Tuesday, March 17, 2009

அடை


அருகில் திரும்பிப் படுத்தணைத்து

உன் இறால் குஞ்சு விரல்களை

கைகளுக்குள் அணிந்து

பதுங்கிப் பதுங்கி

அழைத்துச் செல்கிறேன்.

உழவு கண்டறியாமல்

வெடித்து இறுகி கனத்த

நிலம் முன் நீள...

காதை வருடும்

காற்று பேரோசையுடன்.

வெறித்துப் பார்க்கும்

சூரியனை அலட்சியப்படுத்தி

தூரத்தில் கலங்கும்

கானல் நீர்நோக்கி

தூசிகளால் கண் சிதையாது

சென்று கொண்டேயிருக்கிறேன்

பல கணங்களாய்...

புட்டம் உயர்த்தி கால்கள் மடிந்து

குப்புறப்படுத்து

நீ

தூங்கும் திசையெல்லாம்

பரவியபடி கசிகிறதென் அன்புவெளி

தனிமை உமிழ்ந்த

யோசனையின் எச்சமாய்...

இன்னும் வெகுதூரம்

செல்ல வேண்டியிருக்கிறது

உன்னைப் பாதுகாக்க.



- பொன். வாசுதேவன்



உயிர்மை டிசம்பர் 2004 இதழில் வெளியானது.

22 comments:

  1. ஒரு உண்மையான தாயின்/ தகப்பனின் உணர்வு.. அம்சம் நண்பா..

    ReplyDelete
  2. ஒரு சின்ன விஷயம்.. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பதிவுகள் இட வேண்டாம் எனபது எனது வேண்டுகோள்.. காரணம் பதிவர்கள் எல்லா பதிவுகளையும் பொறுமையாக படிப்பதில்லை.. நாம் தொலைபேசியில் இன்னும் தெளிவாக பேசலாம்...

    ReplyDelete
  3. // உன் இறால் குஞ்சு விரல்களை //

    இது வரை குழந்தையின் விரல்களை, இறாலுடன் யாரும் கற்பனை செய்து படித்த ஞாபகம் இல்லை. அருமையான கற்பனை.

    ReplyDelete
  4. // இன்னும் வெகுதூரம்
    செல்ல வேண்டியிருக்கிறது
    உன்னைப் பாதுகாக்க. //

    பாசம்... பாசம் வேறு எதையும் இந்த கவிதையில் காணவில்லை...

    ReplyDelete
  5. // கார்த்திகைப் பாண்டியன் said...

    ஒரு சின்ன விஷயம்.. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பதிவுகள் இட வேண்டாம் எனபது எனது வேண்டுகோள்.. காரணம் பதிவர்கள் எல்லா பதிவுகளையும் பொறுமையாக படிப்பதில்லை.. நாம் தொலைபேசியில் இன்னும் தெளிவாக பேசலாம்...//

    ஆம் நண்பர் கார்த்திகை பாண்டியன் அவர்கள் சொல்வது சரிதான். சற்று இடை வெளி விட்டு பதிவிடுங்கள். படித்து மனதில் உள்வாங்கி, அதற்கான பின்னூட்டம் போட சமயம் வேண்டுமல்லவா...

    ReplyDelete
  6. \\// உன் இறால் குஞ்சு விரல்களை //

    இது வரை குழந்தையின் விரல்களை, இறாலுடன் யாரும் கற்பனை செய்து படித்த ஞாபகம் இல்லை. அருமையான கற்பனை.\\

    நானும் கூவிக்கிறேன் ...

    ReplyDelete
  7. \\ஆம் நண்பர் கார்த்திகை பாண்டியன் அவர்கள் சொல்வது சரிதான். சற்று இடை வெளி விட்டு பதிவிடுங்கள். படித்து மனதில் உள்வாங்கி, அதற்கான பின்னூட்டம் போட சமயம் வேண்டுமல்லவா...\\

    இதுக்கும் ...

    ReplyDelete
  8. என் குழந்தையிடம் நான் உணர வேண்டியதை சொல்லித்தந்து போல் உணர்கிறேன்

    \அன்புவெளி
    தனிமை உமிழ்ந்த
    யோசனையின் எச்சமாய்...இன்னும் வெகுதூரம்
    செல்ல வேண்டியிருக்கிறது
    உன்னைப் பாதுகாக்க.\\

    மிகவும் இரசித்-தேன்

    ReplyDelete
  9. நல்லா இருக்குங்க!!!

    ReplyDelete
  10. நன்றி, கார்த்தி, உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன்.
    தொடர்ந்து பதிவிட்டதின் இரகசியம் என்னவென்றால் எல்லோமே ஏற்கனவே பத்திரிகைகளில் பிரசுரமானவை.

    // இது வரை குழந்தையின் விரல்களை, இறாலுடன் யாரும் கற்பனை செய்து படித்த ஞாபகம் இல்லை. அருமையான கற்பனை.//

    இராகவ், இறால் குஞ்சினை கையில் எடுத்து ஸ்பரிசித்துப்பாருங்கள். அதன் மேலுறை முழுமையாக வளர்ச்சியுறாத நிலையில் மிக மென்மையான ஒரு அனுபவித்தலை உணர்வீர்கள். உங்கள் அன்பான ஊக்கத்திற்கு நன்றி.

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜமால், ஆதவா..

    ReplyDelete
  11. வாவ், ரொம்ப நல்லா இருக்கு.

    //தனிமை உமிழ்ந்த யோசனை// ரசித்தேன்.

    அனுஜன்யா

    ReplyDelete
  12. //இன்னும் வெகுதூரம்
    செல்ல வேண்டியிருக்கிறது
    உன்னைப் பாதுகாக்க//

    தாய்மையின் வாசம் உணர முடிகின்றது

    ReplyDelete
  13. அடை என்ற தலைப்பை பார்த்தும் அடை தோசையை பற்றி என்று நினைதேன்.(எனக்கு அடை தோசைனா ரொம்ப பிடிக்கும் ...).

    ReplyDelete
  14. அனுஜன்யா, தங்கள் இரசனைக்கும், பின்மொழிக்கும் எனது அன்பான நன்றி.


    // அடை என்ற தலைப்பை பார்த்தும் அடை தோசையை பற்றி என்று நினைதேன்.(எனக்கு அடை தோசைனா ரொம்ப பிடிக்கும் ...)//

    வாங்க ராஜி, பின்மொழிக்கும், உங்களோட அருமையான கற்பனைக்கும் நன்றி. (எனக்கும் ‘அடை‘ தோசையை சாப்பிட ஆசைதான். எங்க அம்மா முன்னெல்லாம் கோதுமை அடை, பருப்பு அடை, கேழ்வரகு அடை, முருங்கை கீரை அடைன்னு விதவிதமா செஞ்சு கொடுப்பாங்க) எங்க வீட்ல இப்போ ‘அடை‘ என்ற வார்த்தை – “சென்னைக்கு போனா ‘சீக்கிரமா வீட்டுக்கு வந்து அடை‘ - ராத்திரி பத்து மணியாச்சா ‘வீட்டு கதவை அடை‘ அப்படின்னு வேற விதமா மட்டும்தான் பயன்படுது.
    எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும். (ராஜி, சரியா படிச்சுக்கோங்க.. ‘அதிர்ஷ்டம்...‘ அதிரசம் இல்ல.)

    ReplyDelete
  15. (மன்னிக்கவும்... நேற்று எனக்கு வேலைப்பளு அதிகம். ஆகையால் அதிகம் கவனிக்க இயலவில்லை)

    என் பதிவுக்கு வந்து பதிலூக்கம் கொடுத்திருந்தீர்கள்.. எனது தொலைப்பேசி + 9894094141. நிச்சயம் இருவரும் பேசுவோம்.

    ReplyDelete
  16. தூங்கும் திசையெல்லாம்
    பரவியபடி கசிகிறதென் அன்புவெளி

    கலக்கல்..
    தவழ்ந்து படுத்திருக்கும் பாசத்தை எழுத்துக்களால் வசியப்படுத்துகிறீர்கள்!!

    உயிர்மை இதழை சென்ற மாதம் முதல்தான் வாங்கி வருகிறேன் (இந்த மாதம் இன்னும் வாங்கலை) அவ்விதழில் இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள் அகநாழிகை!!

    ReplyDelete
  17. arumaiya oru pasa unarvai padivu seithu irukkinga....
    valthukkal tholare

    ReplyDelete
  18. தங்கள் முதல் வருகைக்கு நன்றி,
    T.V.Radhakrishnan, MayVee

    ReplyDelete
  19. "இறால் குஞ்சு விரல்" மிக அழகான கற்பனை. அதன் இதத்தையும் குளிர்மையையும் தோற்றத்தையும் மிக அழகாக குழந்தையின் விரல்களோடு ஒப்பிட்டிருக்கிறீர்கள்.நிலைத்து நிற்கத்தக்க தனித்துவமான வார்த்தைப் பிரயோகம்.அதனைக் கைகளுக்குள் உணர முடிகிறது.

    கவிதையும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது.பாராட்டுக்கள்.உங்கள் வேறு பல கவிதைகளையும் வாசிக்க ஆவல்.

    உங்களுடய தளத்திற்கு வந்து ஆறுதலாக முழுவதும் வாசிக்க வேண்டும்.விரைவில் வருகிறேன்.

    என்'வீட்டுக்கு'வந்தமைக்கும் நன்றிகள்.மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  20. //மணிமேகலா said...
    "இறால் குஞ்சு விரல்" மிக அழகான கற்பனை. அதன் இதத்தையும் குளிர்மையையும் தோற்றத்தையும் மிக அழகாக குழந்தையின் விரல்களோடு ஒப்பிட்டிருக்கிறீர்கள்.நிலைத்து நிற்கத்தக்க தனித்துவமான வார்த்தைப் பிரயோகம்.அதனைக் கைகளுக்குள் உணர முடிகிறது.

    கவிதையும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது.பாராட்டுக்கள்.உங்கள் வேறு பல கவிதைகளையும் வாசிக்க ஆவல்.

    உங்களுடய தளத்திற்கு வந்து ஆறுதலாக முழுவதும் வாசிக்க வேண்டும்.விரைவில் வருகிறேன்.

    என்'வீட்டுக்கு'வந்தமைக்கும் நன்றிகள்.மகிழ்ச்சியாக இருக்கிறது.//

    உங்கள் இரசனையான பின்மொழிக்கு ரொம்ப சந்தோஷம், மணிமேகலா. நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname