Thursday, March 19, 2009

அன்பாக இருப்பதுதான் அன்பு

அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.

சிலரிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டால் மனம் பாதுகாப்பாக உணர்வதற்கு காரணம் இதுதான். அன்பாக இருப்பதிலும் அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் மூலம் எப்போதும் சந்தோஷ உணர்வு ஏற்படுகிறது.


அன்பு என்பது என்ன ?


பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் வரையறுத்துச் சொல்ல முடியாது. மேலும், எந்த அளவிற்கு ‘அன்பு‘ ஆழமான வார்த்தையோ அதே அளவிற்கு மலினப்படுத்தப்பட்டும் உபயோகத்தில் இருக்கிறது.


அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அன்பு, காதல், பாசம் என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.


சரி, அன்பு என்பது ஒரு கருத்தா ? அல்லது தத்துவம் என்று சொல்லலாமா ?

நான் சந்தோஷத்தை விரும்புகிறேன்.

கடவுள் அன்பாக இருக்கிறார்.

நான் உன்னை காதலிக்கிறேன்.

என்னுடைய தாயை நேசிக்கிறேன்.


இவையெல்லாம் என்ன...?

அன்பை வெளிப்படுத்துகிற பல்வேறு வார்த்தைகள். அன்புதான் இவ்வார்த்தைகளின் மையம். அன்பு எங்கே கிடைக்கும்... எங்கு வாங்கலாம்... அன்பை செலுத்த முடியுமா...?


அன்பைப் பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு. அன்பு என்ற உணர்வு உள்மனதிலிருந்து எழ வேண்டியது. சந்தோஷத்தை விரும்புவதும், கடவுள் அன்பாக இருப்பதும், காதலிப்பதும், தாயை நேசிப்பதும் உணர்வுபூர்வமாக செயல்படுத்தப்பட வேண்டும்.


கடவுள் அன்பாக இருக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம் ? கடவுள் எந்த துன்பத்தையுமே நமக்கு தரமாட்டார். நாம் மட்டும்தான் கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர் என்றில்லை.


கடவுள் நம் மீது அன்பாக இருக்கிறார் என்று நாம் நம்புவதன் மூலம் எல்லா செயல்களிலும் பய உணர்வு நீங்கி செயல்பட உத்வேகம் பிறக்கிறது.


‘உயிர்களிடத்தில் அன்பு செய்‘ என்று சொல்லியிருக்கிறார்கள். கடவுளிடம் மட்டும்தான் என்றில்லை. எல்லோரும் நம் மீது அன்பாக இருக்கிறார்கள் என்ற நல்ல மனநிலையைக் கொண்டால் வாழ்க்கை இனிதாக அமையும்.


நான் கடவுள் மீது அன்பாக (பக்தியாக) இருக்கிறேன் என்று சிலர் கூறுவார்கள். இதைவிட போலியான விஷயம் வேறு என்ன இருக்க முடியும் ?


எப்போது நாம் கடவுளை வழிபடத் தொடங்குகிறோமோ, அதாவது, அன்பு செலுத்தத் தொடங்குகிறோமோ அப்போதே நாம் நம்மையே நாம் வழிபடத் தொடங்கி விட்டோம் என்றுதானே அர்த்தம் ? நம் மீது நாமே அன்பு செலுத்திக் கொள்வதுதான் வழிபாடு. அதற்கு புனையப்பட்ட நம்பிக்கை வேண்டியிருக்கிறது.


எனவே, அதை நாம் கடவுளின் மீது செலுத்தும் அன்பு என்று கூற முடியாது. கடவுள் என்பது உணர்வு பூர்வமான ஒரு நம்பிக்கை. எந்த விஷயத்தின் மீதும் கவனத்தைக் குவித்து வழிபடுவதன் மூலம் இது சாத்தியம்தான்.


தன்னம்பிக்கை என்பதுதான் கடவுள் என்பதை உணர்ந்தவர்களுக்கு இது புரியும். சுவாமி விவேகானந்தர் மிக எளிமையாக இதுபற்றிக் கூறுகிறார் “தன்னம்பிக்கை இல்லாதவன் எவனோ அவனே நாத்திகன்“ என்று. நம்பிக்கைதான் கடவுள் என்பதை உணராதவர்கள் மட்டுமே ‘நான் கடவுள் மீது அன்பாக இருக்கிறேன்‘ என்றெல்லாம் கூறுகின்றனர்.


நாம் எல்லோருமே தினசரி பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறோம். அதற்கென பல நாம் பல வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.


பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள உதவும் உத்திகள்தான் தொலைக்காட்சி, கடவுள் வழிபாடு, திரைப்படம், எழுதுதல் இவையெல்லாம். இரண்டரை மணி நேரம் இருட்டில், யாரோ சிலரின் வாழ்வின் சந்தோஷங்களைப் பார்த்து சந்தோஷப்படவும், சோகங்களில் சோகமாகவும் நம் மனது இயல்பாக பழகிவிடுகிறது. அதேபோல்தான் கோயில்களிலும், “எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார்“ என்று வழிபாட்டின் போது வேண்டிக் கொள்வதன் மூலம் நம்முடைய பிரச்சனை நம்மிடமிருந்து இறக்கி விடுகிறோம்.


பிரச்சனைகளைப் பேசிப் பகிர்ந்து, பிறரிடம் அன்பாக இருப்பவர்களுக்கு இந்த தப்பித்தல் சாதனங்களின் தேவையிருக்காது. நம் தேவைகளைக் கூறவும் பிரச்சனைகளை பேசவும் கிடைத்த அதிலும் பதில் எதுவும் பேசி விடாத ஒரே சாதனம் கடவுள் என்பதால்தான் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.


மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.


அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன ?


மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும்.


காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், சிரிக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் உண்மையான அன்போடு சிரித்துப் பேசி இருப்போம் ?


உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்.


அன்பு பற்றி புத்தர் ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

வயல் வரப்பு வழியாக ஒருவன் நடநது கொண்டிருக்கும்போது புலியைப் பார்த்து விட்டான். அவன் ஓட புலி துரத்தியது. சிறிய குன்றின் உச்சிக்கு வந்து விளிம்பில் இருந்த காட்டு மரத்தின் வேர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.

புலி அவனை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நடுங்கிக் கொண்டே கீழே பார்த்தான். இன்னொரு புலி பார்த்துக் கொண்டிருந்தது. மரத்தின் வேர்களில் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டு எலிகள் வேர்களைக் கடிக்க ஆரம்பித்தன. அவனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் காட்டுச் செடியின் பழம் இருந்தது. ஒரு கையால் வேரைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் பழத்தைப் பறித்து தின்றான். அப்போது அவன் மனதில் “பழம் எவ்வளவு சுவையாக இருக்கிறது“ என்று தோன்றியது.


இக்கதையில் வருகிற ‘கனியைச் சுவைக்கும் மனிதனின்‘ மனநிலைதான் அன்பின் மூலம் நாம் அடைவது.


எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும்தான் உண்டு. அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தி உண்டு.


- பொன். வாசுதேவன்

12 comments:

  1. அன்பைப் பற்றிய ஆழமான சிந்தனைகள்.. அருமையான பார்வை.. புத்தர் சொன்ன கதையில் வரும் மனிதர்களைப் போல்தான் நாம் வாழ்கிறோம்.. இல்லையா?

    ReplyDelete
  2. எல்லா விதமான அன்பு பற்றியும் சொன்ன நீங்கள் முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்களே நண்பா.. மற்ற எல்லா அன்பிலும் ஏதோ ஒரு வகையில் சுயநலம் இருக்கும்.. தூய்மையான அன்பு என்பது நட்புதான் என்பது என் கருத்து...

    ReplyDelete
  3. அன்பைப் பற்றிய நல்ல விளக்கம்.

    ReplyDelete
  4. //எல்லா விதமான அன்பு பற்றியும் சொன்ன நீங்கள் முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்களே நண்பா..//

    கார்த்தி, மனதில் தோன்றியதை தொடர்ந்து எழுதிய பதிவு அது, அதனால் விடுபட்டிருக்கலாம். முழுமையாக எழுதிவிடக்கூடியதா அன்பு. உங்கள் தொடர்ந்த வருகைக்கும், தொலைபேசி பேச்சுக்கும் என் அன்பான நன்றி.

    ReplyDelete
  5. கும்மாச்சி said...
    //அன்பைப் பற்றிய நல்ல விளக்கம்.//

    வாங்க... நண்பரே, உங்கள் முதல் வரவிற்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. தலைப்புக்கே உங்களுக்கு நிறைய வாழ்த்து சொல்லனும்

    இது உங்களுக்குள்ளே வந்ததாலேயே! இதை நீங்கள் உணர்ந்து உள்ளீர்கள்

    ReplyDelete
  7. //மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.//

    உண்மையான வார்த்தைகள்

    ReplyDelete
  8. அருமையான பதிவு.அன்பே கடவுள்

    ReplyDelete
  9. //தலைப்புக்கே உங்களுக்கு நிறைய வாழ்த்து சொல்லனும்//

    வாழ்த்துக்கு நன்றி ஜமால்.

    //Rajeswari said...
    அருமையான பதிவு.அன்பே கடவுள்//

    வருகைக்கும், பின்மொழிக்கும் நன்றி, தோழி இராஜேஸ்வரி.

    ReplyDelete
  10. அன்பைக் குறித்த அழகான பதிவு!!!

    கடவுள் வழிபாடு குறித்த உங்கள் கருத்துக்களும் அருமை!! என்னைப் பொறுத்தமட்டில் கடவுள் வழிபாடு என்பது அன்பு பகிர்தலாகவோ, பக்தி மார்க்கமோ அல்ல. எதிர்பார்ப்பு... சுயநலம்.

    எந்த ஒரு பக்தரும் உதவி அல்லது வேண்டுதலுக்காகத்தான் வழிபடுகிறாரே ஒழிய, கடவுளிடம் அன்பைப் பொழிகிறேன் என்று தூக்கி வைத்து கொஞ்சுவதில்லை!!! ஆண்டாள்கள் விதிவிலக்கு!!

    ஏதோ சொல்லணும்னு தோணிச்சு...

    விவேக்... குட்டிக்கதை அருமை!!

    ReplyDelete
  11. "அன்பு இல்லா மனிதனுக்குக் கொஞ்சம் அன்பு சொல்லிக் கொடுங்கள்" என்று கேட்கத் தோன்றுகிறது.அனபின் அடிப்படை விளக்கம் அருமை.அன்பு இருக்கும் எங்குமே அமைதி நிலவும்.

    ReplyDelete
  12. ஆதவா said...

    //கடவுள் வழிபாடு என்பது அன்பு பகிர்தலாகவோ, பக்தி மார்க்கமோ அல்ல. எதிர்பார்ப்பு... சுயநலம்.//

    உண்மைதானே ஆதவா.. உங்கள் நெஞ்சார்ந்த கருத்துக்கு நன்றி.

    //ஹேமா said...
    "அன்பு இல்லா மனிதனுக்குக் கொஞ்சம் அன்பு சொல்லிக் கொடுங்கள்" என்று கேட்கத் தோன்றுகிறது.அனபின் அடிப்படை விளக்கம் அருமை.அன்பு இருக்கும் எங்குமே அமைதி நிலவும்.//

    நன்றி தோழி, ஹேமா.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname