Sunday, November 4, 2018

தன்னைத் துகிலுரிக்கும் கவிதைகள்


பொன்.வாசுதேவனின் உன்மத்தப் பித்தன், நிழலின் வாக்குமூலம் கவிதைத் தொகுப்புகளுக்கு எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய விமர்சனம்



பொருளொன்றின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சும் போது எதிர்த்திசையில் நிழல் விழுகிறது. நிழல் ஒருபோதும் நிஜம் ஆகிவிடாது. இருந்தும் நிஜத்தின் சாயலை நிழல் தாங்குகிறது. அந்த உரிமையில் அவை தன் எஜமானனின் அழுக்குகளை, வன்மங்களை, கசப்புகளை, அபத்தங்களை வார்த்தைகளாக்கினால் அவை பொன். வாசுதேவனின் கவிதைகளுக்கு நிகரானதாக மாறக்கூடும்.

பொன். வாசுதேவனின் நிழலின் வாக்குமூலம்மற்றும் உன்மத்தப் பித்தன்கவிதை தொகுப்புகள் இப்படியான கவிதைகளை தன்னுள்ளே வைத்திருக்கிறது. மனிதன் தன்னையே கண்ணாடியில் பார்க்கிறான். கண்ணாடியோ மனிதனை மட்டும் காட்டாமல் விமர்சனம் செய்வதற்குத் தோதாக அவனின் அழுக்குகளை அவனுக்குக் காட்டுகிறது. கடக்க வேண்டிய கசப்புகளையும் பாதுகாக்க வேண்டிய பண்புகளையும் சுய விமர்சனத்தின் மூலமே அறிந்து கொள்கிறான். நிழலின் உரிமையும் கண்ணாடியின் விமர்சனமுமாக விரிகிறது பொன். வாசுதேவனின் கவிதைகள். சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் நிரூபிக்கவியலாத மனிதக் கணங்களை வார்த்தைகளாக்குகின்றன இக்கவிஞரின் வரிகள்.

எல்லாவற்றிலும்
உன்னை நீயே கர்வமாய்
உற்று நோக்கி அக மகிழ்கிறாய்
ஆதார மனநிலையின் நீட்சியாய்
பருவந்தோறும் மாறிக் கொண்டிருக்கிறாய்
காண்போர்க்கேல்லாம் வெவ்வேறாய்
உன்னைச் சித்திரப்படுத்தி
ஊர்கின்றது நாட்கள்

மனிதன் அதிகமாகத் தெரிந்துகொண்டிருப்பது தன்னைப் பற்றி மட்டும்தான். அதை அவனால் கொண்டாடாமல் இருக்க முடிவதில்லை. தன்னை அவன் கொண்டாடும் அதே நேரத்தில் தன் கொண்டாட்டம் பார்ப்பவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிய மறுக்கிறான். சுய கொண்டாட்டத்தை பதிவு செய்யும் அதே நேரத்தில் இந்த அபத்தங்களையும் கவிதைகளில் பதிவு செய்கிறார்.

இயற்கையை வர்ணித்து சங்ககாலத்திலிருந்து கவிதைகள் இயற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன. இவ்விரு தொகுப்புகளிலும் கூட மரங்கள், பறவைகள், விலங்குகள் என சகல ஜீவராசிகள் சார்ந்தும் கவிதைகள் இடம் பெறுகின்றன. வாசிப்பில் அவை நவீனமான தோற்றத்தை உருக்கொள்கிறது.

அகல இறக்கை விரித்து
தாழ்வானில் பறந்தபடி
பெரு நீர்ப்புலத்தில் அசைவுறும்
தன்னிழல் தான் கண்டு
சுய வேட்டையின் மூர்க்கஞ் செலுத்தி
கூரலைகை பிரித்து நீரிலிட்டு
மீன் கவ்விப் பற்றி
காற்றையுந்தி
உயரப்பறக்கிறது பறவை
பிழைத்துப் பெருமூச்சிடுகிறது
பறவையின் நிழல்.

இயற்கையைத் தன் மொழியில் விவரிக்கும் விதம் வர்ணனையோடு நில்லாமல் சிந்தனைக்கும் வழிகோலுகிறது. எது கவிதை என்பதைச் சார்ந்தும் சில கவிதைகள் இடம்பெறுகின்றன. பல கவிதைகள் கருவின் அளவில் மிக ஆழமானதாக இருக்கிறது. இருந்தும் வாசகனைக் குழப்பாமல் தெளிவுற, எளிய வார்த்தைகளால் அதை உருவாக்கியிருக்கும் விதம் எல்லாக் கவிதைகளையும் மனதுள்ளே பதிய வைக்கிறது.
உன்மத்தப் பித்தன் நூலின் முன்னுரை வழியே பொன். வாசுதேவனின் இலக்கியச் செயல்பாடுகளையும், நவீன கால கவிதைகளின் வளர்ச்சியையும் நுண்மையாக அறிந்து கொள்ளமுடிகிறது. அவற்றைக் கடந்து கவிதைகளை வாசிக்கும் பொழுது நவீன கவிதைக்கான எடுத்துக்காட்டாக இத்தொகுப்புகள் இருக்கும் எனும் நம்பிக்கையை கவிதைகள் எழுப்புகின்றன.

-கிருஷ்ணமூர்த்தி
krishik10@gmail.com

உன்மத்தப் பித்தன், நிழலின் வாக்குமூலம் (கவிதைத் தொகுப்புகள்)
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname