Sunday, December 15, 2013

மாற்றத்திற்கான முயற்சியில் இரு நிகழ்வுகள்

நேற்று 14.12.13 (சனிக்கிழமை) இரண்டு கூட்டங்களில் பங்கேற்றேன். 

ஒன்று அகநாழிகையில் நடைபெற்ற ‘ம.பொ.சிவஞானத்தின் நான்கு நூல்கள் விமர்சன அரங்கு’ 

எழுத்தாளர்கள் இராஜேந்திர சோழன், ஜெயமோகன், ஹாமீம் முஸ்தபா (கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில துணைப்பொதுச் செயலாளர்), தி.பரமேசுவரி ஆகியோர் பங்கேற்றனர். அறுபதுக்கும் மேலானோர் பங்கேற்ற இக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்டாலின் இராஜாங்கம் (அயோத்திதாசர் நூற்றாண்டு விழாக்குழு நிகழ்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்தால் தவிர்க்க இயலாமல் இந்த நிகழ்விற்கு வரவில்லை.)

வரலாற்றில் ஒருவர் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிறார், கவனப்படுத்தப்படாமலிருக்கிறார் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக ம.பொ.சி.-யைப் பார்க்கிறேன். தன் வாழ்நாளில், தான் வாழ்ந்த நிலத்துக்காக அளப்பரிய பங்கேற்பைச் செய்திருக்கிறவர் ம.பொ.சி. ஆனால், அவரைக் குறித்த பெரிய கவனம் ஏதும் இங்கில்லை. இங்கு மழுங்கடிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்ட வரலாறே இங்கு பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. நம் இந்திய / தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என்றே இதைச் சொல்லாம். 

அகநாழிகை பதிப்பக புதிய வெளியீடாக, சீர்திருத்தப் போலிகள், தமிழர் திருமணம், கண்ணகி வழிபாடு ஆகிய மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அன்னை சிவகாமி பதிப்பக வெளியீடாக ‘தமிழன் குரல்’ என்ற புத்தகம் வந்துள்ளது. இந்நான்கு புத்தகங்களுக்கான விமர்சனக் கூட்டம் அகநாழிகையில் நடைபெற்றது. ஹாமிம் முஸ்தபா ‘தமிழர் திருமணம்’ குறித்த தனது கருத்துக்களை விரிவாகப் பகிர்ந்து கொண்டார். 

அடுத்ததாகப் பேசிய ஜெயமோகன், ம.பொ.சி. பற்றிய தனது மதிப்பீடுகளைப் பற்றி பகிர்ந்து கொண்டார். ஆரம்பத்தில் ம.பொ.சி.யின் எழுத்துகள் தனக்கு பெரிதான தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றும், ஆனால், ம.பொ.சி. எந்த காரணத்துக்காக முக்கியமானவர் என்றும், அவருடைய செயல்பாடுகள் குறித்தும் தெளிவுரைத்தார். 

எழுத்தாளர் இராஜேந்திர சோழன் பேசும்போது, தேசம், தேசியம், இந்திய தேசியம், தமிழ்த் தேசியம் இவற்றின் பின்னணி, அரசியல் பற்றிப் பேசி இவற்றோடு ம.பொ.சி.யின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்தவை என்பதைப் பற்றிக் கூறினார். தேசம், நாடு என்பதற்கிடையிலான வித்தியாசம் என்ன என்கிற கருத்து மிக முக்கியமானது. 

நிகழ்வை தி.பரமேசுவரி நெறியாளுகை செய்தார். பொன்.வாசுதேவன் ஆகிய நான் இவர்கள் பேசியதைப் பற்றிப் பகிர்ந்து நன்றியுரைத்தேன். கூடவே சமீபத்தில் பரவலாக கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்கிற ஒரினச் சேர்க்கை பற்றிய எனது சில கருத்துகளையும் பகிர்ந்து கொண்டேன். 

சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிந்தனையில் பல புதிய திறப்புகளைத் தந்த ஒன்று.

இரண்டாவது கூட்டம்

பழ.அதியமான் எழுதி காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ள  ‘சேரன்மாதேவி’ மற்றும் பெருமாள் முருகனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வரப்பட்டுள்ள ‘சாதியும் நானும்’ என்கிற கட்டுரைத் தொகுப்பு.

இந்நிகழ்வில் நீதியரசர் சந்துரு, சமூக ஆய்வறிஞர் ஆ.இரா.வெங்கடாசலபதி, பெருமாள் முருகன், பழ.அதியமான், ப.சரவணன், பேரா.கல்யாணராமன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

இரண்டு புத்தகங்களைப் பற்றியக் குறிப்புகளை சமூக ஆய்வறிஞர் ஆ.இரா.வெங்கடாசலபதி வழங்கினார். வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தால் வலித்து விடுமோ என்பது போல மிக மென்மையாக ஆனால் அழுத்தத்திருத்தமாக தனது கருத்துகளைக் கூறினார். நான் வியக்கும், மதிக்கும் ஒரு மனிதர் இவர். இதை நான் எங்குமே பதிவு செய்ததில்லை. 

பலரும் என்னைக்குறித்து நினைத்திருப்பது போல நான் கவிதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவன் அல்ல. அதேபோல, கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என படைப்பிலக்கியத்தின் எல்லா பிரிவுகளையும் வாசிப்பதுண்டு என்றாலும் எப்போதுமே என்னுடைய வாசிப்புத் தேர்வு என்பது மானுடவியல் சார்ந்ததுதான்.  சமூக மானுடவியல் என்பதில் எனக்குப் பெரும் ஈடுபாடு உண்டு. நான் வாசித்த நூல்களில் பெரும்பாலானவை அவை குறித்துதான். தமிழில் ஆ.சிவசுப்ரமணியம், தொ.பரமசிவன், பக்தவச்சலபாரதி, ஆ.இரா.வெங்கடாசலபதி, அ.கா.பெருமாள் என நீளுகிறது எனது ஆர்வ வாசிப்பின் பட்டியல்.


‘சாதியும் நானும்‘ என்கிற நூலைப்பற்றி முதலில் பேசிய பேரா. கல்யாண ராமன் (என் கல்லூரிக்கால நண்பன். இரவு பகலாக வாசிக்கவும், எப்போதாவது எழுதவும் தொடங்கிய ஆரம்ப நாட்களில் எப்போதும் ஒன்றாகவே திரிந்தோம். பல வருடங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வில்தான் சந்தித்தேன். தற்போது நந்தனம் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்.) சாதியும் நானும் புத்தகத்தின் தேவை பற்றியும், அதில் தொகுக்கப்பட்டுள்ள சாதியினரின் கட்டுரைப் பங்களிப்பு பற்றியும் மிகத் தெளிவான ஒரு சித்திரத்தைக் கொடுத்திருந்தார். மிகச் செறிவான இப்பேச்சினை நேரமின்மை காரணமாக சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அடுத்ததாக ஸ்டாலின் ராஜாங்கம் சாதி செலுத்துகிற ஆதிக்கம் குறித்தும் அதன் நுண்ணரசியல் குறித்தும் பேசினார். நவீன வாழ்க்கை முறையில் மறைமுகமாக இருக்கிற தீட்டுக்கோட்பாடு என்பதைப் பற்றிய பார்வையாக இருந்தது அவருடைய கருத்துக்கள். 

இந்த இருவரது பேச்சுகளை மட்டுமே கேட்டுவிட்டு புறப்பட்டுவிட்டேன். நிகழ்வினை முழுமையாகக் கேட்க முடியாமல் போனதில் வருத்தம்.

எப்பொழுதும் மக்களை ஒரு உணர்வுக் கொந்தளிப்பான நிலையிலேயே வைத்திருந்து, அவர்களைச் சாமர்த்தியமாகக் கையாளுகிற போக்கையே எல்லா அரசியல் கட்சிகளும் செய்து வருகின்றன. நம் இந்திய / தமிழ்ச் சமூகத்தின் ஆட்சியாளர்கள், அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் காலம் காலமாக இப்படித்தான். தேசியக் கட்சிகளாகட்டும், வட்டாரக் கட்சிகளாகட்டும் இதுவே இன்றளவும் உள்ள நிலை. எல்லா அரசியல் இயக்கங்களும் இப்படித்தான். மக்களை மந்தைகளாக்கி வைப்பதையே விரும்புகின்றன என்பதே நுட்பமாக கவனிக்க வேண்டிய உண்மை. இதற்கு பெரிதும் உதவுவது சாதி. இந்தியா என்ற ஒரு நிலத்தில் எண்ணற்ற இனங்கள் உள்ளன. இனங்களில் சாதிகள் உள்ளன, சாதியில் உட்பிரிவுகள் உள்ளன, நம் நாட்டின், சமூகத்தின் முன்னேற்த்திற்குப் பெரிய தடை எது என்றால் அது சாதி மட்டும்தான். சுய சாதி பற்றாளர்கள் என்றாலும், மாற்றுச் சிந்தனையாளர்கள் என்றாலும், சாதியை வைத்து அரசியல் செய்வதையே விரும்புகின்றனர். சாதியை ஒழிப்பதற்கான, மறுப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் இன்றளவிலும் இல்லை. சாதி என்பது இன்று இல்லாதது போல் சொல்லப்படுவது ஒரு போலியான, அபத்தமான கருத்து. நவீன வாழ்க்கையில் சாதி வேறு வடிவம் கொண்டுள்ளது. அதைச் சாதித்திருப்பது நவீன மயமாக்கலின் மாற்றங்கள். இதைவிட முக்கியமான விஷயம் படித்தவர்களால் செய்யப்படுகிற போலிக்கருத்தாக்கங்கள். இந்திய/தமிழ்ச் சூழலைச் சீரழிப்பதில் படித்தவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பெரும்பங்குண்டு. பேராசிரியர்களைக் குறிப்பதற்குக் காரணம் என்னவென்றால், சமூக அக்கறையோடு  அவர்கள் கட்டுரைகளும், புத்தகங்களும் எழுதிக் குவிப்பார்கள். ஒரு எள் முனையளவேனும் எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிடாத கட்டுரைகளாகவே அவை இருக்கும். அல்லது எந்த தத்துவம் பற்றியும், சமூக நிகழ்வுகள் பற்றியும் சுய சார்பு நிலையில் எழுதப்பட்டிருக்கும். 


சமகாலச் சூழலில் இவ்விரண்டு கூட்டங்களையும் முக்கியமானதொன்றாகப் பார்க்கிறேன்.


பொன்.வாசுதேவன்

1 comment:

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname