Monday, October 26, 2009

‘பிரிக் லேன்‘ பெண்மையின் உணர்வுப் போராட்டம்


பால்யத்தில் நம்மில் பலரும் சிறுசிறு முடிவுகளை மனதில் வைத்திருந்திருப்போம். வளர்ந்த பிறகு அதைப்பற்றி யோசித்தால் எல்லாமே விளையாட்டுத்தனமாய் இருந்திருக்கும் அல்லது நடைமுறையில் சாத்தியமில்லாததாக இருக்கும். அப்படியாக வயல் வெளிகளில் பட்டாம் பூச்சி பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் இரு சகோதரிகளின் சந்தோஷ மனோநிலை, தாயின் தற்கொலைக்கு பிறகு மாறுகிறது. கிராமத்து சூழலில் இருந்து 17 வயதில் தன்னை விட இரு மடங்கு வயது மூத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் குடியேற நேரிடும் பெண்ணை பற்றிய கதை 'Brick Lane'

திருமணம் என்ற நிகழ்வு பெண்ணுக்குள் ஏற்படுத்தும் அகசிக்கல்களை பேசும் 'மோனிகா அலி' எழுதிய சர்ச்சைக்குரிய 'பிரிக் லேன்' நாவலை தழுவி எடுக்கப்பட்டது. 2007-ல் வெளியாகிய இப்படத்தை இயக்கியவர் 'சராஃ கவ்ரோன்'

'என் கிராமத்தை விட்டு தூர எங்குமே செல்ல மாட்டேன்' என்ற தன் பால்ய முடிவுக்கு மாறாக அன்பற்ற கணவனோடு வாழ வேண்டிய கட்டாயத்தில் சகோதரியை பிரிந்து லண்டனில் வசிக்கும் பங்களாதேஷ் முஸ்லீம் பெண் 'நஸ்நீன்' (தனிஷ்டா சட்டர்ஜி).

16 வருட லண்டன் வாழ்க்கையில், 32 வயதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகவும், எப்போதும் ஓயாமல் தத்துவம் போதித்து, மனைவி, குழந்தைகள் தனக்கு அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கருதும் கணவனை சகித்துக் கொண்டிருக்கிறாள் நஸ்நீன். பதவி உயர்வு தனக்கு கிடைக்காத வெறுப்பில் வேலையை துறந்து விட்டு வரும் கணவன் 'சானு' (சதீஷ் கோசிக்), தன்னுடைய திறமையை புரிந்து மீண்டும் தனக்கு இதைவிட பெரிய வேலை கிடைக்கும் என்று 'வாய் சொல் வீரனாக' காலம் கடத்துகிறான்.

பிறந்த மண்ணான பங்களாதேஷ் கிராமத்து நினைவுகளையும் அங்கிருக்கும் தன் சகோதரியையும் மறக்க முடியாமல் எப்படியாவது பங்களாதேஷ் திரும்பி விடலாம் என்று நினைக்கிறாள் நஸ்நீன். அவளது யோசனையை மறுத்து பொறுப்பற்று கடனில் கம்ப்யூட்டர் வாங்கி வந்து, புதுப்புது வேலைகளை செய்து பணம் சம்பாதிப்பது பற்றிய முயற்சிகளின் செய்து தோல்வியை சந்திக்கிறான் சானு.

தனக்கு தெரிந்த தையல் தொழிலை கொண்டு வருமானம் ஈட்ட முயல்கிறாள் நஸ்நீன். துணிகளை தைக்க கொண்டு வந்து தரும் இளைஞனான கரீம் அறிமுகம் ஈர்ப்பாகி காதலாகிறது. கரீம் மீதான காதல் உடல் ரீதியான தொடர்பில் முடிகிறது. கணவன் சானு வாங்கிய கடனை அடைத்து முடிக்கிறாள். இடையே அடிக்கடி பங்களாதேஷ் திரும்ப சென்று தன் இளமை கால இனிய வாழ்க்கை வாழ முடியாதா என்று ஏங்குகிறாள். பங்களாதேஷில் இருக்கும் நச்நீனின் சகோதரி தான் மிகவும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கடிதத்தில் எழுதுகிறாள்.

நஸ்நீன் சகோதரி யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் வேறு வேறு நபர்களுடன் வாழ்ந்து கட்டுபாடற்ற சுதந்திரத்துடன் இருக்கிறாள். இதற்கிடையில் திடீரென நச்நீனின் கணவன் சானு 'நாம் பங்களாதேஷ் திரும்பி விடலாம்' என்று கூறி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறான். கரீம் மீதான அன்பில் இருக்கும் நஸ்நீன் அதை விரும்பவில்லை, அதை கணவனிடம் சொல்லவும் தயங்குகிறாள்.

நஸ்நீனின் மூத்த மகளாக வரும் பாத்திரம் மிகவும் கூர்மையானது. பெண்களுக்கு இடையே உள்ள தலைமுறை இடைவெளியை துல்லியமாக வெளிப்படுத்தும் கதா பாத்திரமாக வரும் நஸ்நீனின் மூத்த மகள், தன் அம்மாவை போல எல்லாவற்றிலும் அப்பாவை ஏற்றுக் கொள்ளாமல் அவரது முரண்களை நேருக்கு நேராக சுட்டிக்காட்டுகிறாள். நஸ்நீன் கணவன் சானு தன் மனைவியை அடக்கி ஏமாற்றுவது போல தன் மகளை தன் ஆதிக்கத்தினுள் கொண்டு வர முயன்று ஒவ்வொரு முறையும் தோற்று விடுகிறான்.

ஒரு கட்டத்தில் நஸ்நீனின் மூத்த மகள் தன் அம்மாவாவை பார்த்து ' நீ அந்த கரீம் உடன் காதல் கொண்டிருக்கிறாயா..' என்று கேட்கவும் செய்கிறாள். கூர்மையான பார்வையும், வசனங்களும் கொண்ட அப்பெண்ணின் நடிப்பு மிகவும் அருமை.

இறுதியில், சானு தன் மனைவி, மற்றும் இரண்டு மகள்களையும் லண்டனில் விட்டு தான் மட்டும் பங்களாதேஷ் செல்கிறான். அன்பற்ற கணவனோடு வாழ வேண்டிய சூழலில், கிராமத்து நினைவுகளோடு அடக்கப்பட்ட நிலையில் வளரும் நஸ்நீன் மனப்போராட்டங்கள் துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

000

- பொன்.வாசுதேவன்

Sunday, October 25, 2009

‘அகநாழிகை‘ இதழ் விமர்சனம் - நிலாரசிகன்

‘அகநாழிகை‘ முதல் இதழ் பற்றி ‘நிலாரசிகன்‘ விமர்சனம்சிற்றிதழ் நடத்துவது பற்றி ஒரு இதழாளர் சொன்ன வாக்கியம் "சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது". வேடிக்கையாக தோன்றினாலும் இதன் பின்னாலிருக்கும் வலி சிற்றிதழ் நடத்துபவர்களாலும் அதை சார்ந்து இயங்கும் எழுத்தாளர்களாலும் மட்டுமே உணரப்படுவது. மிக முக்கிய காரணம் வெகுஜன இதழ்கள் போல் பல வகையான செய்திகளை சிற்றிதழ்கள் தாங்கி வருவதில்லை.

இதன் காரணமாகவே சிற்றிதழாளர்களின் வருமானம் அசலை விட எப்போதும் குறைவாகவே இருக்கிறது(ஒரே வார்த்தை "நஷ்டம்") அதையும் மீறி பல சிற்றிதழ்கள் இன்று வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தப்படுவதற்கான மிக முக்கிய காரணம் இலக்கியம் மீதான தீராத காதலும் தாகமும் எனலாம். நவீன விருட்சம் இதழ் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக வருவதற்கு காரணம் அதன் ஆசிரியர் அழகிய சிங்கர் இலக்கியம் மீது கொண்ட தணியாத தேடல் மட்டுமே.

இம்மாதம் வெளியாகி இருக்கும் அகநாழிகை இதழின் உள்ளடக்கம் மிக நேர்த்தியானதாக இருப்பதை கண்ட போது இது முதல் இதழா அல்லது முப்பதாவது இதழா என்கிற சந்தேகமே என்னுள் எழுந்தது. இதழின் ஆசிரியர் பொன்.வாசுதேவன் மற்றும் அவரது ஆசிரியர் குழுவின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.

சிறுகதைகள்:

1.பூனைக்குட்டி - பாவண்ணன்
இந்த சிறுகதை ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்க இன்னும் இருநாளாகலாம். எங்கெல்லாம் பூனைக்குட்டியை பார்க்கிறேனோ அங்கெல்லாம் "வைதேகி"யின் முகம் நிழலாடி மறைகிறது. அதீதமான ரோமங்கள் உடலெங்கும் வளர்ந்து,நோய் பீடிக்கப்பட்டு பூனைக்குட்டி பொம்மைகளுடன் மட்டுமே தன்னுலகை சிருஷ்டித்துக்கொள்ளும் அந்தச் சிறுமியின் உணர்வுகள் ஒவ்வொரு வரியிலும் நம்முடன் உரையாடி செல்கின்றன. (உமா மகேஷ்வரியின் மரப்பாச்சி சிறுகதையின் முடிவை ஒத்ததாக இக்கதையின் முடிவு அமைந்திருக்கிறது)

2.கிறக்கம் - யுவன் சந்திரசேகர்.
இம்மாதம் உயிர்மை, காலச்சுவடு, வார்த்தை. அகநாழிகை அனைத்திலும் யுவனின் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. ஒரு கதைக்கும் மறுகதைக்கும் சம்பந்தமே இல்லை (நடையில்). வழக்கம்போலவே அசத்தலான புனைவு.

3.ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும் - ஜ்யோவ்ராம் சுந்தர்
வெகு சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர் சுந்தர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படைப்பிது. உதாரணமாக இவ்வரிகளை குறிப்பிடலாம் "ஓங்கி ஒரு அறை விட்டான் (இலக்கணம் பார்ப்பவர்கள் ஓர் அறைவிட்டான் என்று வாசித்துக்கொள்ளவும்). பின்நவீனத்துவ கதை என்பதற்கான எல்லா அறிகுறியும் இக்கதையை நிறைத்திருக்கின்றன. சிறுகதைக்கு "தொடரும்" போட்டு முடித்திருக்கிறார்.

மேலும் ஐந்து கதைகள்:

நீல ஊமத்தம் பூ - கெளதம சித்தார்த்தன்
கிளி ஜோசியம் - யுவகிருஷ்ணா(லக்கிலுக்)
ஓடும் குதிரைக்கு பத்து கால்கள் - ரா.கிரிதரன்
பாலை நில காதல் - எஸ்.செந்தில்குமார்
மழை புயல் சின்னம் - விஜயமகேந்திரன்

(இக்கதைகளுக்கான குறிப்பை அகநாழிகை இதழுக்கு சந்தா செலுத்தி படித்து விடுங்கள் :)

கவிதைகள்:

இணையத்தில் பரவலாக எழுதும் கவிஞர்களின் படைப்பும் சிற்றிதழ்களில் தீவிரமாக இயங்கும் கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

என்னை அதிகம் கவர்ந்த குறுங்கவிதை:

தன்னிரக்கம்

வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்.

- சேரல்

கட்டுரைகள்:

1.தமிழ்சினிமாவும் தமிழனும் சில மசால் வடைகளும் - அஜயன்பாலா சித்தார்த்:

2.ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரல் - வே.அலெக்ஸ்

3.பரமார்த்த குருவும் சீடர்களும் அல்லது கள்ளத் தீர்க்கதரிசியும் பரிசுத்த ஆவிகளும் - வளர்மதி

4.அலகிலா சாத்தியங்களினூடே... - வெ.சித்தார்த்

முதல் கட்டுரையில் தமிழ்சினிமா 80 முதல் 1990 வரை அலசி ஆச்சர்யமூட்டும் பல தகவல்களை தொகுத்திருக்கிறார் அஜயன்பாலா. To be honest மற்ற கட்டுரைகள் இன்னும் வாசிக்கவில்லை :)

பிற:

1.கேபிள் சங்கர் இயக்கிய 'விபத்து' குறும்பட அறிமுகம்
2.உரையாடல் சிறுகதை பட்டறை குறித்த தனதனுபவத்தை பதிவு செய்திருக்கிறார் ஆதிமூலக்கிருஷ்ணன்
3.டச்சு மொழி திரைப்பட விமர்சனம் - நதியலை

ஒரே குறை:

தலையங்கம் எங்கே? சரி வேண்டாம் முதல் இதழ் பற்றிய குறிப்பாவது ஆசிரியர் கொடுத்திருக்கலாம். படைப்பாளிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் இதழ் நடத்தும் நான் பார்வையாளனாக இருந்துகொள்கிறேன் என்று நினைத்திருப்பாரோ ?

பொன்.வாசுதேவனின் கவிதைகளும் இடம் பெற்றிருக்கலாம்.

குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய +:

1. சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தற்போதைய இலக்கிய இதழ்கள் இரண்டு
உயிரெழுத்து(ஐந்து அல்லது ஆறு கதைகள்), யுகமாயினி(நான்கு கதைகள்). அகநாழிகை முதல் இதழிலேயே எட்டு சிறுகதைகளுக்கு இடமளித்திருப்பது சிறுகதை இலக்கியம் மீதான வாசக ஈர்ப்பை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள்.

2. சிறுகதைகளுக்கும், கவிதைகளுக்கும் ஏற்ற புகைப்படங்கள்.

சந்தா மற்றும் மேலதிக விபரங்களுக்கு

000

Saturday, October 24, 2009

‘அகம்‘ லயித்த ‘நாழிகை‘கள்

எனது 50-வது பதிவும் நான் கண்ட பதிவுலகமும் என்ற பதிவின் வாயிலாக நண்பர் குளோபன் அவர்கள் அறிமுகமானார்.  பதிவுலகம் பற்றிய அவரது நுட்பமான ஆய்வுப்பார்வை என்னை ஈர்த்தது.  எப்போதாவது மட்டுமே எழுதும் அவரது படைப்புகளை தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். இருமுறை நேரிலும் சந்தித்ததுண்டு. அகநாழிகை இதழைப் பற்றி குளோபன் எழுதியிருக்கும்  ‘அகம்‘ லயித்த ‘நாழிகை‘கள் என்ற பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குளோபனுக்கு நன்றி.

‘அகம்‘ லயித்த ‘நாழிகை‘கள்

‘அகநாழிகை’ என்ற சமூக கலை இலக்கிய இதழை வாசித்த கணங்களில் ஏற்பட்ட அனுபவம் தான் இந்தப் பதிவின் தலைப்பு.

தொடர்ந்து ஊடகம் பயிலும் மாணவனான எனக்கு, சிற்றிதழ்கள் வாசிக்கும் முனைப்பு இருந்ததில்லை. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று… எனக்கு சிற்றிதழ்களின் எழுத்துகளை உள்வாங்கும் திறனில்லை என்ற நினைப்பு. மற்றொன்று… அத்தகைய எழுத்துகளை வாசிப்பதால், எனது கிறுக்கல்களும் எளிமை என்ற அடையாளத்தில் இருந்து விலகிப்போய்விடுமோ என்ற அச்சம்.

அண்மைக்காலமாக சிற்றிதழ்கள் பக்கம் வலம் வராத காரணத்தால், ‘அகநாழிகை’ இதழை வாசித்ததால் உண்டான அனுபவத்தைப் பதிவதில் தயக்கம் இருந்துகொண்டே இருந்தது.

அந்த இதழை வாசித்ததால் உண்டான அனுபவத்தைப் பதிவு செய்யப் போக, அதனை ‘விமர்சனம்’ என்கிற ரீதியில் சிலர் எடுத்துக்கொள்ளக் கூடுமோ என்ற சந்தேகமே, எனது தயக்கத்துக்குக் காரணம்.

எனவே, அகநாழிகை குறித்த இந்தப் பதிவை, அந்த இதழின் வாசகனுடையை அனுபவம் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்க வேண்டுமே தவிர, விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

aga

*

மாலை 5 மணி. கேரளாவுக்கான ஜன்னலோர ரயில் பயணம். நான் என்றும் விரும்பும் நகர சப்தங்கள் குறையத் தொடங்கி, எப்போதாவது விரும்புகின்ற தனிமையையும் அமைதியும் சூழ்ந்தபோது, அகநாழிகையை புரட்டத் தொடங்கினேன்.

*

முதற்பக்கம்…

இதழின் முதற்பக்கமே நெருக்கத்தை மிகுதியாக்கியது. பதிவுலகில் அவ்வப்போது வாசிக்கும் எழுத்துகளின் சொந்தக்காரர்கள் சிலரது பெயர்களைக் கண்டு ஆர்வத்துடன் புரட்டத் தொடங்கினேன்.

*

முதலில் வாசித்தது, அஜயன்பாலா சித்தார்த்தனின் ‘தமிழ்சினிமாவும், தமிழனும், சில மசால்வடைகளும்’. நான்கே முக்கால் பக்கங்களில் 500 பக்கங்களில் எழுதப்பட்ட தமிழ் சினிமா ஆய்வுக்கட்டுரையை படித்த அனுபவம். மிகச் சுருக்கமானதும் எளிமையானதுமான விவரிப்பாக இருந்தாலும், அதில் பொதிந்திருந்த தகவல்களைத் திரட்ட பல காலம் ஹோம்வொர்க் செய்திருக்க வேண்டும். ஆனால், பத்து ஆண்டு கால தமிழ் சினிமாவில் சிறந்தவையாக 18 படங்களை மட்டும் தேர்வு செய்திருந்த ‘சுருக்கம்’ மட்டும் ஏமாற்றமளித்தது.

*

கதைகள், கட்டுரைகளுக்கு இடையிடையே கவிதைகளை வாசித்தேன். தமிழ்நதி தொடங்கி முத்துசாமி பழனியப்பன் வரை (முதல் பக்கத்தில் இருந்த வரிசையின் படி) 30 கவிதைகள். ‘இனிய கீதம் சோகமுடைத்து,’ என்பதைப் போல் சில கவிதைகள் மனத்தை கணமாக்கின; படித்த முடித்த போதுதான் பல கவிதைகள் துவங்கின. அதாவது, கவிதையைப் படித்து முடித்தவுடன், அது சார்ந்து சிந்திக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இதுவே, இலக்கியத்தின் முக்கிய நோக்கமென கருதுகிறேன்.

ஒவ்வொரு கவிதையும் தந்த அனுபவத்தை பிசிறின்றி வெளிப்படுத்த இயலாதவன் என்பதால் இங்கு சுருக்கம் என்பது அவசியமாகிறது.

*

எனக்கு அருகாமை உணர்வை ஏற்படுத்திய இன்னொரு விஷயம், குறுப்பட பகிர்வுகள். ‘சியர்ஸ்’ குறும்படத்தின் இசையை, நண்பர் அனில் அமைத்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த தருணத்தை நினைவுகூரும் வாய்ப்பு ஏற்பட்டது மகிழ்வுக்குரியது. மறைபொருள், விபத்து ஆகிய படங்களையும் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் உண்டானது.

*

வெ.சித்தார்த்தின் ‘அலகிலா சாத்தியங்களினூடே’ கட்டுரை, இலக்கியத்தை வாசித்தல் குறித்த புரிதலை அதிகப்படுத்தியது. வளர்மதியின் ‘பரமார்த்த குருவும்…’ கட்டுரையை ஏனோ இன்னும் படிக்கவில்லை. காரணத்தை ஆராயவும் மனமில்லை. இன்னொரு தனிமைச் சூழலில் படிப்பேன் என்று நம்புகிறேன்.

நதியலையின் ‘பிரிவில் கிளர்ந்தெழும் நெருக்கம்’ உண்மையில் நெருக்கத்தை உண்டாக்கியது. ‘மகோனியா’ என்ற டச்சுத் திரைப்படத்தைப் பற்றியது அக்கட்டுரை. அந்தப் படத்தை அண்மையில் தான் பார்த்தேன். இந்நேரத்தில், தற்காலிகமாக ‘வோர்ல்ட் மூவீஸ்’ சேனலை நல்கிய எங்கள் ஏரியா கேபிள் ஆபரேட்டருக்கும், அந்த நேரத்தில் ‘மகோனியா’ படத்தை இட்ட ‘வோர்ல்ட் மூவீஸ்’ சேனக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அற்புதமான நெகிழவைத்தப் படைப்பு. அந்தப் படத்தில் உள்ள மூன்றாவது கதை ஏனோ இந்தக் குறுக்குப் புத்திக்காரனுக்கு “இயற்கை” படத்தை நினைவூட்டியது. மகோனியா பற்றிய நதியலையின் விவரிப்பு, அந்தப் படத்தைப் பார்க்காதவருக்குக் கூட நெருக்கத்தைத் தரக்கூடும். அந்தக் கட்டுரையை வாசிக்க…http://nathiyalai.wordpress.com/2009/10/14/magonia/

*

“ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரலை” கேட்க வாய்ப்பளித்த வெ.அலெக்ஸ் மற்றும் அகநாழிகை ஆசிரியருக்கு சிறப்பு நன்றியை உரித்தாக்குகிறேன்.

*

ஆதிமூல கிருஷ்ணனின் அனுபவத்தை உணர முடிந்தது, வலையுலகம் பற்றிய அறிமுகம் இருந்ததால்.

*

கெளதம சித்தார்த்தன், யுவன்சந்திரசேகர், எஸ்.செந்தில்குமார், விஜயமகேந்திரன். ஜ்யோவ்ராம் சுந்தர், யுவகிருஷ்ணா, ரா.கிரிதரன் ஆகியோரது சிறுகதைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட களத்தை வெளிப்படுத்தியதே தனி அனுபவம் தான்.

யுவகிருஷ்ணாவின் கிளிஜோசியத்தைப் பார்க்க.. அல்ல, படிக்க…http://www.luckylookonline.com/2009/09/blog-post_08.html

*

தெரிந்தோ தெரியாமலோ அது நிகழ்ந்தது. அந்த ரயில் பயணத்தில் நான் கடைசியாகப் படித்தது, பாவண்ணனின் ‘பூனைக்குட்டி’ சிறுகதை. கதையைப் படித்த முடித்த பிறகு… …………….. ………….. ………………. …………………. (ஆம், செயலற்றுப்போக நேர்ந்தது).

ஒருவேளை ‘பூனைக்குட்டி’யை முதலில் படித்திருந்தால், அந்த ரயில் பயணத்தில் அகநாழிகையின் மற்ற படைப்புகளைப் படிக்காமல் போயிருப்பேனோ?

*

வாசிக்க சில இதழ்கள் பக்கத்தில் சக இதழ்களின் விவரங்களை அளித்திருப்பது, என்னைப் போன்ற பலருக்கும் பயன் தரக்கூடும்.

*

அகநாழிகை தந்த அனுபவம், டிசம்பர் மாதமும் கேரளாவுக்கு ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையை உண்டாக்கியிருக்கிறது.

அகநாழிகை இதழ் குறித்து அறிய…http://www.aganazhigai.com/2009/10/2009.html

*

என் எண்ணம் சரியானதா? தவறானதா? என்று தெரியவில்லை. இருந்தாலும் பதிந்துவிடுகிறேன்…

சிற்றிதழ்களைப் பொறுத்தவரையில், எழுத்துகள் எளிமையாக இருக்கும்பட்சத்தில் இலக்கியம் வாசிப்போரின் எண்ணிக்கை மிகுதியாகலாம் என்றே தோன்றுகிறது.

ஒரு சமூகம் சிந்திக்கும் ஆற்றல் மிகுந்த மக்களால் நிறைந்திருக்க வேண்டுமென்றால், அதற்கு முக்கிய பங்களிப்பாக இலக்கியம் மிகுதியாக படைக்கப்பட்டுக்கொண்டே இருத்தல் வேண்டும் என்றே நம்புகிறேன். அந்த இலக்கியம், சமூகத்தில் உள்ள அனைவரையுமே சென்றடைய எளிமையான எழுத்தே சிறந்த வழிகளுள் ஒன்றாக இருக்கக் கூடும்!

*

- குளோபன்

Wednesday, October 21, 2009

உயிரோசை இதழில் ‘அகநாழிகை‘ அறிமுகம்தமிழின் முன்னணி கலை இலக்கிய சமூகவியல் இதழான ‘உயிர்மை‘ பத்திரிகையின் இணைய இதழான ‘உயிரோசை‘ இதழில் சிற்றிதழ் அறிமுகம் பகுதியில் அகநாழிகை இதழ் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு நன்றி.

உயிரோசையில் வெளியான பதிவுஅகநாழிகை

(சமூக கலை இலக்கிய இதழ்)
விலை : ரூ.25
ஆண்டுச் சந்தா: 150
ஆசிரியர் : பொன்.வாசுதேவன்
முகவரி :
அகநாழிகை-பொன்.வாசுதேவன்,
33,
மண்டபம் தெரு, மதுராந்தகம்-603 306.
கைப்பேசி : 99945 41010


சிற்றிலக்கிய உலகில் ஓர் புது வரவு !

தலையங்கம் மற்றும் தன் நோக்கம் இதுதான் என்ற பிரகடனம் ஏதும் இல்லாமல், இதில் வெளியாகும் படைப்புக்களே அதையெல்லாம் பறைசாற்றிவிடும் என்ற நம்பிக்கையுடன் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று தமிழ் அரங்கம் என்றும் வற்றாத சுரங்கம்என்பதை நிரூபிக்கும்வகையில் பக்கங்கள் (68 பக்கம்- 4 அளவு) நிறைய படைப்புக்களுடன் உதயமாகியிருக்கிறது அகநாழிகை‘.

பாவண்ணன், யுவன் சந்திரசேகர், எஸ்.செந்தில்குமார் என, சிற்றிதழ்களில் அதிகம் எழுதும் படைப்பாளர்களின் ஏழு சிறுகதைகள், தமிழ்நதி, லீனா மணிமேகலை, சுதீர் செந்தில் என விரியும் 30 கவிஞர்களின் ஆக்கங்கள், ஏழு கட்டுரைகள் - கனமான சிற்றிதழ்தான்!

தமிழ் சினிமாவும், தமிழனும், சில மசால் வடைகளும்என்ற கட்டுரை 1980முதல் 1990 வரையிலான தமிழ் சினிமாவின் நிலையை விவரிக்கிறது. பதினாறுவயதினிலே முதல் தமிழ் சினிமா ஏறிய சிகரங்களையும் பின்னர் அது கண்ட பாதாளத்தையும் நுணுக்கமாக விவரித்திருக்கிறார் அஜயன்பாலா சித்தார்த். சினிமா ரசனையாளர்கள் அனைவரும் படிக்கவேண்டிய கட்டுரை.

ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரல் என்ற கட்டுரையை வே.அலெக்ஸ் எழுதியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக முதன் முதலாக இந்திய (காலனிய இந்தியா) தேசிய அளவிலான இயக்கத்திற்கு வித்திட்டவர், இத்தேசத்தின் முதல் தலித் அரசுப் பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்தவர், முதல் பாராளுமன்ற உறுப்பினராக (1925இல்) பதவி வகித்தவர் - பெருந்தலைவர் எம்.சி.ராஜா. இவரது பாராளுமன்ற உரையை கட்டுரையாக்கியிருக்கிறார். (ஒடுக்கப்பட்ட இனத்தவரின் நிலையைப் பற்றி சிந்திப்பதே கொடூரமானது. நாட்டின் ஒரு பகுதி மக்களை மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திடும்வகையில் சட்டங்களை வகுத்து வைத்துள்ளார்கள்...)

பல கவிதைகள் மனதில் நிற்கின்றன. . .

எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்

எனினும்
பின்மழைப் பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை.

இலக்கிய வரலாற்றில் மட்டுமல்ல, படிப்போர் நெஞ்சங்களிலெல்லாம் நிலைத்துநின்று சாதனை படைக்கக் காத்திருக்கும் அகநாழிகையை வாழ்த்தி வரவேற்போம்.

- பாண்டியன்
Comments system

Disqus Shortname