Saturday, March 28, 2009

ஆசையெனும் துன்பம்

ஆசையே இல்லாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா...?

துறவிக்குக்கூட முற்றும் துறந்து தன்னைக் கடந்த நிலையை அடைய வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஆசைகளற்று இருப்பது கடினம். இதுதான் இயல்பு.

‘ஆசையே துன்பத்திற்கு காரணம்‘

எப்படி இது உண்மையாகிறது...? ஆசைகளற்ற பிறப்பு இருக்க முடியுமா ? மனிதனாகட்டும் அல்லது விலங்குகளாகட்டும், ஆசையே இல்லாமலிருப்பது சாத்தியமா ? இவ்வாறு பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன.

ஆசையென்பது என்ன...?

ஏதாவது ஒன்றை அடைய வேண்டுமென்ற பற்றாக இருக்கலாம். புலன்களுக்கு விருப்பமான விஷயங்களும் அவற்றின் தொடர்புகளும், எண்ணமும் ஆசையைத் தோற்றுவிக்கின்றன.

“அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா“

ஆசையைப் பற்றி அழகாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.

ஆசைக்கு அஞ்சி வாழ்வதுதான் வாழ்வு. ஏனென்றால் ஒருவனை வஞ்சிப்பது ஆசைதான்.

ஆசை ஒழியும் இடத்தில்தான் அறிவு வளர்கிறது. ஆசையை ஒழிப்பதென்றால் எப்படி ? நல்ல சிந்தனையோடு அன்பாகப் பேசி நடந்துகொளள் வேண்டும் என்ற விருப்பமும் ஆசைதான். சுமையற்றும் சிக்கலற்றும் வாழ்வை நடத்த நியாயமான ஆசைகள் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

ஆசையை அடியோடு ஒழிப்பது இயலாத செயல். அதற்குத் தேவையும் இல்லை. ஆசையென்பது ஓர் எண்ணம்... மனதின் இயக்க நிலையைக் குறிக்கிறது. எண்ணங்களற்று மனம் எப்போதும் சும்மா இருப்பதில்லை. எழுதும் போது நீங்கள் எழுதுவதைச் சிந்திக்கிறீர்கள். பேசும்போது பேசுவதை எண்ணுகிறீர்கள். இந்த எண்ணங்களே உங்களை இயக்கும் கிரியா ஊக்கிகள்.

ஆசை - துன்பம் இரண்டுமே ஒன்றுதான். ஆசையென்பது மனத்திற்கு ஏற்படும் ஓர் உணர்வு நிலை. அதே போலத்தான் துன்பமும். துன்பத்தை தவிர்க்க நாம் நினைக்கலாம். ஆசையை எப்படி விலக்க முடியும்...?

ஆசை மனத்தில் எழும் போதே அதற்கான காரணத்தை கண்டறியுங்கள். உங்களின் வாழ்க்கைச் சூழ்நிலை, வாய்ப்பு, வசதிகள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சாதகமாக உள்ளனவா எனறு அறிந்து, அதன் பிறகே செயல்படுத்த முயல வேண்டும். எல்லாம் சரியாக இருந்தாலும் ஆசையின் பலன் நிலையானதா என்ற கேள்வியை எழுப்பி விளைவுகளைக் குறித்து யோசிக்க வேண்டும்.

ஆசைகளில்லா இதயமே இல்லை. ஆசை அறும் இடம் மரணம்தான்.

தேவையைக் கொண்டு எழுந்த ஆசை, தேவை நிறைவோடு நின்றுவிட வேண்டும். பசி, தாகம் முதலிய இயற்கை துன்பத்தைப் போக்கிக் கொள்ள எழுந்த ஆசை, துன்பத்தைப் போக்கிக் கொள்வதோடு நின்றாக வேண்டும்.

வளர்கின்ற சூழல், சமூகத்தில் உங்கள் வாழ் மதிப்பு, நமது இலட்சியங்கள் இவற்றைப் பொறுத்து அமைகிற ஆசைதான் நிலையானது.

13-ஆம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட ஒரு ஸென் கதையை கேளுங்கள்.

பார்வையற்ற ஒருவன் தன் நண்பனைப் பார்க்க வந்திருந்தான். அவன் வீட்டிற்கு திரும்பும் போது இருட்டத் தொடங்கியதால் அவனது நண்பன் மூங்கில் விளக்கை கொடுத்தான். (ஜப்பானில் ஆதிகாலத்தில் மூங்கிலால் பெட்டி போன்று செய்து அதில் எல்லா பக்கங்களிலும் காகிதத்தை ஒட்டி ஏற்றிய மெழுகுவர்த்தியை உள்ளே வைத்து விளக்காக பயன்படுத்தினார்கள்.)

“எதற்கு விளக்கு...? இருளும் ஒளியும் எனக்கு ஒன்றுதானே...?“ என்றான் பார்வையற்றவன்.

“நீ வீட்டிற்கு திரும்ப விளக்கு அவசியமில்லை. ஆனால் மற்றவர்கள் உன் மேல் மோதிவிடாமலிருக்க விளக்கு தேவைப்படுமல்லவா..“ என்றான் நண்பன்.

‘அதுவும் சரி‘ என்று நண்பன் கொடுத்த விளக்குடன் கிளம்பினான் பார்வையற்றவன்.

பாதி தூரத்தை கடந்து சென்று கொண்டிருக்கும்போது, எதிரே வந்த ஒருவனுடன் மோதிக் கொண்டான்.

“என் கையிலிருக்கும் விளக்கு வெளிச்சம் உன் கண்ணிற்கு தெரியவில்லையா... பார்த்து வரக்கூடாது“ என்றான் கோபமாக.

“மெழுகுவர்த்தி அணைந்திருக்கிறது, நண்பனே“ என்றான் எதிரே வந்தவன்.

- - -

- பொன்.வாசுதேவன் -

8 comments:

  1. உண்மைதான்...ஆசை என்பது ஒரு உணர்வுதான்

    ReplyDelete
  2. கதை நன்றாக இருக்கு..

    ReplyDelete
  3. ஹை ..நாந்தான் ஃப்பர்ஷ்ட்டா....

    ReplyDelete
  4. அப்பப்ப தத்துவக் குத்து... நடத்துங்க வாசு.. கடைசியில வர கதை நல்லா இருக்கு.. ஆனா ஆசை இல்லாத மனிதன் இருக்கு முடியுமா..?

    ReplyDelete
  5. ஆசையால்தான் துன்பம் தொடர்கிறது.ஆசையில்லா உயிரினங்களே இல்லை எனலாம்.ஆனால் அது பேராசையாகி மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரும்போதுதான் அழிவு ஆரம்பமாகிறது.எனவே அளவோடு தேவையோடு இருக்கும் ஆசையினால் பாதிப்பு இல்லை எனலாம்.ஆசை எனபது வாழ்வின் முயற்சி,உந்துதல் என்றுகூடக் கொள்ளலாமே.

    ReplyDelete
  6. Rajeswari said...
    //உண்மைதான்...ஆசை என்பது ஒரு உணர்வுதான்//

    March 28, 2009


    Rajeswari said...
    //கதை நன்றாக இருக்கு..//

    March 28, 2009


    Rajeswari said...
    //ஹை ..நாந்தான் ஃப்பர்ஷ்ட்டா....//

    ராஜி...
    முதலும் நீங்களே...
    முடிவும்... மன்னிக்கவும்...
    மூன்றாவதும் நீங்களே தோழி.
    தங்கள் வரவு தொடர்ந்து நல்வரவாகுக.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  7. கார்த்திகைப் பாண்டியன் said...
    //அப்பப்ப தத்துவக் குத்து... நடத்துங்க வாசு.. கடைசியில வர கதை நல்லா இருக்கு.. ஆனா ஆசை இல்லாத மனிதன் இருக்கு முடியுமா..?//

    எப்படி கார்த்தி ஆசையில்லாம இருக்க முடியும்...?
    ஏன்னா...
    “‘ ஆசையை அடக்க முடியாதே “‘

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  8. ஹேமா said...
    //ஆசையால்தான் துன்பம் தொடர்கிறது.ஆசையில்லா உயிரினங்களே இல்லை எனலாம்.ஆனால் அது பேராசையாகி மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரும்போதுதான் அழிவு ஆரம்பமாகிறது.எனவே அளவோடு தேவையோடு இருக்கும் ஆசையினால் பாதிப்பு இல்லை எனலாம்.ஆசை எனபது வாழ்வின் முயற்சி,உந்துதல் என்றுகூடக் கொள்ளலாமே.//

    உண்மைதான் தோழி.
    தங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname