Showing posts with label இந்து திருமண சட்டம். Show all posts
Showing posts with label இந்து திருமண சட்டம். Show all posts

Sunday, November 18, 2012

தர்மபுரி கலவரத்திற்கு பின்ணணி குழந்தைத் திருமணமா?


“சட்ட விரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?” தலைப்பில் தர்மபுரி சாதிக் கலவரத்தைப் பற்றி தோழர் அருள் என்பவர் எழுதி இருந்தார்.

பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ் இவற்றை எல்லாம் ஆதாரமாக முன்வைத்து ‘இளவரசன்‘ என்ற அந்த தலித் இளைஞருக்கு 19 வயதுதான் ஆகிறது என்றும், அதனால் சட்டப்படி திருமணத்திற்கு உகந்த வயது அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார். அதுவுமல்லாமல், சட்ட விரோத குழந்தைத் திருமணத்திற்கு எல்லோரும் வக்காலத்து வாங்குவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

The Prohibition of Child Marriage Act, 2006,
Section 2 (a): "child" means a person who, if a male, has not completed twenty-one years of age, and if a female, has not completed eighteen years of age.

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிற அளவுக்கு பக்குவமற்ற வயது என்பதால் இதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும், அறிவியல் ரீதியாக உடல் நலம் சார்ந்து தகுதியடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும், இப்படியான திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

உண்மையில் தர்மபுரி சாதிக் கலவரத்திற்கு காரணமான திருமணத்தில் குழந்தைத் திருமண தடைச்சட்டம் பிரயோகிக்க பொருந்தக் கூடியதல்ல. நடந்து முடிந்து விட்ட ஒரு திருமணத்தைப் பொறுத்த வரையில் திருமணத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் இந்துக்கள் என்பதால், இந்து திருமணச் சட்டம் 1955 மட்டுமே பொருந்தத்தக்கது. மேற்படி திருமணம் செல்லத் தக்கதா, தவிர்த்தகு திருமணமா, செல்லா நிலையதா என்பதை இந்து திருமணச் சட்டத்தின் வாயிலாகவே நிலை நிறுத்த முடியும்.

இந்து திருமணத்திற்கான ஐந்து கட்டாய அம்சங்களை இந்து திருமணச் சட்டம் வரையறுத்துள்ளது. அதற்குட்பட்டே இந்து திருமணங்கள் நடைபெற வேண்டும். அதில் முக்கியமான ஒன்று வயதைப் பற்றியது.

The Hindu Marriage Act, 1955 Section 5 (iii) the bridegroom has completed the age of eighteen years and the bride, the age of fifteen years at the time of marriage.

அதாவது ஆணுக்கு 18 வயதும், பெண்ணுக்கு 15 வயதும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இந்த சட்டம் 1.10.78 ல், ஆணுக்கு 21 வயது என்றும், பெண்ணுக்கு 18 வயது என்றும் திருத்தம் செய்யப்பட்டது.

ஆக இந்து திருமண சட்டத்தின்படி ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் ஆகியிருக்க வேண்டும் என்பது கட்டாயம்தான். அதே சமயம்
மேற்குறிப்பிட்ட வயதுக்குள்ளாக இருக்கும் இருவர் திருமணம் செய்து கொண்டால் அது செல்லத்தகாத திருமணமா என்றால் இல்லை என்கிறது அதே இந்து திருமண சட்டம், 1955, பிரிவு 13 (2) (iv).

இந்து திருமண சட்டம், 1955, பிரிவு 13 என்பது விவாகரத்துக்கானது.
The Hindu Marriage Act, 1955
Section 13 (2) (iv) that her marriage (whether consummated or not) was solemnized before she attained the age of fifteen years and she has repudiated the marriage after attaining that age but before attaining the age of eighteen years.

உரிய வயதுக்கு முன்பாக ஒரு திருமணம் நடைபெற்று விட்டால் அந்த திருமணம் செல்லத் தகாதது அல்ல என்றாகி விடாது. இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 5 (iii) ல் வயது திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், பிரிவு 13(2) (iv) என்பதில் சட்டத் திருத்தம் செய்யப்படவில்லை.

இந்த வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தகுதியானவர்கள் என்பது வரையறுக்கப்பட்டது. அப்படி செய்து கொண்டால் அது செல்லத் தக்கதா, செல்லத் தகாததா என்றால்.. செல்லத்தக்க திருமணம்தான் என்கிறது சட்டம். அப்படி மணம் செய்து கொண்டவர்கள் உரிய வயதை அடையும் போது, அந்த திருமணத்தை தொடரலாமா, ரத்து செய்யலாமா என்ற முடிவை எடுக்கிற உரிமை உண்டு.

மாண்பமை நீதிபதி நாகமுத்து தலைமையிலான முழு அமர்வு T.Sivakumar vs The Inspector of Police, Thiruvallur Town Police Station and others என்ற வழக்கிலும், V.Premakumari vs M.Palani என்ற வழக்கில் மாண்பமை நீதிபதி அக்பர் அலி அவர்களாலும் என இரண்டு முக்கிய வழக்குகளில் இதற்கான தீர்ப்பை சென்னை உயர் நீதி மன்றம் வழங்கியிருக்கிறது.

மேற்படி இரண்டு வழக்குகளுமே, Prohibition of Child Marriage Act, 2006 பிரிவு 2 (e) & 3 ஆகியவற்றின் கீழ் உரிய வயதடையாததால் திருமணத்தை ரத்து செய்யக் கோரியும், தண்டனைக்குரிய குற்றம் எனவும் தொடரப்பட்ட வழக்குகள் என்பது முக்கியமானது.

தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்திற்கு முழுக்க முழுக்க காரணம் சாதி வெறியும், அதையொட்டிய முன் விரோதமும்தான். இதை எத்தனை விதமாக பூசி மெழுகினாலும், உண்மை இதுதான்.



Comments system

Disqus Shortname