Sunday, November 4, 2018

“நெலம் தெளிய, வெள்ளன விடியுது… பனி வெலகுது…”


தமிழ்ச் சமூகம் பல்வேறு மாற்றங்களைக் கடந்து வந்துள்ளது. இலக்கியங்கள் அனைத்தும் சமூக நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. நம் வாழ்வியல் சார்ந்த பண்பாட்டின் கூறுகளை புனைவுகளாகவும், கட்டுரைகளாகவும் முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கிறோமா என்று யோசித்துப்பார்த்தால் அப்படி எழுகிற கேள்விக்கு முழுமையான பதிவுகள் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். நம் வாழ்வை, கலாச்சாரத்தைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிற, செய்ய முயற்சி செய்திருக்கும் படைப்புகள் வெறு சிலவே. அவற்றில் ஒன்றாக, வந்திருக்கும் முத்துதான் இன்பா சுப்ரமணியன் எழுதியவையாசி 19’ நாவல்.



வாழ்வின் சூட்சுமத்தை, அதன் அனுபவத்தை வாழ்ந்தவர்களிடம் கேட்டு மட்டுமே அறிந்து கொள்ள முடியும். பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல் விவரிக்க முடியாத உணர்வலைகளை எழுத்தில் பதிவதும், அதன் கூறுகளை ஆழமாகப் பேசுவதும் அதை உள்வாங்கிக் கொள்வதும் இந்நாவலை வாசிப்பதன் மூலம் நமக்குள் நிகழ்கிறது.

கார்குடி, காரக்குடி, காரக்குடீ, புதுக்கோட்டே, புதுக்கோட்டேய்ய், அறந்தாங்கி, பட்டுக்கோட்டேய்ய்…” என்று நாவலில் ஓரிடத்தில் வருகிறது. இது நாவலை வாசிக்கிற நமக்கும் பொருந்தும். தமிழகத்தின் தெற்கத்தைய பகுதியில் சட்டென நுழைந்து விட்ட உணர்வு. அம்மக்களோடு மக்களாக அவர்களுடன் கலந்து நாமும் நாவலினூடே பயணம் செய்கிறோம். அவர்களின் வாழ்வியலை நாமும் அருகிருந்து பார்க்கிறோம். நகரத்தார் சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அவர்கள் பேச்சு வழக்கு வாயிலாகவே அறிந்து கொள்கிறோம்.
வையாசி 19’ நாவலில் புனையப்பட்டிருப்பது ஒரு தலைமுறையின் வரலாறு மட்டுமல்ல. நாவல் 1923ஆம் ஆண்டில் துவங்குகிறது. நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் தலைமுறைக் கதை இந்நாவலில் பேசப்பட்டிருக்கிறது. நகரத்தார் செய்து வந்த தன வணிகம், அவர்கள் கணக்கெழுதும் முறை, பயன்படுத்திய அளவீடுகள் என நுட்பமான பல்வேறு குறிப்புகள் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன. நகரத்தார் வணிகத் தொழிலில்  புழங்கிய பின்னக் கணக்கு முறை, அறிமுகம் செய்த வங்கி வரைவு திட்டங்கள் போன்ற பல விஷயங்கள் இந்நாவலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

நகரத்தார் சமூக மக்கள் தொழில்முறையாகவும், கூலிகளாகவும் தமிழகத்திலிருந்து பர்மா, மலாயா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததும், அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட சவாலான நிலைகளும், அனுபவித்த துயரங்களும் நாவலின் பிற்பகுதியில் பதிவாகியுள்ளது.

மீனா என்ற கதைநாயகியின் பார்வையில் கிட்டத்தட்ட 612 பக்கங்கள் நீள்கிறதுவையாசி 19’ நாவல். நகரத்தார் வாழ்க்கை முறையின் சிறப்பான விஷயங்களைப் பற்றிச் சொல்வதோடு அவர்களுக்குள்ளிருந்த ஏற்றத்தாழ்வுகளையும், பால்ய திருமண முறைகளையும், இளம் விதவைகளின் வேதனையும் என அதன் இருண்ட பக்கங்களையும் பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர்.


உலகின் பல பகுதிகளிலும் விரிந்து பரவியிருந்த செல்வந்தர்களாக நகரத்தார் இருந்தபோதும் அக்காலத்தில் திருமண பந்தங்கள் தொடர்பாக அவர்களுக்குள் நிகழாத மனமாற்றங்களையும், பெண்களின் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளையும் நாவலின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.

குடும்பத்தை விட்டுப்பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்களின் ஒழுக்க மீறல்கள், அவர்களுக்குள் ஏற்படுகின்ற அகச்சிக்கல்கள், ஊரில் தனித்திருக்க நேரும் பெண்களின் அவல வாழ்க்கை, இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட வேண்டியிருந்த பெண்களின் சூழல் எல்லாமும் பெண்ணின் அனுபவ வார்த்தைகளால் நாவல் விவரணை செய்யப்படுகிறது. குடும்ப உறவுகள் ஒரு புறமும், பண்பாட்டு சமூகத் தாக்கங்கள் மறுபுறமும் ஒரு பெண்ணில் ஏற்படுத்துகிற மனத்துடிப்புகளே இந்நாவலின் போக்கு.

காலப்போக்கில் அடித்துச் செல்லப்பட்ட பல சடங்குகள், சம்பிரதாயங்கள் இன்றைக்கு அர்த்தமிழந்தவையாகப் பார்க்கப்படுகிற சூழலில் அவற்றின் தோன்று காரணிகளும், அதற்கான தொடக்கப்புள்ளிகளும் இந்நாவலின் வழியாக பதியப்பட்டுள்ளன. நாவலின் மற்றுமொரு சிறப்பு நகரத்தார் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க இடம்பெற்றிருப்பது. இது நாவலோடு ஒன்றி வாசிப்பதற்கான முனைப்பைத் தருகிறது.

ஒரு சிறந்த இலக்கியப்படைப்பு மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும்போது அது பல்வேறு புதிய பரிமாணங்களைப் பெற்று விடுகிறது. அப்படி பலமுறை வாசிக்கப்பட வேண்டிய நாவல்களில் ஒன்றாக இந்நாவல் உள்ளது. சமகால பெண் எழுத்தாளர்களின் நாவல் படைப்புகளில் முதன்மையானதாகவும், காலங்கள் தாண்டியும் பேசப்படக்கூடியதுமான ஒரு நாவலாகவையாசி 19’ நிச்சயம் இருக்கும்.

**
’ஜன்னல்’ வார இதழில் வெளியானது.

வையாசி 19
(நாவல்)
- இன்பா சுப்பிரமணியன்

வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்
தொடர்பு: 90424 61472

பக்கங்கள்: 632
விலை: ரூ.540

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname