Wednesday, December 26, 2012

ஸ்ரீ சக்ரபுரி - ஸ்வாமி ஓம்கார் - புத்தக வெளியிடு


ஸ்ரீ சக்ரபுரி - ஸ்வாமி ஓம்கார்

இறையின்பம் திகட்டாத பேரின்பம் என்பது ஆன்மீகர்களின் அனுபவம். முழுமையான வாழ்வின் ஒரு நிமிடத்தின் புகைப்படம் எப்படி பல்வேறு கடந்தகால நிகழ்வை கிளர்ச்சியடைய செய்யுமோ அது போன்று ஒவ்வொரு கணமும் இறையனுபூதி பொழிந்தாலும் அதில் ஒரு கணத்தின் நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு ரசிப்பது என்பது சுவாரசியமானது.

ஸ்ரீ சக்ரபுரி என்ற இந்த புத்தகம் இத்தகைய சுவாரசியம் வாய்ந்தது. தினம் தினம் நாம் பார்க்கும் ஒரு விஷயம் சாதாரணமாக தெரிந்தாலும் அதன் பின்னணியில் பெரும் ஆன்மீக சக்தி இருக்கலாம். அது போன்று திருவண்ணாமலை என்ற இடம் பலருக்கு சாராசரியான ஒரு வழிபாட்டு தலம். ஆனால் அது ஆன்மீக தேடல் கொண்டவருக்கு அள்ள அள்ள குறையாத ஆன்மீக சுரங்கம்.

ஞானப் பெருவெளியில் ஆன்மீகம் சுவைப்போர்க்கு மேலும் ஆழ்ந்த உணர்வூட்ட ஸ்வாமிஜியால் வெளிப்பட்டது ஸ்ரீ சக்ரபுரி. தன்னகத்தே பல்வேறு ஆன்மீகக் கருத்துகளை வைத்திருந்தாலும் அது பாமரனுக்கும் புரியச் செய்யும் ஆற்றல் சிலருக்கே உண்டு. ஸ்வாமி ஓம்கார் அவர்களின் விளக்கத்துடன் பயணிக்கும் பொழுது திருவண்ணாமலையின் ஒவ்வொரு சதுர அடியையும் ரசித்து மகிழலாம்.வெளியீடு : அகநாழிகை பதிப்பகம்
விலை : :ரூ.100

தொடர்புக்கு : aganazhigai@gmail.com

மதுவாகினி - ந.பெரியசாமிஇருத்தலின் பொருட்டு இடம் பெயர்ந்து நகரத்தின் பொய்முகங்களில் வாழ்வாதாரத்தைத் தேடியலைய நேரிடுகின்ற அவலச்சூழல் அச்சுறுத்துகின்ற ஒன்று. பச்சைப்பசேலெனப் புதர் மண்டிய கால்வாய்க்குள்ளாக தேங்காமல் ஓடும் அழுக்கு நீராக குற்ற உணர்ச்சி தருகிற துயரங்கள், அடைபட்டு வெளியேறும் நீரின் வேக வீச்சாய் எழுகின்ற நேசத்தின் உணர்வலைகள், நுரைத்து நுரைத்துப் பொங்கும் தீராக்காதலும், காமமும், தோத்தாங்கோழியாக்கி உக்கிர ஏளனத்தோடு பரிகசிக்கின்ற வாழ்க்கை குறித்த கேள்விகள் என அமிழ்ந்தமிழ்ந்து மேலெழும் பந்தாகி மிதந்து கொண்டிருக்கின்றன பெரியசாமியின் கவிதைகள்.

நிழல் விழக்கூட இடம்விடாமல் சுயம் பறிக்கும் சூது கொண்ட வாழ்வின் அன்றாடங்களில் பல்லியாகியும், ஏதிலியான கடவுளை நோக்கிக் கேள்வியெழுப்பியும், நினைவுகளைத் துழாவும் அன்றாட வாழ்வின் அபத்தங்களும் பெரியசாமியின் கவிதையின் உணர்வுகளாகின்றன. நகரமும், அதுகாட்டும் கோரமுகத்திற்குமிடையிலான நம் அக நினைவுகளை ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் செய்கின்றன இந்தக் கவிதைகள்.பொன்.வாசுதேவன்---------------------------------------------------------------------------------------------------
வெளியீடு : அகநாழிகை பதிப்பகம்
விலை : :ரூ.70

தொடர்புக்கு : aganazhigai@gmail.com

நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - அபி மதியழகன்


வேளாண் குடும்பம் உருவாக்கிய மனநிலைக்கும் தொழில் நகரம் கட்டமைத்திருக்கும் மனநிலைக்கும் இடையிலான உராய்வின் விளைவானவை இவரின் கவிதைகள். உலக மயமாக்கல் என்ற மூன்றாம் உலக மனிதர்களுக்கு வாழ்வின் புதிய ருசிகளைக் காட்டி அந்நிலங்களுக்கு என்றிருந்த சிறந்த விழுமியங்களை அழித்து அவர்களை ஏகாதிபத்தி யங்களின் கூலிகளாக மாற்றி வைத்திருக்கிறது.  டாலர் பிச்சைக்காரர்களாகியிருப்பதை கௌரவமாக கருதும் ஒரு தலைமுறையை விமர்சனம் செய்வதாக இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன.

வேலையின் நிமித்தம் புலம் பெயர்தல், கிராமிய சமூகத்தின் சாதி இறுக்கம், கார்ப்பரேட்டுகள் உருவாக்கியிருக்கும் போலி நாகரிகம், பால்கவர்ச்சி, தமிழ்த்தேசிய சிக்கல்கள், ஏகாதிபத்திய ஒடுக்கு முறை என நம் சமூகம் எதிர்கொள்கிற எல்லா  சிக்கல்களும் மதியையும் அலைக்கழிக்கின்றன.    இத்தகைய நினைவலைகள் ஓயாமல் எழுப்பும் கேள்விகளை தன் கவிதை வழியாக நமக்கு ஆற்றுப்படுத்துகிறார் அபி மதியழகன்.
           


கரிகாலன்--------------------------------------------------------------------------------
வெளியீடு : அகநாழிகை பதிப்பகம்
விலை : :ரூ.70

தொடர்புக்கு : aganazhigai@gmail.com

Comments system

Disqus Shortname