இயக்குநர் – கேப்ரியேல் முசினோ
வெளியான வருடம் – டிசம்பர் 2006
தனது குடும்ப சேமிப்புகளை முதலீடாகக் கொண்டு ‘எலும்புகளின் அடர்திறன் வருடி‘ (ஸ்கேனர்) மருத்துவ உபகரண விற்பனை பணி செய்து வருகிறான் கிறிஸ் கார்டனர் (வில் ஸ்மித்). எக்ஸ்ரே கருவியை விட அதிக விலை என்பதால் அதற்கு அதிக வரவேற்பில்லை. பொருளாதார ரீதியாக திருப்திகரமான வாழ்க்கையை தர இயலாத காரணத்தால் அவனை விட்டுப் பிரிந்து நியூயார்க் சென்று விடுகிறாள் மனைவி லிண்டா (டான்டி நியூட்டன்). ஐந்து வயது மகனான கிறிஸ்டோபர் (ஜேடன் ஸ்மித்) உடன் சான் பிரான்சிஸ்கோவில் வாழ்வைத் தொடரும் கிறிஸ் எதிர் கொள்ளும் துயரமான நிகழ்வுகளை பின்னணியாக கொண்ட படம்.
பொருளாதார ஸ்திரத்தன்மை எந்த அளவிற்கு வாழ்வின் சுகதுக்கங்களை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது என்பதை மிக தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விற்பனையாளனாக, கிறிஸ் சந்திக்கும் அவநம்பிக்கை, தோல்விகள், மனைவியுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, விரக்தியின்றி, விடாமுயற்சியுடன் எப்படி வெற்றி கொண்டான் என்பதே கதையின் மையக்கரு. கதையின் முக்கிய பாத்திரங்கள் கிறிஸ் மற்றும் அவனது மகன் இருவர் மட்டுமே.
தன் மருத்துவ உபகரண தொழிலின் எதிர்காலம் மோசமாகி விட்ட நிலையில், மனைவி பிரிந்து சென்று விட, வீடை இழந்து வசிக்க இடமற்று, மகனுடன் தங்க இடம் தேடி அலையும் கிறிஸ், மகனிடம் அடிக்கடி ‘நீ என்னை நம்புகிறாயா..? நம்பு‘ என்கிறான். ஜுனியர் கிறிஸ் கூரிய பார்வையுடன் தன் வயதுக்கே உரிய கேள்விகளை கேட்டாலும், அவை கிறிஸ் மனதுள் ஊடுருவித் துளைக்கின்றன. எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில், மகனின் நம்பிக்கையை பொய்யாக்காமல் சிறு சிறு சந்தோஷங்களை வாய்க்கச் செய்கிறான் கிறிஸ். படம் நெடுக கிறிஸ் செல்லுமிடமெல்லாம் அவனது மகனும் ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்புடன் உடன் சுற்றி வருகிறான்.
தங்க இடமற்று, கையில் பணமின்றி, மகனிடம் தான் வைத்திருக்கும் மருத்துவ உபகரணம் ஒரு ‘கால இயந்திரம்‘ என்று கூறி... ‘டைனோசர் உலகை நாம் இப்போது காண்கிறோம்‘ என இரயில் நிலைய கழிப்பறைக்குள் மகனை உறங்க வைத்து, கண்ணீர் வழிய கிறிஸ் அமர்ந்திருக்கும் காட்சி உணர்த்துவது சொற்களில் அடங்காதது.
மருத்துவ உபகரண தொழில் செய்துகொண்டே, பங்கு விற்பனை முகவராக முயலும் கிறிஸ், அதற்காக ஊதியம் ஏதுமின்றி ஆறு மாத பயிற்சியில் சேர்கிறான். இருக்கின்ற ஒரு காலியிடத்திற்கு இருபது பேர் பயிற்சி பெறுகின்றனர். தன்னிடமிருக்கும் கடைசி ‘ஸ்கேனர்‘ விற்பனையாவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது, அதை வாங்கும் மருத்துவர் முன் செயல்படாமல் போகிறது. ‘சிறு பிரச்சனைதான், சரி செய்து கொண்டு வருகிறேன்‘ என அவகாசம் கேட்டு செல்கிறான் கிறிஸ். ஸ்கேனரை பரிசோதனை செய்ததில், அதன் ‘வருடல் விளக்கு‘ செயலிழந்திருக்கிறது. அதை மாற்றி புதுப்பிக்க பணமின்றி, இரத்தம் கொடுத்து பணம் பெற்று, விளக்கினை மாற்றி பின்னர் விற்றும் விடுகிறான். கையில் கிடைத்த பணம் செலவாகி மறுபடியும், வருமானம் ஏதுமின்றி சிரமத்துடன் வாழ்க்கை நகர்கிறது.
வாழ்வில் வெற்றி பெறும் பெரிய கனவுகளுடன் தன் முயற்சிகளில் சிறிதும் தளராமல், உள்ளுக்குள் தோய்ந்திருக்கும் சோகத்தை சந்திப்பவர்களிடம் வெளிக்காட்டாமல் புன்னகையுடன் வலம் வருகிறான். பயிற்சியின் நிறைவில் பங்கு முகவராக பணி கிடைத்து விடுகிறது. அதன் பிறகு எல்லாமே தலைகீழ், கிறிஸ்க்கு வாய்ப்புகளும் வசதியும் குவிகிறது என்பதாக படம் நிறைவடைகிறது.
தன் கதையை தானே சொல்லிச் செல்லும் உத்தியில் நீளும் படம் நெடுக வில் ஸ்மித்தின் இயல்பான முகபாவங்கள் திரைப்படம் என்ற உணர்வையழித்து, யாருடைய வாழ்க்கையையோ நேரில் காண்கிறோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. மகனாக வரும் ஜேடன் ஸ்மித் மிக அருமையான உணர்வு பெருக்கினை நமக்களிக்கிறான்.
1981-களில் ‘கிறிஸ் கார்டனர்‘ என்பவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கோர்த்து ‘Memoir’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதினார். ஒரு சாதாரண விற்பனையாளராக தனது வாழ்வை துவங்கி அதில் தோல்வியுற்று, பின்னர் பங்கு முகவராக தொழில் புரிந்து கோடீஸ்வரரான கிறிஸ் கார்டனரின் உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது இப்படம்.
நடுத்தர வர்க்கத்து ஆண்களின் பொருளீட்டல் சிரமங்களையும், அவனுள் புதைந்திருக்கும் தந்தைமை உணர்வின் உள்ளார்ந்த வெளிப்பாடாகவும் இப்படம் சிறப்பாக உள்ளது. குழந்தைகளுடன் பார்க்க தகுதியான படம்.
ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளுக்கு பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது இப்படம். வில் ஸ்மித் நடித்து தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘Seven Pounds’ என்ற படத்தையும் ‘கேப்ரியேல் முசினோ‘ இயக்கியுள்ளார்.
திரைப்பட இரசனை கொண்டவர்கள் பொதுவாக யோசிக்கும் ‘ஏன் இது போன்ற திரைப்படங்கள் நம் மொழியில் எடுக்கப்படுவதில்லை‘ என்ற கேள்வியை இப்படமும் நமக்குள் ஆழ ஏற்படுத்துகிறது.
நான் மிகவும் ரசித்து பார்த்த படம் இது... உங்கள் விமர்சனம் அருமை..
ReplyDeleteநன்றி கிஷோர்,
ReplyDeleteஉங்க வலைபக்கங்கள பார்த்தேன். நாளை படிச்சுட்டு தொடர்பு கொள்கிறேன்
நன்றி சார்
ReplyDeleteஅழகாக எழுதியுள்ளீர்கள்...இரண்டு வருடம் இருக்கும் இப்படத்தை பார்ர்த்து...ஸ்கேனர் கருவியை திருடிக்கொண்டு ஓடும் ஹிப்பியை துரத்திக்கொண்டும்,வாடகை காரிலிருந்து இறங்கி பணம் தராமல் தெறிப்பதும்,பெயிண்ட் அப்பிய அழுக்கு உடையுடன் நேர்முக தேர்விற்கு செல்வதும் என படம் முழுவதும் வில்ஸ்மித் ஓடிக்கொண்டேயிருப்பார்...சமீபத்தில் getting home என ஒரு கொரிய படம் பார்த்தேன்.மிகவும் பிடித்திருந்தது..நீங்கள் பார்த்து விட்டீர்களா?
ReplyDeleteரௌத்ரன், நலம்தானே? ‘Pursuit of Happyness’ இரண்டு மாதங்களுக்கு முன்பு வாங்கியும் இப்போதுதான் பார்க்க முடிந்தது. Feel good movie என்பார்கள், அதுபோன்ற படம் இது. படத்தைப் பார்க்கும் எவருமே பிடிக்கவில்லை என சொல்லமாட்டார்கள். நீங்கள் கூறும் ‘getting home’ படம் இன்னும் பார்க்கவில்லை, ‘The Road Home’ ஆனால் என்ற சீன மொழிப்படம் பார்த்திருக்கிறேன். மிக அழகான காதல் கதை.
ReplyDeleteஅன்பு நண்பரே, உங்கள் தளம் பல சுவையான அம்சங்களை கொண்டுள்ளது,நல்ல படத்தை பார்த்து விட்டு அதை நாலு பேருடன் பகிர்ந்து கொள்ளூம் சுகமிருக்கிறதே,அப்பப்பா,அலாதி இன்பம்,நீங்கள் எழுதிய விமர்சனம்,வெகு ஜோர்,நல்ல நடை,நல்ல படங்களூக்கு தொடர்ந்து எழுதிவரவேண்டும்,நான் ஜேமொவின் ஏழாம் உலகம் நாவல் முடித்துவிட்டு,காடு நாவல் படிக்க அரம்பிதிருக்கிறேன்,எழாம் உலகம் தந்த அதிர்விலிருந்து இன்னும் மீள முடியவில்லை,காடு என்னை காட்டுக்குள்ளேயே அழைத்து சென்று விட்டது,இது குறித்து விமர்சனம் எழுத முயல்கின்றேன்,நான் இனி அடிக்கடி உங்கள் தளம் வந்து போவேன், மீண்டும் சந்திப்போம். கார்த்திக்கேயன்
ReplyDeleteகார்த்திகேயன், ஏழாம் உலகம் 2003-ல் படித்தேன். தமிழில் இது போன்ற கதைக்களம் கொண்ட நாவல் வெளி வந்ததில்லை என சொல்லலாம். ஜெயமோகனின் மண், திசைகளின் நடுவே, ஆயிரங்கால் மண்டபம், சங்கச்சித்திரங்கள், இந்து ஞான மரபில், ரப்பர், விஷ்ணுபுரம், காடு, கன்யாகுமரி, பின்தொடரும் நிழலின் குரல், கண்ணீரை பின்தொடர்தல் ஆகிய படைப்புகளை வெளியான உடன் வாங்கிப் படித்திருக்கிறேன். இனம்புரியாத வசீகரம் கொண்ட வார்த்தைப் புனைவுகளை வாசிக்க, வாசிக்க நம் மனம் வேறோர் தளத்திற்கு செல்லும். ஆரம்ப இயக்குநர்களைப் போல, ஆரம்ப கால ஜெயமோகனின் எழுத்துக்கள் திரும்பத்திரும்ப வாசிக்க வைப்பவை. கடந்த மாதம் கூட ‘ஆயிரங்கால் மண்டபம்‘ படித்தேன். உங்கள் வருகைக்கும், பின்மொழிக்கும் நன்றி. தொடர்பிலிருப்போம்.
ReplyDeleteஇரண்டு நாட்களுக்கு முன் தான் zee studio வில் இந்தப் படம் வந்தது. என் மகள் பார்க்க விடவில்லை. நிச்சயம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டது உங்கள் விமர்சனம். அழகாக எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDeleteஅன்பு நண்பரே,நீங்கள் சொன்ன நாவல்களை சீக்கிரம் வாங்கி படிக்கப் பார்க்கிறேன்,ஊருக்கு விடுமுறையில் செல்ல இருக்கிறேன். உங்கள் நல்ல கருத்துக்களுக்கு நன்றி, இங்கு ஓய்வு நேரம் நிறைய நேரம் கிடைகாகிறது,அதை பயனுள்ள வழியில் செலவிட தான் ப்ளாக் ஆரம்பித்தேன்,நல்ல நட்பு வட்டமும் கிடைக்கிறது,ஆமாம் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்? மதுராந்தகம் இப்போது எப்படி இருக்கிறது?நான் நிறைய தடவை அங்கு மேல் மருவத்தூருக்கு பாதயாத்திரை செல்லும்போது கடந்ததுண்டு,இப்போதும் வயல்கள் உண்டா?எம் சகோதரிகள் வில்வராயனல்லூர் என்னும் ஊரில் ஹாஸ்டலில் படித்தனர்,(15வருடங்களுக்கு முன் இருக்கும்)அப்போது நிறைய முறை ஏரிகாத்த ராமர் கோவில் வந்ததுண்டு,என் ஈமெயில்:- ,ஓய்வு நேரத்தில் எழுதுங்கள்,
ReplyDeletemy email:-
ReplyDeletekarthoo2k@yahoo.com
இந்தப்படத்தை சமீபத்தில் இரண்டு முறை பார்த்தேன். கிறிஸ் அடைந்த வெற்றியைப் பார்ப்பதற்குள் வேறு வேலை ஏதாவது அல்ல்து மின்சாரத் துண்டிப்பு என முடிவினைப்பார்க்க முடியவில்லை. இருந்தாலும் படம் சில சமயங்களில் ஓய்வாக இருக்கையில் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்...
ReplyDelete