Sunday, March 15, 2009

ஏசுநாதரும்... வாசுதேவனும்...

பல்வேறு மதங்கள் மனித மனங்களை ஆளுகையில் வைத்திருந்தாலும் மதப்புனைவுகளுக்கிடையேயான ஒற்றுமை விசித்திரமானது... வியப்புக்குரியதும்கூட. சமுக மானுடவியல் ஆய்வாளர்கள் மதங்களை ஒப்பு நோக்கி ஆய்வு செய்து, ஒரே வித நிகழ்வுகள் பரவலாகவும், பொதுவாகவும் மதங்களில் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கி.பி.1783-ம் ஆண்டு சியாம் (இன்றைய தாய்லாந்து) நாட்டினை ஆண்ட மன்னர் முதலாவது ராமா என்றழைக்கப்பட்டார். தாய்லாந்தில் ஆளும் மன்னரின் பெயர் ராமா -1, 2, 3, என தொடர்கிறது. பெரும்பான்மை மக்களள் லிங்கம் போன்ற வடிவை கடவுளாக இன்றும் வழிபட்டு வருவதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். தாய்லாந்தின் அண்மையில் உள்ள கம்போடியாவின் கட்டிடக்கலை உன்னதங்களாக விளங்கும் கோயில்கள் இந்து மதம் சார்ந்து கட்டப்பட்டு, மதங்களின் எல்லை அளப்பிட முடியாத தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. அக்காலத்தில் ‘பௌங் பேங் பெஃய்‘ என்ற பௌத்த வேளாண் பண்டிகையின் போது நம் தீபாவளி பண்டிகை போல வாண வேடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடப்பட்டுள்ளது.

1854-ல் நைல் நதிப்படுகையில் கண்டெடுக்கப்பட்ட சிலை இரண்டாம் ராம்செஸ் என்ற மன்னருடையது என அறியப்பட்டுள்ளது. ஆதி நாட்களில் ‘ராமபிதிகஸ்‘ என்றொரு மனிதக் குரங்கினம் இருந்துள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருந்த இக்குரங்கினத்தின் படிவங்கள் வட இந்தியாவில் சிவாலிக் என்ற இடத்தில் 1910-ல் கண்டறியப்பட்டுள்ளது. மதங்களுக்கென உருவாக்கப்பட்ட வேதங்கள் பலவானாலும் அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மொழியியல் ஆய்வாளர் கருத்துப்படி, ஈரானிய மொழியும், சமஸ்கிருத மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்று தெரிகிறது. ‘ஆர்ய‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு இந்து மற்றும் ஈரானிய மக்கள் என்ற பொருள் உண்டு. ‘ஈரன்‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘பாலை நிலம்‘ என அர்த்தம். துருக்கியின் ஒரு பகுதியான ‘அனடோலியா‘ என்ற இடத்தின் வழிவந்த ‘ஈரண்‘ மக்கள் இந்திய மண்ணில் ‘ஆரண்‘ என்றாகி ‘ஆர்யன்‘ என மருவியிருக்கக்கூடும், (ஆய்வுச்செய்தி துருக்கியில் வேதகால நாகரீகம்)

ஆபிரகாம் இப்ராகிம், யாகோப் யூசூப் என கிறித்தவ, முஸ்லிம் மதங்களின் பெயர்களின் ஒற்றுமை நாம் அறிந்ததுதான்.

அதே போல ஏசுவிற்கும், கிருஷ்ணருக்கும் பல வியப்பான ஒற்றுமைகள் உண்டு. ஏசுநாதர் கிருஷ்ணர் இருவருமே ஆட்டிடையர் குலத்தில் தோன்றியவர்கள். இவர்கள் இருவரின் பிறப்பின் போதும் வானத்தில் நட்சத்திரம் விசேஷமாக தோன்றியுள்ளன. ஏசுவும், வாசுதேவனும் இளமையில் தர்க்க சாஸ்திரத்தில் சிறந்து இருந்திருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக கம்சன் வாசுதேவனை கொல்ல முயற்சித்தது போலவே, ஏரோது மன்னன் முன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொல்ல கட்டளையிட்டான். யமுனை நதி இரண்டாகப் பிரிந்து வாசுதேவனுக்கு வழி விட்டது போலவே, செங்கடல் பிளந்து மோசேயிற்கு வழிவிட்டது. ஒரு பருக்கை சோறுண்டு பல முனிவர்களின் பசியாற்றிய கண்ணனின் லீலை போல, ஒரு அப்பத்தை ஆயிரமாக பல்கச் செய்து வழங்கிய அற்புதத்தை ஏசுநாதரும் செய்துள்ளார்.

இதெல்லாம் சரி... பெண்களிடம் கண்ணன் குறும்பு செய்ததை போல ஏசுநாதர் செய்திருக்கிறாரா..? என்று கேள்வியெழுப்புபவர்களுக்கும் பதில் உள்ளது. ஏசுநாதரின் இளம் பருவ வரலாறு நமக்கு கிடைக்கவில்லை என்பதுதான் அது. வீட்டை விட்டு மலை வனப்பகுதிக்கு வெளியேறும் ஏசுநாதர் அதன் பிறகு என்னவானார் என்ற தகவல் இன்றி, தேவகுமாரனாக மட்டுமே நமக்கு அறியக் கிடைக்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தாவரங்களின் உரையாடல்‘ தொகுப்பில் வெளியாகியிருக்கும் ‘நட்சத்திரங்களோடு சூதாடுபவர்கள்‘ மிக அருமையான ஒரு கதை. தற்போது அதை மீண்டும் படித்த போது தோன்றிய எண்ணம்தான் இந்தப் பதிவு.

இது பல சிறு குறிப்புகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. மேலதிக தகவல்கள் இருப்பின் நீங்களும் விரிவான பதிவிடலாம்.


- பொன். வாசுதேவன்

13 comments:

 1. //ஏசுநாதர் அதன் பிறகு என்னவானார் என்ற தகவல் இன்றி, தேவகுமாரனாக மட்டுமே நமக்கு அறியக் கிடைக்கிறார். //


  இக்கேள்விக்கான பதிலை ஓஷோவின் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்...ம்,அனேகமாக from darkness to light..மின்னூல் கிடைத்தால் அனுப்புகிறேன்.வாசித்து பாருங்கள்.

  ReplyDelete
 2. பைபிளில் நோவா; இஸ்லாமின் நூஹ் நபி; ஹிந்துவில் மனு;- ஊழிப்பிரளயம் கூட பொருந்திவருகின்றது.

  இந்த மதங்கள் தங்களுக்கிடையில் பொதுவான அம்சத்திலேனும் ஒன்றுபட்டுவிடலாம். ஒரே கடவுள் ஆகிவிடும்.

  ReplyDelete
 3. ரௌத்ரன், இயேசுவின் இளமைக்காலம் பற்றி ஓஷோ எழுதியிருப்பதாக அறிந்திருக்கிறேன். ‘நிகோலஸ் நோடவிச்‘ என்பவர், ‘The Unknown life of jesus chirst’ என்ற புத்தகத்தில், இருபது வயது முதல் தேவகுமாரனாக பிரசன்னமான காலத்திற்கு முன் இயேசு இந்தியா வந்திருந்ததாக எழுதியுள்ளார். லடாக், தீபெத் என பயணித்து தேசாந்திரியாக இந்தியா வந்த இயேசு தீபெத்தின் பௌத்த கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார் என அவர் கருத்துரைக்கிறார். 1890-களில் எழுதப்பட்ட இப்புத்தகத்தின் விமர்சனங்களில் கிருஷ்ணர் – இயேசு ஒற்றுமைகள் குறித்து கருத்துகள் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தகவல்கள் படிக்க விரும்பினால் http://www.sacred-texts.com/chr/uljc/index.htm என்ற முகவரியில் சென்று வாசியுங்கள்.

  ReplyDelete
 4. //இந்த மதங்கள் தங்களுக்கிடையில் பொதுவான அம்சத்திலேனும் ஒன்றுபட்டுவிடலாம். ஒரே கடவுள் ஆகிவிடும்.//
  இது மட்டும் நடந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது. மாற்றம் மனங்களில் நிகழ வேண்டும்.
  நன்றி அனானி...

  ReplyDelete
 5. ஆப்பிரகாமிய "ராம்" வார்த்தைக்கும் தமிழ்\சமஸ்கிருதம் மொழி வழி வரும் ராம் என்ற வார்த்தைக்கும் நிறையவேறுபாடு இருக்கிறது.

  ஹீப்ரூ அரபிக் மொழிகளில் ராம் என்பது மலையை குறிக்கும். ரமத் கான் (டெல் அவீவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி), மிட்ஸ் பெ ரமோன் (ஊரின் பெயர்), ரமத் ஹ கொலான் (கொலான் மலைப்பகுதியைக் குறிக்கும் ஹீப்ரூ சொல்).

  அதற்கும் இதற்கும் முடிச்சு போட்டு முட்டாள் இந்துக்களை மதமாற்றம் செய்ய நினைக்கிறீர்கள் போலும். முட்டாள்கள் என்றுமே முட்டாள்களாக இருக்கமாட்டார்கள்.

  ReplyDelete
 6. பதிவு அருமை மதுராந்தகத்தாரே..

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. தமிழன்பன்… நண்பரே, வணக்கம். உணர்வு வயப்பட்டு கருத்துரைக்க இது மதபோதகரின் பதிவு அல்ல என்பதை முதலில் அன்புடன் புரிந்து கொள்ளுங்கள். எனக்கு தோன்றிய கருத்தின் அடிப்படையில் ஒரு சிந்தனை பரவலாக்கத்திற்காக எழுதப்பட்ட பதிவு. நான் ஒரு இந்து என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தயவு செய்து பதிவை மீண்டும் படித்து அதன் பொருளை மீண்டும் உணர்ந்து கொள்ளுங்கள். ஞானக்கூத்தனின் கவிதை ஒன்று...
  ‘எனக்கும் தமிழ்தான் முச்சு
  ஆனால் பிறர் மேல் அதை
  விடமாட்டேன்‘
  இது நினைவுக்கு வருகிறது.
  எழுதிய பதிவின் நோக்கம் வேறு. மதமாற்றம் என்றெல்லாம் கொச்சைப்படுத்தாமல், பதிவின் நோக்கத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்வீர்கள் என நம்புகிறேன்,தமிழன்பன்,
  வேறென்ன சொல்ல... தங்களின் உணர்வுப் பெருக்கான கருத்துக்கு தலைவணங்கி அன்பு கூறுகிறேன்.

  ReplyDelete
 8. எனது வலையின் வருகைக்கும் பின் தொடர்வதற்கும் நன்றி வாசு. தோழி உமாஷக்தி வலையின் மூலமே அறிந்தேன். வாழ்த்துகள்.

  என்ன அருமையான தமிழ் பெயர்..

  வலையின் பெயரும் வலையமைப்பும் அருமை...

  தங்களது முன்னோர் பற்றி அறிந்தது மிகவும் மகிழ்ச்சியே.

  குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதும் தங்களது எழுத்துக்கள் சிறந்தவை..


  கடந்த பத்து ஆண்டுகளாக ஓஷோவே எனது குருவும் வழிகாட்டியும்.அவரது புத்தகங்களே எனக்கு எல்லாம்.


  உலக சினிமாவின் காதலன்.. நல்ல சினிமா பற்றிய ஆதங்கத்தாலும் தமிழ் சினிமா மீதுள்ள கடும் கோபத்தாலும் எழுத ஆரம்பித்தேன்..


  இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.


  இந்த வருடம் நாகரீக கோமாளி ஆசான் நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் {NSK அவர்களின் முழுப்பெயர் } அவர்களின் நூற்றாண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும் ..?? தெரிய வைத்தார்களா நிகழ்காலத்து கலைத்துறையினர்..??  தமிழே பேசத்தெரியாத நடிகைகள், காசு கொடுத்து விருதுகளை வாங்கும் நடிகர்கள், சதா நிகழ்காலத்து இரட்டை அர்த்த வசனங்களாலும் ஆபாச நடனங்களாலும் தனது நிகழ்ச்சிகளை நிரப்பும் தொலைகாட்சிகள், மிகப்பெரிய ஊடக கலையாக இருக்க வேண்டிய சினிமாவை வெறும் பொழுது போக்காகிய வணிக பத்திரிகைகள், வெற்று விளம்பரங்களால் தரமில்லாதவற்றை வைத்து காசாக்கும் தயாரிப்பளர்கள் { ??? } என்று எவரையும் நான் இகழப்போவதில்லை.

  ஏனென்றால் இங்கு எல்லாமே வியாபாரம்.


  Mercantile Era...


  தனது நடிப்பாலும் நகைச்சுவையுடன் எல்லாவித கருத்துகளுடன் தேசபக்தியை ஊட்டிய அந்த மாபெரும் கலைஞனை{NSK }மறந்த சமுகம் இது..  Oh.. Sorry.. நானும் கண்றாவிகளை விமர்சிக்க ஆரம்பித்து விட்டானா ? என வருத்தப்படுகிறேன்.


  எனவே எனது நந்தவனம் என்ற மற்றொரு வலையில் சில இந்த தலைமுறை மறந்து போன தமிழ் சினிமாவின் சம்மந்தப்பட்ட பதிவுகளை இடலாம் என நினைக்கிறேன்.

  தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.


  கண்டிப்பாக நிறைய பேசலாம். சென்னை வரும்போது சந்திக்கலாம்.

  எனது புதிய பதிவு..


  திரை மொழியை உருவாக்கிய உலக இயக்குநர்.Wong Kar Wai தங்களின் வருகைக்காக காத்திருக்கிறது..

  நன்றி.

  மீண்டும் வாழ்த்துகள்..

  ReplyDelete
 9. ஏசுநாதர் ஆட்டிடையர் குலத்தில் தோன்றியவர் அல்ல. யூத குலத்தில் தோன்றியவர். குலத் தொழில்: தச்சு வேலை.

  இணையத்தில் ஏசுநாதர் மற்றும் கிருஷ்ணரை பற்றிய ஒற்றுமைகள் ஏராளம் காணக் கிடைக்கின்றன: உதாரணமாக

  (1) Krishna was miraculously conceived and born of the Virgin Devaki ("Divine One") as a divine incarnation.
  (2) He was born at a time when his family had to travel to pay the yearly tax.
  (3) His father was a carpenter yet Krishna was born of royal descent.
  (4) His birth was attended by angels, wise men and shepherds, and he was presented with gifts.
  (5) He was persecuted by a tyrant who ordered the slaughter of thousands of infants who feared that the divine child would supplant his kingdom.
  ....
  http://etresoi.ch/Denis/krisna.html

  ReplyDelete
 10. ராபின், தங்கள் வருகைக்கு நன்றி. புதியதான விஷயங்களை தங்கள் பின்மொழியின் முலம் அறிய முடிகிறது. தச்சுச் தொழிலும், கால்நடை மேய்த்தலும் ஆதிநாட்களில் யூதர்களின் பிரதான தொழிலாக இருந்து வந்துள்ளது. சார்ந்திருக்கும் தொழிலை வைத்தே பிறந்த குலத்தை குறிப்பது அந்நாளைய வழக்கம். ஆடு மேய்த்தலை குலத்தொழிலாக கொண்ட இயேசுவின் தந்தை ஜோசப்பின் முதாதையர்கள், நாகரீக வளர்ச்சிக்கு பின்னர் தச்சுத் தொழிலை மேற்கொண்டனர். பின்னாளில் கட்டிடக்கலை தொழிலில் சிறந்து விளங்கினர். மலைகளில் ஆடுகளை மேய்த்த காரணத்தினாலும், வாசுதேவனுடன் இயேசுவை இணைத்து ஒப்பு நோக்கிற்காகவும் மட்டுமே இயேசு ‘ஆட்டிடையர் குலத்தை சார்ந்தவர்‘ என் குறிப்பிட்டிருந்தேன்.

  ReplyDelete
 11. மிக அழகான கருத்தாய்வு. ஆதிகாலத்தில் மதங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருக்கவேண்டும்; இல்லாவிடில் பல கலாசாரங்களில் ஒரே மாதிரியான நம்பிக்கைகள் இருந்திருக்க முடியாது.

  பூணூல் வழக்கம் இந்துக்களிடம் மட்டும் அல்லாது, இரானிய வம்சாவளியை சார்ந்த பார்சிகளிடமும் உண்டு என்பதை அறிந்து வியந்தேன். அதே போல், புனித மக்காவில் ஒரு சடங்கில் இஸ்லாமியர்கள் மேலாடையை மார்பின் குறுக்காக பூணூல் போல் அணிந்திருப்பதை கண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 12. தங்கள் வருகைக்கும்... கருத்துக்கும் நன்றி சத்யமுர்த்தி.

  ReplyDelete
 13. நானும் என் பிதாவும் ஒன்றாய் இருக்கின்றோம். என்னைக்கட்டவன் என்பிதாவைக்கண்டவன்.பரமபிதா நிறைநிலையே பெற்றிருப்பதுபோல் நீங்களும் நிறைநிலையைப்பெற்றிடுங்கள் என்ற வசனங்கள் எல்லாம் இயேசு ஒரு வேதாந்தி என்று தெரியவருகின்றது. சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயேசு குறித்து வெளியிட்டுள்ள பத்தகங்கள் கூடுதல் தகவல் அளிக்கும். இயேசு கிறிஸ்தவ மதத்தை அமைக்கவில்லை.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname