Sunday, November 4, 2018

நிலம் புழங்கும் சொற்கள்


வாழ்கிற நிலம் சார்ந்த மக்களின் கதைகளை, வாழ்வின் யதார்த்தக் கூறுகளைப் பேசுகிற புனைவிலக்கியங்களை ஒதுக்கி விட்டு எழுதப்படுகிற எழுத்துகள் ஒருபோதும் இலக்கியமாவதில்லை. சில கதைகளை வாசிக்கிறபோது அவற்றுடன் ஒன்றுபட்டு ஊடாடிச் செல்ல முடியாத விலகல் நிலை ஏற்பட இதுவே காரணம். வாழ்வனுபவத்திலிருந்தும், சந்திக்கிற மனிதர்களிடமிருந்தும், அவலச் சுவையிலிருந்தும் பிறக்கிற எழுத்துகளே மனதுக்கு அணுக்கமாகிறது. ஒரு கதையை வாசிக்கிற போது தன்னை அக்கதைக்குள் தானறியாமல் அடையாளங் கண்டுகொள்கிற நிலையே அக்கதையை சிறந்ததாகவும் மனதில் பதிவதாகவும் ஆக்குகிறது.

 ‘ழான் தார்க்’ – புதுவைச் சிறுகதைகள் என்ற பாரதி வசந்தனின் இந்தத் தொகுப்பில் மொத்தம் 25 சிறுகதைகள் உள்ளன. இரண்டு சிறுகதைகளைத் தவிர எல்லாமே பத்திரிகைகளில் வெளிவந்தவை. இதில் உள்ள கதைகள் அனைத்தும் புதுச்சேரி மண் சார்ந்தவை. அதன் தனித்தன்மை மிக்க கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பவை




2010ல் அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்ததலை நிமிர்வுஎன்ற கவிதைத் தொகுப்பின் வாயிலாகத்தான் எனக்கு பாரதி வசந்தன் அறிமுகமானார். அவர் சிறுகதைகள் எழுதுவதில் வல்லமையாளர் என்பதும், கட்டுரைகள், படைப்பிலக்கியம் என பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி என்பதையும் பிறகுதான் தெரிந்து கொண்டேன். எளிமையான மொழியும், சரளமான நடையும், புதுச்சேரி பின்புலத்தினைக் கொண்ட அவருடைய கதைகளே அவரது பலம். 1970 களில் எழுதத் தொடங்கிய பாரதி வசந்தன் மொழிபெயர்ப்புகளையும் செய்திருக்கிறார். மகாகவி பாரதியின் பத்தாண்டு காலப் புதுவை வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஒரு பகுதியை மையமாக வைத்து தலித்திய நோக்கில் எழுதப்பட்டதம்பலாஎன்ற சிறுகதைத் தொகுப்புதான் நான் வாசித்த இவரது முதல் படைப்பு. தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு என மும்மொழிகளிலும் வெளியான பெருமை பெற்றது இக்கதை.

பாரதி வசந்தனின்ழான் தார்க்என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பின் கதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்ததில் அவருடைய கதைகள் குறித்து ஒரு முழுமையான மதிப்பீட்டை அறிந்து கொள்ள முடிகிறது. இத் தொகுப்பின் எல்லாக்கதைகளிலும் மைய இழையாக புதுச்சேரி என்ற மண் சார்ந்த விஷயங்களும், புலக்குறிப்புகளுமாக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் என்பது அவற்றில் முக்கியமான ஒன்று. இந்தக் கதைகள் கோட்பாட்டு அடிப்படையிலும், ரசனை அடிப்படையிலும் என எல்லாவிதமான விமர்சனப்பார்வையிலும் ஒருமித்த கருத்திடலில் சிறப்பாக வந்துள்ளன. பொதுவாக, கோட்பாட்டு ரீதியாக கொண்டாடப்படுபவை ரசனை சார்ந்து ஏற்கப்படாமலும், ரசனை சார்ந்து அணுகப்படுகிற படைப்புகள் கோட்பாட்டு ரீதியாக தோற்றுப் போவதையும் நாம் காண்கிறோம். அவ்வாறின்றி, பாரதி வசந்தனின் கதைகள் இரு நிலைகளிலும் தங்கள் தகுதிசார் சிறப்பை வெளிப்படுத்துவதாகவே உள்ளன. எந்த முன்முடிவுகளுமின்றி திறந்த மனதுடன் இக்கதைகளை வாசிக்கவும், ரசிக்கவும் முடிகிறது.

முதல் கதையானஒயின்டேரிசமூகம் சார்ந்த மதிப்பீடுகளையொட்டிய தனது தர்க்கங்களை ஒரு தனி மனிதனாக காத்தவராயன் எதிர்கொள்கிற விதம் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரமான நீர் நிலைக்கு ஒரு ஆபத்தும் அது அபகரிக்கப்படுகிற நிலையும் வருவதையறிந்து பதைபதைப்புடன் எதிர்க்க முனைகிற காத்தவராயன், சமூகத்தின் கொடுங்கரங்களால் வஞ்சிக்கப்பட்டு உயிரிழப்பது சோகமானது. அதிகாரத்தின் கொடுங்கரங்கள் எப்படியெல்லாம் அடித்தட்டு மக்களின் குரல்வளையை நசுக்கி விடுகிறது என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை.

வாழ்வின் மிகப்பெரும் துயர்களில் ஒன்று புறக்கணிப்பு. ஒரு நேரத்தில் அவசியமான ஒன்றாக இருப்பது மற்றொரு நேரத்தில் தேவையற்றதாக, புறக்கணிக்கத்தக்கதாக ஆகிவிடுகிறது. முதியோரைப் பேணல் என்பது நம் வாழ்க்கையில் குறைந்து கொண்டே வருகிறது. ஒருவரை வளர்த்து ஆளாக்குகிற வரையில் தேவைப்படுகிற பெற்றோர், சில காலத்திற்குப் பிறகு பிள்ளைகள் பார்வையில் சுமையாகப் படுகிறார்கள். அவர்கள் உள ரீதியாக இதனால் அடைகிற வதையும், வேதனையும் சொல்லி மாளாது. அத்தகைய உணர்வுகளைப் பிரதிபலிக்கிறதுஅந்தி சாயும் சூரியன்கள்என்ற சிறுகதை.

காந்த்தாஒரு வித்தியாசமான கருக் கொண்ட சிறுகதை. கத்திமேல் நடப்பது போன்றது. சிறிது தவறினாலும், ஆபாசமாக ஆகிவிடக்கூடிய ஒரு கதையை மிக அழகான பார்வையுடன், நன்கு விவரணை செய்திருக்கிறார் பாரதி வசந்தன். இந்தக் கதையின் முடிவு எதிர்பாராத திருப்பமாக அமைந்திருக்கிறது.

ஒரு மொழியை வேற்றுமொழியைக்கொண்டு தொடர்புபடுத்தி உறவாடலுக்கான கருவியாகப் பயன்படுத்துவதில் ஏற்படுகிற நடைமுறைச் சிக்கல்களை உணர்த்துகிறதுமொழிசிறுகதை. இக்கதையை வாசிக்கையில் எழுத்துகளும், அதற்குண்டான ஒலியும், உச்சரிப்பும் எவ்விதமான தனித்தன்மையுடன் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவம் புலனாகிறது. ஒவ்வொரு மொழியும் அதனதற்குரிய தனித்தன்மையுடையதான சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. பார்வைக் குறைபாடுள்ள ஒருவருக்கு எப்படி கண்ணாடி தேவையோ அதுபோலவே பிறருடன் ஊடாட மொழியின் தேவை அத்தியாவசியமானது. அதேசமயம் தாய்மொழிதான் கண் போன்றது என்பதையும், பிறமொழி கண்ணாடி போன்றது என்பதையும் பொன்னுசாமி, அன்துவான் கதாபாத்திரங்களின் உரையாடலினூடாக நமக்கு உணர்த்திச் செல்கிறார் பாரதி வசந்தன்.

தொகுப்பின் தலைப்புக் கதையானழான் தார்க்மிக அற்புதமான கதை. தொகுப்பின் மிகச்சிறப்பான கதைகளில் இது ஒன்று. கதை மாந்தர்களின் உரையாடல் முழுக்கவும்பொந்திச்சேரியின் வாசமும், அங்கேயே சென்று நாம் உலவுகின்ற உணர்வையும் கதை நெடுக வாசிப்பில் உணர முடிகிறது. ‘ழான்தார்க்என்கிற பெண்ணின் அகவுணர்வுகளையும், பாலியல் தொழிலைத் தனது சூழல் காரணமாக செய்து வந்தாலும் அவளிடமிருக்கிற நற்குணத்தையும், அதேசமயம், அவளுடைய உடலை போகப்பொருளாக மட்டுமே பார்க்கிற ஆண்களின் வக்கிர மனநிலையையும் அவர்களே வெட்கப்படுகிற, கூனிக்குறுகிற அளவிற்கு தனது நற்செயலால் உணர்த்துகிற தன்மையையும் சிறப்பாக விவரிக்கிறது இந்தக் கதை.

பாரதி வசந்தனின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் நாம் வாழ்வில் அன்றாடம் சந்தித்துவிடக்கூடிய வாய்ப்புள்ள மனிதர்கள்தான். எல்லோரிடத்திலும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. நாம் வாழ்கிற சமுதாயச் சூழலில் எல்லாவற்றையும் கேள்வி கேட்பதற்கான, எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமைந்து விடுவதில்லை. ஆனால் பாரதி வசந்தன் தனது கதை மாந்தர்களைப் புனையும் போது, அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் எதிர்த்துக் கேள்வி கேட்கிற உத்வேகம் உள்ளவர்களாக படைக்கிறார். ‘அலிபாபாவும் 30 திருடர்களும்என்ற கதையில் வருகிற துணிச்சலும், வீரமும் கொண்ட ஜீவா தன் துணிச்சலை, அநியாயத்துக்கும் அக்கிரமமான  செயல்களுக்கும் துணையாகக் கொள்ளாமல், பிறருக்கு நன்மை தருகிற காரியங்களைச் செய்வதற்கான கருவியாக தன்னை வடிவமைத்துக் கொள்கிறான்.

அதுபோலவே, ‘மழை வெயில்கதையில் வருகிற கலைச்செல்வன்.. தவமணி ஆகிய கதாபாத்திரங்களும் இயல்பும் ஆழமும் மனித நேயமும் கொண்டவர்களாக படைக்கப்பட்டுள்ளனர். அனுபவத்திலிருந்து எழுதப்படுகிற வரலாறு என்பது அடித்தள மக்களின் வாழ்க்கையைப் பேசுவதே. அதை என்றுமே தகுதி நீக்கம் செய்துவிட முடியாது.

பாரதி வசந்தனின் புதுச்சேரி மாந்தருலகில் நிகழும் இந்தத் தொகுப்பின் கதையாடலில் மறைந்திருக்கும் நேரடியான அர்த்தங்களைவிட அதன் நீட்சியாக நம்மைக் கவர்ந்திழுக்கும் உள்ளார்ந்து அர்த்தப்பாடுகளே இந்தக் கதைகளின் மேன்மையையும், காலம் தாண்டியும் பேசப்படுவதற்கான நிலைத்த தன்மையையும் சாத்தியப்படுத்திக் கொள்கிறது. எளிய மனிதர்களின் மகிழ்ச்சியும், வறுமையிலும் அவர்களின் வாழ்க்கை முறையில் கைக்கொள்கிற நேர்மையும், அநீதியைக் கண்டு பொங்குகிற அவர்களின் மனநிலையும் மனித வாழ்க்கை எப்படியாக இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக உணர்த்துகிறது. நம்மை அச்சுறுத்துகிற ஆதிக்க சக்தியினையும் அதிகாரத்தையும் நோக்கி நாம் எழுப்புகிற சின்னஞ்சிறு கேள்விகள்தான் பெருகி பெரும் பலத்துடனான மாற்றத்தை விளைவிக்கும் என்பதற்கான கூறுகள் இச்சிறுகதைகளின் வழியாக நமக்குள் உத்வேகத்தைத் தருகிறது. வெளிப்படையான பிரச்சாரக் கதைகளாக அன்றி அன்றாட வாழ்வின் சம்பவங்களோடு, பின்னிப்பிணைந்த பிரச்சனைகளை, எதிர்கொள்ளலை நாம் அங்கீகரித்து உள்வாங்கிக் கொள்கிற விதத்தில்  இந்தக் கதைகள் மிளிர்கின்றன.

தான் இருக்க விரும்புகிற பிம்பத்தை கண்ணாடியில் பார்ப்பது போல புதுச்சேரி மாந்தர்களின் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கிற இந்தக் கதைகளின் வாயிலாக மனித உறவுகளையும், வாழ்க்கை முறைகளை பேணும் அவசியம் குறித்தும், அதிகார, ஆதிக்க சக்தியின் நெருக்குதல்களையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் பாரதி வசந்தன்.

எலி வேட்டை’, ‘எங்கனயாலும் ஜீவிக்கணும்’, ‘மோரிசான் தோட்டம்என பல கதைகளும் புதுச்சேரி மாந்தர்களின் வாழ்வியலைப் பேசுகிற சிறப்பான கதைகளாக வந்துள்ளன.

தொகுப்பில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றுமொரு முக்கியமான கதைரோபோ மரங்கள்தொன்றுதொட்டு இருந்து வரும் பழமையான இயற்கை ஏன் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிற ஒரு கதை. கடந்த காலத்திற்குள்ளும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலுமாக ஊஞ்சலைப் போல முன்னர்ந்தும், பின்னோக்கியும் நகர்கிற இந்தக் கதை தொகுப்பில் உள்ள கதைகளில் எனக்கு மிகவும் பிடித்திருந்ததுதிணைஇலக்கிய இதழில் இந்தக் கதை வெளிவந்த போதே வாசித்திருந்தேன். ஒரு நாடகமாகவோ, குறும்படமாகவோ ஆக்குவதற்கான ஆகச்சிறந்த கதை இது.

ஒட்டுமொத்தத் தொகுப்பாக பாரதி வசந்தனின் கதைகளை வாசிக்கையில், ஒரு நிலம் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கைப் போக்கினையும், அவர்களின் கலாச்சாரம், வாழ்வியல் பழக்க வழக்கங்கள் சார்ந்த நுணுக்கமான சித்தரிப்புகளையும் அறிய முடிகிறது. பிற மொழிப் புழக்கத்துடன் வாழ நேர்ந்து, பிற மொழிக் கலாச்சாரத்தில் புழங்கி அதே சமயம் தாய் மொழி சார்ந்த விஷயங்களில் இருக்கின்ற பற்றையும், ஈடுபாட்டையும் கைவிடாத கலந்த கலாச்சார மேன்மைகளை புதுச்சேரி மாந்தர்களின் கதைகளை நமக்குச் சொல்வதன் வாயிலாக இந்தத் தொகுப்பை தந்திருக்கிறார். காலங்கள் கடந்தும் பேசப்பட வேண்டிய ஒரு ஆவணத் தொகுப்பாகவும், தகவல் திரட்டாகவும் இந்தத் தொகுப்பு மிளிர்கிறது என்பதில் சந்தேகமில்லை.

வரும் தலைமுறையினருக்கு தமக்கு முன் வாழ்ந்த தலைமுறையினரின் வாழ்வியல் நெறிகளை, பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ளச் செய்கிற பாரதி வசந்தனின் கதைகள் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டும். தனது கதைகளின் மூலமாக, வரலாறு என்பது மன்னர்களுடையது மட்டுமல்ல. சாதாரண மக்களுடையது என்பதை வெளிப்படுத்துவதாகவும், உணர்த்துவதாகவும் இருக்கின்ற பாரதி வசந்தனின் படைப்புலகப் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும். நிச்சயம் சிறக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.


பாரதி வசந்தன் எழுதியழான் தார்க்’ (புதுவைச் சிறுகதைகள்) தொகுப்பிற்கான முன்னுரை.

ழான்தார்க்
(புதுவைச் சிறுகதைகள்)
- பாரதி வசந்தன்
வெளியீடு: கலைஞன் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.300

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname