பேரெழுச்சி பெற்று நிற்கிறது.
சமகாலத்தை மட்டுமின்றி நம் முன்னோர் வாழ்ந்த காலம் பற்றியும் நாம் பதிந்து செல்ல வேண்டியது அவசியமாகிறது. ராகுல் சங்கிருத்தியானின் ‘வால்கா முதல் கங்கை வரை‘ என்ற ஒரு புத்தகம் ஏற்படுத்திய மனவெழுச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அதேபோல ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி‘ காட்டும் உலகம் நாம் நேரில் காணாவிட்டாலும் உணர்ந்தறியக்கூடியது. ஆ.சண்முக சுந்தரத்தின் ‘நாகம்மாள்‘, ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு‘ என சொல்லிக்கொண்டே போகலாம். நேரடியாக சரித்திரத்தை பதிவு செய்யாவிட்டாலும், நாவல் என்ற வடிவத்தை கையாண்டு அதன் வாயிலாக சமகால சரித்திரத்தை பதிவு செய்த படைப்புகள் இவை.
தொ.பரமசிவன், ஆ.இரா.வெங்கடாசலபதி, பக்தவச்சலபாரதி, ஆ.சிவசுப்ரமணியன், கி.ராஜநாராயணன், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா, ச.தமிழ்ச்செல்வன், அசோகமித்திரன், பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ், அ.முத்துலிங்கம், சு.தியோடர் பாஸ்கரன், கோபிகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், ஞாநி, மணா, சுகுமாரன், கண்ணன், எச்.பீர்முஹம்மது, ஹெச்.ஜி.ரசூல் (பட்டியல் முழுமையானது அல்ல, எனக்கு வாசிக்கக் கிடைத்தவையின் அடிப்படையிலேயே இப்பெயர்களை குறிப்பிடுகிறேன்) என சமீப காலங்களில் எழுதி வருபவர்களில் மானுடவியலை பதிவு செய்வதில் சிறந்திருக்கிறார்கள்.
சரி... பதிவின் தலைப்புக்கு வருவோம்.
“இந்து அரிசனர், நாடார் இனத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நுழையத் தடை“ என்றொரு நிலை இருந்து பின்னர் 1939-ல் ஆலய பிரவேசப் போராட்டம் நடந்த பின்னரே அனைத்து சமுகத்தினரும் நுழைய அனுமதிக்கப்பட்டனர் என வரலாற்றில் உள்ளது.
கடந்த வாரத்தில் பத்திரிகையாளர் மணா எழுதிய ‘தமிழகத்தடங்கள்‘ (வெளியீடு : உயிர்மை பதிப்பகம்) என்ற புத்தகத்தை வாசித்தேன். வரலாறு குறித்த பதிவுகளின் அவசியமும் தேவையும் எந்த அளவிற்கு கட்டாயமானது என்பதை உணர்கிறேன். அதிக விலையின்றி (ரூ.90/-) வெளிவந்திருக்கும் இதுபோன்ற புத்தகங்களை நாம் வாசித்து உணர்வதும், இதன் கருத்துக்களை பரவலாக்கி மக்களிடையே கொண்டு செல்வதும் சரித்திரம் பற்றிய ஆழமான புரிதலையும் தெளிவையும் உருவாக்கும்.
சிற்பங்கள் அடர்ந்த கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம், பொற்றாமரைக்குளம், வடிவமைப்பில் தனித்துவம் என பல்வேறு புகழ்ச்சிகளுக்கு உரித்தான மதுரை மீனாட்சியம்மன் கோவிலிற்கு காலச்சரித்திரத்தில் இருந்த ஒரு கரும்புள்ளியைப் பற்றி தமிழகத் தடங்களில் பதிந்துள்ளார் மணா.
1937-ல் காந்தி தமிழகம் வந்த போது, இந்து அரிசனங்களையும், நாடார் சமூகத்தினரையும் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து, அதைக் கண்டித்து தானும் மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு செல்ல மறுத்து விட்டார். காங்கிரசாரிடமும், ஆச்சாரக் காப்பாளர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்திய நிகழ்வு காந்தியின் மறுப்பு. 1930-க்குப் பிறகு தாழ்த்தப்பட்டோர் ஆலயங்களுக்குள் நுழைவது குறித்து வலியுறுத்தும் எண்ணம் காந்தியிடம் இருந்தது. அன்றைய சூழலில் காங்கிரசின் ஈடுபாடாக இச்செயலைக் கருதியதால், இதில் அம்பேத்கர் ஆர்வம் காட்டவில்லை.

மதுரை நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் வைத்தியநாதய்யர் தலைமையில், அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதம மந்திரியான ராஜாஜி வழிகாட்டுதலுடனும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவுடனும் ஆலயப் பிரவேசம் நடத்த ஆலோசிக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாக அதிகாரியும் ‘பச்சைக்கொடி‘ காட்டினார். அர்ச்சகர்கள் மத்தியில் இத்தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
8.7.1939-ல் காலை 10 மணிக்கு கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும். விருதுநகர் நகராட்சி உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.சண்முக நாடாருடன் சேர்ந்து ஆறு பேர் வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து வணங்கினர்.
அதன் பிறகு எதிர்ப்பு இன்னமும் கூடியது. இருந்தாலும் ஆலயப் பிரவேசத்தை சட்டப் பூர்வமாக அங்கீகரித்து சட்டம் பிறப்பித்தார் ராஜாஜி. இதையறிந்து ‘அற்புதம்‘ என பாராட்டினார் காந்தி.

குறிப்பிட்ட சமூகத்தினரை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த நுழைவைத் தாங்க முடியாமல், மீனாட்சி கோவிலை விட்டு வெளியேறி விட்டாள் என்று கூறி, மதுரை தமிழ்ச்சங்கம் சாலையில் நடேசய்யர் பங்களாவில் மீனாட்சி கோவில் அமைத்து அங்கு பூசையும் நடத்தியுள்ளனர். 1945 வரை இக்கோவிலில் பூசை நீடித்து பிறகு சிதைந்து போனது. பின்னர் பழையபடி மீனாட்சியம்மன் கோவிலுக்கே திரும்பியுள்ளார்கள் அங்கிருந்த அர்ச்சகர்கள்.
சித்திரைத் திருவிழா உட்பட பல்வேறு நிகழ்வுகளிலும் குவியும் கூட்டத்திற்கு தெரியுமா – கோவிலுக்குள் சிலர் நுழைவதற்கே இருந்த சமூகத் தடைகள் ? என்ற கேள்வியுடன் முடிக்கிறார் மணா.
புத்தகத்தின் இந்தக் கட்டுரை ஒரு சோறுதான். இது ஒன்று போதாதா...? சரித்திரங்கள் அறியப்பட வேண்டியதன் அவசியத்தையும், வரலாற்றின் பக்கங்கள் நீர்த்துவிடாமலிருக்க நாம் சமகால நிகழ்வுகளை பதிவிட்டு பகிர்ந்து கொள்வதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள....
- பொன்.வாசுதேவன்