எல்லா சுபாவங்களுமே போதைதான். எழுதுவது, படிப்பது, பேசுவதும் இதில் அடக்கம். 1989 முதல் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பிடித்துக் கொண்டிருந்த இந்த பித்தின் உச்ச நிலையாக எனக்கு சஞ்சிகை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் முளை விட்டு மரமாக வளர்ந்து பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. மிகுந்த மனத் தயக்கங்களோடும், பொருளாதார ரீதியாக எதிர் கொள்ள வேண்டியிருக்கும் சிக்கல்களைப் பற்றி பலமுறை யோசித்துக் குழம்பியும், விட்டுவிட முடியாத இந்த போதை கடைசியில் என்னை வென்றது.
000
இரு மாத கால உழைப்பிற்கு பிறகு இப்போது ‘அகநாழிகை‘ வெளிவந்திருக்கிறது. நண்பர்கள் அனைவரின் ஆதரவும், படைப்புகளும், பங்களிப்பும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன். ஆகச்சிறந்த படைப்புகளும், மாற்றுக்கருத்துகளை ஏற்கும் ஒரு சுதந்திர இதழாக அகநாழிகை இருக்க வேண்டும். இருக்கும். தமிழின் குறிப்பிடத்தக்க இதழாக பரிமளிக்கவிருக்கும் ‘அகநாழிகை‘யின் அடுத்த இதழுக்கான படைப்புகள் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகிறது. சந்தா, புரவலர் மற்றும் விளம்பரங்கள் வந்தால் கூடுதலாய் மகிழ்ச்சியும், இதழை தொடர்ந்து வெளிக்கொண்டு வருவதற்கான உந்து சக்தியாகவும் விளங்கும்.
கூடுதலாக ஒரு செய்தி, அகநாழிகை வலைத்தளமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
000
எல்லா ஞாயிறுகளும் ஏதாவது ஒரு இலக்கிய நிகழ்வாகவும், எழுத்தாள நட்புகளின் சந்திப்பாகவும் ஆகிவிடுகிறது. கடந்த ஞாயிறன்று (11.10.09) இரண்டு நிகழ்வுகளில் பங்கேற்றேன். முதலாவது, திரு.சித்தன் அவர்களை ஆசியராக கொண்டு கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘யுகமாயினி‘ இலக்கிய இதழ் மாதாமாதம் ‘இலக்கியக்கூடல்‘ என்றொரு நிகழ்வை நடத்துகிறார்கள். இந்நிகழ்வின் பல கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
இந்த மாத கூட்டத்திற்கு அழைத்த திரு.சித்தன் அவர்கள், ‘அகநாழிகை‘ இதழ் பற்றி கூட்டத்திற்கிடையே அறிமுகம் செய்ததோடு, என்னையும் சில வார்த்தைகள் பேசும்படி கேட்டுக் கொண்டார். தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் இலக்கிய இதழ்களின் வடிவமான (Format) ஒரு பத்திரிகையில் எழுதும் எழுத்தாளர் வேறு பத்திரிகையில் எழுதுவதில்லை, ஒவ்வொரு பத்திரிகைக்கும் முகவர் போல எழுத்தாளர்கள் செயல்படுவது, கவிதைகளில் புதியவர்களை வரவிடாமல் முடக்குவது, இலக்கியப் பத்திரிகையில் அரசியல் எழுதி அதன் வாயிலாக தங்கள் சுயவிருப்பம் சார்ந்த கருத்துக்களை விதைப்பது என்று எனக்கு மனதில் பட்ட சில கருத்துக்களை கூறினேன்.
திரு.சித்தன் பேசும்போது, “புதியவர்களின் எழுத்துக்களை அறிமுகம் செய்யாததுடன், ஏற்கனவே சிறப்பாக எழுதிக் கொண்டிருந்த பல எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா இவர்களை விட்டால் தமிழ்நாட்டில் வேறு எழுத்தாளர்களே இல்லையோ என்ற போலியான சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலைமை இன்று உள்ளது“ என்றார்.
இக்கூட்டத்தில் ‘இசைத்தமிழ்‘ என்ற தலைப்பில் ப.முத்துக்குமாரசாமி, ‘புதுக்கவிதையில் பெண் கவிஞர்கள் இன்று‘ என்ற தலைப்பில் க்ருஷாங்கினி, கோவை ஞானி எழுதிய ‘நெஞ்சில் தமிழும், நினைவில் தேசமும்‘ என்ற நூலாய்வு உரையை இரா.எட்வின் அவர்களும் அளித்தனர். கேணி இலக்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் இந்நிகழ்வில் முழுமையாக பங்கேற்கவில்லை. பழமையை விட்டுக் கொடுக்காமல், புதியவர்களையும் அணைத்துச் செல்லும் திரு.சித்தன் அவர்களின் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை.
000
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞாநி அவர்களின் இல்லத்தில் ‘கேணி‘ இலக்கிய கூட்டம் மாதாமாதம் நடைபெறுவது அனைவரும் அறிந்திருப்பீர்கள். இலக்கிய ஆர்வலர்களின் வேடந்தாங்கலாகிவிட்ட இக்கூட்டத்தில் இந்த மாதம் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவரது துணைவியாருடன் பங்கேற்று தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.
கி.ரா.வின் கருத்துப்பகிர்வுகளுக்குப் பிறகு கேள்வி – பதில் உரையாடல் நடைபெற்றது. கி.ரா. பேசும்போது நான் அவரின் பின்னால் இருந்ததால், கூட்டத்தில் பங்கேற்ற அத்துணை பேரின் முகத்தையும் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு முகத்திலும் தெரிந்த ஆர்வமும், அவதானிப்பும்... மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த உணர்வு நிலை பரவசத்தை வேறு எதிலும் அடைய முடியாது என்றே தோன்றுகிறது. இச்சூழலை சாத்தியப்படுத்திய ஞாநிக்கு நன்றி என்ற எளிய வார்த்தையை சொல்லி ஈடுகட்டிவிட முடியாது.
கி.ரா.வின் நிகழ்விற்குப் பிறகு ஞாநி, ‘கோலம்‘ இயக்கம் பற்றியும், கேணி இலக்கிய கூட்டம் மாலை 3.30 அல்லது 4.00 மணிக்கு நடத்துவது குறித்தும் ஆலோசித்தார். பிறகு, கௌதம சித்தார்த்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘உன்னதம்‘ இதழ் பற்றிய அறிமுகத்தையும், ‘அகநாழிகை‘ பற்றிய அறிமுகத்தையும் செய்து வைத்தார். அகநாழிகை அறிமுக இதழாக அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பிறகு நான், கௌதம சித்தார்த்தன், செல்வ.புவியரசன், தண்டோரா என்கிற மணிஜி, சங்கர் நாராயண் என்கிற கேபிள்சங்கர், நரன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம்.
000
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல்
உங்களுக்கும் ஆசை உண்டா ?
அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்...
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை அக்டோபர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அதன் பின்னர் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும் பார்வையாளரும் நேரடியாக உறவு கொள்ளும் இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
ஊர் கூடி தேர் இழுப்போம்.
முன்பதிவுத் தொகை : இந்தியாவுக்குள் : ரூ500. வெளிநாடுகள் : 15 அமெரிக்க டாலர்.
கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி : கோலம். மே/பா, ஞாநி, 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை - 78.
செல்பேசி: 9444024947 மின்னஞ்சல்:kolamcinema@gmail.com
நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம்.
பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
மேலும் விவரங்களுக்கு : www.kolamcinema.org
ஞாநியின் ‘கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கம்‘ சார்பில் அளிக்கப்பட்ட விவரங்களை அளித்துள்ளேன். ஆதிக்க சினிமாவை முதலாளிகள் கையிலிருந்து மக்கள் சினிமாவாக ஆக்குவதற்கான இதுபோன்ற முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டியது அவசியம்.
000
‘அகநாழிகை‘ சஞ்சிகை தயாரிப்பு பணிகளில் இருந்ததால் புத்தகங்கள் படிக்க நேரம் குறைந்து விட்டது குறித்த கவலையாக இருந்தது. அகநாழிகைக்காக விளம்பரம் கேட்டு புலம் பதிப்பக அலுவலகம் சென்ற போது, அங்கு சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் முத்தையா வெள்ளையன் தொகுத்திருந்த ‘குடி‘யின்றி அமையாது உலகு என்ற புத்தகமும் ஒன்று.
தலைப்பு முதலில் அதை வாசிக்க வேண்டும் என்ன உந்துதலை ஏற்படுத்தியது. வாசித்துக் கொண்டிருக்கிறேன். குடி மனோபாவம் பற்றி தந்தை பெரியார், அ.மார்க்ஸ், விக்ரமாதித்யன், ஜெ.பிரான்சிஸ் கிருபா, நாஞ்சில்நாடன், ஜமாலன், ஹெச்.ஜி.ரசூல், பெருமாள் முருகன், ரெங்கையா முருகன், ஹரி சரவணன் ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. குடி பற்றிய சில புத்தகங்கள் ஏற்கனவே வந்திருந்தாலும், அவற்றை நினைவுபடுத்தும் கட்டுரைகள் இல்லாதது ஆறுதலாக இருந்தது. மது நிரப்பப்பட்ட கோப்பைகளிலிருந்து அல்லது பிளாஸ்டிக் டம்ளர்களிலிருந்து காலியாவது வெறும் மது மட்டுமல்ல. உணர்வு ரீதியாக மது எழுப்பும் மன மாற்றங்கள், நல்லதாகவும், கெட்டதாகவும் அதிகம் உண்டு. மது பாவிப்பவர்கள் மட்டுமின்றி, அவர்களைப் புரிந்து கொள்ள குடிப்பழக்கம் இல்லாதவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் என மது பாவிப்பவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
000
“ஒழுங்கா, ராத்திரியான குவார்ட்டரை குடிச்சமா, காலையில வேலைய பாத்தமான்னு இருந்திருக்கணும். தெனம் காலையில எழுந்ததும் குடிக்கப் போனதுக்கு இதான் தண்டனை“
“அண்ணே ஒரு பீடி இருக்குமாண்ணே, பைத்தியம் பிடிச்சுரும் போலிருக்கு. இப்படி அடைச்சு வெச்சு சாவடிக்கறாங்க“
“ஒரு நாளைக்கு பத்து ஹான்ஸ். எப்பவும் போதையாவே இருக்கணும். இல்லன்னா வேல ஓடாதுண்ணே. நான் போட்டா இவங்களுக்கென்ன, நான் என்ன மத்தவங்க மாதிரி எப்பவும் குடிச்சிட்டிருக்கனா“
“எப்படியும் தீபாவளிக்கு இரண்டு நாள் வீட்டுக்கு அனுப்புவாங்க. மாத்திரையை நிறுத்திட்டு சரக்க போட்டுற வேண்டியதுதான்.“
“ஏன் உங்க அம்மாவும், மனைவியும் வந்து பாக்கவேயில்ல.“
“அதை என்னைக் கேட்டா என்ன தெரியும், கொண்டாந்து விட்டதோட சரி. நான் தீபாவளிக்கு அனுப்பினாலும் போகப் போறதில்ல“
“ஒரு நாளைக்கு ஆறு கிளாஸ் (வகுப்பு) வெச்சா எப்படி, படிக்கறத வெறுத்துதான் குடிக்க ஆரம்பிச்சோம். இங்கயும், கிளாஸ், கிளாஸ்னு உயிர எடுத்தா எப்படி“
கவுன்சலிங் செய்பவரிடம், “மேடம், சாப்பாடு சரியில்ல, இந்த வகுப்பு எடுக்கறது வழியா என்ன சொல்ல வர்றீங்க“
“நீங்க சொல்றது புரியுது சார், சாம்பார் வாசனை நல்லாயிருக்கு, உங்க அம்மா வந்தாங்க பாக்கலையா“
“அம்மா வந்தாங்கன்னு எப்போ சொன்னிங்க, இந்த அளவு கம்யூனிகேஷன் கேப் இருந்தா எப்படி“
“சார் பீடி ஒண்ணு தர்றீங்களா“
“எப்படா இங்கருந்து போவோம்னு இருக்கு, பதினைஞ்சு நாளாச்சு. ஜெயில் மாதிரியிருக்கு.
சென்னை டி.டி.கே. மது அடிமைகள் மறுவாழ்வு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் வைத்யாவை இரண்டு முறை சந்திக்கச் சென்றேன். உடன் தண்டோரோ, கேபிள்சங்கர் மற்றும் ச.முத்துவேல் வந்தார்கள்.
இரண்டு முறை சென்ற போதும் அங்கே கேட்டவைதான் மேற்கண்ட உரையாடல்கள்.
கேபிள்சங்கர் சொன்னார் “இந்த இடம் ரொம்ப இயற்கையான மர நிழலோட அமைதியா நல்லாயிருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு“
“அப்போ நீங்களும் இங்கே சேர்ந்திடுங்க, இங்கே படிச்சவங்களை சேர்க்க மாட்டாங்க, குடிச்சவங்களுக்குதான் முன்னுரிமை. செக்யூரிட்டி வேலைக்கு வரணும்னாகூட ஏற்கனவே குடிச்சு திருந்தினவங்களா இருக்கணும்“ என்றார் ரமேஷ் வைத்யா.
எல்லாம் மதுவின் செயல்.
000
மனசாட்சியோடு மறுபடி சந்திக்கிறேன்.
- பொன்.வாசுதேவன்
மனசாட்சியின் குரல்...தொடர்ந்து ஒலிக்குமா?
ReplyDeleteமனசாட்சியின் குரல் நன்றாக ஒலிக்கின்றது.
ReplyDeleteஎன்ன விட்டு விட்டு போயிட்டு மனசாட்சியா..??
ReplyDeleteமனசாட்சி குரல் நல்லாதான் இருக்கு
ReplyDelete(போக போக 'உவ்வே... என்று வாந்தி
எடுக்காமால் இருந்தால் சரிதான் வாசு )
//ஒவ்வொரு முகத்திலும் தெரிந்த ஆர்வமும், அவதானிப்பும்... //
கி.ராவின் எழுத்துகளையும் அவரை பற்றி படிக்கும்
போதும் எனக்கும் அப்படிதான் இருக்கு. என்ன சொக்கு பொடி போட்டாரோ
//மனசாட்சியின் குரல்...தொடர்ந்து ஒலிக்குமா?//
ReplyDeleterepeateyy
பாசாங்கு செய்யாத உங்கள் மனசாட்சியின் குரல் என் காதுகளுக்கு இதமாய் இருக்கிறது வாசு. தொடந்து கேட்பதில் தலைப்படுகிறேன்..
ReplyDeleteதிறந்த மனசாட்சியின் குரல்!
ReplyDeleteஅகநாழிகைக்கு வாழ்த்துக்கள் வாசு.வலைத்தளமாகவும் பரிணாமம் பெறுவதில் மிகுதி சந்தோசம்.
பதிவில் படித்த எல்லா வார்த்தைகளையும் ஒரு சேர முழுங்கிவிட்டது உங்கள் மனசாட்சியின் குரல்..
ReplyDeleteஅகநாழிகை மென்மேலும் வளர்சிபெற வாழ்த்துக்கள் வாசு.
சந்தா தொடர்பாக பேச நினைத்திருந்தேன்.தகவல் ப்ளாக்கில் கொடுத்தமைக்கு நன்றி.
மனசாட்சி, ரமேஷ் வைத்யாவும் அந்த இடமும் ரொம்ப உலுக்குகிறது,
ReplyDeleteஆசிரியரே அருமைங்க...
ReplyDeleteரமேஷ் வைத்யா சீக்கிரம் அங்கிருந்து வந்து விடட்டும்.
ReplyDeleteரமேஷ் வைத்யா மிக விரைவில் அவ்விடம் எல்லாவற்றையும் விட்டு வரட்டும்
ReplyDeleteமனசாட்சியின் குரல் அழுத்தம் நிறைந்ததாய் இருக்கிறது
மனசாட்சி அருமை தொடர வாழ்த்துகள்....
ReplyDeleteஅகநாழிகைக்கு என்றும் என்னுடை தனிப்பட்ட வாழ்த்துகள் வாசு
தற்செயலாக வரும்போது சந்தித்தேன் வாசுதேவன், வாழ்த்துச்சொல்கிறோம்."அகநாழிகை" அழகான பெயர் நண்பரே, படைப்புக்களும் சிறப்பாக்க அமையட்டும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமனசாட்சியோடு சேர்த்து நல்ல பல தகவல்களும்.
ReplyDeleteமனச்சாட்சி மாறாமல் எப்போதுமே மனச்சாட்சியாய் இருந்துவிட்டால் நல்லதே.
ReplyDeleteமனசாட்சியில் குறிப்பிட்ட மது அடிமைகள் மறுவாழ்வு போலவே பெங்களூரிலும் இருப்பதாக எங்களின் ஏரியாவில் (ராயப்பேட்டை) குடிக்கு அடிமையான நிறைய இளைஞர்களை அனுப்பி வைக்க, அங்கே அவர்கள் அனுபவித்த வேதனைகள் தாளாமல் அங்கிருந்து தப்பி ஓடிவந்து மீண்டும் அவர்க்ளை தீராத குடிக்கே தள்ளி விட்டிருக்கிறது.
ReplyDeleteஇது நான் நேரில் கண்ட, கேட்ட உண்மை.
இப்படியும் குடிக்கத்தான் வேண்டுமா?
மனசாட்சியின் குரல்...தொடர்ந்து ஒலிக்கட்டும்.
ReplyDelete