Monday, October 26, 2009

‘பிரிக் லேன்‘ பெண்மையின் உணர்வுப் போராட்டம்


பால்யத்தில் நம்மில் பலரும் சிறுசிறு முடிவுகளை மனதில் வைத்திருந்திருப்போம். வளர்ந்த பிறகு அதைப்பற்றி யோசித்தால் எல்லாமே விளையாட்டுத்தனமாய் இருந்திருக்கும் அல்லது நடைமுறையில் சாத்தியமில்லாததாக இருக்கும். அப்படியாக வயல் வெளிகளில் பட்டாம் பூச்சி பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் இரு சகோதரிகளின் சந்தோஷ மனோநிலை, தாயின் தற்கொலைக்கு பிறகு மாறுகிறது. கிராமத்து சூழலில் இருந்து 17 வயதில் தன்னை விட இரு மடங்கு வயது மூத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் குடியேற நேரிடும் பெண்ணை பற்றிய கதை 'Brick Lane'

திருமணம் என்ற நிகழ்வு பெண்ணுக்குள் ஏற்படுத்தும் அகசிக்கல்களை பேசும் 'மோனிகா அலி' எழுதிய சர்ச்சைக்குரிய 'பிரிக் லேன்' நாவலை தழுவி எடுக்கப்பட்டது. 2007-ல் வெளியாகிய இப்படத்தை இயக்கியவர் 'சராஃ கவ்ரோன்'

'என் கிராமத்தை விட்டு தூர எங்குமே செல்ல மாட்டேன்' என்ற தன் பால்ய முடிவுக்கு மாறாக அன்பற்ற கணவனோடு வாழ வேண்டிய கட்டாயத்தில் சகோதரியை பிரிந்து லண்டனில் வசிக்கும் பங்களாதேஷ் முஸ்லீம் பெண் 'நஸ்நீன்' (தனிஷ்டா சட்டர்ஜி).

16 வருட லண்டன் வாழ்க்கையில், 32 வயதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகவும், எப்போதும் ஓயாமல் தத்துவம் போதித்து, மனைவி, குழந்தைகள் தனக்கு அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கருதும் கணவனை சகித்துக் கொண்டிருக்கிறாள் நஸ்நீன். பதவி உயர்வு தனக்கு கிடைக்காத வெறுப்பில் வேலையை துறந்து விட்டு வரும் கணவன் 'சானு' (சதீஷ் கோசிக்), தன்னுடைய திறமையை புரிந்து மீண்டும் தனக்கு இதைவிட பெரிய வேலை கிடைக்கும் என்று 'வாய் சொல் வீரனாக' காலம் கடத்துகிறான்.

பிறந்த மண்ணான பங்களாதேஷ் கிராமத்து நினைவுகளையும் அங்கிருக்கும் தன் சகோதரியையும் மறக்க முடியாமல் எப்படியாவது பங்களாதேஷ் திரும்பி விடலாம் என்று நினைக்கிறாள் நஸ்நீன். அவளது யோசனையை மறுத்து பொறுப்பற்று கடனில் கம்ப்யூட்டர் வாங்கி வந்து, புதுப்புது வேலைகளை செய்து பணம் சம்பாதிப்பது பற்றிய முயற்சிகளின் செய்து தோல்வியை சந்திக்கிறான் சானு.

தனக்கு தெரிந்த தையல் தொழிலை கொண்டு வருமானம் ஈட்ட முயல்கிறாள் நஸ்நீன். துணிகளை தைக்க கொண்டு வந்து தரும் இளைஞனான கரீம் அறிமுகம் ஈர்ப்பாகி காதலாகிறது. கரீம் மீதான காதல் உடல் ரீதியான தொடர்பில் முடிகிறது. கணவன் சானு வாங்கிய கடனை அடைத்து முடிக்கிறாள். இடையே அடிக்கடி பங்களாதேஷ் திரும்ப சென்று தன் இளமை கால இனிய வாழ்க்கை வாழ முடியாதா என்று ஏங்குகிறாள். பங்களாதேஷில் இருக்கும் நச்நீனின் சகோதரி தான் மிகவும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கடிதத்தில் எழுதுகிறாள்.

நஸ்நீன் சகோதரி யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் வேறு வேறு நபர்களுடன் வாழ்ந்து கட்டுபாடற்ற சுதந்திரத்துடன் இருக்கிறாள். இதற்கிடையில் திடீரென நச்நீனின் கணவன் சானு 'நாம் பங்களாதேஷ் திரும்பி விடலாம்' என்று கூறி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறான். கரீம் மீதான அன்பில் இருக்கும் நஸ்நீன் அதை விரும்பவில்லை, அதை கணவனிடம் சொல்லவும் தயங்குகிறாள்.

நஸ்நீனின் மூத்த மகளாக வரும் பாத்திரம் மிகவும் கூர்மையானது. பெண்களுக்கு இடையே உள்ள தலைமுறை இடைவெளியை துல்லியமாக வெளிப்படுத்தும் கதா பாத்திரமாக வரும் நஸ்நீனின் மூத்த மகள், தன் அம்மாவை போல எல்லாவற்றிலும் அப்பாவை ஏற்றுக் கொள்ளாமல் அவரது முரண்களை நேருக்கு நேராக சுட்டிக்காட்டுகிறாள். நஸ்நீன் கணவன் சானு தன் மனைவியை அடக்கி ஏமாற்றுவது போல தன் மகளை தன் ஆதிக்கத்தினுள் கொண்டு வர முயன்று ஒவ்வொரு முறையும் தோற்று விடுகிறான்.

ஒரு கட்டத்தில் நஸ்நீனின் மூத்த மகள் தன் அம்மாவாவை பார்த்து ' நீ அந்த கரீம் உடன் காதல் கொண்டிருக்கிறாயா..' என்று கேட்கவும் செய்கிறாள். கூர்மையான பார்வையும், வசனங்களும் கொண்ட அப்பெண்ணின் நடிப்பு மிகவும் அருமை.

இறுதியில், சானு தன் மனைவி, மற்றும் இரண்டு மகள்களையும் லண்டனில் விட்டு தான் மட்டும் பங்களாதேஷ் செல்கிறான். அன்பற்ற கணவனோடு வாழ வேண்டிய சூழலில், கிராமத்து நினைவுகளோடு அடக்கப்பட்ட நிலையில் வளரும் நஸ்நீன் மனப்போராட்டங்கள் துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

000

- பொன்.வாசுதேவன்

23 comments:

 1. மிக மிகஅருமையான ஒரு படம். இறுதியாக நேற்று முன்தினம் பார்த்து இந்தத்திரைப்படம் பற்றி பதிவிட வேண்டும் என குறிப்பெடுத்து வைத்திருந்தேன். முந்திட்டீங்களே நண்பரே!!
  பறவாய் இல்லை மிக அருமையான விமர்சனம், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. தயவு செஞ்சு அந்த தாய்லாந்து பொம்மை புலிக்குட்டிக்கு பால் கொடுக்கும் போட்டோவையே போடுங்கள்.
  இந்த போட்டோவில் எப்போதும் குளித்திராத பெரியார் மாதிரி உள்ளீர் சகா, போலவே சோகமாகவும் உள்ளீர்.

  ReplyDelete
 3. நல்ல நடை மக்கா!அருமையான பதிவு.

  ReplyDelete
 4. neat!
  thank you for this introduction.
  then,make a visit to my site,when you are free.

  ReplyDelete
 5. அருமையான பகிர்வுக்கு நன்றி வாசு

  ReplyDelete
 6. சரி.. ரைட்டு.. இனிமே நான் கவிதை எழுத ட்ரை பணண வேண்டியதுதான்

  ReplyDelete
 7. நன்றி ஜனா,
  பிரிக் லேன் உணர்வோட்டமுள்ள படம். நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

  ReplyDelete
 8. Anonymous said...
  //தயவு செஞ்சு அந்த தாய்லாந்து பொம்மை புலிக்குட்டிக்கு பால் கொடுக்கும் போட்டோவையே போடுங்கள்.
  இந்த போட்டோவில் எப்போதும் குளித்திராத பெரியார் மாதிரி உள்ளீர் சகா, போலவே சோகமாகவும் உள்ளீர்.//

  இருக்கறதுதானே வரும் நண்பா.
  மற்றபடி, தாய்லாந்தில் எடுத்த போட்டோவில் இருப்பது பொம்மை புலி இல்லை. ‘சபாரி வார்ல்டு‘ என்ற மிருகக்காட்சி சாலையில் உள்ள பழக்கிய புலி. (புளி அல்ல). வீடியோவுடன் வைத்திருக்கிறேன்.

  ReplyDelete
 9. நன்றி பா.ராஜாராம்

  ReplyDelete
 10. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி வேல்ஜி. உங்கள் கவிதைகளையும் வாசித்து விட்டேன். இரண்டு கவிதைகள் பிடித்திருந்தது.

  ReplyDelete
 11. தொடர்ந்த வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 12. கேபிள்,
  வேணாம், நிறுத்திக்குவோம்.

  ReplyDelete
 13. ந‌ல்ல‌ ப‌திவு. ப‌ட‌ம் பார்த்துவிட‌ தூண்டும் அள‌விற்கு க‌தை சொல்லி இருக்கீங்க‌. ப‌ட‌த்தின் நாய‌கி பார்க்க‌ மிக‌ ப‌ரிச்சய‌ப் ப‌ட்ட‌ த‌மிழ் பெண் போல் இருக்கிறார். ப‌கிர்விற்கு ந‌ன்றி.

  ReplyDelete
 14. அருமையான விமர்சனம்.படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது..

  ReplyDelete
 15. நன்றி உயிரோடை.

  நன்றி ராஜி.

  ReplyDelete
 16. இன்றைய தமிழ் சூழலுக்கு கூட பொருத்தமாக இருக்கும் இந்த கதை!

  டோரண்டில் கிடைக்குதா!?

  ReplyDelete
 17. படத்தைப் பற்றி நீங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள் வாசு.. கதை உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.. பார்க்க முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 18. படத்தை தெளிவாக காட்டியிருக்கிறீர்கள். ரசனை.!

  (அப்புறம் புலி பொம்மையா, நிஜமான்னு வீடியோ ஆதாரத்தை வெளியிடவும். இல்லாவிட்டால் நம்ப முடியாது)

  ReplyDelete
 19. One copy parcel pls...

  ReplyDelete
 20. //சரி.. ரைட்டு.. இனிமே நான் கவிதை எழுத ட்ரை பணண வேண்டியதுதான்/

  ??????????

  ReplyDelete
 21. நன்றி வால்பையன், டிவிடியில் பார்த்தேன். டோரண்ட் பற்றி தெரியவில்லை.

  ReplyDelete
 22. நன்றி கார்த்திகைப்பாண்டியன்

  நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

  நன்றி எவனோஒருவன்

  நன்றி தண்டோரா

  ReplyDelete
 23. அன்பு பொன்.வாசுதேவன்,

  வாழ்த்துக்கள். அழகான பதிவு. நான் இந்த படம் இன்னும் பார்க்கவில்லை, பட்டியலில் சேர்த்த்க்கொண்டேன். பெண்களை பற்றிப் பேசும் நிறைய படங்களில் ஒரு பொதுத் தண்மை இருப்பதாகப் படுகிறது. எனக்கு த கலர் பர்ப்பிள் ஞாபகம் வந்தது இதைப்பற்றி படிக்கும் போது.

  இயல்பான நடை! மலையில் இருந்து இறங்கும் ரயில் போல ஒரே தாளகதியில்.

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname