Wednesday, April 15, 2009

சொர்க்கத்தின் வாயில்கள்


தன்னைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம் என்று நாம் உணர ஆரம்பிக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படத் தொடங்கி விடுகிறது. நம்மை நாம் முழுமையாக உணர்ந்து கொண்டாலோ, உணர்ந்து கொண்டதாக நினைத்துக் கொண்டாலோ பிரச்சனைகளுக்கான தீர்வு எங்கே கிடைக்குமென அறிந்து கொள்ளலாம்.

கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. எதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனம் வளர வேண்டும். நம்பிக்கை என்பது ஒரு தேவை என்ற அளவில் மட்டுமே இருக்கக்கூடாது.

எதுவுமே புதிய தத்துவங்களையோ கருத்துக்களையோ சொல்லி விடுவதில்லை. அறிமுகமாகிற எந்தவொரு தத்துவமும் அதற்கு முன் அறியப்படாததால் புதிதாகவே தோன்றக்கூடும்.

உண்மையைத் தேட, தன்னை அறிய என வாழ்வின் எல்லா விதிமுறைகளும் நீண்ட நாட்களாக இருந்தவைதான். வழிநடத்துபவர்கள் (Leaders) தொடர்பவர்களை (Followers) அழித்தும், தொடர்பவர்கள் வழிநடத்துபவர்களின் கருத்தை சிதைத்தும் காலம்காலமாக நடப்பதுதான்.

எதையும் இயன்ற வரையில் அவரவர் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நம்மைவிட நல்ல ஆசிரியன் அல்லது குரு நமக்குக் கிடைத்துவிட முடியாது. வாழ்க்கையில் அனுபவங்களின் மூலமாக வாழ்வை ஒழுங்கமைத்துக் கொளள் நாம் முயல வேண்டும். மதிப்பிற்குரிய அனைத்து விஷயங்களையுமே மறு பரிசீலனைக்கு உட்படுத்தி ஆய்ந்து ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

யாருடைய கருத்துக்களையும் ஏற்காமல், எந்த குருவையும் பின்பற்றாமல் இருந்தால் நாம் தனிமையாக செயல்படுவது போன்ற உணர்வு நிலை ஏற்படும்.

தனிமையாகத்தான் இருக்கட்டுமே... தனிமையாக இருக்க நாம் ஏன் பயப்பட, தயங்க வேண்டும் ? ஏனெனில், நாம் எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்கிறோம், முடிவெடுக்கிறோம் என்பதைப்பற்றி நம்மைவிட நன்கு உணர்ந்துவிடக் கூடியவர்கள் யாருமில்லை. வெறுமையாக, சோர்வாக, அபத்தமாக, குற்றவுணர்வாக, கோபமாக என பல்வேறு நிலைகளில் உணர்ச்சி வெளிக்காட்டுதலின் போது எப்படி செயல்படுகிறோம் என அறிந்திருக்கும் நாம்தான் நமக்கு குரு.

எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொண்டு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்யலாம். தவறாக ஆனாலும் பரவாயில்லை. தவறுகளின் மூலமாகத்தானே நாம் கற்றுக் கொள்ள முடியும். எனவே, எந்தப் பிரச்சனையிலும் தப்பித்து ஒளிய முற்படாமல் நேராக சந்திக்கின்ற மனப்பக்குவம் ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். மாறாக ஓடி ஒளியும் போது வாழ்வின் மீதான பயமும் நம்மைத் தொடர்கிறது.

போட்டிகள் நிறைந்த வாழ்க்கையில் பயம், சந்தோஷம், துக்கம், சோர்வு போன்ற மனோநிலைகளைக் கடந்து வருவதற்கான மனப்பக்குவம் அடைய வேண்டியது அவசியம்.

வாழ்க்கை மீதான நம்முடைய அணுகுமுறை தொன்மை வாய்ந்த வழியில் செல்வதாக அமைந்து விட்டால் உலகம் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை. நம்முடைய அணுகுமுறை பழமையான கருத்துக்களுக்கு முரண்பட்டதாகவோ அல்லது புதியதொரு பாதையிலோ செல்லத் தொடங்கும்போது கடும் எதிர்ப்புகள் வரத் தொடங்குகிறது. இயேசு, புத்தர், ஓஷோ என பலரை இதற்கு உதாரணமாகச் செல்லலாம்.

நம்முடைய ஒழுங்குகளிலிருந்து நாம் பிறழ்ந்து நடப்பதற்கு அடிப்படைக் காரணியாக எதைக் கூறலாம் ? வாழும் சூழலும் சமூகம் சார்ந்த கருத்துகளின் மீது நம்பிக்கையற்று சலிப்பேற்படுவதன் மூலம் நாம் உண்மையை வேறு வழிகளில் காண முயல்கிறோம். தற்காலிகமாக நமக்கு தெளிவை உறுதிப் படுத்தும் பல விஷயங்கள் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. இதைத் தொடர்ந்து ஒன்றிலிருந்து மற்றொன்று என நம்முடைய கவனம் திசை திரும்பி வாழ்க்கைப் போக்கே முறையற்றதாகி விடுகிறது.

பொதுவாக, நமககு ஒரு விஷயத்தின் மீது பிடிப்பு ஏற்பட்டு விட்டதென்றால் அதன் மீதுள்ள நம்பிக்கையை எளிதில் கைவிட்டு விடுவதில்லை. இயந்திரத்தனமாக அல்லது கண்மூடித்தனமாக விஷயங்களின் மீது, நபர்களின் மீது, கருத்துக்களின் மீது பற்று வைக்க நமது மனம் பழகிப் போயிருக்கிறது.

கடவுளுக்குப் பயந்து, பெரியவர்களுக்கு கட்டுப்பட்ட சராசரி வாழ்க்கையை கடத்திச் சென்றால் போதும் என்கிற மனநிலைதான் பலருக்கும் உள்ளது. புதிய விஷயங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளத் துணிவின்றி, மறுக்கும் தைரியமின்றி சுகமான ஒரு வாழ்க்கையைத்தான் நாம் தேடுகிறோம்.

வண்ணத்துப்பூச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்படுகிற அதன் நிலை நமக்கு வாய்க்க வேண்டும். சிந்தித்தோ, சிந்திக்காமலோ எதைச் செய்தாலும் சுதந்திரத்துடன் எதிர்பார்ப்புகளற்று நம்முடைய செயல்களை ஆர்வத்துடன் செய்ய வேண்டும்.

நம் மீது செலுத்தப்படுகின்ற அதிகாரங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். நம்மீது திணிக்கப்படுகிற கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எவருக்கும் ஏற்ப வளைந்து கொடுப்பவர்களாய் நாம் பல இடங்களில் இருக்கிறோம். என்றாலும், தனிப்பட்ட குறுகலான வட்டத்திற்குள் வரும்போதுதான் நம்முடைய கோர முகங்கள் நமக்கே தெரிய வருகிறது.

வீட்டில், அப்பா, அம்மாவிடம் கோபப்படுவோம். மனைவி அல்லது கணவனிடம், பிள்ளைகளிடம் நம்முடைய அதிகாரங்களை செலுத்துவோம். கருத்துகளை திணிக்கிறோம். இதுபோல பல விஷயங்களைச் சொல்ல முடியும். எவ்வளவு கோழைத்தனமான செயல் இது.

நினைத்ததை சொல்ல முடியாமலும், சொல்வதை பேச முடியாமலும், பேசியதை செய்ய முடியாமலும் வாழ்வது எவ்வளவு சோகமானது. வாழ்க்கை வெறும் படிப்புகளால் கிடைத்து விடுவதில்லை. படிப்பு வாழ்வின் மீதான நம்முடைய பார்வையை, அணுகுமுறையை எந்த அளவிற்கு மாற்றியுள்ளது என்பதில்தான் உள்ளது அதன் பலன்.

எதையும் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் போதுதான் வாழ்க்கையை உண்மையிலேயே நாம் வாழத் தொடங்குகிறோம் என்பதை ஒரு சிறிய ஜென் கதை மூலம் அறியலாம்.

“நிஜமாகவே சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா ?“ என்று ஒரு ஜென் குருவிடம் ‘சமுராய்‘ வீரன் ஒருவன் கேட்டான்.

“நீ யார் ?“ என்று கேட்டார் ஜென் குரு.

“நான் சமுராய் வீரன்“

“நீ போர் வீரனா ? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் போல தெரிகிறதே... எந்த அரசன் உன்னை காவலனாக ஏற்பான்“

வீரன் கோபமடைந்து வாளை உருவினான்.

ஜென் குரு அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார்.

“ஓஹோ... உன்னிடம் வாள் இருக்கிறது. இந்த மழுங்கிய வாளால் என் தலையை வெட்ட முடியாது“

கோபமடைந்த அவன் வாளுடன் அவரை வெட்டுவதற்காக நெருங்கினான்.

“இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன“ என்றார் ஜென் குரு அமைதியாக.

அவருடைய தைரியத்தையும், கட்டுப்பாட்டு உணர்ச்சியையும் கண்டு வியந்து வீரன் வாளை உறையில் திரும்ப வைத்து விட்டு அவரை வணங்கினான்.

“இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறக்கின்றன“ என்றார் ஜென் குரு.

- பொன். வாசுதேவன்

15 comments:

 1. நான் சொர்க்கத்துல தான் இருக்கேன்!
  நீங்களும் வர்றிங்களா?

  ReplyDelete
 2. எதையும் இயன்ற வரையில் அவரவர் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நம்மைவிட நல்ல ஆசிரியன் அல்லது குரு நமக்குக் கிடைத்துவிட முடியாது. வாழ்க்கையில் அனுபவங்களின் மூலமாக வாழ்வை ஒழுங்கமைத்துக் கொளள் நாம் முயல வேண்டும். மதிப்பிற்குரிய அனைத்து விஷயங்களையுமே மறு பரிசீலனைக்கு உட்படுத்தி ஆய்ந்து ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.///

  நல்ல சிந்தனை நண்பரே!!
  உண்மையில் சிந்திக்க வைத்தீர்கள்!!

  ReplyDelete
 3. மானுடவியல் குறித்தான உங்கள் ஆர்வமும் சிந்தனைகளும் தெளிவாக புரிகிறது நண்பா.. இறுதியில் வரும் ஜென் கதை உண்மையிலேயே அருமை.. நம்முடைய நிகழ்வுகளை, வாழ்க்கையை நாமே தீர்மானிக்கிறோம்..

  ReplyDelete
 4. //வீட்டில், அப்பா, அம்மாவிடம் கோபப்படுவோம். மனைவி அல்லது கணவனிடம், பிள்ளைகளிடம் நம்முடைய அதிகாரங்களை செலுத்துவோம். கருத்துகளை திணிக்கிறோம். இதுபோல பல விஷயங்களைச் சொல்ல முடியும். எவ்வளவு கோழைத்தனமான செயல் இது.

  நினைத்ததை சொல்ல முடியாமலும், சொல்வதை பேச முடியாமலும், பேசியதை செய்ய முடியாமலும் வாழ்வது எவ்வளவு சோகமானது. வாழ்க்கை வெறும் படிப்புகளால் கிடைத்து விடுவதில்லை. படிப்பு வாழ்வின் மீதான நம்முடைய பார்வையை, அணுகுமுறையை எந்த அளவிற்கு மாற்றியுள்ளது என்பதில்தான் உள்ளது அதன் பலன்.//

  எவ்வளவு உண்மை...

  ReplyDelete
 5. படிக்க ஆரம்பித்து நாண்காவது பாராவிற்கு வந்த போதே
  |எதையும் இயன்ற வரையில் அவரவர் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நம்மைவிட நல்ல ஆசிரியன் அல்லது குரு நமக்குக் கிடைத்துவிட முடியாது. |
  இது ஜென்னை அடித்துவமா வைத்து எழுதியிருக்கீங்கனு புரிந்தது.
  அதன் கீழும் ஜென் கதை ஒன்றை கூரி முடித்திருந்ததீங்க.
  நல்ல சிந்தனை.

  //நம் மீது செலுத்தப்படுகின்ற அதிகாரங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். நம்மீது திணிக்கப்படுகிற கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எவருக்கும் ஏற்ப வளைந்து கொடுப்பவர்களாய் நாம் பல இடங்களில் இருக்கிறோம். என்றாலும், தனிப்பட்ட குறுகலான வட்டத்திற்குள் வரும்போதுதான் நம்முடைய கோர முகங்கள் நமக்கே தெரிய வருகிறது.//

  மிக சரியான பார்வை.

  //வீட்டில், அப்பா, அம்மாவிடம் கோபப்படுவோம். மனைவி அல்லது கணவனிடம், பிள்ளைகளிடம் நம்முடைய அதிகாரங்களை செலுத்துவோம். கருத்துகளை திணிக்கிறோம். இதுபோல பல விஷயங்களைச் சொல்ல முடியும். எவ்வளவு கோழைத்தனமான செயல் இது.//

  இந்த கோழைதனம் தான் எல்லோரிடத்திலும் வீரமாக இருக்கின்றது!

  உங்களுடைய கட்டுரையில் இரண்டாவதை படிக்கின்றேன்
  முந்தைய 'போடா ஒம்போது'
  திருநங்கைகள் குறித்த விரிவாக அறிய முடிந்தது. அடுத்து இதுவும்
  நல்ல சிந்தனை வழிகாட்ட செய்கின்றது. உங்கள் எழுத்தை தொடர்ந்து படிக்க ஆர்வம் கூடிபோய்விட்டது.

  ReplyDelete
 6. //நாம் எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்கிறோம், முடிவெடுக்கிறோம் என்பதைப்பற்றி நம்மைவிட நன்கு உணர்ந்துவிடக் கூடியவர்கள் யாருமில்லை.// .

  உண்மைதானுங்க,நல்ல சிந்தனை தெளிவான நடை கட்டுரை அருமை நண்பா.

  ReplyDelete
 7. அருமை வாசு.

  ReplyDelete
 8. மற்றவர் சொல்லி தான் ஞானம் வர வேண்டும் என்றில்லை. தன்னிலை அறியும் அறிவு இருந்தால் எப்போதும் வாழ்க்கை சொர்க்கம் தான். :)

  ReplyDelete
 9. வண்ணாத்திப் பூச்சியின் சுதந்திரம் நமக்கு வாய்க்க வேண்டும் என்ற உங்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை வாசு.அது மிருக வாழ்வு.

  சுய கட்டுப்பாடு அவசியம்.என்னுடய குறை என்ன? நிறை என்ன? எது சரி? எது தவறு? எனக்கு எது வேண்டும்?என்ற தெளிவான மன நிலை நமக்கு வாய்க்க வேண்டும்.தன்னை அறிந்து கொள்ளுதல் என்பது இதிலிருந்து ஆரம்பமாக வேண்டும்.

  யென் கதையும் உணர்வுகளின் கட்டுப் பாட்டையே வலியுறுத்துகின்றது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 10. நல்ல சிந்திக்க வைக்கும் பதிவு தோழர்.

  நன்றி..

  ReplyDelete
 11. நல்ல நம்பிகை தரும் கட்டுரையாக இருக்கு வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 12. மிக்க நல்ல பதிவு.

  ReplyDelete
 13. விகடன்.காமில் வெளி வந்துள்ளது.

  வாழ்த்துகள் வாசு.

  ReplyDelete
 14. அறிவு திறக்கும் ஒரு கட்டுரை...கதை.

  ReplyDelete
 15. அருமை.
  சிந்திக்க வைக்கும் பதிவு.
  நன்றி.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname