Sunday, November 4, 2018

லஞ்சம் என்னும் அரக்கன்


இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னையாக பயமுறுத்துவது லஞ்சமும், ஊழலும்தான். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என சட்டம் இருந்தாலும் அதைப் பற்றிய கவனமும், அக்கறையும் இல்லாத மக்கள்தான் இதற்குக் காரணம். உலக அளவில் லஞ்சத்திலும், ஊழலிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்த மக்களில் சுமார் 54 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்து, குறுக்கு வழியில் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்

உண்மையில் லஞ்சம் என்பது தீர்க்க முடியாத பிரச்னையா, இதற்குக் காரணம் அரசும், அரசு சார்ந்த நிர்வாக அமைப்புகள் மட்டும்தானா? மக்களுக்கு இதில் எந்தவிதமான பங்கும் இல்லையா எனப் பல கேள்விகள் எழுகிறது.

இப்படிப் பல கேள்விகளுக்கான விளக்கப்புத்தகமாக வெளிவந்துள்ளது க.விஜயகுமார் எழுதியிருக்கும் லஞ்சமும், சட்ட நடைமுறைகளும்என்ற இந்தப் புத்தகம்.லஞ்சம் என்றால் என்ன, அந்தக் குற்றத்தைச் செய்யாதமல் தடுப்பது எப்படி, லஞ்சம் கேட்கும் அதிகாரிகளின் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது, புகார் மனு அளிப்பது எப்படி எனத் தெளிவாக சிறுசிறு கட்டுரைகளாக அளித்திருக்கிறார் நூலாசிரியர்.

லஞ்சத்தை ஒழிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்ற நிலையில், தொடர்ந்து லஞ்சம் ஒழிக்கப்பட முடியாததாகவே இருந்து வருகிறது. அரசு அலுவலகங்களில், சான்றிதழ், நலத்திட்டங்கள் ஆகியவற்றைப் பெற அதிகாரிகளை கவனிக்காமல் காரியம் நடக்காது என்ற நிலைதான் இன்றைய நடைமுறையில் உள்ளது. கல்வித்துறை, காவல் துறை, பதிவுத்துறை, நில அளவைத் துறை, நிதித்துறை எனப் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

லஞ்ச ஒழிப்பு சட்டங்களும், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டும், லஞ்சமும், ஊழலும் இந்தச் சட்டங்களால் அணைபோட்டு தடுக்க முடியாத பெருவெள்ளமாக பெருக்கெடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் லஞ்சம் கை மாறிக்கொண்டேயிருக்கிறது. அதனால் மக்கள் சொல்லவொணா அவதிப்படுகிறார்கள். எங்கும் எதிலும் ஊழல் புகுந்து விளையாடுவதால் அது சமுதாயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும் அபாயம் இருக்கிறது. இப்படிப்பட்ட லஞ்சத்தால் ஏற்படும் பொருளாதார சீரழிவால் பெருமளவில் பாதிக்கப்படுவோர் ஏழை எளியவர்களே. ஏனென்றால் இவர்கள்தான் யாருக்குமே லஞ்சம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

லஞ்சம் என்ற குற்றத்தைத் தட்டிக் கேட்க வேண்டியதில் ஊடகங்களின் பணியும் முக்கியமானது என்கிறார் நூலாசிரியர். அவ்வகையில், தான் பணிபுரிந்த தினமலர் நாளிதழ் எவ்வாறு லஞ்சத்தை ஒழிப்பதற்கான சமூகப் பணியில் முன்னணியில் நின்று, லஞ்ச விழிப்புணர்வு குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டது என்பதையும் விரிவாகத் தெரிவித்திருக்கிறார். அவ்வகையில், தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்ட லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’, ‘வாங்க மாட்டேன் லஞ்சம்போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் மக்களிடைய பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்தப் புத்தகத்தில், லஞ்சம் தொடர்பான புகார் கொடுத்த பிறகு அதன் மீதான விசாரணை எப்படி நடைபெறுகிறது, சாட்சிகள் எப்படி கருதப்படுகிறார்கள், லஞ்சப் பணம் திரும்பக் கிடைக்குமா, லஞ்சம் வாங்கியவரின் மீதான நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைக் குறித்த தகவல்கள் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், லஞ்ச, ஊழல் குற்றங்களுக்கான தண்டனைகள், லஞ்ச ஒழிப்புத்துறை, சி.பி.. செயல்பாடுகள், முக்கிய முகவரிகள் என ஒட்டுமொத்தமாக லஞ்சம் குறித்த விழிப்புணர்வையும், தெளிவையும் தருகிற முழுமையான கையேடாக உள்ளது இந்தப் புத்தகம். சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நூல் இது.

•• தினமலர் நாளிதழில் வெளியான புத்தக விமர்சனம் ••

லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்

ஆசிரியர்: .விஜயகுமார்
பக்கங்கள்: 96
விலை:ரூ.60
வெளியீடுவிஜயா பதிப்பகம்கோயம்புத்தூர் .
போன்: 0422 – 2382614, 23856

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname