Monday, March 16, 2009

“ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறை ராஜதந்திரம்“ – மருத்துவர் இராமதாசு

“ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறை நன்மை பயக்கும் ராஜதந்திரம்“ மருத்துவர் இராமதாசு

முதல் முறையாக பாராளுமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. நான்கு உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் இராமதாசு தங்களின் பாராளுமன்ற பிரவேசத்தை “மாயாஜால நகருக்கு சென்று வந்தோம்“ என நகைச்சுவையாக குறிப்பிடுகிறார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய மருத்துவர் இராமதாசு, தனது கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் பற்றிக் கூறினார்.

இனி பேட்டியிலிருந்து

“ஜெயலலிதா அவர்களின் அணுகுமுறை மிகவும் நன்மை பயக்கும் ராஜதந்திரமாக அமைந்துள்ளது. அமைச்சரவையில் எங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் திருப்தியளிப்பதாகவே உள்ளது. முதல் முறையாக பாராளுமன்றத்தில் நாங்கள் அடியெடுத்து வைக்க உதவிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கும், தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும் எங்களின் நன்றி. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நிலையானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரசும், ‘காணாமல் போன‘ ஐக்கிய முன்னணியும் பி.ஜே.பி. ஆட்சியினை எளிதாக கவிழ்த்து விடலாம் என பகல் கனவு காண்கிறார்கள். மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் எதிர்க்கட்சியினரிடையே நல்லெண்ணம் தேவை. அரசியலை மறந்து இதற்காக கட்சிகள் ஒன்றுபட வேண்டும். தேர்தலுக்கு முன்பே எங்களின் கூட்டணி ‘வெற்றிக்கூட்டணி‘ என்று நான் கூறினேன். ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே‘ என்றவர்கள், எங்கள் கூட்டணியின் சக்தியை உணர்ந்திருப்பார்கள். இந்தத் தேர்தல் முடிவுகள் பாட்டாளிகளின் சக்தியை பண்ணையார்களுக்கு உணர்த்தியிருக்கும்.

பினாமி நிலச்சட்டம் புத்துயிர்ப்பு பெறும். புத்துயிர்ப்பு பெற பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும். தி.மு.க. ஆட்சி 1976 மற்றும் 1991 என இரண்டு முறை கலைக்கப்பட்ட போதும் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதனை அடுத்து வந்த தேர்தல்களில் கலைப்பு சரியென்றே மக்கள் தீர்ப்பளித்தார்கள். இப்போதும் அப்படித்தான் நடக்கப்போகிறது. காவலர்களுக்கு 1000 ருபாய் பரிசாக கொடுப்பதாக கூறி லஞ்சம் தருகிறார் கருணாநிதி. காவலர்களுக்கு 24 மணி நேரம் பணி புரிய வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரசு ஊழியர்களைப் போல முன்று மடங்கு சம்பளம் பெற தகுதியானவர்கள் அவர்கள்தான். மேலும், காவலர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் காவல் துறை லஞ்ச ஊழல் இன்றி செயல்படும்.

வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு காரணம் தி.மு.க. அரசும், கலைஞரும்தான். தனிப்பட்ட முறையில் கருணாநிதியின் அணுகுமுறைதான் இதை அதிகரித்தது. சட்டசபையில் பா.ம.க. 1, பா.ம.க. 2 என அறிவித்துள்ளனர். 2-க்கு பதிலாக பா.ம.க. கருணாநிதி என அறிவித்திருக்கலாம் என்பது எனது யோசனை.

Water Policy மற்றும் 69 % இடஒதுக்கீடு போன்ற விஷயங்களில் எங்களுடைய கட்சியை கலந்தாலோசித்து முடிவெடுப்போம். 19 மொழிகளையும் தேசிய மொழியாக்க வேண்டும் என புரட்சித்தலைவி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கென விரைவில் கமிட்டி அமைக்கப்பட உள்ளது. 19 மொழிக்காரர்களுக்காகவும் இதன் முலம் வாதாடியிருக்கிறார் ஜெயலலிதா. இதை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறார் கருணாநிதி. இதற்கெல்லாம் பொறுப்பேற்று கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமரிடம் எங்களின் கோரிக்கை இது அல்ல. தமிழக மக்களின் நலப்பிரச்சனை பற்றியது மட்டுமே நாங்கள் கோரிக்கையாக வைத்திருக்கிறோம். டாக்டர் சுப்ரமணியசுவாமி என்னுடைய சிறந்த நண்பர். அவர் அமைச்சரவையில் இடம் பெறாதது எங்களுக்கு வருத்தம்தான். செல்வி ஜெயலலிதா அவருக்காக எவ்வளவோ முயற்சி செய்தார். ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்று நாங்கள் நம்புகிறோம்.

இஸ்லாமியர் சிறுபான்மையினர் நலனுக்காக நான் என்றுமே போராடுபவன். முஸ்லீம் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லாமல் அவர்களை அழைத்துப்பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். எங்கள் கட்சி சிறுபான்மையினர் நலனுக்காக குரல் கொடுக்கும்.“


- பொன். வாசுதேவன்


(என்னால் தொகுத்து எழுதப்பட்ட இந்த பேட்டி ‘தமிழ் அரசி‘ வார இதழில் 5.4.1998-ல் வெளியானது.)

2 comments:

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname