Sunday, December 15, 2013

சுய பால் உறவும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 ம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்தாக்கத்தின் மீது பற்றும், பிடிப்பும் இருக்கும். நம் சமூகத்தில் இருக்கிற எல்லாமே கருத்தாக்கங்கள்தான். ஒன்றைப் பிடிப்பதற்கும், பிடிக்காததற்கும் காரணம் பெரும்பான்மையோரின் கருத்தியல் சார்ந்து நமக்குள் ஏற்படுகிற தாக்கங்கள்தான். காலையில் கையிலெடுத்து பிதுக்குகிற பற்பசை முதற்கொண்டு இரவு போர்த்திக் கொள்கிற போர்வை வரை, விளம்பரங்களாலும், பிறருடைய பயன்பாட்டு அனுபவங்கள் குறித்து அறிந்தும் நமக்குள் திணிக்கப்பட்ட விஷயங்கள்தான். எந்தவொரு விஷயத்தையுமே சுயமாக யோசித்து முடிவெடுத்தோம் என்று சொல்லிவிட முடியாது. அனுபவம், வாழ்க்கைச் சூழல், உறவுகள், நட்புகள், சமூகம் இவையே அதை தீர்மானிக்கிறது.


நம் சமூகத்தின் பெரும் சிக்கலே வரலாற்றை முறையாகப் பதிவு செய்யாமல் போனதுதான். அப்படியே எழுதப்பட்டிருந்தாலும் வரலாறு என்பது வழக்காறுகளை தவிர்த்த ஒன்றாக, போலியான மேட்டிமைக் கருத்தாக்கங்களால் ஆக்கப்பட்டு திணிக்கப்பட்டவையே. இன்றளவும் பள்ளிப் பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்படுகிற வரலாற்றை எடுத்துப் படித்தால் எந்த அளவுக்கு அபத்தமான வரலாறு பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்பது புரியும். இந்தியாவின் சாபக்கேடு இது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக வர்ணாஸ்ரமத்தின் ஆதிக்கத்திலிருந்த அக்கால இந்தியாவில் குருகுலக் கல்வி முறை வழியாக உயர் சாதி ஆண்கள் மட்டுமே கல்வி பயிலலாம் என்ற நிலைமையே இருந்து வந்தது. பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட பிற சாதியினருக்கும் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதிலும் சமஸ்கிருத வழி கல்வியே குருகுலங்களில் பயிற்றுவிக்கப்பட்டது. ஆதிக்க, அதிகார வர்க்கம் சாமானியர்களுக்கான கல்வியை மறுத்து அவர்களை அடிமையாகவே வைத்திருந்த காலம் அது.

கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் தன்னுடைய வியாபாரத்தை பெருக்கி நிலைநாட்டிய காலத்தில், பிரிட்டன் நாடாளுமன்றம் இந்தியாவின் கல்விக்காக ஒரு லட்சம் ரூபாய் கிழக்கிந்தியக் கம்பெனி செலவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தப் பணத்தைச் செலவிடுவதற்காக இந்தியக் கல்வி முறை பற்றி ஆய்வு செய்து குறிப்புரை வழங்க லார்ட் மெக்காலே நியமிக்கப்பட்டார். இந்தியாவின் கல்வித் தந்தை எனச் சுட்டப்படும் லார்ட் மெக்காலே 1834 முதல் 1838 வரை நான்கு ஆண்டுகள் இந்தியாவில் பணி புரிந்தார். கல்வி சார்ந்து இந்தியாவில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் கண்ட அவர், 1935ல் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்த கல்கத்தாவில் இந்தியாவில் ஏற்பட வேண்டிய கல்வி மாற்றங்கள் குறித்து தனது பரிந்துரையை அளித்தார். 1835ல் மெக்காலே அளித்த இந்தியக் கல்விக் குறிப்பு கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்கால் ஏற்கப்பட்டு அவரது உத்தரவின் பேரில் கொண்டு வரப்பட்டதுதான் மெக்காலே கல்வி முறை என்கிற அறிவியல், வரலாறு, புவியியல் என இப்போது வழக்கத்தில் உள்ள கல்வித் திட்டம்.

இந்திய தண்டனைச் சட்டம் 1860 க்கு வருவோம். 1860ல் இயற்றப்பட்ட இச்சட்டம் குறித்து அறிந்துகொள்ள வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் தன்னை நிலையாகக் கோலோச்சிக் கொள்ள ஆரம்பித்த காலத்தில் இந்தியா விற்கான சட்டத்தின் வரைவையும், செயல்படுத்துதலையும் விக்டோரியா மகாராணியின் தலைமையிலான பிரிட்டிஷ் அரசு செய்ய ஆரம்பித்தது. இன்று வரையிலும் நாம் பயன்படுத்தி வருகிற சட்டம் என்பது இதை அடிப்படையாகக் கொண்டதுதான்.

பிரிட்டிஷ் அரசின் போர்த் துறைச் செயலரான தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்ற லார்ட் மெக்காலே ஒரு எழுத்தாளரும் கூட. பிரிட்டிஷ் வரலாறு என்ற தலைப்பில் இவர் எழுதிய புத்தகம் முக்கியமான ஒன்று. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்திய அரசு சட்டம்’ 1933 ல் இயற்றப்பட்ட போது அதன் முதல் சட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் மெக்காலே. இந்தியாவுக்கான பொதுவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டியதன் அவசியத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வாதிட்ட இவரிடம் இந்தியாவுக்கான குற்றவியல் சட்டத்தையும், தண்டனைச் சட்டத்தையும் வரையும் பொறுப்பு அளிக்கப்பட்டது.

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) இரண்டும் வெவ்வேறு சட்டங்கள். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கூறுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதுதான் இந்திய தண்டனைச் சட்டம். பெரும்பாலானோர் இரண்டையும் ஒன்றாக நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அம்சங்களைக் கொண்டு மெக்காலேவால் உருவாக்கப்பட்டதுதான் இந்திய தண்டனைச் சட்டத்துக்கான வரைவு. குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் இங்கிலாந்துக்கான தனித்தன்மைகளைக் களைந்து பிரத்யேகமாக இந்தியாவிற்கென தண்டனைச் சட்டத்தை உருவாக்கி 1937 ல் லார்ட் மெக்காலே அளித்த வரைவு சுமார் 23 ஆண்டுகள் கழித்து 1960 ல் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் அத்தியாயம் 16 ன் 299 முதல் 377 வரையிலான பிரிவுகள் மனித உடல்சார்ந்த பாதிப்புக்குள்ளாகும் குற்றங்களையும், அவற்றிற்கான தண்டனையையும் விவரிக்கிறது. இதில் 377 ஆவது பிரிவில் இயற்கைக்கு மாறான செயற்கை குற்றங்கள்என்பதைப் பற்றி சொல்லப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம், 1860, அத்தியாயம் 16 பிரிவு 377 - 
இயற்கைக்கு மாறான குற்றங்கள்’ அல்லது செயற்கைக் குற்றங்கள்

ஆண்கள், பெண்கள் அல்லது மிருகங்களுடன், யாரேனும் சுயமாக (கட்டாயப்படுத்தப்படாமல்) இயற்கைக்குப் புறம்பான பாலுறவு கொண்டால், அவருக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ஆயுள் சிறை தண்டனையோ விதிக்கலாம். அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.

377. Unnatural offences.-- Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with 1[ imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine. 

Explanation.- Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section. 

விக்டோரியா மகாராணியின் ஆட்சிக்காலம் உச்ச நிலையிலிருந்த காலகட்டத்தில் விக்டோரியக் கலாச்சாரத்தின் தாக்கம் பெருமளவில் இருந்தது. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதுதான் வழமை. சுயபால் உறவு, ஆசனவாய்ப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி எல்லாமே பாவச்செயல்களாக கருதப்பட்டு பாலுறவு என்பதே இனப்பெருக்கத்துக்காக மட்டும்தான் என்ற கருத்தாக்கம் இருந்த காலம் அது. அப்போதைய சூழலில் சட்டத்தை இயற்றினால் அது ஆட்சியாளர் மனநிலை சார்ந்தே இருக்கும்.

ஆனால், அவற்றையெல்லாம் மீறி இப்படியான விழைவுகளுக்கான தேடல்களும், நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்தது என்பதே உண்மை. இங்கிலாந்தில் மட்டுமல்ல.. உலகில் எல்லா நாடுகளிலும் சுயபால் புணர்ச்சி இருந்து வந்ததற்கான நிறைய சான்றுகள் உள்ளன. காலப்போக்கில் மேற்கத்திய நாடுகளில் சுயபால் புணர்ச்சி ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட காரணத்தால் 1967 ல் இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதிக்குள் பெரும்பாலான மேலை நாடுகளில் சுயபால் புணர்ச்சிக்கான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை எல்லா மாற்றங்களும் ஒரு நூற்றாண்டைக் கடந்த பிறகே நிகழும் என்பது அறிந்த ஒன்று. எனவே நாமும் காத்திருக்கத்தான் வேண்டும். “கணவன் மனைவி உறவு இல்லாத ஆண், பெண் இருவருக்குள் பாலுறவு, அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்தால் தப்பில்லை என்று கூறி, `சோதனை மணம்` அல்லது `சகா மணம்' என்று கல்யாணம் முனாலேயே இளம் பெண்களும் ஆண்களும் பால் உறவு கொண்டு மணம் புரியும் நிர்பந்தனையின்றி தங்கள் உறவை சீராக்கம் செய்யலாம்”  என்று தனது மணமும் நெறியும்’ (1929) என்ற புத்தகத்தில் ரஸ்ஸல் எழுதியிருக்கிறார். ஒருபால் சேர்க்கைச் சட்ட சீர்த்திருத்த சங்கத்தின் ஆதரவாளரான ரஸ்ஸல் விக்டோரியாவின் காலத்தில் அவரது கருத்துகளுக்காக பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.

பொதுவாக சுயபால் உறவு என்பதை ஆணுடன் ஆண் உறவு கொள்வது, பெண்ணுடன் பெண் உறவு கொள்வது என இரண்டு பிரிவுகளாக பிரித்தாலும், சுயபால் விழைவைப் பொறுத்தவரை நான்கு பிரிவினர் உள்ளனர். பெண் x பெண், ஆண் x ஆண், ஆண் x பெண், ஆண் - பெண் x ஆண், பெண், மற்றும் மாற்றுப் பாலினத்தார் (திருநங்கைகள்). இதையே LGBT Community (Lesbian Gay Bisexual Transgender) என்று அடையாளப்படுத்திக் குறிக்கிறோம். 

உடல் உறவு இனப்பெருக்கத்துக்காக மட்டும் என்ற நிலை இன்றில்லை. உடலுறவு என்பது முழுக்க முழுக்க மனம் சார்ந்த கோணத்தில் அணுக வேண்டிய ஒன்று. ஒருவர் எதிர் பாலினக் கவர்ச்சியில் ஈடுபாடற்று சுயபால் உறவை விழைவு ஏற்படக் காரணம் என்ன என்பதைக் குறித்து யோசிக்க வேண்டும். ஆணை ஆண் விரும்புவதையும், பெண்ணை பெண் விரும்புவதையும் வெறும் உடல் வேட்கையாக மட்டுமே பார்க்காமல் உளவியல் ரீதியாக பார்க்கப்பட வேண்டும். சுய பார் உறவு என்பது மரபு சார்ந்த குணாம்சம் அல்ல. உறவுக்கான விழைவு என்பது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம். கட்டாயப்படுத்தப்பட்டோ, வன்முறைக்குள்ளாக்கியோ கொள்ளப்படும் உறவுகளைக் குற்றமாகச் சுட்டுவதில் தவறில்லை.இன்று திருநங்கைகள் என்று அறியப்படுகிற பலரும் தங்களுக்குள்ளிருக்கிற பெண் தன்மையை உணர்ந்து பெண்ணாகவே மாறியவர்கள்தான். உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக பெண்ணாக உணர்கிற ஆண்கள் அன்றாட இச்சமூகத்தில் சந்திக்க நேர்கிற அவர்களாக இருந்தால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று. இவர்களின் உறவு விழைவினை ஆண்களிடமே தேடுகிறார்கள் என்பதால் இவர்களை இயற்கைக்கு மாறான குற்றம் செய்து விட்டார்கள் என்று தண்டித்து விட முடியாது.

உலக இலக்கியங்களில் ஃபூக்கோ, சுயபால் உறவாளரான ழான் ஜெனே ஆகியோர் சுயபால் உறவு பற்றி எழுதியுள்ளனர். இவ்வகையில் ஃபூக்கோ எழுதிய The History of Sexuality முக்கியமான புத்தகமாகக் கூறப்படுகிறது. கிரேக்கத்தின் அலெக்சாண்டரும், ஹெபஸ்தியானும், அரிஸ்டாட்டில் ஆகியோர் சுயபால் உறவாளர்கள்தான். போர் என்ற ஒன்று ஆரம்பமான போதே சுயபால் உறவு துவங்கியது எனலாம். போர்க்களங்களிலும், சிறைச்சாலைகளிலும் உடல்சார்ந்த தங்கள் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள சுயபாலினத்தவரையே தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.


இந்தியாவைப் பொறுத்தவரை ஓரினச் சேர்க்கை என்பது இல்லாத ஒன்றில்லை. இந்திய இலக்கியங்களிலும் இதற்கான பதிவுகள் உள்ளன. பல நேரங்களில் இவை புனைவுகளில் பொதியப்பட்ட உண்மையாக, இலைமறை காயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய இலக்கியங்களில் மாற்றுப்பாலின புனைவுக்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அதேசமயம், சுயபால் உறவுகளுக்கான சித்தரிப்புகளும் இலக்கியங்களிலும், பிற கலைப் படைப்பாக்கங்களிலும் இருக்கிறது. மகாபாரதத்தின் சிகண்டி, பிருகன்னளை, மோகினி உருவெடுத்த அர்ச்சுனி, கிரித்திவாச ராமாயணத்தில் இரு பெண்களுக்குப் பிறந்த பகீரதன் போன்றோரும், மாற்றுப் பாலினத்தவராக, சுயபால் விழைபவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்மகாபாரத யுத்தத்தின் துவக்கத்தில் அர்ச்சுனனுக்கும், நாக வம்சத்தைச் சேர்ந்த உலுபி என்ற பெண்ணுக்கும் பிறந்த நல்லரவான் என்ற திருநங்கையைப் பலி தர முற்படும்போது, பெண் உரு ஏற்று கிருஷ்ணன் நல்லராவனை மணம் செய்து தாலியறுக்கிறார். இதன் அடிப்படையிலேயே அரவான் நரபலி திருவிழா திருநங்கைகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளத்தின் வாசனைத் திரவியங்களை கொள்ளையிட வந்த வாவரும், அவரைத் தடுத்துப் போரிட்டு நண்பரான ஐயப்பனும் கூட சுயபால் உறவாளர்கள் என்று கூறப்படுகிறது
கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் சுயபால் உறவு கொள்பவர்கள் பற்றியும், அன்னகர்கள் என்று மாற்றுப் பாலினத்தவர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. உருது இலக்கியங்களில் சுயபால் உறவு குறித்த பதிவுகள் உள்ளன. மகமதியர் வரலாற்றின் வெற்றியாளர்களான மாலிக்காபூர், குஸ்ருகான், ஜலாவுதீன்கான் ஆகியோரும் மாற்றுப் பாலினத்தவர்களே. வாத்ஸ்யானரின் காமசூத்திரம் மற்றும் சீவக சிந்தாமணி ஆகியவற்றிலும் மாற்றுப்பாலினத்தவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கிறது.

சமகால இந்திய இலக்கியத்தில் சுயபால் உறவு பற்றிய பதிவுகள் அதிகம் வந்துள்ளன. 1941 ல் இஸ்மத் சுக்தாய் எழுதிய லிகாப்என்ற சிறுகதையில் இரு பெண்கள் உறவைச் சித்தரித்தற்காக அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஆனால், நீதிமன்றம் அக்குற்றச்சாட்டை ரத்து செய்துவிட்டது. 1978 ல் சகுந்தலா தேவியின் ஓரினச்சேர்க்கையாளர்களின் உலகம்’ (The World of Homosexuals) பிரசுரிக்கப்பட்டது. இந்தியாவின் கண்ணோட்டத்தில் ஒரினச் சேர்க்கையாளர்கள் பற்றி எழுதப்பட்ட முதல் புத்தகம் இது. 1979ல் கல்கத்தாவிலிருந்து சில இதழ்கள் மட்டுமே Gay Seen என்ற பத்திரிகையும், 1990 ல் பாம்பே தோஸ்த்என்ற பத்திரிகையும் சுய பால் உறவாளர்களுக்காக வெளிவந்தது. சதிஷ் அலேகர் எழுதி இயக்கிய பேகம் பார்வேஎன்ற நாடகம் பூனே அகாடமியால் டில்லியில் அரங்கேற்றப்பட்டது. பெண்ணாக வாழ விரும்பும் ஆணைப் பற்றிய கதை இது. இது தவிர ஆனந்த் நட்கர்னியின் பார்ட்னர்நாடகம், விஜய் டெண்டுல்கர் எழுதிய மித்ராசி கோஷ்ட்’, குஷ்வந்த் சிங்கின் நியூ டெல்லிசு.சமுத்திரத்தின் வாடா மல்லிபெண்ணாக மாறும் விழைவு கொண்ட ஆண் குறித்தும், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம்சுயபால் உறவு பற்றிப் பேசுகின்றன.


தாய் வழிச் சமுகம் இருந்த ஆதி மனிதர்களிடம் ஒரினச் சேர்க்கை பழக்கம் கிடையாது. நாகரீக வாழ்க்கையில் குடும்பம் என்ற தளையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற வெறுப்பும், உள்ளுணர்வும் கூட சுய பால் உறவுகளுக்கு உளவியல் காரணங்களாகின்றன.

ஆண் / பெண் பாலுறவுச் சாய்வு மனநிலை, ஈர்ப்பு, கற்பனை, குணாம்சம் மற்றும் சுய அடையாளப்படுத்தல்களை கின்ஸி அளவுகோல்’ (Kinsey scales of sexual attraction, fantasy, behavior, and self-identification)  என்ற முறையில் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்த அளவுகோலின்படி 0 என்பது துல்லியமான எதிர்பால் உறவு ஈர்ப்பு என்றும், 6 என்பது சுயபால் உறவு ஈர்ப்பு என்றும் பிரிக்கப்படுகிறது. மேலும், இப்படியான ஈர்ப்புகளுக்கும், விழைவுகளுக்கும் உளவியல் காரணங்களோடு குரோமசோம்களும் காரணமாகின்றன. பலரும் சுயபால் உறவு என்பதை பண்பாடு  கலாச்சாரக் கேடாகவும், சமூகப் பிரச்சனையாகவும், நடத்தை ஒழுக்க மீறலாகவும் பார்க்கின்றனர். மனப்பிறழ்வு நிலை என்று கூட கூறுகின்றனர். ஆனால் சுயபால் உறவு என்பதும் இயற்கையான ஒன்றுதான். காலங்காலமாக இருந்து வருகிற ஒன்றுதான். பாலியல் விழைவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமையான விஷயம். பெரும்பான்மை இனத்துக்கும் சிறுபான்மை இனத்துக்கும் உள்ள வித்தியாசமே இது. தனி மனிதனின் பாலியல் ஈடுபாடுகளில் இயற்கை செயற்கை என்று எதையும் கூற மடியாது.  சமூகச் சூழல் காரணமாக ஏற்படுகிற கருத்தாக்கங்களே இவற்றை ஆதரிப்பதும் எதிர்ப்பதும். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 பிரிவு காலாவதியாகிவிட்ட ஒரு சட்டம். சமகால வாழ்க்கையின் மாற்றங்களுக்கேற்ப திருத்தப்பட வேண்டும். அல்லது நீக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. எனவே சுயபால் உறவுக்கு அங்கீகாரம் வழங்கப்படவேண்டியது அவசியமாதொன்றுமாக  இருக்கிறது.


பொன்.வாசுதேவன்

தொடர்புடைய எனது பிற பதிவுகள்...


1 comment:

  1. http://thilai.blogspot.in/2013/12/blog-post_12.html

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname