Sunday, November 4, 2018

கல்விளக்கு
துயர நதியில் பாய்ந்து தனிமையில் கரையொதுங்கிய மனமொன்று கரையோர மரத்தைத் தெப்பமாக்கியபடி அதன் நிழலில் தஞ்சமடைந்தது. வாழ்க்கைக்கும் உறவுக்கும் இடையே பரந்துகிடக்கும் எல்லையற்ற சமவெளிகளின் விரிவுகளை கண்கள் நிறைக்க நிறைக்க தரிசித்து அதன் பூரண வெளிகளின் ஆற்றுதலில் தன் அன்பைப் பொழிகிறது.
உனக்குள்தான் வாழ்வு எத்தனை நொய்ந்த தருணங்களைத் தந்திருக்கிறது...கணந்தோறும் பற்றியெரிந்தபடி, புகைந்து காற்றில் பரவியபடி உன் வாழ்க்கையை இவ்வளவு காலம் நீ கடத்தி வந்திருக்கிறாய். வாழ்வின் உள் ரகசியங்களைப் பேசும்போதும், எழுதும்போதும் அதன் உவப்பற்ற வெளிப்பாடுகள் உள்கடத்திக்கொள்கிறேன்.
பரிச்சயமும் அதன் பின்னான புரிதல்களும் பரிச்சயமற்ற உணர்வு ஸ்பரிசங்களுமான சில மணி நேர, சில நாட்கள் எனினும் ஒட்டுமொத்த வாழ்வுக்குமானவை அவை. ஒரு தசாப்தத்துக்கானவை அவை. எந்தவொரு அடையாளத்துக்குள்ளும் அவற்றை அடைத்துவிட முடியாது. இறந்த காலத்திலிருந்து நிகழ்காலத்தில் வாழ்ந்துவிடுதவற்கான எத்தனிப்புகள் சட்டென விண்ணிலிருந்து பாய்ந்தொளிரும் ஒரு விண்கல்லைப்போல தோன்றி உனக்குள் சுடர்ந்தது. சமூகத்தின் ஒழுங்குகளும், நிர்ப்பந்தங்களும், தர்க்கங்களும் ஒப்புக்கொள்ளாத இவற்றில்தான் வாழ்க்கையின் புதிய பரிமாணங்கள் இருக்கிறதென்றால் அதில் நியதி இருக்கத்தான் செய்கிறது.
வாஞ்சையோடு உன் கைகளைப் பற்றிக்கொண்டு அதன் நரம்புகளின் ஊடாக உன்னை உள் கடத்திக்கொண்டு உன்னுள்ளிருந்த கங்குகளை அணைக்க முயல்கிறேன். நம்மைத் தீய்த்து நெருக்குகிறது அந்த நெருப்பு. அந்தப் புகையிலிருந்து தினமொரு சித்திரமாய் எழுந்துகொண்டிருக்கிறோம்.
பேசுவதும், எழுதுவதும், அழுவதும் சிரிப்பதுமாக நகரும் நதியைப்போல வாழ்வெனும் பெரும் சமுத்திரத்தை நோக்கியதான மெல்லிய நகர்தல் அது.
சூழலின் நிர்ப்பந்தத்தால் இரு வேறு முனைகளில் இருந்தபடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அவரவரிடமிருக்கும் அன்பின் நூற்கண்டுகளை முனை பற்றியபடி உருட்டிவிட்டுக்கொண்டிருக்கும் இந்த வாழ்வுதான் எவ்வளவு இனிமையானது. புழங்கும் உறவுகளும் புதிரான உறவுகளும் இணையும் புள்ளி அது. நமக்குள் நம்மைக் கண்டுகொள்ளும் இந்த யத்தனிப்புகளில் பிரதிபலிக்கும் கற்பித வெளியில் கண்ணாடியாக ஒருவரை ஒருவர் பிரதிபலித்துக்கொள்கிறோம். ஒருவரிடம் ஒருவரை ஒப்புக்கொடுக்கிறோம்.
எப்பொழுதும் அச்சத்தையும் பாதுகாப்பையும் ஒருசேர வழங்கியபடியிருக்கும் நிராகரிக்க முடியாமல் ஏற்றுக்கொண்ட சுய வாழ்க்கையின் கீறல்களிலிருந்து ஆசுவாசம்கொண்டு அதன் தழும்புகளைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருக்கிறோம். மீற விரும்பினாலும் பிணைத்தபடியிருக்கும் சங்கிலிகளைத் துண்டித்துக்கொள்ள வலுவின்றி அதன் எல்லைகளுக்குள் துவண்டுகொண்டிருக்கிறது மனம்.
சூர்ப்பனகையின் நிறைவுறாக் காமமாக ஆழ்கிணற்றுப் பாசியாக, புன்னை மரத்தடியில் நடப்பட்டு முழுமையான வளர்ச்சியடையாத செம்பருத்திச் செடியைப்போல உனக்குள்ளும் மண்டிக் கிடக்கிறது கனவுகள். எங்கோ உருவாகிக் கிடந்து மழை வெயிலில் காய்ந்து சிதைந்து உருமாறி கையில் கிடைத்துக் கொண்டுவரப்பட்டு கல்விளக்காக மாறி இன்று வறளாத நேசத்தின் அன்பில் தினம்தோறும் கழுவித் துடைத்து ஏற்றப்படும் விளக்கைப்போல பிரகாசிக்கிறது வாழ்க்கை. அதன் வெளிச்சத்தின் பரவலில் அடர்த்தியில் குதூகலிக்கிறது அன்றாடங்கள்.

•• கனவும் நனவும் குழைந்த வாழ்க்கை ••

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname