Sunday, November 4, 2018

எழுத்தும் செம்மைப்பிரதியாக்கலும்




யதார்த்த நிகழ்வுகளுக்கு உட்பட்டு எழுகின்ற ஆழ்மனக் கிளர்ச்சியே எழுத்துக்கான உந்துதல். எந்த ஒரு நிகழ்வும் ஏதாவது ஒன்றின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

ஒரு படைப்பை கவிதையாக, கட்டுரையாக, சிறுகதையாக, நாவலாக என எழுத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற வடிவம் சார்ந்தே அதை நாம் உள்வாங்கிக் கொள்கிறோம். வடிவத்தை நிர்ணயிப்பதில் உள்ளடக்கத்தின் பங்கு முக்கியமானது. கலை வடிவத்தின் ஒரு பிரிவான எழுத்து பழக்கத்தின் காரணமாகவும், பயிற்சியின் காரணமாகவும் மட்டுமே பண்படுத்தப்படுகிறது. தன்னைச் சுற்றி நிகழ்கிறவற்றின் அனுபவம் குறித்த உணர்ச்சிகளை யதார்த்த மற்றும் புறநிலை யதார்த்த மனநிலையில் மீண்டும் தனக்குள் எழச்செய்து வெளியிடுகின்ற போது படைப்பாக உருக்கொள்கிறது.
உள்ளடக்கத்துக்கும், வடிவத்துக்கும் இடையிலான நுட்பமான இழை மிக முக்கியமானது. ஒரு படைப்பின் வகைமையை அறிந்து வாசிப்பவர் உள்வாங்கிக் கொள்கிற புரிதலை தரக்கூடியது.

படைப்பின் உள்ளீடு திறன் படைப்பாளியின் மனநிலை, பயிற்சி, பழக்கம் ஆகியவற்றைக் கொண்டே அறியப்படுகிறது. முழுமையான வெளிப்பாட்டுத் தன்மையும், உள்ளடக்கத்திற்கும், வடிவத்திற்கும் இடையே இயைபுத் தன்மை அற்ற படைப்புகளும் முரண்பாடுகளைக் கொண்ட படைப்புகளாகி விடுகின்றன.

இலக்கணப் பிழைகளற்ற, சொற்செறிவான, செம்மையான படைப்பின் பூரணத்தன்மைக்கு ஒரு படைப்பாளி கறார்த்தனமான ஒரு செம்மையாக்குநராக செயல்பட வேண்டியது அவசியம். இது பல நேரங்களில் முடியாமல் போய்விடுவது இயல்பான ஒன்றுதான். மொழிப்பயிற்சியும், இலக்கண அறிவும் படைப்பாளிக்கு அவசியமான ஒன்று. மொழி பயிற்சியற்று, இலக்கணப் பரிச்சயமற்ற நிலையிலும், உள்ளடக்கம், வடிவம் குறித்த கவனத்துடன் படைப்பை செறிவாக்கி அப்படைப்பைக் கூர்மையாக்க செம்மைப்படுத்துதல் அவசியம். செம்மைப் பிரதியாக்குநரின் பணியே ஒரு படைப்பை சிறப்பாக்குதலில் முக்கியமானது.

படைப்பாளி சுயமாக தனது படைப்பைச் செம்மையாக்குவதில் கவனம் செலுத்தலாம். தன் படைப்பைத் தானே செம்மையாக்குவதில் சில சிக்கல்கள் இருப்பதாக கருதுகிறேன். தன் படைப்பு என்பதாலும், எழுதி விட்டோம் என்கிற ஒரே காரணத்தாலும் நேர்மையாகவும், கண்டிப்பாகவும் படைப்பை செம்மையாக்குதல் கடினமான ஒன்று. படைப்பாளிக்கு அடுத்த நிலையில், செம்மைப்படுத்துவதை செம்மைப் பிரதியாக்குநர் கொண்டு செய்வது. படைப்பாளியின் சிந்தனை, வெளிப்பாட்டுத் திறனின் முழுமை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு படைப்பின் உள்ளடக்கமும், வடிவமும் சிதையாமல் செம்மைப் பிரதியாக்குநர் செய்ய வேண்டும். இது ஒரு  சுழற்சியான நிகழ்வு. 

செம்மைப் பிரதியாக்குநர் படைப்பை செம்மைப்பிரதியாக்கி படைப்பாளியிடம் கலந்துரைத்து சீர் செய்யப்பட வேண்டியதும், ஒரு படைப்பின் கலையாக்கப் போக்கை திறனுள்ளதாக ஆக்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செம்மைப் பிரதியாக்குநர் செயல்படவேண்டியது அவசியம்.

அடையாளச் சிக்கல், தன்னாய்வு, கற்பனை வெளிப்பாடுகள், சுயமோகம், விடுதலை, தன்னைத்தானே சமன்படுத்திக் கொள்ளுதல் எனப் பல்வேறு நோக்கங்களுக்காக எழுதுவதாக கூறிக் கொண்டாலும் இவை எல்லாவற்றின் உள்ளீடாக நோக்கினால் மனித மனதின் ஆளுமைச் செயல்பாடுதான் எழுத்து. படைப்பு மனநிலைக்கு ஆக்கத்திறனும் மொழியாற்றலும் மிகவும் அவசியமானது. படைப்பைக் கட்டமைப்பதில் ஆக்கத்திறன் வகிக்கின்றதற்கு இணையான செயலை படைப்பினூடாக வெளிப்படும் மொழியாற்றலும் நிகழ்த்துகின்றது. ஒரு படைப்பினைச் சிறப்பிப்பது செம்மையானக் கட்டமைப்பு மட்டுமே. எனவே, படைப்பினை இலக்கணப் பிழை, காலப்பிழை போன்றவற்றைத் தவிர்த்து படைப்பைத் திருத்துதலும், செம்மைப்படுத்துதலும், திருத்தி மறு உருவாக்கம் செய்வதும் தேவையாகிறது.

படைப்பிற்கான உந்து சக்தியைத் தருகின்ற மனநிலை அப்படைப்பை எழுத்து வடிவாகத் தருகையில் சுய அனுபவ உத்திகளை பிரயோகித்து தான் சொல்ல வந்ததைச் சொல்ல முயல்கிறது.

ஏன், எதை, எப்படி, யாருக்காக சொல்கிறோம் என்கிற நான்கு அடிப்படையான விஷயத்துடன் பொருத்தி படைப்பாக்க மனநிலையை வரையறுக்கலாம்.

செம்மைப் பிரதியாக்கல் என்பது ஒரு பிரதியின் உள்ளடக்கத்தை கூட்டவோ, குறைக்கவோ செய்தல் அல்ல. ஒரு படைப்பின் முழுமைத்தன்மையை நேர்மையான அணுகுமுறையுடன் சுட்டித் திருத்துதல் அவசியம். வெறும் எழுத்துப்பிழை, இலக்கணப் பிழைகளை மட்டுமே சுட்டிக்காட்டுதல் அல்ல.

ஒரு படைப்பை செம்மைப் பிரதியாக்கல் எனப்படுவதை மூன்று எளிய முறைமைகளில் கட்டமைக்கலாம்.

படைப்பு மனநிலை
செம்மைப் பிரதியாக்குநர் மனநிலை 
செம்மைப்பிரதி பதிப்பாளர் மனநிலை

படைப்பு மனநிலையில் பிரதியை அணுகும் பொழுது, சொற்கட்டமைப்புக் குறித்த கவனமேதுமின்றிச் சொல்ல வந்ததைச் சொல்லி விட வேண்டுமென்ற ஆர்வமிகுதி மட்டுமே அதிகம் இருக்கும். மிகை வார்த்தைப் பிரயோகங்கள், தேவையற்ற பத்திகள், தொய்வின்றிச் சொல்லுதல் போன்றவற்றில் படைப்பு மனநிலையில், சுயக் கட்டுப்பாட்டுடன், கறார்த்தன்மை கொண்டு இயங்குதல் கடினமான ஒன்றுதான்.
செம்மையூட்டுதல் என்பதை செம்மைப் பிரதியாக்குநர் பல நிலைகளில் கட்டமைக்க வேண்டியிருக்கிறது.

• இலக்கணப்பிழை, எழுத்துப் பிழை ஆகியவற்றைக் களைதல்.
• தொய்வேற்படும் இடங்களில் இறுக்கமான சொற்கட்டின் தேவையை சுட்டுதல்
• தளர்ந்த நடையில், தெளிவற்ற நடை, மிகைச் சொல்லாடல் குறித்த கவனத்தை ஏற்படுத்துதல்

பதிப்பாளர் என்ற நிலையில் செம்மைப் பிரதியாக்குதல் என்பதை ஒரு படைப்பு எப்படியிருந்தால் முழுமையாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்பதை தீர்மானித்தலைச் சொல்லலாம்.

பிரதியின் பிரக்ஞைபூர்வமான நோக்கம் சரியான முறையில் உணர்வதற்கான சாத்தியப்பாடுகளைக் குறித்து அவதானித்தலே செம்மைப்படுத்துதலில் பதிப்பாளரின் பணியாகும்.

செம்மைப்பிரதியாக்கம் என்பது வெறும் வள வளவென விவரிக்கப்பட்ட பகுதிகளைக் குறைத்தலும், படைப்பின் சில பகுதிகளை நீக்கித் தொகுத்தலும் அல்ல.

பிரதியின் கலைத்தன்மை சிதையாமல், எவற்றை நீக்கினால் இன்னும் சிறப்புறும் என்பதையும், விடுபடல்கள் இருப்பின் அவற்றைப் பற்றிய குறிப்புகளை அளித்தலும் ஆகும்.

படைப்பினை இரசனை சார்ந்து அணுகுகின்ற போது நமக்குள்ளாக தன்னியல்பாக எழுகின்ற அறக்கோட்பாடுகள் மனப்பதிவாகி, வாசிப்பின்போது பிரதிபலிக்கிறது.
அதே சமயம், படைப்பாளியாக இருந்து எழுதுகின்ற வேளையில், படைப்பில் சொற்சிக்கனம், தெளிவுற மொழிதல் ஆகியவற்றுக்கான விதிமுறைகளை தளர்த்திய பார்வையில் சுயக் கட்டுப்பாடின்றி வெளிப்படுத்திவிட நேர்கிறது.

இந்த இடத்தில்தான் படைப்பிற்கான செம்மைப் பிரதியாக்குநரின் தேவையும், செம்மைப்பிரதிக்கான பதிப்பாளரின் பார்வையும் கட்டாயமாகிறது.

எனவே, ஒரு படைப்பு வெளிப்படையாகவும், அருவமாகவும் சொல்ல / உணர்த்த முனைகிறவற்றை சரியாகக் கொண்டுள்ளது என்பதற்கான உத்திரவாதத்தைத் தருவதாக செம்மைப் பிரதியாக்குதல் அமைய வேண்டும்.
•••

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname