Saturday, March 28, 2009

கொல்லிமலை பேய் பார்த்தேன்



கொல்லிமலை என்றாலே ஒரு மர்மமான இடம் என்ற பேச்சு இருக்கிறது. கொல்லிப்பாவை கோவில், சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகை வனம், இப்போதும் ஆங்காங்கே கண்ணில் படும் சித்தர்கள், 180 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்டமாய் விழும் அருவி என புதிரான ஒரு பிரதேசமாகவே நமக்குத் தெரிகிறது கொல்லிமலை.
2004-ம் ஆண்டுதான் முதல் முதலில் கொல்லிமலை போனேன். பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வருடத்திற்கு ஒரு முறையாவது போய்விட நேர்கிறது. ஐந்தாவது முறையாக கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 1 வரை சென்று வந்தேன்.
கொல்லிமலை நாமக்கல்லிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக சுமார் 90 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சதுரகிரி என்ற மற்றொரு பெயரும் கொண்ட கொல்லிமலை 17 மைல் பரப்பளவிற்கு விரிந்து படர்ந்த அடர் மூலிகை காடுகளுடன் தனித்து ஒரு அமானுஷ்யமாக விளங்குகிறது.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்து புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புடைய கொல்லிமலையில் மிளகு, பலா, அன்னாசி, தேன், வாழை, நெல், கொய்யா, பப்பாளி, பட்டை போன்ற பயிர்கள் பரவலாக எங்கும் செழித்து வளர்ந்து காணக் கிடைக்கிறது. கல்பகாலம் தொட்டு ஏராளமான சித்தர்களும், முனிவர்களும் தொடர்ந்து வாசம் புரிந்து வந்த கொல்லிமலையின் மூலிகை வளம் குறிப்பிடப்பட வேண்டியது. கருநெல்லி, கருநொச்சி, ஜோதிப்புல் உள்ளிட்ட அரிய மூலிகைகள் இங்கு கிடைக்கிறது.
கொல்லிமலையின் புகழுக்கு மற்றுமொரு காரணமாக விளங்கும் ‘கொல்லிப்பாவை‘ பற்றி பல கதைகள் நிலவுகின்றன. அசுரர்கள் தேவர்களை எதிர்த்து போரிட வந்தபோது, அசுரர்களை தடுத்து நிறுத்த தெய்வ தச்சன் ஆகிய மயன் என்பவன், கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காமத்தை ஏற்படுத்தி மயக்கி கொல்லவல்ல அழகிய பாவையின் படிமத்தினை செய்து வைத்தான். தனது அழகினால் மயக்கி அசுரர்களை கொன்று வந்த அப்பாவை ‘கொல்லிப்பாவை‘ என பெயரிட்டு அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் கொல்லிப்பாவை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளது.
கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி கொல்லிமலையையும் அதனை சூழ்ந்திருந்த நிலப்பரப்புகளையும் அரசாண்டு வந்திருக்கிறான்.
சரி, கொல்லிமலைக்கு போன கதையைப் பார்ப்போம். நாமக்கல் தாண்டி நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி என்று சென்று வாகனம் மலையில் ஏற ஆரம்பித்தது. ஐந்து நிமிடங்களுக்கொரு கொண்டை ஊசி வளைவு. மொத்தம் 72 கொண்டை ஊசி வளைவுகள். நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மொத்தமும் பரநது விரிந்து அருமையாக இயற்கை சூழலில் காட்சியளிக்கிறது. மலையில் வாகனம் பயணிக்கும்போதே நம்மை குளிர் போர்த்தத் தொடங்கி விடுகிறது. கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1219 மீட்டர் உயரத்தில் உள்ளது. வழியில் எங்கும் ஊர்கள் கிடையாது. மலை அடிவாரத்தில் தொடங்கினால் கொல்லிமலைக்கு 3 கி.மீ. தொலைவில் வரும் சோளக்காடு என்ற ஊர் வருகிறது. அது சிறிய ஊர் என்றாலும் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடக்கிறது.
சோளக்காட்டினை அடுத்து வரும் வளப்பூர் என்ற பகுதிதான் கொல்லிமலையின் நடுவாந்திரமான பகுதி என்பதால் இங்கு அரசு தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் வருபவர்கள் நாமக்கல் அல்லது சேலத்திலிருந்து பயணம் செய்தால் வளப்பூர் வந்து சேரலாம். இங்கு தனியார் தங்கும் விடுதிகள் மிகக்குறைவு. நல்லதம்பி ரிசார்ட் மற்றும் பி.ஏ. கெஸ்ட் ஹவுஸ் என்ற இரண்டு தனியார் விடுதிகள் மட்டுமே உள்ளது. படப்பிடிப்புக்கு வரும் குழுவினர் இங்குதான் தங்குகிறார்கள். நானும் நண்பர்களும் பி.ஏ. கெஸ்ட் ஹவுசில் தங்கினோம்.
சீக்குப்பாறை, தற்கொலை முனை, அரசு மூலிகைப் பண்ணை, அறப்பளிஸ்வரர் ஆலயம், பஞ்சநதி எனும் அய்யாறு அருவி, கொல்லிப்பாவை கோயில், சித்தர் குகைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் உள்ளது. நம்மிடம் வாகன வசதி இருந்தால் மட்டுமே எல்லா இடத்தையும் சுற்றிப்பார்க்க முடியும். இங்கு வாகன வசதி எதுவும் கிடையாது. கொல்லிப்பாவை கோயில் இருக்கும் இடம் உண்மையிலேயே அச்சம் தருவதாக இருக்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் இந்த சிறிய கோவிலுக்கு பார்வையாளர் அதிகம்தான். யாருடனும் பேசாமல் சடாமுடியுடன் சுற்றி வரும் சிலரை இங்கு பார்க்க முடிகிறது. யாரும் பிச்சை கேட்பதில்லை. ஆனால் அறப்பளிஸ்வரர் கோவில் பகுதியில் அதே சடாமுடி தோற்றத்துடன் பிச்சை கேட்பவர்கள் இருக்கிறார்கள்.
சீக்குப்பாறை மற்றும் தற்கொலை முனை இரண்டும் அருமையான ‘நோக்கு முனை‘ மலையின் பெரும்பான்மை பகுதியின் இயற்கை அழகு நம்மை சில்லென்ற காற்றுடன் ஆனந்தப்படுத்துகிறது. அருகாமையில் உள்ள அரசு மூலிகைப் பண்ணையில் அதிகம் மூலிகைச் செடிகள் இல்லையென்றாலும் அரிய மூலிகை வகைகள் உள்ளது.
கொல்லிமலையில் என்னை மிகவும் கவர்ந்த இடம் பஞ்சநதி எனப்படும் அய்யாறு அருவிதான். அறப்பளிஸ்வரர் கோயில் அருகே ‘இதெல்லாம் எனக்கு சாதாரணம்‘ என்ற எண்ணத்துடன் உற்சாகமாக இறங்க… இறங்க… 150 படிகளுக்குள் மூச்சுவாங்கி கால் வலியெடுக்கிறது. ஒரு படிக்கும் மற்றொரு படிக்கும் சுமார் 1 ½ அடி உயரம் இருக்கிறது. யாரோ பின்னாலிருந்து தள்ளுவது போல களைத்துப் போய் மெதுவாக 950 படிகள் கீழே இறங்கிப் போனால் ‘ஹோ‘வென பெரும் சப்தத்துடன் 180 அடி உயரத்திலிருந்து விழுகிறது அருவி. ஆழ்ந்த தனிமை, அதிக கூட்டமில்லாமல் நம் விருப்பம் போல நேரமெடுத்துக் கொண்டு அருவியில் நனைந்து மகிழலாம். முதுகில் யாரோ அடிப்பது போல சுளிரென்று அருவி நம் மீது வந்து விழுகிறது. அருவியில் குளித்ததும் இறங்கி வந்த களைப்பெல்லாம் போய்விடுகிறது. ஆனால் மறுபடி படியேற ஆரம்பிக்கும் போது அதே கஷ்டம். எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் கால் வலிக்கவில்லை என்று சொல்லாதவர்களே இல்லை. கஷ்டப்பட்டு படியேறி மேலே வந்ததும் கொல்லிமலையின் சிறப்பான ‘முடவாட்டு கால்‘ சூப் குடித்ததும் வலி குறைந்தது போல உணர்வு ஏற்படுகிறது, இரண்டு நாட்களுக்காவது கால் வலி நீடிக்கிறது. ஆனால் உடல் பாரம் குறைந்து லேசாகிப் போன்றதொரு உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. (இதைத்தான் ‘ஆவி‘ ‘பேய்‘ என்கிறார்களோ...?)
‘முடவாட்டு கால்‘ என்பது கொல்லிமலை பாறைகளுக்கு இடையில் விளையும் ஒரு கிழங்கு வகை ஆகும். பார்ப்பதற்கு ஆட்டின் கால்களை போலவே இருக்கும் இந்த கிழங்கை நீரிலிட்டு வேக வைத்து, மிளகு கலந்து குடித்தால் ஆட்டு கால் சூப் குடிப்பது போல அதே மணத்துடன் இருக்கிறது. மூட்டு சம்பந்தமான உபாதைகளுக்கு இது மிகவும் சிறந்த மூலிகை மருந்தாக கூறப்படுகிறது. அருகில் உள்ள அறப்பளிஸ்வரர் கோயில 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.பி. 7-ம் நூற்றாண்டிலேயே தேவாரப் பாடல்களில் பாடப்பட்ட பெருமையுடையது. ‘அறைப்பள்ளி‘ ‘அறப்பளி‘ என மருவியுள்ளதாக தெரிகிறது.
கொல்லிமலைக்கு செல்பவர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் (எனக்கு தெரிந்தவரை)
பி.எஸ்.என்.எல். தவிர எந்த அலைபேசியும் இங்கு இங்கு ‘டவர்‘ கிடைக்காது.
பஞ்சநதி அருவிக்கு இறங்கிச் செல்வதற்கு முன்பாக குடிக்க தண்ணீர், குளுகோஸ், குளிர்பானம், உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது அவசியம். அந்த ஆழ்பள்ளத்தாக்கில் எதுவுமே கிடைக்காது.
அருவிக்கு செல்லும்போது வழியில் நிறைய குகைகள் உள்ளது. அங்கெல்லாம் போக முயற்சிக்காமல் இருப்பது நலம். தெரியாமல் ஒரு குகைக்குள் போக முயற்சித்து வவ்வால் வந்து முகத்தில் மோதி பயந்ததுதான் மிச்சம்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் போகாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் மெதுவாக 20 படிகள் இறங்கி சிறிது அமர்ந்து ஓய்வெடுத்தபின் இறங்கலாம்.
ரிசார்ட் இரண்டிலும் உணவு வசதி உள்ளது. வேறெங்கும் சுகாதாரமான உணவு கிடைக்கவில்லை. அசைவப் பிரியர்கள் கவனத்திற்கு : இங்கு கிடைக்கிற ஆட்டிறைச்சியும், நாட்டு கோழி இறைச்சியும் மூலிகை தழைகளை உண்பதால் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் தங்கும் விடுதியில் கூறினால் உங்களுக்கு வேண்டிய உணவை அவர்கள் சுவையாக தயாரித்து தருகிறார்கள்.
அறை வாடகை 300 முதல் 2000 வரை உள்ளது. ஆறு பேர் தங்கும் விஐபி குடில்கள், இருவர் மட்டும் தங்கும் தேன்நிலவு குடில்கள் என தேவைக்கேற்ப உள்ளது.
மிளகு விலை குறைவாக உள்ளது. இங்கிருக்கும் அரசு கூட்டுறவு சங்கத்தில் மிளகு, மலைத்தேன் இரண்டும் தரமானதாக கிடைக்கிறது. பட்டை மரம் எங்கு பார்த்தாலும் இருக்கிறது. நீங்களே பறித்துக் கொள்ளலாம்.
கூடுமான வரை சொந்த வாகனம் எடுத்துச் செல்வது, கொல்லிமலையின் முழு அழகையும், கண்டு ரசிக்க உதவியாக இருக்கும்.
எல்லாவற்றையும் விட முக்கியமான குறிப்பு கொல்லிமலையில் மர்ம பிரதேசங்கள் நிறைய இருக்கிறது. ஏற்கனவே வாழ்ந்த சித்தர்களின் வசிப்பிடங்கள் அவை என கூறப்படுகிறது. மற்றபடி இங்கு பேய், அமானுஷ்ய நடமாட்டம் என்று எதுவும் இல்லை. (நீங்கள் உங்களோடு கூட்டிப் போனால்தான் உண்டு)
சிறுவர்களுக்கான விளையாட்டு இடங்கள், பொழுதுபோக்கு எதுவும் இங்கு கிடையாது. இயற்கை விரும்பிகளுக்கு இனிய, அமைதியான இடம் கொல்லிமலை.
முக்கியமான குறிப்பு : தட்டச்சிடும்போது தவறாகி விட்டது, தலைப்பை மாற்றி படிக்கவும். சரியான தலைப்பு :
“கொல்லிமலை போய் பார்த்தேன்“
- பொன். வாசுதேவன்

52 comments:

  1. :) இந்திரா சௌந்தர்ராஜன் தனது சில கதைகளில் இம்மலையை குறிப்பிட்டிருக்கிறார். அனுபவத்தை அழகாக பதிவு செய்துள்ளீர்கள். நான் தமிழகம் வந்தால் அங்கே அழைத்துச் செல்வீர்களா? :))

    ReplyDelete
  2. தலைப்பில் இருக்கும் குறும்பை கடைசி வரியை படித்தபின் தான் புரிந்து கொண்டேன் வாசு.. சேட்டை உங்களுக்கு..

    ReplyDelete
  3. அருமையான பயன கட்டுரை நண்பரே.
    பேளுக்குறிச்சியில் இருந்து மலை ஏறமுடியாது காளப்பநாய்க்கன்பட்டியில் இருந்துதான் மலைஏறவேண்டும்,950 படிகள் இல்லை 968 படிகள்,
    வேண்டுமானால் என்னை அழைத்து செல்லுங்கள் கவுன்ட் செய்துவிடலாம்.
    (ஒசியில் போக சான்ஸ் கிடைச்சிருச்சு)

    ReplyDelete
  4. நல்ல பயணக் கட்டுரை.. போய் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது.. என்ன என்ன கிடைக்கும், கிடைக்காது முதற்கொண்டு சொல்லி உள்ளீர்கள்.. பயனுள்ள பதிவு..

    ReplyDelete
  5. //vikneshwaran..//
    அடேங்கப்பா.,, இந்திரா சௌந்தர்ராஜன் பற்றி கேட்டுள்ளார் நண்பர்.. எனக்கு அவருடைய எழுத்துக்கள் ரொம்ப பிடிக்கும்..

    ReplyDelete
  6. முக்கியமான குறிப்பு : தட்டச்சிடும்போது தவறாகி விட்டது, தலைப்பை மாற்றி படிக்கவும். சரியான தலைப்பு :
    “கொல்லிமலை போய் பார்த்தேன்“
    - பொன். வாசுதேவன்//
    திரில்லிங்கா கடைசில ஏதாவது சொல்லுவீங்கன்னு பார்த்தா ஏமாத்திடீங்களே...

    ReplyDelete
  7. உங்கள் அனுபவ பயணத்தால,எங்கள கொல்லிமலைக்கே கூப்பிட்டு போய்ட்டீங்க...

    ReplyDelete
  8. இந்த பதிவில் கொல்லிமலையப்பத்தி புகை படங்களுமும் , விளக்கங்களும் நெம்ப அருமையா இருக்குங்கோ தம்பி ...... !! நாணமும் ... எம்பட ப்ரெந்ஸுகலுமும் நெம்ப தடவ அங்க போயிருக்கோம்....!! நெம்ப சூப்பரான ப்லேசுங்கோ தம்பி ....!!


    நெம்ப நல்ல பதிவு..!! வாழ்த்துக்கள்..!!


    " வாழ்க வளமுடன்...!! "

    ReplyDelete
  9. //இங்கு பேய், அமானுஷ்ய நடமாட்டம் என்று எதுவும் இல்லை. (நீங்கள் உங்களோடு கூட்டிப் போனால்தான் உண்டு)//

    நீங்க யாரை சொல்றீங்க? நீங்க கூட்டிட்டு போனீங்களா?

    ReplyDelete
  10. நல்ல பயண(னுள்ள) கட்டுரை. அனைத்து தகவல்களும் நன்று!

    ReplyDelete
  11. அப்படியே கொல்லிமலைக் குகைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறீர்கள்... (ஒருவேளை நாங்கள்தான் பேயோ?) தலைப்பு மாற்றம் கலக்கல்... (அப்ப எங்கிட்ட சொன்னது இதுதானா???)

    மலைப்பிரதேசங்களில் நான் ரசித்து வண்டியில் சென்றது, ஊட்டி, கம்புகிரி மலை (கோவை மருதமலைக்குப் பின்னால்) அதைவிட்டால் மற்ற இடங்களுக்கு பஸ் பயணங்கள்தான். கொல்லிமலைக்கு இதுவரை சென்றதில்லை. (அடுத்தமுறை அழைத்துச் செல்லவும் :D )

    பெரும்பாலும் எனக்கு இந்தமாதிரி மர்ம இடங்களுக்குச் செல்லவேண்டும் என்ற ஆர்வம் எழுவதுண்டு. இப்பொழுது அந்த ஆர்வம் அதிகமாகிவிட்டது.

    ReplyDelete
  12. விக்கி, வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. நீங்கள் வருவதாக இருந்தால் நிச்சயம் அழைத்துப் போகிறேன்... நண்பா.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  13. கார்த்திகைப் பாண்டியன் said... //போய் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது.. //

    போய் பார்த்து விடலாம் கார்த்தி.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  14. சொல்லரசன் said...
    //அருமையான பயன கட்டுரை நண்பரே.
    பேளுக்குறிச்சியில் இருந்து மலை ஏறமுடியாது காளப்பநாய்க்கன்பட்டியில் இருந்துதான் மலைஏறவேண்டும்,950 படிகள் இல்லை 968 படிகள்,
    வேண்டுமானால் என்னை அழைத்து செல்லுங்கள் கவுன்ட் செய்துவிடலாம்.
    (ஒசியில் போக சான்ஸ் கிடைச்சிருச்சு)//

    சொல்லரசன், வணக்கம்.
    வாழ்த்துக்கு நன்றி.

    1. //நாமக்கல் தாண்டி நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி என்று சென்று வாகனம் மலையில் ஏற ஆரம்பித்தது.//

    சிறுஊர் என்பதால் பேளுக்குறிச்சியிலிருந்து ஆர்வத்தில் எழுதும்போது மலையேறி விட்டேன்.
    காளப்பநாயக்கன்பட்டியிலிருந்துதான் மலை ஏறுகிறது என்பது சரி.

    2. இறங்கி அருவியை சேர்வதற்கு முன்பாக படிகள் கலைந்து போயிருந்தன. நானும் களைத்துப் போயிருந்தேன், அதனால்தான் 950 என்று எழுதியிருந்தேன்... 968 ஆக கூட இருக்கலாம். (18 படி எப்படி மறைந்தது... ஒருவேளை அமானுஷ்யம் கண்ணை மறைத்து விட்டதோ...?)

    3. வேண்டுமானால் என்னை அழைத்து செல்லுங்கள் கவுன்ட் செய்துவிடலாம்.
    (ஒசியில் போக சான்ஸ் கிடைச்சிருச்சு)


    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  15. Rajeswari said...
    //முக்கியமான குறிப்பு : தட்டச்சிடும்போது தவறாகி விட்டது, தலைப்பை மாற்றி படிக்கவும். சரியான தலைப்பு :
    “கொல்லிமலை போய் பார்த்தேன்“
    - பொன். வாசுதேவன்//
    திரில்லிங்கா கடைசில ஏதாவது சொல்லுவீங்கன்னு பார்த்தா ஏமாத்திடீங்களே...//


    ராஜி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    ‘பேய்‘ பார்த்தேன் என்பதே திகில்தானே தோழி.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  16. லவ்டேல் மேடி said...
    //இந்த பதிவில் கொல்லிமலையப்பத்தி புகை படங்களுமும் , விளக்கங்களும் நெம்ப அருமையா இருக்குங்கோ தம்பி ...... !! நாணமும் ... எம்பட ப்ரெந்ஸுகலுமும் நெம்ப தடவ அங்க போயிருக்கோம்....!! நெம்ப சூப்பரான ப்லேசுங்கோ தம்பி ....!!


    நெம்ப நல்ல பதிவு..!! வாழ்த்துக்கள்..!! //



    ரெம்ப நன்றி, நண்பா. (உங்கள மாதிரி எழுத எனக்கு வரல)
    கோயிப்பிச்சுக்காதிங்க... சரியா..

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  17. குடந்தைஅன்புமணி said...
    //இங்கு பேய், அமானுஷ்ய நடமாட்டம் என்று எதுவும் இல்லை. (நீங்கள் உங்களோடு கூட்டிப் போனால்தான் உண்டு)//

    நீங்க யாரை சொல்றீங்க? நீங்க கூட்டிட்டு போனீங்களா?//

    ஆம் நண்பா... சில குட்டிச்சாத்தான்கள் எங்களோடு வந்திருந்தன.
    மேலும் விவரங்களுக்கு அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டு சுயமுகவரியிட்ட உறையுடன் தொடர்பு கொள்ளவும்.
    கவனமாக படிக்கவும்... ‘உறையுடன்‘

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  18. குடந்தைஅன்புமணி said...
    //நல்ல பயண(னுள்ள) கட்டுரை. அனைத்து தகவல்களும் நன்று!//


    வாழ்த்துக்கு நன்றி நண்பரே.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  19. ஆதவா said...
    //பெரும்பாலும் எனக்கு இந்தமாதிரி மர்ம இடங்களுக்குச் செல்லவேண்டும் என்ற ஆர்வம் எழுவதுண்டு. இப்பொழுது அந்த ஆர்வம் அதிகமாகிவிட்டது.//

    ஆதவா, கொல்லிமலையில் என்னை ஈர்த்தது முக்கியமான சில விஷயங்கள்.
    1. அலைபேசி தொல்லை கிடையாது. நிம்மதியாக இருக்கலாம். நீங்களாக யாரையாவது அலைபேசியில் தொடர்பு கொண்டால்தான் உண்டு.
    2. ஆழ்ந்த தனிமை... நிசப்தம்.. மேகங்களுக்கிடையில் நாமே புகுந்து மலைகளினூடாக பறப்பதைப் போன்றதொரு உணர்வு.
    3. மற்ற பிரபலமான மலை வாசஸ்தலங்களைப் போல கூட்டம் இல்லாமல் நிம்மதியாக இயற்கையை இரசித்து, சாப்பிடுவது, புத்தகம் படிப்பது, எழுதுவது, பேசுவது, சிறந்த திரைப்படங்களை பார்ப்பது, தூங்குவது இவை மட்டுமே செய்து வாழ்பனுவங்களை மீட்டிச் சென்று வர சிறந்த இடம்.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  20. நானும் ’போய்’ என்று தானே இருக்க வேண்டும் என்று ஓடியாந்தேன்.

    ReplyDelete
  21. நட்புடன் ஜமால் said...
    //நானும் ’போய்’ என்று தானே இருக்க வேண்டும் என்று ஓடியாந்தேன்.//

    ஜமாமாமாமாமாமாமா......ல்ல்ல்ல்.
    (என்ன இது இப்படியாகி விட்டது)
    ஜமாஆஆஆஆஆஆ......ல்ல்ல்ல்.
    இப்போ சரியாகிடுச்சு.
    உங்க நம்பிக்கையை வீணாக்கிடக்கூடாதுன்னுதான் கடேசி வரில போட்டுட்டனே...
    வருகைக்கு நன்றி நண்பா.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  22. இப்படி நிறைய பேர் கட்டுரை எழுதி போட்டுடங்க..

    40 லீவுல எந்த இடத்தைப் பார்ப்பது, யாரைப் பார்ப்பது என்று தெரியாமல் மண்டைய பிச்சுகிட்டு இருக்கேன்.

    அருமையா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள் வாசுதேவன்.

    ReplyDelete
  23. அட போங்க வாசு அண்ணா.நானும் பயந்து...பயந்து வாசிச்சேன்.(ரேடியோல பாட்டும்,எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்..)பேயையே காணோம்.நானே போய் பேய் பாத்துக்கிறேன்.கொல்லிமலைக்குப் போகத்தூண்டும் ஆர்வமான பிரயாணக் கட்டுரை.

    ReplyDelete
  24. உங்க பதிவின் தலைப்போட ஒரே காமடீதான்!!!!

    ReplyDelete
  25. அகநாழிகை:

    காளப்பநாயக்கன்பட்டி-தான் என்னோட ஊர். ஆனா அங்கிருந்து மலையேற முடியும் என்று ‘சொல்லரசன்’ சொல்லியது தவறு. கொல்லிமலையின் அடிவாரத்தின் பெயர் ‘காரவள்ளி’. அங்கிருந்துதான் மலையேற முடியும்.


    //நாமக்கல் தாண்டி நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி என்று சென்று வாகனம் மலையில் //

    இதுவும் தவறு! ;-)

    நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி-ன்னு வந்துருக்கீங்கன்னா.. நீங்க ஆத்தூரிலிருந்து ராசிபுரம் வந்து அப்புறம் பஸ் பிடிச்சிருக்கனும். ராசிபுரத்தில் இருந்து வந்தால் கண்டிப்பா எங்க ஊரை தாண்டிதான் போக முடியும்.

    நாமக்கல்லில் இருந்து வந்தால், நீங்க பேளுக்குறிச்சியை பார்க்கக்கூட முடியாது. காந்திபுரத்திலிருந்து ஒரு ரோடும், காளப்பநாயக்கன்பட்டியிலிருந்து ஒரு ரோடும் காரவள்ளியில் ‘ஜாய்ன்’ ஆகும்.
    ==========

    இருந்தாலும் எங்க ஊரை பத்தி எழுதியிருக்கீங்க. ரொம்ப.. ரொம்ப நன்றி...

    ReplyDelete
  26. இவ்ளோ நாளா உங்கள பக்காம மிஸ் பண்ணிருக்கேனே! உங்களுக்கு ஓட்டு குத்தலைனா எப்படி......பச்சக்...பச்சக்.... ரெண்டு குத்தியாச்சுங்க!

    ReplyDelete
  27. உங்கள் அனுபவ பயணத்தால,எங்கள கொல்லிமலைக்கே கூப்பிட்டு போய்ட்டீங்க...

    ReplyDelete
  28. இராகவன் நைஜிரியா said...
    //இப்படி நிறைய பேர் கட்டுரை எழுதி போட்டுடங்க..
    40 லீவுல எந்த இடத்தைப் பார்ப்பது, யாரைப் பார்ப்பது என்று தெரியாமல் மண்டைய பிச்சுகிட்டு இருக்கேன்.
    அருமையா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள் வாசுதேவன்.//

    இராகவ், நன்றி.
    உங்களுக்கு 40 நாள் விடுமுறையா... எனக்கெல்லாம் அப்படியில்லை, எப்போது பயணம் கிளம்புகிறோமோ அப்போதெல்லாம் விடுமுறைதான். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  29. ஹேமா said...
    //அட போங்க வாசு அண்ணா.நானும் பயந்து...பயந்து வாசிச்சேன்.(ரேடியோல பாட்டும்,எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்..)பேயையே காணோம்.நானே போய் பேய் பாத்துக்கிறேன்.கொல்லிமலைக்குப் போகத்தூண்டும் ஆர்வமான பிரயாணக் கட்டுரை.//

    சகோதரி ஹேமா, கண்டிப்பா கொல்லிமலை போய் பேய் பாருங்க. அந்த இயற்கை, மிதமான குளிர், தனிமையான சந்தோஷ மன நிலையை அனுபவிச்சா நாம் வசிக்கிற ஊர்ல இருக்கறவங்க பேயாக தெரிவாங்க.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  30. Vijay Chinnasamy said...
    //உங்க பதிவின் தலைப்போட ஒரே காமடீதான்!!!!//

    நன்றி நண்பா.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  31. ஹாலிவுட் பாலா said...
    //அகநாழிகை:
    காளப்பநாயக்கன்பட்டி-தான் என்னோட ஊர். ஆனா அங்கிருந்து மலையேற முடியும் என்று ‘சொல்லரசன்’ சொல்லியது தவறு. கொல்லிமலையின் அடிவாரத்தின் பெயர் ‘காரவள்ளி’. அங்கிருந்துதான் மலையேற முடியும்.

    //நாமக்கல் தாண்டி நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி என்று சென்று வாகனம் மலையில் //

    இதுவும் தவறு! ;-)

    நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி-ன்னு வந்துருக்கீங்கன்னா.. நீங்க ஆத்தூரிலிருந்து ராசிபுரம் வந்து அப்புறம் பஸ் பிடிச்சிருக்கனும். ராசிபுரத்தில் இருந்து வந்தால் கண்டிப்பா எங்க ஊரை தாண்டிதான் போக முடியும்.

    நாமக்கல்லில் இருந்து வந்தால், நீங்க பேளுக்குறிச்சியை பார்க்கக்கூட முடியாது. காந்திபுரத்திலிருந்து ஒரு ரோடும், காளப்பநாயக்கன்பட்டியிலிருந்து ஒரு ரோடும் காரவள்ளியில் ‘ஜாய்ன்’ ஆகும்.
    ==========
    இருந்தாலும் எங்க ஊரை பத்தி எழுதியிருக்கீங்க. ரொம்ப.. ரொம்ப நன்றி...//

    ஹாலிவுட் பாலா தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.
    எனது பதிவில உள்ள சில விஷயங்களை சுட்டிக்காட்டியிருந்தீர்கள் தகவலுக்கு நன்றி. இது தொடர்பாக சில தகவல்கள் :
    நான் 2004 –ல் முதன் முதலாக கொல்லிமலை சென்றேன். நான் காரில் சென்றதால் முதல் முறை நாமக்கல் சென்று பிறகு அங்கிருந்து பல இடங்களில் வழி கேட்டு சென்றோம். அதன் பிறகு ஆத்தூர் வழியாக (ராசிபுரம் (அ) சேந்தமங்கலம் என்று நினைக்கிறேன்) வழியாக சென்றோம். பிறகு ஒரு முறை காளப்பநாயக்கன்பட்டி தவிர்த்து இன்னொரு வழியாக சென்றோம். இந்த முறை செல்லும்போதுதான் நாமகிரிப்பேட்டை என்ற பெயர் எனது மனதில் பதிவானது. எனது பதிவில் கொல்லிமலை எங்குள்ளது என்பதை ஓரளவுக்கு புரிய வைப்பதற்காக எனது நினைவில் நின்ற முக்கிய ஊர்களை நாமக்கல், பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை என்று எழுதியிருந்தேன். அதிலும் ஒவ்வொரு முறையும் இரவில் பயணம் செய்து காலை 6.00 மணியளவில் கொல்லிமலை சென்று சேர்வதாகவே பயண ஏற்பாடு இருக்கும். திரும்பும் பொழுதும் மாலையாக இருப்பதால் வழியில் வரும் ஊர்களை சரியாக நினைவில் வைத்திருக்கவில்லை. கொல்லிமலையை மூன்று வழிகளில் வந்தடையலாம் என நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாமக்கல்லில் இருந்து பேருந்து கொல்லிமலைக்கு வருவதை நான் பார்த்திருக்கிறேன். பேளுக்குறிச்சியில் சில மணி நேரங்கள் இருந்திருக்கிறோம். அதனால் அந்த ஊர் பெயர் முதல் பயணத்திலிருந்தே தெரியும்.
    உங்கள் சரியான தகவலுக்கும், காளப்பநாயக்கன்பட்டி என்ற ஊர்தான் உங்கள் ஊர் என்ற புதிய தகவலுக்கும் என் அன்பான நன்றி.
    நன்றி நண்பா.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  32. pappu said...
    //இவ்ளோ நாளா உங்கள பக்காம மிஸ் பண்ணிருக்கேனே! உங்களுக்கு ஓட்டு குத்தலைனா எப்படி......பச்சக்...பச்சக்.... ரெண்டு குத்தியாச்சுங்க!//


    பாப்பு... ரொம்ப நன்றி,
    ரெண்டா...? ரொம்ப பெரிய்ய்ய்ய மனசுப்பா..

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  33. sakthi said...
    //உங்கள் அனுபவ பயணத்தால,எங்கள கொல்லிமலைக்கே கூப்பிட்டு போய்ட்டீங்க...//

    ReplyDelete
  34. sakthi said...
    //உங்கள் அனுபவ பயணத்தால,எங்கள கொல்லிமலைக்கே கூப்பிட்டு போய்ட்டீங்க...//


    சக்தி, மிக்க நன்றி, வருகைக்கும் கருத்திற்கும்.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  35. எனக்கும் இங்கே போக வேண்டும் என்று எண்னம் உண்டு. உங்கள் பதிவு அதை அதிகப் படுத்தி விட்டது.

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  36. அடேங்கப்பா.. இவ்ளோ பெரிய பின்னூட்டம் போட்டுட்டீங்க. எனக்கு கொஞ்சம் சங்கடமா போய்டுச்சி! :-(

    ஊர் விட்டு இங்க வந்து 6 வருடங்கள் ஆகப்போகிறது. வந்த பின்னாடி திரும்பி போகலை. ஆனா உங்க பதிவை படிச்ச பின்னாடி என் ஊருக்கே விசிட் பண்ணிய மாதிரி ஃபீலிங் வந்துடுச்சி.

    ஓவரா ஃபீல் பண்ணியதில், ஊர்-வழியை ஊதி பெரிசாக்கிட்டேன்னு நினைக்கிறேன். :-)

    ஊரில் இருந்திருந்தா உங்களை மாதிரி பதிவுலக நண்பர்களை பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கும். :-(

    ReplyDelete
  37. சார்,
    கொள்ளிமலைகே போய் வந்ததை போல் ஒரு உணர்வு.
    அவ்வளவு அருமையா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  38. எனக்கும் கொல்லிமலை போய்ப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. இதைப்பற்றி எட்டாவதிலோ ஒன்பதாவதிலோ தமிழ்ப் பாடத்தில் படித்த ஞாபகம்.

    நல்ல கட்டுரை! நல்ல குசும்பு!
    :-)

    ReplyDelete
  39. நல்ல தெளிவான நடை!!!

    அந்த பிழையில்லாவிட்டால் வந்திருக்கமாட்டேன்!

    ReplyDelete
  40. vinoth gowtham said...
    //சார்,
    கொள்ளிமலைகே போய் வந்ததை போல் ஒரு உணர்வு.
    அவ்வளவு அருமையா எழுதி இருக்கீங்க.//

    'கொள்ளி'மலையா... நீங்க வேற பயமுறுத்தாதீங்க நண்பா.

    ReplyDelete
  41. Deepa said...
    //எனக்கும் கொல்லிமலை போய்ப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. இதைப்பற்றி எட்டாவதிலோ ஒன்பதாவதிலோ தமிழ்ப் பாடத்தில் படித்த ஞாபகம்.
    நல்ல கட்டுரை! நல்ல குசும்பு!//

    நன்றி... தீபா.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  42. thevanmayam said...
    //நல்ல தெளிவான நடை!!!

    அந்த பிழையில்லாவிட்டால் வந்திருக்கமாட்டேன்!//

    வருகைக்கு நன்றி...
    தேவன்மயம் சார்.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  43. ஹாலிவுட் பாலா said...
    //ஊரில் இருந்திருந்தா உங்களை மாதிரி பதிவுலக நண்பர்களை பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கும். :-(//

    வரும்போது நிச்சயம் சந்திக்கலாம் நண்பரே.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  44. Romba nalla katturai!!! natri!!!

    ReplyDelete
  45. oru payanathai rasichu anubavithal sirantha visayam.Unga katturai antha anubavatthai thantadhu.Mikka nandri.Nagaisuvai vunarvudan kusumbudan valangiyulladu sirrapu.

    ReplyDelete
  46. oru payanathai rasichu anubavithal sirantha visayam.Unga katturai antha anubavatthai thantadhu.Mikka nandri.Nagaisuvai vunarvudan kusumbudan valangiyulladu sirrapu.

    ReplyDelete
  47. நல்ல பயனக் கட்டுரை. சதுரகிரி என்பது வத்தியாயிருப்பு பக்கத்தில் இருக்கும் ஒரு மலையல்லவா?

    ReplyDelete
  48. kolli malayil puthithaga oru eriyum, athil padagu savariyum ullathu.
    arasu pazhapannaiyum arumaiyaga irukkum
    sutrilum pachaiyaga ilaigal virithirikka naduvil orange color
    anachi parkkave arumaiyaga irukkum

    ReplyDelete
  49. இரண்டு வாரங்கள் கழித்து நானும் செல்கிறேன்.. இந்த பதிவை மீள்வாசித்ததில் இன்னுமின்னு ஆர்வம் கூடியது!!

    அன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  50. மனம் சற்று நேர்த்தில் உருண்டு சொட்ட ஆரம்பித்தது. கொல்லிமலை அருவிபோல.
    இதுஅழகான கட்டுரை அல்ல... அனைவருக்கும் பயன்படும் பொக்கிசம். விரைவில் கொல்லிமலையில் என் கண்கள் விழும். எனது ரசனைனயும் வழிய விட காத்திருக்கிறேன்..

    இறுதி சரி பேய் போய்.... ஓய் ... என்ன வேய்..... இப்படி ஒரு பொய்.... ஆனா படிச்சதும்
    மனது குதிச்சுச்சு அய்... அய்....

    நன்றிகள் தோழா......

    ReplyDelete
  51. பயனுள்ள பயண கட்டுரை... கொல்லிமலைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். எனக்கு மீண்டும் அங்கே செல்ல ஆசை பிறந்துவிட்டது... கூடிய விரைவில் நானும் கொல்லிமலையில் ஒரு காட்டில் சுத்தி கொண்டிருப்பேன்... இயற்க்கையின் அழகை காண...


    ஆயிரம் நன்றிகள் தோழா...

    ReplyDelete
  52. கொல்லிமலை செல்லும் போது 7௦ கொண்டை ஊசி வளைவு இருக்கும் கொல்லிமலையில் எங்கும் பேய் இல்லை தவறான கருத்து

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname