Sunday, November 4, 2018

வாசிப்பின் ஊடாட்டத்திலெழும் ரசவாதம்


** தி.பரமேசுவரியின் தனியள்தொகுப்பை முன்வைத்து... **
---------------------------------------------------------------------------------------------------------------கவிதை எழுதுகிறவர்கள் எல்லாம் கவிஞர்கள். ஆனால் எவையெல்லாம் கவிதை? எவையெல்லாம் கவிதையில்லை என்பதை எப்படிக் கண்டடைவது என்பது என்றைக்குமான கேள்வி. எந்தப் புள்ளியிலிருந்து கவிதை ஆரம்பிக்கிறது; கவிதையின் தோற்றுவாய் எதுவென யோசித்துப் பார்த்தால் மங்கலான தெளிவற்ற ஒரு பதிலே நமக்குள் கிடைக்கிறது.

கவிதையென்பதும், கவிதையென நாம் வெளிப்படுத்துகிற வரிகளில் காணக் கிடைக்கிற கவித்துவக்கணம் நமக்கானதா அல்லது வாசிக்கப் போகிற எவருக்காகவோவா என்கிற கேள்வியும் எழுகிறது. ஏதோவொரு அகவெழுச்சியின் உந்துதலில் நனவிலி மனதிலிருந்து எழுத்துகளாக வெளிப்படுவதை அசலான கவிதை என்று நான் புரிந்து கொள்கிறேன். வாசிப்பும் புரிதலும் கவிதையென்றால் இதுதான் என எனக்குப் புரிய வைத்திருக்கிறது.

சில சமயங்களில் கவனமற்ற எதேச்சையான சொல்லாடல்களில் துவங்கி அதுவாகவே தீவிரத்தன்மை கொண்டு வேறு தளத்தில் புரிதலைத் தரக்கூடிய கவிதைகளும் நிகழ்ந்துவிடுவதுண்டு. கவிதையென்பது எழுதுகிறவரின் மன நிலையிலிருந்து அவருடைய வாழ்வனுபவத்திற்குட்பட்டு வெளிப்படுகிற வரிகள் மட்டுமல்ல, வாசிக்கிறவரின் புரிதல் சார்ந்ததும் கூட.

ஆக, கவிதை ஆரம்பிக்கிற புள்ளி நனவிலி மனதிலிருந்துதான் என்பதில் சந்தேகமில்லை. இது செய்யப்படுகிற கவிதைகளுக்குப் பொருந்தாது. செய்வகைக் கவிதைகளும், தாக்கங்களின் வெளிப்பாடாக படைக்கப்படுகிற கவிதைகளிலும் வாசிக்கிறபோது ஒட்டாத ஒரு மனநிலை ஏற்பட்டு விடும்.

நனவு மனதில் வேர்கொண்ட பிரத்யேக அனுபவத்தைக் கடத்துகிறதான கவிதைகள் காற்றில் திரளும் சோப்பு நீர்க்குமிழிகளாக உள்ளுக்குள் வட்டமிடத் தொடங்குகிறது. கண நேரமோ அல்லது நுண்கணமோ உயிரெனினும் அக்கவிதையின் வாசிப்பு அகத்தளத்தில் நிகழ்த்தும் உணர்வுகளே அவற்றைக் கவிதையென உணரச் செய்கிறது.
வரிகளுக்கிடையில் புரிந்து கொள்ளப்படவேண்டிய மௌனமும், கவிதையின் மொழியை உள்வாங்கிக் கொள்வதும் அதன் புரிதலுக்கு முக்கியமானது. கவிதையை அணுகுவதில் பல நிலைகள் உண்டு. தத்துவமாக, இயல்பாக, இயற்கையாக, வாழ்வனுபவமாக, காதலாக என பன்முகத்தன்மையில் கவிதையின் புரிதல் நிகழலாம்.பரமேசுவரியின் தனியள்என்கிற இக்கவிதைத் தொகுப்பில், பிடிப்பற்ற நிலையும் வாழ்வின் நிச்சயமின்மையும் ஏற்படுத்தும் பதட்டங்கள், பயம், வலி, வேதனை, துயரம் இவற்றின் வெளிப்பாடுகளில் கவிதையை அதே உணர்வலைகளுடன் உள்வாங்கிக் கொள்ள ஏதுவாகிறது. இப்படியான கணங்களைக் கடந்து வராத எவரும் இருக்க முடியாது என்பதே இதற்கான சாத்தியங்களை உறுதிப்படுத்துகிறது. பரமேசுவரியின் கவிதைகளில் பெரும்பாலானவை இத்தன்மையைக் கொண்டதாக இருக்கின்றன.

நவீன கவிதையில் தவிர்க்க இயலாத அம்சங்களாக சிலவற்றைச் சொல்லலாம். சில படிமங்கள், வார்த்தைகள், ஒப்பீடுகள் திரும்பத்திரும்ப காணக் கிடைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் மாற்று வார்த்தைகளோ, படிமங்களோ, ஒப்பீடுகளோ பல இருக்கிறது என்றாலும், அவற்றின் மீதான விடுபடவியலா வசீகரம் ஒவ்வொரு மனதிலும் உள்ளுக்குள் பாய்ந்திருக்கிறது என்பதே உண்மை. நான், நீ, போல, கடல், வானம், காற்று, பறவை, மழை எனச் சொல்லிக் கொண்டே போகலாம். இதன்கூடவே ஆண் குறி, முலைகள், யோனியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாகவே கவிதைகளில் வெளிப்படுகிற நான், நீ, அவன், அவள் வெளிப்பாடுகள் அர்த்த ரீதியான பதிலிகளே. எழுதியவரின் உணர்வைப் பிரதிபலிக்கிற பதிலி வார்த்தையாகத்தான் நான்இருக்கிறது. நான்என்ற வார்த்தை முனைப்புடன் கவிதை சொல்லப்படுகிற போதே நீஎன்ற வார்த்தையைச் சொன்னாலும், சொல்லாமல் விடப்பட்டாலும் அங்கு நிகழ்த்தப்படுகிற உரையாடலின் எதிராளியைச் சுட்டுகிற விதமாகக் கவிதை அமைந்து விடுகிறது. எனவே, எல்லாக் கவிதைகளிலும் நான் x நீமறைபொருளாகவோ, நேரடியாகவோ பேசப்படுகிறது.

அதுபோல படிம வெளிப்பாடுகள். உதாரணத்திற்கு, பாம்பைக் குறியாகவும், கடலை யோனியாகவும் பார்க்கிறதெல்லாம் கற்பனாவிரிவு மட்டுமல்ல.. அகத்தளத்தில் எழுகிற இம்மாதிரியான ஒப்பீடுகள் அனிச்சையாக விழித்துக் கொள்பவை. பலநேரங்களில் தற்செயலாக எழுகிற படிம வரிகள் மிகச் சிறந்ததாக அமைந்து விடுகின்றன.
**

இதே பின்னணியில் பரமேசுவரியின் ஒரு கவிதையை அணுகிப் பார்க்கலாம்.

நானே கட்டியிருந்த இறுக்கமான வேலி
சாதாரணமான அந்த வைகறைப் பொழுதில்
காணாமல் போயிருந்தது

நானறியாமலே முட்களால் செய்யப்பட்டிருந்த
என் உடைகள் களவாடப்பட்டிருந்தது

எப்போதும் பூசியிருக்கும் நிண வாசனை அகன்று
புதியதொரு வாசம் கமழ்ந்ததென் மீது

மதம் பிடித்த அந்தக் கண்கள்
உயிரோடு புசிப்பதை எதிர்க்கத் திராணியற்று
ஒடுங்கும் என் உடலில் படர்கிறது பித்தக்கொடி

திசைகளே ஆடையான என் உடலை
இலைகளால் மறைக்க முயல்கிறேன்

இறுகப்பற்றிச் சுற்றி அணைத்து
கழுத்தை இறுக்குகிறது கொடி..
**

என் வசதிப்படி இக்கவிதையைப் புரிந்து கொள்கிறேன்.

சுய இயல்பாக தனக்குத்தானே ஒரு வேலியை அமைத்துக் கொள்கிறாள். அவளறியாமல் காணாமல் போகிற அவ்வேலிஎன்பதில் அவளுடைய சுய இயல்பிலிருந்து சற்றே நெகிழ்த்திக் கொண்டதை உணர்த்துகிறது. பொதுவாகவே நாம் விட்டுக் கொடுத்தல், சகித்துக் கொள்ளுதல் என்பதான வாழ்க்கை அமைப்பிற்கு பழக்கப்படுத்தப்பட்டவர்கள். அடிமைத்தனம் என்பது நம் எல்லாச் செய்கைகளிலும் வேர் விட்டிருக்கும். நம் சமூகச் சூழல் இதையே நமக்குப் படிப்பித்திருக்கிறது. உறவுகளிலும் இதுதான் நிலை.. விட்டுக் கொடுத்து விட்டுக்கொடுத்து ஒரு கட்டத்தில் நாம் என்கிற சுயம் அறுபட்டுப் போயிருக்கும். அதேசமயம் விட்டுக் கொடுத்தலுக்காகக் கிடைத்த அதுவே நம்மை இறுக்கி நெருக்குவதாகவும் ஆகிவிடும்.

வேலி X காணாமல் போதல்
முட்களாலான உடை X களவாடப்படுதல்
நிண வாசனை X கமழும் புதிய வாசம்
மதம் பிடித்த கண்கள் X எதிர்க்கத் திராணியற்று ஒடுங்கும் உடல்

அறிந்து கட்டிக் கொண்ட வேலி, அறியாமல் களவாடப்படும் முட்களாலான உடை என்பவையெல்லாம் அடிப்படையில் தனியொருத்தியின் இயல்பிழத்தல், விட்டுக் கொடுத்தல், ஈர்ப்பு, உடன்படல், தத்தளிப்பு, தவிப்பு, விடுபடலுக்கான வேட்கை என்பதாகக் கவிதையின் புரிதல் இருந்தாலும், ‘திசைகளே ஆடையான உடல்என்பதில் கவிதையின் உச்சம் நிகழ்கிறது. திசைகள் ஆடையான என்கிற பரந்த வெளியில் இக்கவிதை பொதுவான பாடுபொருளில் புரிதலை நிகழ்த்துகிறது. பெண்ணுடலின் மீது காலம்காலமாக நிகழும் உலக மொழியான ஆண் அடிமைப்பட்டிருத்தலை திசைகளே ஆடையான உடல்என்ற வரிகள் உள்ளர்த்தத்தோடு சுட்டுகின்றன.

அதற்கடுத்து இறுதி வரிகளில் சொல்லப்படுகிற,

// இறுகப்பற்றிச் சுற்றி அணைத்து
கழுத்தை இறுக்குகிறது கொடி//

இறுகப்பற்றுதலும், அணைத்தலும் தன் தேவையும் எதிர்பார்ப்பும் என்ன என்பதை உணர்த்துகிற வரிகளாகவும், ஆனால், தனக்குக் கிடைத்தது தன் கழுத்தை இறுக்குவதாகவே இருப்பதையும் வெளிப்படுத்துகிறது இக்கவிதை.

மேற்குறிப்பிட்ட இக்கவிதையில், தன் இயல்பைச் சுட்டித் தானறியாமல் ஓர் எதிர்மையின் போக்கிற்கு ஆட்பட்டு, அதில் ஈர்ப்புற்றுத் தன்னையிழந்து பரிதவிக்கிற ஒரு நிலையை தனித்துவப் பார்வையிலும், பொதுமையான ஒரு நோக்கிலும் புரிந்து கொள்ளத்தக்கவகையில் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் பரமேசுவரி.

கவிதையின் மொழிவயப்பட்ட விவரணையே அதன் அடிப்படை அலகைத் தீர்மானிக்கிறது. கவிதையின் சொற்சேர்க்கைகளும் முக்கியமானவை. தேவையற்ற சொற்களின் ஆக்கிரமிப்பின்றி, கவிதையை வாசிக்கிறபோது நெருடல்களற்று, கவிதையின் அர்த்தப்பாடுகளை நமக்குள் எளிதாக நிகழ்த்துகிறது.  கவிதையின் சொல்லடுக்குகள் நம்மை அக்கவிதையை அணுகுவதிலிருந்து சிதைத்து விடாமலிருக்க வேண்டும். படிமங்களில் கவரப்பட்டு மனமொன்றிப்போகிற பல கவிதைகளை பரமேசுவரியின் கவிதைகளில் காண முடிகிறது.
**

மற்றுமொரு கவிதை..

காட்டுப் பூ மலர்ந்திருக்கிறது
மென் வாசனை ரீங்கரிக்கிறது வனமெங்கும்

சிறகிசைத்துச் சிரிக்கும் பொன்வண்டுகளைத்
தன் மடியில் பொதித்திருக்கிறது நிலா

வானிலிருந்து உதிரும் புன்னகைகளை
உண்டு தீர்க்கிறது ஆம்பல் மலர்

காளான்களையும் சிறு புதர்களையும்
தவ்விச் செல்கின்றன குறுமுயல்கள்
சிறு முலையும் கூர்நாசியும்
வரியோடிய வயிறும்
ஒடுங்கிய இடையும் நாபிச் சுழியும் சீர்நெற்றியும்
முக்கண்ணும் பொருந்தியவள்
தன்னெதிரில் சுருளும் வாலையைப்
பார்த்தபடி இருக்கிறாள் நெடுநோக்கோடு

வளைந்து சரிந்து ஓடுகிறது காட்டாறு
சீறிச் சுழன்று நகர்கிறது மலைச் சர்ப்பம்
தண்காற்றில் அலைந்தபடி இருக்கிறது
சுடர்விளக்கு..
**

இக்கவிதையில், காட்டுப்பூ, ரீங்கரிக்கும் மென்வாசனை, வனம், பொன்வண்டு, நிலா, வானம், ஆம்பல், காளான், சிறுபுதர், முயல்கள், முக்கண் பொருந்தியவள், சுருளும் வாலை எல்லாவற்றின் நிச்சயமும், உறுதித்தன்மையும் பேசப்படுகிறது. ரீங்கரிக்கும் மென்வாசனைஎன்கிற வார்த்தைகளின் வசீகரம் கவிதையை மேலும் நெருக்கமாக்குகிறது. இவற்றையெல்லாம் சொல்கிற கவிதையின் சாரமாக மனதோடு ஊடாடுகிற இடம் பின்வருகிற வரிகள்தான்.

//வளைந்து சரிந்து ஓடுகிறது காட்டாறு
சீறிச் சுழன்று நகர்கிறது மலைச் சர்ப்பம்
தண்காற்றில் அலைந்தபடி இருக்கிறது
சுடர்விளக்கு..//

வளைந்து சரிந்து ஓடுகிற காட்டாறும், சீறிச் சுழன்று நகர்கிற மலைச்சர்ப்பமும், தண்காற்றில் அலையும் சுடர்விளக்கும் நிகழ்த்துகிற புரிதல்கள் அற்புதமானவை. முன்பு பார்த்த ஒரு கவிதையில் எதிர்மையைச் சுட்டிப் தன்னைப் பூர்த்தி செய்து கொண்டது கவிதை. ஆனால், இக்கவிதையில், ஒன்றோடொன்று தொடர்பானவற்றைப் பொருத்தி உள்மனதின் இயல்பூக்கங்களிலிருந்து கவிதையை  உள்வாங்கிக் கொள்ளச் செய்கிறது.

இவ்வரிகளில், ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக மறைபொருளாக விளங்குகிற படிம அர்த்தங்கள் பல புரிதல்களில் நம்மை அமிழ்த்துகிறது.
**

கல்லறைத் தெரு
என் தெருவின் பெயர்

மரித்தவர் நடுவே
நான் வசிக்கிறேன்

சோகமும் கண்ணீரும்
என் கொடி இலச்சினைகள்

இரவில் மட்டுமே என் உரையாடல்கள்
அதுவும் அவர்களுடன் மட்டுமே

ஒவ்வொரு நாளும் இறக்கிறேன்
மறுநாள் உயிர்த்தெழுவதும்கூட
அன்றிரவு மரிப்பதற்கே

பாழ்நிலத்தில் விருப்பமுள்ளவர்கள் வாழட்டும்
நான் அப்பால் ஏகுகிறேன்
என்னுடன் உரையாடுபவர்களுடன்

எருக்கம்பூக்களின் வாசம்
மனத்துக்கு இதமாய்
மரமல்லியை விடவும்

இருளும் வெற்றிடமும்
சூழ்ந்திருக்கும் இவ்விடத்திற்கு
நாளை நீங்கள் வருவீர்கள்.

மரணம் வாழ்வுடன் நிகழ்த்துகிற உரையாடல் முக்கியமானது. எனது பல கவிதைகளில் அதைச் சுய தரிசனமாகக் கண்டு அதன் அலைக்கழிப்புக்கு உட்பட்டிருக்கிறேன். அது ஓர் நிலை. பிறர் தன்னைக் கீறி அதன் காயத்திலிருந்து வழிகிற இரத்தத்தைப் பார்த்தபடியே நாட்களைக் கடத்துகிறதற்கு ஒப்பானது அது. இப்படியான பல கவிதைகளை தனியள்தொகுப்பில் வாசிக்க முடிகிறது. காயங்களும், வலிகளும் திரும்பத்திரும்பத் தடவப்படுகிற அதன் தழும்புகளின் நினைவு மீட்டல்களும் மரணத்திற்கொப்பான பொறிகளும் பல கவிதைகளில் பதிவாகியிருக்கிறது.
**

மற்றுமொரு கவிதை..

ஏமாற்றத்தின் கனிகளைப்
பரிசளிக்கிறது மலட்டு மரம்..
அறிந்தும் அதன் நிழலில்
இளைப்பாறுகிறாய்..

என்கிற இக்கவிதை வரிகளில் மலட்டு மரம், அது பரிசளிக்கிற ஏமாற்றக் கனிகள் எல்லாம் அவநம்பிக்கையூட்டுவதாகவே இருந்தாலும்,அறிந்தே அதன் நிழல் தேடி இளைப்பாறுதல் சொல்லப்படுகிறது. இளைப்பாறுதலின் ஊடாக எழுகிற சுய அமைதிப்படுத்தல், அதே நேரத்தில் நிகழ்கிற பதட்டம் இரண்டுமே தடதடத்துக் கொண்டிருக்கிற மனம் என்பதைத் தெரிவிப்பதை கவனிக்க வேண்டும்.

தொடர்காலத்தைக் குறிக்கிற இளைப்பாறுதல்என்பதன் சுயம் சார்ந்த தேவையும், அவசியமும் இருப்பதையும் சுட்டுகின்றன.
**

நிராயுதபாணியாகவும், தேம்புதல்களினூடாகவும், பேராசைகளற்ற எளிய எதிர்பார்ப்புகளின் மீதான நிச்சமின்மையையும், அதன் பொருட்டெழுகிற பயங்கள், சந்தோஷங்கள், இயற்கையின் கொண்டாட்டங்களில் சுய இயல்பு நிலைகளைப் பொருத்தி வெளியாற்றும் பலவும் பரமேசுவரியின் கவிதைகளில் இருக்கிறது. வழமையான நவீன பெண் கவிஞர்களின் விரிவு வேலியிலிருந்து விலகி வேறொரு தளத்தில், பிறழ்வு நிலை சந்தோஷச் சித்திரங்கள், நனவு நிலைத் துயரங்கள், வருத்தம் தோய்ந்த தொய்வற்ற சுய சம்பாஷணைகள் எனத் தனது கவிதையாடலை நிகழ்த்தியிருக்கிறார். எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி என்ற முதல் இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின்னர், ஆழ்மன உணர்வுகளின் வெளிப்பாடாக வாசிப்பின் ஊடாட்டத்தில் உள்ளுக்குள் ஒரு ரசவாதத்தை  நிகழ்த்துகிற கவிதைகளை உள்ளடக்கிய  இந்த மூன்றாவது தொகுப்பான தனியள்கவிதைத் தொகுப்பின் மூலமாக தனித்துவமான முன்னகர்த்துதலைச் செய்திருக்கிறார் பரமேசுவரி.
**

தனியள்
(கவிதைகள்)
தி.பரமேசுவரி
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்
விலை: ரூ.100


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname