Thursday, April 16, 2009

இந்து அரிசனர், நாடார் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நுழையத் தடை

வரலாறு என்று எதைக் கூறுகிறோம்... நடந்தவை எல்லாமே வரலாறுதானா...? எது உண்மை.. எது பொய் என பகுத்தறிந்தும், மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாற்றினை அடையாளப் படுத்துவதிலும், நினைவுக்கு மீளச்செய்வதிலும் சமுக மானுட அறிவியலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

ஆதிமனிதனின் காலம், மன்னர் காலம் என தொடர்ந்து இன்று வரை பல தொன்மைகள் படிந்த மானுட சரித்திரம் பல விசித்திரங்களைக் கொண்டது. சரித்திரத்தின் பல பக்கங்களை நாம் வாசிக்காமலும், அதைப் பதிவிடாமலும் விட்டிருக்கிறோம். ஒவ்வொருவரின் எழுத்தும், ஆக்கங்களும் அவரவர் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பாக இருக்கும்.

கலைவாணர் பாடலில் வரும் சில வரிகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள்... “பட்டனைத் தட்டினதும் ரெண்டு தட்டுல இட்டிலியும் கூட தொட்டுக்க சட்டினியும் சட்டுனு வந்திடனும்“ இப்பாடலின் வரிகளில் ஒளிந்துள்ள கருத்து என்ன தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியை எதிர்நோக்கும், அதற்கென ஏங்கும் சராசரி மனித மனோபாவம் அங்கே தென்படுகிறது. ‘நிழல்கள்‘ படத்தின் சில காட்சிகளில் நமக்கு உணரக்கிடைப்பது என்ன ? கல்லூரிப் படிப்பு முடிந்து வேலையில்லா நிலையிருந்த காலத்தை நமக்கு சொல்கிறது.

திரைப்படம் ஒரு உதாரணம்தான். சரித்திரங்களை பதிவு செய்வதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட ‘அலறியபடி ஓடிவரும் நிர்வாணச் சிறுமி‘யின் புகைப்படம் நமக்குள் நிகழ்த்தும் உணர்வுப் பெருக்குகள் எத்தகையது. நாம் வாழ்ந்த காலத்தையும் நமக்கு முன் வாழ்ந்தோரின் வாழ்க்கை முறையையும் எந்த விருப்பு வெறுப்புகளுமற்று பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

‘சரித்திரம்‘ என்ற சொல் எதைக் குறிக்கிறது ? ‘சரி‘ என்பதை சம்மதக்குறிப்பாக நாம் பயன்படுத்தி வருகிறோம். ‘சரி‘ என்றால் ஒரு தன்மை அல்லது ஒழுங்கு என்றும் பொருள் இருக்கிறது. ‘சரிதம்‘ என்றால் ‘காதை‘ எனவும், ‘சரிதர்‘ என்றால் ‘சஞ்சரிப்போர்‘ எனவும் அர்த்தமுள்ளது. இதன்படி வாழ்ந்தவர்களின் கதையை, மானுடத்தை குறிப்பிடும் சொல்லாக சரித்திரம் விளங்குகிறது. ‘வர‘ என்ற சொல்லுக்கு ‘நடக்க‘ ‘சம்பவிக்க‘ ‘தோன்ற‘ என்றெல்லாம் பொருள் உள்ளது. நடந்தவற்றையும், சம்பவங்கள் குறித்தும், தோன்றல்கள் குறித்தும் பதிவதும், பார்ப்பதும் ‘வரலாறு‘ எனலாம்.

ஒரு இனத்தின் முழுமையான சரித்திரத்தை அறிந்துகொள்ள வரலாற்றுப் பதிவுகள் அவசியமாகிறது. கல்வெட்டு, ஓலைச்சுவடி, சிற்பங்கள், ஓவியங்கள் என தொன்றுதொட்டு வளர்ந்த சரித்திரப் பதிவுகளின் முன்னோடிகள் இன்று எழுத்து, ஓவியம், காட்சி ஊடகம், கணினி, வலைப்பக்கம் என பேரெழுச்சி பெற்று நிற்கிறது.

சமகாலத்தை மட்டுமின்றி நம் முன்னோர் வாழ்ந்த காலம் பற்றியும் நாம் பதிந்து செல்ல வேண்டியது அவசியமாகிறது. ராகுல் சங்கிருத்தியானின் ‘வால்கா முதல் கங்கை வரை‘ என்ற ஒரு புத்தகம் ஏற்படுத்திய மனவெழுச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அதேபோல ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி‘ காட்டும் உலகம் நாம் நேரில் காணாவிட்டாலும் உணர்ந்தறியக்கூடியது. ஆ.சண்முக சுந்தரத்தின் ‘நாகம்மாள்‘, ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு‘ என சொல்லிக்கொண்டே போகலாம். நேரடியாக சரித்திரத்தை பதிவு செய்யாவிட்டாலும், நாவல் என்ற வடிவத்தை கையாண்டு அதன் வாயிலாக சமகால சரித்திரத்தை பதிவு செய்த படைப்புகள் இவை.

தொ.பரமசிவன், ஆ.இரா.வெங்கடாசலபதி, பக்தவச்சலபாரதி, ஆ.சிவசுப்ரமணியன், கி.ராஜநாராயணன், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா, ச.தமிழ்ச்செல்வன், அசோகமித்திரன், பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ், அ.முத்துலிங்கம், சு.தியோடர் பாஸ்கரன், கோபிகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், ஞாநி, மணா, சுகுமாரன், கண்ணன், எச்.பீர்முஹம்மது, ஹெச்.ஜி.ரசூல் (பட்டியல் முழுமையானது அல்ல, எனக்கு வாசிக்கக் கிடைத்தவையின் அடிப்படையிலேயே இப்பெயர்களை குறிப்பிடுகிறேன்) என சமீப காலங்களில் எழுதி வருபவர்களில் மானுடவியலை பதிவு செய்வதில் சிறந்திருக்கிறார்கள்.

சரி... பதிவின் தலைப்புக்கு வருவோம்.

“இந்து அரிசனர், நாடார் இனத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நுழையத் தடை“ என்றொரு நிலை இருந்து பின்னர் 1939-ல் ஆலய பிரவேசப் போராட்டம் நடந்த பின்னரே அனைத்து சமுகத்தினரும் நுழைய அனுமதிக்கப்பட்டனர் என வரலாற்றில் உள்ளது.

கடந்த வாரத்தில் பத்திரிகையாளர் மணா எழுதிய ‘தமிழகத்தடங்கள்‘ (வெளியீடு : உயிர்மை பதிப்பகம்) என்ற புத்தகத்தை வாசித்தேன். வரலாறு குறித்த பதிவுகளின் அவசியமும் தேவையும் எந்த அளவிற்கு கட்டாயமானது என்பதை உணர்கிறேன். அதிக விலையின்றி (ரூ.90/-) வெளிவந்திருக்கும் இதுபோன்ற புத்தகங்களை நாம் வாசித்து உணர்வதும், இதன் கருத்துக்களை பரவலாக்கி மக்களிடையே கொண்டு செல்வதும் சரித்திரம் பற்றிய ஆழமான புரிதலையும் தெளிவையும் உருவாக்கும்.

சிற்பங்கள் அடர்ந்த கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம், பொற்றாமரைக்குளம், வடிவமைப்பில் தனித்துவம் என பல்வேறு புகழ்ச்சிகளுக்கு உரித்தான மதுரை மீனாட்சியம்மன் கோவிலிற்கு காலச்சரித்திரத்தில் இருந்த ஒரு கரும்புள்ளியைப் பற்றி தமிழகத் தடங்களில் பதிந்துள்ளார் மணா.

1937-ல் காந்தி தமிழகம் வந்த போது, இந்து அரிசனங்களையும், நாடார் சமூகத்தினரையும் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து, அதைக் கண்டித்து தானும் மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு செல்ல மறுத்து விட்டார். காங்கிரசாரிடமும், ஆச்சாரக் காப்பாளர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்திய நிகழ்வு காந்தியின் மறுப்பு. 1930-க்குப் பிறகு தாழ்த்தப்பட்டோர் ஆலயங்களுக்குள் நுழைவது குறித்து வலியுறுத்தும் எண்ணம் காந்தியிடம் இருந்தது. அன்றைய சூழலில் காங்கிரசின் ஈடுபாடாக இச்செயலைக் கருதியதால், இதில் அம்பேத்கர் ஆர்வம் காட்டவில்லை.

மதுரை நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் வைத்தியநாதய்யர் தலைமையில், அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதம மந்திரியான ராஜாஜி வழிகாட்டுதலுடனும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவுடனும் ஆலயப் பிரவேசம் நடத்த ஆலோசிக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாக அதிகாரியும் ‘பச்சைக்கொடி‘ காட்டினார். அர்ச்சகர்கள் மத்தியில் இத்தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

8.7.1939-ல் காலை 10 மணிக்கு கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும். விருதுநகர் நகராட்சி உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.சண்முக நாடாருடன் சேர்ந்து ஆறு பேர் வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து வணங்கினர்.

அதன் பிறகு எதிர்ப்பு இன்னமும் கூடியது. இருந்தாலும் ஆலயப் பிரவேசத்தை சட்டப் பூர்வமாக அங்கீகரித்து சட்டம் பிறப்பித்தார் ராஜாஜி. இதையறிந்து ‘அற்புதம்‘ என பாராட்டினார் காந்தி.

குறிப்பிட்ட சமூகத்தினரை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த நுழைவைத் தாங்க முடியாமல், மீனாட்சி கோவிலை விட்டு வெளியேறி விட்டாள் என்று கூறி, மதுரை தமிழ்ச்சங்கம் சாலையில் நடேசய்யர் பங்களாவில் மீனாட்சி கோவில் அமைத்து அங்கு பூசையும் நடத்தியுள்ளனர். 1945 வரை இக்கோவிலில் பூசை நீடித்து பிறகு சிதைந்து போனது. பின்னர் பழையபடி மீனாட்சியம்மன் கோவிலுக்கே திரும்பியுள்ளார்கள் அங்கிருந்த அர்ச்சகர்கள்.

சித்திரைத் திருவிழா உட்பட பல்வேறு நிகழ்வுகளிலும் குவியும் கூட்டத்திற்கு தெரியுமா கோவிலுக்குள் சிலர் நுழைவதற்கே இருந்த சமூகத் தடைகள் ? என்ற கேள்வியுடன் முடிக்கிறார் மணா.

புத்தகத்தின் இந்தக் கட்டுரை ஒரு சோறுதான். இது ஒன்று போதாதா...? சரித்திரங்கள் அறியப்பட வேண்டியதன் அவசியத்தையும், வரலாற்றின் பக்கங்கள் நீர்த்துவிடாமலிருக்க நாம் சமகால நிகழ்வுகளை பதிவிட்டு பகிர்ந்து கொள்வதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள....



- பொன்.வாசுதேவன்

31 comments:

  1. வரலாற்று கட்டுரை இன்றைய காலத்தில் படிப்பதற்கு சலிப்பை ஏற்படுத்தும் என்றாலும் அவைகள் நமக்கு சொல்லும் வரலாற்று உண்மைகள் எத்தனை எத்தனை! இந்த பதிவும் பல்வேறு நிகழ்வுகளை அலசியுள்ளது.

    நல்ல தொகுப்பு நண்பா!

    ReplyDelete
  2. அண்ணா நல்ல வரலாற்றுப் பதிவு..

    ReplyDelete
  3. அன்பின் அகநாழிகை,

    புத்தகப்பட்டியல் போட்டிக்கான பரிசினை அனுப்பி வைக்க தங்களது முகவரி தேவைப்படுகிறது. என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் தன்யனாவேன்.

    மிக்க அன்புடன்,
    செல்வேந்திரன்.
    k.selventhiran@gmail.com

    ReplyDelete
  4. //நாம் வாழ்ந்த காலத்தையும் நமக்கு முன் வாழ்ந்தோரின் வாழ்க்கை முறையையும் எந்த விருப்பு வெறுப்புகளுமற்று பதிவு செய்ய வேண்டியது அவசியம்.//
    இது நமக்கும் நாளை தலைமுறைக்கு உகந்தது

    பல நிகழ்வுகளை அரியவைத்த பதிவு நண்பரே.

    ReplyDelete
  5. அருமையான பதிவு நண்பா.. ஒரே ஒரு கட்டுரையின் துணையோடு மொத்த புத்தகத்தின் மதீப்பீட்டையும் கண்முன்னே கொண்டு வந்துள்ளீர்கள்..

    //வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட ‘அலறியபடி ஓடிவரும் நிர்வாணச் சிறுமி‘யின் புகைப்படம் நமக்குள் நிகழ்த்தும் உணர்வுப் பெருக்குகள் எத்தகையது. //


    ஊடகத்தின் பங்கு மிக முக்கியம்.. நிருபர் எடுத்த ஆபிகான் சிறுமியின் படத்தையும்.. குஜராத் கலவரத்தில் கைகூப்பி நிற்கும் மனிதனின் படத்தையும் யாரால் மறக்கு முடியும்.. ஆனால் அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து வரலாடரி பிழை இன்றி பதிவு செய்தல் முக்கியம்..

    எனக்கு தெரியாத பல எழுத்தாளர்களைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.. நன்றி..

    எங்கள் ஊரில் இப்படி ஒரு பிரச்சினை இருப்பது எனக்கே இப்போதுதான் தெரியும்.. படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது புத்தகம்.. நல்ல அறிமுகம்.. பகிர்வுக்கு நன்றி நண்பா..

    ReplyDelete
  6. வரலாற்று பதிவு மிகவும் விரும்பி படித்தேன்.
    நாடார்கள் கோயிலுக்குள் செல்ல கூடாது என்று ஒரு நிலை இருந்தது
    எனக்கு ஆரம்பதில் தெரியாது
    கொஞ்ச நாள் முன்னாடிதான் தெறியும்
    அதன் பின் தீட்சண்யாவின் ஒரு கட்டுரை தொகுப்பு படித்த போது அதை முழுமையாக தெரிந்து கொண்டேன். நீங்களும் ஒரு புத்தகத்திவாயிலாக வரலாற்றை குறிப்பிட்டுள்ளீர்கள். நல்ல அலசல்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு அக நாழிகை. நல்லதோர் அறிமுகத்திற்கு நன்றி. புத்தக கண்காட்சியில் ஏற்கனவே இரண்டு புத்தகங்கள் மணாவினுடையதை வாங்கி விட்டதால் சாய்ஸ்ல விட்டுட்டேன். உங்க பதிவைப் படிச்ச உடனே அய்யய்யோன்னு ஆயிடுச்சு.

    இந்த பாவம் உங்களைச் சும்மா விடாது.

    ReplyDelete
  8. அண்ணே!
    பார்ப்பனர்கள் தான் இந்துக்கள்!
    அவனுங்க கோவில கட்டி எல்லாத்தையும் தான் முதல்ல வர சொன்னாங்க!
    ஆனா பாருங்க பாட்படும் சனமாக ஹரிசனங்கள் பாப்பானுகளுக்கு காசு போட முடியல! அதனால அவனுகல உள்ளே விடாதிங்கன்னு சொல்லிட்டானுங்க பாப்பானுங்க!

    இது தான் ஆதி கதை!

    ReplyDelete
  9. Dear பொன்.வாசுதேவன்,

    ""மதுரை நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் வைத்தியநாதய்யர் தலைமையில், அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதம மந்திரியான ராஜாஜி வழிகாட்டுதலுடனும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவுடனும் ஆலயப் பிரவேசம் நடத்த ஆலோசிக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாக அதிகாரியும் ‘பச்சைக்கொடி‘ காட்டினார்.""

    I strongl;y belive that the true hisory ios twisted in this book that is DONE as usual by the ELITE to claim credit--once it has been accepted by the society...

    I urge you to DO complete reserach thoroughly. Nadars were untouchables UNTIL Periya asked them to cook meals for a big meeting (Maa-Naadu).

    The names you have mentioned except Kakkan were ALL know anti-nadars and scheduled castes. Do you knwo what sort of comments they made against Nadars and Scs they are WELL_documented. It is really funny that people take CREDIT of the work by Periyar.

    What was Kakkan doing? He was a Vaay-illa-poochi. he just talk against the elite community. This situation is similar to Vaiko's position as he JUST CAN NOT open his mouth against Brahminism???

    I hope yopu would be honest to puibish this. Request to let you welcome the flowers and flames!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் - விகடன் குட் ப்ளாக்சில் நம் மூன்று பேரின் படைப்புகளும் ஒரே நேரத்தில்.. அகநாழிகை - சொர்க்கத்தின் வாசல்கள்.. ஷீ-நிசி - மின்சார (ரயில்) தேவதை.. கார்த்தி - சிகரெட் - தனக்குத் தானே கொள்ளி..

    ReplyDelete
  11. Good Postings Keep update.
    pls see my tamil postings and give me some valuable feedbacks.then only i can rectify.
    GSPtamilThank You

    ReplyDelete
  12. தொகுப்பு மிகவும் அழகாக உள்ளது.......!!! அருமை....!! வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  13. //வால்பையன் said...
    அண்ணே!
    பார்ப்பனர்கள் தான் இந்துக்கள்!
    அவனுங்க கோவில கட்டி எல்லாத்தையும் தான் முதல்ல வர சொன்னாங்க!
    ஆனா பாருங்க பாட்படும் சனமாக ஹரிசனங்கள் பாப்பானுகளுக்கு காசு போட முடியல! அதனால அவனுகல உள்ளே விடாதிங்கன்னு சொல்லிட்டானுங்க பாப்பானுங்க!

    இது தான் ஆதி கதை!///

    ஒருவகையில் இது நியாமான உண்மைதான்...... ஆனால் உள்விஷயங்கள் கொஞ்சம் வேறு......!!!

    ReplyDelete
  14. வால்பையன் said...
    அண்ணே!
    பார்ப்பனர்கள் தான் இந்துக்கள்!
    அவனுங்க கோவில கட்டி....
    Vall paiyan,
    Ungaluku yaaru sonnanga intha pudhukathai ? Parpanarkal than ella koilaym kattinarkal enru.
    Thamilakathai aanda mannarkal than kattinaarkal...Parpanarkal athil velai paartharkal,parkirarkal..parparkal...Avvalave..
    Anyway Hats off to Rajaji,Pasumpon Thevar & U.Ve.Sa.Iyer...

    ReplyDelete
  15. அனானி அண்ணே!
    நான் ஒரு வீடு கட்டியிருக்கேன்னு சொன்னா!
    நீ கட்டினியா கொத்தனார் கட்டினாரான்னு கேக்குற மாதிரி இருக்கு!


    நீங்க சொல்வது நிகழ்காலம்!

    நான் சொல்றது ஆதிகாலம்

    ஆரியர்கள் வரும் போது கடவுளை கொண்டு வந்தாங்க!

    அதை பரப்பினார்கள், அவர்கள் வேதம்னு ஒண்ணு இருக்குன்னு பூச்சி காட்டி சாமி கும்பிட்டே ஆகணும்னு சொல்லி கோவில் கட்டவச்சான்.

    அதன் பிறகு நான் சொன்ன கதை!
    வேலை என்பது இப்போ தான் ஆரம்பத்தில் அவர்கள் தான் ராஜ குரு!
    அதே மாதிரி ஒவ்வொரு ஊரிலும் ஏமாற்றி பிழைத்தார்கள்

    ReplyDelete
  16. நல்லதோரு வரலாற்றுப் பதிவு....
    அடுத்த பதிவுக்கு வெயிட்ட்ங் வாசு...

    ReplyDelete
  17. ஓ வரலாற்று பதிவா... யூத்புல் விகடன் வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. நல்லதொரு வரலாற்று அசல் நண்பரே!..

    ReplyDelete
  19. நல்ல வரலாற்றுப் பதிவு!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  20. நண்பரே!
    முக்கியமான பதிவு.
    வரலாற்றை மறந்து விடுவது மக்கள் இயல்பு, அதைத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டியது நமது கடமை என வரலாற்ராசிரியர் எரிக் ஹோஸ்வாம் சொல்வார். அதைச் செய்திருக்கிறீர்கள். சொல்லிய முறையும், ம்நடையும் சிறப்பு. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    ReplyDelete
  21. இந்த கட்டுரையின் மூலம் ஆராயப்பட வேண்டியவை நிறைய இருக்கிறது..
    (பின்னூட்டங்களில் வந்த கருத்துக்களும் சரி,கட்டுரையில் இருக்கும் சில கருத்துக்களும் சரி ,வாசிப்பவருக்கு சில முரண்பாடுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பது ஏற்புடையதே..)
    நல்லதொரு வரலாற்று பதிவு..

    ReplyDelete
  22. மாதவராஜ் said...
    நண்பரே!
    முக்கியமான பதிவு.
    வரலாற்றை மறந்து விடுவது மக்கள் இயல்பு, அதைத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டியது நமது கடமை என வரலாற்ராசிரியர் எரிக் ஹோஸ்வாம் சொல்வார். அதைச் செய்திருக்கிறீர்கள். சொல்லிய முறையும், ம்நடையும் சிறப்பு. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.//

    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  23. எப்படியோ எங்க ஊர் கோவிலப்பற்றி போட்டுடீங்க.நன்றி அகநாழிகை சார்

    ReplyDelete
  24. அக நாழிகைன்னா என்ன அர்த்தம் வாசு...?

    ReplyDelete
  25. எனக்குத் தெரிந்து வைக்கம் நிகழ்வுதான்!!! இப்பொழுதுதான் நம் மாநிலத்திலேயே இம்மாதிரி நிகழ்ந்திருப்பது தெரிகிறது!!!

    கடவுள்கள் மனிதத்தினரை இனம் பிரிக்கிறாரா? இல்லை மனிதனே பிரிக்கிறானா? என்றால் யார் கடவுள்?

    அன்று வரக்கூடாதென்று சொன்னவர்கள் கடவுள்களாகி கட்டளையிட்டுவிட்டார்களோ என்னவோ? (சும்மா சும்மா)

    சரித்திரம் குறித்த உங்கள் எழுத்தை விரும்பிப் படித்தேன்.

    ReplyDelete
  26. வால்பையன் said...
    அனானி அண்ணே!
    நான் ஒரு வீடு கட்டியிருக்கேன்னு சொன்னா!
    நீ கட்டினியா கொத்தனார் கட்டினாரான்னு கேக்குற மாதிரி இருக்கு!


    April 22, 2009
    Dear Vaal Paiyan,
    Katiyatharkum kattavaiththatharkaum verupadu irukka illaiya? Thanjai periya koilai kattiyathu Rajaraja cholan(Kavanikavum nan avaroda kothanar enro avarathu pugal petra sirpi enro kooravillai).Avar koyilai kattiyatharku aayiram karanam,unthuthal irukkalam, aanal kattiyathu Rajaraja chalon thane !
    so, parpanarkal koilkalai kattinarkal enru kooruvathu varalatru thavaru.

    ReplyDelete
  27. அண்ணே நானும் பார்ப்பனர்கள் கோவிலை கட்டினார்கள் என்று சொல்லவரவில்லை!

    இந்து மத்ததை கொண்டு வந்ததே பார்பனர்கள் தான் என்று சொல்கிறேன்!

    அவர்களின் உத்திரவின் பேரில் மன்னர்கள் கோவிலை கட்டினார்கள்!

    ஆனால் பாருங்களேன் கோவில் கட்டிய ஒரு மன்னனும் ஆயிரம் வருடம் வாழவில்லை பின் எதற்கு கோவில் என்று கேட்கவும் அவனுக்கு அறிவில்லை!

    ReplyDelete
  28. Dear Vaalpaiyan,
    Muthalil ippadithan Sonneerkal..
    வால்பையன் said...
    அண்ணே!
    பார்ப்பனர்கள் தான் இந்துக்கள்!
    அவனுங்க கோவில கட்டி எல்லாத்தையும் தான் முதல்ல வர சொன்னாங்க!
    Aanal ippothu parpanarkal katiyathaka solla varavillai enkireerkal.Eppadio kadasiyil accept panniyatharku nanri.

    Muthalil PON.Vasudevanukku nanri sollavendum. Oru varaltru karaiyaiyum Akkaraiyaipoki arijanankalaiyum,nadarkalaiyum koiluku alaithu senru Aalaya piravesam seyya vaitha moovari(Rajaji,Pasumpon Devar & U.VE.Saminatha iyer )patriyum ezhuthiyatharku..

    Nanri Pon.Vasudevan...

    ReplyDelete
  29. article arumai
    visit my site
    vaalpaiyyan.blogspot.com

    ReplyDelete
  30. article arumai
    visit my site
    vaalpaiyyan.blogspot.com

    ReplyDelete
  31. காந்தி யாரை ஹரிசணன் என்றான் ?பலம் perum வரலாட்டுப் பெருமை உடைய மள்ளர் குலத்தவனையும் சொன்னானா ?

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname