Monday, November 18, 2013

தன் வரலாறு எனும் அசாத்திய சோதனை

தன் வரலாறு எழுதுதல் என்பது ஒருவிதத்தில் அசாத்தியமான முயற்சி. மிக அரிதாகவே செய்யப்படுகிறது இவ்வகையான எழுத்து வகைமை. தன்னைப் பற்றித் தானே எழுதுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளது. எதைச் சொல்வது, எதைச் சொல்லாமல் விடுவது, எதைத் சொன்னால் சுய பெருமை பேசுவதாகி விடும் என்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும். அயல்மொழிகளில் தன் வரலாறு எழுதுதல் என்பது பரவலாக இருக்கிறது

ஆனால் தமிழில் மிகவும் குறைவுதான். அப்படியே எழுதப்பட்டாலும் நாட்குறிப்புப் பதிவுகள், கடிதங்கள், பயணக்கட்டுரை, நினைவுகள், அனுபவம், விமர்சனம், நட்பு என்பது பற்றிய பகிர்தல்களாகவே இருக்கிறது. இவையும் தன் வரலாறு என்ற வகைமையிலேயே பொருத்திப் பார்க்கலாம். தன் வரலாறு வடிவத்தில் எழுதப்படுகிறவை காலத்தின் சாட்சிகளாக நம் முன் நிற்கின்றன. இந்தந்த வருடங்களில் இப்படியாக இருந்தது என்பதை தன் வரலாற்றுப் பதிவுகளின் வாயிலாகவே நாம் ஆதாரப்பூர்வமாக அறிய முடிகிறது.

தன் வரலாறு வகையிலான முக்கிய நூல்கள் சில

ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பேடு
சுய சரிதை – பாரதி
சத்திய சோதனை – காந்தி
எனது சரிதை – வ.உ.சி.
ஜீவித சரிதம் – ரெட்டைமலை சீனுவாசன்
என் சரிதம் – உ.வே.சாமிநாதய்யர்
நினைவுக் குறிப்புகள் – திரு.வி.க.
என் கதை – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
எனது போராட்டங்கள் – ம.பொ.சிவஞானம்
எனது நாடக வாழ்க்கை – டி.கே.சண்முகம்
எனது வாழ்க்கை அனுபவங்கள் – ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்
நினைவலைகள் – நெ.து.சுந்தர வடிவேலு
தமிழ்நாடு – ஏ.கே.செட்டியார்
வன வாசம் – கண்ணதாசன்
நெஞ்சுக்கு நீதி – கருணாநிதி
ஒரு கலை இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன்
சினிமாவும் நானும் – மகேந்திரன்
இது ராஜபாட்டை – நடிகர் சிவகுமார்
சங்கதி – பாமா
கவலை – அழகிய நாயகி அம்மாள்
சிலுவைராஜ் சரிதம் – ராஜ் கௌதமன்
நான் சரவணன் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா
வடு - கே.ஏ.குணசேகரன்
உணர்வும் உருவமும் –
முள் - முத்து மீனாள்
நாடோடித் தடம் – ராஜ சுந்தரராஜன்
உடைபடும் மௌனங்கள் - மீ.ராஜு

விடுபட்டவைகளை நீங்களும் குறிப்பிடலாம்.


எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் தாயார் அழகிய நாயகி அம்மாள் எழுதியகவலைநாவலிலிருந்து ஒரு பகுதி.
இளையமகன் செல்வக்கனி தனக்குப் பெண் தேடினான். பூமாத்தியன்விளைக்கு வடக்கே உள்ள ஆடறுவிளை என்ற ஊரில் பரம்பரையாகப் பனையேறி வரும் குடும்பம். கொஞ்சம் பணம் சேர்ந்து, சிற்றுப்பணக்காரனாய் இருந்தான்.

அவன் மகனை சவரிமுத்து என்று சொல்லுவார்கள். அவன் காலத்தில் முன்னைவிடவும் கூடுதலாகப் பணம் வந்தது. அவன் மகனுக்கு ஒரு மகள் இருந்தது. அந்தப் பிள்ளைக்கு நல்ல சம்மந்தம் வந்ததால் ஏழாயிரம் ரூபாய்க்கு சிறீதனம் கொடுப்பேன். நல்ல தென்னந்தோப்பும் நகையுமாய் கொடுக்கலாம் என்று ஒரு துப்பனிடம் சொன்னான். அந்த கோளோடை துப்பன் இந்த செல்வக்கனியிடம் வந்து விபரமாகச் சொன்னான். ஏழாயிரம் சிறீதனம் என்றதும் சம்மதித்து, கலியாணம் நடந்தது. பெரிய குடும்பத்தில் பெண் கொடுக்கிறோம் என்ற பெருமை சவரிமுத்து மகனுக்கு, மிகுதியான சந்தோசத்தோடு சீர்வரிசை கொண்டு போகவரச் செய்தான்.

ஆறுமாதம் ஆவதற்குள் பெண் பிடிக்கவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டது. சண்டை முற்றி திரச்சிவால் அடியும் நடந்தது. அந்தப் பெண் அடி பொறுக்க முடியாமல் தனியாகத் தகப்பன் வீட்டுக்கு ஓடினான். கொஞ்சம் நாள் கழித்துப் போய் கூப்பிட்டான். கூட்டிக் கொண்டு வந்து இன்னும் அடிப்பானென்ற பயத்தினால் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். இன்னும் சில நாள் கழிந்தது. வரவில்லை. மணிகட்டிப் பொட்டல் ஊருக்கு அடுத்த அனந்தசாமி புரத்தில் ஊர்த் தலைமை நாடானின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மறைமுகமாய் கலியாணம் செய்து வைத்துகொண்டான்.

இதை அறிந்த மூத்ததாரத்தாள் கோர்ட்டில் கேஸ் போட்டாள். இருவரும் கோர்ட்டில் மொழி சொல்ல வேண்டி வந்தார்கள். மனைவி கூட்டில் நின்று என்னை வைத்துவிட்டு வேறே கலியாணம் செய்திருக்கிறார் என்றாள்.

இப்போதுள்ள அரசாங்கச் சட்டம் பிரகாரம் திரும்பக் கலியாணம் செய்யக் கூடாத காலமானதினால், புருசன் கலியாணம் செய்யவில்லை என்று தானே சொல்ல வேண்டும். மனைவிகூட்டைவிட்டு இறங்கினாள். கணவர் கூட்டில் ஏறினான். வக்கீல் இரண்டாவது கல்யாணம் செய்தது உண்மைதானாவென்று கேட்டார்.

கணவர் : நான் இரண்டாவது கலியாணம் செய்யவில்லை.
வக்கீல் : உமது மனைவிதானே இவள்.
புருசன் : ஆமா.
வக்கீல் : அவள் கேஸ் போடக் காரணம் என்ன.
இவர் : தகப்பன் வீட்டுக்குப் போனவள், என் வீட்டுக்கு வராமல் அங்கே இருக்கிறாள். எனக்கு ஒரு வேலைக்காரி பொங்கிக் கொடுக்கிறாள். நான் கலியாணம் செய்யவில்லை.

என்று சொல்லிவிட்டு இறங்கினான்.

எப்படியோ கேஸ் இவனுக்கு அனுகூலமாய் முடிந்து வாழ்ந்து வருகிறான்.


கவலை (நாவல்) - அழகிய நாயகி அம்மாள்

432 பக்கங்கள் - விலை : ரூ.90/-

ஆன்லைனில் வாங்க :

Friday, November 1, 2013

மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பீர்களா?

காலச்சுவடு நவம்பர் 2013 இதழில், சச்சிதானந்தன் சுகிர்தராஜா எழுதியிருக்கிற தேவனின் மகிமை கீழ்த்திசையில்என்ற கட்டுரை மிக முக்கியமானதொரு கட்டுரை. இக்கட்டுரையை வாசித்ததும் தொடர்ச்சியாக பலவற்றை வாசித்து அறிந்து கொண்டேன். கிறித்தவம் பிரவேசிக்கிற ஆரம்ப காலம் குறித்தும், அதற்கு மறுவினையாக கீழைச்சமயங்களின் எதிர்கொள்ளல் தொடர்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது இக்கட்டுரை. சிகாகோ மாநாட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை இக்கட்டுரை உணர்த்துகிறது. 

காலனிய நாட்களில் கீழைச்சமயங்கள் பற்றிய மேற்கத்தியர்களின் ஏளனமான பார்வையை மாற்றியதில் மூன்று நிகழ்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.1873ல் இலங்கை பானதுறையில் கிறித்தவர்களுக்கும், பௌத்தர்களுக்கும் நடந்த காரசாரமான விவாதங்கள் (The Panadura Debates), 1893ல் நடைபெற்ற சிகாகோ மாநாடு மற்றும் கீழைத்திசைவாணர் மாக்ஸ்முல்லர் தலைமையில் வெளிவந்த கீழைப் புனிதப் பிரதிகளின் மொழிபெயர்ப்பு (The Sacred Book of the East) (1879-1910) ஆகியவையே இந்நிகழ்வுகள்.

இம்மூன்று நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்றாலும் இவற்றின் திரள்விளைவு என்னவெனில், கீழைச்சமயங்கள் கிறித்தவத்திற்கு சற்றும் சளைத்தவையல்ல என்ற எண்ணத்தை மேற்கத்தியவர்களிடம் ஆழமாக உட்புகச் செய்ததுதான்.

இக்கட்டுரை தொடர்பான சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1800களின் பாதியில் மேற்கிலிருந்து கீழைத் தேசங்களுக்குப் ரவத் தொடங்கிய கிறித்தவம் மக்களைத் தன்பக்கம் ஈர்க்க பலவிதமான உபாயங்களைக் கையாண்டது. கிறித்தவ நிறுவனங்களின் பெரும்பான்மையாக பலனளித்த உத்திகளாக கல்விப்பணி பொருளாதார உதவிகள், நலம்புரி மையங்கள் போன்றவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. கிறித்தவத்தின் பாற்பட்ட மனச்சாய்வுக்கு இவையே பிரதான காரணங்கள் எனலாம். கிறித்தவத்தின் பிரவேசப் பாய்ச்சலை எதிர்கொள்ள முடியாமலும், ஈடுகொடுக்க முடியாமல் கீழைச் சமயங்கள் திணறினாலும் அவர்களால் இயன்றவரையில் தத்தம் சமயங்களுக்கான ஆழ்ந்த நோக்குகளை நிலைநாட்டுவதற்கான முயற்சியிலும், தங்கள் சமயத்தவரைத் தங்களிடம் தக்க வைத்துக் கொள்ளவும் படாதபாடுபட்டனர்.

சிகாகோ சமயங்களின் பிரதிநிதி மாநாடு


1893ல்சமயங்களுக்கான உலக பிரதிநிதிச் சபை’ (Parliament of the World Religions) அமைக்கப்பட்டது. இவ்வமைப்பின் மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள சமயங்களின் நம்பிக்கைகள் மீதான உலகளாவிய உரையாடல் நிகழ்வுக்கான முயற்சி ஒழுங்கு செய்யப்பட்டது. ஜான் ஹென்றி பாரோஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டதுதான்சிகாகோவில் நடைபெற்றசமயங்களின் பிரதிநிதி சபைமாநாடு. மேற்கத்தைய கிறித்தவத்தைவிட தத்தம் சமயங்களைச் சிறந்ததாக சொல்லிக்கொள்ள கிடைத்த வாய்ப்பாகவே இது இருந்தது. மேலும், உலகமெங்கும் கிறித்தவத்தைப் பரவச் செய்ய விரும்பியவர்கள் கீழைச் சமயங்களைப் பற்றி அவர்கள் சொற்களாலேயே அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவற்றின் முக்கியக் கூறுகளைப் பயன்படுத்தி கிறித்தவத்தை மேலும் பரவச் செய்வதற்காகவும் இம்மாநாடு நடத்தப்பட்டது.

சிகாகோ மாநாட்டு பிரதிநிதிகளுடன் விவேகானந்தர்


விவேகானந்தர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது சிகாகோ சமயங்களின் பிரதிநிதிகளுக்கான மாநாட்டில்அமெரிக்க சகோதரிகளே,சகோதரர்களே! என்று ஆரம்பித்து அவர் நடத்திய சொற்பொழிவுதான். சிகாகோ மாநாட்டில் பங்கேற்ற சமயப் பிரதிநிதிகள் எல்லோரும் த்த்தம் சமயத்தை புகழ்ந்து கொண்டும், பிற சமயங்களைக் குறைகூறியும் உரையாற்றிய நிலையில் பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். என்று விவேகானந்தர் பேசிய பேச்சு பிற கீழைச்சமய பிரதிநிதிகளின் பேச்சிலிருந்து மாறுபட்டதாகவும், மேற்கத்தையவர்களைக் கவர்ந்ததாகவும் இருந்தது. இதுவே விவேகானந்தரைப் பிறரிலிருந்து தனித்து அடையாளப்படுத்தியது.

விவேகானந்தர்


சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் மட்டுமே பங்கேற்று சொற்பொழிவு ஆற்றினார் என்று நாமெல்லாம் பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல்ல. சிகாகோ மாநாட்டிற்கு கீழைச்சமய பிரதிநிதிகளாக இந்தியாவிலிருந்து, பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்த பி.பி.நாகர்கர், பி.சி.மஜும்தார், சமணர்கள் சார்பாக வீர்சந்த் காந்தி, தேரவாத பௌத்த்த்தின் பிரதிநிதியாக இலங்கையைச் சேர்ந்த அனாகரீக தர்மபாலா ஆகியோர் பங்கேற்றனர். ஜப்பானிலிருந்து ஜென் பௌத்தப் பிரிவின் சார்பில் கின்ஸா ரிகூ எம். ஹிராய் மற்றும் ஸோயேன் ஷகூ ஆகியோர் பங்கேற்றனர். சீக்கியர்கள் பங்கேற்கவில்லை. ஆப்பிரிக்கர்களும், சுதேசி அமெரிக்கர்களும் (Native Americans) வரவழைக்கப்படவில்லை.

அனாகரீக தர்மபாலா


சிகாகோ மாநாட்டின் முக்கியத்துவமான அம்சம் என்னவெனில் இதுவரை கீழைச்சமயங்கள் பற்றி நேரடியாக அறிந்திராத மேற்கத்தியர்கள், அவர்களது சமயக் கருத்துகளை அவர்களிடமிருந்தே பெற்றுக் கொண்டனர். அவர்களின் மீது திணிக்கப்படுகிற மேற்கத்தைய கலாச்சாரத்தின் பாதிப்புகள், அதனால் சிதைந்து போகிற அவர்களது கலாச்சாரம், விடுதலை உணர்வு பற்றிய அவர்களின் எண்ணங்கள் போன்றவற்றை அறிந்து கொள்கிற வாய்ப்பு மேற்கத்தியர்களுக்குக் கிட்டியது.கீழைச்சமயத்தவர்கள் பற்றிய மேற்கத்தையவர்களின் எண்ணத்தை மாற்ற சிகாகோவில் நடைபெற்ற சமயங்களின் பிரதிநிதிச் சபை சொற்பொழிவுகள் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

இந்து, பௌத்தம், கன்பூசியனிசம், சமணம், ஜென் பௌத்தம், கீதை, தம்மபதம் ஆகியவற்றைப் பற்றி தாங்களாக படிப்பறிவில் அலசி ஆய்வு செய்து கண்டுணர்ந்து கொண்ட மேற்கத்தியர்களுக்கு சிகாகோ மாநாட்டில் நடைபெற்ற சொற்பொழிவுகளும், உரையாடலும் விரிவான புரிதலைத்தந்தது. சிகாகோ மாநாட்டு உரை தொகுக்கப்பட்டும் அவர்களுக்குள் விநியோகிக்கப்பட்டது. வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது மக்களுக்கு நிவாரணம் அளிக்காமல் அவர்களின் அவலநிலையை தங்களுக்கு சாதமாக்கிக் கொண்டு கிறித்தவ மதப்பிரச்சாரகர்கள் தங்கள் மதத்தைத் திணிக்க முயன்றதை “மக்கள் அப்பத்தைக் கேட்டார்கள்; நீங்கள் கற்களைக் கொடுத்தீர்கள்” என்ற பைபிள் வசனத்தையே மேற்கோளாகக் காட்டி விவேகானந்தர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

வீர்சந்த் ராகவ் காந்தி


ஜப்பானைச் சேர்ந்த ஜென் பௌத்தப் பிரதிநிதியான ஹிராய், “சர்வதேச நீதிமன்றங்களில் ஜப்பானியருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புகள், இனவெறிச் செயல்கள், மீன்வளங்களைச் சுரண்டிய அமெரிக்கக் கப்பல்கள் இதுதான் கிறித்தவம் என்றால் நாங்கள் காட்டுமிராண்டிகளாகவே இருக்கத் தயார்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

கீழைச் சமயத்தவரிடையே இருந்த அடக்குமுறை எதிர்ப்புணர்வும், ஆதிக்கத்தை எதிர்க்கிற குணமும், சுய ஆட்சிக்கான வேட்கையும் இச்சொற்பொழிவுகளில் வழியாக மேற்கத்தியர்கள் உணர்ந்து கொண்டனர்.

விவேகானந்தரின் பரந்த பார்வையும், சகிப்புத்தன்மை கொண்ட புதியதை வரவேற்கிற மனநிலையையும் கொண்ட சொற்பொழிவிற்கு மாறாக, இலங்கையின் அனாகரீக தர்மபாலா பௌத்த தேராவாதத்தை ஆரிய சிங்களவர்களின் மதமாக மட்டும் காட்டி தனது குறுகிய மனநிலையைப் பறைசாற்றிக் கொண்டார். கிறித்தவத்தின் போதனைகள் பௌத்தத்திலிருந்து பெறப்பட்டவையே என்றொரு வலுவற்ற வாதத்தையும் அவர் முன்வைத்தார்.

பிரம்ம சமாஜத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான மஜும்தாரோ, கிறித்தவத் திருமுறையின் வசனமான ‘இதோ தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்த்து’ என்பதைக்கூறி தனது வாதத்தை நிறுவ முயன்றார்.

ஆனால், கிறித்தவத்தை சமய ஏகாதிபத்தியம் என்றும், வேதாந்தமே சர்வ தேச மதமாகும் ஆளுகையுடையது என்றும் தன் கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்த விவேகானந்தரின் கருத்து மேற்கத்தையவர்கள் பலரையும் ஈர்த்தது.

புனைவியல் பொதிந்த இந்து சமயத்தின் சகிப்புத்தன்மையும், மற்ற மதங்களுடன் இணங்கிப்போகும் அதன் நெகிழ்வான தன்மையும், சக சமயத்தவர்களுக்குக் காட்டும் அனுசரணை எல்லமே திரும்பத்திரும்ப மேற்கத்தியவர்களை விவாதிக்கச் செய்தது.
தெய்வீக நம்பிக்கைகள், கடவுள் – மனித உறவுகள், பகைவனுக்கும் அருளுதல், அன்பைப் போதித்தல் எல்லா மதங்களிலும் உண்டுதான். இவற்றின் பொதுப்படையான தன்மையை அனைத்து மதக்கூறுகளிலும் காணலாம். ஒத்த அறநெறிகளைப் போதிக்கிறவைதான் மதம் என்பதே மறுக்கவியலாத உண்மை. எல்லா மதங்களுக்கும்அன்பு, கருணை, நீதி என்பவையே என்றென்றைக்குமான தத்துவச் சரடாக இருந்து வருகிறது. இதை உணர்ந்தறியாத வரையில் விவாதங்களும், அதன் நீட்சிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


நல்லதொரு கட்டுரையை வாசிக்கத்தந்த சச்சிதானந்தன் சுகிர்தராஜாவுக்கும், காலச்சுவடுக்கும் நன்றி.மேலதிக வாசிப்புக்கு :

1.   1. காலச்சுவடு நவம்பர் 2013பொன்.வாசுதேவன்


Comments system

Disqus Shortname