தண்டோரா என்கிற ‘மணிஜி‘ இயக்கிய குறும்படத்திற்கு விருது
பன்னாட்டு அரிமா சங்கங்களின் ஒரு அங்கமான திருச்சி அரிமா சங்கம் நடத்திய குறும்படப் போட்டி விழாவில் தண்டோரோ இயக்கிய ‘சியர்ஸ்‘ (CHEERS) என்ற குறும்படத்திற்கு விருதும், ரூ.5000/- ரொக்கப்பரிசும் கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இப்படியான சரித்திரப்புகழ் பெற்ற சம்பவத்தில் பங்கேற்று மகிழ வருமாறு மணிஜி அழைத்ததால், நேரில் காணும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.
திருச்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு குறும்படங்கள் திரையிடப்பட்டன. அங்கு திரையிட்ட படங்களிலேயே சுருக்கமாக, சொல்லவந்ததை தெளிவாக காட்சிப்படுத்திய ஒரே படம் மணிஜியுடையதுதான். இது வெற்றுப்புகழ்ச்சியல்ல. குறும்படம் என்ற இலக்கணத்திற்கு ஒப்ப இருந்ததே அப்படத்தின் சிறப்பு. மணிஜியின் குறும்படம் திரையிட்டு முடிந்ததும் ஏராளமானோர் மணிஜியுடன் கைகுலுக்கி தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதே இதற்கு சாட்சி. கலைஞனுக்கு மிகுந்த சந்தோஷம் கொடுப்பதே அவனது செயல்களுக்கான அங்கீகாரம் என்பதுதானே.
இந்நிகழ்ச்சிக்கு சென்று வந்ததில், ஆங்கரை பைரவி, நெய்வேலி பாரதிக்குமார், தேனி முகமது சஃபி, கவிஞர் ரத்திகா, ‘தொனி‘ சிற்றிதழாசிரியர் புவனராஜன், நாவல் குமாரகேசன் என சில எழுத்தாளர்களையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் மணிஜியின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு அங்கிருந்து பயணமானோம். ‘நெற்குஞ்சம்‘ எழுதிய எழுத்தாளர் தேன்மொழி மற்றும் ‘சௌந்தரசுகன்‘ சிற்றிதழ் ஆசிரியர் சுகன் அவர்களையும் சந்திப்பதாக திட்டம். ஆனால் தேன்மொழி அவர்கள் பணியின் காரணமாக வெளியூர் சென்றிருந்ததால் சந்திக்க இயலவில்லை. சுகன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
வழியில் தஞ்சை கோயிலை ஒரு வெளிப்பார்வை பார்த்து விட்டு, மணிஜியின் பள்ளித்தோழர்கள் பகிர்ந்துகொண்ட குறுபாகற்காய், வாழைப்பூ, மிளகாய் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு பெரம்பலூர் வழியாக வந்து சேர்ந்தோம். திருவையாறில் ஆண்டவர் இனிப்பகம் என்ற கடையில் கோதுமை அல்வா மற்றும் தயிர் சாதம் மிகப் பிரபலம் என்றார் மணிஜி. அங்கு சென்றால், அவர் சொன்னது போலவே கடையில் அவ்வளவு கூட்டம். சூடான அல்வாவை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். வெகுநாட்களுக்குப் பிறகு பாடல்களை கேட்டு, பாடல் வரிகளைக் குறித்து பேசிக்கொண்டே நீண்ட தூரம் காரோட்டியதும் ஒரு மகிழ்வான அனுபவம்தான்.
முக்கிய தகவல்கள் :
- தமிழில் அவருக்கான உரிய அங்கீகாரம் கிடைக்காததால், மணிஜி விரைவில் ஆங்கிலப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
- மணிஜி இயக்கும் ஆங்கிலப் படத்தில் நானும், பிரபல ஹாலிவுட் நடிகை Maria Josphine இருவரும் நடிக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
0
விதூஷ், அறிவன், பரிதிமால் மற்றும் அனானி நண்பர்களுக்கு...
உயிரோசையில் வெளியான எனது ‘பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி‘ என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக சில சர்ச்சையான கருத்துகள் எழுந்திருக்கிறது.
எனது கட்டுரையின் கருத்துகளோடு மாற்றுக்கருத்து எதுவும் இல்லாவிட்டாலும், பதிவர் விதூஷ் அளித்த பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக பதிவர்கள் அறிவன், பரிதிமால் மற்றுமொரு அனானி நண்பர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
பொதுவாக தமிழ் மொழியாய்வுகள் மூன்று அடிப்படையில் இருந்து வந்துள்ளன. சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழினை ஆய்வு செய்யும் மொழியாய்வுகள் ஒரு வகை. இம்மாதிரியான மொழியாய்வுகளில் தமிழின் வேர்ச்சொல்லை தேடும்போது சமஸ்கிருதத்திலிருந்து உதாரணம் காட்டி எழுதுவார்கள். இது ஒரு வகையான ஒப்பு நோக்கல். தனக்கு நன்கு புலமையுள்ள ஒன்றோடு வேறொன்றை இணை நோக்கிப் பார்ப்பது இயற்கைதானே. அடுத்தபடியாக மேலை மொழிகளோடு இணைத்து தமிழ் மொழியை ஒப்பு நோக்குதல். தமிழின் வேர்ச்சொல் பாரசீக மொழியிலிருந்தோ, உருது மொழி அல்லது வேறொரு மொழியிலிருந்தோ மருவிய வார்த்தைகள் என்ற ஒப்பாய்வு. உதாரணத்திற்கு, அரிசி என்ற வார்த்தையை ‘ரைஸ்‘, என்பதிலிருந்து வந்ததாக சொல்வது. அல்லது ரைஸ் என்ற வார்த்தை ‘அரிசி‘யிலிருந்துதான் வந்தது என்று கூறுவது. மொழியாய்வின் மூன்றாவது பார்வை, தமிழியம், திராவிடம் சார்ந்த பார்வை. தமிழ்தான் அனைத்திற்கும் வேர்ச்சொல் என்ற பார்வை. இதுவே என்னுடைய கட்டுரை எழுதப்பட்ட நோக்கும். மொழியாய்வின் வழியே நாம் கூறும் கற்பிதங்களுக்கு, நிரூபணச் சாத்தியங்களை உண்டாக்குவது மிகவும் முக்கியமானது. இவையெல்லாம் ஒரு தொடக்கப்புள்ளிகள். அல்லது ஒரு புள்ளியின் நீட்சிகள் மட்டுமே. இவ்வாறான மொழியாய்வுகள் தொடரப்படுவது மொழியின் செழுமைக்கும், பூரணத்துவத்துக்கும் வழி வகுக்கும்.
ஞானக்கூத்தனின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.
எனக்கும்
தமிழ்தான் மூச்சு
ஆனால் பிறர்மேல்
அதை விடமாட்டேன்.
எனவே, மொழிப்பற்று என்பது வேறு, மொழி வெறி என்பது வேறு என்பதை நாம் உணர வேண்டும். மொழி என்பது ஒரு உணர்வாக இருக்க வேண்டும். எனது தாய், எனது மனைவி, எனது மகள் என்பது போல எனது மொழி என்கிற உணர்வும், புரிதலும் அவசியம்.
கட்டுரையை வாசித்து ஆரோக்கியமான விவாதங்களையெழுப்பிய நண்பர்களுக்கு நன்றி.
0
முட்டையிலிருந்து கோழியா... கோழியிலிருந்து முட்டையா ?
வால்பையன் (பொருத்தமான ஆள்தான்) எழுதியிருந்த ‘பரிணாமம் – முன்னுரை‘ என்ற பதிவை வாசித்தேன். ஆக்கப்பூர்வமான இடுகை.
// பரிணாம வளர்ச்சி என்பது உயிரினத்தில் மட்டுமே உண்டு என்பது இன்னும் பலரின் நம்பிக்கை, ஆழ்ந்து நோக்கினால் எல்லாவற்றிலும் பரிணாம வளர்ச்சி உண்டு என்பதை அறியலாம், எவையெல்லாம் முன்னை விட சிறப்பான தோற்றமோ, மாற்றமோ பெருகிறதோ அவைகளின் பரிணாம வளர்ச்சி!//
உண்மைதான். வாழ்த்துகள் ‘வால்பையன்‘ என்கிற அருண்
0
- பொன்.வாசுதேவன்