Monday, April 13, 2009

‘புதிய பார்வை‘-யில் வெளியான எனது கவிதைகள்

பொன்.வாசுதேவன் கவிதைகள்


பொம்மை விளையாட்டு

பிசைந்தெடுத்து வழியவிடுவாய்
அன்பற்ற இறுக்கத்தை
இரைச்சல்களற்று
எல்லாம் உறங்கும்
இரவின் விளிம்பில் அமர்ந்து
காத்திருந்த நீ
என் மேல்
இப்போதும் ஒரு கணம்
படரும் ஓசையெனக்கு
கேட்கிறது சுவாசமாய்
சருமம் கருக
நிரப்பவியலா பள்ளத்தாக்கில்
உருகி வழிந்து ஓயும் ஊற்றாய்
களைத்துறங்குகிறாய்
ஒரு சொல் இல்லை
மொழிகளுக்கப்பாற்பட்டு அதிரும் ஓசை
உள் பேசும் நான்
மின்னலாய்த் தோன்றுமொரு யோசனை
பாய்ந்து வெளிப்பட்டாலென்ன
அறுந்து சுருண்டு
கவிழ்ந்து படுக்கும் நான்
களைத்துக் குழந்தையாகியுறங்கும்
உன் முதுகு பார்த்து.



மிதந்து கொண்டேயிருக்கும் வலை

அடர்மழை மௌனமாய்
யாருக்கும் தெரியாமல்
இறங்கும் வேளையில்
உயிர்ச்சுழி தேடிப்பரவுகிறது
நீ வீசிய வலை
விழி தீண்டும் தூரம் அறியாது
அப்பிக்கிடக்கிறது இருள்
வெடிக்காத இசையின்
அரூப ஒலியாய்
காத்திருக்கிறது
வலை வருடிய கைகள்
தனியுச்சியில் புதையுண்டு
தருணம் நோக்கி
காத்திருக்கிறேன்
வலைக்குள் உன்னை இருத்த.


முலைச்சூடு

உள்நோக்கிப் பீறிடும்
ஊற்றாய்
பெருகி வழிகிறதுன் வாசனை
மழை பிசைந்த
உன் தலையினூடாக
பரவுகிறதென் முத்தங்கள்
மூச்சுக் காற்றின் வெப்பம் விரிய
ஓசையின்றிப் பிரிந்திருந்த
உன் இரவிக்கையின்
தையல் இடைவெளியில்
கசிந்து வழிகிறது
உன் வெளிர் மார்பு
கண் மூடி வாய் புதைந்து
தாழ்மையோடு யாசிக்கிறேன்
உன் முலைகளின் வாசலில்
வேண்டி வேண்டி
அழுதும் ஆனந்தமாயும்
என் வாயுறுஞ்சிய
தாயின் முலைச்சூடுகளை
மீட்டுப்பெற வேண்டி.


வலைவீசி தேவதை

கண் முன் ஒரு தேவதை
அலைகளை
சேகரித்து வீசுகிறாள்
முகத்தின் மீது
கழுவிச் சலிக்கின்றன அலைகள்
அலை சூடிய முகத்தோடு
கடற்கரையில் செல்கிறேன்
இப்போது
வேறொரு தேவதை
கடற்காற்றில் வலை படபடக்க
வீசுகிறாள்
தப்பி ஒளிகிறேன் கடலுக்குள்
அலையையும்
வலையையும்
கடந்து முழ்கித் தேடுகிறேன்
மற்றுமொரு தேவதையை.
(காயத்ரிக்கு)

‘புதிய பார்வை‘ ஆகஸ்ட் 16-31, 2007 இதழில் வெளியானது.

23 comments:

  1. கவிதைகளை வாசித்தேன். மிகவும் அருமை என்று பொய்யூட்டமிட விருப்பமில்லை. கவிதைகளின் மீது மீள்வாசிப்பு கொண்டும் என் சிற்றறிவினால் அவற்றை அணுகமுடியவில்லை. முலைச்சூடு மட்டும் முழுசாகப் புரிந்தது. நவீன கவிதைகளை எதிர்கொள்ளும் என் முயற்சியின் பயிற்சிக்களமாய் இருந்தது தங்களது கவிதை!

    மிக்க அன்புடன்,
    செல்வேந்திரன்.

    ReplyDelete
  2. Oh My God ... These are almost close to great poetry ... அபாரம்!

    ReplyDelete
  3. கவிதைகள் நான்கும் ஒவ்வொரு திசைகளில் இழுத்துச் செல்கின்றது.
    மீண்டும் மீண்டும் படித்தும் அதன் முடிச்சுகள் அவிள்ந்தும் அவிளாத்துமாகவே முடிக்கின்றேன்.
    அடர்ந்த சொற்களில் வரி என்னை உடைத்து விடுகின்றது. நவீன கவிதையின் முழுமை இதனில் இருக்களாம், ஆனால் என் புரியும் திறனில் அதை உணரமுடியவில்லை என்னால்.
    மீண்டும் மீண்டும் வாசித்து
    மிரட்சி அடைகின்றேன்!

    ReplyDelete
  4. கொஞ்சம் புரிந்தது போல் இருக்கிறது... முலைச்சூடு நன்கு புரிந்துவிட்டது. கொஞ்சம் ஆழ்ந்து படிக்கவேண்டும்!! காலை நேரமே வந்து படிக்கிறேன். அப்போதுதான் மனம் ஒருமனமாக இருக்கும்!

    ReplyDelete
  5. கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது.என்னமோ ஆழமான கருவோடு குந்தியிருந்து குழப்புகிறது.விளங்கியும் விளங்காமலும் இன்னும் வாசித்தபடியே நான்.நன்றி வாசு.

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பொன்.வாசுதேவன் ஐயா.

    உங்கள் ஆசியை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  7. வாசு.. தேவதை கவிதையும் முலைச்சூடு கவிதைகள் மட்டும்தான் எனக்குப் புரிகிறது.. அருமையான வரிகள்...முதல் இரண்டு கவிதைகளின் ஆழம் எனக்கு புரிபடவில்லை.. மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.. எழுத்துக்களின் மீதான உங்கள் ஆளுமை அபாரமாக உள்ளது.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. அருமை.....!! வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  9. ரொம்ப நல்லாயிருக்குங்க..!!

    ReplyDelete
  10. முதன் முறை புரியா கவிதைகள்
    மும்முறை படித்து எனக்கான
    அர்த்த்ங்களை புகுத்திக்கொண்டேன்..

    ”வலை வீசிய தேவதையே” என்னை மிகவும் வசியம் செய்தவள்.

    கவிதைகள் அருமை.

    (உயிரோசையில் வந்திருக்கும் உங்கள் பதிவுக்கு(போடா ஒம்போது)வாழ்த்துக்கள்.மேலும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  11. கொஞ்சம் கடினமாக இருகின்றது நண்பா! ஆழ்ந்து படித்தப்பின் புரிகின்றது... நன்றாக இருக்கின்றது...

    எனக்கு பல நாட்களாகவே ஒரு சந்தேகம் கவிதைகளில் ஏன் கடினமான சொற்களை கையாழுகின்றார்கள்..
    நாட்டுபுறப்பாட்டும், தாலாட்டு, கும்மிப்பாட்டு, பட்டுக்கோட்டையின் நல்ல வரிகள் இன்றும் பேசப்படுகின்றதே.....

    ReplyDelete
  12. செல்வேந்திரன்,
    தங்களின் தன்னடக்கமான
    கருத்துக்கு நன்றி.
    ஆ.வி.யில் உங்கள் கவிதை படித்தேன். பிடித்திருந்தது.

    அன்புடன்,
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  13. நந்தா,
    தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

    அன்புடன்,
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  14. ஆ,முத்துராமலிங்கம்,
    தங்களின் வருகைக்கும், இரசனைக்கும் நன்றி.

    அன்புடன்,
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  15. நன்றி, ஆதவா.


    ஹேமா said...
    //கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது.என்னமோ ஆழமான கருவோடு குந்தியிருந்து குழப்புகிறது.விளங்கியும் விளங்காமலும் இன்னும் வாசித்தபடியே நான்.நன்றி வாசு.//

    நன்றி, ஹேமா.


    அன்புடன்,
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  16. ஆ.முத்துராமலிங்கம் said...
    //இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பொன்.வாசுதேவன் ஐயா.//

    //உங்கள் ஆசியை வேண்டுகின்றேன்.//


    முத்துராமலிங்கம்,
    நான் சத்குரு ஜக்கி வாசுதேவ் இல்லை, ஆசி வழங்க...



    அன்புடன்,
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  17. கார்த்திகைப் பாண்டியன் said...
    //வாசு.. தேவதை கவிதையும் முலைச்சூடு கவிதைகள் மட்டும்தான் எனக்குப் புரிகிறது.. அருமையான வரிகள்...முதல் இரண்டு கவிதைகளின் ஆழம் எனக்கு புரிபடவில்லை.. மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.. எழுத்துக்களின் மீதான உங்கள் ஆளுமை அபாரமாக உள்ளது.. வாழ்த்துக்கள்..//


    கார்த்தி,
    தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.


    அன்புடன்,
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  18. லவ்டேல் மேடி said...
    //அருமை.....!! வாழ்த்துக்கள்.....//

    நெம்ப நன்றிங்ங்ண்ண்ணா...

    அன்புடன்,
    பொன். வாசுதேவன்

    ReplyDelete
  19. சென்ஷி said...
    //ரொம்ப நல்லாயிருக்குங்க..!!//

    நன்றி, ஷென்ஷி.

    அன்புடன்,
    பொன். வாசுதேவன்

    ReplyDelete
  20. Rajeswari said...
    //முதன் முறை புரியா கவிதைகள்
    மும்முறை படித்து எனக்கான
    அர்த்த்ங்களை புகுத்திக்கொண்டேன்..

    ”வலை வீசிய தேவதையே” என்னை மிகவும் வசியம் செய்தவள்.

    கவிதைகள் அருமை.

    (உயிரோசையில் வந்திருக்கும் உங்கள் பதிவுக்கு(போடா ஒம்போது)வாழ்த்துக்கள்.மேலும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்..//

    தொடர்ந்த ஊக்கத்திற்கு
    மிக்க நன்றி,
    தோழி ராஜி.

    அன்புடன்,
    பொன். வாசுதேவன்

    ReplyDelete
  21. ஆ.ஞானசேகரன் said...
    //கொஞ்சம் கடினமாக இருகின்றது நண்பா! ஆழ்ந்து படித்தப்பின் புரிகின்றது... நன்றாக இருக்கின்றது...

    எனக்கு பல நாட்களாகவே ஒரு சந்தேகம் கவிதைகளில் ஏன் கடினமான சொற்களை கையாழுகின்றார்கள்..
    நாட்டுபுறப்பாட்டும், தாலாட்டு, கும்மிப்பாட்டு, பட்டுக்கோட்டையின் நல்ல வரிகள் இன்றும் பேசப்படுகின்றதே.....//
    மிக்க நன்றி, நண்பா.
    எனது முந்தைய ஒரு கவிதையில் ‘நாதாங்கி‘ என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தேன். அப்படியென்றால் என்ன என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். இது போலதமிழில் நாம் அறியாத, நம்மில் பலரும் ஒருமுறை கூட கூறியிறாத சொற்களெல்லாம் இன்னமும் இருக்கிறது. மொழியை முழுமையாகப் பயன்படுத்துவது, அதன் மீதான நம் ஆளுமை ஆர்வத்தை உணரச் செய்கிறது. மற்றபடி கடினமான சொற்கள், எளிமையான சொற்களென்று ஏதுமில்லை.
    பட்டுக்கோட்டை போன்றவர்களின் பாடல்கள் எளிமை என்பது உண்மைதான். நாட்டுப்புறப்பாடல்களின் வார்த்தைகள் எளிமை என்ற உங்கள் கருத்திலேயே பதில் இருக்கிறது.

    அன்புடன்,
    பொன். வாசுதேவன்

    ReplyDelete
  22. இவ்வகை கவிதைகளைப் புரிந்துகொள்வதில் எப்பொழுதுமே நான் தோற்றுத்தான் போகிறேன்! இது கவிதையின் பிழையல்ல...

    என் அறியாமைதான்!

    இன்னும் வளரட்டும் உங்கள் புகழ் நண்பா!

    ReplyDelete
  23. ஷீ-நிசி said...
    //இவ்வகை கவிதைகளைப் புரிந்துகொள்வதில் எப்பொழுதுமே நான் தோற்றுத்தான் போகிறேன்! இது கவிதையின் பிழையல்ல...

    என் அறியாமைதான்!

    இன்னும் வளரட்டும் உங்கள் புகழ் நண்பா!//

    ஷீ-நிசி,
    ஊர்லதான் இருக்கீங்களா...?
    என்னதான் வீட்ல ஆளில்லைன்னாலும் இப்படியா...

    அன்புடன்,
    பொன். வாசுதேவன்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname