Saturday, June 20, 2009

விதியின் கையில்நம் இதயம் கடவுள், மகிழ்ச்சி, இன்பம், துன்பம், பக்தி, பயம் என்பதான முடிவில்லா உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது. அமைதியான மனம் இதுதான் நம் எல்லோரின் இலக்கும். முழு ஈடுபாடில்லாமல் நாம் செய்கிற எந்த ஒரு செயலும் அபத்தமானதாக தவறான விளைவுகளை அளிக்கக்கூடியதாக ஆகிவிடுகிறது.மன அமைதியைப் பெற்றவர்களின் கதைகள் பற்றி நாம் சிலரைதான் வரலாறுகளிலிருந்து உதாரணமாகப் பெற்றிருக்கிறோம். இதற்கு காரணம் வரலாறு வன்முறை பற்றி மட்டுமே பெரும்பாலும் பதிவு செய்துள்ளது. அமைதியைப் பற்றிய பேச்சு அதிகம் இல்லை. அதை பதிவு செய்வது கடினம். மனதை வென்றவர்கள் நம்முடைய முட்டாள்தனமான உலகில் பிரவேசிப்பதை, பிரபலமாவதை விரும்புவதில்லை. போலிகளுக்கு அப்படியில்லை. தங்கள் வாழ்க்கைத் தொழிலாக சன்யாசத்தையும், சமூக சேவையையும் வைத்துக் கொள்வதால் தான் அவர்கள் மக்களின் பார்வைக்கு பிரபலமாக தெரிகிறார்கள்.வாழ்க்கையை நதியைப் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஓடுகிற நதிபோல என்றும் சுறுசுறுப்பாக இயங்குகின்ற மனம் இருந்தால் போதும் தொடர்ச்சியான இயக்கம் எந்த தனி விஷயத்தின் மீது கவனம் குவித்து நடக்கின்றதோ அதன் பலன் நமக்கு மகிழ்வைத் தருவதாகவே அமையும்.வார்த்தைகளும் மௌனங்களும் நம் வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. மௌனமாக இருக்க வேண்டிய இடத்தில் பேசுபவராக இருப்பது எவ்வளவு கடினம் என்பது யோசித்துப் பார்த்தால் புரியும். மௌனத்தை விளக்க மௌனத்தால் மட்டுமே முடியும்.முல்லா நஸ்ருதீன் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருமுறை முல்லாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டிருந்தது. பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தும் அதை நிரூபிக்க ஆதாரமில்லாமல் இருந்தது. முல்லாவின் வழக்கறிஞர் "நீ அமைதியாக இரு. ஒரு வார்த்தை கூட பேசாதே. மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

முல்லாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே ஒரு முட்டாளான மனிதன்.அமைதியாக இருந்ததால் புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார்.வழக்கை விசாரித்து முடித்த நீதிபதி "சாட்சிகள் இல்லாததால் உன் மீது உள்ள குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்" என்றார்.அதுவரை அமைதியாக இருந்த முல்லா வழக்கு வெற்றியாக முடிந்துவிட்ட சந்தோஷத்தில் "எந்த வீட்டுக்கு நான் போவது யுவர் ஹானர்" என்று கூறிவிட்டார்.ஒரு வார்த்தை போதும் நம் மனத்தில் என்ன இருக்கிறது என்பதை அது காட்டிக் கொடுத்து விடும். ஆனால் அமைதியாக இருக்கும் நேரங்களில் நம் உள்மனக் குரங்கு எங்கு தாவிக் கொண்டிருந்தாலும் கண்டறிவது கடினம்தான்.விதை புதைந்து வெளியே முளைக்கின்ற இளம் தளிர் போல, எதையும் ஏற்றுக் கொள்கின்ற மண் போல நாம் இருக்க வேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிற நாம் ஒரு விஷயம் பற்றி விளக்க முயல்வது ஆபத்தானது. எனவே கற்கும் போது நாம் கவனிப்பவர்களாக இருக்க வேண்டும்.இரண்டு எதிரான செயல்களை ஒரே நேரத்தில் செய்ய நம்மால் முடிவதில்லை. கற்கும் வேளையில் கற்றுக் கொள்வது மட்டுமே நம் இலக்காக இருக்க வேண்டும். மௌனமாக இருக்க கற்றுக் கொள்ளும் போது மனம் அமைதி உணர்வைப் பெறுகிறது.எப்படிக் கற்றுக் கொள்வது ? அமைதியாக கூர்ந்து கவனித்தல் மட்டுமே போதுமானது. எந்த விஷயத்தைப் பற்றியும் முன் கூட்டியே கருத்துக்களை வளர்த்துக் கொள்ளாமல் திறந்த மனதுடன் அதை அணுகுவோம். சிந்திக்காமல் ஒரு விஷயத்தை அது எப்படித் தோன்றுகிறதோ, அப்படியே அணுகுவோம்.இதுவரை தவறான அணுகுமுறையினால் நம் வாழ்க்கை அலைக்கழிக்கப்பட்டிருக்கலாம். எதிர்காலத்தில் நம் வாழ்க்கைப் போக்கு எப்படி அமைய வேண்டும். என்பது இப்போதே தீர்மானிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். திட்டமிடாமல் செய்யும் எந்த ஒரு காரியமும் முழுமையடைவதில்லை. நம்முடைய கருத்துக்கள் சரியாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக் காரணம் திட்டமிடாமல் செயல்படத் தொடங்குவதுதான். நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் அதன் விழைவுகளுக்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்.நம்மை நாம் அறிய வேண்டியது அவசியம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இது எப்படி நமக்குத் தோன்றுகிறது ? யாரோ நமக்கு சொல்லியிருந்த ஒரு விஷயத்தின் மேல் ஏற்பட்ட பற்று நம்மை நாம் அறிவது அவசியம் என உணரத் தூண்டுகிறது. இதற்கு கற்கும் மனோபாவம் தேவை. கற்றுக்கொள்வதென்பது அறிவு ஜீவிகளுக்கான விஷயம் மட்டுமல்ல, எல்லோருக்குமே பொதுவானது.எப்போது கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோமோ அப்பொழுதே நாம் மாற்றத்திற்கு தயாராகி விட்டோம் என்று பொருள். "நான் மாற விரும்பவில்லை அல்லது ஏன் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்" இது நம்மில் பலருக்கும் எழக்கூடிய கேள்வி. சமூகத்தில் நம்மைப் பற்றி ஏற்படுத்தியிருக்கும் அபிப்ராயத்தை அவ்வளவு எளிதில் மாற்றி விட நாம் துணிவதில்லை. நேற்று வரை வேட்டி சட்டையில் வந்தவர் திடீரென ஜீன்ஸ் அணிந்து வந்தால் என்ன நடக்கும் ? பெரும்பாலும் அவர்கள் கேலிக்குரியவராக ஆக்கப்படுவார்கள். ஆடை விஷயத்திலேயே சகிப்புத்தன்மையற்ற சமூகத்தில் வாழும் நாம் மாற்றம் என்று வரும் போது தயங்குவது இயல்பு. ஆனால் அதற்காக மாற்றத்தை மறுத்து ஒதுக்குவது இயல்பு. ஆனால் அதுக்காக மாற்றத்தை மறுத்து ஒதுக்கிவிட முடியுமா ?ஆடையை அணிந்தறியாதவர் உலகில் ஆடையணிபவர் மூடனாகத் தான் சித்தரிக்கப்படுவான். இது இயற்கையானது ஆடை எப்படி நாகரிகத்தின் குறியீடாக அமைகிறதோ அதுபோல மாற்றமும் நல்லதற்குத்தான்.புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிற போது நம் பழக்க வழக்கங்களும் அதற்கேற்ப மாறுபடுகிறது. கலாச்சார வேர்களை விட்டு விலகி மாறுவது அவ்வளவு எளிதல்ல. மாற்றம் சிறிது சிறிதாகத்தான் நிகழ்கிறது. முன்பெல்லாம் புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்றெண்ணி அதைத் தவிர்த்தவர்கள் உண்டு. ஆனால் இன்றைய நிலை என்ன? மாற்றத்தின் தாக்கம் சிறிது சிறிதாக நிகழ்ந்தாலும் ஒரு கட்டத்தில் இது தவிர்க்க முடியாதாகிவிடுகிறது.மன மாற்றம் தரும் வெற்றி குறித்து இந்த ஜப்பானிய கதை மூலம் புரிந்து கொள்ளலாம்.நொபுனகா என்ற ஜப்பானிய தளபதி எதிரியுடன் போர் புரிய ஆயத்தமானான்.

எதிரியின் படை அவனுடையதைவிட பத்து மடங்கு பெரியதாக இருந்தது. அதனால் அவனுடைய வீரர்களுக்கு தாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை ஏற்படவில்லை.போர்க்களத்திற்கு போகும் வழியில் நொபுனகாவும் வீரர்களும் ஷிண்டோ ஆலயத்தில் வழிபட்டார்கள்.அவர்களின் மன உணர்வை புரிந்து கொண்ட நொபுனகா, வழிபாடு முடிந்த பிறகு "பூவா தலையா போட்டுப் பார்ப்போம். தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம். பூ விழுந்தால் நாம் தோல்வி அடைவோம்" என்றான் நொபுனகா.

ஆலயத்தில் பிரார்த்தனை நடந்தது. முடிவில் தளபதி நாணயத்தை தூக்கிப் போட்டார். தலைவிழுந்தது.அவருடைய வீரர்கள் உற்சாகமாகப் போரிட்டு எதிர்ப்படையினரை வென்றார்கள்."விதியின் கைகளை மாற்றமுடியாது" என்றான் ஒரு வீரன்."நிச்சயமாக" என்றார் நொபுனகா இருபக்கங்களிலும் தலை உள்ள நாணயத்தைக் காட்டிக் கொண்டே.எந்த விஷயத்திற்கும் ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்வது நம் கைகளில் தான் இருக்கிறது... விதியின் கைகளில் அல்ல.- 'அகநாழிகை' பொன்.வாசுதேவன்


Tuesday, June 16, 2009

நூறு பேருக்கு நன்றி.. நன்றி.. நன்றி..

எழுதுபவனுக்கு தன் எழுத்தை வாசிக்கிறார்கள், கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஊக்கப்படுத்துகிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்பதையும்விட வேறென்ன சந்தோஷம் வாய்த்துவிட முடியும்.

எனது எழுத்துக்களை தொடர்ந்த வாசிப்பின் வாயிலாக ஊக்கப்படுத்தி மேன்மைப்படுத்தி வரும் அனைவருக்கும் என் அன்பும் வணக்கமும்….

followers2 copy

followers3 copy

Friday, June 12, 2009

வன்முறையும் வாழ்க்கையும்

scul வன்முறை உணர்வு நம்முள் எதன் காரணமாக நிகழ்கிறது?

வன்முறை என்றால் படுகொலை, வெடிகுண்டு, தீவிரவாதம் என்றெல்லாம் போகவேண்டியதில்லை. நாம் பேச வேண்டியது மனதுக்குள் அவ்வப்போது தோன்றும் தனி மனித வன்முறை பற்றி. பயம், சந்தோஷம், துக்கம் மற்றும் வன்முறை எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடைய வார்த்தைகள்.

நமக்குள்ளே ஒரு மிருகம் ஒளிந்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோமா?

நமக்குள்ளே மிருகமா ? ஆம். நமக்குள்ளே நம்மோடு இணைந்திருக்கும் அந்த மிருகத்தின் அவ்வப்போதைய வெளிப்படல்களில்தான் நம்மை அறிந்தும் அறியாமலும் சமூகத்திற்குள் அதிகம் புழங்கும் சராசரி ஆதிக்க மனோபாவமுடையவர்களாய், சமூக ஒழுங்கிலிருந்து பிறழ்ந்து நடந்து கொள்வோம்.

சரி, எப்போதெல்லாம் நமக்குள்ளிருக்கும் மிருகம் வெளித் தோன்றுகிறது ? சின்னச் சின்ன விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம். நீண்ட நேரம் பேருந்திற்கோ அல்லது இரயிலுக்கோ காத்திருந்து வராததினால், வீட்டிற்கு தாமதமாக வந்த எரிச்சலை மனைவியிடம் கோப முகம் காட்டி சிடுசிடுப்பதில், வெயில் நேரத்தில் ஏற்பட்ட அலைச்சலின் கோபத்தை நம் கீழ்பணிபுரியும் ஊழியர்களின் மேல் பிரயோகித்தலில், நாம் சொன்னதைக் கேட்கவில்லையே என்று குழந்தைகளை திட்டுவது, அடிப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக நாம் விரும்பியபடிதான் எல்லோரும் நடக்க வேண்டும், செய்ய வேண்டும் என்ற ஆதிக்க மனோபாவத்துடன் செயல்படுவது, நம் கருத்துக்களை வலிந்து பிறர்மேல் திணிப்பது... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் வன்முறை துளிர்விடுகின்ற இடங்கள்.

bp2 விரக்தி, தனிமை, வெறுப்பு, பயம், எரிச்சல், துக்கம், அதீத சந்ஷோசம் என மனதின் பல விதமான உணர்ச்சி எழுகின்ற பொழுதெல்லாம் வன்முறை எண்ணம் தூண்டப்படுகிறது. பாலியல் வன்முறை, எதிரி யார் என்று தெரியாமலே கோபம், எதிர்ப்பு மனப்பான்மை, வேலையின்மை இவையெல்லாம் நம்முள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டேயிருக்கும் வன்முறைகள்.

அடுத்தவரை துன்புறுத்தி இன்பம் காண்கின்ற மனப்பான்மையும் வன்முறைதான். நம்மில் பலரும் இவ்வகை இன்பத்தை விரும்புபவர்களாய் இருக்கிறோம். அடுத்தவரை துன்புறுத்தல் என்றால் அடிப்பது, காயமேற்படுத்துவது மட்டுமல்ல. பொறாமை, கோபப்படுதல், கருத்துத் திணித்தல் இவையெல்லாம் துன்புறுத்தும் விஷயம் தான். சினிமாவில் வரும் காதல், சண்டைக் காட்சிகள், கதாநாயகன் இருந்தால் ஒரு வில்லன் இருப்பது, கற்பழிப்புக் காட்சிகள் என எல்லாவற்றிலும் வன்முறையைத்தான் ரசித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ரசிக்கும் நகைச்சுவையில் கூட ஒருவரிடம் இன்னொருவர் அடிவாங்குவதுதான் நம்மால் அதிகம் ரசிக்கப்படுகிறது.

இதன் காரணம் நம் மீது அதிகாரம் செலுத்த நினைக்கின்ற சமூகம் சிறுவயதில் பெற்றோர், பிறகு ஆசிரியர், வேலைக்குப் போனால் மேலதிகாரி என நடுவயது வந்து பக்குவப்பட்ட மனநிலை பெறுவதற்கு முன்பாக நாமும் பெற்றோர் நிலைக்கு வந்துவிடுகிறோம்.

வன்முறை நமக்கு எப்படியெல்லாம் சந்தோஷமளிக்கிறது? ஒருவரை பிடிக்கவில்லை என்று வெறுத்து ஒதுக்குதல், குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக இருத்தல், தனிநபரை புகழ்வதன் மூலம் அடுத்தவர் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துதல் வன்முறையாக இவற்றையெல்லாம் செய்யும் நாம் அதில் சந்தோஷமடைகிறோம்.

ஆக வன்முறைக்குக் காரணம் மனம்தான் என்பது தெளிவாகிறது. தனி நபருக்குள் எழுகின்ற வன்முறை உணர்வோ அல்லது குழுவின் ஒட்டுமொத்த வன்முறை எண்ணமோ எதுவானாலும் வன்முறை வேர்விட்டு வளர்கின்ற இடம் அடிப்படையில் மனம் என்பதை மறுக்க முடியாது.

வன்முறை எங்கிருந்து வருகிறது ? போராட்டமான வாழ்க்கைச் சூழலில் ஒருவரையொருவர் முழுமையாக நம்புவது சாத்தியமாக இருப்பதில்லை. என்றைக்கு ஆதிமனிதன் மிருகங்களை வேட்டையாடத் தொடங்கினானோ அன்றே வன்முறை உணர்வும் வளரத் தொடங்கிவிட்டது எனலாம். இதற்கு முடிவு என்ன ?

samurai நாம் எல்லோரும் முழுமையான அமைதியில் வாழ்க்கை நடத்துவதையே விரும்புகிறோம். இதற்கு நாம் முதலில் வன்முறை எண்ணத்தை விட்டு விலக வேண்டும். வன்முறையை நாம் எங்கிருந்து அணுகப்போகிறோம் ?

நம்முள்ளிருக்கும் கோபங்களை முதலில் களைய வேண்டும். ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுப் பழக வேண்டும். வாழ்வின் சிக்கலான கட்டங்களில் பிரச்சனையை நிதானத்துடன் ஆராய்கின்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் கோபம் என்கிற உணர்வு ஆரம்பத்திலேயே தவிர்க்கப்படுகிறது. வன்முறையின் விளைவில் பெரும்பங்கு வகிப்பது கோபம்தான். கோபம் கைவிடப்பட்டால் வன்முறையின் தீவிரத்தன்மை குறைகிறது.

நிதானத்தோடு பிரச்சனையை அணுகி சுய பரிசோதனையை நாமே மேற்கொள்வதன் மூலம் வன்முறை என்ற விஷயத்தை புரிந்து கொள்ளலாம்.

தன் சுபாவத்தை அறிந்து இயல்பை உணர்ந்து முற்றும் உணர்ந்த நிலையை அடைதல். இது ஜென் தத்துவத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. தன்னுடைய இயல்பை ஒருவன் அறிந்து கொண்டானெனில் வன்முறை அவனை விட்டு விலகி விடுகிறது.

சாதாரண மனிதன் தன் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டே தியானம் செய்து விழிப்புணர்ச்சிப் பெற வேண்டும் என்பது ஜென் குருவில் ஒருவரான போதி தர்மரின் நோக்கம். சமய நூலைத் தவிர்த்து அவற்றிற்கு அப்பால் ஞானம் பெறுதல், வார்த்தைகளை நம்பியிருக்கும் நிலையை மாற்றுதல், மனிதனின் மனதை நேரடியாக தொட முயலுதல்.

நேரடியாக விரைவாக சுய அனுபவத்தின் மூலம் ஞானோதயம் பெற வழிகாட்டுகிற ‘ஜென்‘ மதங்கள், மத நூல்கள், சொற்பொழிவுகள் அவசியமற்றவை என்று கருதுகிறது. போதி தர்மர் சொற்பொழிவுகளை தவிர்த்து செயல் மூலம் ஜென்னை போதித்தார். ‘சூஹ்‘ என்ற மலையில் உள்ள ‘ஷோரின்‘ ஆலயத்திற்கு அருகில் உள்ள குகையில் தங்கினார். எதிரே இருந்த குன்றை உற்றுப் பார்த்து யாரிடமும் பேசாது ஒன்பது ஆண்டுகள் தவம் செய்தார்.

1218804502Ur7Bqz தாவோ (TAO), கன்பூஷியஸ் ஆகிய தத்துவங்களைக் கற்க ‘ஏகா‘ என்ற அறிஞர் போதிதர்மரைப் பார்க்க மலைக்கு வந்தார். குரு எதுவும் பேசவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து ஏகா திரும்பவும் மலையேறி வந்தபோது குரு தியானத்தில் ஆழ்ந்திருந்தார். ஏகா பணியிலேயே நின்று குரு ஏதாவது சொல்லுவார் என்று காத்திருந்தார். ஆனால் பயனில்லை. இரவு முழுவதும் பனியில் நின்றார். காலையில் அவர் இடுப்பளவு பனி உறைந்திருந்தது.

கடைசியாக போதி தர்மருக்கு இரக்கம் ஏற்பட்டு “பனியில் நின்று கொண்டு எதை சாதிக்க நினைத்தீர்கள் ?“ என்று கேட்டார்.

“நீங்கள் திருவாய் மலர்ந்து தூய தர்மத்தை போதிக்க வேண்டும்“ என்று பதிலளித்தார் ஏகா.

“ஆதி நாளிலிருந்து பிக்குகள் அதை அறிய முயன்று கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் கடினமானது. அதைப் பயிற்றுவிக்கும் படி கேட்க உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது ?“ என்றார் போதிதர்மர்.

ஏகா ஒரு கூரிய வாளை எடுத்து தனது இடது கையை வெட்டி “இது என் அந்தரங்க சுத்தியை நிரூபிக்க“ என்று கூறிச் சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தில் வரும் கையை வெட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி ஒரு குறியீடே. கையை வெட்டிக்கொள்வது என்பது ஞானோதயம் பெற பாரம்பரியமான வழிகளை உதறித் தள்ளுவ்தைக் குறிக்கும். அதே சமயம் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வதென்பது வன்முறையின் உச்சநிலை. தன்னைத்தானே துன்புறுத்தி அதனை உணர்வதன் மூலம் வன்முறையின் விளைவை நேரடியாக பெறுகின்ற அனுபவம் ஏற்படுகிறது.

மனிதர்கள் வேட்டை நாயைப் போன்றவர்கள். இயந்திரத்தால் செய்யப்பட்ட முயலை வேட்டையாட மனிதர்கள் பந்தயத் தடத்தில் பறக்கிறார்கள். அதனால் அவர்கள் எப்போதும் இறுக்கத்துடனும் நிம்மதியில்லாமலும் இருக்கிறார்கள். உள ரீதியான வன்முறையில் ஈடுபடுகிறார்கள். உள்ளத்து வன்முறை வாழ்க்கையை சிக்கலாக்கிவிடும். நாம் இதை உணர்கின்ற போது வேட்கையையும் கோபத்தையும் கைவிட்டு மன அமைதியடைகிறோம்.

- ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

Tuesday, June 9, 2009

தந்தைமை

தந்தைமை (FATHERHOOD)

நமது தற்போதைய வாழ்க்கை முறை பெருமளவில் மாறி விட்டது. அதிக நேரத்தை தொழிலிலும், வேலையிலும் செலவிட வேண்டிய தேவை பல ஆண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிள்ளைகளுடன் நாம் தொடர்பு கொள்வதற்கான நேரம் மிகவும் குறைந்துள்ளது. எனவே பிள்ளைகள் வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பின் அவசியம் பற்றி எழும் கேள்விகள் நமக்கும் உரிய கேள்விகளாகின்றன.

NRCACHBL1BCA4R1LDKCAQ4WWWQCADYZBFDCALO17WQCA0I1AJ2CATP49A8CA1CDWBZCAA4THKGCA0DG0N3CA7HGN1VCAHXIW20CAE5VCUZCAMJWF33CA9YZJCLCAVH9U21CAI02G31CALCNDAACA0PKABP

தாய்மை என்ற சொல்லை நாம் அடிக்கடி கேட்கின்றோம். அது மிகவும் பெருமைப்படுத்தப்படுவதும் நாம் அறிந்த ஒன்று. ஆனால் தந்தைமை என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிகுக்கிறோமா என்றால் அதிகம் இல்லை என்றே பதில் கூற வேண்டும். குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ப்பில் தந்தைக்குரிய பங்கு பற்றி நாம் ஏன் அதிகம் சிறப்பித்துப் பேசுவதில்லை ? பிள்ளை வளர்ப்பில் தந்தைக்கு பெரிய பங்கு எதுவும் இல்லையா?

உலகின் பெரும்பான்மையான நாடுகளில் பிள்ளைகளைப் பொறுத்தவரையில் தந்தையின் பங்களிப்பு குறைந்ததாகவே உள்ளது. இதற்கு தந்தை குடும்பத்திற்காக உழைக்கும் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதே காரணமாக இருக்கலாம். முந்தைய காலத்தில் பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதால் அவர்களே பிள்ளைகளுக்கு பாலூட்டி, தாலாட்டி, அரவணைத்து வளர்ப்பதுடன் வளர வளர அவர்களது சக தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றும் பொறுப்பையும் செய்து வந்தனர். இதனால் பிள்ளைகளுக்கு தந்தையைவிட தாயிடம் அதிக நெருக்கம் ஏற்பட்டது.

பிள்ளைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கைக் கூற தமிழில் இரண்டு பழமொழிகள் உள்ளன. "தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை" என்பது ஒன்று. பிள்ளைகள் தந்தை கூறுவதைக் கேட்டு நடந்தாலே நல்ல முறையில் வளர்வார்கள் என்ற கருத்து முன்னர் இருந்தது. பிள்ளைகள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து வழிகாட்டுபவர் தந்தையே. எனவே அவரின் வார்த்தைகள் பிள்ளைகளுக்கு மந்திரம் போன்றவை என்ற கருத்தினாலேயே இந்த பழமொழி தோன்றியிருக்க வேண்டும்.

"தந்தையுடன் கல்வி போகும்" என்பது மற்றொரு பழமொழி. அதாவது தந்தையின் மறைவுடன் பிள்ளைகளின் கல்விக்கு வழிகாட்டுதல் போய்விடும் என்பதே இதன் அடிப்படைக் கருத்து. பண்டைய நாட்களில் பெண் கல்வி என்பது அதிகம் இல்லாத காரணத்தால் இந்தப் பழமொழி தோன்றியுள்ளது. இன்று நிலைமை பெருமளவில் மாறி பெண்கள் பல துறைகளில் கல்வி கற்றிருந்த போதும் குடும்பத்தை நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு இருப்பதால், தந்தையிடமே கல்விக்கு வழிகாட்டல் என்ற பொறுப்பு இன்றும் உள்ளது. பிள்ளைகளின் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப உரிய முறையில் வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தந்தைக்கு உள்ளது.

a

கல்வியில் மட்டுமல்ல, தந்தை என்ற முறையில் பிள்ளைகளின் வாழ்வில் பல வழிகளில் பங்கு கொள்ள வேண்டிய தேவை தந்தைக்கு உள்ளது. வேலையில் அதிக நேரத்தைக் கழிப்பதால் பிள்ளைகளின் வாழ்வில் தந்தை அதிகம் பங்களிப்பதில்லை. அதனால் சரியான உதாரணப்புருஷன் (Role Model ) இல்லாததால் பிள்ளைகள் பாதை மாறிப் போகிறார்கள். பிள்ளைகள் தந்தையிடமிருந்து புரிந்துணர்வை அன்பை எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் செய்ய வேண்டிய வேளைகளில் தந்தைமை (FATHERWOOD) நிலையே முக்கியமானது. தாய் பிள்ளை உறவு நீண்ட காலமாக கூறப்பட்டு வந்துள்ளது. தந்தையாக இருக்கும் நிலை கூறப்படுவது சமீபகாலத்திற்குரியது.

வளரிளமைப் பருவ (Adolescent) பிரச்சனைகளான பள்ளிப் படிப்பில் பின் தங்குதல், மன ஆரோக்கியம் குன்றுதல், தாழ்வுணர்ச்சி ஏற்படுதல், பிறருடன் பழகுவதில் தயக்கம், குற்றம் புரிதல் போன்றவற்றிற்கு தந்தை அருகில் இருந்தும் பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுவதில்லை என்பதையே காட்டுகிறது. பிள்ளைகளுடனான உறவின் இயல்பைப் புரிந்து அவர்களின் பிரச்சனையை உணர்வு பூர்வமாக அணுகுவதே இதற்குத் தீர்வாகும் பொதுவாக தந்தை பிள்ளைகளோடு தினசரி மிகக்குறைந்த அளவு நேரத்தையே செலவழிக்கின்றனர். இது அதிகரிக்கப்பட வேண்டும். பிள்ளைகளுடன் நேரத்தை கழிப்பதற்கு நிறைய திட்டமிடல் அவசியமாகிறது. வாரத்தில் ஓரிரு நாட்கள் பிள்ளைகளுடன் கழிக்க சில மணி நேரம் ஒதுக்க நாம் பழக வேண்டும்.

ஒருவர் எவ்வாறு சிறந்த தந்தையாக இருக்க முயற்சிக்கலாம்? தொழில் சார்ந்த விஷயங்களுக்கு நெரம் ஒதுக்குவது போல பிள்ளைகளுடன் கழிக்கும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஏதாவது தவறு செய்தால் தவற்றை ஒத்துக் கொள்வதுடன் அதற்காக மனம் வருந்துவதாக கூறத் தயங்கக் கூடாது. பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதன் மூலம் பிள்ளைகளுடன் பேசுவதற்கு விஷயம் இல்லாமல் தடுமாற வேண்டிய அவசியம் இருக்காது. பிள்ளைகளுக்கு கதை சொல்வது தந்தையின் முக்கிய கடமைகளில் ஒன்று.

பிள்ளைகளுக்கு கதை கூறும் நேரத்தில் நமது சிறிய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கூற வேண்டும். அவ்வாறு கூறுவதன் மூலம் தமது குடும்ப வரலாறு, பெருமைகள் வாழ்க்கைச் சூழல், பண்பாடு ஆகியன பற்றிய விஷயங்களை பிள்ளைகள் அறியும் படி செய்யலாம். இது பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை அளிப்பதுடன் தாங்கள் எதிர் காலத்தில் செய்ய வேண்டிய முடிவுகள் அவற்றின் விளைவுகள் பற்றி சிந்தித்து உணர்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

12084407045KF7w8

சிறு வயதில் அளிக்கப்படும் தந்தையின் அணைப்பும் ஆதரவான வார்த்தைகளும் ஏற்படுத்தும் தாக்கம் பிள்ளைகளின் வாழ்நாள் வரை நினைவு கூறத்தக்கது. சிறுவயதில் இவ்வாறான அன்பான வளர்ப்பையும் உணர்வு பூர்வமான ஆதரவையும் பெறாவிட்டால் பிற்காலத்தில் பிள்ளைகளிடமிருந்து தந்தையும் அதை எதிர்பார்க்க முடியாது. பிள்ளைகள் உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படும் போது வெளிப்படையாக அழவும், அதனை நம்மிடம் சொல்லவும் தைரியம் கொண்டவர்களாக வளர்வதில் தந்தையின் அன்பான வளர்ப்பு முறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

தந்தை பிள்ளைகளுடன் திறந்த மனத்துடனும், அன்புடனும், மென்மையுடனும் பழக வேண்டும். மகன், மகள் இருவரையும் ஒரேமாதிரியான பிரியத்துடன் நடத்துவதும் பிள்ளைகளின் சந்தேகங்களை, துயரங்களை எப்போதும் கேட்கத் தயாராகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்ச்சி மாற்றங்களைப் புரிந்து கொண்டு தந்தை தனது அனுபவங்களை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தையும், சுயமாக முடிவெடுக்கும் திறனையும் ஏற்படுத்த இயலும், நட்பும், ஆதரவும் சரியான வழிகாட்டுதலும் அளிக்கும் தந்தையாக இருக்க முயற்சிக்க வேண்டும்.

ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நடந்து கொண்டார் என்பது, அப்பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்கள் எவ்வாறு தனது தந்தையிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே உணர இயலும்.

நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

20 ஜுன் தந்தையர் தினம்

- ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

Sunday, June 7, 2009

விதி யாரை விட்டது…? (32 கேள்வி - பதில்)

இந்த தொடர்பதிவை அழைத்தவர்களுக்கு நன்றி சொல்வதா அல்லது ஏன் என்னையும் இந்த இக்கட்டில் மாட்டி விட்டீர்கள் என்று சொல்வதா தெரியவில்லை. ஏனென்றால் நிறைய கேள்விகளுக்கு வாசிப்பவர்களையும் கருத்தில் கொண்டு நாகரீகமாகவே பதில் சொல்ல வேண்டியிருக்குமென்றே நினைக்கிறேன். அவ்வளவும் உண்மையென்று நம்பி ஏமாந்து போக வேண்டாம். இந்த கேள்வி பதில் தொடரின் நோக்கம் ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாக இருந்தால் பொதுவான விஷயங்களை மட்டுமே அறிந்து கொள்வதாக இருக்கும்.

என்னை அழைத்த

டக்ளஸ்ஆ.ஞானசேகரன்தீபாஅன்பு - உமாஷக்தி (அனைவரும் ஒரே தினத்தில் அழைத்திருந்தனர்) ஆகிய நண்பர்களின் உணர்வுகளுக்கும் அன்பிற்கும் மதிப்பளித்து இந்த பதில்களை அளிக்கிறேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எனக்கு பெற்றோர் வைத்த பெயர் வாசுதேவன். எனக்குப் பிடித்த பெயர்தான். அகநாழிகை என்பது என் விருப்பப் பெயர். அந்த வார்த்தையின் வசீகரம் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பற்றிக் கொண்டு இன்று வரை தொடர்கிறது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நெகிழ்வான நேரங்களில் கண்களில் தானாகவே நீர் சுரக்கும். அதை அழுகையென்று எடுத்துக் கொண்டால் சமீபத்தில் அழுதது 1.6.09 அன்று.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்பப் பிடிக்கும்

4.பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதம்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
எழுதுவபவர்கள், படிப்பவர்களில் மட்டுமல்ல, எனக்கு எல்லா தரப்பிலும் நண்பர்கள் அதிகம்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவியில் குளிக்கப் பிடிக்கும். ஒரு பயம் சூழ்ந்த மன உணர்வுடன், கடலில் குளிப்பவர்களை பார்க்கப் பிடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
தோற்றத்திற்கும், பேசும் போதும் அவர்கள் தரும் முக்கியத்துவம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்சது : எழுதினாலும், எழுதாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கும் மனோபாவத்துடன் இருப்பது.

பிடிக்காதது : நிறைய இருக்கிறது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எளிதில் யாரிடமும் பழகத்தயாராக இல்லாத மனோநிலை.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
சிவப்பு நிற சட்டை..வெள்ளை நிற காற்சட்டை

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் அன்பே அன்பே (அயன்)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு

14.பிடித்த மணம்?
மல்லிகை

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
யாத்ரா அவரது கவிதையும் ரசனையான மனதும்.

தூறல்கவிதை ச,முத்துவேல் கவிதையும், வெளிப்படையான பேச்சும்.

உயிரோடை எஸ்.லாவண்யா கவிதைகளை தனித்துவமாக விமர்சிக்கும் திறன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
டக்ளஸ் – நகைச்சுவை உணர்வும், சிந்தனையும் கொண்ட இவரது பதிவுகள் பொதுவாகப் பிடிக்கும். சூரத்திலிருந்து தொலைபேசியில் அடிக்கடி இவர் என்னை கேட்பது “அய்யப்பனும் வாவர் சாமியும் ஓரினச் சேர்க்கையாளர்களா“ என்ற பதிவை எப்போது போடப்போகிறீர்கள் என்பதுதான். சென்னை வந்த போது நேரில் சந்தித்தோம். பழகுவதற்கு இனியவர்.

ஆ.ஞானசேகரன் – சிங்கப்பூரில் இருக்கும் இவர் சமுக சிந்தனையுடனும், குடும்ப உறவுகள் சார்ந்தும் பதிவிடுபவர். சமீபத்தில் திருச்சியில் இவரை நேரில் சந்தித்தேன். இவரது பதிவுகளை முழுவதுமாக வாசித்ததில்லை. பல பதிவுகளை வாசித்திருக்கிறேன்.

தீபா – இவரது பதிவுகளை முழுவதும் வாசித்து அவரது நடையின் ஈர்ப்பினால் பட்டாம்பூச்சி விருது அளித்தேன். இவருக்கு பட்டாம்பூச்சி விருது அளிக்கும்போது நான் கூறியவையே இப்போதும் பொருந்தும். மென்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில்தான் எத்தனை சந்தோஷம். அதிலும் ஒரு நிகழ்வை நாம் உணர்கிற அதே புரிதலுடன் நம் எழுத்தின் வாயிலாக வாசிப்பவரையும் உணர வைப்பது எத்தனை பேருக்கு சாத்தியமாகிறது. தீபாவின் பதிவுகளில் இதை உணர முடிகிறது.

அன்பு – ஓப்பன் ஹார்ட் என்ற பெயரில் எழுதும் இவர் என்னை அடிக்கடி தொலைபேசியிலும், இணையத்திலும் தொடர்பு கொண்டு எனது எழுத்துக்களைப் பற்றி பேசுவார். நன்றாக எழுதக்கூடியவர். சிவகாசியைச் சேர்ந்தவ இவர் வாசிப்பிலும் எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

உமாஷக்தி - கவிதை, கதை, அனுபவம், உலக சினிமா, புத்தக விமர்சனம் என அனைத்து தளங்களிலும் பரவலாக எழுதி வருபவர். தீவிர வாசிப்பு முனைப்பினை உண்டாக்கும் இவரது எழுத்துக்களில் ஒரு ஈர்ப்பு இருக்கும். தெளிவான நடை, கவனமான வார்த்தைக் கோர்ப்பு என இவரது எழுத்துக்களை வாசிக்கும் அனைவருக்குமே ஈர்ப்பு அனுபவம் வாய்க்கும். குடும்பம், பணி, எழுத்து, நட்பு வட்டம் எல்லாவற்றிலும் உமா காட்டும் அக்கறையும், ஆர்வமும் குறிப்பிடப்படவேண்டியது.

17. பிடித்த விளையாட்டு?
வாழ்க்கை

18.கண்ணாடி அணிபவரா?
இல்லை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மிகைப்படுத்தலற்ற, இயல்பான படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்

21.பிடித்த பருவ காலம் எது?
எல்லா காலமும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
பிரமிள் கவிதைகள், உழைப்பை ஒழிப்போம்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
படம் இல்லை, கருப்பு வண்ணம் மட்டும்தான்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது - இனிமையான இசை.

பிடிக்காதது – அதிக இரைச்சல்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
தாய்லாந்து

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எதுவும் இல்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஏமாற்றம்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
காமம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
பிடித்த இடம் என்று சொல்லத் தெரியவில்லை. பயணமும், தனியாக ஊர் சுற்றுவதும் ரொம்பப் பிடிக்கும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
படிப்பதும், எழுதுவதுமாக.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
மனைவி இருக்கும் போதும், இல்லாத போதும் செய்யும் எல்லாமே சுயவிருப்பத்தோடு செய்வதுதான்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
சந்தோஷமும், துன்பமும் என்றாலும் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ வேண்டும்.

Wednesday, June 3, 2009

தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் (உரையாடல் சிறுகதை போட்டிக்கு)

தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர்
- "அகநாழிகை" பொன்.வாசுதேவன்

அன்றைய தினமும் சுவாரசியமில்லாமலே விடிந்தது. உணர்வெழுச்சிகளைக் குறித்து கவலைப்படும் பழக்கத்தை கொஞ்ச நாட்களாகவே கைவிட்டிருந்தான். ஆனாலும் அருகில் மெலிதாக வாய் பிளந்தபடி உறங்கிக் கிடந்த குழந்தையைக் கண்டதும் முத்தமிடத் தோன்றியது. அவள் உள்ளங்கையைத் வாஞ்சையாகத் தடவினான். அவனது விரலைப் பற்றி அனிச்சையாக இறுக்கிக் கொண்டது அவளது கை. வாழ்வில் இன்னமும் மிச்சமிருக்கின்ற ஒரே சந்தோஷம் இவள் மட்டும்தான் என்று தோன்றியது.

சமையலறையின் தாளிப்பு வாசனை யமுனாவின் அவசரக் கிளம்பலை உணர்த்தியது. இரவு சாப்பிடவில்லை என்றாலும் பசிக்கவேயில்லை. கொஞ்ச நாட்களாகவே உணவின் மீது வெறுப்பான மனோபாவம் வந்துவிட்டிருந்தது. அதுவும் தினமும் தானே உணவை எடுத்து தட்டில் போட்டுக் கொண்டு, சாப்பிட்டு தட்டைக் கழுவி வைத்து... சித்திரவதையானது அது.

நகுலனோடு பேசிக்கொண்டிருந்தது போலவே தூங்கியதால் இரவில் சரியான தூக்கமில்லை. எழுந்திருக்க மனமின்றிக் கிடந்தான். ஜன்னலின் கம்பிகளுக்கிடையில் வானம் துண்டு துண்டாக தெரிந்தது. எழுந்து ஜன்னல் கம்பிகளுக்கு அருகாமையில் சென்று வானத்தை முழுவதுமாக பார்த்தான். இப்போது மனம் நிறைவாக இருந்தது.

அவன் ரசனையே பல இடங்களில் எதிரியாகி விடுகிறது. ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்திற்கு வருகை புரிந்த வெளிநாட்டுப் பெண்ணொருத்தியின் ஆடையில் அச்சிடப் போடப்பட்டிருந்த 'கலம்காரி' வகை சித்திரத்தை ரசித்துக் கொண்டிருந்ததற்காக, உச்சி வெயிலில் துணி பண்டல் இறக்குவதைச் சரிபார்க்கக் கூறி தண்டிக்கப்பட்டு பழி தீர்க்கப்பட்டான்.

புடவை சரசரக்கும் ஓசை கேட்டுத் திரும்பினான். யமுனா கிளம்பிக் கொண்டிருந்தாள்.

"குழந்தைக்குச் சாதமெல்லாம் எடுத்து வெச்சுட்டியா"

"ம்ம்" என்று சொல்லியபடியே வெளியே சென்று புறப்படத் தயாரானாள். இப்போதெல்லாம் தேவையற்று எதுவும் அவள் பேசுவதில்லை. மௌனியாகவே இருக்கிறாள். அவனும் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொள்ளவில்லை.

அவள் சென்ற பிறகு அவனுடைய வேலை ஆரம்பமாகி விடும். முதலில் குழந்தையை குளிக்க செய்து உணவு கொடுக்க வேண்டும். பிறகு துணிகளைத் துவைக்கும் இயந்திரத்தில் துணிகளைப் போட்டு எடுத்து உலர்த்த வேண்டும். இதெல்லாம் முடிந்த பிறகு குழந்தையுடன் விளையாடத் தொடங்குவான்.

அவளிடமிருந்த குழந்தையைப் பார்த்து சிரித்த ஒரு தினத்திலிருந்துதான் ஆரம்பித்தது எல்லாம். அப்போதெல்லாம் அவன் ஒரு தோல்பொருட்கள் செய்யும் நிறுவனத்தில் கணக்கெழுதும் பணியினை செய்து கொண்டிருந்தான். தினமும் அவன் வரும் பேருந்தில்தான் குழந்தையுடன் வருவாள்.

நிராசைத்துளிகளால் நிரம்பிய அவனது வாழ்க்கையில் புத்தகம் வாசிப்பது, பாட்டு கேட்பது போன்ற சின்னச் சின்ன சந்தோஷங்களை காலம் விட்டு வைத்திருந்தது. அதிலும், புத்தகத்தை வாங்கி வாசிப்பதற்கான சூழலே அவனுக்கேற்படவில்லை. நூலகம்தான் அவனுக்குப் பிடித்த இடமாக இருந்தது. படிக்கையில் போரடித்தால் கம்பி வலைகளிடப்பட்ட ஜன்னல் வழியே வெளியே இரண்டாம் மாடியை எட்டிப் பார்க்கும் வேப்பமரத்தின் குருவிகளையே பார்த்துக் கொண்டிருப்பான். ஏதோ ஒரு கணத்தில் அனிச்சையாய் அவன் புத்தகம் படிப்பது நினைவிற்கு வந்து மறுபடியும் விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்குவான்.

பார்ப்பதெற்கென எப்போதும் இருக்கும் வானமும், எப்போதாவது காணக்கிடைக்கும் குருவிகளும் அவனது வாழ்க்கையை பரவசங்களால் நிறைத்துக் கொண்டிருந்தது.

குழந்தைச் சினேகத்தின் தொடர்ச்சியாக ஒரு நாள் யமுனா அவனோடு பேசத் தொடங்கினாள். அதன் பிறகு பேசிக் கொண்டேயிருந்தாள். அவளது பேச்சின் மையமாக அவனது நடத்தையும், மென்மையான ரசனையும் மட்டுமே இருக்கும். ஓரிரு முறை அவளைக் குறித்து கேட்டதற்கு மௌனத்தையும், முக இறுக்கத்தையும் சில நேரங்களில் விழியோரக் கண்ணீரையுமே பதிலாகக் கொடுத்தாள்.

குழந்தை எப்போதும் சிரித்துக் கொண்டும், சில நேரங்களில் அழுது கொண்டும் இருந்தது. குழந்தை அழுத நேரங்கள் குறைவு. தனக்குத்தானே புரியாத வார்த்தைக் குழறல்களுடன் குழந்தை சந்தோஷமாய் இருந்தது. பேச ஆரம்பித்த சில நாட்களிலேயே குழந்தை இவனோடு அணுக்கமாகி விட்டது. யமுனாவிடமிருக்கும் போதும் இவனிடம் தாவியது.

தன்னுடன் வந்திருந்துவிடச் சொல்லி யமுனா ஒரு நாள் கூறினாள். அவனுக்கும் அறை வாழ்க்கை வெறுத்திருந்தது. யாருமேயற்று தனித்திருந்த வாழ்க்கை பழகியிருந்தாலும், அறைத்தனிமை அவனை தினம் தினம் கொன்றது. இரவு தூங்க மட்டுமே அறைக்குச் செல்வதை வழக்கமாய் வைத்திருந்தான். அப்போதும் உத்திரத்து பல்லி, காற்று விரிசலின் துவாரம் வழியே வரிசையாகச் செல்லும் எறும்பு, அவனைப் போலவே படபடத்துச் சுற்றும் மின்விசிறி இவற்றைப் பார்த்துக் கொண்டேயிருந்து அப்படியே தூங்கிப்போவான். உறவுகளே இல்லாத அவனது வாழ்க்கையில் பிரிவுகளுக்கும் இடம் இல்லை என்பதே அவனுக்கு மன நிறைவாக இருந்தது.

யமுனாவின் வருகையால் அவனது வாழ்க்கை முறையில் எதுவும் மாற்றமிருக்கப் போவதில்லை என்பது உறுதியாயிருந்தது. ஆனாலும் அதுவரை நேரடியாக அனுபவித்தறியாமல் சுயமைதுனம் வாயிலாகவே தீர்த்துக் கொள்ளப்பட்ட அவனது அந்தரங்க உணர்வுகளுக்கு சாந்தி கிடைக்கும் என்பதில் சமாதானமடைந்தான்.

திருமணமெல்லாம் எதுவுமில்லை. அவளாகவே ஒரு புது வீட்டை வாடகைக்கு அமர்த்தி, அந்த வீட்டில் இருவரும் வாசம் செய்யத் தொடங்கினார்கள். தினமும் இரவுகளில் காமம் அலைகளாகி நுரைத்துக் கரை சேர முயன்று கொண்டேயிருந்தது. யமுனாவின் அதீத விருப்பத்தின் காரணமாக, அவனது குறைகளான ரசனை, சோம்பேறித்தனம் இவற்றைக்குறித்து அவள் கவலை கொள்ளச் செய்யவில்லை.

அவனைப் பொறுத்தவரையில் காமம் என்ற விஷயம் பூர்த்தியானது தவிர வேறேதும் புதிய மாற்றமாக எதுவுமில்லை. எப்போதும் போல வேலைக்குச் சென்றான், நூலகம் சென்றான், வேப்பமரக் குருவிகளில் லயித்தான், விரும்பியதை ரசித்தான், குழந்தையைக் கொஞ்சினான்.
பிறகொரு நாள் குழந்தையோடு பணிக்குச் செல்வதின் சிரமங்கள் குறித்து அவனிடம் கூறினாள் யமுனா. சொற்ப ஊதியத்திற்காக அவன் படும் சிரமங்கள் குறித்து அவளது அடுத்த கவலையாக இருப்பதாகவும் தெரிவித்தாள். சிறிது நேர பேச்சிற்கு பிறகு அவளது வருமானமே அதிகம் என்பதால் அவனை வேலையை விட்டுவிடச் சொன்னாள்.

வேலையிலிருந்து விலக வேண்டியது குறித்து கொஞ்சம் யோசனையாக இருந்தது. ரொம்பவும் யோசித்தான். ஒப்புக்கொள்ள வேண்டுமென கட்டாயமில்லை என்பதை சற்றே முகவாட்டத்துடன் கூறினாள் யமுனா. அவள் அமர்ந்திருந்த விதமும், அதில் தொற்றிக் கொண்டிருந்த உடலழைப்பும் பதிலேதும் பேச முடியாமல் போனது. அன்றிரவு குடத்தில் விழுந்துவிட்ட தேரையைப் போல தத்தித்தத்தி, வியந்து வியந்து இருவரிடமும் கரையேறியது காமம்.

மறுநாள் காலையில் வேலைக்குப் போகப்போவதில்லை என்பதைத் தெரிவித்தான். அவளுக்கும் சந்தோஷம்தான். வீட்டின் வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். குழந்தையோடு இருப்பதையே முக்கிய வேலையாக மகிழ்வோடு கொண்டாடி செய்தான்.

வளர்ப்பு பிராணியின் குணாம்சம் போல அவனால் எல்லாவற்றுக்கும் பழகிவிட முடிந்தது. ரசனை, நூலகம், புத்தகம், காமம், குழந்தை என அவனது தேவையனைத்தும் பூர்த்தியானது அவனுக்கும் உண்மையில் நிறைவாகவும் இருந்தது.

பணித்திறன் காரணமாக பதவி மாற்றமும், ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டதைச் சொல்லி மகிழ்ந்து அவனது தியாகங்களின் பொருட்டே எல்லாம் என்றாள். கூடவே பணி நேரத்தின் சிறு மாற்றங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்தாள்.

பணிச்சுமை காரணமாக அதிக பரபரப்பும் அமைதியற்றுமே அவளது காலையும் இரவும் இருந்தது. அதன் காரணமாக அவனது வீட்டுப் பணிகளில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போலவே குழந்தையை குளிக்கச் செய்து, உணவளித்து, துணிகளை துவைக்கப் போட்டு, உலர வைத்து மடித்து, குழந்தையுடன் விளையாடி பொழுது போனது.

வீட்டின் வாசலில் குழந்தையுடன் அமர்ந்து வருவோர் போவோரின் முகங்களை வேடிக்கைப் பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றானது. ஏற்கனவே படித்த புத்தகங்களை மறுபடியும் நினைவுக்கு கொண்டுவர பலமுறை முயன்று தோற்றுக் கொண்டிருந்தான். கைக்குக் கிடைத்த பழைய பேப்பர் ஒன்றில் இருந்த வரிகள் திரும்பத்திரும்ப வாசித்தான்.

".... அழுதழுது பேய் போற்
கருத்தில் எழுகின்ற வெல்லாம்
என்னதறியாமை யறிவென்னுமிரு பகுதியால்
ஈட்டு தமிழென் தமிழினுக்
கின்னல் பகராது உலகம்
ஆராமை மேலிட்டிருத்தலால்"

அத்துடன் கிழிந்து போயிருந்த அந்த காகிதத்தின் வார்த்தைகளை வாசித்ததும் அவனின் மனதின் அடியாழ உணர்வுகள் விரைத்துக் கிளர்ச்சியடைந்தன. யார் எழுதியது என்று தெரியாமல், மறுபடி மறுபடி வாசித்துக் கொண்டிருந்தான்.

பணிச்சுமை காரணமாக யமுனா வீடு திரும்புவதில் தாமதமானது. இரவு உணவை தானே செய்து விடுவதாகக் கூறியதில் மனம் நெகிழ்ந்தாள். ஆனால் யமுனாதான் பல நாட்களில் தாமதமானதால் சாப்பிட்டு வந்து விடுவதாக கூற ஆரம்பித்தாள்.

பணியில் அதிக உழைப்பைச் செலவிட வேண்டியிருந்தது அவளுக்கு. அவர்களுக்கிடையேயான காமம் போர்வையைப் போர்த்திக் கொண்டு வெகுநாட்களானது. அவனுக்கு பழக்கப்பட்டுவிட்டதால் கைவிட முடியாமல் தன் உடல் விழைவை அவனிடம் ஒருநாள் தெரிவித்தான். அன்று பணிகள் அதிகம் என்றும், இன்னொரு சந்தர்ப்பத்தில் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறி சாந்தமாக மறுத்துவிட்டாள்.

அன்றிரவு நெடுநேரமாகியும் அவள் வரவில்லை. அலுவலகத்திற்கு தொலைபேசலாமென முயற்சித்தான். மணி தொடர்ந்து ஒலித்து அடங்கியது. வழக்கமாக வரும் தாமத நேரத்தை விட நேரம் அதிகமாயிருந்தது. அவனுக்கு உள்ளுக்குள் பயம் அல்லது வெறுமை போன்ற ஒர் உணர்வு பரவியது. வீட்டின் வெளியே அமர்ந்திருந்த அவன் மடியிலேயே குழந்தை தூங்கி விட்டிருந்தது.

"....அழுதழுது பேய் போற்..." என யாரோ காதருகில் வாசிப்பது போல உணர்ந்தான். விளக்கொளியில் நீளத் தெரிந்த சாலையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வெகுநேரம் கழித்து வீட்டருகில் வந்து நின்ற காரிலிருந்து யமுனா இறங்கினாள். அவனருகில் வந்து தாமதமானதால் மேலாளருடன் வீடு திரும்ப நேரிட்டதாகவும் சொன்னாள்.

அன்றிரவும் அவள் சாப்பிட்டு வந்ததாகக் கூறினாள். அவனுக்கும் சாப்பிடும் எண்ணமில்லை. ரொம்ப நாளைக்குப் பிறகு சுற்றுகின்ற மின் விசிறியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அந்த வீட்டிலும் பல்லிகள் இருந்தன. இரையேதும் கிடைக்காமல் ஒன்றையொன்று விரட்டிக் கொண்டிருந்த பல்லிகளைப் பார்க்க பாவமாய் இருந்தது. ஏதாவது ஒரு பூச்சி கிடைத்தால் பிடித்துப் போடலாமா என்று யோசித்தான். யமுனா ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலை எப்போதும் போல சுவாரசியமில்லாமலே விடிந்தது. யமுனா கிளம்பி பையைச் சரி பார்த்துக் கொண்டிருந்தாள். வழக்கம் போலவே அவன்தான் கேட்டான்.

"கிளம்பிட்டியா யமுனா"

வாயில் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி சந்தோஷ மனோநிலையில் இருந்த அவள் வெறும் "ம்ம்" என்று மட்டும் சொல்லியபடியே வெளியே சென்றாள்.

தாமதமாகத் தூங்கியதால் குழந்தை இன்னும் எழுந்திருக்கவில்லை. துணிகளை துவைக்கும் இயந்திரத்தில் போட்டு இயக்கினான். வெளியே போய் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தான். ஆள் நடமாட்டமின்றி இருந்தது. துணிகளை உலர்த்த மாடிக்கு எடுத்துச் சென்றான். துணியை கொடியிலிடும் போது தொலைவில் வந்து கொண்டிருக்கும் இரயிலோசை கேட்டது. ஒரு இசையைப் போல தடக் தடக்கென ஒரு தாள லயத்துடன் தாலாட்டும் இசை போலிருந்ததை ரசித்தான். ஓடிய இரயிலுடன் ஓசையும் முடிந்தது.

கீழிறங்கி வந்து சுற்றிக் கொண்டிருக்கும் மின் விசிறியை நின்றபடியே பார்த்தான். பல்லிகளைக் காணவில்லை. இரை கிடைத்திருக்கக்கூடும். அல்லது பகலில் புணர்ச்சிக்கென பதுங்கியிருக்கக் கூடும். குழந்தையின் சிறுவாய் பிளந்த தூக்கம் நிம்மதியைத் தந்தது.

வெளியே செல்லலாம் என்று நினைத்து சட்டையை அணிந்து கொண்டான். திடீரென நினைவு வந்தவனாய், குழந்தையின் அருகில் பால் நிறைத்த பாட்டிலை கைக்கெட்டும் தூரத்தில் வைத்தான்.

வெளியே வந்து கதவை பூட்டாமல் வெறுமனே சாத்திவிட்டு, நடக்கத் தொடங்கினான். எங்கே செல்வதென யோசித்தபடியே ரயில் நிலையம் வரை வந்தான்.

ரயில் நிலையத்தில் கிளைகளற்ற மரங்களாய் இரும்புக் கிராதிகள் நின்றிருந்தன. கொஞ்சமும் நிழல் இல்லை. தண்டவாளம் இருந்த திசை நோக்கிப் பார்த்தான். கூரிய அம்பாக வானத்தை கிழிக்க முயல்வது போல தொலைவில் சென்று வானத்தை முட்டிக் கொண்டிருந்தது தண்டவாளம். வானத்தையே பார்த்தபடி தண்டவாளங்களுக் கிடையில் நடக்க ஆரம்பித்தான்.

தொலைவில் ரயிலின் தாள கதியுடனான தாலாட்டு சப்தம் கேட்டது. நடந்து கொண்டேயிருந்தான். வரிசையாகப் பறவைகள் எதையோ தேடிச் சென்று கொண்டிருந்தன. மெல்லிய தாலாட்டு சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி அதிகமாகி அவனருகில் வந்து அவனுக்கு மன அமைதியைத் தந்தது.

தாலாட்டு சப்தம் காதையடைக்க, அவனையும் தன்னோடு அணைத்துக் கடநது சென்று கொண்டிருந்தது ரயில். பறவைகளற்று நிசப்தமாக இருந்த வானம் அவனை பார்த்துக் கொண்டிருந்தது.
@@@

Comments system

Disqus Shortname