Monday, November 18, 2013

தன் வரலாறு எனும் அசாத்திய சோதனை

தன் வரலாறு எழுதுதல் என்பது ஒருவிதத்தில் அசாத்தியமான முயற்சி. மிக அரிதாகவே செய்யப்படுகிறது இவ்வகையான எழுத்து வகைமை. தன்னைப் பற்றித் தானே எழுதுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளது. எதைச் சொல்வது, எதைச் சொல்லாமல் விடுவது, எதைத் சொன்னால் சுய பெருமை பேசுவதாகி விடும் என்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும். அயல்மொழிகளில் தன் வரலாறு எழுதுதல் என்பது பரவலாக இருக்கிறது

ஆனால் தமிழில் மிகவும் குறைவுதான். அப்படியே எழுதப்பட்டாலும் நாட்குறிப்புப் பதிவுகள், கடிதங்கள், பயணக்கட்டுரை, நினைவுகள், அனுபவம், விமர்சனம், நட்பு என்பது பற்றிய பகிர்தல்களாகவே இருக்கிறது. இவையும் தன் வரலாறு என்ற வகைமையிலேயே பொருத்திப் பார்க்கலாம். தன் வரலாறு வடிவத்தில் எழுதப்படுகிறவை காலத்தின் சாட்சிகளாக நம் முன் நிற்கின்றன. இந்தந்த வருடங்களில் இப்படியாக இருந்தது என்பதை தன் வரலாற்றுப் பதிவுகளின் வாயிலாகவே நாம் ஆதாரப்பூர்வமாக அறிய முடிகிறது.

தன் வரலாறு வகையிலான முக்கிய நூல்கள் சில

ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பேடு
சுய சரிதை – பாரதி
சத்திய சோதனை – காந்தி
எனது சரிதை – வ.உ.சி.
ஜீவித சரிதம் – ரெட்டைமலை சீனுவாசன்
என் சரிதம் – உ.வே.சாமிநாதய்யர்
நினைவுக் குறிப்புகள் – திரு.வி.க.
என் கதை – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
எனது போராட்டங்கள் – ம.பொ.சிவஞானம்
எனது நாடக வாழ்க்கை – டி.கே.சண்முகம்
எனது வாழ்க்கை அனுபவங்கள் – ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்
நினைவலைகள் – நெ.து.சுந்தர வடிவேலு
தமிழ்நாடு – ஏ.கே.செட்டியார்
வன வாசம் – கண்ணதாசன்
நெஞ்சுக்கு நீதி – கருணாநிதி
ஒரு கலை இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன்
சினிமாவும் நானும் – மகேந்திரன்
இது ராஜபாட்டை – நடிகர் சிவகுமார்
சங்கதி – பாமா
கவலை – அழகிய நாயகி அம்மாள்
சிலுவைராஜ் சரிதம் – ராஜ் கௌதமன்
நான் சரவணன் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா
வடு - கே.ஏ.குணசேகரன்
உணர்வும் உருவமும் –
முள் - முத்து மீனாள்
நாடோடித் தடம் – ராஜ சுந்தரராஜன்
உடைபடும் மௌனங்கள் - மீ.ராஜு

விடுபட்டவைகளை நீங்களும் குறிப்பிடலாம்.


எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் தாயார் அழகிய நாயகி அம்மாள் எழுதியகவலைநாவலிலிருந்து ஒரு பகுதி.




இளையமகன் செல்வக்கனி தனக்குப் பெண் தேடினான். பூமாத்தியன்விளைக்கு வடக்கே உள்ள ஆடறுவிளை என்ற ஊரில் பரம்பரையாகப் பனையேறி வரும் குடும்பம். கொஞ்சம் பணம் சேர்ந்து, சிற்றுப்பணக்காரனாய் இருந்தான்.

அவன் மகனை சவரிமுத்து என்று சொல்லுவார்கள். அவன் காலத்தில் முன்னைவிடவும் கூடுதலாகப் பணம் வந்தது. அவன் மகனுக்கு ஒரு மகள் இருந்தது. அந்தப் பிள்ளைக்கு நல்ல சம்மந்தம் வந்ததால் ஏழாயிரம் ரூபாய்க்கு சிறீதனம் கொடுப்பேன். நல்ல தென்னந்தோப்பும் நகையுமாய் கொடுக்கலாம் என்று ஒரு துப்பனிடம் சொன்னான். அந்த கோளோடை துப்பன் இந்த செல்வக்கனியிடம் வந்து விபரமாகச் சொன்னான். ஏழாயிரம் சிறீதனம் என்றதும் சம்மதித்து, கலியாணம் நடந்தது. பெரிய குடும்பத்தில் பெண் கொடுக்கிறோம் என்ற பெருமை சவரிமுத்து மகனுக்கு, மிகுதியான சந்தோசத்தோடு சீர்வரிசை கொண்டு போகவரச் செய்தான்.

ஆறுமாதம் ஆவதற்குள் பெண் பிடிக்கவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டது. சண்டை முற்றி திரச்சிவால் அடியும் நடந்தது. அந்தப் பெண் அடி பொறுக்க முடியாமல் தனியாகத் தகப்பன் வீட்டுக்கு ஓடினான். கொஞ்சம் நாள் கழித்துப் போய் கூப்பிட்டான். கூட்டிக் கொண்டு வந்து இன்னும் அடிப்பானென்ற பயத்தினால் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள். இன்னும் சில நாள் கழிந்தது. வரவில்லை. மணிகட்டிப் பொட்டல் ஊருக்கு அடுத்த அனந்தசாமி புரத்தில் ஊர்த் தலைமை நாடானின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மறைமுகமாய் கலியாணம் செய்து வைத்துகொண்டான்.

இதை அறிந்த மூத்ததாரத்தாள் கோர்ட்டில் கேஸ் போட்டாள். இருவரும் கோர்ட்டில் மொழி சொல்ல வேண்டி வந்தார்கள். மனைவி கூட்டில் நின்று என்னை வைத்துவிட்டு வேறே கலியாணம் செய்திருக்கிறார் என்றாள்.

இப்போதுள்ள அரசாங்கச் சட்டம் பிரகாரம் திரும்பக் கலியாணம் செய்யக் கூடாத காலமானதினால், புருசன் கலியாணம் செய்யவில்லை என்று தானே சொல்ல வேண்டும். மனைவிகூட்டைவிட்டு இறங்கினாள். கணவர் கூட்டில் ஏறினான். வக்கீல் இரண்டாவது கல்யாணம் செய்தது உண்மைதானாவென்று கேட்டார்.

கணவர் : நான் இரண்டாவது கலியாணம் செய்யவில்லை.
வக்கீல் : உமது மனைவிதானே இவள்.
புருசன் : ஆமா.
வக்கீல் : அவள் கேஸ் போடக் காரணம் என்ன.
இவர் : தகப்பன் வீட்டுக்குப் போனவள், என் வீட்டுக்கு வராமல் அங்கே இருக்கிறாள். எனக்கு ஒரு வேலைக்காரி பொங்கிக் கொடுக்கிறாள். நான் கலியாணம் செய்யவில்லை.

என்று சொல்லிவிட்டு இறங்கினான்.

எப்படியோ கேஸ் இவனுக்கு அனுகூலமாய் முடிந்து வாழ்ந்து வருகிறான்.


கவலை (நாவல்) - அழகிய நாயகி அம்மாள்

432 பக்கங்கள் - விலை : ரூ.90/-

ஆன்லைனில் வாங்க :





No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname