Showing posts with label சு.வேணுகோபால். Show all posts
Showing posts with label சு.வேணுகோபால். Show all posts

Sunday, May 12, 2013

சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’



நேற்று சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்‘ சிறுகதைத் தொகுப்பை நேற்றிரவு வாசித்தேன். படைப்பு மனநிலை என்பதே சுயவதைதான். வலியிருக்கிறவர்களால் மட்டுமே ஆகச்சிறந்த படைப்புகளை வெளிக் கொணர முடிகிறது. சந்தோஷத்தை வாசிக்கிறதுக்கும் வலியைப் பற்றி வாசிப்பதுக்குமான மனநிலை வெவ்வேறானது. இதில் வாழ்வின் வலிகளைப் பற்றி வாசிப்பதும், அத்துயரத்தினுள்ளாழ்ந்து போவதுமே எப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது. 

எப்போதும் வாழ்க்கையின் குரூரமானப் பக்கங்களை துயர மனநிலையிலான எழுத்துகள்தான் சரியான முறையில் வெளிப்படுத்துகின்றன. சந்தோஷத்தைக் கொண்டாட பலருண்டு. வலியைப் பகிர்ந்து கொள்ள பெரும்பாலும் யாரும் இருப்பதில்லை. சாய்ந்து கொள்ள ஒரு வெற்றுச்சுவராயினும் வலிமிகுந்த நேரத்தில் அதைவிட ஆறுதலான வேறொன்று இருப்பதில்லை.. 

நெஞ்சைக் கனக்க வைப்பதும் கசியச்செய்வதுமான எழுத்துகளின் மீதான ஈடுபாடு என்பது எப்போதும் குறையாதது. அழுவதிலும் நெகிழ்வதிலும்தான் வாழ்தலுக்கான கணங்கள் முழுமை பெறுகிறது. அத்தகைய புனைவுகளில்தான் வாழ்வின் இரகசியங்கள் பொதிந்திருப்பதாய் உணர்கிறேன். புனைவுகளின் மாந்தர்களின் துயரங்களிலும், வாழ்வனுபவங்களிலும் பயணிக்கையில் என்னுடைய இந்த ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறதுக்கான அனுபவத்தை ஒத்திருக்கிறது அது. அது கிட்டத்தட்ட கூடுவிட்டுக் கூடு பாய்கிறதைப் போலானது.

எப்போதுமே துயரையும் துயர்க்காரணங்களையும் நுட்பமான முறையில் விவரிப்பவை சு.வேணுகோபாலின் படைப்புகள். நிராதரவான நிலை, கையறு தருணம் என நம் அன்றாட வாழ்வின் பல்வேறு கட்டங்களில், உறவுகளிலும், பழகும் மனிதர்களிடமும், பிரியம் கொள்கிறவர்களிடமும் காண நேர்கிற போலித்தனம், சுயநலம் போன்றவற்றை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தைச் சொல்லி நமக்குள்ளாக அதே உணர்வுகளைக் கடத்துகிறார் சு.வேணுகோபால். அமைதியான, எளிமையான தன் எழுத்துக்களால் மட்டுமே தன் ஆளுமையை தமக்குள் நிறைக்கிற நண்பர் சு.வேணுகோபால் அவசியம் வாசிக்கப்பட வேண்டியவர்களில் ஒருவர்.



‘ஒரு துளி துயரம்‘ (சிறுகதைகள்)
வெளியீடு : தமிழினி பதிப்பகம்
ரூ.65/-



சு.வேணுகோபாலின் பிற படைப்புகள் :

1. நுண்வெளி கிரகணங்கள் (நாவல்)
2. பூமிக்குள் ஓடுகிறது நதி (சிறுகதைகள்)
3. களவு போகும் புரவிகள் (சிறுகதைகள்)
4. கூந்தப்பனை (சிறுகதைகள்)
5. வெண்ணிலை (சிறுகதைகள்)
6. திசையெல்லாம் நெருஞ்சி (குறுநாவல்கள்)




ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள NCBH - தமிழினி பதிப்பகங்களின் புத்தகக் கடையில் சு.வேணுகோபாலின் புத்தகங்கள் கிடைக்கும்.



Comments system

Disqus Shortname