Monday, August 24, 2009

குரங்கேற்றம் – உயிரோசை இணைய இதழில் வெளியான சிறுகதை

header1

உயிரோசை 24.8.09 இணைய இதழில் வெளியான எனது சிறுகதை

குரங்கேற்றம் ……………………………………………………………………….- ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

 

அவர்கள் பேச ஆரம்பித்த போது மணி ஐந்தரை இருக்கும். லேசாக இருட்ட ஆரம்பித்துவிட்டது.

monkeys1 ஊர்க்கோடியில் இருக்கும் மாந்தோப்பு அது. பெரும்பாலும் அவர்கள் வாசம் செய்யும் இடம் அதுதான். சில நேரங்களில் தென்னந்தோப்பு பகுதிக்கும் சென்று விடுவார்கள். கிளைகள் இல்லாததால் தென்னை மரத்தை அவர்களுக்கு அதிகம் பிடிப்பதில்லை. ஆனாலும் அதில் இருக்கும் இளங்குருத்தான தென்னம் பாளைகளுக்காகவும், சிறு தித்திப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை தரும் தென்னைப் பூக்களுக்காகவும் அங்கே செல்வதுண்டு.

"எதைப்பற்றி பேசப் போகிறீர்கள்...?"

மனிதர்களின் வழக்கம் போலவே வயதான குரங்கு ஒன்றுதான் பேச்சை ஆரம்பித்தது.

"எல்லா நம்ப கிட்டேயிருந்து வந்தவங்கன்னுதானே சொல்றாங்க. அப்புறம் நமக்கு மரியாதை கொடுக்கணுமா இல்லையா.." இளைய குரங்கு ஒன்று குரலை உயர்த்திப் பேசியது.

"இதோ பார், பெரியவங்க எதிரில் எப்படிப் பேச வேண்டுமுன்னு தெரியாதா உனக்கு" நடுத்தர வயதுக் குரங்கொன்று பேசிவிட்டு, வயதான குரங்கின் திருப்தியான முகத்தைப் பார்த்தது.

"நானும் ரொம்ப நாளாவே இதைப்பத்தி யோசிச்சுகிட்டுதான் இருக்கேன்" என்றது வயதான குரங்கு.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பெண் குரங்குகள் எல்லோரும் வயதான குரங்கு பேசுவதை வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தன. அவர்களைப் பொறுத்தவரை வயதான குரங்கின் சொல்தான் வேதவாக்கு. இளவயது பெண் குரங்குகள் அவர்கள் வயதையொத்த குரங்குகளின் மீது தங்கள் பார்வைகளை வீசியபடியிருந்தன.

கொஞ்ச நேரத்திலேயே குரங்குகள் கூட்டம் அதிகரித்து விட்டது.

வயதான குரங்கு பேச ஆரம்பித்தது.

monkeys2 "நாமெல்லாம் ஒரு குழுவாக செயல்படணும். அப்போதான் நமக்கு நல்லது நடக்கும். நமக்குள்ள ஒற்றுமை இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அறவழியில நம்ம எதிர்ப்பை முதல்ல தெரிவிக்கலாம். இது பத்தி என்ன சொல்றீங்க"

ஆளுக்கொரு கருத்தாக பல யோசனைகளை சொல்லின.

"நாம எல்லாம் உணவை எடுத்தாந்து ஒரே இடத்துல பகிர்ந்து சாப்பிடணும்"

"நாம ஒரு பழத்தோட்டம் போடலாம்"

"தினமும் ஒரு கடைன்னு மாசம் முழுக்க உணவு வாங்கலாம், தேவையில்லாம யாரையும் தொல்லை பண்ண வேண்டாம், இது அவங்களுக்கும் சரியான திட்டமாதான் இருக்கும்"

"நாம ஒரு தலைவர தேர்ந்தெடுத்து அவரையே உணவு வாங்கித்தர சொல்லலாம், தராதவங்க பொருளை மட்டும் நாசம் பண்ணலாம்"

எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு நடுத்தர வயது குரங்கு எழுந்தது.

நீண்ட வாலை தன் ஒரு கையில் மடித்துப் பிடித்தபடி, "நமக்குன்னு ஒரு தலைவரை தேர்ந்தெடுப்போம்" என்றது அமைதியாக.

எல்லா குரங்குகளும் சற்று நேரம் அமைதியாக இருந்தன.

mon4 "எல்லாரும் அமைதியா இருந்தா எப்படி..... நாம ஒற்றுமையா பலத்தோட இருக்கணும்னா நம்மை வழி நடத்த ஒரு தலைவர் தேவை. இதுதான் நம்ம பிரச்சனைக்கெல்லாம் தீர்வு. இல்லேன்னா காலம் முழுக்க அவங்க கிட்ட அடிவாங்கி அவமானப்பட்டு, திருடித் தின்னு கெட்ட பேரோட வாழ்ந்து, அப்படியே சாக வேண்டியதுதான்" உணர்ச்சிகரமாக பேசியது நடுத்தர வயது குரங்கு.

மறுபடியும் கூட்டத்திற்குள் சலசலப்பு.

"என்ன நான் சொல்றது சரிதானே" நடுத்தர வயது குரங்கு தன்னையொத்த குரங்கிடம் கேட்டது.

"நீ சொல்றதுதான் எனக்கும் சரியா படுது, என்ன அப்படித்தான.. நீ என்ன சொல்ற" பக்கத்திலிருந்த குரங்கைக் கேட்டபடி தன் சம்மதத்தை தெரிவித்தது.

monkeys3 சற்று நேரத்தில்,

"நாம தலைவரை தேர்ந்தெடுக்கலாம், நாம தலைவரை தேர்ந்தெடுக்கலாம்,

நாம தலைவரை தேர்ந்தெடுக்கலாம், நாம தலைவரை தேர்ந்தெடுக்கலாம்"

பெரும்பாலான குரங்குகளும் உற்சாகமாய் கத்தின.

கோஷம் அதிகரித்தது. எல்லா குரங்குகளும் கத்தின. பெண் குரங்குகளும் உற்சாகமாகி கத்தின. குட்டிக் குரங்குகள் மகிழ்ச்சியில் குதித்து கும்மாளம் போட்டன.

இளவயதுக் குரங்குகள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. வேறு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவர்களின் வயதும் அனுபவமின்மையும் அவர்களுக்கு எதிராகி பேச முடியாமல் போனது.

வயதான குரங்கு எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

மறுபடியும் நடுத்தர வயதுக் குரங்கு ஆரம்பித்தது.

"நமக்குள்ள ஒருத்தரை தலைவரா தேர்ந்தெடுத்து, அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நாம நடந்தா நம்ம நிலைமை மாறிடும், என்ன சொல்றது"

mon3 "ஆமாமாம்... நம்மை நிலைமை மாறிடும், நமக்காக உணவை தலைவரே தேடித் தருவார், நமக்கு எந்த கெட்ட பேரும் இருக்காது. நாமளும் கௌரவமா வாழலாம், மறுபடி நம்மளை அவங்கல்லாம் கும்பிட ஆரம்பிச்சுடுவாங்க"

குரங்குகளின் கருத்து ஒருமித்ததாக இருந்தது.

"முக்கியமான விஷயம், நமக்குன்னு தலைவர் இருக்கறப்ப நாம அவர் பேச்சை கண்டிப்பா கேக்கணும், சரியா" நடுத்தர வயதுக் குரங்கு சொன்னது.

"இனிமே கடையில இருக்கற பூவை பறிக்கறது, வீட்ல பெண்கள் தனியா டி.வி. பார்த்துட்டு இருக்கும்போது ஜன்னல் வழியா பருப்பு டப்பாவை எடுத்து கொட்டறது, வாழை மரத்துல ஏறி அட்டகாசம் பண்றது எல்லாம் நீங்க பண்ணக்கூடாது" தொடர்ந்து பேசியது நடுத்தர வயதுக் குரங்கு.

மந்திரத்தால் வசியம் பண்ணப்பட்டது போல கட்டுண்டு எல்லா குரங்குகளும் அதன் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தன.

மறுபடியும் பேச ஆரம்பித்தது நடுத்தர வயது குரங்கு

"சரி, நம்ம தலைவரா யாரை தேர்ந்தெடுக்கலாம். விருப்பு, வெறுப்பில்லாம செயல்படணும், நம்ம நலனுக்கு எதிரா இருக்கக்கூடாது. அப்படி ஒருத்தர் தலைவரா இருக்கணும்"

"அப்போ அதுக்கு சரியான ஆளு நீதான். நீதான் தலைவரா இருக்கணும். நீ நல்லா பேசறே. நம்ம இனத்தோட நலனுக்காக பேசற" என்றன குரங்குகள் ஒன்றான குரலில்.

mon2 இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நடுத்தர வயதுக் குரங்கு. அதிர்ச்சியை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், "நானெல்லாம் தலைவரா இருக்க முடியாது. நம்ம நலனுக்குன்னு பாடுபடற ஒரே தலைவர் அவர்தான், அவர்தான் நமக்கெல்லாம் தலைவரா இருந்து வழிநடத்தனும்" என்றபடி வயதான குரங்கை நோக்கி வணங்கியது.

பக்கத்தில் இருந்த மற்றொரு குரங்கை உசுப்பிவிட, "தலைவர் வாழ்க" என்று குரலெழுப்பியது அது. மற்ற குரங்குகளும் "தலைவர் வாழ்க" என உரக்கச் சொல்லின.

வயதான குரங்கு மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கர்வமாய் அமர்ந்திருந்தது.

"எல்லாம் முதல்லயே முடிவு பண்ணிட்டாங்க. இது அப்பவே எதிர்பார்த்ததுதான்" அதிருப்தியான குரலில் இளைய குரங்குகள் வெறுப்புடன் கூறின.

"நீங்களே பேசினா எப்படி. தலைவரை பேச சொல்லுங்க" சில குரங்குகள் நடுத்தர வயது குரங்கை நோக்கி கூறின.

வயதான குரங்கு பேச ஆரம்பித்தது.

"நான் இதுக்கெல்லாம் தகுதியான ஆளான்னு தெரியல. ஆனா நீங்கள்லாம் சொல்றீங்க. இந்த உடம்பு இனிமே உங்களுக்காகவே உழைக்கும், இது உறுதி"

"தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க" குரங்குகளில் குரல் விண்ணை முட்டியது.

நடுவில் ஒரு குரங்கு "தலைவருக்கு வலது கரமாவும், நம்ம நலனுக்காக சரியான தலைவர அறிவிச்ச நம்ம தளபதி வாழ்க" என்று நடுத்தர வயதுக் குரங்கை நோக்கி வணங்கியது.

உடனே "தலைவர் வாழ்க.. தளபதி வாழ்க.. நம் ஒற்றுமை ஓங்குக" குரல்கள் விண்ணை முட்டியது.

"சரி... சரி... அமைதி. சொல்றத கவனமா கேளுங்க. எந்த இடத்திலையும் நம் உரிமைய விட்டுக் கொடுக்காதீங்க. நாம மிருகங்கள்தானே. நாம் மிருக பாவத்தோடதான் நடந்துக்குவோம்னு அவங்களுக்கு தெரியாதா என்ன, அப்படி நாம நடந்துக்க கூடாதுன்னா அவங்க நம்மை மதிச்சு, மரியாதையா நடத்தணும். அதுக்கு பிறகு நாமளும் அவங்க எதிர்பார்க்கிறா போல நடந்துக்கலாம்"

தலைவராகிவிட்ட வயதான குரங்கு எல்லோரையும் பார்த்து கட்டளையிடுவது போல பேசியது.

"நாம ஒற்றுமையாகிவிட்ட இந்த நேரத்துல நம்ம தலைவரை ஒரு நாற்காலியில உக்கார வெச்சு, அவங்களை போலவே மரியாதை செலுத்தணும். அதுதான் தலைவருக்கு கௌரவமா இருக்கும்" என்றது தளபதியான நடுத்தர வயதுக் குரங்கு.

"ஆமாமாம்.... அதுதான் சரி" என்றன எல்லா குரங்குகளும்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இளைய குரங்குகள் வேறு வழியின்றி வெறுப்புடன் அமர்ந்திருந்தன.

"சரி தலைவருக்கு ஒரு நாற்காலி தனியா செஞ்சு அவரை பதவியேற்க செய்யலாம்" என்றன எல்லா குரங்குகளும்.

mon1 "தனியா செய்யணும்னு இல்ல. ஏற்கனவே நான் தயார் செஞ்சு வெச்சிருக்கேன்" என்றபடி மரத்திற்கு பின்னாலிருந்து ஒரு புதிய பஞ்சு பொதித்து பட்டுத்துணியால் அலங்கரிக்கப்பட்ட நாற்காலியை எடுத்து வந்தது தளபதி குரங்கு.

தலைவர் குரங்கு கால்மேல் கால் போட்டு கம்பீரமாய் நாற்காலியில் அமர்ந்தபடி வாலை எடுத்து கைப்பிடியின் ஒரு பக்கம் போட்டது. அருகில் சென்று நின்றது தளபதி குரங்கு.

"தலைவர் வாழ்க.... தளபதி வாழ்க.... நம் ஒற்றுமை ஓங்குக..." குரங்குகளின் குதூகலமான குரல் அடங்க வெகுநேரமானது.

000

aganazhigai@gmail.com

Tuesday, August 11, 2009

எ.சி.எ. – பதிவர்களுக்கான சிறுகதைப் பட்டறை

potti 2 எப்படி சிறுகதை எழுதுவது...?

பதிவர்களுக்கான சிறுகதைப் பட்டறை

சிறுகதைப் போட்டியையும், உலக சினிமா திரையிடல் நிகழ்வையும் வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியதில் உற்சாகம் பெற்றிருக்கும் உரையாடல் அமைப்பின் அடுத்த முயற்சியாக சிறுகதை எழுதுவது குறித்த பட்டறை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதிவர்களுக்கான சிறுகதைப் பட்டறை

இதுகுறித்த என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

  • TRCAZ16W7QCA1R8045CAAMK08ZCA3QYLBGCA661GS7CAS08BX8CAYVY05NCA08MCHKCAVKKDJ4CA2E5V3VCAR372J6CA5UJYYPCASMCDE0CALZRZ4DCADQI8NDCAQLBFLWCA9SKTNKCAS837JNCAH1FFCA சிறுகதைப் பட்டறை நடத்துவதெனில், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களை தேர்ந்தெடுத்து உள்அரங்கில் நடத்துவதும், இரண்டு நாட்கள் நடத்துவதுமே பயனுள்ளதாக இருக்கும்.
  • உள் அரங்கு எனில் ஏதேனும் பள்ளி, கல்லூரி வளாகம் அல்லது நுங்கம்பாக்கம் AICUF இல்லம் போன்ற அரங்குகளில் நடத்துவது வசதியாக இருக்கும்.
  • தங்குமிடத்துடன் கூடிய அரங்கம் என்பது பட்டறையில் கலந்து கொள்வோரின் போக்குவரத்து சிரமங்களை குறைக்கும். தங்க விரும்பாதவர்கள் வீட்டிற்கு சென்று வரலாம்.
  • உணவு வசதியை பட்டறை அமைப்பாளர்களே செய்து தரலாம்.
  • பட்டறை பங்கேற்பாளர்களிடம் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயித்து, முன்பாகவே வசூலித்து வருகையை உறுதி செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக எவ்வளவு பங்கேற்பாளர்கள் என்ற உறுதியான தகவல் பெற இயலும்.
  • தமிழின் சிறந்த சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள் பட்டியல் மற்றும் சிறந்த எழுத்தாளர்கள் பட்டியல் ஆகிய தகவல்களை உள்ளடக்கிய சிறு புத்தகமாக தொகுத்து பங்கேற்பாளர்களுக்கு அளிக்கலாம். கூடவே ஒரு குறிப்பேடு மற்றும் பேனா தரலாம்.
  • பயிற்சிப் பட்டறையை சிறப்புற நடத்துவதற்கு புத்தக வெளியீட்டாளர்கள் பதிப்பாளர்கள் போன்றோரை ஊக்குவிப்பாளர்களாக (Sponsors) பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • காலை, மாலை என இரண்டு அமர்வுகளாக பிரித்து காலையில் இரண்டு சிறுகதை எழுத்தாளர்கள் தலா ஒரு மணி நேரம் வீதம் சிறுகதையின் கூறுகள் பற்றியும், சிறுகதையின் நுட்பங்கள் பற்றியும் பேசலாம்.
  • உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் அமர்வில் பங்கேற்பாளர்களை சிறுகதை எழுதச் சொல்லி வாசிக்கச் செய்து அது தொடர்பான கருத்துப் பகிர்வினை மேற்கொள்ளலாம்.
  • மாலையில் திரைப்படமாகவோ, குறும்படமாகவோ எடுக்கப்பட்ட சிறுகதைகளை திரையிட்டு கலந்துரையாடலாம்.
  • சிறுகதைக்கென தனித்து இல்லாமல் பொதுவாக படைப்பிலக்கியம் சார்ந்து பட்டறை அமைப்பதும் தனி முயற்சியாக இருக்கும்.

potti3 உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பட்டறை நிகழ்வு முயற்சி சிறப்புறவும், இந்நிகழ்வை முன்னெடுத்துச் செய்யும் சிவராமன் & ஜ்யோவ்ராம் சுந்தருக்கும், மற்றும் கலந்து கொள்ள இருக்கும் நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

--- "அகநாழிகை" பொன்.வாசுதேவன் ---

Monday, August 3, 2009

சிந்திப்போமா ?

vfunyahoogroupscom3ph9 உண்மை எப்போதும் நம் அருகில் தான் உள்ளது. நம் கண்களுக்கு எதிரே கைகளுக்குப் பக்கத்தில் தொட்டுவிடக்கூடிய தூரத்தில் நிஜம் இருந்தாலும் நம்மில் பலரும் உணர்வதில்லை. காரணம் உண்மையை நாம் வெளியே தேடிக் கொண்டிருப்பது தான்.

புழுதி அடர்ந்த தெருவில் குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள் ஒரு கிழவி.

"என்ன தேடுகிறீர்கள் ?" என்றான் எதிரில் வந்த இளைஞன்.

"பெட்டிச் சாவியைத் தொலைத்து விட்டேன். தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றாள் கிழவி.

"அடடா... சாவி தெருவில் விழுந்துவிட்டதா ?"

"இல்லை... வீட்டில்தான் தொலைத்து விட்டேன்"

"வீட்டில் தொலைத்த சாவியைத் தெருவில் வந்து தேடுகிறீர்களே ?"

"வீட்டில் வெளிச்சம் இல்லை... வெளியில்தான் நிலா காய்கிறது" என்றாள் கிழவி.

197276image004 இது கேரளத்து நாட்டுப்புறக் கதை. நாமும் அந்தக் கிழவியைப் போலத்தான் இருக்கிறோம். நம் சந்தோஷங்களை எங்கேங்கோ தொலைத்துவிட்டு வெளியில் தேடிக் கொண்டிக்கிறோம்.

ஆனால் அதை மீட்டெடுக்க எங்கே தொலைத்தோமோ அங்கே தேடாமல் நமக்கு சௌகர்யமான இடங்களில் தேடித்தேடி விரக்தி அடைகிறோம். விரக்தி அதிகரிக்க அதிகரிக்க வெறுப்புதான் மிஞ்சுகிறது. நம் மீதே நமக்கு வெறுப்பு. நம் கையாலாகாத்தனத்தின் மீதொரு கசப்பு.

உண்மையில் நாம் சந்தோஷம் காண முயல்வதில்லை. அதற்கு மாறாக சின்னச்சின்ன பொய்களில் கிடைக்கும் தற்காலிக சந்தோஷங்கள் நம்மை திருப்திப்படுத்தி விடுகின்றன.

உண்மையைக் காண்பது எளிது என்றாலும் நாம் அதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. பார்ப்பது, உணர்வது என எல்லாமே நேரடியான விஷயங்கள். எண்ணுதல் என்பது நேரடியாக நிகழக்கூடியதல்ல. அதற்கு மனம், மனம் வைக்க வேண்டும்.

அன்பை உணர்ந்தவர்கள் உண்மையையும், உணர இயலும். உண்மையைப் பற்றி சிந்திப்பது மட்டுமே அதை உணர போதுமானது அல்ல. சிந்தனை சரியானதாக இருக்க வேண்டும். எண்ணம் சரியானால் எல்லாம் சரியாகும்.

1160143302yRm313 சரி... சிந்தனை சரியானதாக இல்லையெனில் என்னவாகும் ? முட்டாள்தனமான செயல் என்று நம் சிந்தனைக்கு பெயர் கிடைக்கும். இதுதான் இயல்பில் நடக்கக்கூடியது.

யூத தத்துவ அறிஞர் ஒருவர் இருந்தார். ‘யாசல்‘ என்ற பெயர். மிகப்பெரிய தத்துவ மேதை சிந்தனாவாதி. எல்லா தத்துவயியலாளர் போலவே ‘யாசல்‘ வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த நேரமின்றி சிந்திக்க மட்டுமே செய்து வந்தார்.

ஒருமுறை அருகில் இருந்த ஊரின் சந்தைக்கு தனது நிலத்தில் விளைந்த கோதுமையை விற்பதற்காக எடுத்துக்கொண்டு கிளம்பினார் யாசல். தனது மனைவியிடம் "நான் கோதுமையை விற்றதும் எப்போது திரும்புகிறேன் என்று தந்தி கொடுக்கிறேன்" என்றார்.

சந்தைக்குச் சென்று நல்ல லாபத்திற்கு கோதுமையை விற்ற யாசல் தனது மனைவிக்கு தந்தி தருவதற்காக அஞ்சல் நிலையம் வந்தார்.

"கோதுமை நல்ல லாபத்திற்கு விற்றுவிட்டது. நாளை வருகிறேன். அன்பு முத்தங்களுடன்.. யாசல்"என்று தந்தி எழுதினார்.

அதன் பிறகுதான் அவர் சிந்திக்கத் தொடங்கினார். என் மனைவி என்னை மூடன் என்றல்லவா நினைத்துக் கொள்வாள்...

1208465467gW5zu3 கோதுமையை நல்ல லாபத்திற்கு விற்காமல் நஷ்டத்திற்கா நான் விற்றிருப்பேன் ? என்று யோசித்த யாசல் தந்தியிலிருந்த நல்ல லாபத்திற்கு என்ற வார்த்தைகளை அடித்தார்.

மறுபடியும் தந்தியைப் படித்து விட்டு யாசல் கோதுமை விற்க நாம் வந்ததுதான் மனைவிக்குத் தெரியுமே... பிறகு ஏன் அந்த வார்த்தைகள் ? என்று நினைத்து கோதுமை விற்று விட்டது என்ற வார்த்தை இரண்டையும் எடுத்துவிட்டு மறுபடியும் தந்தியின் வாசகங்களைப் படித்துப் பார்த்தார்.

அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. நாம் நாளைதான் போய்விடப் போகிறோமே... எதற்கு நாளை வருகிறேன் என்ற வார்த்தைகள் என்ற எண்ணத்தில் அவற்றை அடித்தார். அடுத்ததாக யோசித்து நம் மனைவிக்கு அன்பு முத்தங்கள் என்றைக்கும் உரிமையானதுதானே ? அதை வேறு ஏன் எழுத வேண்டும். என்று அந்த இரண்டு வார்த்தைகளையும் எடுத்தார்.

1208437443aBA1Sa இறுதியாக தந்தியில் யாசல் என்ற பெயர் மட்டும் இருந்தது. எனக்கென்ன பைத்தியமா பிடித்து விட்டது ? என் மனைவிக்குத் தான் என் பெயர் தெரியுமே ? என்று அதையும் அடித்து தந்தியைக் கிழித்து விட்டு கிளம்பிவிட்டார்.

முறையற்ற சிந்தனையின் விளைவுகள் அபத்தமானதாக இருக்கும். இது எப்படி நிகழ்கிறது ? எது தேவை எது தேவையில்லை. என்று உணராமல் தேர்ந்தெடுக்காமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதே இதன் காரணம்.

தேவையற்ற எண்ணங்களாக முழு வாழ்க்கையும் வீணடிக்கப் பட்டு விடுகிறது. எல்லாவற்றையும் கடந்து இறுதியில் வாழ நினைக்கிற போது இறுதிக் கட்டத்தில் வாழ்வின் விளிம்பில் நிற்கிறோம் நாம்.

நம்மில் பலரிடமும் சிந்தித்ததை செயல்படுத்த இயலாத நிலை நிலவுகிறது. யோசித்துக் கொண்டிருப்பவர்கள் யோசித்துக் கொண்டும் யோசிக்காதவர்கள் செயல்பட்டுக் கொண்டும் இருக்கின்ற நிலையை நாம் காணலாம்.

1218901819FXUX4I யோசிக்காமல் இறங்கி விட்டேன். என்று கூறுபவர்கள் பலரை நாம் சந்தித்திருப்போம். அதற்காக இவர்களெல்லாம் யோசிக்கவே இல்லை என்று கூறிவிட முடியாது. வேகமான முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர்கள் இவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

திட்டமிடப்படாத எந்தவொரு செயலும் முழுமையான பலனைத் தருவதில்லை. ஹிட்லர், நெப்போலியன், மாவோ என்ற செயலை மட்டுமே நம்பி இறங்கியவர்கள் வரலாற்றில் இடம் பெற்றாலும் திட்டமிடப்படாத வெற்றிகள் அவர்களுக்கே எதிர் விளைவாக அமைந்ததை நாம் அறிவோம்.

அரிஸ்டாட்டில், கந்த், அல்லது ஹெகல் என சிந்தனையாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் சிந்தனை அடிப்படையில்தான் இன்றும் எண்ணம் தொடர்கிறது.

எண்ணத்துடன் எச்சரிக்கையோடு அணுகும் செயல்திறன் தான் நாம் அடைய விரும்புவது. எண்ணம் ஒரு நிலை வரை மட்டுமே தொடர வேண்டும். பிறகு செயல்படத் தொடங்கிவிட வேண்டும். மாறாக தொடர்ந்து சிந்தனையை மட்டும் வளர்த்துக் கொண்டு செயல்படாமல் போய்விட்டால் சிந்தித்ததற்கு அர்த்தமின்றி போய் விடுகிறது.

abused_man ஒரு பெரிய கோட்டை சிறிய கோடாக்குவது எப்படி சுலபமோ அதுபோல சிந்தித்ததை செயல்படுத்துவதும் சுலபம்தான். பிறகு ஏன் நாம் சிந்தித்தலையே தொடர விரும்புகிறோம் ?

காரணம் சிந்தித்தல் போதை போன்றது. கனவில் சுகம் காண்பது போல வெறும் யோசித்தலே நம்மை திருப்தியடையச் செய்து மேற்கொண்டு செயல்வடிவம் கொடுக்க விடாமல் செய்து விடுகிறது.

நம்முடைய செயல்கள் எல்லாமே நம் கட்டுப்பாட்டில் சுய நினைவில் இருக்கும்போது நிகழ்பவைதான். ஆனாலும் ஏன் நம்மையும் மீறி விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன ?

எண்ணம் வரையறை இல்லாதது. எப்படி அழகு என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுக்க முடியாதோ அதுபோலத் தான் மனதின் எண்ணங்களும்.

எண்ணங்கள் செயலுருவாகும் போது முழுமையான ஈடுபாடு அளிக்கப்பட வேண்டியது அவசியம். துக்கம், சந்தோஷம் என எதுவானாலும் அதை முழுமையாக அனுபவித்து உணர வேண்டும்.

அந்தந்த நிமிடங்களை அனுபவித்து உணர்கின்ற பொழுது வாழ்க்கையின் எல்லா நேரமும் இன்பமானதாய் அமையும். சாப்பிடும் போது.. சாப்பிட்டு தூங்கும் போது தூங்கி... எதையும் முழு ஈடுபாடு காட்டி செய்வது நம்மை உயர்த்தும். ஏனோதானோவென்று செய்கின்ற வேலையில் கவனமின்றி அக்கறையின்றி ஈடுபடுவது நம்மையும் நம் வாழ்க்கைச் சூழலையும் பெரிதும் பாதிக்கிறது.

ஆக, முறையான சிந்தனையுடனும் சரியான செயல் திறனுடனும் வாழ்க்கையை நம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது நம் கடமை. காரணம் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, வெறும் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதல்ல.

"அகநாழிகை"

பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname